நண்டே உனக்கொரு நமஸ்காரம்

கொடுந்தாள் அலவ! குறை யாம் இரப்பேம்

ஒடுங்கா ஒலி கடல் சேர்ப்பன் நெடும் தேர்

கடந்த வழியை எம் கண்ணாரக் காண

நடந்து சிதையாதி நீ

நூல்: ஐந்திணை ஐம்பது (#42)

பாடியவர்: மாறன் பொறையனார்

சூழல்: நெய்தல் திணை. காதலனைப் பிரிந்திருக்கும் ஒரு காதலி. அவர்கள் சந்தித்த கடற்கரை ஓரமாக நடந்து செல்கிறாள். அப்போது முன்பு அங்கே அந்தக் காதலனின் தேர் வந்த தடங்கள் கண்ணில் படுகின்றன. அந்தத் தடங்களின்மீது நண்டுகள் ஏறி விளையாடுகின்றன. அதைப் பார்த்த அவள் இப்படிச் சொல்கிறாள்

வளைந்த கால்களைக் கொண்ட நண்டே, உன்னிடம் ஓர் உதவி கேட்கவேண்டும்,

அலைகள் ஓயாமல் ஒலிக்கின்ற கடல் துறையின் தலைவன், என் காதலன்,

அவன் இப்போது என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான், அவன் பக்கத்தில் இல்லாத துயரத்தை, அவனுடைய நினைவுகளை வைத்து எப்படியோ சமாளித்துக்கொண்டிருக்கிறேன்.

இந்தக் கடற்கரையில் அவனுடைய நீண்ட தேர் வந்த வழித்தடங்கள் இவை. நான் இதைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு அவனது ஞாபகம் வருகிறது. அவனையே நேரில் பார்ப்பதுபோல் உணர்கிறேன்.

ஆகவே, தயவுசெய்து, நீ இந்தத் தடத்தின்மீது ஏறி விளையாடாதே, என் ஞாபகங்களைச் சிதைத்துவிடாதே!

துக்கடா

 • சுவாரஸ்யமான இந்தப் பாட்டைக் கேட்கும்போது உங்களுக்கும் ஒரு சினிமாப் பாடல் நினைவுக்கு வரலாம்: ‘கடற்கரை ஓரத்திலே காலடிகள் நீ பதிக்க, அலை வந்து அடித்ததனால் கன்னி மனம் தான் துடிக்க, கடலுக்குக்கூட ஈரமில்லையோ, நியாயங்களைக் கேட்க யாருமில்லையோ’ (வைரமுத்து)
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • கொடுந்தாள் அலவ! குறையா மிரப்பேம்
 • ஒடுங்கா ஒலிகடல் சேர்ப்பன் நெடுந்தேர்
 • கடந்த வழியைஎம் கண்ணாரக் காண
 • நடந்து சிதையாதி நீ

304/365

This entry was posted in கடற்கரை, சினிமா, நாடகம், நெய்தல், பெண்மொழி, வெண்பா. Bookmark the permalink.

6 Responses to நண்டே உனக்கொரு நமஸ்காரம்

 1. Arun says:

  Venbaa ena neer koduthathu venbaa alla vadiva pizhai

  • என். சொக்கன் says:

   இல்லையே, ஓர் இடத்தில்கூடத் தளை தட்டவில்லை. எதுகை, மோனை, தனிச்சொல் எல்லாம் சரியாகவே உள்ளது. கச்சிதமான வெண்பாதானே அது?

 2. GiRa ஜிரா says:

  சங்க இலக்கியங்களில் கவிதை நயம் கொட்டிக் கிடக்கிறது. அவைகளை அறிவாளித்தனமாக விமர்சித்த/கையாண்ட அரிய அறிஞர்களை இந்தப் பாடலைப் படித்த மகிழ்ச்சியில் மன்னித்து விடுகிறேன். ஆண்டவரே, இவர்கள் செய்த தவறு என்னவென்று அறியாதவர்கள். அவர்களை மன்னித்து நல்லறிவு கொடுப்பீராக. 🙂

  தலைவன் தேர்த்தடம் போட்ட கோடுகள்தான் அவளையும் அவனையும் இணைக்கும் கோடுகள். அந்தக் கோடுகளைப் பார்த்துப் பார்த்து கண்களில் சிவப்புக் கோடுகள் கொள்கிறாள் தலைவி. அவ்வளவு அழுகை.

  நெய்தலான் அல்லவா. அதனால்தான் கடற்கரை வழியாகத் தேரோட்டியிருக்கிறான்.

  காதலுக்கென்று சின்னங்கள் உண்டு. காதலிக்கின்ற பெண்களின் பையையும் அறையையும் துளவினால் நிறைய கிடைக்கும். காதலனோடு தொடர்புள்ள சின்னச் சின்ன பொருட்களைக் கூட சேர்த்து வைத்து ரசிப்பார்கள்.

  ஆண்கள் பொதுவாக பெண்கள் அளவுக்கு அந்த ரசனை கொண்டவர்கள் இல்லை.

  மனிதர்களில் மட்டுமல்லாமல் நண்டினங்களிலும் ஆண் நண்டுகளுக்கு அந்த ரசனைகள் குறைவுதான் போலும்.

  இல்லையென்றால், பெண் நண்டுகள் ஒதுங்கிப் போக, ஆண் நண்டுகள் மட்டும் அந்தத் தேர்த்தடங்களின் மீது நடக்குமா?

  அதனால்தான் தோழி ஆண் நண்டுகளிடம் “தேர்த்தடங்கள்தான் வாழ்க்கைத்தடங்கள்” என்று எடுத்துச் சொல்லி “அழிக்க வேண்டாம்” என்று கோரிக்கை வைக்கிறாள்.

  அதென்ன ஆண் நண்டுகள் மீது இப்படியொரு பழி? தடங்களின் மீது நடப்பவை ஆண் நண்டுகள்தானா?

  ஆம். ஆண் நண்டுகள்தான்.

  தலைவி அவைகளை எப்படி அழைக்கிறாள்? “கொடுந்தாள் அலவ!”.

  அலவன் என்றால் ஆண் நண்டு. அப்படியானால் பெண் நண்டிற்கு என்ன பெயர்? நள்ளி.

  சரி. அலவன் என்றால் ஆண் நண்டு. அதென்ன கொடுந்தாள்? அப்படியென்ன கொடுமையைச் செய்தன அந்த நண்டுகளின் கால்கள்?

  தலைவியின் உயிர்க்கோடான தலைவன் சென்ற தேர்க் கோட்டை அழிப்பதை விட வேறென்ன கொடுஞ்செயல் இருக்க முடியும்?

  அதனால்தான் கொடுந்தாள் அலவனிடம் கோரிக்கை வைக்கிறாள் அந்த நெய்தற் காரிகை.

  அன்புடன்,
  ஜிரா

 3. Naanjilpeter says:

  நமஸ்காரம் = வணக்கம்
  ஞாபகம் = நினைவு

  • என். சொக்கன் says:

   உங்கள் திருத்தங்களுக்கு நன்றி திரு. நாஞ்சில் பீட்டர்.

   ’நகையே உனக்கொரு நமஸ்காரம்’ என்ற பெயரில் புகழ் பெற்ற நகைச்சுவைப் புத்தகம் ஒன்று உள்ளது (எழுதியவர்: சுந்தர பாகவதர்) அதை நினைவுபடுத்தும்வகையில்தான் வேண்டுமென்றே இந்தப் பெயரை வைத்தேன், மற்றபடி ’நமஸ்காரம்’ என்ற வார்த்தையை வழக்கமாக நான் பயன்படுத்துவதில்லை, ‘ஞாபகம்’, ‘நினைவு’ இரண்டையும் கிட்டத்தட்ட சம அளவில் பயன்படுத்துவேன்

 4. நெய்தல் நிலமாதலால் கடற்கரையும் நண்டும் பாடலில் முதன்மை படுத்தப் படுகின்றன். காதலனைப் பிரிந்திருக்கும் காதலிக்கு, காதலனை நினைவூட்டும் சிறிய நிகழ்வு கூட ஆனந்தத்தைத் தரும். இங்கே காதலனின் தேர் சக்கரத்தின் வழித் தடத்தைக் கூட நண்டுகள் அழிப்பதை அவள் விரும்பவில்லை. அப்படியொரு ஈடுபாடு.

  காலம் செல்லச் செல்ல நம் நினைவு மழுங்கிவிடும். ஞாபகத்தில் வைத்துக் கொள்ள ஒரு திடப் பொருள் தேவையாக உள்ளது. காதலனின் நினைவை அந்த தேரின் வழித் தடத்தை வைத்து நினைவில் நிறுத்திக் கொள்வதாகக் காதலிச் சொல்வது அந்த கவிஞனின் கற்பனைத் திறன்!

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s