அள்ளித் தரும் வையை

கரையே கை வண் தோன்றல் ஈகை போன்ம் என

மை படு சிலம்பின் கறியொடும் சாந்தொடும்

நெய் குடை தயிரின் நுரையொடும் பிறவொடும்

எவ்வயினானும் மீது மீது அழியும்

துறையே முத்து நேர்பு புணர்காழ் மத்தக நித்திலம்

பொலம் புனை அவிர் இழை, கலங்கல் அம் புனல் மணி

வலம் கழி உந்திய திணை பிரி புதல்வர்

கயம் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇத்

தம்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும்

தத்து அரிக் கண்ணார் தலைத்தலை வருமே

நூல்: பரிபாடல் (#16, முதல் 10 வரிகள்)

பாடியவர்: நல்லழிசியார்

மேகங்கள் தங்கும் மலையில் மழை பொழிகிறது. அதனால் வையை ஆற்றில் வெள்ளம் பொங்கி வருகிறது.

அப்போது, மலையில் உள்ள மிளகு, சந்தன மரம், வெண்ணெய் எடுப்பதற்காகத் தயிரைக் கடையும்போது உண்டாகும் நுரை, மலர், பொன் மணி போன்றவை நீர் வெள்ளத்தோடு வருகின்றன. அவற்றைக் கரையில் உள்ளவர்கள்மீது வாரி இறைக்கிறது வையை.

இந்தக் காட்சியைப் பார்த்தால், ’வையை நதியும் பாண்டியனைப்போலவே பெரிய வள்ளல்தான்’ என்று சொல்லத் தோன்றுகிறது.

அதன்பிறகு, கலங்கலை உடைய அந்தத் தண்ணீர் வலப்புறமாகச் சுழித்துக்கொண்டு ஓடுகிறது. தொடர்ந்து அதே வேகத்தில் பயணம் செய்கிறது. மதுரையை நோக்கி விரைந்து செல்கிறது.

வழியில் பலர், ஆற்றில் நீராட வருகிறார்கள். அவர்களுடைய முத்து வடம், தலையில் அணிகிற முத்து நகை, தங்கத்தால் ஆன அணிகலன்கள், மணி போன்றவற்றையெல்லாம் கவர்ந்து செல்கிறது வையை.

அதன்பிறகு, அந்த ஆற்றில் சில சிறுவர்கள் தனியே நீராடுகிறார்கள். அவர்கள் தலையில் அணிந்திருக்கும் முஞ்சம் என்ற அணிகலனையும் வையை கவர்ந்துகொள்கிறது.

நிறைவாக, வையை மதுரைக்கு வந்து சேர்கிறது. அங்கே சிவந்த வரிகளுடன் கூடிய கண்களைக் கொண்ட பெண்கள் தங்கள் காதல் கணவருடன் நதியில் குளிக்க வருகிறார்கள்.

அந்தக் காதல் ஜோடிகளைப் பார்த்தவுடன், வையைக்கு மகிழ்ச்சி. இவ்வளவு நேரமாகப் பலரிடம் கவர்ந்து வந்த நகைகளையெல்லாம், அவர்களுக்குப் பரிசாகக் கொடுத்துவிடுகிறது!

துக்கடா

 • பத்து வரிகளில் ஒரு நதியின் பயணத்தை அழகாகச் சொல்லும் பாட்டு இது. மலை மேலிருந்து வரும்போது பல இயற்கைப் பொருள்களை அள்ளி வந்து மக்களுக்குத் தருகிறது வையை. ஆனால் தரைக்கு வந்தபின் அங்கே அப்படி எந்தப் பொருளும் தென்படவில்லை, அதற்காகக் கொடைத்தன்மையை மறக்கமுடியுமா? தன்னிடம் குளிக்கவந்தவர்களுடைய நகைகளை நைசாகச் சுருட்டிக்கொண்டு சென்று மதுரைவாசிகளுக்குத் தருகிறது :> குறும்புதான் 🙂
 • அது சரி, ‘வையை’ என்று வருகிறதே, அது ‘வைகை’ அல்லவா? “கை வை”த்து உண்டான நதி என்ற அர்த்தத்தில்தான் அதற்கு “வைகை’ என்று பெயர் சூட்டப்பட்டதாகச் சொல்வார்களே?
 • அதெல்லாம் பின்னால் வந்த கதைகள். அந்த நதியின் உண்மைப் பெயர் ‘வையை’தான் 🙂
 • நாளை மறுநாள் மதுரையில் அழகர் வையை ஆற்றில் இறங்கும் உற்சவம், அதை முன்னிட்டு இரண்டு நாள் அட்வான்ஸாக இந்த வையைப் பாட்டு, ஞாயிறன்று அழகரைக் கவனிப்போம் :>

303/365

Advertisements
This entry was posted in இயற்கை, குறும்பு, கொடை, பரிபாடல், வர்ணனை. Bookmark the permalink.

3 Responses to அள்ளித் தரும் வையை

 1. krishy says:

  அருமையான பதிவு

  மே தின வாழ்த்துகள்
  உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

 2. நதிகளை தாயாக பாவிப்பது அதனால் தான்! இயற்கை வளங்களையும் அள்ளித் தந்து, முடியாத போது என்ன சேகரிக்க முடியுமோ அவற்றை எல்லாம் செகரித்துத் தாயன்போடு தருகிறாள் வையை அன்னை 🙂

  ஆனால் பாடியவர் நதியின் வள்ளல் தன்மையை பாண்டிய அரசனின் கொடை தன்மைக்கு ஒப்பிடுகிறார்.

  நதி நீர் சுழித்துக் கொண்டு ஓடும்போது அது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக எனக்குத் தோன்றும். அந்த காலத்தில் வையை நதியில் தண்ணீர் வரத்து நிறைய இருந்திருக்கிறது போலும்! இப்பொழுதெல்லாம் அப்படியில்லை.

  amas32

  • GiRa ஜிரா says:

   அம்மா, வையைக்குப் பொய்யாக் குலக்கொடி என்று பெயர். நல்லோர் ஆட்சியில் அப்படியிருந்தாள். இன்று ஆட்சியோரும் ஆளப்படுவோரும் அல்லோர் ஆனபின் அவளும் பொய்த்துப் போனாள். பாத்திரம் அறிந்து இடும் திறம் வையை என்னும் பொய்யாக் குலக்கொடிக்கும் உண்டு. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s