கொம்பும் பழமும்

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்

சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!

யார் அஃது அறிந்திசினோரே? சாரல்

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்குஇவள்

உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே

நூல்: குறுந்தொகை (#18)

பாடியவர்: கபிலர்

சூழல்: குறிஞ்சித் திணை : காதலியை இரவில் சந்தித்துத் திரும்பினான் காதலன். அவனை வழிமறித்துத் தோழி சொன்னது

மலைச்சாரல் நாட்டைச் சேர்ந்தவனே,

உன்னுடைய மலையில் உள்ள பலாமரங்களின் வேர்களில் நிறைய பலாப்பழங்கள் கனிந்திருக்கின்றன. அவற்றைச் சுற்றி வளர்ந்த மூங்கில்கள் இயற்கையான வேலியாக அமைந்து பாதுகாக்கின்றன.

நீயே சொல், ஒரு பலா மரத்தின் சிறிய கொம்பில் பெரிய பழம் ஒன்று தொங்கினால் எப்படி இருக்கும்?

அதுபோலதான் உன் காதலியும். அவளுடைய உயிர் மிகச் சிறியது, அதனுள் நிறைந்திருக்கும் காதலோ மிக மிகப் பெரியது.

ஆகவே, இதற்குமேலும் தாமதம் செய்யாதே, சீக்கிரமாக அவளைத் திருமணம் செய்துகொள்ளும் வழியைப் பார்.

துக்கடா

 • சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்கினால், சீக்கிரத்தில் அந்தப் பழம் கனம் தாங்காமல் கீழே விழுந்து உடைந்து சிதறிவிடும், யாருக்கும் பயன்படாமல் வீணாகிவிடும். அதுபோல, காதலியின் மனத்தில் இருக்கும் அளவற்ற காதல் அவளுடைய உயிரைப் பறிப்பதற்குள், திருமணத்துக்கு ஏற்பாடு செய் என்று வலியுறுத்துகிறாள் தோழி, எத்தனை அழகான, பொருத்தமான (குறிஞ்சித் திணைக்குக் கச்சிதமாக ஒத்துப்போகின்ற) உவமை!
298/365
Advertisements
This entry was posted in அகம், உவமை நயம், கபிலர், காதல், குறிஞ்சி, குறுந்தொகை, தோழி, பெண்மொழி. Bookmark the permalink.

8 Responses to கொம்பும் பழமும்

 1. கபிலர் தமிழ் மொழின் ஆகா சிறந்த புலவர்களில் ஒருவர் என்பதற்கு இந்த பாடல் சான்று. “உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே” என்ற வரியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க பார்த்து தோற்றுப்போனேன். என்ன அருமையான வரி. ஒரு கவிதையை எப்படி முடிக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் இவ்வரிகள். கபிலர் வெகு சில வார்த்தைகளின் ஊடே மனதின் ஆழத்தை நமக்கு காண்பித்து விடுவார். குறுந்தொகையில் வரும் அவருடைய எல்லா கவிதைகளும் வைரம் போன்றவை.

 2. Rex Arul says:

  அருமையான பாடல். கடைசி வரி, அழகோ அழகு. அனால், “காமமோ பெரிதே” என்னும் மட்டும், “lust” என்ற அர்த்தத்தில் வருகிறதா, அல்லது “love” என்று நீங்கள் கூறிய அர்த்தத்தில் வருகிறதா என்று ஒரு சிறு யோசனை. பழங்காலத்தில் காமம் என்ற சொல்லுக்கு பொருள் “காதல்” என்று தான் அதிகம் இருந்தததோ?

  • என். சொக்கன் says:

   //பழங்காலத்தில் காமம் என்ற சொல்லுக்கு பொருள் “காதல்” என்று தான் அதிகம் இருந்தததோ?//

   எனக்குத் தெரிந்து, ஆமாம்

  • GiRa ஜிரா says:

   காதலா? காமமா?

   நல்ல கேள்விதான். இன்னைக்கு ரெண்டுக்கும் வெவ்வேற பொருள். ஆனா அன்னைக்கு ரெண்டும் ஒரே பொருள்.

   காதலும் காமமும் மன்ற நூல்களில் (தமிழ்ச் சங்கத்துக்கு மன்றம் என்பதே உண்மையான பெயர். சங்கம் பிற்காலப் பெயர்) பயன்படுத்தப்பட்டுள்ளன.

   காதலில் ரெண்டு வகைன்னு வைரமுத்து எழுதியிருக்கலாம். ஆனால் பழந்தமிழ்க் காதலில் ஒரு வகைதான்.

   அதைத்தான் மலரினும் மெல்லியது காமம் என்கிறார் வள்ளுவர்.

   இல்லறத்தார் திறம் உரைக்கும் போதும் காமம் சான்ற வாழ்க்கையும் இல்லறத்தார் பொறுப்பு என்று வெளிப்படையாகவே சொல்கிறார் தொல்காப்பியர் (காமம் சான்ற கடைக்கோட் காலை).

   காதலர்க்கு ஆவது காமம் என்ற கருத்து மன்ற நூல்களில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

   பொருந்தாக் காதலானான கைக்கிளையைப் பற்றிச் சொல்லும் போது தொல்காப்பியர் தெள்ளத்தெளிவாக காமம் என்ற சொல்லைக் காதலுக்குப் பயன்படுத்துகிறார்.
   ”காமம் சாலா இளமையோள்வயின்” என்ற வரிகளில் இதை அறியலாம்.

   காமம் இங்கு விருப்பு என்ற பொருளிலும் வரும். ஒருவரையொருவர் விரும்புவதுதானே காதல். அப்படி விருப்பமில்லாத ஒருவரை விரும்புவது பொருந்தாக் காமமாகிய கைக்கிளை.

   இன்னொரு பிரபல எடுத்துக்காட்டும் உண்டு.

   காமம் செப்பாது கண்டது மொழிமோ!

   ஆம். கொங்குதேர் வாழ்க்கை என்ற குறுந்தொகைப் பாடலில் வரும் வரிதான் அது.

   காமம் செப்பாது கண்டது மொழி என்றால் என்ன பொருள்?

   மலர்களிடத்தில் நிறைந்து கிடக்கும் மகரந்தத்தூள்களை ஆராய்ந்து (தேனை எடுப்பதற்காக) வாழும் தும்பியே, உன் விருப்பம் போல எதையும் சொல்லாமல், உண்மையாக உணர்ந்து கண்டதைக் கூறுவாயக!

   ஒருவரையொருவர் விரும்புவது காமம். காமம் கொண்டு விரும்புகின்றவர் காதலர்.

 3. GiRa ஜிரா says:

  சிறுகோட்டுப் பெரும்பழம்!

  குறிச்சு வெச்சுக்கோங்க. காதலை இவ்வளவு எளிமையா யாரும் சொன்னதில்லை.

  வரிவரியா எழுதிக் கம்பன் விளக்கியிருக்கலாம். ஆனா ரெண்டு சொற்களை மட்டும் வெச்சி கபிலர் சிக்சர் அடிச்சிட்டாரு.

  மலரினும் மெல்லியது காமம்னு வள்ளுவர் சொன்னாரு. உண்மைதான். ஆனால் அதை விடப் பொருத்தம் சிறுகோட்டுப் பெரும்பழம்!

  சின்னக் கிளை. அதுல பெரிய பழம். லேசாக் காத்தடிச்சாக் கூட கிளை தாங்காம ஆடும். காதலர் நிலையும் அப்படித்தான்.

  பெரிய பொறுப்பைச் சுமக்க முடியாம சுமக்கும் நிலை காதலருடையது.

  உள்ளத்துக்குள்ள ஒரு குறுகுறுப்பு இருக்கும். ஆனா யாரிடமும் சொல்ல முடியாது.
  ஒரு மிதப்பு இருந்துக்கிட்டே இருக்கும். ஆனா அதை வெளிக்காட்டிக்க முடியாது.
  ஆயிரம் எண்ண ஓட்டங்கள் மண்டைக்குள் இருக்கும். ஆனா எதையும் எழுதி வைக்க முடியாது. எழுதுனா அது உளறலா வரும். அதையும் தாண்டி ஒழுங்கா எழுதீட்டா அது கவிதை ஆயிரும். ஆனா எல்லாக் காதலர் எழுதுனதும் கவிதை ஆவதில்லை. பெரும்பாலும் உளறல் தான்.

  வாழ்க்கையில் காதலுணர்ச்சியே அனுபவித்திராத இளங்கோவடிகளே கோவலன் வழியாக நன்றாக உளறியிருக்காரே.

  மாசறு பொன்னே
  வலம்புரி முத்தே
  காசறு விரையே
  கரும்பே தேனே
  அரும் பெறல் பாவாய்
  ஆருயிர் மருந்தே
  மலையிடைப் பிறவா மணியே
  அலையிடைப் பிறவா அமிழ்தே
  யாழிடைப் பிறவா இசையே

  இந்த அளவுக்கு இளங்கோவடிகளையும் கோவலன் வாயிலாகப் புலம்ப வைத்தது அந்த “சிறுகோட்டுப் பெரும்பழம்”

  • Rex Arul says:

   பாடலா அல்லது அதற்கு உரிய ராகவனின் பின்னூட்டமா, எதில் சுவை அதிகம் என்று மனம் பேதளிக்கும் அளவுக்கு, ராகவன் போட்டு தாக்கி இருக்கீங்க. தொடரட்டும் தொண்டர்கட்கு உங்கள் திருப்பணி; தமிழ்த்தீனி.

  • ஆனந்தன் says:

   நுண்மையான காமத்தை உணமையாக உணர்ந்து விளக்கியிருக்கிறீர்கள்! நன்றி!

 4. நன்றி ஜிரா 🙂

  Love also hangs by a thread here 🙂

  குறிஞ்சி நிலத்தின் இயற்கை எழிலைப் பற்றிச் சொல்லும் போது வேர்பலாவைப் பற்றிப் பேசி, பின் அதனையே காதலியின் நிலைமைக்கு உவமையாகத் தோழி கூறுவது போல அமைத்திருப்பது கபிலரின் கற்பனைத் திறன்!

  நறுக்குத் தெரித்தாற் போல் தோழி சொல்ல வந்ததை சில வார்த்தைகளிலேயே சொல்லி முடித்து விடுகிறாள்.

  வேர்பலாவின் இனிப்பைப் போல சுவையான பாடல் 🙂

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s