சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய
’கொடுங்கோற் கோவலர் பின் நின்று உய்த்தர
இன்னே வருகுவர் தாயர்’ என்போள்
நூல்: முல்லைப் பாட்டு (வரிகள் 12 முதல் 15வரை)
பாடியவர்: காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார்
இளங்கன்று. அதனைச் சிறிய தாம்புக்கயிறில் கட்டிவைத்திருக்கிறார்கள்.
பாவம், அந்தக் கன்றுக்குப் பசி. துயரத்தோடு அங்கும் இங்கும் சுற்றிவருகிறது.
இதைப் பார்த்த இடையர் குலப் பெண் ஒருத்திக்குப் பரிதாபம் தோன்றுகிறது. குளிரினால் கைகளைக் கட்டியபடி நிற்கிறவள் அந்தக் கன்றை அணைத்துச் சமாதானப்படுத்துகிறாள்.
‘கவலைப்படாதே கன்றே, கையில் கோலை உடைய இடையர்கள் பசுக்களைப் பின்னாலிருந்து விரட்டியபடி வருகிறார்கள், சீக்கிரமாக உன்னுடைய தாய்ப்பசுவும் வந்துவிடும், நீ பால் குடித்துப் பசியாறலாம்!’
துக்கடா
- ’பத்துப்பாட்டு’ வகையைச் சேர்ந்த நூல்கள் அனைத்தும் சில / பல நூறு வரிகளைக் கொண்டவை. அவற்றுள் ஒன்றுதான் இந்த ‘முல்லைப்பாட்டு’
- முல்லைத் திணை என்பது, காதலனைப் பிரிந்த காதலியின் துயரத்தையும் அவன் திரும்பி வருகிற நாளை எண்ணி அவள் காத்திருப்பதையும் சொல்வது. ’முல்லைப்பாட்டு’ அதனை நன்கு விரிவாகக் காட்சிப்படுத்துகிறது. இந்த நான்கு வரிகளில் சொல்லப்படும் ‘தாய்ப்பசு வந்து பசியைத் தீர்க்கக் காத்திருக்கும் கன்று’கூட, அதற்கான ஒரு குறியீடுதான்
- பசுக்களைத் தங்களது குடும்ப உறுப்பினர்களாகவே மதிக்கிறவர்கள் ஆயர் குலத்தினர், அதனால்தான் கன்றுக்குப் பசிப்பது அந்தப் பெண்ணுக்குத் தெரிகிறது, அதற்காக மனம் வருந்துகிறாள், ‘அம்மா புல் மேய்ஞ்சுட்டுச் சீக்கிரம் வந்துடுவாங்க, கவலைப்படாதே’ என்று ஆறுதல் சொல்கிறாள்
- ’முல்லைப்பாட்டு’ முழுவதையும் எளிய உரையுடன் இங்கே வாசிக்கலாம் : http://learnsangamtamil.com/mullaipattu/
292/365
Advertisements
திரு. சொக்கரே ’முல்லைப்பாட்டு’ முழுவதையும் எளிய உரையுடன் வாசிக்க சுட்டி கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
இந்தப் பாடலில் கன்றுக்கு ஆறுதல் சொல்லும் ஆயர் குலப் பெண் “தோழி” இல்லையா?
இங்கே பரிதவிக்கும் கன்றும் இன்னும் வந்து சேராத பசுவும் காதலில் வாடுபவர்களின் மனநிலையினை பிரதிபலிப்பதாகக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.
நம் கவிஞர்கள் தான் எவ்வாறெல்லாம் உவமைகள் மூலம் உணர்ச்சிகளை உணர்த்துகிறார்கள்!!
amas32
கன்றுக் குட்டியோடெல்லாம் தோழி பேசமாட்டாள் போலிருக்கிறது – எப்பவாச்சும் காதலன் வந்துட்டான்னாத்தான் இவ வந்துடறா…!
கன்றுக்கு ஆறுதல் சொல்வது ஆயர் குலப் பெண்.
இது கோயிலுக்கு வணங்க வந்த வயதான பெண்கள் காதில் விழுகிறது.
இப்படி நல்ல பெண்கள் வாயிலிருந்து வந்த நற்சொல்லை ஒரு நல்ல சகுனமாகக் கொண்டு அந்த வயதான பெண்கள் “உன்னுடைய தலைவனும் இதுபோல் விரைவில் வருவான் ” என்று தலைவிக்குக் கூறுகிறார்கள்.
இதை, சொக்கர் ஐயா தந்த இணைப்பிலிருந்து அறிந்து கொண்டேன்.
சங்கப் பாடல்களில் ஒவ்வொரு பாடலினதும் CONTEXT ஐ அறிந்து கொள்ளக் கொஞ்சம் ZOOM OUT பண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.