ஒரு சொல்

இரவலனே, உனக்கு இல்லாதது என்ன? இதயம் என்ன?

பரவு உணவு ஏது? சுவை அற்றது என்ன? சொல்பான்மை என்ன?

தர உரை செய்திட என்றான். அதற்கு ஒன்றும் சான்றிலன் யான்

வர ‘திருவேங்கடநாதா’ என்றேன், பொன் வழங்கினானே!

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: இராமச்சந்திரக் கவிராயர்

சூழல்: ‘முன்கதை’யில் காண்க

முன்கதை

அந்தக் காலத்தில் ‘திருவேங்கடநாதன்’ என்ற ஒரு வள்ளல். பல கவிஞர்களை ஆதரித்துவந்தார். ஆகவே தினந்தோறும் அவரைத் தேடி எண்ணற்ற புலவர்கள் வருவார்கள், பரிசு பெற்றுத் திரும்புவார்கள்.

ஒருநாள், அவருடைய மாளிகைக்கு இராமச்சந்திரக் கவிராயர் வந்திருந்தார். அவரை வரவேற்று உட்காரவைத்தார் திருவேங்கடநாதன். நலம் விசாரித்தார். உணவு அளித்தார். அதன்பிறகு அரட்டை தொடங்கியது.

அப்போது, இராமச்சந்திரக் கவிராயரின் முகம் கொஞ்சம் வாடியிருந்தது. அதைப் பார்த்த திருவேங்கடநாதன் கேட்ட கேள்விகள் இவை:

1. புலவரே, உங்களிடம் இல்லாதது என்ன?

2. அதனால் உங்கள் இதயம் என்ன நிலையை அடைந்துள்ளது?

3. இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

4. உங்கள் வாழ்க்கை சுவையற்றுப்போய்விட்டதுபோல் தெரிகிறதே, அது ஏன்?

5. இப்போது என்னிடம் எதைக் கேட்கப்போகிறீர்கள்?

இந்த ஐந்து கேள்விகளுக்கும் இராமச்சந்திரக் கவிராயர் ஒரே ஒரு பதில்தான் சொன்னார். அதுவும் ஒரே ஒரு சொல்: ‘திருவேங்கடநாதா’!

இதைக் கேட்ட திருவேங்கடநாதனுக்கு ஆரம்பத்தில் ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் யோசித்தவன் எல்லாம் விளங்கியதுபோல் தலையாட்டினான். புலவருக்குப் பொன்னும் பொருளும் அள்ளித் தந்தான்.

ஏன்?

திருவேங்கடநாதனின் கேள்விகளுக்கு ராமச்சந்திரக் கவிராயரின் ’ஒரு சொல்’ பதில் பொருந்தாததுபோல் தோன்றினாலும், உண்மையில் அது ஓர் அழகான வார்த்தை விளையாட்டு:

1. புலவரே, உங்களிடம் இல்லாதது என்ன?

‘திரு’ (செல்வம்)

2. அதனால் உங்கள் இதயம் என்ன நிலையை அடைந்துள்ளது?

‘வேம்’ (வேகும், மனம் வாடும்)

3. இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

‘கடம்’ (கடன் வாங்கிச் சமாளிக்கிறேன்)

4. உங்கள் வாழ்க்கை சுவையற்றுப்போய்விட்டதுபோல் தெரிகிறதே, அது ஏன்?

‘நா’ (நாவுக்குச் சுவையாகச் சாப்பிட வழியில்லையே, அதனால்தான்)

5. இப்போது என்னிடம் எதைக் கேட்கப்போகிறீர்கள்?

’தா’ (ஏதாவது கொடு, எங்களைக் காப்பாற்று)

ஆக, திரு + வேம் + கடம் + நா + தா = ‘திருவேங்கடநாதா’. அந்த வள்ளலின் பெயரும் அதுவே, அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலும் அதுவே!

உரை

திருவேங்கடநாதன் என்னிடம் பல கேள்விகளைக் கேட்டான்:

‘இரவலனே, உன்னிடம் இல்லாதது என்ன? அதனால் உன் இதயம் அடைந்துள்ள நிலைமை என்ன? நீ உணவுக்கு என்ன செய்கிறாய்? உன் வாழ்க்கை சுவையற்றது என்ன? என்னிடம் நீ கேட்க வந்த விஷயம் என்ன?’

இந்தக் கேள்விகள் எதற்கும் நான் பதில் சொல்லவில்லை. வெறுமனே ‘திருவேங்கடநாதா’ என்று பதில் சொன்னேன். புரிந்துகொண்டு எனக்குப் பொன் வழங்கி ஆதரித்தான்!

துக்கடா

 • இந்தக் கதை நிஜத்தில் அப்படியே நடந்திருக்க வாய்ப்புகள் குறைவு. ‘திருவேங்கடநாதன்’ என்ற வள்ளலின் பெயரை வைத்து விளையாட்டாகப் புலவர் இந்தக் கவிதையை எழுதியிருக்கவேண்டும். ஆனாலும் என்ன அழகான கற்பனை!

290/365

Advertisements
This entry was posted in தனிப்பாடல், வள்ளல், வார்த்தை விளையாட்டு. Bookmark the permalink.

4 Responses to ஒரு சொல்

 1. எழுத்து/வார்த்தை திறமைக்காக மட்டும் எழுதப்பட்டிருந்தால் மகிழ்ச்சி! எனகென்னவோ புலவர்களின் திறமை மேல் ஒரு பொறாமை. காலம் கடந்து நிற்கும் படைப்பல்லவா அவர்கள் படைப்பது! அவர்கள் பொருளுக்காக, “தா” என்று இரப்பது மனதை வாட்டுகிறது!

  வள்ளலின் கொடை வன்மை காட்டும் இன்னுமொரு புறநானூறு பாடல் (101), அவ்வை எழுதியது (365பாவில் ஏற்கனவே பார்த்தோமா?! தெரியவில்லை):

  ஒரு நாள் செல்லலம்; இரு நாள் செல்லலம்;
  பல நாள் பயின்று, பலரொடு செல்லினும்,
  தலை நாள் போன்ற விருப்பினன்மாதோ
  இழை அணி யானை இயல் தேர் அஞ்சி

  அதியமான்; பரிசில் பெறூஉம் காலம்
  நீட்டினும், நீட்டாதுஆயினும், களிறு தன்
  கோட்டு இடை வைத்த கவளம் போலக்
  கையகத்தது; அது பொய் ஆகாதே;
  அருந்த ஏமாந்த நெஞ்சம்!

  சுருக் உரை: எவ்வளவு முறை சென்றாலும், அதியமான் முதல் நாள் உபசரித்ததை போல உபசரிப்பான். பரிசில் பெரும் காலம் கூடும், குறையும். ஆனால் அது கையகத்தது; பொய் ஆகாது!

  அதே மன்னன் பரிசில் காலம் தாழ்த்த போது, வாயில்காப்போனை பார்த்து, புலவர்க்கேயான பெருமையுடன் :

  எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே

  என்றது.

  • என். சொக்கன் says:

   எழுதியது பிற்காலக் கவிஞர் அல்லவா, ‘தா’ என்று நேரடியாகக் கேட்பது சகஜம்தான்

 2. கவிச் சக்கரவர்த்தி கம்பனே சடையப்ப வள்ளலை கம்ப ராமாயணத்தில் பாராட்டி எழுதி தன் நன்றிக் கடனைத் தீர்த்துக் கொண்டார். கவிஞர்கள் அந்தக் காலத்தில் வேறு விதமாக பொருளீட்ட முடியாததால் அரசர்களும் தமிழைப் போற்றும் வள்ளல் பெருமக்களும் தான் இவர்களை வாழ வைத்துக் கொண்டிருந்தனர்.

  திரு.சொக்கரே, உங்கள் விளக்க உரை அருமை. திருவேங்கடநாதன் என்ற பெயரில் இவ்வளவு ஒளிந்துகொண்டு இருக்கிறதா? கவிஞருக்கு அருமையான கற்பனை 🙂

  amas32

 3. இதற்கு நம் பெருமை மிகு “அனானிமசு” முருகர் வந்து விளக்கம் தர வேண்டும் ! இன்னும் சுவைபட சில குட்டி கதைதருவார் என நம்புகிறேன்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s