வேண்டுவது

உற்றாரை யான் வேண்டேன்,

….ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்,

கற்றாரை யான் வேண்டேன்,

….கற்பனவும் இனி அமையும்,

குற்றாலத்து அமர்ந்து உறையும்

….கூத்தா, உன் குரை கழற்கே

கற்று ஆவின் மனம்போலக்

….கசிந்து உருக வேண்டுவனே!

நூல்: திருவாசகம் (திருப் புலம்பல்)

பாடியவர்: மாணிக்கவாசகர்

திருக் குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே,

எனக்கு உற்றார், உறவினர்கள் வேண்டாம், ஊர் வேண்டாம், பேர் வேண்டாம், நன்கு படித்த அறிஞர்களுடன் பழக்கம் வேண்டாம், இனிமேல் புதிதாக எதையும் படித்துத் தெரிந்துகொள்ளவும் வேண்டாம்…

நான் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், ஒலி செய்கின்ற கழல்களை அணிந்த உன்னுடைய திருவடிகள்மட்டும்தான்.

கன்றின்மீது அன்பு செலுத்தும் தாய்ப்பசுவைப்போலக் கசிந்து உருகி உன்னை வேண்டுகிறேன், நான் கேட்டதைத் தருவாயா?

துக்கடா

 • ’அக்னி நட்சத்திர’ வெய்யிலுக்கு இதமாக ஒரு குற்றாலப் பாட்டுப் போடலாம் என்று தேடினேன், முதலில் இந்தப் பாட்டு கிடைத்தது, ‘படித்துத் தெரிந்துகொள்கிற விஷயங்களைவிட, உன்னை வணங்கிப் புரிந்துகொள்ளவேண்டியவை அதிகம்’ என்கிற ஆழமான கருத்தும், ‘திருப் புலம்பல்’ என்ற அழகான பெயரும் ரொம்பப் பிடித்திருந்தது 🙂

309/365

Advertisements
This entry was posted in சிவன், திருவாசகம், பக்தி, மாணிக்கவாசகர். Bookmark the permalink.

40 Responses to வேண்டுவது

 1. வாழ்க்கையின் பல கட்டங்களில் பலருக்கும் தற்போது இதுதான் வேண்டுதலாக இருக்கிறது.
  – அலெக்ஸ் பாண்டியன்

  கிட்டத்தட்ட இதே மாதிரி தொண்டரடிப்பொடியாரும் கேட்பது
  http://www.araiyar.org/blogs/2012-02/தொண்டரடிப்பொடி-ஆழ்வார்

  பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
  அச்சுதா அமரர் ஏறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்
  இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
  அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !

  • anonymous says:

   நன்றி அலெக்ஸ், இந்த ஆழ்வார் பாசுரம் இட்டமைக்கு!
   கிட்டத்தட்ட மணிவாசகர் வேண்டுவதே தான்!
   —————-

   உற்றாரை யான் வேண்டேன்! ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்!
   = ஊரிலேன் காணி இல்லை, உறவு மற்று ஒருவர் இல்லை

   கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்
   = வேதம் ஓர் நான்கு ஓதும், சாதி-அந் தணர்கள் வேண்டேன்

   குற்றாலத்து அமர்ந்து உறையும், கூத்தா, உன் குரை கழற்கே
   = பாரில் நின் பாத மூலம், பற்றிலேன் பரம மூர்த்தி

   கற்று ஆவின் மனம்போல, கசிந்து உருக வேண்டுவனே!
   = ஆனைக் கன்று அருளை ஈந்த, அரங்க மா நகருளானே!

  • இன்னும்மொரு ஆழ்வார் பாட்டு (குலசேகர ஆழ்வார் அருளியது):

   668:
   மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்இவ்
   வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்
   ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
   மையல் கொண்டாழிந் தேனென்றன் மாலுக்கே (2) 3.1

   669:
   நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும்
   ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான்
   ஆலியா அழையா அரங்கா வென்று
   மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே 3.2

   670:
   மார னார்வரி வெஞ்சிலைக் காட்செய்யும்
   பாரி னாரொடும் கூடுவ தில்லையான்
   ஆர மார்வ னரங்க னனந்தன்நல்
   நார ணன்நர காந்தகன் பித்தனே 3.3

   671:
   உண்டி யேயுடை யேயுகந் தோடும்,இம்
   மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான்
   அண்ட வாண னரங்கன்வன் பேய்முலை
   உண்ட வாயன்ற னுன்மத்தன் காண்மினே

   வாழ்கையை என்னமாய் வாழ ஆசை …

   • anonymous says:

    //வாழ்கையை என்னமாய் வாழ ஆசை//

    :))
    நன்றி ஸ்ரீகுருபரன், பாசுரங்கள் இட்டமைக்கு!
    ஆனாப் போதும்;
    சிவபெருமான் பதிவில், எதுக்கு இம்புட்டு பாசுர வாடை-ன்னு யாராச்சும் கோபிக்கப் போறாங்க:))

 2. anonymous says:

  //அக்னி நட்சத்திர’ வெய்யிலுக்கு இதமாக ஒரு குற்றாலப் பாட்டுப் போடலாம் என்று தேடினேன்//

  அக்னி நட்சத்திரத்தின் போது, குற்றாலமும் வறண்டு போய் தான் இருக்கும்! ஜூன் மாசத்துக்கு மேலத் தான் தண்ணி!
  குளிச்ச பழைய ஞாபகம் = கற்பனைக் குற்றாலம் தான் உதவிக்கு வர வேண்டும்:)

  அக்னி நட்சத்திரம் போலவே உடம்பும் சரியில்லாமப் படுத்தினா….பழைய ஞாபகம், மனத்துக்கு நெருக்கமானவர்களை நினைச்சா….கண்ணுலயே குற்றாலம் வந்து குளுமை ஆக்கிவிடும்!
  அதான் போலும், இந்தப் பதிகத்தை இட்டீர்கள்:) – .”கசிந்து உருக வேண்டுவனே”

 3. anonymous says:

  திரு வாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்!
  திரு வாய்மொழிக்கு உருகாதார் ஒரு வாய்மொழிக்கும் உருகார்!

  இந்தப் பாட்டைப் பாத்தாலே தெரீஞ்சீரும்! = திருப் புலம்பல்:)
  புலம்பல் ல்ல என்னய்யா “திரு” இருக்கு?:)) (திரு=செல்வம்)

  பாட்டைப் பாருங்க:
  * கற்றாரை யான் வேண்டேன்
  * கற்றாவின் மனம் வேண்டுவனே!

  கன்று = கற்று = வலித்தல் விகாரம் (மெல்லினம், வல்லினமா விகாரப்படுவது)
  ——————–

  ரெண்டுமே கற்று தான்!
  ஒரு கற்று வேணாம்! இன்னோரு கற்று வேணும்!
  உயர் திணை வேணாம்! அஃறிணை வேணும்:)))

  என்ன “உளறுகிறார்” இந்த மாணிக்கவாசகர்? 🙂
  கற்றவர்களைப் போயி வேணாம் ன்னு சொல்லுவாங்களா? கற்றவர்கள் தானே சொல்லிக் குடுப்பாங்க? அறியாமையைப் போக்குவாங்க?

  அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
  திறனறிந்து தேர்ந்து கொளல்
  ன்னு வள்ளுவர் சொன்னதையே, மறுக்கிறாரா மாணிக்கவாசகர்??

  கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
  மாடு அல்ல மற்றையவை
  ன்னு குறள்! இவரு என்னடா-ன்னா, மாடு அல்ல மற்றை அவையை விட்டுட்டு, மாட்டையே வேணும் ன்னு கேக்குறாரு:))) = கற்று ஆவின் மனம் வேண்டுவனே!

  • anonymous says:

   இங்கிட்டு தான் திருவாசக சூட்சுமம் இருக்கு!

   கல்வியை வேணாம்-ன்னு சொல்லுவாரா, கல்விக் கடலான மாணிக்கவாசகர்? பின்ன என்னவாம்??

   *கற்றாரை யான் வேண்டேன்
   *கற்று ஆவின் மனம் வேண்டுவனே -ன்னு சொன்னவரு….
   ஊடால ஒன்னைச் சொல்லுறாரு! = ** கற்பனவும் இனி அமையும்!

   ஆக, கல்வி வேணாம்-ன்னு சொல்லல! கல்வி இனி அமையும்! எப்போ அமையும்?
   ————————–

  • anonymous says:

   வூட்டுல யாராச்சும் மாடு வளர்த்து இருக்கீகளா?
   கிராமத்துல? தொழுவத்துல?? அப்போ தெரியும்…

   நான், சென்னைக்கு வரும் முன், கிராமத்துப் பள்ளிக் கூடத்துல தான் பாடம்! வீட்டுக்குச் சில சமயம் சீக்கிரம் வந்துறலாம்! புதுசாக் கல்யாணமான வாத்தியாராம்மா வூட்டு நெலமையைப் பொறுத்து அது:)

   நான் சீக்கிரம் வரும் போதெல்லாம்….என்னமோ தெரியல….எனக்குப் பயங்கரமாப் பசிக்கும், மதிய உணவு சாப்பிட்டு இருந்தாலும்!
   அம்மா….அம்மா ன்னு கத்திக்கிட்டே தான், ரேழியைத் தாண்டி, கூடத்துல குதிச்சி, அடுக்களைக்குள்ள ஓடுவேன்!

   என் வரவைத் திடீர் ன்னு எதிர்பார்க்காத அம்மா…
   என்னடா, இவ்ளோ சீக்கிரம்?-ன்னு மொதல்ல கேள்வி தான் கேப்பாங்க:))
   யம்மா, பசிக்குது ன்னு சொல்லணும்!
   அப்பறம் தான், தட்டி உருட்டி, மண்ணெண்ணெய் ஸ்டவ்-ல்ல உஸ் உஸ் ன்னு அடிச்சி, தவா போட்டு, தோசை வார்ப்பாங்க!:)

   இதுக்கே பத்து-பதினைஞ்சி நிமிசம் ஆயீரும்! அதுக்குள்ள எனக்குப் பொறுக்காது! தட்டைத் தட்டிக்கிட்டே இருப்பேன்!
   —————

   மாடு மேய்ச்சலுக்குப் போயிட்டு, தொழுவத்துக்குள்ளாற அதே சமயம் தான் வரும்! மூனு மணி வாக்குல…
   மணிச் சத்தம் ஜல்-ஜல் ன்னு கேக்கும்! அம்மாவைப் பாக்குறத்துக்கு முன்னாடியே சத்தத்தை வச்சி, ..ம்மாஆஆ ன்னு கன்னு குரல் குடுக்கும்!

   அப்போ, இந்த மாடு இருக்கே….இதுக்குச் சுரக்கும்!
   இது சுரந்துக்கிட்டே ஓடும்!
   வழியெல்லாம் வைக்கோலு, தழை….சத சத ன்னு ஆயீரும்!
   நேராப் போயி, கன்னு கிட்ட முட்டி நிக்கும்….

   கன்னு வாய் வச்சி இழுக்கணும் கூட இல்ல! நேரா வாயக் காட்டினாலே பால் விழுகும்!
   இப்படி……கன்றைப் பார்க்கும் முன்பே, அதுக்குக் குடுக்க மாடு ரெடீயா இருக்குது!

   எங்கம்மா போல என்னடா சீக்கிரம்?-ன்னு கேள்வி கேக்குதா? 🙂
   ஸ்டவ் பத்த வைக்குதா?:)
   மண்ணெண்ணெய்க் கை வாசனையோட தோசை வார்க்குதா?:))

   எப்படி, இழுக்கணும் கூட இல்லாம, நேரா வாயக் காட்டினாலே பால் வராப்புல ரெடி பண்ணி வைக்குது??
   இறைவனும், அப்படியே!

  • anonymous says:

   இறைவன்…
   நம் நிலைமை, நம் பசியின் அளவு, ஏன் லேட்டு? ஏன் சீக்கிரம்? ன்னு கேள்வியெல்லாம் கேட்டுட்டு….அருள் சுரப்பதில்லை!

   அந்த அருள்….
   ம்மாஆஆஆ ன்னு நம்ம குரல் கேட்ட மாத்திரத்திலேயே சுரந்து விடுகிறது!!

   ஆனா, நாம குரல் குடுக்குறோமோ?
   ————

   நாம தான் ரொம்ப படிச்சவங்களாச்சே!
   ஆதீனம் அளவுக்கு இல்லீன்னாலும், கொஞ்சமாச்சும் படிச்சிருக்கோம்-ல்ல?:))
   நமக்கு ன்னு ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம், சித்தாந்தம், சரியை, கிரியை ன்னு நிறைய இருக்கே! டைப் டைப்பாப் பேசுவோம்!

   துன்பம் வந்தா?
   = எந்தக் கோயிலுக்குப் போவலாம்? எது “சக்தி வாய்ந்த பவர்ஃபுல் தெய்வம்?” ன்னு விசாரிப்போம்!:)
   = ஹோமம், பரிகாரம் ன்னு எத்தனை மேட்டரு இருக்கு?

   இதெல்லாம் பண்ணிப் பாக்க, மனசு கணக்கு போடும்!
   ஆனா, “அப்பா பெருமாளே” ன்னு குரல் குடுப்போமா?
   சரி அவர விடுங்க! புகுந்த வீட்டு விசயம் அவருக்குத் தெரிய வேணாம்!
   என் ஐயா, முருகா ன்னு ந்ம்பி வந்தவனை நோக்கிக் குரல் குடுப்போமா?
   ————–

   நம்ம எண்ணம் = அறுசுவை விருந்து, தோசை ல இருக்கு!
   அது கிடைக்குதோ இல்லீயோ…..பசிக்குப் பால் கிடைக்கும்!

   குரல் குடுத்த மாத்திரத்தில்……
   பால் தானே சுரக்கும்….
   பார்க்காமலே சுரக்கும்….
   நம்ம தகுதி என்னா ன்னு பாக்கமலே சுரக்கும்!

   அதான் “கன்று-ஆவின் மனம் போலே, கசிந்து உருக வேண்டுவனே!”

 4. கண்களில் நீர் மல்கச் சொல்கிறேன், குற்றாலத்தில் குளித்து சிவனை தரிசிகும் இன்பத்தை விட அதிகம் இன்பம் இன்று பெற்றுள்ளேன் உங்கள் பின்னூட்டங்களை படித்து. நலமுடன் இருக்க என் வாழ்த்துகள்!
  amas32

  • anonymous says:

   நன்றி-ம்மா
   உங்கள் ஆசியே போதும்; ரொம்ப நலமெல்லாம் வேணாம்!
   நீங்கள் அனுமதித்த “வரந்தரு முருகவன்” படம் நாட்களை நகர்த்த உதவுகிறது!

 5. anonymous says:

  கற்பனவும் இனி அமையும்
  = இந்தக் கல்விக் கணக்குகள் அமைந்து விடும்! (அமைந்து விடும் = முடிந்து விடும்)

  இத்துடன் அமைகிறேன் ன்னு மேடையில் பேசுறாங்களே…அந்த “அமைதல்” இது!:)
  கற்பனவும் இனி = அமைகிறேன்! அமைந்து விடுகிறேன்!
  ———————-

  கற்றாரை யான் வேண்டேன்
  = பசியில், துன்பத்தில்….கற்றவர்களை நாடிச் சென்று கணக்குப் போட மாட்டேன்!

  உற்றாரை யான் வேண்டேன்
  = எந்தெந்த உற்றவர்கள் உதவி செய்வார்கள் ன்னு கணக்குப் போட மாட்டேன்!

  ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்
  = எந்த ஊரில் உதவி கிடைக்கும்? பேர் (Influence) use பண்ணா உதவி கிடைக்குமா? போன்றவை வேண்டேன்!
  ———————-

  என் ஐயா, நம்பி வந்த திருமுருகா…..
  உன்னை நோக்கிக் குரல் குடுப்பேன்!
  கன்று-ஆவின் மனம் போலே, கசிந்து உருக வேண்டுவனே!

 6. anonymous says:

  //குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா, உன் குரை கழற்கே//

  குரை கழல் = ஒலி கழல்
  குரைத்த கழல், குரைக்கின்ற கழல், குரைக்கும் கழல் = வினைத் தொகை!
  இடையின ர ! வல்லின ற அல்ல!

  குறை கழல் ன்னா = குறை உடைய கழல், under size shoe ன்னு ஆயீரும்!:)
  சிவபெருமான், அந்த மாதிரி shoe எல்லாம் போட மாட்டாரு! அவரு ஆடல் வல்லான்! Everything matches perfecto!:)
  ———————-

  குரை கழல் = ஆகு பெயர் ன்னும் சொல்லலாம்!
  குரை கழலை உடைய பாதம் ன்னு இங்கே பொருள்!
  கழல்->திருவடிகளுக்கு ஆகி வருவது!
  இது என்ன ஆகு பெயர்??-ன்னு யாராச்சும் சொல்லுங்க பார்ப்போம்:))

  • ஆனந்தன் says:

   “குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே”
   “குன்றம் எறிந்தாய் குரை கடலில் சூர்தடிந்தாய்”

  • ஆனந்தன் says:

   // ** கற்பனவும் இனி அமையும்! ஆக, கல்வி வேணாம்-ன்னு சொல்லல! கல்வி இனி அமையும்!//

   //கற்பனவும் இனி அமையும் = இந்தக் கல்விக் கணக்குகள் அமைந்து விடும்! (அமைந்து விடும் = முடிந்து விடும்)//

   Contradictory meanings?
   இரண்டுவிதமாகவும் பார்க்கலாம்/ரசிக்கலாம் தான்.

   • anonymous says:

    ஆகா! நான் தான் ஒழுங்காச் சொல்லலை போல! மன்னிக்கவும் சிவ-ஆனந்தன்!

    Contradictory meanings இல்ல!
    //கல்வி வேணாம்-ன்னு சொல்லல! கல்வி இனி அமையும்// = அதாச்சும் எப்போ அமைவாங்க? பேசி முடிச்சிட்டுத் தானே?
    அதே போல் கல்வி வேணாம் ன்னு சொல்லலை! கற்றுக் கொண்டு, பிறகு அமைவாங்க!

    //கற்பனவும் இனி அமையும் = இந்தக் கல்விக் கணக்குகள் அமைந்து விடும்! (அமைந்து விடும் = முடிந்து விடும்)// = அதாச்சும் கற்ற கல்வியே, அவனை உணரத் தான்!
    அதுனால, துன்பத்தின் போது/ பசியின் போது……கற்ற கல்வியால் கணக்கு போடாம, அவனை “உணர்ந்து” அமைந்து விடுவது நல்லது!

   • ஆனந்தன் says:

    புரிந்தது. மிக்க நன்றி!

 7. anonymous says:

  //குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா//

  ஈசன் நடனம் (கூத்து) இடும் தலங்கள் எனப் புராணங்கள் சொல்பவை = ஐந்து!
  அதில் கடைசி = குற்றாலம்!

  1. கனக சபை/ பொற் சபை = தில்லை (சிதம்பரம்)
  2. ரஜத சபை/ வெள்ளி சபை = மதுரை
  3. ரத்ன சபை = திருவாலங்காடு (புனிதா என்கிற காரைக்கால் அம்மைக்காக)
  4. தாமிர சபை = திருநெல்வேலி
  5. சித்ர சபை = குற்றாலம்

  புராணம் சொல்லாத ஆறாவது சபை = நம் இதய சபை!

 8. நற்றுணையாவது நமச்சிவாயமே….

  அடடா..என்னே ஓர் அற்புதமான பாடல்.. முக்கியமாக தலிவர் கேஆர்எஸ் அவர்களின் அற்புதமான விளக்கம்….

  கேஆர்எஸ், நீங்க சொன்னது சரிதான்… மே மாசம் குற்றாலத்துக்குப் போனாலும் தண்ணி அதிகமா இல்லாட்டியும்,நார்மலா வரும்…ஆனா அடிக்கிற வெயில்ல அந்த சூட்டோட குளிச்சோம்னா, சளிப்பிடிச்சு சல்பிஸ் ஆயிரும்… குற்றால சீஸனே, ஆனி,ஆடி மாசத்துல கொஞ்சம் காத்து அடிக்கும் போது, அந்தக் காத்து மேற்குத் தொடர்ச்சி மலைல மப்பும்,மந்தாரமுமா இருக்குற மேகத்தையெல்லாம் கல்யாணமான புதுசுல கணவன் மனைவியோட இடுப்பத் தொடற மாதிரி தொட்டுத் தழுவி,அப்படியே சிலு,சிலு,வென சாரலை மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து திரிகூட மலைக்கு அணைச்சு வீச அப்படியே போய் குளிச்சோம்னா,அடாடடடாஆஆஆஆஆ…

  வர்ற ஜூன் 8-ம் தேதி போகப் போறேன்.. ஒரே குமால்ட்டிக்தான் அங்க…

  சரி..விஷயத்துக்கு வருவோம்…

  குரை கழல்- மிரண்டு போய்ட்டேன்.. யோசிச்சு பார்த்தும் சிக்கலை.. தலைவர் சொன்னதும் விஷயம் புரிஞ்சிருச்சி,. குரை-ஓசை என்பது எப்பேர்ப்பட்ட அற்புதமான சொல்..இன்னும் ஒரு சந்தேகம்..இறைவன் நடமிடும் போது கழல்கள் ஏன் குரைக்க வேண்டும்.. குரைத்தல் என்பது ஒரு இரைச்சலைப் போல் அல்லவா நாம் பொருள்பட பேசி வந்திருக்கிறோம்.. குரை கழல் என்பதற்குப் பதிலாக இசை கழல் என்று வந்திருந்தால் எந்தப் பிழையும் இல்லையே..? ஏன் இப்படி மாணிக்கவாசகர் செய்தார்… அல்லது நாம் தான் குரை என்பதை வேறு அர்த்தத்தில் உபயோகப்படுத்தி வந்திருக்கிறோமா??

  குரை கழல்- தானியாகு பெயர்..சரியா.. கழல் இருக்கும் இடமான காலுக்கு ஆகி வந்ததால் அது தானியாகு பெயர்..

  // கன்றின்மீது அன்பு செலுத்தும் தாய்ப்பசுவைப்போலக் கசிந்து உருகி உன்னை வேண்டுகிறேன், நான் கேட்டதைத் தருவாயா? //

  இங்கே இன்னும் ஓர் பிரச்சினை.. இறைவன்தான் அவனின் கன்றுகளாகிய நம்மைக் கண்டு கசிந்து உருக வேண்டும்… அதைத்தான் மாணிக்க வாசகர் கற்று ஆவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுகிறேன் எனக் குறிக்கின்றார்…

  உன் கன்றைப் போல் உன் முன்னால் இறைஞ்சுகிறேன்..எனக்கு அதன் தாயான ஆவினைப் போல மனம் கசிந்துருகி எனக்கு அருள வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்…

  சரிதானா??

  வானவர் காண்; வானவர்க்கும் மேலானவன் காண்; வடமொழியும் தென்தமிழும் ஆனவன் காண் என அப்பர் குறித்த திரிசடையோன் ஆடல்புரியும் இடமெல்லாம் உலகின் அனைத்து மக்களுக்கும் இடையே வேறுபாடு அற்ற ஓர் மொழியில் இறைவன் உரையாடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது…

  நம் நாகரீகம் அடைந்த பின்தான் மொழி,எழுத்து,பேச்சு, இத்யாதி,இத்யாதி எல்லாம்… அதற்கு முன் எல்லோரும் சத்தத்திற்கு ஏற்றபடி ஆடத்தான் செய்து கொண்டிருந்தோம்..ஆம்.மனிதனின் முதல் உணர்வு வெளிப்பாடு ஆடல்.. அதனால்தான் திரிசடையோனை ஆதிக்கடவுளாக,ஆடல்கலையின் நாயகனாக சமைத்து வைத்திருக்கிறோம்…

  • anonymous says:

   //மந்தாரமுமா இருக்குற மேகத்தையெல்லாம் கல்யாணமான புதுசுல கணவன் மனைவியோட இடுப்பத் தொடற மாதிரி தொட்டுத் தழுவி//

   :)))
   ரொம்ப பிடிச்சிருக்கு உங்க பின்னூட்டம்:)
   கொஞ்சம் வெக்கமாவும் இருக்கு! முருகா:)

   “தேனருவிக் கரையினிலே திருக் குற்றால மலையினிலே”
   நீரருவி உடல் தழுவக் குளிக்கணும்
   நான் நெருங்கி வந்து உன் அழகை ரசிக்கணும்
   குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
   பொய்க்கோபம் கொண்டு நீ விலகிப் போகணும்……

   விலகுவதும் விலக்குவதும் பொய்யாய் அருள்வாய் முருகா! – கூற்று ஆயினவாறு விலக்கு அகலீர்

   காஞ்சிப் பட்டுடுத்தி கத்தூரிப் பொட்டு வைத்து….பாட்டு! அதுல இந்தக் குற்றால வரி ரொம்பப் பிடிக்கும்!:)
   Muthulingam song, MSV music
   ————-

   //முக்கியமாக தலிவர் கேஆர்எஸ் அவர்களின் அற்புதமான விளக்கம்….//
   btw, i am not krs; i am one yaaro!

  • anonymous says:

   நேத்து சொல்ல மறந்து போச்சி…

   //குரை கழல்- தானியாகு பெயர்..சரியா.. //

   சரியே! 🙂
   பாலை இறக்கு – பால் உள்ள பாத்திரத்தை இறக்கு
   குரை கழல் – கழல் உள்ள பாதத்தைக் கும்பிடு
   ——————

   //இறைவன்தான் அவனின் கன்றுகளாகிய நம்மைக் கண்டு கசிந்து உருக வேண்டும்… சரிதானா??//

   பாதி சரி!:)
   இறைவன் தான் கசிய வேண்டும்! ஆனா கன்றும் குரல் குடுக்க வேண்டும்! = இரு புறத்து உணர்ச்சி!
   அதான் கன்றின் மனம் போல ன்னு சொல்லாம, ஆவனின் மனம் போல ன்னு சொல்லாம…….
   “கன்று-ஆவின்” மனம் போலே ன்னு சேர்த்துச் சொல்லுறாரு!

 9. அப்புறம், யாராவது குற்றாலத்துக்குப் போனீங்கன்னா, அப்படியே, ஐந்தருவி,புலியருவி,மெயினருவி,பழைய குற்றால அருவி,செண்பகாதேவி அருவி, பழத்தோட்ட அருவி(ம்க்க்கும்..நினைச்சாலும் குளிக்க முடியாது..வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே அனுமதி..இங்கு குளிக்க வேண்டுமென்பது என் வாழ்நாள் லட்சியம்) என்று எல்லாத்துலயும் குளிச்சுட்டு அப்படியே குற்றாலநாதரை தரிசித்து விட்டு அப்படியே ஊரப் பாத்துக் கெளம்பிராதீக…

  அப்படியே ஒரு எட்டு செங்கோட்டை வழியா 8 கி.மீ தள்ளி இருக்கும், பண்பொழி(பைம்பொழில் என்றுதான் ஊர் பெயர் இருந்தது..பண்பட்ட புளிய மரங்கள் நிறைந்து இருந்ததால் இந்தப் பெயர்.. மருவி பின் பைம்பொழில் என ஆனது) ஊருக்குப் போய் மலை மேல் வீற்றிருக்கும் எங்க தல, திருமலைக்குமாரசாமியைத் தரிசித்து விட்டு வாருங்கள்..

  எப்பேர்ப்பட்ட தலம்..என்னைக் கேட்டால் முருகனின் ஆலயங்கள் அனைத்துமே அழகானவையே..ஆனால், திருமலைக்கோவில் ஒரு சிட்டிகை அழகைக் கூடுதலாக அள்ளித் தெளித்துள்ளது… அந்தக் குன்றின் மீது ஏறி முருகனைத் தரிசித்து விட்டு, அந்தக் கேரள எல்லையின் மேற்குத் தொடர்ச்சி மலையின் காற்றை ருசித்து,அங்கே இருந்து வீசும் குற்றாலத் தென்றலை உடலில் வாங்கினால், அடடாஆஆஆ… வேலவன் ஏன் அங்கு விலகாமல் வீற்றிருக்கிறான் என நமக்குப் புரியும்…

  கேஆர்எஸ் என்னிக்காவது டைம் கிடைச்சா சொல்லுங்க, நாம நிச்சயமாப் போகலாம்….

  அங்கு இருக்கும் குமரனுக்குத் தான், மகாவித்துவான் கவிராச பண்டாரத்தையா. திருமலைமுருகன் பிள்ளைத்தமிழ் இயற்றினார்.. கூடிய விரைவில் அதையும் 365பா-வில் எதிர்பார்க்கிறேன்.. சங்கத் தலைவர் என் அவாவை பூர்த்தி செய்வாராக..

  • என். சொக்கன் says:

   அருமையான வர்ணனை. நன்றி 🙂

  • anonymous says:

   //பழத்தோட்ட அருவி (ம்க்க்கும்..நினைச்சாலும் குளிக்க முடியாது.. வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே அனுமதி//

   அப்படீன்னா சொக்கருக்கு அனுமதி உண்டே! அவரு கூடப் போங்க:)

   • என். சொக்கன் says:

    விஐபி = வெவஸ்தை இல்லாத பயல்? அப்படீன்னா எனக்கும் அனுமதி உண்டு :>>>>

  • anonymous says:

   //கேஆர்எஸ் என்னிக்காவது டைம் கிடைச்சா சொல்லுங்க, நாம நிச்சயமாப் போகலாம்….//

   krs-ஐத்தான் கூப்புட்டுக்கிட்டுப் போவீகளா? எங்களையெல்லாம் கூட்டிப் போக மாட்டீகளா?:)
   ————–

   //ஆனால், திருமலைக்கோவில் ஒரு சிட்டிகை அழகைக் கூடுதலாக அள்ளித் தெளித்துள்ளது//

   உண்மை தான்!
   எப்பவோ, பள்ளிக்கூட வயசுல அம்மா-அப்பா கூட்டிக்கிட்டு போனாங்க! அவங்க மட்டும் ஏதோ பரிகாரம் பண்ண கேரளா பார்டர் போயிட்டாங்க; என்னைய திருமலை முருகன் கோயில்-ல அர்ச்சகர் கிட்டக்க பாத்துக்கச் சொல்லிட்டு, காலையில் போய், மாலையில் வந்துட்டாங்க….

   நான் பேக்குப் பையன் மாதிரி, திருமலை முருகனைச் சுத்திச் சுத்தி வந்தேன்!:)
   அப்பா = திருவேங்கடமுடையானும் திருமலை தான், இந்த லூசு இவனும் திருமலை தான்!:))

   அப்பறமா குமுளி, சுருளியாண்டவர் முருகன் கோயில் ன்னு எங்கெங்கோ போனோம்; மலைமேல கண்ணகி கோட்டம்! ஆனா அது பாழடைஞ்ச கோயில் ன்னு எவனோ சொல்லீற…அம்மா அங்கெல்லாம் வேணாம்ன்னுட்டாங்க; கண்ணகியைப் பாக்க முடியல:((

   எப்பனா, மனசுக்குப் பிடிச்சவங்களோட போகணும்; போய, ஏகாந்தமா அவனைப் பாக்குணும்…..உம்ம்ம்ம்

  • anonymous says:

   காற்றின் அணுவை மூச்சாக்கி ன்னு ஒரு வாணி ஜெயராம் பாட்டு! வருவான் வடிவேலன் படத்துல!

   அதுல குற்றாலம் பக்கமுள்ள, இந்தத் திருமலை முருகன் கோயில் வரும், பாருங்க!

 10. என். சொக்கன் says:

  //மகாவித்துவான் கவிராச பண்டாரத்தையா. திருமலைமுருகன் பிள்ளைத்தமிழ் இயற்றினார்.. கூடிய விரைவில் அதையும் 365பா-வில் எதிர்பார்க்கிறேன்//

  இதுவா? ஒரே ஒரு பாட்டுதானா?

  http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=109&pno=723

 11. அடடா.. நானும் தேடிப்பார்த்தேன்… பண்டாரக்கவிராயர் எழுதிய திருஇலஞ்சி உலா கூட கிடைத்து விட்டது… திருமலைமுருகன் பிள்ளைத்தமிழ் கிடைக்கவே இல்லீங்க… திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் பத்து பருவங்களும்,103 பாடல்களும் உடையது..( http://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)

  அது கோவிலில் உள்ள கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது…ஆனால்,அதன் மின்பதிப்பு கிடைக்கவேயில்லை…

  திருஇலஞ்சி உலா ஓர் அற்புதமான நூல்…அதன் லிங்க் (http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0357.html)

 12. கவிராச பண்டாரத்தையா இயற்றிய திருமலை முருகன் பிள்ளைத் தமிழ்

  by திரு பு.சி. புன்னைவனநாத முதலியார்

  திருநெல்வேலித் தென்னிந்திய, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் வெளியீடு..

  ஓர் அற்புதமான நூல்… எப்படியாவது இதை மின்புத்தகமாக்கினால் மிகவும் நல்லது.. கேஆர்எஸ் அவர்கள் முயற்சிக்கலாம்..

  • என். சொக்கன் says:

   அச்சுப்புத்தகத்துக்காவது வழி செய்ங்க, #365paa வரிசைல ஒரு பாட்டுப் போட்டுடலாம்

  • anonymous says:

   பாலா…
   இப்போ இதை முயல, எனக்கு உடல்வலியும் இல்ல, மனவலியும் இல்ல!

   ஆனா, சொக்கர் சொல்லுறா மாதிரி, அச்சுப் புத்தகம் தருவிச்சிக் குடுத்தீங்க-ன்னா….
   I can speak to Subhashini Tremmel of Tamil Heritage Foundation..
   அவிங்க கிட்ட அள் அம்பு படை பலமெல்லாம் இருக்கு; மின் புத்தகம் ஆக்கிக் குடுப்பாய்ங்க!

   முன்பு இலஞ்சி முருகன் உலா-வை, இப்படித் தான் ஆக்கினோம் – இலஞ்சி முருகன் படமெல்லாம் போட்டு!
   http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html
   See Book no 217. இலஞ்சி முருகன் உலா (Ilanji Murugan Ula)

   • நிச்சயமா…அந்தக் கோவிலுக்கு இந்தத் தடவை போவேன்.. எப்படியாவது வாங்க முயற்சி செய்றேன்….நான் யாரோன்னுட்டு, இப்படி மாட்டிக்கிட்டீங்களே கேஆரெஸ் 😀 😀 😀 😀 😀 😀 😀

 13. திரு.சொக்கருக்கும் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி! இந்த மாதிரி நிறையா பேர் பின்னூட்டம் இடுகையில் மெரீனா கடற்கரையில் காற்று வாங்கும் சுகம் இங்கே வந்தாலும் கிடைக்கிறது 🙂

  amas32

  • என். சொக்கன் says:

   மறைமுகமா இங்கே படிக்க யாரும் இல்லாம காத்து வாங்குதுன்னு சொல்றீங்களா? :))))

  • ஆனந்தன் says:

   மெரீனாவில் காற்று வாங்கப் போனால் கொஞ்சம் கடலை வாங்கி வரலாம். இங்கே காற்று வாங்க வந்தால் கவின் கவிதை வாங்கி வரலாமே!

 14. பக்தி மார்க்கமே இறைவனை அடைய சிறந்த வழி என்று இந்தப் பாடலில் இருந்து புரிந்து கொள்ளலாம். பசு தன் கன்றின் கூப்பாடுக் கேட்டு கன்றுக்கு பால் கொடுக்க பரபரத்துச் செல்லும் நிலை போல நம் மனமும் இறைவனை நோக்கி அதே நிலையில் லயித்து இருந்தால் இறைவனை அடைவது எளிது என்கிறார் மாணிக்கவாசகர்.

  மாதராய் பிறந்திட மாதவம் புரிந்திருக்க வேண்டும் என்பது ஒரு உண்மை கூற்று. இறைவனை அடைய பெண்ணாகப் பிறப்பதும் ஒரு வரப பிரசாதமே!

  amas32

  • anonymous says:

   //இறைவனை அடைய பெண்ணாகப் பிறப்பதும் ஒரு வரப் பிரசாதமே!//

   இத இப்படிப் போட்டு ஒடைச்சதுக்கு நன்றி-ம்மா!
   ரொம்ப பிடிச்சிருக்கு:)

   பெண்ணாய் உணர்ந்து பாக்கும் போது, இன்பம் இன்னும் தூக்கலா இருக்கும்! ஏன்-ன்னு தெரியல:))

   ஆழ்வார்கள் நாயகி-பாவம் ன்னு ஏறிட்டுக் கொண்டது இதுனாலத் தான்! நாயன்மார்களில், அப்பர் மட்டுமே அபூர்வமாகச் சில முறை ஏறிட்டுக் கொள்வார்! மணிவாசகர் பெண்கள் விளையாட்டைப் பாடுவார், ஆனால் ஏறிட்டுக் கொள்ளும் பாடல் இல்ல!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s