காட்டுவழி போற பையா, கவலைப்படாதே!

கல் ஊற்று ஈண்டல கயன் அற, வாங்கி

இரும் பிணத் தடக் கை நீட்டி, நீர் நொண்டு

பெரும் கை யானை பிடி எதிர் ஓடும்

கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை

வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து

பாண் யாழ் கடைய, வாங்கி, பாங்கர்

நெடுநிலை யாஅம் ஏறும் தொழில

பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு

காமர் பொருள் பிணிப் போகிய

நாம் வெம் காதலர் சென்ற ஆறே

நூல்: நற்றிணை (#186)

பாடியவர்: தெரியவில்லை

சூழல்: பாலைத்திணை : பொருள் சேர்ப்பதற்காகக் காதலியைப் பிரிந்து சென்றான் காதலன். அதனால் வருந்திய காதலி சொன்னது

வறட்சியான மலைக்காடு. அங்கே கல்லுக்கு நடுவே ஒரு நீரூற்று. அதில் கொஞ்சம்போல் தண்ணீர் சேர்ந்துள்ளது. ஆண் யானை தன்னுடைய நீண்ட துதிக்கையை நீட்டி அந்தத் தண்ணீரை முகந்துகொள்கிறது. தொலைவில் உள்ள தன் காதலியாகிய பெண் யானையை நோக்கி ஓடுகிறது, அதன் தாகத்தைத் தணிக்கிறது.

அந்தக் காட்டு வழியில் ஒரு பாணன் யாழ் வாசிக்கிறான். அதைக் கேட்டபடி, வேனிற்காலத்தில் நிறம் மாறும் ஓதிமுதுபோத்து (பச்சோந்தி போன்ற ஒரு விலங்கு) யாமரத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட கடினமான பாதையின்வழியேதான் என் காதலன் சென்றிருக்கிறான். தனக்குமட்டும் என்றில்லாது, எல்லாருக்கும் நல்லது செய்யும் நெஞ்சம் கொண்டவன் அவன்.

ஆகவே, அவன் வேண்டியமட்டும் பொருள் சேர்த்துக்கொண்டு திரும்பி வரட்டும், நான் என் மனத்தைத் தேற்றிக்கொண்டு காத்திருப்பேன்!

துக்கடா

 • ’நீரூற்றில் தண்ணீர் முகந்துகொண்டு வந்து தன் காதலிக்குத் தரும் யானையைப்போல, எங்கள் திருமண வாழ்க்கைக்குத் தேவையான பொருளைத் திரட்டிக்கொண்டு என் காதலன் திரும்பி வருவான்’ என்பது இந்தப் பாடல் சொல்லும் மறைமுகக் கருத்து, ‘இறைச்சிப் பொருள்’ என்பார்கள்

293/365

Advertisements
This entry was posted in அகம், ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், உவமை நயம், காதல், நற்றிணை, பாலை, பிரிவு, பெண்மொழி. Bookmark the permalink.

6 Responses to காட்டுவழி போற பையா, கவலைப்படாதே!

 1. Karthik says:

  அருமையான பாடல்..சொக்கருக்கு நன்றிகள் பல!! பாடல் படிக்கும் பொழுதே ஓரளவு பொருள் புரிந்தது.. நம்ம அனானி முருகனுக்கும் நன்றி 😉
  ஒரு சந்தேகம், மெய்யாலுமே யானையும் பிடியும் இந்த மாதிரி தண்ணீர் எல்லாம் பகிர்ந்து காதலிக்குமா??

  • என். சொக்கன் says:

   🙂 நிச்சயம், விலங்குகளுக்குள்ளும் காதல் உண்டு ஓய் :>

  • என். சொக்கன் says:

   பாலை நிலத்தில் பிடிக்காக யாமரப் பட்டையை உரித்துக் கொடுத்துத் தாகம் தணிக்கும் ஆண் யானையெல்லாம் உண்டு

 2. காதலியைப் பிரிந்து பொருளீட்டத் தொலை தூரம் செல்வது இன்றும் நடைபெறும் ஒன்றே. சில சமயங்களில் காதலி திருமணத்துக்கும் வளமான குடும்ப வாழ்விற்கும் பொருளீட்டத் தொலைதூரம் செல்வதும் இக்காலத்தில் சகஜமாகிவிட்டது. எல்லாம் காலத்தின் கோலம்!

  வறட்சியான மலைக்காட்டின் நடுவே தேங்கியிருக்கும் தண்ணீரை முகந்து கொண்டு ஆண் யானை தொலைவில் இருக்கும் பெண் யானைக்குக் கொடுப்பதை விளக்கும் போதே கவிஞர் தலைவன் எவ்வளவு பாடுபட்டு காதலிக்காக்ப் பொருள் தேடப் போயிருக்கிறான் என்பதை கண் முன்னே கொண்டு நிறுத்துகிறார்.

  காதலியும் மனதை திடப் படுத்திக் கொண்டு காதலுனுக்காகக் காத்து நிற்கிறாள்.

  amas32

 3. தந்தை தாய் சுற்றமும் சகலமும் பிரிந்து தாரம் சகோதரன் தம்மையும் பிரிந்து (?) இன்றும் அரேபியா (பாலைவனத்தில்) பொருளீட்டச் சென்றுள்ள தம் காதல் கணவர் பற்றி காதல் மனைவிகள் இவ்வாறுதான் தம்மைத் தேற்றிக்கொள்கின்றனரோ?

 4. என்ன ஒரு மனவலி.. இந்தச் சமூகம்தான் பொருள் தேடும் நிமித்தம் சென்றவனை என்ன பாடு படுத்துகிறது… குடும்பத்தைப் பிரிந்து வேலை நிமித்தமாக வெளிநாடு சென்று பொருள் தேடும் ஆண்களுக்கும்,அவர்தம் மனைவியரும் அடையும் மனவலிதான் எவ்வளவு அதிகம்?? வலியினை தோய்த்தெடுத்த வரிகள்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s