மனைகெழு பெண்டு ஆவேன்

’உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்

யாய் அறிந்து உணர்க’ என்னார், தீ வாய்

அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்

’இன்னள் இனையள், நின் மகள்’ எனப் பல் நாள்

எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன்

‘நாணுவள் இவள்’ என, நனி கரந்து உறையும்

யான் இவ் வறுமனை ஒழிய, தானே

‘அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை

எனக்கு எளிது ஆகல் இல்’ எனக் கழல் கால்

மின் ஒளிர் நெடுவேல் இளையோன் முன்னுறப்

பல்மலை அரும் சுரம் போகிய தனக்கு, யான்

அன்னேன் அன்மை நன் வாயாக

மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி

வெய்து இடையுறா அது எய்தி, முன்னர்ப்

புல் என் மாமலைப் புலம்புகொள் சீறூர்ச்

செல்விருந்து ஆற்றி, துச்சில் இருத்த

நுனை குழைத்து அலமரும் நொச்சி

மனைகெழு பெண்டு யான் ஆகுக மன்னே!

நூல்: அகநானூறு (#203)

பாடியவர்: கபிலர்

சூழல்: பாலைத் திணை, காதலனைத் திருமணம் செய்துகொள்வதற்காக யாருக்கும் தெரியாம புறப்பட்டுச் செல்கிறாள் காதலி, அதனால் வருத்தம் கொண்ட தாயின் வார்த்தைகள்

இந்த ஊர் பொல்லாதது, இங்கே வாழ்கிற பெண்களுக்கெல்லாம் தீ போன்ற கொடிய வாய், எல்லாரும் அடுத்தவர்களைப் பற்றி வம்பு பேசுவதையே தொழிலாகக் கொண்டவர்கள்.

எங்களைமட்டும் இந்தப் பெண்கள் விட்டுவைப்பார்களா? பல நாள்கள் இவர்களே என்னைத் தேடி வந்திருக்கிறார்கள், ‘உன் பொண்ணு சரியில்லை, யாரோ ஒரு பையனோட சுத்திகிட்டிருக்கா’ என்று கோள் மூட்டியிருக்கிறார்கள்.

என் மகளுக்கு எது நல்லது என்று எனக்குத் தெரியாதா? அவள் ஒருவனைக் காதலிக்கிறாள் என்றவுடன் சந்தோஷப்படுவதோ, கோபப்படுவதோ என்னுடைய பிரச்னை, இவர்களுக்கு என்னவாம்?

நல்லவேளை, இந்தப் பெண்கள் சொன்னதைப்பற்றியெல்லாம் நான் என் மகளிடம் பேசவில்லை, பாவம், வெட்கப்படுவாள்!

ஆனால் ஏனோ, என் மகளுக்கு என்னைப் புரியவில்லை. தன் காதலைப் பற்றி என்னிடம் பேசாமலேயே, ‘என்னுடைய தாய் எங்களைச் சேர்த்துவைக்கமாட்டாள்’ என்று தவறாக நினைத்துவிட்டாள். தானே சொந்தமாக ஒரு முடிவெடுத்துவிட்டாள், வீரக் கழலை அணிந்த கால், ஒளி விடும் வேலைக் கொண்ட அந்த இளைய மகன், அவளுடைய காதலனுடன் கிளம்பிவிட்டாள்.

இப்போது, இந்த வறுமையான வீட்டில் நான்மட்டும் தனியே இருக்கிறேன். அவர்கள் இருவரும் பல மலைகளைக் கொண்ட அரிய காட்டைக் கடந்து எங்கோ சென்றுவிட்டார்கள்.

இனிமேல், ‘நான் அப்படிப்பட்டவள் இல்லை’ என்று என் மகளுக்கு எப்படிச் சொல்வேன்?

ஒரே ஒரு வழிதான், அவர்கள் நடந்த அதே திசையில் நானும் புறப்படப்போகிறேன், அவர்கள் சென்று சேரவிருக்கும் பெரிய மலையின் சிறிய ஊருக்கு நானும் செல்லப்போகிறேன்.

ஆனால், நான் நேரடிப் பாதையில் செல்லமாட்டேன். விலங்குகள் நடந்து செல்கிற வழிகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற மலையடிவாரக் குறுக்குப் பாதையில் எந்த இடையூறும் இல்லாமல் பயணம் செய்து, அவர்களுக்கு முன்பாகவே அந்த ஊருக்குச் சென்று சேர்ந்துவிடுவேன். அங்கே, நுனிகள் காற்றில் சுழலும் நொச்சி வேலியைக் கொண்ட ஒரு வீட்டில் தங்கிக்கொள்வேன்.

சில நாள்கள் கழித்து, என் மகளும் அந்த இளைஞனும் அங்கே வந்து சேர்வார்கள். நான் அவர்களை வரவேற்று உபசரிப்பேன். நல்ல விருந்து சமைத்து இடுவேன். அதன்பிறகு, அவர்கள் மணவாழ்க்கை நடத்தப்போகும் இல்லத்தைப் பாதுகாக்கிற ஒரு மூதாட்டியாக வாழ்வேன்.

துக்கடா

 • இந்தப் பாடலுக்கு நேரடி உரையைவிடக் கொஞ்சம் நாடகத்தனமான வசன உரைதான் சரிப்படும் என்று நினைத்துக் கொஞ்சம் சுதந்தரம் எடுத்துக்கொண்டுள்ளேன். நேரடியான உரை வேண்டுவோர் இங்கே செல்லலாம் : http://tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=449&y=451&bk=203&z=l1270583.htm
 • இன்றைய ‘அன்னையர் தின’த்துக்காக இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் நண்பர் @kryes
 • நம் கலாசாரத்தில் ‘அன்னையர் தினம்’ என்று தனியாகக் கொண்டாடும் வழக்கம் இல்லாவிட்டாலும், சங்க இலக்கியத்தில், குறிப்பாக அகப் பாடல்களில் தாய்க்குத் தனி மரியாதை உண்டு. அதிலும் இன்றைய பாடல், ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால், Stunning. ’எப்பவும் என் மகளோடு இருக்கவேண்டும்’ என்று ஒரு தாய் நினைப்பதைக்கூட நாம் Cliche என்று ஒதுக்கக்கூடும், ஆனால் அதற்கு அவள் சொல்லும் காரணம்? ‘என் பொண்ணு யாரையோ காதலிச்சா, அதை நான் எதிர்க்கலை, ஆனா அதேசமயம் அவளோட காதலை நானாப் புரிஞ்சுகிட்டு அவங்களைச் சேர்த்துவைக்கலை, அவ வருத்தப்பட்டுக் கிளம்பிட்டா, அந்த வருத்தத்தைத் தீர்க்கறதுக்காக நான் ஏதாவது செய்யணும், நான் உன் காதலைப் பிரிக்கறவ இல்லைன்னு புரியவைக்கணும், அதுக்காக, அவங்களுக்குக் கல்யாண விருந்து போடப்போறேன், அப்புறம் காலத்துக்கும் அவங்க வீட்டிலயே வேலைகளைச் செஞ்சுகிட்டு இருக்கப்போறேன்.’
 • இந்த அற்புதமான பாடலை நான் இன்றுவரை படித்ததில்லை. தேர்வு செய்து கொடுத்த @kryesக்கு விசேஷ நன்றிகள். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்
 • இன்னொரு விசேஷம், ‘குறிஞ்சி’ ஸ்பெஷலிஸ்டான கபிலர் ‘பாலை’த் திணையில் மிக அற்புதமாக விளையாடியிருப்பதுதான்!

312/365

Advertisements
This entry was posted in அகநானூறு, அகம், கபிலர், காதல், நண்பர் விருப்பம், பாலை, பெண்மொழி. Bookmark the permalink.

23 Responses to மனைகெழு பெண்டு ஆவேன்

 1. எனக்கு இந்த பாடல் பரிச்சயமில்லை. கபிலரை குறுந்தொகையில் தான் படித்திருக்கிறேன். நல்ல தேர்வு. நீங்கள் எழுதியது போல், தாய் உரைக்கும் காரணம் அருமையாக இருக்கிறது.

  வாழ்க்கையில் மிக பெரிய அக பிரச்சினை என்னவென்றால் அது ஒருவரின் மனதை இன்னொருவர் புரிந்துகொள்வது தான். இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதி ‘டெட் என்னும் சிறுகதை இதை பற்றி தான் பேசுகிறது. அதை நான் படித்த சிறுகதைகளில் மிக உயர்ந்ததாக கருதுகிறேன். நாம் ஒருவரை பற்றி என்ன எண்ணி உள்ளோம் என்பதை அவர்கள் அதை எப்படி புரிந்துக்கொள்கிறார்கள் என்று நமக்கு தெரிவதில்லை. சில சமயங்களில் வார்த்தைகள் தேவைப்படுகின்றன, சில சமயங்களில் நம் செய்கை அதை உணர்த்துகிறது. இங்கு அந்த தாய் தன செயல் வழியால் தான் தன உள்ளத்தில் மகளுக்காக தான் மறைத்து வைத்திருக்கும் அன்பை காட்டவேண்டும். அப்படி காட்டவில்லை என்றால் அவள் மன உளைச்சலுக்கு ஆளாவாள்.

  நீங்கள் சொன்னது போல் பொதுவாக கபிலர் குறுஞ்சி திணையில் தான் பல பாடல்கள் இயற்றியுள்ளார். ஆனால் இந்த பாலை பாடல் அருமையாக உள்ளது. எப்பொழுதும் போல் கபிலர் அதிகம் வார்த்தைகளை உபயோகிப்பதில்லை. சில வார்த்தைகளின் ஊடே ஒரு பெரிய கதையை சொல்லிவிட்டார். இந்த பாடலை கொடுத்ததற்கு நன்றி.

  • என் – எங்கள் விருப்பப்பாவை இட்டமைக்கு மிக்க நன்றி சொக்கரே!
   அந்த மகிழ்வில் நான், நானாகவே பின்னூட்டுகிறேன்!

   இந்தப் பாடலில் “மின் ஒளிர் நெடு வேல்” ன்னு அவன் வேலும் இருக்கு:))
   ————-

   //வாழ்க்கையில் மிக பெரிய அக பிரச்சினை என்னவென்றால் அது ஒருவரின் மனதை இன்னொருவர் புரிந்துகொள்வது தான்//

   ஒரு வாசகமானாலும் திரு வாசகமாய்ச் சொன்னீங்க, ராகா சுரேஷ் சார்!
   புரிதல் = வாழ்வில் பெருஞ்செல்வம்!!!

   அன்பு/ காதல் கூட அப்புறம் தான்!
   முதலில் புரிதல்!

   அது இருந்தால், அன்பு வெளிப்படுத்தலீன்னாக் கூட…
   அந்த அன்பு எங்கோ உள்ளே இருக்கு….என்ற புரிதல் இருந்து கொண்டே இருக்கும்!
   = எவ்ளோ துன்பத்திலும், அதுவே “நிம்மதி” குடுக்கும்!

   நீங்கள் சொன்ன, “ஒருவரின் மனதை இன்னொருவர் புரிந்துகொள்வது” வாய்க்க வேணுமாய், ஒரு திரு முருகனை மண்டியிட்டு வேண்டிக் கொள்கி்றேன்!
   உங்கள் – பெரியோர்களின் ஆசிகளையும் வேண்டி நிற்கிறேன், 365paa என்னும் இத் தமிழ்ச் சோலையில்!

 2. Karthik says:

  அருமையான பாடல்..சரியான தேர்வு.. பல நூற்றாண்டுகள் கடந்தும் மாறா தாயன்பை அவள் மனதை சிறப்பாக பதிவு செய்துள்ளது இப்பாடல்.. பாடலை பகிர்ந்தமைக்கு நன்றிகள்!!

 3. Karthik says:

  மேலே நன்றிகள் அப்படின்னு போட்டுட்டேன், அது சரியா தப்பான்னு தெரியலை..தப்பா இருந்தா இந்த சபை மன்னிக்கவும்..
  முருகா..என் அருமை நண்பா..இந்த பாட்டுக்கு உன் அருள் கிடையாதா??
  முருகா.. சொற்பந்தல் அமைத்து ஆடலரசி மாதவி போன்ற ஒரு நடனத்தை ஆடுமாறு வேண்டுகிறேன்.. அருள் புரியவும்..

  • anonymous says:

   என்ன இது, மாதவி ன்னுட்டீங்க?:)
   நான் நடனம் – பாடல் ன்னு கலை அறியாக் கண்ணகி:) அதான் மக்கு போல இருந்துட்டேன்!
   மாதவிப் பந்தல் என்கிற தலைப்பில் வரும் மாதவி வேற! அது குருக்கத்திப் பூ! But, மாதவியும் நல்ல பொண்ணு தான்!
   ———–

   //நன்றிகள்//

   இப்படிச் சொல்வதில் பெருசாப் பிழை ஒன்னும் இல்ல! Dont worry:)
   ஆங்கிலத்தில் உணர்ச்சிக்கு ஒருமை இல்ல! பன்மை தான்!
   = Thank ன்னு தனித்துச் சொல்ல மாட்டாங்க! Thanks!!

   ஆனா தமிழில், உணர்ச்சிக்கு ஒருமை உண்டு! ஒருமை மட்டுமே உண்டு!
   உணர்ச்சி ஒன்றுபட வேணும்! அதான் ஒருமை!

   கற்புகள் காப்பாத்தினீங்க
   மானங்கள் காப்பாத்தினீங்க ன்னு சொல்றது இல்ல!

   கற்பைக் காப்பாத்துனீங்க
   மானத்தைக் காப்பாத்துனீங்க ன்னு ஒருமை மட்டுமே!

   கற்பு, மானம் போலவே நன்றி என்பதையும் உணர்ச்சியாப் பார்த்ததாலே, நன்றி ன்னு ஒருமையா நின்னுருச்சி!
   நன்றிகள் என்பது இந்தக் கால, நாமா உருவாக்கிய வழக்கு மட்டுமே!:)

 4. //இப்போது, இந்த வறுமையான வீட்டில் நான் மட்டும் தனியே இருக்கிறேன். // இதை விட அழகாக அந்தத் தாயின் மன நிலையை எந்த வரியும் விளக்காது. ஒரு பெண் தாயிடம் தன் காதலை தெரிவிக்காமல், உத்தரவு கிடைக்காது என்று தானாக எண்ணி வீட்டை விட்டு சென்று காதலனுடன் குடும்பம் நடத்த ஆரம்பிப்பது ஒரு தாய்க்கு வந்த பேரிடி. மகாலக்ஷ்மியான மகள் இல்லா வீடு வறுமையான வீடு தானே?

  ஒரு பெண்ணின் உணர்வுகள் வேறு, அதே பெண் தாயாக மாறியபின் எண்ணுவது வேறு. திருமண வயதில் இருக்கும் பெண்ணுக்கு நல்ல தாயாக இருப்பது ஆகச் சிறந்த ஒரு கடுமையான தேர்வுக்கு செல்வது போல. மகள் மனதைப் புரிந்து கொள்ள வேண்டும், அவளுக்கு எது நல்லதோ அதை அவளுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்ல தெரிந்திருக்க வேண்டும், உற்றார் உறவினர் பேச்சை மனம் நொந்து போகாமல் கேட்கப் பழகிக் கொள்ள வேண்டும். இவையும், இவற்றுக்கு மேலும் செய்து பின்னும் மகள் வீட்டை விட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் காதலுனுடன் ஓடிவிட்டால் தாய் தேர்வில் தோல்வி அடைந்தவளாகிறாள்.

  இந்த தாங்கொண்ணா மனவருத்தம், அடைந்தவர்கள் மட்டுமே உணரக் கூடியது, மற்றவர் எவரும் புரிகிறது என்று கூட சொல்ல தகுதியற்றவர்கள்!

  ஆனால் இந்த நிலையிலும் அந்தத் தாய் என்ன நினைக்கிறாள் பாருங்கள், கடினமான குறுக்கு வழியில் சென்று அவர்கள் அடையும் இலக்கை முன்னதாகவே அடைந்து அவர்களை வரவேற்க காத்து நிற்க விழைகிறாள். மகளின் மகிழ்ச்சியே இங்கும் முதன்மை பெறுகிறது. மகள் அவள் தேர்ந்தெடுத்த கணவனுடன் சந்தோஷமாக வாழ வேண்டுமே என்ற ஆதங்கத்தில் அவளுடனே தங்கி அவர்களுக்கு தொண்டாற்ற நினைக்கிறாள். இது ஒரு பாதுகாப்புக்காகவும் தான். எங்கே மகளின் துணைவன் அவளை கைவிட்டு விடுவானோ என்ற பயத்தில் கூட இதை அவள் செய்ய முற்பட்டிருக்கலாம். தாயின் அன்பின் ஆழத்தை வேறு ஒரு தாயால் கூட சில சமயம் புரிந்து கொள்ள முடியாது.

  மிக மிக அருமையான ஒரு பாடல். தேர்வு செய்து எனக்கு dedicate செய்த KRSக்கு நன்றி. பாடலை இப்பதிவில் போட்டு அதியற்புத விளக்கமும் அளித்த திரு.சொக்கருக்கு நன்றகள் கோடி.

  தாயாய் இருப்பது ஒரு மாபெரும் வரம். அந்த வரத்தை எனக்களித்த இறைவனுக்கு என்ன சொல்லி நன்றி கூறுவேன்!

  amas32

 5. இது ஒரு அற்புதமான சங்கப் பாடல்!
  இதில் “அம்மா” என்பது உறவின் ஓர் அடையாளம் மட்டுமே!
  இந்த அம் மா நிலையில், யாரும் நிற்கலாம்!

  நிற்க முடியும்! புரிதல் என்பதை உள்ளத்தால் விழைபவர்கள் யாரும் இந்தப் பாடலோடு தொடர்பு படுத்திப் பார்க்கலாம்!
  அப்படித் தான் பாடலை, கபிலர் சிறுகச் சிறுகச் செதுக்கி இருக்காரு!

  அதுக்கு சொக்கர், மரபு உரையாக் குடுக்காம, ஒரு சிறுகதை பாணியில், நாடக வசனங்களோடு பொருள் எழுதியது தான் இன்னும் சிறப்பு!
  இதுக்கு, இப்படித் தான் எழுத வேண்டும்! எழுதணும்!
  ———————

  //என் மகளுக்கு எது நல்லது என்று எனக்குத் தெரியாதா? அவள் ஒருவனைக் காதலிக்கிறாள் என்றவுடன் சந்தோஷப்படுவதோ, கோபப்படுவதோ என்னுடைய பிரச்னை, இவர்களுக்கு என்னவாம்?//

  //அவ என் கிட்ட அவ காதலைப் பற்றி சொல்லல! இருந்தாலும், அவளோட காதலை நானாப் புரிஞ்சுகிட்டு அவங்களைச் சேர்த்துவைக்கலை,
  அவ வருத்தப்பட்டுக் கிளம்பிட்டா, அந்த வருத்தத்தைத் தீர்க்கறதுக்காக நான் ஏதாவது செய்யணும்//

  Hats Off!!!

  புரிதலை மட்டுமே வேண்டி நிற்கும் உள்ளங்கள், இப்படித் தான் இருக்கும்!

  அவர்கள் புரிந்து கொள்ளவில்லையே என்பதை விட….
  நாம் இன்னும் எப்படியெல்லாம் புரிஞ்சிக்கலாம், எப்படியெல்லாம் புரிஞ்சிக்கலாம்…
  ன்னு தன்னையே அந்தப் புரிதலுக்கு ஒப்புக் கொடுக்கும்
  முருகனருள்!

 6. anonymous says:

  இந்தப் பாட்டுக்கு இராகவன் உரை சொன்னா ரொம்ப நல்லா இருக்கும்!

  நான், ஆங்கிலமும் கலந்து கலந்து சொல்வேன், எளிமைக்காக! ஆனாலும் செந்தமிழே சிறப்பு!
  சரி….இராகவனின் சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி போல் இல்லீன்னாலும்…. வெறும் பந்தலில் உப்பு மாரியாகவாச்சும் சொல்ல முனைகிறேன்!
  ————–

  சொக்கர் கிட்ட புடிச்சது என்னா-ன்னா, நுட்பங்களை எடுத்துச் சொல்லலீன்னாலும், அதை லாவகமாக் கோடு காட்டீருவாரு துக்கடாவுல:))
  இதுலயும் காட்டி இருக்காரு பாருங்க!

  1. அன்னையர் தினம்’ என்று தனியாகக் கொண்டாடும் வழக்கம் இல்லாவிட்டாலும்,
  2. குறிஞ்சி’ ஸ்பெஷலிஸ்டான கபிலர் ‘பாலை’த் திணையில் மிக அற்புதமாக விளையாடியிருப்பதுதான்
  ————-

  தாய்மை:

  //அன்னையர் தினம்’ என்று தனியாகக் கொண்டாடும் வழக்கம் இல்லாவிட்டாலும்//

  திருக்குறள்-ல்ல தேடிப் பாருங்க! ஒரே குறள் தான் இருக்கும்!
  ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும் – தன் மகனைச்
  சான்றோன் எனக் கேட்ட தாய்
  மக்கட் பேறு, இல் வாழ்க்கை ன்னுல்லாம் சொன்ன வள்ளுவரு, தாய்மை க்குத் தனி அதிகாரம் வைக்கவே இல்ல! ஏன்?

  மத்த நீதி இலக்கியம் நாலடியார், இனியவை நாற்பது… etc etc….என்னென்னமோ பேசும்….வாய்மை ன்னு பேசும், ஆனா தாய்மை ன்னு பேசாது:) ஏன்?

  தமிழ்ப் பண்பாட்டில், தாய்மை-க்கு அவ்ளோ தான் மதிப்பா? அகம்-புறம், காதல்-வீரம் தான் சமூகப் பொருளா?
  சங்கப் பாடல்களில் கூட, very rare!
  இது போல ஒரு பாட்டு, ஈன்று புறம் தருதல் என் தலைக் கடனே, மகன் மார்பில் விழுப்புண் இருக்கா? ன்னு பார்க்கும் தாய் ன்னு தான் இருக்குமே ஒழிய…

  தாய்மையைப் போற்றும் பாடல்கள், சங்கத் தமிழ் இலக்கியத்தில் மிகவும் சொற்பமே! ஏன்-ன்னு சொல்லுங்க (அ) யோசிங்க பார்ப்போம்:))

 7. anonymous says:

  கபிலர்

  இவரைப் பத்தித் தனி நூல் தான் எழுதணும்! எழுதட்டுமா?:))
  ——————-

  இப்போ, நம்ம சொக்கனையே எடுத்துக்குவோமே!
  சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குப் போனா…..கிழக்குப் பதிப்பகம், ஆக்சிஜன் புக்ஸ் ல்ல சொக்கனின் நூல்கள் இருக்கும்! எல்லா book stall லிலும் சொக்கன் சொக்கன் சொக்கன் ன்னே இருந்தா எப்படி இருக்கும்? :)))

  இப்படி எல்லா book stall லிலும் இருப்பவரு = கபிலர்!
  அவ்ளோ demand கபிலருக்கு!

  எட்டுத் தொகை நூல்கள் = எட்டு!

  1. நற்றிணை = கபிலர் இருப்பாரு
  2. குறுந்தொகை = கபிலர் இருப்பாரு
  3. ஐங்குறு நூறு = கபிலர் இருப்பாரு
  4. பதிற்றுப் பத்து = கபிலர் இருப்பாரு

  5. பரிபாடல் = இல்லை
  6. கலித் தொகை = கபிலர் இருப்பாரு
  7. அக நானூறு = கபிலர் இருப்பாரு
  8. புற நானூறு = கபிலர் இருப்பாரு

  பரிபாடல் எசப்பாட்டு, அதைத் தவிர்த்து….அத்தனை நூல்களிலும் இருக்கும் ஒரே சங்கத் தமிழ்ப் புலவர்-ன்ன்ன்ன்ன்ன்னா = கபிலர் மட்டுமே!:)

  • anonymous says:

   சரி….இத்தனை இடத்துல இருக்காரே…ஒவ்வொன்னுத்தலேயும் ஒவ்வொரு subject? ன்னா அதுவும் இல்லை!
   எல்லா book stall லிலும் ஒரே subject தான்! = குறிஞ்சி:)

   குறிஞ்சித் திணைக்கு-ன்னே பொறந்தவரு! முருகனுக்கு-ன்னே பொறந்தவரு:)
   பண்டைத் தமிழ்த் தெய்வம் என்பதால், மாயோன் ஆகிய திருமால் மேலயும் பாடி இருக்காரு!
   ஆனா…குறிஞ்சியே அவர் உறிஞ்சி உறிஞ்சிக் குடிப்பது!
   —————-

   அப்படியாப்பட்ட அவரு, எதுக்கு சொக்கர் இன்னிக்கி போட்ட பாலைத் திணைல எழுதணும்?
   * குறிஞ்சி = புணர்தலும், புணர்தல் நிமித்தமும்!
   * அதுக்கு opposite பாலை = பிரிதலும், பிரிதல் நிமித்தமும்!

   இன்பத்தில் திளைப்பவர்கள், துன்பத்தில் துவள்வாரை நினைப்பதில்லை!
   உற்ற தோழன் ஒருத்தன், சினிமாவில் ஜாலியா இருக்கும் போது, மருத்துவமனையில் இருக்கும் தோழனை நினைப்பானா?

   வெகு சிலரே நினைப்பார்கள்! அதுக்கு ஒரு மனசு வேணும்! Kabilar had that manasu!
   முருகன் குடுத்த தமிழை விட….முருகன் குடுத்த மனசு பெரிது!!

   குறிஞ்சி இன்பத்திலேயே இருந்தவரு….
   மற்ற திணைகளின் உணர்ச்சியும் லேசாத் தொட்டுப் பாத்தாரு!
   அதிலே அதிகமாத் தொட்டது = முல்லையும், பாலையும் தான்!

  • anonymous says:

   இப்படிப் பாலையில் எழுதினாலும், பழக்க தோ’ஷ’ம்…நடுநடுவே குறிஞ்சியும் வந்துருது:))
   இதுக்கு = “திணை மயக்கம்” ன்னு பேரு!

   நெடு வேல்
   பல் மலை
   மான் அதர்
   அலமரும் நொச்சிப் பூ
   ன்னு இதெல்லாம் shades of kuRinji 🙂
   —————–

   பாலை ன்னா பிரிவில் தான் முடிக்கணும்!

   ஆனா இவரோ, மகள் பிரிந்தாலும்….அந்த ஊருக்குத் தானே சென்று, வழியில் அவங்களுக்குப் பொங்கிப் போட்டு,
   அவங்க இல்லப் பெண்டா (domestic help – வேலைக்காரி ன்னு சொல்ல எனக்கு நா வரலை – sorry)
   அவர்களோடு சேர்வதையே நோக்கமாகப் பாட்டு!

   பிரிவுப் பொருளிலும், சேர்தலே நோக்கமாப் பாடுறாரு
   = இவரே “குறிஞ்சிக்” கபிலர்!

 8. anonymous says:

  பாட்டுக்கு, நான் வரிக்கு வரி, நயம் காட்ட முடியல!
  bcoz this is a spl song to me & some old memories from paris are coming back!:)

  எனவே, முன்பு சொன்ன அதே “Coffee uRinjum Technique” பயன்படுத்தி,
  பாட்டையே நேரடியா வாசிச்சிப் பாருங்க! உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிப் போகும்!:)

  “Coffee uRinjum Technique”:
  காபியை உறிஞ்சி உறிஞ்சிக் குடிப்பது போல்….ரெண்டு ரெண்டு வரியாச் சூடா உள்ளிழுத்து, நிறுத்திருங்க!
  மெல்ல அந்த ரெண்டு வரியும் சப்புக் கொட்டிட்டு…அப்பறம் அடுத்த ரெண்ட வரியை உறிஞ்சலாம்! உள்ளே சங்கத் தமிழ், பதமா இறங்கும்!:))
  ———————-

  coffee sipping start…
  உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்
  யாய் அறிந்து உணர்க’ என்னார்
  stop!!

  = சந்தோசப் பட்டாலும் சரி, மாறுபட்டாலும் சரி…யாய் (தாய்)!
  = தாய் அறிந்து உணரட்டும் ன்னு விட்டுட்டுப் போவது தானே? அப்படிப் போக மாட்டேங்குறாங்குளே!:((
  = உவக்குநள்; உடலுநள்!
  = தாய் அறிந்து உணர்க = என்னவொரு சொல்லாட்சி!
  ————————

  coffee sipping start…
  தீ வாய்
  அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்
  ’இன்னள் இனையள், நின் மகள்’ எனப் பல் நாள்
  stop!!

  = தீ வாய் Acid Tongue:)
  = அலர் வினை மேவல் = Rumor Occupation
  = அம்பல் பெண்டிர்

  * இரகசியம் சிலருக்கு மட்டுமே தெரிஞ்சா = அம்பல்
  * ஊர் முழுக்கப் பரவுச்சின்னா = அலர்
  இப்படி அம்பலை – > அலர் ஆக்குறதுன்னே, தொழில் ரீதியா இறங்கியுள்ள சில பெண்களாம் = அம்பல் பெண்டிர் -> அலர் வினை மேவல்
  என்னமாப் போட்டுத் தாக்குறாரு!:))

  • anonymous says:

   * அம்பல் = கிசுகிசு
   * அலர் = பப்ளிக் பேச்சு
   :))

   இந்த சங்கத் தமிழ் “அம்பல்” தான் -> “அம்பலம்” ஆயிருச்சி ன்னு மாறுச்சா ன்னு தெரியாது!

 9. anonymous says:

  சரி….மத்த வரியெல்லாம் வேகமா Train புடிப்போம்:)

  This line shows the character of amma!
  Shez not questioning the girl, based on other ppl words; If at all there is a question, it shd be based on her own interaction

  இன்னள் இனையள், நின் மகள்’ எனப் பல் நாள்
  எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன்

  Why? = நாணுவள் இவள் என…

  என்னவொரு அம்மா! தன் பொண்ணு, தன் முன்னாடி தலை குனிஞ்சீறக் கூடாது ன்னு கேக்கலையாம்!
  ஊருல அப்படி இப்படிப் பேசுறாங்களே? உண்மையாடி? என்னடீ நினைச்சிக்கிட்டு இருக்கு உன் மனசுல?:)) – இப்படியெல்லாம் குதிக்கலை!

  In a Relationship, One cannot be all!
  So, mother respects the choice of her children, to discuss with her or not!
  At the same time, she doesn’t want to put her to shame = நாணுவள் இவள் என, உரைப்பு அறியேன்!

 10. anonymous says:

  In your own house, you are acting:)) That too itz not a wealthy home! = வறு மனை
  So, no big big rooms & private rooms:)
  அப்படியான வீட்டுலேயே ஒருத்தரு ஒருத்தர் மறைஞ்சி வாழறாங்களாம் = மனசால 🙂 What a depiction!!

  நனி கரந்து உறையும்
  யான் இவ் வறுமனை ஒழிய தானே
  ——————

  But the girl, because of her Passion, thinks differently
  ‘அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
  எனக்கு எளிது ஆகல் இல்’ என

  அம்மாவுக்குத் தெரிஞ்சி போச்சின்னா, இங்கே நான் வாழ்வது அத்தனை எளிதாக இருக்காது! – bcoz i am so afraid to face such a good mom:)

  நல்ல அம்மா, நல்ல பொண்ணு – இதுக்குத் தான் ஓவர் நல்லவங்களா இருக்கக் கூடாது:) “அந்த” விசயத்த பேசிட்டு இருக்கணுமோ?
  —————–

  Next lines are important!
  மருமகனை, மாமியார் எப்படி வர்ணிக்கறாங்க பாருங்க:))

  படுபாவி; நல்லா இருந்த என் பொண்ணு மனசைக் கெடுத்தவன்; கூறுகெட்டவன்; ஒரு நல்ல வேலை இருக்கா; கருப்புக் காளை போல திமிசு ஏறி இருந்தா ஆச்சா? – இப்பிடியெல்லாமா வர்ணிக்கறாங்க??:)) இல்லை….

  கழல் கால்
  மின் ஒளிர்
  நெடு வேல்
  இளையோன்
  முன்னுற = முன்னேறக் கூடியவன், இப்பவும் அவன்(ர்) முன்னே போக, பின்னே என் பெண் போயிருக்கா…

  ரொம்ப பாத்தது இல்ல போல! அடுத்தவர் சொல்லக் கேட்டு, ஓ அவனா ன்னு எப்போதோ பார்த்தவனை நினைவுக்கு கொண்டு வந்து வர்ணிக்கறாங்க! அதான் வர்ணனை generic ஆ இருக்கு!
  Anonymous மாப்பிள்ளையை வேறு எப்படி வர்ணிக்க முடியும்?:))

  • எனக்கும் மாப்பிள்ளையின் வர்ணனை ரொம்பப் பிடித்தது. இந்தப் பாடலே மகளையும் மருமகனையும் செய்த காரியத்துக்குத் தூற்றாமல், உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கும் உறவுகளைப் பற்றியதாக உள்ளது.

   amas32

 11. anonymous says:

  She has gone via mountains & deep forests, just for love = பல்மலை அரும் சுரம் போகிய தனக்கு
  But, me? Just talking abt my love & doing nothing = யான் அன்னேன்-அன்மை, நன் வாயாக

  அடா, அடா!
  என் பொண்ணைப் போல நான் அன்னேன்-அல்ல! எனக்கு வெறுமனே நன்-வாய்!
  —————–

  மான் அதர் மயங்கிய மலை முதல் = மான் போல காட்டில் வேகமாக ஓடுபவையே அதர் மயங்குமாம்! அதர்=வழி!
  ஆக்கம் அதர் வினாயச் செல்லும் அஃதொருவன்
  ஊக்கம் உடையான் உழை – குறள்!

  சிறு நெறி வெய்து இடையுறா அது எய்தி = குறுகிய வழிகள் உள்ள காடு! துன்பம் நேராது இருக்க, அந்த வழியில் போய்…

  புல் என் மாமலைப் புலம்பு கொள் சீறூர்ச் = புலம்பு ன்னா தனிமை! தனிமையில் தானே புலம்ப்புறோம்?:)
  அந்த மலை அடிவாரத்தில் உள்ள தனிமையான சின்ன ஊரில், ஒரு விடுதியிலோ, குடிசை போட்டுக் கொண்டோ…

  அவங்களுக்குக் காத்துக் கிடப்பேன்! அவங்க காதல் இன்பத்தில் பராக்கு பாத்துக்கிட்டு மெல்ல வரட்டும்!
  ——————-

  * செல் விருந்து ஆற்றி = உணவு கொடுத்து
  * துச்சில் இருத்த = துஞ்சு + இல் = துச்சில் = படுக்க இடம் குடுத்து…

  ஆகா…..

  • anonymous says:

   நுனை குழைத்து அலமரும் நொச்சி = சின்ன சின்னதா துளிர்க்க ஆரம்பிக்கும் நொச்சிப் பூ…அவங்க கண்ணுக்கு விருந்து ஆகட்டும்!

   மனை கெழு பெண்டு = அந்த வீட்டின் ஒரு பணிப் பெண்ணாக (மனைகிழத்தி அல்ல! மனைகெழுத்தி)
   யான் ஆகுக மன்னே = நான் ஆகக் கடவது!!!

   முருகா!

  • anonymous says:

   நல்லாக் கவனிங்க!
   ஆள் அனுப்பி, திருப்பி கூட்டியாறச் சொல்லலை! அவங்க போக்குக்கே விடுகிறாள்!
   புது மாப்பிள்ளையின் மான உணர்ச்சி ன்னு ஒன்னு இருக்குல்ல? அதுல குறுக்கிடாம…..

   தொலையுது, சரி வந்து ஒழிங்க, ஏத்துக்கறோம் ன்னு சொல்லாது…
   ஆள் அனுப்பிக் கூட்டி வராது…..
   தானே ஒரு ஆளாய், அங்கு போய், அவங்களுக்கு இருக்கணும் ன்னு நினைக்குற நினைப்பு இருக்கே……

   முருகா….இது போல ஒரு மனசு முன்னாடி நீயே தூசுடா!
   இவிங்கள நல்ல படியா வச்சிக்கோ!
   அந்த அம்மாவை மதிப்பும் மரியாதையுமா வச்சிக்கோ!

 12. anonymous says:

  For anyone who reads this sanga tamizh….my humble request to them….

  You can always be on your own!
  We are NOT born TO parents, but born THRO parents, true…
  We have our own dreams….Let;s stick to them!
  But Never Ever…bring Parents to shame!

  There are lotsa ways to get our things done!
  Never climb on the self-respect of a relationship!
  பொதுவுல மட்டும் தலை குனிய வச்சுறாதீக! முருகா….

  குறமகள் “இங்கித” மணவாளா! குறமகள் “இங்கித” மணவாளா

 13. Karthik says:

  முருகா!! பாட்டுக்கு பொருள் கொடுத்து அருள் புரிஞ்ச அனானி முருகா!!
  வாழ்க நீ எம்மான்!!
  வாழ்க தமிழ்!!

  • என். சொக்கன் says:

   யோவ், அப்ப நான் சொன்னது பொருள் இல்லாம பொரிகடலையா? :)))

 14. Wonderful! A few things strike hard. That the narration of the poem does not introduce the characters but starts off from the mental state of the mother and we get to know about what has happened from her. We talk of noir films where characters go about the business from the beginning of the film and we know little about their origins and morals. This is no different. When she says this is a bad town where the women are bad and speak ill of others, you wonder if there is some hypocrisy here as this woman and her daughter are also women from the same town! But then we see that the mother says she would not oppose her daughter’s marriage with her lover. Maybe she is an exception in this town. But the beauty is this poem never delves into all that. It just paints a mental portrait of the mother, her love to her child and leaves the judgments to us. But what is brilliant is it leaves so many open ends for us to interpret the way we want to. Also this: //இப்போது, இந்த வறுமையான வீட்டில் நான் மட்டும் தனியே இருக்கிறேன்// can mean anything. It can be the mother’s mental state which is lonely or the fact that she could be a single woman (or a widow?) because nowhere does she bring the father into picture. This poem packs so much that even the foremost of world directors will struggle to draw this out on screen.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s