வேங்கையும் யானையும்

சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே,

நீல வண்டு இனம் படிந்து எழ, வளைந்து, உடன் நிமிர்வ

கோல வேங்கையின் கொம்பர்கள் பொன்மலர் தூவிக்

காலினில் தொழுது எழுவன் நிகர்ப்பன காணாய்

*

உருகு காதலின் தழை கொண்டு மழலை வண்டு ஓச்சி

முருகு நாறு செந்தேனினை முழை நின்றும் வாங்கிய

பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை

பருக வாயினில் கையினின்று அளிப்பது பாராய்

நூல்: கம்ப ராமாயணம் (அயோத்தியாக் காண்டம், சித்திரகூடப் படலம், பாடல்கள் #16 & #10)

பாடியவர்: கம்பர்

சூழல்: ராமரும் சீதையும் லட்சுமணரும் சித்திரகூட மலையை அடைகிறார்கள். அங்கே உள்ள இயற்கைக் காட்சிகளைச் சீதைக்குக் காண்பிக்கிறார் ராமர்

திருமகளைப் போன்ற சீதையே, ’நல்ல ஒழுக்கம் என்றால் இதுதான்’ என்று அருந்ததிக்கே சொல்லித்தரும்படி வாழ்கிறவளே,

அழகிய வேங்கை மரத்தின் கொம்புகளில் பூக்கள் நிறைந்துள்ளன. அங்கே கருநீல வண்டுகள் மொய்க்கின்றன.

அந்த வண்டுகளின் கனம் தாங்காமல், வேங்கைக் கொம்பு கீழே தாழ்கிறது. பின்னர் வண்டுகள் விலகியதும் மறுபடி நிமிர்கிறது.

இந்தக் காட்சியைப் பார்க்கும்போது, நாமெல்லாம் வயதில் மூத்தவர்களுடைய பாதங்களில் மலர் தூவி வணங்கிப் பின்னர் எழுவதுபோல் தோன்றுகிறது, பார்!

*

அதோ, அங்கே பார், ஒரு யானை ஜோடி. பெண் யானை கருவுற்றிருக்கிறது. பிறைச் சந்திரன் போன்ற தந்தங்களைக் கொண்ட ஆண் யானை அதை ஆதரவாக அணைத்தபடி நடந்துவருகிறது.

அந்தப் பெண் யானைக்கு, தேன் குடிக்க ஆசை. ஆனால் அதனால் தேன் கூட்டை எட்டித் தொட முடியவில்லை.

ஆகவே, துணையின்மீது காதல் கொண்ட அந்த ஆண் யானை தானே அந்தத் தேன் கூட்டை நெருங்குகிறது. அங்கே மொய்க்கின்ற இனிய குரல் கொண்ட வண்டுகளை விரட்டுகிறது, பின்னர் ஒரு மரத் தழையை எடுத்து நறுமணம் வீசும் சிவப்பு நிறத் தேனை அதில் பிடிக்கிறது, அதைக் கொண்டுவந்து தன்னுடைய பெண் யானைக்கு ஊட்டுகிறது.

300/365

Advertisements
This entry was posted in ஆண்மொழி, இயற்கை, கம்ப ராமாயணம், கம்பர், காதல், திருமால், பக்தி, ராமன், வர்ணனை. Bookmark the permalink.

8 Responses to வேங்கையும் யானையும்

 1. GiRa ஜிரா says:

  முதல்ல நாகாவுக்கு ஒரு கேள்வி 🙂

  முன்பாட்டைப் பின்பாட்டாகவும் பின்பாட்டை முன்பாட்டாகவும் இட்டதுக்கு எதுவும் காரணம் உண்டா?

  • என். சொக்கன் says:

   காரணம் உண்டு, பின் பாட்டில்தான் சீதையை விளிக்கும் வரி இருக்கிறது, ஆகவே அதை முதல் வரியாக வைத்து, அடுத்த 7 வரிகளை வர்ணனைகளாக வரும்படி அமைத்தேன் 🙂

 2. GiRa ஜிரா says:

  பாடல்களுக்கு வழக்கம் போல நாகா சிறப்பாக விளக்கம் கூறியிருக்கிறார். ஆகையால் என்னுடைய சில சிந்தனைத் துளிகள்.

  ”சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே” என்ற வரி என்னை நிறைய சிந்திக்க வைத்தது.

  ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? இந்த வரிகளுக்கு திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்தவனே என்று சொல்வது போல எளிமையாக பொருளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆகையால் சிந்தித்து எனக்கு நிறைவு தரும் வகையில் ஒரு கருத்திற்கு வந்திருக்கிறேன். அதை இங்கும் சொல்கிறேன். இதை வேறு யாரும் கூறினார்களா என்று தெரியாது. கம்பர் இதை நினைத்துதான் சொன்னாரா என்றும் தெரியாது. ஆனாலும் ஒரு அழகான கருத்து.

  வைதீகர்கள் நடத்தி வைக்கும் ஒவ்வொரு திருமணத்திலும் அருந்ததி பார்ப்பது என்பது ஒரு சடங்காகவே இருக்கிறது. அதற்கு ஒரு காரணமும் உண்டு.

  வசிட்டரின் மனைவி அருந்ததி. விண்வெளியில் அருந்ததியும் ஒரு நட்சத்திரம். வசிட்டரும் ஒரு நட்சத்திரம். கணவன் போகும் வழியிலேயே அருந்ததியும் செல்வதாகக் கருத்து. அதனால்தான் திருமண வேளையில் கணவன் சொல்படி நடக்க வேண்டும் என்று மனைவிக்கு நினைவுபடுத்துவது போல அருந்ததியைப் பார்க்கச் சொல்வார்கள்.

  சீதைக்கும் இராமனுக்கும் திருமணத்தை நடத்தி வைத்ததே வசிட்டர்தான். அப்படியானால் சீதையும் இராமனும் அருந்ததியை நேருக்கு நேரே பார்த்திருப்பார்கள்.

  அப்படியிருக்கும் போது அருந்ததிக்கே சீலம் இன்னதென்று அருளிய திருவே என்று இராமன் சீதையை ஏன் புகழ வேண்டும்?

  வசிட்டர் போகுமிடமெல்லாம் அருந்ததி சென்றதென்னவோ உண்மைதான். ஆனால் வசிட்டர் எப்போதும் சப்தரிஷி மண்டலத்திலேயே திரிகின்றவர். அவருடனேயே அருந்ததி திரிவது சிறப்புதான்.

  ஆனால் பதவியிழந்தது வீடிழந்து நாடிழந்து காட்டுக்குக் கணவன் செல்லும் போதும் உடன் சென்றவள் சீதை. அப்படியொரு நிலை அருந்ததிக்கு வரவில்லை. ஒருவேளை வந்தால் அருந்ததி சீதையைப் போலத்தான் நடந்து கொள்வார்.
  ஆக எல்லாப் பெண்களும் பின்பற்ற வேண்டிய அருந்ததியே சீதையின் செயலிலிருந்துதான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே உண்மையான நிலை.

  அதைக் குறிப்பிடும் விதமாகத்தான் வனவாசம் வந்ததுமே இராமன் அருந்ததியை விட சீதை சிறப்புற்றவள் என்பதை எடுத்துச் சொல்கிறான்.
  ஆனால் இப்படிச் சொன்ன அதே வாய் சீதையைச் சீரழித்துப் பேசும் நிலையும் பின்னாளில் வந்தது. அதுதான் பெருங்கொடுமை.

  • என். சொக்கன் says:

   திருமணத்தின்போது நிஜ அருந்ததியையே அவர்கள் நேரில் பார்த்துள்ளது உண்மைதான் 🙂

   சிறப்பான கற்பனை ராகவன், மிகவும் ரசித்தேன்!

  • ஆனந்தன் says:

   நன்று!
   நன்றி!

 3. ராகவன், உங்களுக்கு வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டமா? வாழ்த்துகள் 🙂

  ரொம்ப அற்புதமான விளக்கம் ராகவன்!

  பூக்கள் நிரம்பிய கிளை வண்டுகளின் கனத்தால் தாழ்ந்து பின் நிமிர்வது பெரியவர்களை வணங்குவது போல உள்ளது என்று இராமபிரான் சொல்வது அவரது குணத்தை தான் காட்டுகிறது. இயற்கையின் தன்னிச்சையான செயலில் கூட அறநெறியைப் பார்க்கிறார்.

  பெண் யானை ஆசைப்பட்டதை உடனே கொண்டு வந்து கொடுக்கும் ஆண் யானையை, காட்டில் சீதைக்குக் காட்டுகிறார் இராமன். பின்னொருநாளில் சீதை ஆசைப்பட்டுக் கேட்ட பொன் மானைப் பிடித்துக் கொடுக்க அவர் செல்லப் போகிறார் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமோ?

  amas32

  • ஆனந்தன் says:

   //இயற்கையின் தன்னிச்சையான செயலில் கூட அறநெறியைப் பார்க்கிறார்.//
   //மானைப் பிடித்துக் கொடுக்க அவர் செல்லப் போகிறார் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமோ?//

   I liked both these interpretations – excellent!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s