வடுமாங்கா ஊறுதுங்கோ

திங்கள் நுதலார் திரு மனம் போலே கீறிப்

பொங்கும் கடல் உப்பைப் புகட்டியே எங்களிடம்

ஆச்சாளுக்கு ஊறுகாயா ஆகாமல் ஆருக்காக்

காய்ச்சாய் வடுமாங்காய்?

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: காளமேகம்

சூழல்: புலவர் ஒரு மாங்காய்த் தோப்பின் வழியே போய்க்கொண்டிருந்தாராம், அங்கே காய்த்துத் தொங்கிக்கொண்டிருந்த மாம்பிஞ்சுகளைப் பார்த்தவுடன் அவர் இப்படிப் பாடியதாகச் சொல்கிறார்கள்

வடுமாங்காயே,

பிறை நிலா போன்ற நெற்றியைக் கொண்ட பெண்களுடைய அழகிய மனம் போலே உன்னைப் பிளவுபடுத்தி (கீறி), அதில் கடல் உப்பைப் போட்டு ஊறுகாயாக மாற்றவேண்டும். அதை நானும் என் தாயும் ருசித்துச் சாப்பிடவேண்டும், அப்படியில்லாமல் வேறு யாருக்காக நீ இந்த மண்ணில் பிறந்தாய்?

துக்கடா

 • நேற்று குற்றால சீசன் இல்லாத நேரத்தில் குற்றாலப் பாட்டைத் தந்துவிட்டேன் என்று நண்பர்கள் புகார். ஆகவே, இன்று மாவடு சீசனுக்கு ஏற்ற பாட்டு :>
 • பொதுவாக மாவடு பெண்களின் கண்ணுக்கு உவமை ஆகும், ஏனோ இந்தப் பாட்டில் அதனை அவர்களுடைய மனத்துக்கு உவமை ஆக்குகிறார் காளமேகம். பெண்களின் மனம் மாவடுபோலப் பிளவுபட்டிருக்குமாம், அதாவது, இருவிதமாகப் பேசுமாம், இதுமாதிரி எழுதியதற்காக அவரைக் கண்டிக்க அந்தக் காலத்தில் பெண்ணியவாதிகள் யாரும் இல்லைபோல 🙂
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • திங்கள் நுதலார் திருமனம்போ லேகீறிப்
 • பொங்குகடல் உப்பைப் புகட்டியே எங்களிடம்
 • ஆச்சாளுக் கூறுகா யாகாமல் ஆருக்காக்
 • காய்ச்சாய் வடுமாங் காய்?

310/365

This entry was posted in காளமேகம், குறும்பு, தனிப்பாடல், வெண்பா. Bookmark the permalink.

23 Responses to வடுமாங்கா ஊறுதுங்கோ

 1. PVR says:

  Super
  ஆச்சாளுக்கு ஊறுகாயா ஆகாமல் ஆருக்காக்
  காய்ச்சாய் வடுமாங்காய்?

  • என். சொக்கன் says:

   வார்த்தைகள் அப்படியே வந்து விழுதுல்ல? 🙂

 2. Sundar Vel says:

  ஆச்சாள் என்றால் அம்மாவா?

  • anonymous says:

   * ஆத்தாள் என்பதன் மரூஉ = ஆச்சாள்
   * அப்பன் என்பதன் மரூஉ = அச்சன்
   (மலையாளத்தில் நேராவே குறிக்கும்)

   அம்பிகையை = ஆச்சாள் ன்னு சொல்லுவாரு அபிராமி பட்டர்!
   ஆச்சாள்புரம் ன்னு இன்னிக்கும் உண்டு! திருஞானசம்பந்தரின் திருமணம் நடந்த இடம்! (திருநல்லூர்)

  • என். சொக்கன் says:

   ஆமாம், ஒரு சின்ன கூகுள் சர்ச் செய்தால் தெரிந்துவிடுமே 🙂

 3. anonymous says:

  //ஆச்சாளுக்கு ஊறுகாயா//

  இதான் ஆச்சிஸ் ஊறுகாய் ன்னு இன்னிக்கி விக்குறாங்குளோ??:)
  #365paa வில் ஆச்சிஸ் commercial போட்டு, சொக்கரும் காசு பாக்குறாரோ?:))))

 4. anonymous says:

  மாவடு = அம்மா போடும் போதெல்லாம், பக்கத்துல காக்காய் மாதிரி உட்காந்து, கொத்தித் தின்ன ஞாபகம் வருது!:)

  விரலி மஞ்சள், கல்லுப்பு, காஞ்ச மிளகா, நல்லெண்ணெய் விட்டு, அம்மா வேற மாதிரி செய்வாங்க!
  வாசனையா இருக்கும்! பழைய சோத்துக்கு காலையில கடிச்சித் திங்கும் சுகம்….

  மாவடு ஊறும் அந்தக் காரமான சாறு = அதையும் சுடு சோத்துக்கு பிசைஞ்சி திங்கலாம்! நல்லா ஒறைப்பா வாசனையா இருக்கும்!

  இப்பல்லாம் வீடுகள்லயே Bottleல அடைச்சி வைக்கிறாங்க! உவ்வே…ஊறிப் போனதை அதுல அடைச்சா…ஒரு மாதிரி பாட்டில் வாசம் வரும்!
  பீங்கான் ஜாடி தான் ஊறுகாய்க்கு best!
  டவுன் லயே கிடைக்குதே! தொறக்கும் போதே, பீங்கான் ஜாடில உப்பு வாசம் தூக்கும்!

  கிராமத்துல கல்லுச் சட்டில போட்டு வைப்பாங்க எங்க ஆயா (பாட்டி)

  • anonymous says:

   இந்தப் பதிவைப் படிக்கும் பெண்கள்/ பொண்ணுங்க யாராச்சும்….மாவடு போடுவது எப்படி? ன்னு இங்கே பதிஞ்சி வைங்களேன்:) புண்ணியமாப் போவும்!

 5. anonymous says:

  //பெண்களின் மனம் மாவடு போலப் பிளவுபட்டிருக்குமாம்,
  அதாவது, இருவிதமாகப் பேசுமாம், இதுமாதிரி எழுதியதற்காக அவரைக் கண்டிக்க அந்தக் காலத்தில் பெண்ணியவாதிகள் யாரும் இல்லை போல//

  அடங் கொப்புரானே!
  சொக்கரு, காளமேகத்தைப் போட்டுக் குடுக்குறாரு பாரேன்…இத தட்டிக் கேப்பார் யாருமில்லையா?
  எலே காளமேகம் அண்ணாச்சி, நீ மட்டும் இந்நேரம் இருந்தியானா, இந்தச் சொக்கரை வசைபாடி ஒரு வெண்பா போட்டிருப்பீயல்ல?:)))
  —————

  இப்படியெல்லாம் பின்னாளில் தன்னை மாட்டி வுடுவாங்க ன்னு தெரிஞ்சித் தான் காளமேகம்….பெண்கள் மனசை = “திரு மனம்” ன்னு உசத்தியாப் பாடி இருக்காரு!

  திங்கள் நுதலார் “திரு மனம்” போலே கீறி… = இதுக்குப் பொருளே வேற:)

  • anonymous says:

   பெண்களின் நல்ல மனசு (திரு மனம்) மாவடு போல் பிளவு படுதாம்! எப்படி?

   இந்த ஆம்பிளைங்க வெளீல பண்ற தப்பையெல்லாம் பண்ணிட்டு வந்து நிக்குறாங்களே…
   இவிங்கள மன்னிப்பதா? இல்லை கோபிப்பதா? = இப்படிப் பிளவு படுது!
   = திங்கள் நுதலார் “திரு மனம்” போலே கீறி

   ஆனா, ஒடனே இயற்கையான பாசம் தடுக்குது!
   பொங்கும் கடல் உப்பைப் புகட்டியே = உப்பிட்டவனை உள்ளளவும் நினை ன்னு, அந்த மனசுல புகட்டி….
   ஆம்பிளைங்கள மன்னிச்சி ஏத்துக்கறாங்க பொம்பிளைங்க!

   இதத் தான் காளமேகம் பாடுறாரு!
   அவரைப் போயி அநியாயமா, சொக்கரு இப்படிச் சொல்லிட்டாரே! :(((
   இதுக்குப் பரிகாரமா என்ன செய்யப் போறீக?:)

   • என். சொக்கன் says:

    அஸ்கு புஸ்கு, இப்படியெல்லாம் ட்விஸ்ட் பண்ணா காளமேகத்தைக் காப்பாத்திடமுடியுமா? ‘திரு மனம்’ல்லாம் ’அழகான முட்டாளே’ங்கறமாதிரிதான், பாராட்டறமாதிரி திட்டறது :>>>

   • anonymous says:

    பாடிக் குடம்நிறைக்கும் பாடும்போதே கீச்சும் (ட்வீட்டும்)
    நாடித் திறக்கின் நலம்காட்டும் – தேடித்தொண்டை
    பற்றிப் பரபரெனும் மாவடுவும் சொக்கனும் தான்
    ஒற்றி ஒன்றெனவே ஓது

    இவண்
    – காளமேகம் 🙂

   • anonymous says:

    பாடிக் குடம்நிறைக்கும்
    = ஊரிலே குடத்தில் நிறையும் | 365 பாக்களைப் பாடி, நிறை குடம் ஆகும்

    பாடும்போதே கீச்சும் (ட்வீட்டும்)
    = பாடும் போது சாப்பிட்டா புளிப்பால் தொண்டை கீச்சும் | 365 பாக்களைப் பாடும் போதே ட்விட்டரிலும் கீச்சும்

    நாடித் திறக்கின் நலம்காட்டும்
    = ஆசையா ஜாடியைத் திறந்தா, ஊறுகாய் வாசம் தூக்கும் | நாடி வந்து வலைப்பக்கத்தைத் திறந்தா நலம் காட்டும்

    தேடித் தொண்டை பற்றிப் பரபரெனும்
    = சாப்பிடும் போது தொண்டையில் பரபர ன்னு ஏறும் | பாக்களைத் தேடி, இந்த நல்ல தொண்டை பரபர ன்னு தினமும் செய்யும்

    மாவடுவும் சொக்கனும் தான்
    = மாவடு (மாங்கா) | மா வடு (பெரிய குழந்தை) – வடுவை ஆசிர்வதிக்க கோருகிறோம் ன்னு அழைப்பிதழில் பாத்திருப்பீங்களே?:))

    = ஒற்றி ஒன்றெனவே ஓது
    மாவடு மாங்காவும் சொக்கனும் ஒன்னு தான் ன்னு ஓது!:))
    ———————

    காளமேகத்தையா போட்டுக் கொடுக்கறீரு? வாங்கிக்கும் வெண்பா :)))

  • ஆனந்தன் says:

   சபாஷ். பலே, பலே. அப்படிப்போடு!

   • anonymous says:

    என்னாவொரு மகிழ்ச்சி, சொக்கரை மாங்கா/மாவடு ன்னு சொன்னதுல:))

 6. Rajagopalan says:

  amazing repartees!

 7. கேஆர்எஸ், இன்னும் எவ்வளவு அவதாரம் எடுக்கப் போகிறீர்கள்! 🙂 பெயரில்லாமல் வந்து இப்போ காளமேகப் புலவராகவும் ஆகிவிட்டீர்களா? 🙂

  வெண்பா அருமை!

  காளமேகத்துக்கு மனைவி/காதலி இல்லையா? அன்னைக்கும் தனக்கும் ஊறுகாய் கேட்கிறாரே?

  A woman often does play the role of a devil’s advocate! அதற்கு இப்படி ஒரு பேச்சு, அவளுக்கு இரு விதமாகப் பேசும் மனம் என்று! எவ்வளவோ கேட்டுட்டோம், இத்தக் கேட்கமாட்டோமா? 🙂

  amas32

  • anonymous says:

   //A woman often does play the role of a devil’s advocate//
   u mean devil = menfolk (who write like this???) :)))))))))))))

   //எவ்வளவோ கேட்டுட்டோம், இத்தக் கேட்கமாட்டோமா?//
   appdi podunga aRuvaaLai! sooper-ma:)

 8. அக்கா ளமேகம் அனானி வடிவினில்
  இக்கா ல(ள)மேகம் இசைத்திட – சொக்கரின்
  பக்கஞ் செழிக்க படிப்போர் ரசித்திட
  நிற்குந் தமிழே நிதம்

  • anonymous says:

   நிற்கும் தமிழே நிதம் –
   = ரொம்ப அழகான ஈற்றடி! நன்றி கந்தசாமி ஐயா..

 9. anonymous says:

  மாவடு மாங்கா = மா வடு சொக்கர்
  ன்னு சிலேடையாச் சொன்னாலும், பெரியவங்களை இப்படிக் கிண்டல் செய்தமைக்கு மன்னிக்க:)
  ———————

  காளம் ன்னா கருப்பு (காள-கண்டன் = சிவபெருமான்)
  காள மேகம் = கருப்பு மேகம்
  கருப்பு மேகம் எப்படா பொழியும் ன்னு தண்ணிய சுமந்துக்கிட்டு readyஆ இருப்பது போல், இவரு இருப்பாராம்! அதுனால இந்த பட்டப்பெயர்; இயற்பெயர் = வரதன்!

  இவரைச் சுத்தி நிறைய பின்னாள் “கதைகள்”; சிலவே உண்மை; மற்றவை பின்னாள் புலவர்களின் / சமயவாதிகளின் புனைவு இன்பம்:))
  ——————-

  காளமேகத்தின் சொந்த ஊரு திருவரங்கம்; கோயில் மடப்பள்ளியில் வேலை பாத்தவரு;
  அவளோ திருவானைக்கா சைவ தேவதாசி; அவளுக்காக மதம் மாறீட்டாரு! 🙂

  அம்பாள் “உச்சிஷ்டமான” (எச்சில்) தாம்பூலத்தை, அவர் வாயில் அன்னை அகிலாண்டேஸ்வரியே துப்ப, கவிபாடும் ஆற்றல் வாய்ச்சுது!
  தன்னை மதிக்காத சில இடங்களில் கவி பாடியே ஊரை எரிச்சாரு; மண்ணு மூடிக்கிச்சி ன்னு இவரைச் சுற்றிச் பலப்பல “கதைகள்”! 🙂

  ஆனால் அண்மையில், தொல்பொருள் அறிஞர் டாக்டர் நாகசாமி, காஞ்சிபுரம் கோயில் கல்வெட்டுகளில், காளமேகம் பத்திய குறிப்புகள் பலதை எடுத்து இருக்காரு!
  அதிலே அவர் சொந்த ஊர் = திருவரங்கம் அல்ல; தொண்டை நாட்டில் உள்ள எண்ணாயிரம் போன்ற அரிய தகவல்கள் கிடைத்துள்ளன!

 10. anonymous says:

  சொல்லப் போனா, உண்மையாலுமே காளமேகம் சொக்கனைத் திட்டி இருக்காரு:) சொக்கன் அவுத்த பொய்யாம்:))

  சொக்கன் மதுரையினில் தொண்டர்க்கு என்றே அவிழ்ந்த
  பொய்க்குதிரை சந்தைக்குப் போகுமதோ? – மிக்க
  கரசரணா! அந்தக் கரும்புறத்தார்க்கு எல்லாம்
  அரசுஅரணா? மாவலியா ணா!!

  காளமேகம் is uncontrollable; எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும், பயப்படாமப் போட்டுத் தாக்குவாரு! கவிச் சக்கரவர்ரி ன்னு பேரு வாங்கன கம்பனையே public bashing:)

  நாரா யணனை நராயணன்என் றேகம்பன்
  ஓராமல் சொன்ன உறுதியால் – நேர்ஆக
  வார்என்றால் வர்என்பேன்; வாள்என்றால் வள்என்பேன்
  நார்என்றால் நர்என்பேன் நான்
  ———————–

  காளமேகம் பற்றி இந்தக் கால நடையில், ஒரு எளிய நூல் எழுதினா, ச்சும்மாப் பிச்சிக்கிட்டுப் போகும்:)
  சொக்கரோ (அ) குறிப்பா இராகவனோ எழுதினால், மிக்க மகிழ்வேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s