செங்கோடமர்ந்தவனே

கந்தா, அரன் தன் மைந்தா, விளங்கு

….கன்று ஆ முகுந்தன் மருகோனே,

கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட

….கண்டா, அரம்பை மணவாளா,

செந்தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு

….திண் தோள் நிரம்ப அணிவோனே,

திண் கோடரங்கள் எண்கோடு உறங்கும்

….செங்கோடு அமர்ந்த பெருமாளே!

நூல்: திருப்புகழ்

பாடியவர்: அருணகிரிநாதர்

கந்தா,

சிவபெருமானுடைய மகனே,

கண்ணனாகப் பிறந்து பசுக்களையும் கன்றுகளையும் மேய்த்த திருமாலின் மருமகனே,

முன்பு ஒரு நாள் நீ கோபம் கொண்டாய், நீ செலுத்திய வேலினால் கிரௌஞ்ச மலை பிளந்து வழி உண்டானது, அப்படிப்பட்ட பெருவீரத்தைக் கொண்டவனே,

தேவலோகப் பெண்ணான தெய்வயானையின் கணவனே,

சிவந்த மகரந்தங்கள் நிறைந்த பூக்களைத் தொகுத்துக் கட்டிய கடப்ப மாலையைத் திண்மையான தோள்முழுவதும் அணிகிறவனே,

வலிமையான குரங்குகளும் கரடிகளும் ஒன்றாக வாழ்கின்ற திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே!

துக்கடா

 • ’தினம் ஒரு பா’ வரிசையில் இடம் பெறும் பாடல்கள் அனைத்தையும் முடிந்தவரை பதம் பிரித்து, வாசித்தவுடன் புரியும்படி இடுவதுதான் வழக்கம். ஆனால் சில சமயங்களில் இப்படிப் பதம் பிரிப்பதாலேயே அந்தப் பாடலின் முழுச் சிறப்பு விளங்காமல் போய்விடுவதும் உண்டு. அதற்கு இந்தப் பாடல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு
 • உதாரணமாக, இந்தப் பாடலின் நான்காவது வரியைமட்டும் பதம் பிரிக்காமல் படித்துப் பாருங்கள்: ’திண்கோடரங்கள் எண்கோடுறங்கும் செங்கோடமர்ந்த பெருமாளே’ … படிக்கும்போதே பாடவேண்டும்போல் இருக்கிறதல்லவா? ’திண் கோடரங்கள் எண்கோடு உறங்கும் செங்கோடு அமர்ந்த பெருமாளே’ என்று பிரித்துவிட்டால் அர்த்தம் சுலபமாகப் புரிகிறது, ஆனால் சந்த அழகு போய்விடுகிறது 🙂

299/365

Advertisements
This entry was posted in அருணகிரிநாதர், சிவன், திருப்புகழ், திருமால், பக்தி, முருகன். Bookmark the permalink.

5 Responses to செங்கோடமர்ந்தவனே

 1. GiRa ஜிரா says:

  திருப்புகழ். முருகன் அருணகிரிக்கு அருளியதால் அருணகிரி நமக்கெல்லாம் அருளியது.

  வயல் வளர் பயிர் நாமென்றால், நாம் வளர உதவும் நீர் திருப்புகழ். நீர் தரும் வாய்க்கல் அருணகிரி. நீர் பெருக்கும் நதிமூலம் முருகன்.

  தாளத்தில் எத்தனை வகையுண்டோ அத்தனையையும் திருப்புகழில் காணலாம். அப்படியாப்பட்ட சந்தநயமுள்ள பாடல்களின் தொகுப்பு திருப்புகழ்.

  திருப்புகழ் யாராலும் தொகுக்கப்பட்டதல்ல. அதை நமக்குக் கொடுத்த அருணகிரியே அந்த நூலுக்குத் திருப்புகழ் என்று பெயரையும் சூட்டியிருக்கிறார்.

  திருப்புகழைப் பாடப்பாட அவருக்கே திருப்புகழின் சுவையை ருசித்து ருசித்து பாராட்டுகிறார். இதைக் கீழ்க்கண்ட வரிகளில் இருந்து அறியலாம்.

  பூர்வ பட்சிம தட்சிண உத்தர திக்குள பக்தர்கள் அற்புதம் எனவோதும்
  (கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு ஆகிய திக்குகளில் உள்ள பக்தர்கள் அற்புதம் எனப் புகழ்ந்து ஓதும்)

  சித்ரகவித்துவ சத்தமிகுத்த திருப்புகழை சிறிதடியேனும் செப்ப
  (அழகிய கவித்துவமும் சந்தநயமும் மிகுந்த திருப்புகழை சிறிதேனும் அடியேன் செப்ப)

  திருப்புகழை வாசிக்கக் கூடாது. பாட வேண்டும். திருப்புகழைப் படிப்பதை விடப் பாடுதல் மிக எளிது.

  ஈண்டு நான் மீண்டு வருகையில் திருப்புகழ் இட்ட நண்பர் நாகாவிற்கு நன்றி பல. 🙂

 2. GiRa ஜிரா says:

  சில பாடல்களுக்கு இவ்வளவு பொருள் சொன்னால் போதுமானது என்று இருக்கும். அந்த சரியான அளவிற்குப் பொருள் கூறியிருக்கிறார் நாகா. அதை மிகவும் ரசித்தேன். 🙂

  ஆகையால் சில குட்டிச் செய்திகள்

  திருச்செங்கோடு மிகப் பழைய முருகன் கோயில். “சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே” என்ற சிலப்பதிகார வரிகளில் அறியலாம்.

  திருச்சேங்கோட்டு முருகன் மேல் அருணகிரி பாடி இப்போது நமக்குக் கிடைத்திருப்பது இருபத்தியோரு திருப்புகழ் பாடல்கள்.

  கன்றா முகுந்தன் என்ற பெயரைக் கன்று ஆ முகுந்தன் என்று பிரிக்க வேண்டும். பொதுவாக பசுவும் கன்றும் மேய்க்கும் முகுந்தன் என்று பொருள் சொல்வார்கள். இன்னும் சிறிது ஆழமாகப் பார்க்கலாம். முகுந்தன் என்ற வடமொழிப் பெயருக்கு வீடுபேறு கொடுப்பவன் என்று பொருள். கன்றுக்கு ஆ போன்ற முகுந்தன் என்று பொருள் கொள்ள வேண்டும். கன்று தாய்ப்பசுவிடம் அடைவது போல உலக உயிர்களுக்கு அடைக்கலம் தரும் முகுந்தன் என்று விரித்துப் பொருள் கொள்ளவது சரியாக இருக்குமென்பது என் கருத்து.

 3. முருகா வருவாயா இன்று? பெயரில்லாமல் வந்தாலும் நலமே!
  amas32

 4. முருகனை அறிமுகப்படுத்தும் பாடலா இது? 🙂

  சிவபெருமானின் மைந்தன், திருமாலின் மருமகன், அழகு தெய்வானையின் மணாளன், கடப்ப மாலையை திண் தோள்களில் அணிந்த பெரு வீரன் என்று இந்தப் பாடலில் அருணகிரிநாதர் குமரன் பெருமையை பலவாக வருணிக்கிறார்!

  படிக்கும் நமக்குத் தான் பேரின்பம். அதுவும் வாய்விட்டுப் உரக்கப் படிப்பது மனதுக்கு இதமாக உள்ளது.

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s