பாட்டுக்குள் ஒரு காடு

மரம் அது மரத்தில் ஏறி, மரம் அதைத் தோளில் வைத்து,

மரம் அது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி

மரம் அது வழியே சென்று, வளமனைக்கு ஏகும்போது

மரம் அது கண்ட மாதர் மரமுடன் மரம் எடுத்தார்

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: சுந்தர கவிராயர்

(இந்தப் பாடல் ஓர் அழகான வார்த்தை விளையாட்டு. இதில் ‘மரம்’ என்ற சொல் வருகிற ஒவ்வோர் இடத்திலும் வெவ்வேறு மரங்களின் பெயர்களைப் பொருத்திப் பொருள் கொள்ளவேண்டும்)

மரம் அது மரத்தில் ஏறி = அரசன் ஒருவன் மாவில் (குதிரையின்மீது) ஏறுகிறான்

மரம் அதைத் தோளில் வைத்து = வேலைத் தோளில் வைக்கிறான்

மரம் அது மரத்தைக் கண்டு = அரசன் ஒரு வேங்கைப் புலியைப் பார்க்கிறான்

மரத்தினால் மரத்தைக் குத்தி = வேலினால் வேங்கையைக் குத்துகிறான்

மரம் அது வழியே சென்று = அரசன் வந்த வழியிலேயே திரும்புகிறான்

வளமனைக்கு ஏகும்போது = வளங்கள் நிறைந்த தன்னுடைய மாளிகைக்குச் செல்கிறான்

மரம் அது கண்ட மாதர் = அரசனைச் சில பெண்கள் காண்கிறார்கள்

மரமுடன் மரம் எடுத்தார் = ஆலத்தி (ஆல் + அத்தி) எடுத்து வரவேற்றார்கள்

ஆக, ராஜா ஒருவன் வேட்டைக்குப் போய் வேங்கையைக் கொன்று திரும்புகிறான், பெண்கள் அவனை வரவேற்கிறார்கள், அவ்வளவுதான் விஷயம், இதைச் சொல்வதற்கு அரச மரம், மா மரம், வேல மரம், வேங்கை மரம், ஆல மரம், அத்தி மரம் என்று ஒரு காட்டையே பாட்டுக்குள் நுழைத்துவிட்டார் புலவர்!

துக்கடா

 • இன்றைய பாடலைத் தேர்ந்தெடுத்துத் தந்த நண்பர் ஜி. ராகவன். அவருக்கு நன்றிகள்!

302/365

This entry was posted in தனிப்பாடல், நண்பர் விருப்பம், வார்த்தை விளையாட்டு. Bookmark the permalink.

7 Responses to பாட்டுக்குள் ஒரு காடு

 1. balaraman says:

  நல்ல வார்த்தை விளையாட்டு!
  Innovative-ஆன ‘பா’! 🙂

 2. அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலை நினைவுறுத்துகிறது.

  இதை மனப்பாடச் செய்யுளாக பள்ளியில் வைத்தால் எளிதாக மனனம் செய்து விடலாம்.

  இந்தப் பகுதியில் நீங்கள் வித விதமானப் பாடல்களைப் போடுகிறீர்கள்! நன்றி திரு.சொக்கரே 🙂

  amas32

 3. Rex Arul says:

  சொக்கன் & ராகவன் — என்ன ஒரு ஒற்றுமை பார்த்தீர்களா? இந்த Tweetஐ முதலில் பாருங்கள்: https://twitter.com/rexarul/statuses/196411020049256448

  புரிந்திருக்குமே! Yes, I was just mulling about this song exactly 4-5 days ago and had wanted the English names for the tree names used in this lovely song. And that is precisely when you both had delved on this very song.

  Now what is the probability of 3 different people in different parts of the world, thinking about the same song, out of the thousands of songs from classical Tamil literature?

  Probability is amazing!

 4. nandakumar says:

  my hearty conmgrats

 5. GiRa ஜிரா says:

  சுந்தர கவியராயர் உண்மையிலேயே குசும்புக்காரராகத்தான் இருந்திருக்க வேண்டும். முன்பு 365பாவில் பார்த்த அதிசய விலங்கு பாடலாகட்டும் இந்தப் பாடலாகட்டும்… எல்லாம் சொற்சிலம்பம்.

  அப்போது பின்னூட்டத்தில் குறிப்பிட்ட இந்தப் பாடலை நினைவு கூர்ந்து பதித்த நண்பன் நாகாவிற்கு நன்றி 🙂

  கவிதைகளையும் கருத்துகளையும் பக்தியையும் காதலையும் எழுத எத்தனையோ புலவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற நகைச்சுவையான சொற்சிலம்பமாடும் கவிதைகளையும் எழுதத்தான் ஆட்கள் குறைவு. அந்த வகையில் சுந்தர கவிராயரையும் காளமேகப்புலவரையும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

  பாட்டில் எத்தனை மரங்கள் வருகின்றன?

  அரசு, மா, வேல், வேங்கை, ஆல், மற்றும் அத்தி ஆகிய மரங்கள் பாட்டில் வருகின்றன.

  இப்படி மரம் மரம் மரம் என்று சொல்லிப் பாடல் எழுதலாமா? அது கருத்துப் பிழை ஆகாதா? அதெப்படி எல்லாவற்றிற்கும் மரம் என்ற சொல் பொருந்தும்?

  இப்படியான கேள்விகளுக்கு ஒரேயொரு விடையுண்டு. வாழ்வியலில் இருந்து வந்த விடை அது.

  சில சமூகங்களில் கணவனின் பெயரைச் சொல்லும் வழக்கம் இல்லாமல் இருந்தது. கணவன் பெயரென்றால் அந்தப் பெயர் எங்கெல்லாம் வருகின்றதோ அதையெல்லாம் சொல்ல மாட்டார்கள்.

  என்னுடைய கல்லூரி நண்பன் ஒருவனின் பாட்டி நான் நேரில் கண்ட எடுத்துக்காட்டு.

  ஒருமுறை அவர்கள் வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது “மரத்துக் காய் சாம்பார்” வைத்திருப்பதாக அந்தப் பாட்டி சொன்னார்.

  அதென்ன “மரத்துக் காய்” என்று நான் கேட்டேன். அப்போதுதான் தெரிந்தது அது முருங்கைக் காய் என்று.

  அந்தப் பாட்டியின் கணவர் பெயர் முருகப்பன். அதனால் எங்கெல்லாம் முருகு வருகிறதோ அதையெல்லாம் இது போல வேறு விதமாகச் சொல்வார்.
  முருங்கைக் கீரையை மரத்து இலை என்றுதான் சொல்வார்.

  ஆக அந்த இடத்தில் மரம் என்ற சொல் முருங்கையைக் குறிப்பதை சிறந்த வாழ்வியல் இலக்கண எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்.

  அதைப் போலவே சுந்தர கவிராயரின் பாடலும் சிறப்பானதே.
  இந்தப் பாட்டில் நான் மிகவும் ரசித்த மரம் “மரமுடன் மரம் எடுத்தார்”. ஆல்+அத்தி. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s