ஆயிரம் அம்புகள் உண்டு

வருகிறானோ, வாரானோ

சுக்ரீவன் மனதை அறிந்துவாராய் தம்பீ!

*

திருகு சொன்னால் அவன் குலம் ஒன்றும் வெட்டுவேனோ

சித்திரத்தினும் குரங்கை வைத்து எழுத ஒட்டுவேனோ

*

தருணத்தில் உதவியை மறந்தானே மதம் கொண்டு

தண்ணீரும் முக்கால் பிழை பொறுக்கும் அல்லவோ கண்டு

மரபுக்குச் சற்றே இன்னம் பார்க்கவேணுமே பண்டு

வாலியைக் கொன்ற அம்புபோல் ஆயிரம் அம்புகள் உண்டு

*

கரத்தாலே அபயம் கொடுத்தவன் தன்னை வன்ன

கனக சிங்காதனத்தில் வைத்தோமே மின்ன

சரற்காலம் போனவுடன் வருகிறேன் என்று சொன்ன

சத்தியம் மறந்தவனைச் சித்திரவதை செய்தால் என்ன?

*

அரிய மரங்கள் தொளைத்த ராமன் வில்லை

அறிவாயோ, அறியாயோ என்று கேள் ஒரு சொல்லை

ஒரு மசகம் இவனை அடிப்பதற்கு என்ன சல்லை

உண்மையா எனக்கு அவன் சம்மதி தெரிய இல்லை

நூல்: இராம நாடகக் கீர்த்தனைகள் (கிஷ்கிந்தா காண்டம்)

பாடியவர்: அருணாசலக் கவிராயர்

சூழல்: முன்கதையில் காண்க

முன்கதை

சுக்ரீவன் இழந்த நாட்டை மீண்டும் பெற்றுத் தருகிறான் ராமன். பதிலுக்கு அவன் சீதையைத் தேடுவதில் உதவ வேண்டும் என்று அவர்களுக்குள் ஒரு Gentleman agreement.

ஆனால், சுக்ரீவன் அரசன் ஆனதும் இதை மறந்துவிடுகிறான். சுகபோகங்களில் மூழ்கித் திளைக்கிறான்.

கோபம் கொண்ட ராமன் தன் தம்பி லட்சுமணனை அழைக்கிறான். இந்தப் பாடலைப் பாடுகிறான்.

உரை

(இந்த எளிய பாடலுக்கு உரை அவசியமே இல்லை, எனினும் ஒரு சாத்திரத்துக்காக இது)

தம்பி,

சுக்ரீவனைச் சென்று பார். அவன் மனத்தை அறிந்து வா. நமக்கு உதவி செய்ய அவன் வருவானா, மாட்டானா, தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு வா!

அவன்மட்டும் என்னை ஏமாற்ற நினைத்தால், வானர குலத்தையே அழித்துவிடுவேன். இனிமேல் யாரும் ஓவியத்தில்கூட குரங்குகளை வரையமுடியாதபடி செய்துவிடுவேன்.

சரியான நேரத்தில் நாம் செய்த உதவியை சுக்ரீவன் மறந்துவிட்டான். போதை மயக்கத்தில் மூழ்கிவிட்டான்.

பரவாயில்லை, நாம் அவசரப்படவேண்டாம், ‘தண்ணீர்கூட மூன்று பிழை பொறுக்கும்’ என்று சொல்வார்கள். அதுபோல, நாமும் கொஞ்சம் அவனுக்கு அவகாசம் கொடுப்போம்.

அதன்பிறகும் அவன் திருந்தாவிட்டால்? பிரச்னையில்லை, அவன் அண்ணன் வாலியைக் கொன்ற அம்புபோல் நம்மிடம் ஆயிரம் அம்புகள் உள்ளன.

நம்மிடம் அபயம் என்று வந்தவனைச் சிங்காசனத்தில் உட்காரவைத்து அரசனாக்கினோம். ’மழைக்காலம் முடிந்தவுடன் வந்து உங்களுக்கு உதவி செய்கிறேன்’ என்றான். வரவில்லை. சத்தியம் மறந்த இவனை நாம் சித்திரவதை செய்தால் என்ன தப்பு?

யாராலும் அசைக்கமுடியாத மரங்களைத் துளைத்த ராமனின் வில்லை அவன் அறிவானா? அறியமாட்டானா? அவனையே நேரில் கேட்டு வா!

நான்மட்டும் கோபம் கொண்டால், இந்தச் சுக்ரீவன் ஒரு சின்னக் கொசு. அழிப்பதற்கு நெடுநேரம் ஆகாது. இதையும் அவனிடம் சொல்லி வா!

துக்கடா

 • ராமனின் கோபத்தில் நிறைய நியாயம் உண்டு. அதேசமயம் ஒற்றை வில்லில் சுக்ரீவனின் நாட்டை அழித்துவிடாமல் தம்பியைத் தூது அனுப்பி நீதி கேட்கிற, மறைமுகமாக எச்சரிக்கிற தன்மையும் வியக்கத்தக்கதாக இருக்கிறது
 • இந்தப் பாடலின்மூலம் நான் புதிதாகத் தெரிந்துகொண்ட விஷயங்கள் இரண்டு
 • 1. ’தண்ணீரும் முக்கால் பிழை பொறுக்கும்’ : இது ஒரு பழமொழி, நாம் தண்ணீரில் தவறி விழுந்தாலும், மூன்று முறை அது நம்மை மேலே தூக்கிவிட்டுக் காப்பாற்றுமாம், அதன்பிறகும் தவறு செய்தால்தான் (நான்காவதுமுறை) மூழ்கடிக்குமாம்!
 • 2. மசகம் = கொசு. ‘மஸ்கிட்டோ’ என்பது இதிலிருந்து வந்ததுதானா? அல்லது vice versa?
 • ராமன் சொன்னதைக் கேட்டு லட்சுமணன் கோபத்துடன் கிளம்பிச் செல்கிறான். அப்படியானால், இந்தப் பாட்டுக்கு அடுத்த பாடல் என்னவாக இருக்கும்?
 • வேறென்ன? ‘மதுவே உன்னால் கெட்டது இதுவே’ என்று சுக்ரீவன் புலம்பல்தான் 😉
 • இராமநாடகக் கீர்த்தனைகள் மிகச் சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவம். எளிய தமிழில் அதேசமயம் செறிவான கட்டமைப்புடன் ராமாயணம் முழுவதையும் நாடக வடிவில் படித்து ரசிக்கலாம். ஆர்வம் உள்ளவர்கள் ‘முல்லை நிலையம்’ (9, பாரதி நகர் முதல் தெரு, தி. நகர், சென்னை 17) வெளியிட்டுள்ள முழுப் பதிப்பை வாங்கலாம். விலை ரூ 150/-

296/365

Advertisements
This entry was posted in ஆண்மொழி, கதை கேளு கதை கேளு, நாடகம், ராமன். Bookmark the permalink.

9 Responses to ஆயிரம் அம்புகள் உண்டு

 1. மசகம்ன்கிற வார்த்தையே கொசுவை குறிப்பதல்லன்னு நான் நினைக்கேன். .! மசமசத்து போயி.. எந்தவொரு நிலைக்கும் உட்படாத ஒரு நிலையை.., ரெண்டுங்கெட்டான இருக்கிற நிலையை நாம் பேச்சுத்தமிழ் மசமசன்னு நிக்காதேன்னு சொல்லுவோம்..!
  இங்கே….. யார் பேச்சும் கேக்கும் நிலையில் இல்லாதவனான,
  கள் உண்டு என்றும் தன் நிலை மறந்து மசமசத்துபோயி நிற்பவனான
  சுக்ரீவனை ஒரே அடியில் வீழ்த்தி விடலாம் என்ற பொருளில் மசகன் என சொல்லியிருக்கலாம்.
  படிப்பறிவு இல்லாமல் பட்ட அறிவிலே பதிகிறேன். பொறுத்தருள்க தவறு இருப்பின்.

 2. அமைதியான இராமபிரானுக்குக் கோபம் வந்து பார்க்கிறோம். சமுத்திர ராஜனிடமும் பின் ஒரு சமயம் அவர் கோபம் கொள்வார். எப்பவுமே இலக்குவன் தான் சீறிக் கொண்டு கிளம்புவான், இவர் அமைதிப் படுத்துவார். இங்கே இராமனே கோபம் கொண்ட பின் லட்சுமணன் சுக்ரீவனிடம் செல்லும்போது அவன் நிலை எவ்வாறு இருக்கும் என்று நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.

  அந்த காலத்திலேயே கொசு இருந்திருக்கிறது போலும் 🙂

  படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் மிகவும் எளிமையாக உள்ளது. அருணாசலக் கவிராயருக்கு நன்றி! உங்களுக்கும் நன்றி திரு.சொக்கரே 🙂

  amas32

 3. GiRa ‏ @RagavanG
  Reply
  @Anandraaj04 இங்கு மசகம்=கொசு பொருத்தமானது. இசை மும்மூர்த்திகளில் மூத்தவர் அருணாச்சலக் கவிராயர். வடமொழி மிகப் புழங்கிய காலகட்டம்.
  ///////////////அப்புறமென்ன.., ஜிரா சொல்லியாச்சின்னா சரிதான். வட மொழி இல்லா இலக்கியம் ஏதாவது தமிழில் இருக்கா என்னா…! ;-))

  • ஆனந்தன் says:

   இலங்கையில் “கொசு” என்றால் mosquito அல்ல. அது drosophila எனப்படும் mosquito வை விடச் சிறிய fruit fly. அழுகிய பழங்களில் மொய்ப்பதைக் காணலாம். mosquito போல மனிதரைக் கடிக்காது. (mosquito வை, “நுளம்பு” என்றே கூறுவர்). இங்கே கவிராயர் கொசு என்று குறிப்பது mosquito வா அல்லது drosophila வா?

 4. rsubramani says:

  ஒரு சந்தேகம். “முக்கா முக்கா மூணு வாட்டி” என்பதற்கும் “தண்ணீரும் முக்கால் பிழை பொறுக்கும்” பழமொழிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

 5. rsubramani says:

  ஒரு சந்தேகம். ‘முக்கா முக்கா மூணு வாட்டி’க்கும் ‘தண்ணீரும் முக்கால் பிழை பொறுக்கும்’ பழமொழிக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

  • என். சொக்கன் says:

   இருக்கலாம் 🙂 எனக்குத் தெரியவில்லை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s