பெண்ணரசி தோன்றினாள்

இரும்பு அனைய கரு நெடும் கோட்டு இணை ஏற்றின் பணை ஏற்ற

பெரு பியலில் பளிக்கு நுகம் பிணைத்து அதனோடு அணைத்து ஈர்க்கும்

வரம்பின் மணிப் பொன்கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு

உரம் பொருவு இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம்.

*

உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி

பொழிகின்ற புவி மடந்தை உரு வெளிப்பட்டு எனப் புணரி

எழுகின்ற தெள் அமுதோடு எழுந்தவளும் இழிந்து ஒதுங்கித்

தொழுகின்ற நல் நலத்துப் பெண் அரசி தோன்றினாள்.

*

குணங்களை என் கூறுவது? கொம்பினைச் சேர்ந்து அவை உய்யப்

பிணங்குவன, அழகு இவளைத் தவம் செய்து பெற்றது காண்,

கணம் குழையாள் தோன்றியபின் கதிர் வானில் கங்கை எனும்

அணங்கு இழியப் பொலிவு இழந்தவாறு ஒத்தார் வேறு உள்ளார்.

நூல்: கம்ப ராமாயணம் (பால காண்டம், கார்முகப் படலம், பாடல்கள் #16, #17 & #18)

பாடியவர்: கம்பர்

சூழல்: சீதைக்குச் சுயம்வரம், அதில் கலந்துகொள்ள வந்த அரசர்களை வரவேற்கும் சதானந்த முனிவர், சீதை பிறந்த கதையைச் சொல்கிறார்

முன்பு ஒருநாள், அரசன் ஜனகன் ஒரு வேள்வி செய்ய விரும்பினான். அதற்காக ஒரு நல்ல நிலத்தைத் தேர்வு செய்தோம். பின்னர் அந்த நிலத்தைச் சமன்படுத்தும் வேலைகள் தொடங்கின.

இரும்புபோல் வலிமையான, பெரிய, நீளமான இரண்டு கொம்புகளைக் கொண்ட ஓர் எருது. அதன் அகலமான பெரிய பிடரியின்மீது பளிங்கினால் செய்த நுகத்தடியைப் பூட்டினோம். அதனோடு இழுத்துக்கொண்டு போகும்படியாகப் பல ரத்தினங்கள் பதித்த தங்கக் கலப்பையையும் பொருத்தினோம், அதன் நுனியில் வயிரத்தால் செய்த கொழுவை அமைத்தோம்.

அதன்பிறகு, நாங்கள் அந்த எருதை ஓட்டத் தொடங்கினோம். நிலத்தைப் பலமுறை வரிசையாக உழுதோம்.

*

திடீரென்று, உழவுத் தொழிலைச் செய்கின்ற அந்தக் குழுமுகத்தின் முனையில், சூரியன் உதயமாவதுபோல் ஒளி தோன்றியது. பூமாதேவிதான் மண்ணைப் பிளந்துகொண்டு எழுந்துவிட்டாளோ என்று நாங்களெல்லாம் வியந்துபோனோம்.

ஆனால் அங்கே தோன்றியது, ஒரு சிறு குழந்தை. பெண்களுக்கெல்லாம் அரசி போன்ற பேரழகுடன் தோன்றினாள் அவள்.

முன்பு பாற்கடலைக் கடந்தபோது அதிலிருந்து அமுதமும் திருமகளும் பிறந்ததாகச் சொல்வார்களே, அந்தத் திருமகளும்கூட இந்தப் பெண்ணுக்கு முன்னால் அழகு மங்கித் தென்படுவாள். இவளை வணங்கி நிற்பாள்.

*

அப்படி மண்ணில் தோன்றி வளர்ந்த இந்தச் சீதையின் சிறப்பை நான் எப்படி விவரிப்பேன்?

நல்ல குணங்களெல்லாம் எப்படியாவது இவளிடம் சேர்ந்துவிடமாட்டோமா என்று போட்டிபோட்டுக்கொண்டு முட்டி மோதும். பூக்கொம்பு போன்ற இந்தப் பெண்ணின்முன்னே வரிசையில் வந்து நின்று ‘என்னை எடுத்துக்கொள், என்னை எடுத்துக்கொள்’ என்று கெஞ்சும்.

இவள் ‘அழகி’ என்று சொன்னால், அது சாதாரண வாக்கியம். உண்மையில் அந்த அழகே தவம் செய்து இவளைப் பெற்றிருக்கிறது.

அந்நாளில், சூரியன் இயங்குகின்ற வானத்தில்மட்டுமே கங்கை நதி பாய்ந்து வந்தது. பின்னர் பகீரதன் முயற்சியால் அது விண்ணிலிருந்து பூமியில் இறங்கியது.

அவ்வளவுதான், அதுவரை இங்கே பூமியில் பாய்ந்துகொண்டிருந்த நதிகள் எல்லாம் அந்தக் கங்கைக்கு முன்னால் அழகு குறைந்துவிட்டன.

அதுபோல, குழை என்னும் காதணியை அணிந்த இந்தச் சீதை மண்ணிலிருந்து பிறந்தாள், மறுவிநாடி இங்கிருந்த பெண்கள் எல்லாருடைய அழகும் குறைபட்டுவிட்டது.

துக்கடா

 • முதல் பாடலில் நுகத்தடி, கலப்பை, கொழு என்று உழவுத் தொழிலுக்குப் பயன்படும் கருவிகளைப் படம் வரைந்து பாகம் குறிக்கிறார் கம்பர். இதையெல்லாம் நான் பாட்டில் படித்ததோடு சரி, விஷயம் அறிந்த யாரேனும் நிஜமாகவே ஒரு படம் வரைந்து பாகம் குறித்தால் நன்றாக இருக்கும் (கூகுளில் தேடினேன், உருப்படியாக எதுவும் சிக்கவில்லை)
 • Update : கலப்பை பாகங்கள் வரைபடம் இங்கே : http://pinterest.com/pin/160863017910551823/ இதனை வரைந்து அனுப்பியவர் பிரவீணா மோகன்ராஜ். ரொம்ப நன்றிங்க!

314/365

Advertisements
This entry was posted in கதை கேளு கதை கேளு, கம்ப ராமாயணம், கம்பர், நாடகம், வர்ணனை. Bookmark the permalink.

15 Responses to பெண்ணரசி தோன்றினாள்

 1. இரு உழவு மாடுகளை ஒரே சீராக நடக்க வைக்க கழுத்தில் பிணையப்படும் உருளான மரக்கட்டை தான் நுகத்தடி. உழவு செய்யும் மொத்தக் கருவி தான் கலப்பை . அதன் உலோக முனை தான் கொழுவு. ட்ராக்டர், கல்டிவேட்டர், டிஸ்க் எல்லாம் வந்த பிறகு இவை அனேகமாக காணாமல் போய் விட்டன. டிராக்டர் புகாத கிராமம் கிடைத்தால் இவற்றை பார்க்கலாம்

 2. anonymous says:

  கம்பன் கவிக்கு விலை சொல்வாரும் உளரோ?

  கலையே அதற்கு விலை!
  இலையே அதற்கு விலை!
  அமுதால் வடித்த சிலை!
  அதுவே தமிழ்க்கு முலை!
  ——————–

  //தெள் அமுதோடு எழுந்தவளும் இழிந்து ஒதுங்கி//
  //கங்கை எனும் அணங்கு இழிய//
  ன்னு எத்தனை முறை இழிக்கிறார் பாருங்கள்:))
  ——————–

  நல்லாக் கவனிங்க….இதச் சொல்லுறவரு ஒரு துறவி = சதானந்த முனிவர்!
  அதான் கொங்கை, மேகலை ன்னு மத்த வர்ணனையெல்லாம் சொல்லாம, குண வர்ணனை மட்டும் சொல்லுறாரு:)) ன்னு கம்பன் சொல்லுறான்!

  இதே சதானந்தாவுக்குப் பதிலா நித்…ஆனந்தாவா இருந்திருந்தா?? :)))

  • anonymous says:

   ஏனோ…இக் கம்பன் கவியைப் படிக்கும் போது, இந்த வரிகளும் நினைவுக்கு வந்து தொலைக்கின்றன!:))

   நிலவின் ஒளியை பிடித்துப் பிடித்து
   பாலில் நனைத்து பாலில் நனைத்து
   கன்னங்கள் செய்து விட்டாய்

   உலக மலர்கள் பறித்துப் பறித்து
   இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து
   பெண்ணைச் சமைத்து விட்டாய்

   காவித் துறவிக்கும் ஆசை வளர்த்தவள்
   ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆண்மை கொடுப்பவள்
   பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே

   தெரிந்த பாகங்கள் உயிரைத் தந்திட
   மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
   ’ஜெ’ன்மம் மரணம் ரெண்டும் தருபவளே

 3. anonymous says:

  //யாரேனும் நிஜமாகவே ஒரு படம் வரைந்து பாகம் குறித்தால் நன்றாக இருக்கும்//

  :)))
  ட்ரை சேஸ்தானு; முயல்கிறேன்!
  ஆனா….கம்பன் வரையும் ஓவியம் போல் வராது! நீங்களே பாருங்க!

  கலப்பையிலேயே ரெண்டு வகை இருக்கு
  * உழு கலப்பை
  * விதை கலப்பை

  உழு கலப்பையிலேயே = ஒன்னு மண்ணை உழுகும்; இன்னோன்னு மண்ணைப் புரட்டும்!
  இப்பல்லாம் இரண்டுமே ஒன்னாக்கி, இயந்திரம் வழியாப் பயன்படுத்தறாங்க!
  ஆனா, இங்கே கம்பன் காட்டுவது = உழு கலப்பை
  —————

  * இரும்பு அனைய, கரு நெடும் கோட்டு = இது ஏர்த் தண்டு! மாட்டுக்கும் மனுசனுக்கும் நடுவால இருப்பது!
  இரும்பு அனைய ன்னு சொல்லுறாரு கம்பர்! இரும்பு போலத் தான்! ஆனா இரும்பு அல்ல! மரம்!
  இதான் கலப்பையிலேயே நீண்ட பகுதி! = கரு நெடுங் கோட்டு…
  ————-

  * இணை ஏற்றின் பணை ஏற்ற = சோடியான காளை மாடுகள் ரெண்டு (இணை ஏறுகள்);
  பணை = அடர்ந்த/ Thick! பணைத் தோள், பணை மூங்கில் ன்னு சொல்லுறோம்-ல்ல? அப்படி Thickஆ ஏத்துறாங்களாம்? என்னத்த? = நுகம்!

  * பெரு பியலில் பளிக்கு நுகம் பிணைத்து
  பியல் = இதைப் பிசல் ன்னு கிராமத்தில் சொல்லுவோம்! மாட்டின் முதுகில் இருக்குமே திமில் = Hump! அது!
  ராசா வூட்டு மாடு-ல்ல! பளிங்கு-ல நுகமாம்!:)) நுகம் = Yoke! ரெண்டு மாடும் முதுகுல சுமக்குமே…அது!
  ————–

  • anonymous says:

   ஆக ரெண்டு கட்டை இருக்கு = T போல…

   ____ = நுகம் (Yoke)
   | = கலப்பைத் தண்டு (Plough)

   * அதனோடு அணைத்து ஈர்க்கும், வரம்பின் மணிப் பொன் கலப்பை
   = நுகத்தையும், கலப்பையும் ஒன்னா இணைச்சி…
   = நுகம் பளிங்கு, கலப்பை = மரத்தின் மேல் பொன் வேய்ஞ்சது!

   தண்டுலயே, மேழி/முட்டி ன்னு பாகம் இருக்கும்!
   நுகத்தையும், கலப்பையும் ஒன்னாக் கட்ட = கலப்பைக் கயிறு; மாட்டோட கட்ட = கன்னிக் கயிறு ன்னு இருக்கு!
   ———————

   * வயிரத்தின் கொழு மடுத்திட்டு
   கொழு = Blade! இது தான் பொதுவா இரும்பால இருக்கும்! இது தான் மண்ணைப் புரட்டும்!
   ராசா வூட்டு ஏரு-ல்ல? அதான் வைரத்துல இருக்கு! வைரம் அறுக்கும் ஆற்றல் தான் உங்களுக்கே தெரியுமே:)

   * உரம் பொருவு இல் நிலம் வேள்விக்கு = வேள்விக்கு, நல்ல நிலமா, உரம் பொருவு இல்லாம…
   உரம் = திண்மை!
   பொருவு = என்னா-ன்னு தெரியல…(அறிந்தவர் சொல்லி உதவுங்கள்)
   ———————

   திண்மை குறையாத, சதசதப்பு இல்லா, உறுதியான நிலம் ன்னு வச்சிப்போம்!
   * அலகு இல் = அளவை/ கணக்கே இல்லாம
   * பல சால் உழுதேம் = பல பள்ளம்/ பாதையை உழுதோம்…

   சால் = தடம்
   குறுக்குச் சால் ஓட்டாத ன்னு சொல்லுறோம்-ல்ல?
   ஒரு தடம், பள்ளம் உழும் போது, குறுக்கால பூந்து, இன்னொரு தடம் உழக் கூடாது!

   இப்படிச் சுத்திச் சுத்தி வந்து உழுவதைக் காட்டுறாரு கம்பரு!
   கம்பன், வேளாளர் குடும்பத்துல பொறந்து இருப்பாரோ என்னவோ! விவசாயம் பத்திப் புட்டுப் புட்டு வைக்கிறாரு!
   நம்மாழ்வார் பற்றிக் கம்பன் பாடிய சடகோபர் அந்தாதி-லயும்…விவசாயம் ரொம்ப வரும்!

   எல்லாத்துக்கும் சிகரமா….
   “ஏர் எழுபது” -ன்னு ஒரே நூல்! கம்பன் பாடியது தான்!

 4. anonymous says:

  முக்கியமா ஒன்னை மறந்துடாதீக….

  ஏரோட்டும் போது, அவிங்கவிங்க தனியாத் தான் ஓட்டுவாக!
  வேடிக்கை பார்க்க, பக்கத்துல யாராச்சும் போனீங்கனா, முன்னால/ சைடுல மட்டும் போயிறாதீக; சற்று பின்னாலயே போங்க!

  கொழுவு கண்ணுக்கு தெரியாது ஈர நிலத்தில்….
  காலில் பட்டுச்சி-ன்னா அம்புட்டுத் தான்! கால் சதையை நோண்டீ எடுத்துரும்!
  ஏரு புடிக்கறவங்களே, பார்த்துத் தான் நடப்பாங்க!

  என் அத்தைப் பையன் ஒருத்தனுக்கு இப்பிடி ஆகி…அவனை வாழைப்பந்தல் கிராமத்துல இருந்து செய்யாறு ஆஸ்பத்திரிக்கு, சைக்கிள்-லயே மிதிச்சிக் கொண்டு போய் சேர்த்தது…இன்னும் ஞாபகம் இருக்கு!
  வழியெல்லாம் முருகா முருகா ன்னு…சைக்கிள் அசுர வேகம்!:)) வாழ்க்கைல அப்படியொரு சைக்கிள் ஓட்டினதே இல்ல!

  இப்போ ஏதோ பிசினஸ் அது இது ன்னு பெரிய ஆளு ஆயிட்டான்; ஆனா இப்போ போனாலும் ஓடியாந்து கட்டிக்குவான்:))

 5. anonymous says:

  //கணங் குழை//

  இப்படின்னா என்ன சொக்கரே?
  கனம் குழை ன்னா, நல்லா கனமான/ வெயிட்டான காதணி ன்னு சொல்லலாம்!
  கணம் = மூனு சுழி ண…கணம் + காதணி ன்னா என்னவா இருக்கும்???

 6. anonymous says:

  //தொழுகின்ற நல் நலத்துப் பெண் அரசி “தோன்றினாள்”//

  இங்கே, “தோன்றினாள்” ன்னு சொல், மிக முக்கியம்!
  முருகனை, கச்சியப்பரு, “உதித்தான்” ன்னு பாடுவாரு!

  * சீதை = கர்ப்பத்தில் பிறக்கவில்லை! தானே “தோன்றினாள்”
  * இராமன் = கர்ப்பத்தில் பிறந்தவன்!
  இவனுக்கு = பிறப்பு! அவளுக்கு = தோற்றம்!

  குழந்தை பிறந்தது-ன்னு சொல்லுவோம்!
  புத்தாண்டு பிறந்தது-ன்னு சொல்லுவோம்!
  ஆனா சூரியன்??
  = கதிரவன் “உதித்தது”! கதிரவன் “தோன்றியது”!

  ஏற்கனவே இருக்கும் பொருள்! புதுசு இல்ல! = அதுக்குத் தான் “தோன்றியது” ன்னு சொல்வது வழக்கம்!
  இரவில் மறைந்து, மீண்டும் காலையில் சூரியன் உதித்தது/ தோன்றியது!

  * அதே போல் முருகன்! = புதுசு அல்ல! = காலங்காலமாய் இருப்பவன் = “உதித்தனன்” உலகம் உய்ய!
  * அதே போல் சீதை = அன்னை அலைமகள் = கருணைக் கடல் = “தோன்றினள்” உலகம் உய்ய!!

 7. Idania says:

  நுகத்தடி- காளைகளின் கழுத்தில் பூட்டுவது. கட்டை வண்டியுடன், கலப்பையுடன். கலப்பை – உழுவதற்காக நுகத்தடியில் பூட்டுவது. ஏரில் நுகத்தடியிலிருந்து சாய்வாக மண்ணை நோக்கி வருமே, அதுதான்., கொழு என்பது கலப்பையில் பூட்டப்படும் உலோக வடிவங்கள். ஆழ உழ, விதைக்கு உழ, மண்ணை மட்டும் புரட்டிப்போட, அதற்கு தகுந்தாற்போல வடிவங்கள் இருக்கும். வரைபடம் தயார் செய்தேன். எப்படி அனுப்புவது என தெரியவில்லை. தேவைப்பட்டால் உங்கள் இமெயில் அனுப்பவும்.

 8. படத்தை இங்கு இடமுடியுமா?

  creative commons உரிமத்தில் விக்கிப் பொது ஊடகத்தில் இட்டால் (http://commons.wikimedia.org/wiki/Main_Page) விக்சனரி முதலியவற்றிலும் படத்தை இணைத்து அனைவரும் பயன்பெறுமாறு செய்யலாம்.

  நன்றி.

  நன்றி,

  • என். சொக்கன் says:

   படத்தை எனக்கு அனுப்புமாறு கேட்டிருக்கிறேன், வந்தவுடன் இங்கே சேர்க்கிறேன்

 9. அந்தணர் இல்லத் திருமணங்களில் நுகத்தடியை மணமகள் தலை மேல் வைத்து திருமாங்கல்ய சரடை அதில் வைத்து பின் மணமகன் தாலியை பெண் கழுத்தில் கட்டுவார். கணவனும் மனைவியும் ஒற்றுமையாகச் சேர்ந்து ஒரு செயலைச் செய்தால் தான் (உழுதால் தான்) வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும் என்பதை உணர்த்தும் ஒரு சடங்கு இது. திருமணங்களில் உபயோகப் படுத்தும் நுகத்தடியை மரத்தினாலும் சில சமயங்களில் வெள்ளியினாலும் செய்து வைத்திருப்பார்கள்.

  இந்தப் பாடலில் பளிங்கினால் செய்யப் பாட நுகத்தடியை பயன் படுத்தியதாகச் சொல்கிறார் கம்பர். கலப்பையில் வைரமும் வைடூரியமும்! ஜனக மகாராஜா எப்பேர்பட்ட அரசர். அவர் வேள்வி செய்ய தேர்ந்தெடுத்த இடத்தை சமன்படுத்த இந்த மாதிரி கலப்பையை பயன் படுத்துவது ஒன்றும் ஆச்சர்யமான விஷயம் இல்லை. இன்னொரு முக்கிய காரணம், பூமா தேவியின் மகளாக மகாலக்ஷ்மி அவதாரம் எடுக்கும் இடத்தில் இந்த மாதிரி ஒரு கலப்பையை பயன் படுத்துவதே முறை இல்லையா?

  amas32

 10. என். சொக்கன் says:

  கலப்பை வரைபடம் Updated (Sent by Praveena Mohanraj)

  • நன்று ப்ரவீணா:)
   எளிமையான சிறப்பான படம்! தங்கள் தமிழார்வத்துக்கும் பொருள் விளக்கப் பட ஆர்வத்துக்கும் மிக்க நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s