தூயோம்

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக் கதவம் தாழ் திறவாய்!

ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்,

தூயோமாய் வந்தோம், துயில் எழப் பாடுவான்,

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ!

நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!

நூல்: திருப்பாவை (#16) / நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார்கள் அருளிச் செயல்

பாடியவர்: ஆண்டாள்

சூழல்: பாவை நோன்பு இருக்கும் ஆண்டாளும் அவளது தோழிகளும் நந்தகோபன் வீட்டு வாயிலில் நின்று பாடுவதாகக் கற்பனை செய்கிறார்கள்

எங்களுக்குத் தலைவனாகிய நந்தகோபனுடைய மாளிகையைக் காவல் காப்பவனே, கொடிகள் அலங்கரிக்கப்பட்டுத் தோன்றுகிற தோரண வாசலில் நிற்பவனே, மணிக் கதவைத் திற,

ஆயர் குலச் சிறுமிகளாகிய நாங்கள் இங்கே சும்மா வரவில்லை, மணிவண்ணனாகிய அந்தக் கண்ணனை நேற்றைக்கு நாங்கள் சந்தித்தோம். அப்போது அவன்தான் எங்களைத் தன் வீட்டுக்கு வரச் சொன்னான். ’பாட்டுப் பாடி என்னைத் துயில் எழுப்பினால் உங்களுக்கு ஒலி செய்கின்ற பறைகளைப் பரிசாகத் தருவேன்’ என்றான். அதற்காகதான், நாங்கள் சுத்தமாகக் குளித்துக் கிளம்பிவந்திருக்கிறோம்.

காவலாளியே, கண்ணன் கொடுத்த வரத்தை நீ உன் வாயால் மாற்றிவிடாதே, எங்களைத் தடுத்து நிறுத்தாதே, அவன்மீது நாங்கள் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தத் தடையாக நிற்கிற இந்தக் கதவை உடனே அகற்றிவிடு!

துக்கடா

 • ஆண்டாளின் பாடல்கள் ஒவ்வொன்றிலும், அவர் பயன்படுத்துகிற வார்த்தைகளை ரசிப்பதா, அவற்றினுள் பொதிந்திருக்கும் உணர்வுகளை ரசிப்பதா என்று தீர்மானிப்பது மிகச் சிரமம். உதாரணமாக, இந்தப் பாடலில் ’நென்னலே வாய் நேர்ந்தான்’ என்ற பதத்தைக் கொஞ்சம் யோசியுங்கள், ‘நேத்திக்குச் சொன்னான்’ என்று நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் ஒரு வார்த்தை ஆண்டாள் குரலில் வரும்போது கூடுதல் அழகுடன் மாறிவிடுகிறது!
 • அப்புறம் ‘நந்தகோபன் கோயில்’ என்கிறாளே, கண்ணன் இருப்பதால் அந்த மாளிகை கோயிலாகிவிடுகிறதா?
 • அப்படியும் சொல்லலாம், ஆனால் உண்மையில் ‘கோயில்’ என்ற தமிழ் வார்த்தையின் பொருள் : கோ + இல் = ’அரசன் / அரச குடும்பத்தினர் வசிக்கும் இல்லம்’ என்பதுதான். இதற்குக் கம்ப ராமாயணத்திலிருந்து சில உதாரணங்கள் : ‘கைகயள் கோயில் நண்ணி…’, ‘கோசலை கோயில் புக்கான்’…
 • இங்கே நந்தகோபன் கோகுலத்தின் அரசன் என்பதால், அவன் வீடு கோயில், இறைவன் நம் எல்லாருக்கும் அரசன் என்பதால், அவன் வீற்றிருக்கும் இடமும் கோயில்!
 • அடுத்து, கண்ணன் பரிசு தருவதாகச் சொன்னான், அதற்காகதான் வந்தோம் என்கிறாளே ஆண்டாள், அப்போ அவளுக்குப் பரிசுதான் முக்கியமா?
 • கடைசி வரியில் அதற்கும் பதில் கிடைத்துவிடுகிறது, ’அவன் பக்கத்தில் நின்று பாடுகிற நேசத்துக்காக ஏங்குகிறோம்’ என்கிறாள் ஆண்டாள், பரிசெல்லாம் இரண்டாம்பட்சம்தான்.
 • சந்தேகமாக இருக்கிறதா? திருப்பாவையின் 29வது பாட்டைப் படியுங்கள், ஏற்கெனவே #365paa வரிசையில் வந்ததுதான் : https://365paa.wordpress.com/2012/01/14/192/

313/365

This entry was posted in அருளிச் செயல், ஆண்டாள், ஆழ்வார்கள், கண்ணன், திருப்பாவை, திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, விஷ்ணு. Bookmark the permalink.

17 Responses to தூயோம்

 1. PVR says:

  Chokka, my dear Chokka, my friend,

  This time your “thukkada’ is the show-stealer . WoW. You got in to ஆண்டாள் and made her say the Best Lines.

  Lovely

  • என். சொக்கன் says:

   Thank you 🙂

  • anonymous says:

   துக்கடாலோ ரெம்பாவாய்:))

  • anonymous says:

   ச்சே…நான் மட்டும் கவிஞர் வாலியா இருந்திருந்தா, துக்கடா துக்கடா 365பா பக்கோடா ன்னு lyrics எழுதி இருப்பேன்:)

 2. anonymous says:

  தோழி கோதைக்கும், பதிப்பாளர் சொக்கருக்கும் வணக்கம்:)

  For a change…இன்னிக்கி புரியுதா-ன்னு பாருங்க:)
  This comment is “Strictly Adults Only”:))

  நீளா துங்க, ஸ்தன கிரி – தடீ சுப்தம் உத்போத்ய கிருஷ்ணம்
  பாரார் த்யம் ஸ்வம் சுருதி – சிரஸ் சித்தம் அத்யாப யந்தி

  சோசிஷ் டாயாம், சிருஜிநி களிதம் – யா பலாத் கருத்ய புங்க்தே
  கோதா தஸ்யை நம – இதம் இதம் – பூய ஏவஸ்து பூயா
  :))

 3. anonymous says:

  //ஆண்டாளின் பாடல்கள் ஒவ்வொன்றிலும், அவர் பயன்படுத்துகிற வார்த்தைகளை ரசிப்பதா, அவற்றினுள் பொதிந்திருக்கும் உணர்வுகளை ரசிப்பதா என்று தீர்மானிப்பது மிகச் சிரமம்//

  சொக்கரே…மிக்க்க்க்க்க்க்க நன்றி….
  என் மன உணர்வுகளை அப்படியே பிரதிபலிச்சி இருக்கீங்க துக்கடாவில்…

  கோதையைப் பத்தி நான் ரொம்ப பேசக் கூடாது; பேசினா, “ஏன் இங்க மட்டும் ரொம்ப உருகுற”? ன்னு திட்டு விழும்:))

  * ஆனா, இந்து லூசுப் பொண்ணு தான் எனக்குப் பல வகைகளில் = வழிகாட்டி!
  * எப்படி அவளுக்கு ஒரு கண்ணன் உறுதியோ = எனக்கு ஒரு முருக உறுதி!

  அதைக் காட்டிக் குடுத்த அவளுக்கு, எத்தனை முறையும், வணக்கம் வைச்சி, Hai சொல்லுவேன்:))

 4. anonymous says:

  இந்தப் பாட்டில், இன்னோரு சுவாரஸ்யமான (சுவையார்வமான) சேதி இருக்கு!

  இது திருப்பாவையில் 16ஆம் பாடல்!
  * இதுக்கு முன்னாடியுள்ள பல பாடல்களில், ஒவ்வொரு தோழியா, தூக்கத்தில் இருந்து எழுப்புவா!
  * இதுக்குப் பின்னாடியுள்ள பாடல்களில்…. நந்தன் – அசோதை – பலராமன் – கண்ணன் – நப்பின்னை ன்னு வரீசையா எழுப்புவா
  * ஆனா இந்தப் பாடலில் மட்டும் யாரையும் எழுப்ப மாட்டா – ஏன்???
  ——————

  1. எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ?
  2. பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
  3. மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
  4. கும்ப கரணனும், தோற்று உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
  5. ஈதென்ன பேர் உறக்கம்?, அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்


  1. எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
  2. எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
  3. பலதேவா, உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்
  4. நப்பின்னை கொங்கை மேல், எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்

  – இப்படி, முன்னும் பின்னும் எழுப்பறவ…இதில் மட்டும் ஏன், no sleep, no wake?:)
  —————–

  ஏன்-ன்னா, இது Watchman பாட்டு!
  கோயில் காப்பானே! தோரணவாயில் காப்பானே!

  Watchman முன்னாடி வந்து…”உறங்காது எழுந்திராய்” ன்னு பாடினா, எப்பிடி இருக்கும்?:)))))

  அவன் வேலைக்கே ஆப்பு வைச்சா மாதிரி இருக்கும்!
  அதான்….
  பரவாயில்ல, என் தோழிக்கு, கொஞ்சம் அறிவு கூட இருக்கே!:) ஆச்சரியமா இருக்குடீ கோதை:)))

 5. anonymous says:

  இன்னோன்னும் சொல்லணும்;
  சொக்கரு ஓலைச் சுவடியப் படி எடுக்கும் போது, தப்பா எடுத்துட்டாரு-ன்னு நினைக்கேன்:)))

  கூர் “வேல்” கொடுந் தொழிலன் ன்னு தான், கண்ணனின் அப்பாவைப் பாடுறா!
  அப்படீன்னா அவரு பேரு “கந்த கோபன்” தானே?
  நீங்க, நாயகனாய் நின்ற “நந்த கோபன்” ன்னு போட்டிருக்கீங்க??
  இந்த வரலாற்றுப் பிழையை உடனே சரி பண்ணுங்க!:))))

  ச்ச்ச்ச்ச்ச்சும்மா:)

 6. anonymous says:

  இப்போ, எல்லாருக்குமே தமிழ் சார்ந்த ஒரு கேள்வி! – விளையாட்டு அல்ல, மெய்யாலுமே தான்!

  //நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!//

  * திறவேல் = திறவாதே
  * செய்யேல் = செய்யாதே
  – இதெல்லாம் எதிர்மறை தானே?

  இயல்வது கரவேல்
  ஈவது விலக்கேல்
  ஊக்கமது கைவிடேல்
  எண் எழுத்து இகழேல்
  -ன்னு ஆத்தி சூடியில் ஒளைவைப் பாட்டி கூடச் சொல்லுறா!

  அப்படியிருக்க, இந்தக் கோதைப் பொண்ணு…. “கதவம் நீக்கேலோர் எம்பாவாய்” ன்னு பாடுறாளே!
  நீக்கேல் = கதவின் தாழ்ப்பாளை நீக்கு-ன்னு சொல்றாளா? நீக்காதே-ன்னு சொல்லுறாளா?

  இப்போ, கண்ணன் கதவு தொறக்கணுமா? வேணாமா?? – சொல்லுங்க பார்ப்போம்:)))

  • முருகா, இதென்ன திருவிளையாடல்? சொல்விளையாடல்?

   ஏல் -> ஏலும் -> இயலும். கதவம் திறவேல் – கதவைத் திறக்க இயலுமா? Please! Please என்ற கெஞ்சலா இது?

   என் நினைவிற்கு ஒரு திரைப்படப் பாடல் வரிகள் நினைவிற்கு வருகின்றன.

   அதிகாலையில் சேவலை எழுப்பி அதைக் கூவென்று சொல்லுகிறேன்
   கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்

   இங்கே ஆண்டாள்:

   அதி காலையில் காவலை எழுப்பி தாழ் திறவெனக் கெஞ்சுகிறேன்
   மணிக் கதவினைச் சீக்கிரம் திறந்தால் உள்ளோடிட மிஞ்சுகிறேன்

   எனப் பாடுகிறாளோ?

   • வணக்கம் பழ.கந்தசாமி ஐயா:)
    தமிழோடு விளையாடவும் விளையாடணும், படிக்கவும் படிக்கணும் ங்கிறது என் கட்சி:))

    நீங்களே பாதி பதில் சொல்லீட்டீங்க பாருங்க:)
    மீதி பதில் சிவ ஆனந்தன் சொல்லீட்டாரு:)

   • anonymous says:

    oops….
    login incorrect….muruga…itz ok…
    ——

    🙂
    திருப்பாவையில் ஒவ்வொரு வரியிலும் ஏலோ ரெம்பாவாய், ஏலோ ரெம்பாவாய் ன்னு வரும்!
    அது என்னான்னா, ஏல் + ஓர் + எம் பாவாய்
    = நான் சொல்லுறதை,
    * ஏல் (ஏற்றுக் கொள்),
    * ஓர் (நீயே மனசுக்குள் ஆய்வு செய்),
    * எம் பாவாய் (என் பெண்ணே, தோழியே)

    இந்தப் பாட்டுல
    நீக்கேலோ ரெம்பாவாய் = நீக்கு – ஏல் + ஓர் + எம் பாவாய்
    * ஏ காவல்கார அண்ணா, தாழை நீக்கு
    * பெண்களே, ஏல் + ஓர் + எம் பாவாய்

  • ஆனந்தன் says:

   கதவம் நீக்கு + ஏலோர் எம்பாவாய் (அ-து) கதவைத் திற (என்று பாடுவோம் பெண்களே)

   (கதவம் நீக்கேல் + ஓர் எம்பாவாய் – இப்படி அல்ல)

 7. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தரலை என்பார்களே அது மாதிரி, கண்ணனே நந்தகோபனே அழைத்திருக்கிறேன், நடுவில் நீ எனைப் படுத்துகிறாயே என்றொரு தவிப்பும் தெரிகிறதோ?

  • anonymous says:

   yessu! அதான், வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே-ன்னு பதறுகிறாப் பாருங்க! சொக்கர் துக்கடாலசொல்லி இருக்காரு பாருங்க! கரீட்டா உணர்ந்து சொல்லியிருக்காரு அந்தப் பதற்றத்தை:)

 8. //அழைத்திருக்கிறேன்// -> அழைத்திருக்கிறான்

 9. எனக்கு இந்தப் பாடலில் பிடித்த வரி // தூயோமாய் வந்தோம் //
  ஆண்டாளை போல தூய மனதினள் உலகில் உண்டோ? எதை அடைய வேண்டுமானாலும் நம் எண்ணத்திலும் செயலிலும் தூய்மை இருக்க வேண்டும். அப்பொழுது தான் வெற்றிக் கிட்டும்.

  அதுவும் திருப்பள்ளியினின்று எழும்படி பாடும் பொருட்டு வரும் ஆயர் பெண்களாகிய ஆண்டாளின் குழாம் பரிசுத்தர்களாக வந்து நிற்கிறார்கள். மேலும் பரிசு கொடுப்பதாகக் கண்ணன் வாக்குக் கொடுத்திருக்கிறானே, அதை பெறுவதற்கும் தூய்மையாய் வந்து இருக்கிறார்கள்.

  இங்கே இவர்கள் பெற துடிக்கும் பரிசே இறைவன் சேவை தான். அந்த இறை சேவை செய்வதற்கும் தூய்மையே முதற் தேவை!

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s