மூங்கிலுக்குள் ஈரம்

பணிவார் பிணி தீர்த்து அருளிப் பழைய அடியார்க்கு உன்

அணி ஆர் பாதம் கொடுத்தி, அதுவும் அரிது என்றால்

திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித்

தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய், பொய் தீர் மெய்யானே!

நூல்: திருவாசகம் (ஆனந்த பரவசம் #89)

பாடியவர்: மாணிக்க வாசகர்

பொய்யான மாயைகளை விலக்கி மெய்யான இன்பம் தருகிறவனே,

உன்னை வணங்குகிற அடியவர்களுக்கு உன்னுடைய அழகான திருவடியைக் கொடுத்து அருளுகிறாய், உனது திருவருள் மிகவும் அரிதானதுதான்!

ஆனால், என் மனமோ வலிமை பொருந்திய மூங்கிலைப் போன்றது. நான் செய்த பிழைகளும் நிறைய. எனக்கும் உன் கருணை கிடைக்குமா?

விரைவாக வா, என்னுடைய தவறுகளை உடைத்துப் பொடிப்பொடியாக்கிக் குளிர்ச்சியான உன்னுடைய பாதங்களைக் கொடுத்து அருள் செய்!

துக்கடா

  • ’கல் போன்ற மனம்’ என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். இங்கே மாணிக்கவாசகர் ‘மூங்கில் போன்ற மனம்’ என்கிறார். இதன் அர்த்தம், ’கொஞ்சமும் ஈரப்பசை (அன்பு) இல்லாத, கடினமான மனத்தைக் கொண்டவன் நான், எனக்கும் நீ அருள் செய்வாயா?’
  • நிச்சயம் செய்வான், ஒருவர் இப்படி இறைஞ்சிக் கேட்கும்போதே அந்த மூங்கிலுக்குள் ஈரம் கசியத் தொடங்கிவிடுகிறதே!

295/365

Advertisements
This entry was posted in சிவன், திருவாசகம், பக்தி, மாணிக்கவாசகர். Bookmark the permalink.

2 Responses to மூங்கிலுக்குள் ஈரம்

  1. மூங்கில் போன்ற மனம் என்று இப்பொழுதான் கேள்விப் படுகிறேன். காடுகளில் மூங்கில்கள் உராய்ந்து தீப் பற்றிக் கொள்ளும். ஈரப் பசையே சிறிதும் இல்லாததால் தான் இவ்வாறு நடைபெறுகிறது.

    அந்த காய்ந்த மூங்கிலுக்குள்ளும் குளிர்ந்த சுனை உருவாக இறைவன் ஒருவனால் தான் முடியும்!

    திரு.சொக்கர் விளக்கத்தில் இருந்து, பாடலின் கடைசி வரியிலிருந்து பொருளைத் தெரிந்துக் கொண்டு அதற்கு முன் வரிகளுக்குச் செல்ல வேண்டும் என்று தெரிகிறது.

    பொய் தீர் மெய்யானே! என்ற மாணிக்கவாசகர் இறைவனைக் கூப்பிடுவது மிகவும் அருமையாக உள்ளது.

    நம் பாவங்களைப் போக்கி, தவறானச் சிந்தனையை விலக்கி, நல்லெண்ணத்தை விதைக்க இறைவன் அருள் செய்ய வேண்டும். இதையே நாம் வேண்டி விரும்பினால் இறைவன் எப்படி இல்லை என்று சொல்ல முடியும்? அவனுடைய பொற் பாதங்கள் மனதில் குளிர்ச்சியான இரக்கத்தை ஏற்படுத்தும். சுட்டு தகிக்கும் பூமியை மழை குளிர்விப்பது போலே கடினமான நம் மனதை அவன் அருள் குளிர்விக்கும்.

    amas32

  2. ஆனந்தன் says:

    //ஒருவர் இப்படி இறைஞ்சிக் கேட்கும்போதே அந்த மூங்கிலுக்குள் ஈரம் கசியத் தொடங்கிவிடுகிறதே //

    சிறப்பான பார்வை!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s