புள்ளி

நேர் இழையார் கூந்தலில் ஓர் புள்ளி பெற நீள் மரமாம்,

நீர்நிலை ஓர் புள்ளி பெற நெருப்பாம், சீரிய

காடு ஒன்று ஒழிப்ப இசை ஆகும் அதனுள்ளும்

மீட்டு ஒன்று ஒழிப்ப மிடறு

நூல்: தண்டியலங்கார மேற்கோள்

பாடியவர்: தெரியவில்லை, தண்டியலங்காரத்தை எழுதிய ‘தண்டி’யே இதனையும் எழுதியிருக்கலாம்

அழகிய இழையைப் போன்ற பெண்களின் கூந்தலில் ஒரு பொட்டு வைத்தால், அது நீண்ட மரமாக மாறிவிடும்.

நீர்நிலையில் ஒரு புள்ளி வைத்தால், அது நெருப்பாக மாறிவிடும்.

காடு ஒன்றை எடுத்து அதில் ஒரு மாத்திரையை நீக்கினால், அது இசையாக மாறிவிடும். பின்னர் அதில் இன்னொரு மாத்திரையை நீக்கினால், அது கழுத்தாக மாறிவிடும்.

துக்கடா

  • என்னது? பொண்ணுங்க கூந்தல்ல பொட்டு வெச்சா அது மரமாயிடுமா? தண்ணியில பொட்டுவெச்சா நெருப்பாயிடுமா? என்னய்யா உளறல் இது?
  • சற்றுப் பொறுங்கள். இந்தப் புதிர்ப் பாட்டுக்கு விடை தெரியவேண்டுமென்றால் நாம் கொஞ்சம் பழங்கதை பேசவேண்டும்
  • அந்தக் காலத்துத் தமிழில் ஒ, ஓ, எ, ஏ என்று நான்கு எழுத்துகள் கிடையாது. ஓ, ஏ என்று இரண்டு எழுத்துகள்தான்.
  • அப்போ ஒ, எ இரண்டையும் எப்படி எழுதுவார்கள்?
  • இப்படிதான்:
  • 1. ’ஓ’ என்று எழுதி அதன்மேல் ஒரு புள்ளி வைத்தால், அது ‘ஒ’
  • 2. ‘ஏ’ என்று எழுதி அதன்மேல் ஒரு புள்ளி வைத்தால், அது ‘எ’
  • இந்தப் பின்னணியுடன் இந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகளை வாசித்தால் அர்த்தம் புரியும்
  • பெண்களின் கூந்தல் = ‘ஓதி’
  • அதில் ‘ஓ’ என்ற எழுத்தில் ஒரு புள்ளி வைத்தால், அது ‘ஒ’ என மாறும், ஆகவே ‘ஓதி’ என்பது ‘ஒதி’ என மாறும், அது ஒரு மரத்தின் பெயர்
  • அடுத்து, நீர்நிலை = ‘ஏரி’
  • இதில் ‘ஏ’ என்ற எழுத்தில் ஒரு புள்ளி வைத்தால், அது ‘எ’ என மாறும், ஆகவே ‘ஏரி’ என்பது ‘எரி’ என மாறும், அது நெருப்பின் பெயர்
  • அடுத்து, ‘காந்தாரம்’ என்பது காட்டைக் குறிப்பிடும் ஒரு சொல், அதில் ஒரு மாத்திரையை நீக்கினால், அதாவது ‘கா’ என்பதற்குப் பதில் ‘க’ என்று மாற்றினால், ‘கந்தாரம்’, அது ஓர் இசை / பண்ணின் பெயர்
  • இந்தக் கந்தாரத்தில் இன்னொரு மாத்திரையை நீக்கினால், அதாவது ‘தா’ என்பதற்குப் பதில் ‘த’ என்று மாற்றினால், ‘கந்தரம்’ அதாவது கழுத்து
  • இப்போது பாட்டை மீண்டும் படியுங்கள், புலவரின் அட்டகாசமான வார்த்தை விளையாட்டு புரியும் :>
  • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
  • நேரிழையார் கூந்தலிலோர் புள்ளிபெற நீள்மரமாம்
  • நீர்நிலைஓர் புள்ளி பெறநெருப்பாம், சீரிய
  • காட்டொன் றொழிப்பஇசை யாகும் அதனுள்ளும்
  • மீட்டொன் றொழிப்ப மிடறு

315/365

Advertisements
This entry was posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், இலக்கணம், கதை கேளு கதை கேளு, குறும்பு, புதிர், வார்த்தை விளையாட்டு, வெண்பா. Bookmark the permalink.

3 Responses to புள்ளி

  1. anonymous says:

    //1. ’ஓ’ என்று எழுதி அதன்மேல் ஒரு புள்ளி வைத்தால், அது ‘ஒ’
    2. ‘ஏ’ என்று எழுதி அதன்மேல் ஒரு புள்ளி வைத்தால், அது ‘எ’//

    அப்படீன்னா, முன்பு, தமிழில் மெய்யெழுத்துக்கள் 18 + 2 :)))) ச்ச்ச்சும்மா

    அரசியல் கட்சிகள் இதைப் படிக்காம இருக்கணும்
    கோடி ன்னு எழுதிப் புள்ளி வச்சாக் கொடி!
    ஆனா கோடியைப் பாத்தவுடனே புள்ளி வைக்க வுடவே மாட்டாங்க:)

  2. ஆனந்தன் says:

    பழைய காலத்தில் ஓலைகளில் எழுதும்போது புள்ளி போடாமல் எழுதுவார்களென்றே கேள்விப்பட்டிருக்கிறேன் (புள்ளி போடுவதால் ஓலை கிழிந்துவிடுமாதலால்). அதனால், இது புதிய தகவலாக இருக்கிறது. நன்றி!

  3. //நீர்நிலைஓர் புள்ளி பெறநெருப்பாம்// நீரும் நெருப்பும் எதிர் துருவங்கள். ஒரு புள்ளியால் நீர் நெருப்பாகி விடுகிறது 🙂 கவிஞரின் அறிவுத் திறன் இந்தப் பாடலில் ஒளிர்கிறது!

    எல்லா வரிகளுமே நீங்கள் விளக்கிய பிறகு தான் புரிகிரது. சற்றே கடினமான புதிர் பாடல் 🙂

    amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s