இப்பவே போகணுமா?

கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப

எறி திரை ஓதம் தரல் ஆனாதே

துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின்

இரும் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப

வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே

கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி

வடி மணி நெடும் தேர் பூண ஏவாது

ஏந்து எழில் மழைக்கண் இவள் குறையாகச்

சேந்தனை சென்மோ, பெருநீர்ச் சேர்ப்ப!

இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி

வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர்

ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல் என

கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும்

குவவு மணல் நெடும் கோட்டு ஆங்கண்

உவக்காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே!

நூல்: அகநானூறு (#350)

பாடியவர்: சேந்தன் கண்ணனார்

சூழல்: நெய்தல் திணை. காதலன் காதலியைச் சந்திக்க வந்தான். சிறிது நேரம் கழித்துப் புறப்படத் தயாரனான். அவனைப் பிரிவதை எண்ணி வருந்தினாள் காதலி. இதைப் புரிந்துகொண்ட தோழி காதலனிடம் சொல்வது

பெரிய கடற்கரையைக் கொண்ட தலைவா,

நெய்தல் மலரும் குவளை மலரும் ஏராளமான சிறிய பூங்கொத்துகளாக மலர்ந்து உப்பங்கழிக்கு அழகு சேர்க்கின்றன. கடலில் அலைகள் ஓயவில்லை. அங்கே உள்ள கருப்பான ஈரச்சேற்றில் நீண்ட கொம்பைக் கொண்ட நண்டுகள் வெளிப்படுகின்றன.

கடல் பரப்பில் எங்கும் சுறா மீன்கள் அலைகின்றன. ஆனால், பெரிய படகைக் கொண்ட மீனவர்கள் அவற்றைப் பிடிக்கவில்லை, வலம்புரி முத்தினை மூழ்கி எடுக்கச் செல்கிறார்கள். அவர்கள் திரும்பி வந்து படகிலிருந்து இறங்குகின்ற மணல் பொருந்திய கரைதான், எங்களுடைய சிறிய, நல்ல ஊர்.

இந்த ஊர், இப்போது அமைதியாகச் சத்தமில்லாமல் இருக்கிறது. ஆனால், கடலில் முத்தெடுக்கச் சென்ற எங்கள் மீனவர்கள் திரும்பி வரும்போது, ஊரெங்கும் கொண்டாட்டம்தான், ஒலி கொண்ட சங்குகள் ‘கல்’ என்று சத்தமிடுவதுபோன்ற ஆரவாரத்துடன் மீனவப் பெண்கள் அவர்களை வரவேற்பார்கள்.

நீ பயணம் செய்த நீண்ட தேரை ஓட்டி வந்த, திரண்ட காலைக் கொண்ட கோவேறு கழுதைகள் இப்போது அவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன, நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை மீண்டும் இந்தத் தேரின் வளைந்த நுகத்தில் பூட்டும்படி உன்னுடைய தேர்ப்பாகனுக்கு ஆணை இடாதே, இங்கிருந்து கிளம்பிவிடாதே,

என்ன அவசரம்? அழகுள்ள இந்தப் பெண்ணின் கோரிக்கையை மதித்து, இன்று இரவு எங்கள் விருந்தினராக இந்த ஊரிலேயே தங்கிவிட்டுச் செல்லலாமே!

துக்கடா

 • ’மீனவக் கிராமம், ஆண்கள் எல்லாம் முத்தெடுக்கச் சென்றுவிட்டார்கள், அவர்கள் இல்லாததால் பெண்கள் ரிலாக்ஸாக ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்கள், இந்த நேரத்தில் உங்களை யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள், இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இரு’ என்று நுணுக்கமான விவரங்களுடன் காதலனுக்குச் சொல்கிறாள் தோழி. கூடவே ‘அவர்கள் திரும்பி வந்துவிட்டபிறகு, இந்த ஊர்முழுக்கச் சத்தம் கூடிவிடும், நீங்கள் ரகசியமாகக் காதலிக்கமுடியாது’ என்கிற மிரட்டலையும்!

291/365

Advertisements
This entry was posted in அகநானூறு, அகம், கடற்கரை, கடல், காதல், தோழி, நெய்தல், பெண்மொழி. Bookmark the permalink.

6 Responses to இப்பவே போகணுமா?

 1. anonymous says:

  அருஞ் சொற் பொருள்:

  கழி = உப்பங்கழி (backwater salt pan)
  எறி திரை ஓதம் = கடல் அலை ஓசை
  திரை = அலை; ஓதம் = கடல் சத்தம்

  கவை மருப்பின் = கவர்த்த மருப்பு, நண்டின் இரண்டு முன்கொம்பு
  அலவன் = ஆண் நண்டு
  இரும் சேற்று ஈர் அளை அலவன் = சேற்றின் ஈரத்தை காலால் அளைக்கும் நண்டு

  கொடு நுகம் நுழைந்த = yoke of a cart
  கணைக் கால் அத்திரி = கழுதைக்கு காலில் பலம்:))
  அத்திரி=கழுதை; கணைக்கால்=பலமான கால்
  ———

  ஏந்து-எழில், மழைக்கண் = இவ கண்ணிலே மழை பெய்து உள்ளதே!
  நீ இன்னிக்கி இரவு அவசியம் போகணுமா?

  பெருநீர்ச் சேர்ப்ப = place where land & sea joins – சேர்ப்பதால் சேர்ப்பு;
  சேர்ப்பில் வாழ்வதால் = சேர்ப்பன்
  ———

  சேந்தனை சென்மோ = சேந்து & செல் = வந்து வந்து செல்
  கிணற்றில் தண்ணீர் “சேந்து” = குடம்/ வாளி வந்து வந்து செல்வதால் = “சேந்து”

  சேந்து = செந்து = செந்தூர்
  உயிர்கள், பிறவிக்கடலில் வந்து வந்து செல்வதால் = செந்து!
  செந்து அடங்கும் ஊர் = செந்தூர்!
  திரு + செந்து + ஊர் = திருச்செந்தூர்

  • anonymous says:

   சேந்தமங்கலம் = சேந்து = வந்து வந்து செல்லும் ஒரு மங்கலம்! (பாடிவீடு)

   இந்த ஆசிரியர் பெயரும் = சேந்தங் கண்ணனார்!
   சேந்தன்+கண்ணன் = முருகனும் + கண்ணனும் ஒருங்கே உள்ளவர்:)

   • rAguC says:

    சேந்தமங்கலம் — இப்படி ஒரு ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டு !

 2. anonymous says:

  வலம் + புரி
  புரி = curl வலம் = right
  curling towards right = வலம்புரி

  வான் திமில் பரதவர் = பெரும் படகு பரதவர்
  *பரதவர் = படகு/ கப்பல் வலிப்பதில் நிபுணர்
  *மீனவர் = மீன் பிடிப்பதில் நிபுணர்
  (நீரில் பரத்தலால் = பரத்தவர் = பரதவர்)

  பணிலம் ஆர்ப்ப = சங்கு ஒலிக்க
  கல் என கலி கெழு கொற்கை = பல ஒலிகள் எழும் கொற்கைத் துறைமுகம்
  ———————

  குவவு மணல் நெடும் கோட்டு = high sand dunes
  உவக்காண் தோன்றும் = அவன், இவன், உவன்! உவன் = meaning he is here only, but not right in front!
  எம் சிறு நல் ஊரே = small but good village

  this is my last comment from jijiga city, ethiopia, africa:) tata:))

  • நீரில் பரத்தல் ? பறத்தல் ? எதுசரி? பரத்தல் எனில் நீரை பரத்துவதா? (அப்பட்டியே பரப்பி விடு- ராமநாதபுர மாவட்ட வழக்குச்சொல்) இந்த பொருளில் என்றால் நீரை பரப்பி ஏகுபவர் என்று பொருளில் வருமா?

 3. தோழி எப்பொழுதும் தலைவன் தலைவியைவிட அதி புத்திசாலியாகவே திகழ்கிறாள்! வாழ்க அவள் புத்தி கூர்மை 🙂

  இந்தப் பாடலில் கடற்கரை ஓரம் வாழும் மீனவ மக்களின் வாழ்க்கை சித்திரம் அழகாக வரையப்பட்டிருக்கு. ஓயாத அலைகள் கொண்ட கடலின் அழகு, சுறா மீன்கள் வாழும் கடலில் முத்துக் குளித்தல், நெய்தல் நில மலர்கள், ஈரச் சேற்றில் ஓடும் நண்டுகள், கடலைச் சார்ந்து வாழ்பவர்களின் ஆரவார வாழ்க்கை ஆகிய அனைத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர் சேந்தன் கண்ணனார்.

  வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் ஏதோ காரணத்திற்காக வேறு ஊர் சென்றுள்ளனர் என்று காதலனுக்குத் தகவல் சொல்லி அனுப்பும் காதலியைப் போல, தோழி இங்கே முத்துக் குளிக்கச் சென்றவர்கள் திரும்பி வருவதற்குள் நேரத்தை உங்கள் மகிழ்ச்சிக்குப் பயன் படுத்திக் கொள்ளுங்கள் என்று யோசனை கூறுகிறாள்!

  பிறகு எப்படி காதலனுக்குக் காதலியை பிரிந்து போக மனம் வரும்? தம்பி உடையார் படைக்கு அஞ்சார் என்பது போல தோழி உடையார் காதலுக்கு அஞ்சார் 🙂

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s