பெரும!

களிறு கடைஇய தாள்,

மா உடற்றிய வடிம்பு,

சமம் ததைத்த வேல்,

கல் அலைத்த தோள்,

வில் அலைத்த நல்வலத்து

வண்டு இசை கடவாத் தண்பனம் போந்தைக்

குவிமுகிழ் ஊசி வெண் தோடு கொண்டு

தீம் சுனை நீர்மலர் தலைந்து மதம் செருக்கி

உடைநிலை நல் அமர் கடந்து மறம் கெடுத்து

கடும் சின வேந்தர் செம்மல் தொலைத்த

வலம்படு வான் கழல் வயவர் பெரும!

நூல்: பதிற்றுப்பத்து (#70)

பாடியவர்: கபிலர்

சூழல்: செந்துறைப் பாடாண் பாட்டு துறை : செல்வக் கடுங்கோ வாழியாதனைப் போற்றிப் பாடியது

யானைகளை வழியில் செலுத்துகிற கால்கள், குதிரைகளைப் போரில் செலுத்துகிற கால் ஓரங்கள்,  பகைவர்கள் செய்யும் போரைக் கெடுக்கின்ற வேல்கள், வில்லை ஏந்திய பாறை போன்ற தோள்களைக் கொண்ட வீரர்கள்…

அவர்கள் இனிமையான சுனையில் மலர்ந்த குவளைப் பூக்களுடன் குளிர்ச்சியான பனையின் குவிந்த அரும்பைப் போன்ற, ஊசியைப் போன்ற கூர்மையைக் கொண்ட வெண்மையான, வண்டுகள் மொய்த்து இசை பாடாத பனங்குருத்துகளைச் சேர்த்துக் கட்டி மாலை அணிந்திருக்கிறார்கள், போருக்கு உரிய வேகத்துடனும் வீரத்துடனும் நடக்கிறார்கள்…

இந்த வீரர்கள்மீது யாரேனும் கோபம் கொண்டு எதிர்த்தால், அவர்களுடன் தைரியமாகப் போர் செய்து அவர்களது ஆற்றலை அழித்துவிடுவார்கள்…

வெற்றிக் கழல் அணிந்த இந்தச் சிறப்பான வீரர்களின் தலைவனே, அரசனே, நீ வாழ்க!

துக்கடா

 • பல சங்கப் பாடல்களில், கவிதையின் கருத்தைவிட, அதில் உள்ள சில நுணுக்கமான தகவல்கள் ரொம்ப ஆச்சர்யம் தரும். இந்தப் பாடல் அந்த வகை. உதாரணமாக:
 • வீரர்களை வர்ணிக்கும்போது யானையைச் செலுத்துகிற கால் என்கிறார், ஆனால் குதிரையைச் செலுத்துகிற கால் ஓரம் என்கிறார். ஏன் இந்த வித்தியாசம்?
 • போருக்குச் செல்லும் யானையின் கழுத்தில் ஒரு கயிறு அணிவிக்கப்பட்டிருக்கும், அதன்மீது அமரும் வீரர்கள் இந்தக் கயிற்றில் காலை நுழைத்துக்கொள்வார்கள், அதன்பிறகு முன் காலினால் உந்தி உந்தித் தங்களுடைய கருத்தை யானைக்கு உணர்த்துவார்கள், யானையும் அதன்படி நடக்கும்
 • ஆனால் குதிரை வீரர்கள் அப்படியில்லை, கால் ஓரத்தால் அதன் உடலை உரசி உரசிச் செலுத்துவார்கள். அதனால்தான், ‘யானையைச் செலுத்தும் கால், குதிரையைச் செலுத்தும் கால் ஓரம்’ என்கிறார் கபிலர்
 • அடுத்து, பனங்குருத்துகளில் வண்டுகள் மொய்த்துப் பாடுவதில்லை என்கிறார், அது ஏன்?
 • மற்ற மலர்களைப்போல, பனங்குருத்தில் தேன் கிடையாது. ஆகவே, வண்டுகள் அதைச் சீண்டாது 🙂 அதனால்தான் அதோடு குவளை மலரைச் சேர்த்துக் கட்டி அணிகிறார்கள்
 • சேர அரசனாகிய செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பற்றிப் பத்து பாடல்களைப் பாடினார் கபிலர். அந்த seriesன் ஒரு பகுதிதான் இந்த வரிகள்
 • கபிலர் பாடியதைக் கேட்டு மகிழ்ந்த சேர அரசன், நன்றா என்ற குன்றின்மீது ஏறி நின்றான், அங்கிருந்து தன் கண்ணில் பட்ட அத்தனை இடத்தையும் கபிலருக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டான்!

317/365

This entry was posted in கபிலர், பதிற்றுப்பத்து, புறம், வர்ணனை, வீரம். Bookmark the permalink.

18 Responses to பெரும!

 1. இந்த சேர அரசனை ரொம்பப் பிடித்திருக்கிறது. குன்றின் மீது ஏறி நின்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும் ஊர்களை கபிலருக்குப் பரிசாக அளித்துவிட்டானே!

  எவ்வளவு விவரங்களை உள்ளடக்கிய பாடல் இது!

  வண்டு இசை கடவாத் தண்பனம் போந்தைக்
  குவிமுகிழ் ஊசி வெண் தோடு கொண்டு
  தீம் சுனை நீர்மலர் தலைந்து மதம் செருக்கி
  உடைநிலை நல் அமர் கடந்து மறம் கெடுத்து

  வீரத்துடன் நடக்கும் வீரர்கள் அணிந்திருக்கும் மாலைக்கு மட்டும் எவ்வளவு வர்ணனை!

  எதிரிகளை எளிதில் வீழ்த்திவிடும் வீரர்களைக் கொண்ட அரசனின் புகழ் தான் பாடுகிறார் கபிலர். ஆனால் அதில் அவர் சொல்லும் விவரங்கள் வியக்க வைக்கின்றன.

  amas32

 2. ஈழப் போரில், முள்ளிவாய்க்காலில்…….பெருந்துயரில் மறைந்த மக்கள் அனைவருக்கும் இன்றைய நினைவேந்தல் அஞ்சலி! (May 18)
  ——————–

  //இந்த வீரர்கள்மீது யாரேனும் கோபம் கொண்டு எதிர்த்தால், அவர்களுடன் தைரியமாகப் போர் செய்து அவர்களது ஆற்றலை அழித்துவிடுவார்கள்…//

  இப்படியான வீரம் செறிக்கும் தமிழ் மக்கள்…இன்று…
  காலத்தின் கோலத்தால்,
  அரசியல் பல் இளிப்பால்…
  நம்மவர்களின் அதீத மெளனத்தால்
  வாழ்வின் ஆதாரத்தையே தொலைத்து விட்டு நிற்கிறார்கள்:(

 3. பாட்டின் ஆரம்பமே எப்படி அதிரடியா – நச் ன்னு இருக்கு பாருங்க!

  களிறு கடைஇய தாள்,
  மா உடற்றிய வடிம்பு,
  சமம் ததைத்த வேல்,
  கல் அலைத்த தோள்

  இதுக்குச் சொக்கர் எழுதியது பாருங்க – எப்படி பெரிய பெரிய வாக்கியமா நீட்டி முழக்கி இருக்கு:))

  //யானைகளை வழியில் செலுத்துகிற கால்கள், குதிரைகளைப் போரில் செலுத்துகிற கால் ஓரங்கள், பகைவர்கள் செய்யும் போரைக் கெடுக்கின்ற வேல்கள், வில்லை ஏந்திய பாறை போன்ற தோள்களைக் கொண்ட வீரர்கள்…//

  இப்போ தெரியுதா, சங்கத் தமிழின் சொல் அடர்த்தி?

  • களிறு கடைஇய தாள் = யானையைச் செலுத்தும் கால்
   கடைஇய = கடவிய
   கடவுதல்->கடத்தல்! வெப்பக் கடத்தி, மின்சாரக் கடத்தி ன்னு சொல்லுறோம்-ல்ல? அந்தக் கடவுதல்!
   யானையைக் கடவுதல் = யானையைச் செலுத்துதல்!

   எப்படிச் செலுத்துவாங்க? = மாட்டைப் போல் சாட்டை சொடுக்கியா? இல்லை!
   காலால் செலுத்துவாங்க! எப்படி-ன்னு சொக்கர் சூப்பராச் சொல்லி இருக்காரு பாருங்க!

   அடுத்த முறை, யானையும் – அதன் மேல் பாகனும் பாத்தீங்கன்னா, அவன் எப்படிச் செலுத்தறான் ன்னு கவனிச்சிப் பாருங்க!

 4. மா உடற்றிய வடிம்பு = குதிரையைச் செலுத்தும் ஓரம்!
  உடற்றிய = உடல் + இய = உடலால் உந்துதல்
  எப்படி உந்துவாங்க, குதிரையின் உடம்பை?

  காலால் தான் உந்துவாங்க!
  ஆனா யானையைப் போல், பாதங்களால் உந்தாமல்…
  பக்கவாட்டில் தங்கள் காலை அணைச்சி அணைச்சி உந்துவாங்க!

  வடிம்பு = ஓரம்! விளிம்பு!
  காபி குடிக்கும் தம்ளர் விளிம்பு = வடிம்பு!

  இப்படிப் பக்கவாட்டில் (border, edge) இல் குதிரையை இடிப்பாங்க! அதுக்கேத்தாப்புல ஓடும்!
  குதிரை மேல் இருப்பது சேணம்=saddle! அதில் உட்கார்ந்து கொண்டு, கால்களை stirrup=தாங்கு வளையில் வச்சிப்பாங்க! வச்சி வச்சிக் குதிரையை இடிப்பாங்க!
  ——————–

  சமம் ததைத்த வேல் = போரில் பலரைச் சிதைத்த வேல்!

  கல் அலைத்த தோள் = கல்லைத் தூக்கித் தூக்கி உடற் பயிற்சி பண்ணுவாங்க போல, அந்தக் காலத்துல!
  அலைத்தல் = தண்ணிக்குள்ள கல்லை விட்டெறிஞ்சி, அலைக்கிறோம்-ல்ல? அந்த அலைத்தல் = agitate
  கல்லோடு முட்டி முரண்டு, அலைத்த வீரத் தோள்கள்!

  • நாலே வரி!
   அதுல யானை ஏற்றம் எப்படி, குதிரை ஏற்றம் எப்படி, தோள் பயிற்சி எப்படி ன்னு சொல்லீட்டாரு பாத்தீங்களா? அதான் கபிலர்!:))

 5. பாட்டுக்குப் போகும் முன்னால முக்கியமான ஒன்னைச் சொல்லீடறேன்…

  பத்துப் பத்து = பதிற்றுப் பத்து!
  10 * 100 = 100 songs!

  10 சேர மன்னர்களை…(வெவ்வேறு காலங்களில்)
  10 கவிஞர்கள்
  10 பத்துப் பத்துப் பாடல்களால் பாடிய தொகுப்பு
  = பதிற்றுப் பத்து!
  ————–

  இதை, சங்க காலச் சேர மன்னர்களின் database ன்னே சொல்லீறலாம்! அவ்ளோ தகவல்கள்!
  தமிழ் இலக்கியத்தில், ஒரு மரபுக்குன்னே, ஒரு தனி நூல், யாருக்கும் அமையவில்லை! சேரர்களுக்கு மட்டும் தான்! ஏன்???

  தனிப்பட்ட ஒரு சோழன், ஒரு பாண்டியனைப் புகழ்ந்து, பொருநர் ஆற்றுப்படை/ மதுரைக் காஞ்சி ன்னு நூல் இருக்கும்!
  ஆனா ஒரு வம்சத்துக்கே, குடிக்கே, மரபுக்கே அமைஞ்ச நூல்-ன்னா = அது சேரர்களுக்கு மட்டுமே!

  பாண்டியன், சங்கம் வச்சி தமிழ் வளர்த்து இருக்கலாம்! ஆனா அது வெறும் கருத்தரங்கு, ஆய்வு ன்னு மட்டும் நின்னுருச்சி!
  தமிழ் வளரணும்-ன்னா, அதை வளர்ப்பவர் வளரணும்-ல்ல?
  ————-

  தமிழ் வளர்த்த அறிஞர்களை……உணவுக்கும், வாழ்வுக்கும் வாட்டம் இன்றிப் பார்த்துக் கொண்டவர்கள் சேரர்கள்!
  = உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே…
  பல ஊர்களுக்கு, தேர் அனுப்பிச்சி, வாடும் கவிஞர்களை கூட்டி வரவே ஏற்பாடு செய்வார்களாம் சேர மன்னர்கள்!

  இப்படி, வலியப் போயி, உதவும் குணம்!
  தமிழ்ப் புலவர்கள் தன்னை நாடி வரலீன்னாலும், தான் அவர்களை நாடிப் போய், அவர்கள் குறைகளை நீக்கியது….
  இதைப் பாரி போன்ற வள்ளல்கள் கூடச் செய்ததில்லை! சேரர்கள் செய்தனர் = அழியாப் புகழ் பெற்று, தனி நூல் கண்டு, தமிழ் மரபில் நிலை பெற்றனர்!

  • சேரர் கொடி = வில்-அம்பு
   சேரர் மாலை= பனம் பூ மாலை

   சொல்றாரு பாருங்க!
   * “வில்” அலைத்த நல் வலத்து = வில் (கொடி) அசையுது
   * வண்டு இசை கடவாத் தண் “பனம் போந்தை” = பனம் பூ மாலை!

   (போந்தை = போது = விரியத் தொடங்கும் பூக்களால் தொடுத்த மாலை)
   ——————–

   சொக்கர் சொல்லி உள்ள தகவலைக் கவனிக்கவும்!
   பனங் குருத்தில் தேன் இருக்காது! மகரந்தம் இருக்காது!

  • எங்கூரு பனை மர அனுபவங்களைச் சொல்லட்டுமா?:)
   எனக்கு height ன்னா பயம்!
   ஆனாலும் குனிஞ்சிப் பாக்காம பனை மரம் ஏறிப் பனங்காய் பறிச்சிப் போடுவது பிடிக்கும்!:) நுங்கின் சுவை அப்படி! சுண்டி இழுக்க்க்க்கும்!

   கிராமத்துல வளரணுங்க!

   இந்தக் கால பய புள்ளைக, சும்மானா வீடியோ கேம் ஆடுதுங்க!:)
   குதிக்கிறா போலவும், மலையில் ஏறுவது போலவும், ஒடுறாப் போலவும்….எல்லாமே virtual reality ஆகிப்போச்சி:)
   ஆனா, உட்காரத விட்டா, வேற ஒன்னும் தெரியாது ன்னு ஆயிருச்சி, ஒரு தலைமுறைக்கு:(((

  • இதாங்க பனங் குருத்து!

   பனம்பூ = Whitish Grey (Ivory) வண்ணத்துல இருக்கும்!
   அதுக்கு மகரந்தம் உண்டு! ஆனா அதுல தேன் இல்ல! வாசனை மட்டுமே!

   (வெளியே காமத்துக்கு அழகா இருந்து, உள்ளே அன்புக்கு கருணையே இல்லாதவங்க போல-ன்னு இதே கபிலர் உவமை காட்டுவாரு)
   ————

   தேன் இல்லாமயால், பனம் பூக்களில் வண்டு வந்து உட்காராது! அப்பறம் எப்படி மகரந்தச் சேர்க்கை?
   = காற்று வழியாத் தான்!

   ஆண் பனை தனி! பெண் பனை தனி!
   காற்று வீசுவதால் மகரந்தம் பரவி, பெண் பனையில் விழுகும்! காய்க்கும்! பழுக்கும்!

   பனை மரம் = பண்டைக் காலத்திலேயே தமிழ் நிலத்தின் தனித்த அடையாளம்!

   • மேலே காட்டிய படத்தில், வலப்பக்கம் இருப்பது தான் பனங் குருத்து…
    இடம் பக்கம் தென்னங் குருத்தை எவனோ போட்டுருக்கான்:)

    பனம் பூங் குருத்து = தனியான படம் சுலபத்துல கிடைக்கலை! இதோ ஒன்னு! ஊசி ஊசியாப் பூ = http://www.flowersofindia.net/catalog/slides/Cabbage%20Palm.jpg

  • பனம் பூங் குருத்து, காய் ஆனா, இப்பிடித் தாங்க இருக்கும்!

   * பனை மரம், வளரும் போதே, அந்த இளங் குருத்து சுவையா இருக்கும்!
   * பாளையில், பால் விடும் போது = பதநீர்..sema taste:)
   * அதுல சுண்ணாம்பு கலந்து, ஊற வச்சா = கள்ளு! no comments :))

   * பால் விட்ட பின், காய் = பனங்காய்
   * அதுக்குள்ள, இளசு இளசா = நுங்கு! (நானும் இராகவனும் அதை முங்கு:))
   ——————-

   * காய் முத்தினா = சேவாய்! சதையை வேக வச்சித் திங்கலாம்
   * அப்பறம் பனம் பழம் = நார் நாரா இருக்கும்!
   (பனம் பழக் கொட்டைக்குள்ள இருக்கும் சீப்பை; அதையும் திங்கலாம்)

   * பனம் பழத்தை, அப்படியே விட்டுட்டோம்-ன்னா = பழச் சதையெல்லாம் தளர்ந்து போய்….உள்ளாற = பனங் கிழங்கு! sema sema taste! my favorite!

   * அதே போல் பனை வெல்லம் & கருப்பட்டி!
   I call my murugan chellam as டேய் கருப்பட்டிக் கடம்பா, கருப்பட்டி உடம்பா:))
   ——————

   பனை ஓலை = விசிறி, பொருள் மடிக்கும் பொட்டலம், Whistle ன்னு என்னென்னமோ செய்யலாம்! குருத்தோலைப் பெட்டி-ம்பாய்ங்க!
   பனையோலை அடுப்பெரிக்கவும் உதவும்! கூரை போடவும் உதவும்! பனந் துண்டம் மிக்க வலுவுள்ளது!

   என்னைக் கேட்டா, பனங் கள்ளு = நல்லது ன்னு சொல்லுவேன்! அதில் எதையும் கலக்காம, பத நீராவே குடிச்சா!
   கள்ளை = alcohol, மது பானம் ன்னு சொல்றதெல்லாம் சுத்தப் பேத்தல்! கோக் பெப்சியை விட எவ்ளோ Better!

 6. நாம, பாட்டுக்கு வருவோம்….
  வேலையத்தவன்…கண்ட தகவலும் சொல்லிக்கிட்டு இருக்கேன்:))
  ———————

  வண்டு இசை கடவாத் தண் பனம் போந்தை = இப்போ புரியுதுல்ல?
  வண்டு மொய்க்காத பனம் பூ மாலை

  * குவி முகிழ் ஊசி = ஊசி போல கூரா இருக்கும் பூ! பனங் குருத்து!
  * வெண் தோடு கொண்டு = அந்த வெள்ளை தோடுக்களை (ivory white)
  * தீம் சுனை நீர் மலர் = குளத்துப் பூவான குவளையோடு (dark blue)
  * தலைந்து = ஒன்னாக் கட்டி
  Just imagine the beauty of the colors, alternate white & blue! garland!
  ——————–

  மதம் செருக்கி = மதம் பிடித்து (கோபம் கொப்பளிக்க)
  உடைநிலை நல் அமர் கடந்து = அமர்-ன்னா போர்; போரில் கடந்து
  மறம் கெடுத்து = எதிரிகளின் மறத்தை அழித்து

  கடும் சின வேந்தர் செம்மல் தொலைத்த = மற்ற வேந்தர்களின் செம்மல் தொலைந்து போகுமாறு… செம்மல்=பெருமை
  ——————–

  “வலம்படு வான்கழல்” = strong & big shoe…
  வலம்படு வான்கழல் = பேரே நல்லா இருக்குல்ல? சொக்கர்/ ஜெமோ அடுத்த நாவலுக்கு இந்தத் தலைப்பை வச்சிறலாம்:))

  வயவர் = வீரர்
  வயவர் பெரும! = வீரர்களின் பெருமான் = Captain!
  Mr. செல்வக் கடுங்கோ வாழியாதன்! 🙂

 7. சொக்கர், சொல்ல விட்டுப் போன ஒரு தகவல் = இது எசப் பாட்டு!

  துறை= செந்துறை
  வண்ணம்= ஒழுகு வண்ணம்.
  தூக்கு= செந் தூக்கு + வஞ்சித் தூக்கு
  —————-

  தூக்கு = சாகித்யம் (கீர்த்தனை); வண்ணம் = ஜன்ய ராகம் ன்னு சொல்லுவாளோன்னோ?:)) அதான்!
  அதுக்குப் பண் (ராகம்) சேர்த்தா, விஸ்தீரணமா, பேஷாக் கச்சேரி பண்ணலாம்! என்ன சொல்றேள்?:))

  அடங்கொக்கமக்கா….இதெல்லாம் சங்கத் தமிழ்லயே இருக்குடா!

  • எப்படி இப்படி எழுதறீங்க? 🙂 திரு சொக்கரே, கேஆர்எஸ், the reading pleasure is ours! 🙂 Aren’t we lucky! 🙂 Thank you.
   amas32

 8. ஒரு தவறு.
  பாளையிலிருந்து சுரக்கும் நீரை அப்படியே கலயத்தில் பிடித்தால் அது புளித்து கள்ளாகும்.
  சுண்ணாம்பு பூசின கலயத்தில் பாளை நீரை சேகரித்தால் அது பதநீர். சுண்ணாம்பு புளிக்கச்செய்யும் பாக்டீரியாக்களைக் கொல்ல.

  • திருத்தத்துக்கு மிக்க நன்றி, அருள்…
   ஆமாம்…சீக்கிரம் புளித்து விடும்!

   பதநி எறக்கும் போது தெளுவு-தெளிவு ன்னும் சொல்லுவோம்!
   எறக்கும் போதே குடிச்சிட்டா, ஒன்னும் பிரச்சனையில்ல, என்னையப் போல:))
   அது மது அல்ல = “தெளிவு”! பூந்தேன் போல-ன்னு சொல்ல வந்தேன்!:))

   பலரு வச்சிருந்து குடிப்பாங்க!
   அப்போ சுண்ணாம்பு பூசுன பானையில் வச்சிக் குடிச்சா = கொஞ்ச நேரம் புளிக்காம இருக்கும்!
   (எறக்கும் போதே அப்படியான பானைகளை மரத்தில் கட்டி எறக்குவதுண்டு)

   சிலருக்குப் புளிச்சிக் குடிச்சாத் தான் புடிக்கும்:)) அது மது தான்! = கள்ளு!:)
   கள்ளுண்ணாமை ன்னு ஐயன் பாடி இருக்காரு! ஆனா யாரு கேக்கா?:))

 9. அருமை. உள்ள பூர்வமா ரசித்தேன் . நானும் பனை மர ரசிகனே. பதனியில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் இனிக்கும். எங்கள் ஊர்பக்கம் பதனியில் நுங்கை போட்டு கொடுப்பார்கள். அதை பன்மட்டையின் நறுமணத்தோடு குடிக்கும்போது இன்னும் சுவை கூடும். வெல்லம், கருப்பட்டி சொன்னீங்க. பனங்கர்க்கண்டு சொல்ல விட்டுட்டீங்களே. சுங்க இலாக்காவில் பணி புரிந்ததால் தென்பாண்டிசீமையில கடற்கரைஎல்லாம் பனைமரமே.பல வருடங்கள் ஒரு மர கள்ளை குடிக்கும் வாய்ப்பை பெற்றவன்.உடம்பு எவ்வளவு சூடானாலும் சரி, ஒன்னுக்கு எவ்வளவு மஞ்சள் கலரா போனாலும் சரி ஒரு பட்டை கள்ளை குடித்தால் உடனே சூடு குறையும், ஒன்னுக்கு வெள்ளையா போகும். சூடு குறைவதால் , கண் பார்வை, தலை முடி வளர்ச்சி கூடும்.பனமேறி நாடார்கள் எத்தனை வயதானாலும் மூக்கு கண்ணாடி போடுவதில்லை.தழும்புகளால் நெஞ்சு உரமேறி இருக்கும்.பொதுவாக சிகப்பு கலர் துணிதான் உடுத்துவார்கள்.மென்மையாக பேசுவார்கள்.கோபம் அவ்வளவு சீக்கிரம் வராது.வந்தால் காடு கொள்ளாது. இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம். ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால், சாயல்குடியிலிருந்து தூத்துக்குடிக்கு ECR வழியாக காரில் பயணம் செய்து பாருங்கள். உங்கள் பகுதி பனைமரங்கள் எல்லாம் ஜூ ஜூ பீ . வழியெங்கும் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மரங்களை ஒருசேர காணலாம். வாழ்த்துகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s