எங்கே அந்தத் தேர்?

இந்திர விழவில் பூவின் அன்ன

புன் தலைப் பேடை வரி நிழல் அகவும்

இவ்வூர் மங்கையர்த் தொகுத்து இனி

எவ்வூர் நின்றன்று மகிழ்ந நின் தேரே?

நூல்: ஐங்குறுநூறு (மருதம், கிழத்தி கூற்றுப் பத்து) #62

பாடியவர்: ஓரம்போகியார்

சூழல்: மருதத் திணை : காதலியை ஏமாற்றிவிட்டுப் பரத்தையருடன் ஊர் சுற்றித் திரும்பினான் காதலன். அவனைக் கேலி செய்கிறாள் காதலி

மகிழ்நனே,

மலரைப் போலச் சிவந்த தலையை உடைய பெண் மயில், தரையில் வரிவரியாக விழுந்திருக்கின்ற நிழலில் அமர்ந்து அகவுகின்ற ஊர் இது.

இங்கே இந்திர விழா நடந்தபோது உன்னுடைய தேர்முழுவதும் பெண்கள் கூட்டம். அவர்கள் எல்லாரையும் தொகுத்து அழைத்துப்போய் ஆனந்தமாக விளையாடிவிட்டு நிதானமாகத் திரும்பிவந்திருக்கிறாய்.

அது சரி, உன்னுடைய அந்தத் தேர் இப்போது எங்கே? இந்த ஊர்ப் பெண்களெல்லாம் அலுத்துப்போய்விட்டார்கள் என்று வேறு ஊருக்கு ஆள் திரட்ட அனுப்பிவைத்திருக்கிறாயா?

துக்கடா

 • நாக்கைப் பிடுங்கிக்கொள்வதுபோல் திட்டுவதற்குக் கெட்ட வார்த்தைகளெல்லாம் வேண்டாம், நல்ல தமிழிலேயே ‘நாக் அவுட்’ செய்யலாம் என்பதற்கு இந்தப் பாட்டு ஒரு சாட்சி :>

287/365

Advertisements
This entry was posted in அகம், ஐங்குறுநூறு, காதல், கிண்டல், பெண்மொழி, மருதம். Bookmark the permalink.

23 Responses to எங்கே அந்தத் தேர்?

 1. சுப. இராமனாதன் says:

  “மகிழ்நனே” என்பதில் சொல்லின் நடுவே ‘ந’ வருவது சரியா? இல்லை என்பதால் தான் இராமநாதன் இராமனாதன் ஆனார். 🙂 தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும்.

  • anonymous says:

   :)))

   னல முன் றன வும்; ணள முன் டணவும்
   ஆகும் தந க்கள் ஆயுங் காலே!!!

   புரிஞ்சிருக்கும் ன்னு நினைக்கிறேன்!:))

   • சுப. இராமனாதன் says:

    ஒன்னுமே புரியாலீங்கோவ். வொய் திஸ் கொலவெறி?

    அனானிமசு அண்ணே,
    கொலவெறி தவிர்க்கவும்
    தமிழில் மொழி பெயர்க்கவும்
    தகுந்த எடுத்துக் காட்டுக்களை
    தகுந்தாற்போல் எடுத்துக்காட்டவும்

    இல்லைன்னா, இதுக்கு சொக்கர் தான் ஒரு நாள் உரை எழுத வேண்டும். அங்கங்கே மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுக்க அனுமதி தருகிறேன். 🙂

   • anonymous says:

    :))
    ஒங்க பேரு = இராமன் + நாதன் என்றால், இராமனாதன் சரி!
    ஒங்க பேரு = இராம + நாதன் என்றால், இராமநாதனே சரி!

    சுவாமிநாதன், குருநாதன் இவையே சரி!
    சுவாமினாதன், குருனாதன் அல்ல!
    ——————

    நடுவில் “ந” வருவது பிழையே அன்று! யாரு அப்படிச் சொன்னது? இணையத்தில் யாராச்சும் சொன்னாங்களா?:))

    இனி யாரு சொன்னாலும், ஏன்-ன்னு சொல்லச் சொல்லுங்க! தரவு கேளுங்க! அப்பத் தான் இந்த menace நிக்கும்:)
    இல்லீன்னா, நல்ல சொற்களையும், அல்ல சொற்கள் ன்னு, மொழியை விட்டே துரத்திருவாங்க போல இருக்கே!

    = இயக்குநர், விடுநர், பெறுநர், நடத்துநர்; இதுல எல்லாம் நடுவில் “ந” வருதே!
    = நர், ஞர்! இவை பண்பு (அ) தொழிற்பெயர் விகுதிகள்!
    = மகிழ்நர்; வல்லுநர், பொருநர் & கலைஞர், வலைஞர், கை-வினை-ஞர் etc
    ——————-

   • சுப. இராமநாதன் says:

    கலக்கிப்புட்டீய போங்க! 🙂

    ரொம்ப நன்றி தலைவா. ஆமா, ஒண்ணும் தெரியாத நாங்க-ல்லாம் பேர போட்டு பதிவு செய்யயில (அதுவும் தப்பான எழுத்தோடு!), நீங்க ஏன் அனானிமசு போர்வையோட அவையடக்கமா இருக்கீக? அட, சொக்கரே பேர போட்டுத்தான் எழுதுறாப்ல! எந்தவூரு அனானிமசு நீங்க?

    ***சும்மா, லோலாலாலாயி சொக்கன், தவறாகக் கொள்ள வேண்டாம்***

   • anonymous says:

    ஒங்க பேருக்கு வருவோமா?

    * நன்+நூலார் = நன்னூலார்
    * ஆனா, தம்+நூலார் = தம்நூலார்!

    ஏன்?-ன்னு கேளுங்க! தரவு கேளுங்க!
    அப்ப தான் menace நிக்கும்:))
    இல்லீன்னா வாழ்த்துக்கள் தவறு-ன்னு சொல்லி, மொழியை விட்டே போயீரும்:((

    இது தான் தொல்காப்பிய (அ) நன்னூல் விதி:
    னல முன் றன வும்; ணள முன் டணவும்
    ஆகும் தந க்கள் ஆயுங் காலே!!!

    —————

    அதாச்சும்…..
    * நிலை மொழியின் இறுதியில் = ன ல => eg: தென்
    * வரு மொழி முதலில் = த ந => eg: நாடு
    * அப்போ => ந, ன வாய்த் திரியும்! => eg: தென் + நாடு = தென்னாடு

    நன் + நூல் = நன்னூல்
    தம் + நூல் = தம்நூல் தான்! (ஏன்னா நிலை மொழியில் ன் வந்தா மட்டுமே இவ்விதி! இங்கே ம் இருக்கு)

    same applies to your name!
    * இராமன்+நாதன் = இராமனாதன்!
    * குகன்+நாதன் = குகனாதன்
    (எப்ப பார்த்தாலும் முருகனை இழுக்கறான் ன்னு முணுமுணுக்காதீக:))

    ஆனா சில பேரு….
    குகன்/ இராமன் ன்னு பெயர்ச்சொல்லாய்க் கருதாமல்,
    குக/ இராம ன்னு மந்திரமாய்க் கருதுவார்கள்!
    அப்போ….
    * குக + நாதன் = குகநாதன் (ஏன்னா நிலைமொழியில் ன் வரலை)
    * இராம + நாதன் = இராமநாதன்!
    * ஆனா நன் + நாதன் க்கு இந்த specialty இல்ல! = நன்னாதன், மன்னாதன் etc
    —————

    நீங்க ஒங்க பேரை மந்திரமாக் கருதினா = இராமநாதன்
    வெறும் பேராய்க் கருதினால் = இராமனாதன்!

    ஓக்கேவா?:)))) என்னவாக் கருதப் போறீங்க ஒங்க பேரை?:)

   • anonymous says:

    same with chokkanathan:))
    சொக்கநாதனா? சொக்கனாதனா??

    சொக்கம் ஒரு வகைக் கூத்து! (அ) அழகு!
    கூத்துக்கு நாதன் => சொக்கம் + நாதன் = சொக்கநாதன்!

    ஆனா….
    சொக்கன் என்ற எழுத்தாளுருக்கே ஒரு நாதன் (தலைவன்) இருந்தால்??
    அப்போ, அவரு => சொக்கன் + நாதன் = சொக்கனாதன்

    gotcha??:))

 2. அன்ன புன் தலைப் பேடை வரி நிழல் அகவும்
  இந்த பாடலில் குயிலையும், மர நிழலையும் எதற்கான உவமை?

  முன்பு படித்த ஓரம்போகியார் உவமை ஒன்று:
  நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்

  பூவை தலைவிக்கும், சிறு மீனை பரத்தைக்கும் பாட்டின் ஊடே குறிப்பாக்கியது.

  • anonymous says:

   நல்ல கேள்வி!
   ஏன்னா பாட்டு அப்படி! நாலே வரி….ஆனா நுணுக்க மிகுதி!

   பாட்டை நேரடியா வாசிக்க முயன்றீர்கள் போல் இருக்கு! அதான் இப்படியொரு கேள்வி தோனுச்சோ?

  • anonymous says:

   //மலரைப் போன்ற தலையை உடைய பெண் குயில்//
   ன்னு directஆ உவமை எடுத்துக்கக் கூடாது! மலர் முகம் ன்னு சொல்லலாம்! மலர் தலை ன்னு சொல்வாங்களா?:)

   being small paa, poetic density is very high in sanga tamizh!
   so have to reconcile & read…..into depths

   புன் தலைப் பேடை வரி நிழல் அகவும் இவ்வூர் மங்கையர்(ஐ)
   இந்திர விழவில் பூவின் அன்ன தொகுத்து
   இனி எவ்வூர் நின்றன்று மகிழ்ந நின் தேரே?

   ன்னு கொண்டு கூட்டிப் படிச்சா…..உவமையின்பம் விளங்கும்!
   இப்போ பூ எதற்கு உவமை? நிழலில் அகவும் மயில் யாருக்கு உவமை? ன்னு விளங்குது அல்லவா?:)

 3. anonymous says:

  சொக்கருக்கு என்ன அவசரமோ, மயிலைக் குயிலாக்கிட்டாரு:))

  ஆனா இது பெண்மயில்!
  அதுவும், அச்சம் – மடம் – நாணம் – பயிர்ப்பு இல்லாத ஒரு பெண் மயில்!:)

 4. anonymous says:

  முதற்கண்….இந்தப் பாட்டை எப்படிப் படிக்கணும் ன்னு சும்மாத் தெரிஞ்சதைச் சொல்லுறேன்!
  அதேபடிக்கு, நேரடியா நீங்களே வாசிச்சிப் பாருங்க! செம்மையா இருக்கும்:)) சின்ன பாட்டு தானே! ஐங் + “குறு” + நூறு! எல்லாமே குறும் பா!
  ————–

  முதலில்…..
  பாட்டு எழுதியது = ஓரம்போகியார் -ன்னு பார்த்தவுடனே, கொஞ்சம் சாஞ்சிக்கிட்டு, மிதப்பாத் தான் படிக்கணும்!:)
  அப்போ தான் பாட்டில் எங்கேயெல்லாம் இன்பத்தை ஒளிச்சி ஒளிச்சி வச்சிருக்காரு-ன்னு தெரியும்!:)

  முன்பே சொல்லி இருக்கேன்!
  ஓரம் போதல் = பரத்தையர் வீட்டுக்கு போதல்!
  ஓரம் போ = This is kinda codeword in sangam days:))

  அவர் இயற்பெயர் தெரியாததால், ஓரம்போகியார் ன்னே வச்சிட்டாங்க:)) அதுக்காக அவரும் ஓரம் போனாரா ன்னு எல்லாம் கேக்காதீக! zilch! no clue!

  பரத்தை = இல் பரத்தையாவும் இருக்கலாம்! நயப்புப் பரத்தையாவும் இருக்கலாம்! பாட்டில் வருவதை வச்சித் தான் தெரிஞ்சிக்க முடியும்!
  இவ்ளோ தான் முன்னுரை! நேரடியாப் பாட்டுக்குப் போலாமா?

 5. anonymous says:

  இந்திர விழவில் பூவின் அன்ன

  = இந்திர விழாவில் பூ எக்கச் சக்கமாக் குவியும்! (valentines day)
  = அந்தப் பூக்களின் மிகுதி அப்படி!
  = பலப்பல வாசனை, பலப்பல நிறம் etc etc etc (no dbl triple meanings plz:)
  = ஆனா, எதுவும் தொடுத்து இருக்காது! All freelance!
  —————————–

  புன் தலைப் பேடை வரி நிழல் அகவும்

  பேடை = பெண் பறவை
  அகவும் = மயில் தான் அகவும்! எனவே பெண் மயில்!
  புன் தலை = சின்ன தலை!
  வரி நிழல் அகவும் = வரியைப் போன்ற நிழலில் நின்னுக்கிட்டு…..குரல் குடுக்கும்
  —————————–

  மயிலுக்கு உடல், கழுத்து, (தோகை) ன்னு எல்லாமே பெருசு! ஆனா தலை மட்டும் சிறிசு! அதுலயும் தலையின் மேல் உள்ள கொண்டையை விலக்கிப் பார்த்தால், சிறுசோ சிறுசு!
  ஏன்டா முருகா? உன் வாகனத்துக்கும் உன்னைப் போலவே தலையில ஒன்னும் இல்லீயாடா? ஏய்ய்ய்ய்ய்ய்ய் அடிக்காதே…மேல கைய வைச்ச….பிச்சி…:)))

  • anonymous says:

   இனி மேல் தான் மேட்டரே!:)))
   வரி நிழல் அகவும்! = அது என்ன “வரி” நிழல்??

   ஆற்றோரமா/ கடலோரமா மணல்! விழாவுக்காகத் = திறந்த வெளி!
   ரொம்ப மரம் கிடையாது!
   அப்போ நிழல் எப்படி இருக்கும்? = வரி போல மெல்லீசா இருக்காம்! ஒத்தை வரி/ ஒத்தைக் கோடு இழுத்து விட்டாப் போல! = “வரி நிழல்”

   என்னவொரு காட்சிப்படுத்தல்….ஒத்தை வரில!!
   ————–

   ஏன்? நிழல் இருக்குற இடமாப் பாத்து விழா கொண்டாடலாமே? = Nopes! இது காதலர் விழா! காமவேள் விழா!
   இங்கே பலரும் வருவாங்க, போவாங்க! எல்லாமே பளிச் ன்னு தெரியணும்! மரங்கள் இருந்தா மறைக்கும்! “சைட்” அடிக்கச் சிரமமா இருக்கும்:)) = so big & open space!

   அப்படியான ஒரு “வரி” நிழலில்…..
   ஆண் மயில் தானே பொதுவா அகவும்? பேடையை நோக்கி?
   ஆனா….இங்கே பெண்மயில் அகவுது!:)))

   இதான் பெண்ணுரிமை! விழாக்காலப் பெண்ணுரிமை!!

  • anonymous says:

   பொதுவா, சங்க காலத்தில், ஒரு பொது இடத்தில்….பல பேர் முன்னிலையில்….
   ஒரு பெண்…ஆணை அழைக்கும் செயலில் இறங்க மாட்டாள்! அது பரத்தையே ஆனாலும், சாடை மாடையாத் தான்! நடனம் அது இது-ன்னு…ஆனா ஆணை நோக்கிக் “குரல் குடுப்பது” கிடையாது :))

   ஆனா….இந்திர விழாவில், இப்படிப் பெண்ணுரிமை உண்டு!:)
   காமவேள் விழா-ல்ல? அத்தனை பேரும் இன்பத்துக்காகவே திரண்டிருக்க….இதுல யாரென்ன தப்பா நினைச்சிக்கப் போறாங்க?:)) அதான்!
   —————-

   பாட்டை நேராவே வாசிங்க….

   * புன் தலைப் பேடை, வரி நிழல் அகவும் = பெண் மயிலே, திறந்த வெளியில், குரல் குடுத்துக் கூப்பிடும்
   * இவ்வூர் மங்கையர் = உள்ளூர்ப் பொண்ணுங்க!

   (அவர்களை)
   * இந்திர விழவில் பூவின் அன்ன = குவிஞ்சிக் கிடக்கும் இந்திர விழா “உதிரி” பூக்களைப் போல…
   * தொகுத்து = எல்லாப் பூவும் தொகுத்துட்டடா, டேய்!

   * மகிழ்ந = டேய், மகிழ்நா….
   * இனி எவ்வூர் நின்றன்று நின் தேரே? = இனி எந்த ஊரில் போய் நிக்கும் உன் தேரு?

   the word “தொகுத்து” is very important
   பல பூக்களைத் தொகுத்தாச்சு!
   தொகுத்த பூவைத் தொடுக்கணும்-ல்ல?
   = அதுக்குத் தான், எந்த ஊரில், எந்த வீட்டில் போயி நிக்கும் உன் தேரு??? ன்னு கேக்குறா!!:)

 6. anonymous says:

  //நாக்கைப் பிடுங்கிக்கொள்வதுபோல் திட்டுவதற்குக் கெட்ட வார்த்தைகளெல்லாம் வேண்டாம், நல்ல தமிழிலேயே ‘நாக் அவுட்’ செய்யலாம் என்பதற்கு….//

  போங்க சொக்கரே! பசங்க “சைக்காலஜியே” ஒங்களுக்குத் தெரியல! நீங்க ரொம்ப நல்லவரு:)))

  இதுக்கெல்லாமா அசருவானுங்க பசங்க??? :)))
  திட்டினாலே அசராதவனுங்க…..இந்தப் பொண்ணு, பாவம், இம்புட்டு decentஆ….மனமொடிஞ்சிப் போய் கேக்குது….

  உன் தேரு இனி எங்கே போயி நிக்கப் போகுதோ? = இனி எவ்வூர் நின்றன்று நின் தேரே?

  “ஆனா….நிக்கும்! ஒரு நாள் கண்டிப்பா நிக்கும்! இந்தப் “புன்தலை” பொண்ணுங்க பத்தி ஒனக்குத் தெரியத் தான் போகுது! அப்போ நிக்கும்டா மகிழ்நா”
  -ன்னு கிட்டத்தட்ட சாபமே விடுறா இந்தக் காதலி……முருகா! :((

  • anonymous says:

   கன்னி விடியல் கணைக்கால் ஆம்பல்
   தாமரை போல மலரும் ஊர
   பேணாளோ நின் பெண்டு?
   யான் தன் அடக்கவும், தான் அடங்காளே!!!

   முருகா!

 7. balaraman says:

  //அவனைக் கேலி செய்கிறாள் காதலி// சங்க காலத்தில் கேலி செய்தார்கள். சங்க அறுக்கும் இந்தக் காலத்தில் காலி செய்துவிடுவார்கள்! ;>

  Anonymous’ஆக வந்து விளையாடும் முருகனின் திருவிளையாடலைப் பார்த்து அதிர்ந்து போய் நிற்கிறேன்.

  Anonymous முருகருக்கு ஒரு கேள்வி ‘வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா?’ விளக்கத்துடன் விளக்குக. 🙂

 8. vellakaran says:

  Anonymous அண்ணே.. நீங்கள் எங்கிருந்தாலும் உடனடியாக உங்கள் twitter handle ஐ தெரிவிக்கவும்.. இரகசியம் காக்கப்படும்.. என் அப்பாவுக்கு அடுத்து தமிழையும் இலக்கியத்தையும் (இலக்கனத்தையும்) தரம் குறையாமல் நயம்பட எடுதுரைத்தீர் பிரபோ.. எனது ராச்சியத்தில் ஒரு பகுதியை தந்துவிடுகிறேன்.. (அந்த twitter handle மட்டும்..) நான் -> @catchvp (Drunken Monkey)

  • rAguC says:

   திரு.முருகு என டிவிட்டரில் கேட்டு தெரிந்து கொள்ளவும்

 9. என். சொக்கன் says:

  அனானிமஸ் ஐயா,

  நான் மயிலைக் குயிலாக்கியது பெரும் தவறு. மன்னிக்கவும். சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்திவிட்டேன் 🙂

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

 10. ஊர் மேய்பவனாக இருக்கிறான் கணவன். என்ன செய்வாள் மனைவி? காதலானாக இருந்தாலாவது கழட்டி விட்டுவிடலாம்.

  நீ பண்ணுகிற அக்கிரமம் எல்லாம் தெரியும், பலப் பெண்களோடு கூடிக் குலாவி பின்னும் ஆசை தீராமல் இன்னும் எத்தனை பெண்களோடு சல்லாபிக்கப் போகிறாய் என்று கேள்வி கேட்கிறாள். கேட்க உரிமை உடையவள் கேட்கிறாள்.

  மனைவிக்கு உண்மை தெரிந்து விட்டதே என்று நாணி கணவன் திருந்தினால் உண்டு. இல்லையென்றால்?

  பெண் லோலனாக இருப்பவனுக்கு அவன் ஊரிலேயே இந்திர விழா கொண்டாடப் பட்டால் மகிழ்ச்சிக்குக் கேட்கவேண்டுமா? விழா முடிந்த பிறகும் விழா மூடிலேயே வேறு பெண்களைத் தேடி வண்டியை அனுப்பியுள்ளான் போலும்!

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s