நம் தவம்!

’நங்கை என் நோற்றாள் கொல்லோ நம்பியைத் திளைத்தற்கு’ என்பர்,

’மங்கையை மணப்பான் என்னோ வள்ளலும் நோற்றான்’ என்பர்,

’அம் கடி மதுரை என்னோ ஆற்றிய தவம்தான்’ என்பார்

’இங்கு இவர் வதுவை காண்பான் என்ன நாம் நோற்றோம்’ என்பார்

நூல்: திருவிளையாடல் புராணம் (திருமணப் படலம்)

பாடியவர்: பரஞ்சோதி முனிவர்

சூழல்: மீனாட்சி திருக்கல்யாணம்

’ஆண்களில் சிறந்தவனான இந்த நம்பியை (சிவன் : சுந்தரேஸ்வரர்) மணப்பதற்குப் பெண்களில் சிறந்தவளான இந்த நங்கை (மீனாட்சி) என்ன தவம் செய்தாளோ!’ என்றார்கள் சிலர்.

’அவள்மட்டுமா? வள்ளலாகிய சிவனும் இவளை மணப்பதற்காகத் தவம் செய்திருக்கவேண்டும்!’ என்றார்கள் வேறு சிலர்.

’இப்படி ஒரு கல்யாணம் நடப்பதற்கு அழகான இந்த மதுரை நகரம்தான் ஏதோ தவம் செய்திருக்கிறது’ என்றார்கள் இன்னும் சிலர்.

’அட, அதையெல்லாம் விடுங்கய்யா, இவர்களின் திருமணக் காட்சியைப் பார்ப்பதற்கு நாம்தான் நிறையத் தவம் செய்திருக்கோம்!’ என்று மகிழ்ச்சியடைந்தார்கள் பலர்.

துக்கடா

 • இன்று மதுரையில் மீனாட்சி திருக்கல்யாண உற்சவம். அதை முன்னிட்டு இந்தத் ‘தவ’ப் பா 🙂

301/365

Advertisements
This entry was posted in சிவன், பக்தி, பண்டிகை. Bookmark the permalink.

8 Responses to நம் தவம்!

 1. GiRa ஜிரா says:

  எங்கள் ஊரில் ஒரு பெரியம்மா இருக்கிறார்கள். அவர்கள் இந்த வயதிலும் அழைப்பு வந்த திருமணங்களுக்குத் தவறாமல் சென்று விடுவார்.

  திருமணக்காட்சிகளைக் காண்பதில் அவருக்கு ஒரு அலாதி இன்பம். திருமணச் சடங்குகள் எப்படிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் இருந்தாலும் திருமணக்காட்சிகளும் கோலங்களும் கூர்ந்து கவனித்து மகிழத்தக்கவையே.

  அதனால்தானோ என்னவோ இலக்கியங்களில் கூட திருமணக்காட்சிகளைப் புலவர்கள் அனுபவித்து எழுதியுள்ளார்கள். புலவர்களுக்கே ரசனை எல்லை மீறும் போது அந்தப் பெரியம்மாவிற்கு ஆவல் இருப்பது சரியே. மாப்பிள்ளையையும் பெண்ணையும் மாலையும் கழுத்துமாகப் பார்ப்பதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. வாழ்வாங்கு வாழ்கின்றவர்களுக்கே அடுத்தவர் வாழ்வதைப் பார்த்து மகிழ்ச்சி பொங்கும்.

  திருமணம் ஆனவர்களும் திருமணம் செய்து வைத்தவர்களும் நன்றாக யோசித்துப் பாருங்கள். உங்கள் கண் முன்னே காட்சிகள் விரியும்.

  திருமணம் நடந்த இடம்/மண்டபம்/கோயில்/ஆலயம்

  இந்தப் பெயருடைய மணமகன் இந்தப் பெயருடைய மணமகளைத் திருமணம் செய்கிறார் என்று சொல்லும் வரவேற்புத் தட்டி

  வாழைமரத் தோரணங்கள்

  வெங்கல/எவர்சில்வர் தாம்பாளம் நிறையக் கற்கண்டு, கும்பாவில் சந்தனம், மணக்கும் பன்னீர், சிரிக்கும் ரோஜா மலர்கள், இவைகளைக் கொடுத்து வருகின்றவர்களை வரவேற்கும் சிறுவர் சிறுமியர்

  மண்டபம் எங்கும் பலவண்ணத் தோரணங்கள், வரிசையாக இடப்பட்ட நாற்காலிகளை நிரப்பும் சுற்றமும் நட்பும்

  குறுக்கும் நெடுக்குமாய் ஓடியாடும் குழந்தைகள், பரபரப்பாக இயங்கும் திருமண வீட்டார்கள்

  வந்தவரையும் தொற்றிக் கொள்ளும் எங்கும் நிறைந்திருக்கும் ஒரு மகிழ்ச்சி கலந்த சூழ்நிலை

  மிகச்சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மேடை. மேடை கொள்ளாமல் நெருங்கிய உறவினர்கள்

  பரபரப்போடு மணமகன். பதைபதைப்போடு மணமகள் (சில சமயங்களில் இது மாறியிருப்பதும் உண்டு)

  மணமக்களின் கழுத்து கொள்ளாத மாலைகள், அந்த மாலைகளில் கட்டப்பட்ட மலர்களிலிருந்து எழும் மூக்கடைக்கும் நறுமணம்

  மகளுக்கோ/தங்கைக்கோ சிறப்பாக திருமணம் செய்து விட்டோம் என்று பெருமிதத்தோடு வருத்தப்படும் பெண் வீட்டு ஆண்கள்

  ”நாங்கள் எங்கள் தாய் வீட்டை விட்டு வரவில்லையா, அது போல மகளும் போகும் இடத்தில் நன்றாக இருப்பாள், இதுக்குப் போய் இவர் இவ்வளவு வேதனைப்படுகிறாரே” என்று நினைக்கும் பெண்ணின் தாய்

  இன்னும் பலப்பல காட்சிகள். ஒரு திருமணக் காட்சியை மட்டும் வைத்தே மிகப்பெரிய நாவலை எழுதி விடலாம். அத்தனை காட்சிகள், சம்பவங்கள், பாத்திரங்கள், உணர்ச்சிகள்.

  சாதாரண மனிதர்களின் திருமணக் காட்சிக்கே இவ்வளவு என்றால், உலகத்திற்கே இறைவன் ஆனவனுக்கும் உலககத்திறே இறைவியானவளுக்கும் திருமணம் நடந்தால் அந்தக் காட்சி எப்படியிருக்கும்!

  அதனால்தான் பரஞ்சோதியார் யார் தவம் செய்தவர் என்று யோசித்துப் பார்க்கிறார்.

  அவனோ உலகநாயகன். உலகநாயகி ஆகிய ஒருத்தியைக் கரம் பிடிக்கிறான். அவனா தவம் செய்தவன்?

  பெண்களில் எல்லாம் சிறந்தவள் அந்த நங்கை. அப்படிப் பட்ட நங்கைக்குப் பொருத்தமான நம்பியை நம்பி மணக்கிறாள். அவளா தவம் செய்தவள்?

  உலகத்தில் எத்தனையோ இடம் இருக்க, இருவரையும் ஒன்றாக்கிய மதுரையம்பதியா தவம் செய்தது?
  இருக்கலாம். ஆனால் இந்த அருமையான காட்சியைக் கண்களால் கண்டு, உள்ளத்தில் இருந்தி, உவப்பில் திளைக்கின்றோமே, நாமல்லவா பெருந்தவம் செய்தவர்கள்!

 2. உங்கள் மகள்களுக்கு பெயர்கள் இந்தப் பாடலில் இருந்து தான் தேர்ந்தெடுத்தீர்களா? அருமையான பெயர்கள் 🙂

  இறைவன் இறைவியின் திருமணக் கோலத்தைப் பார்க்க நாம் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதுவும் திருமணம் என்றாலே கோலாகலத் திருவிழா. மாபெரும் அரசியின் திருமண வைபவம் எவ்வளவு சீரும் சிறப்புமாக நடந்திருக்கும்! காணக் கண் கொள்ளா காட்சி தான். இந்தமாதிரி ஒரு ஜோடி பொருத்தம் மானிடருக்கும் அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

  amas32

  • என். சொக்கன் says:

   //உங்கள் மகள்களுக்கு பெயர்கள் இந்தப் பாடலில் இருந்து தான் தேர்ந்தெடுத்தீர்களா?//

   🙂 இல்லை. முதல் குழந்தைக்கு நம்பி, நங்கை என்ற ஆண், பெண் பெயர்களைத் தேர்வு செய்துவைத்திருந்தோம், பெண் பிறந்ததால் அவள் நங்கை ஆனாள், பின் இரண்டாவது மகள் பிறந்தபோது Rhymingஆக இருக்கட்டுமே என்று ‘மங்கை’ என அவளுக்குப் பெயர் சூட்டினோம் 🙂

   By the way, #365paa பாடல்களில் பெரும்பாலானவற்றை நான் அன்றைய தினம் காலையில்தான் முதன்முறையாக வாசிக்கிறேன். இது எனக்கோர் உற்சாகமான Learning அனுபவம். ஒரு பாடலைத் தேர்வு செய்ய தினமும் குறைந்தது இருபது பாடல்களையாவது படிக்கிறேன், கொடுத்துவைத்திருக்கவேண்டுமே!

 3. ஆலவாய் நகரின் அங்கயற்கண்ணியாக வீற்றிருக்கும் எங்க குடும்பத்துப் பெண்ணை, எங்கள் தலைவர் சொக்கநாதருக்கு மணமுடித்துக் கொடுப்பதில்தான் எங்க ஊருக்காரய்ங்களுக்கு எவ்வளவு சந்தோஷம்…. எல்லாரும் எங்க ஊர்ல அன்னிக்குப் பொண்ணு வீட்டுக்காரய்ங்கதான்…. அழகரு சொல்லிதான் எல்லா வேலையும் செய்யுற மாதிரி, எல்லா வேலையும் இழுத்துப் போட்டுக்கிட்டுச் செய்வோம்… சித்திரை வீதி, மாசி வீதி, மேல ஆவணி வீதி, சித்திரக்காரத் தெரு,புது மண்டபம்னு, எல்லாப் பொண்ணுங்களும் மணப்பெண் தோழிகள் மாதிரியே தாவணிகளைப் போட்டுக்கிட்டு வலம் வர்றதும், சிரிக்கிறதும், வளையல் சத்தங்களும், கொலுசுச் சத்தங்களுமாக் குலுங்கறதும், எங்க பயலுக ஒவ்வொருத்தனும் மாப்பிளைத் தோழர்கள் மாதிரியே, என்னமோ அவனுக்கே கல்யாணம்ங்கறதப் போல நடக்குறதும், சோட்டாளிகளோட சுத்துறதும், கல்யாணத்துக்குக் கோவில் முழுக்க வாசல்ல வாழைமரம் கட்ட “வா..பங்கு”ந்னு குழாம் சேர்த்துக்கிட்டு போறதும் என்று சொக்கர்-மீனாட்சி கல்யாணம் வருடமொரு முறை மதுரையின் ஒட்டுமொத்த உற்சாகத்திற்கும் உத்திரவாதம் அளிக்கும் நிகழ்வு…

  அதெல்லாம் விட்டுட்டு இங்கே டெல்லில ஒளிபரப்பு பொறியாளன் வேலை பாத்துட்டு இருக்கியாடா??ன்னு என்னை நானே திட்டிக்கிறேன் கண்ணாடியைப் பார்த்து..

  என்னத்த சொல்றது?? அழகர் ஆத்துல இறங்கறதுக்கும் ஏதாவது பாட்டைப் போட்டீங்கன்னா வந்து பட்டறையைப் போட்டுர்றேன்…

  சொக்கன் என்ற பெயரை எப்படி சுந்தரேஸ்வரர் என்ற பெயர் இடமாற்றம் செய்தது என்று அறிய ஆசைப்படுகிறேன்.. சொக்கர் என்று சொக்க வைக்கும் அழகுடையவர் என்று பொருளிலிருந்து வந்திருக்கலாம்..இன்னும் மதுரையின் சுற்று வட்டாரங்களில் சொக்கர்-மீனாட்சி என்று தான் சொல்கிறார்கள்.. சுந்தரர் என்ற பெயர் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை…

  கீழ இருக்கும் சுந்தரரையும்,மேலே இருக்கும் சுந்தரரையும்(அழகர்) சொல்றதுக்கு பயன்படுத்திய ஒரு வார்த்தையை (ஆசாரம்) இன்னும் எங்க சனங்க பேச்சுவார்த்தையில பயன்படுத்திட்டு வந்துட்டு இருக்காங்க…”யாத்தே..ஆசாரமா இருக்கு” என்பது மதுரையின் தொன்று தொட்டு வழங்கி வரும் வார்த்தையை அடையாளம் காட்டுகிறது.. அது, இந்த இரு அழகர்களையும்(திருமாலிருஞ்சோலையில் இருப்பவரையும், மதுரையில் இருப்பவரையும்) புகழப் பயன்படுத்தியதால் இன்னும் புழங்குகிறது…

 4. Pingback: 20 July, 2013 13:56 | பெங்களூரு கம்ப ராமாயண வகுப்புகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s