பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா, உன் சேவடி செவ்வித் திருக்காப்பு!
*
அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவு ஆர் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே!
நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார்கள் அருளிச் செயல்
பாடியவர்: பெரியாழ்வார்
இறைவா,
நீ பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்க! பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்க!
மல்லர்களை அடக்கிய பலமான தோள்களை உடைய மணிவண்ணா, உன் சிவந்த திருவடியின் அழகு என்றைக்கும் குறைவில்லாதபடி காப்பாற்றப்படட்டும்.
அழகாக உன்னுடைய வலது பக்க மார்பில் குடிகொண்டிருக்கும் எங்கள் தாயாரும் பல்லாண்டு வாழட்டும்!
ஒளிமயமான உன்னுடைய அழகு மேனியின் வலது கையை அலங்கரிக்கிற சுடர் ஆழியும் பல்லாண்டு வாழட்டும்!
யுத்தங்களில் புகுந்து முழங்குகின்ற பெருமையுடைய உன் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு வாழட்டும்!
இந்தப் பல்லாண்டுகளும், உன்னோடும் உன்னுடைய அடியார்களோடும் நாங்கள் பிரிவின்றிச் சேர்ந்திருக்கவேண்டும்.
துக்கடா
- வழக்கமாக எல்லாரும் இறைவன் முன்னால் வணங்கி நின்று நீண்ட வாழ்வுக்காக வேண்டுவார்கள். ஆனால் இங்கே பெரியாழ்வார் இறைவனையே ’பல ஆண்டுகள் வாழ்க’ என்று வாழ்த்துகிறார். அதோடு நிறுத்தவில்லை, தாயார், சங்கு, சக்கரம் என்று சகலத்துக்கும் பல்லாண்டு பாடுகிறார். அந்தப் பல்லாண்டுகளும் நாங்களும் உன்னைச் சேர்ந்து, உன்னை நினைத்தபடி வாழவேண்டும் என்கிறார்
- அது சரி, இறைவனை நாம் வாழ்த்தலாமா? தப்பில்லையோ?
- பக்தியின் முதிர்ச்சி நிலைகளில் ஒன்றுதான் இது. கடவுள்மேல் அளவற்ற பாசம் ஏற்பட்டுவிட்டால், இந்த உலகத்தில் அவருக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்துவிடுமோ என்கிற அச்சம் (அர்த்தமற்றதாக இருப்பினும்) ஏற்படுகிறது, அப்படி எதுவும் நடக்காமல் அவர் பல்லாண்டு வாழட்டும் என்று உருகிப் பாடத் தோன்றுகிறது பெரியாழ்வாருக்கு!
286/365
இன்று பவழ விழா காணும் சொக்கரின் தாய்-தந்தையருக்கு, பல்லாண்டு பல்லாண்டு என வாழ்த்துக்கள்! நிலம்பட என் வணக்கங்கள்!!
அப்படியா, என் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
amas32
இந்தப் புண்ணியரைப் பெற்ற அந்தப் புண்ணியருக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகுக.
இன்றைய பாடல் மிக மிகச் சிறப்பான பாடல்!
எங்கூருல, கல்யாணம் ஆன புதுப்பொண்ணும் புள்ளையும், நிலம்பட விழுந்து, ஒட்டுமொத்தமா சபையை வணங்குவாங்க!
அப்போ, இந்தப் பாட்டைத் தான் பல பெரியவங்க பாடி, அட்சதை போடுவாங்க!!
அந்தக் காட்சியே கண்கொள்ளாக் காட்சியா இருக்கும்!
எங்க ஆயாவும் (பாட்டியும்)…பல்லாண்டு பல்லாண்டு-ன்னு பாடுறது எனக்கு ஞாபகம் வந்துருச்சி!:) வாழ்க!!
மேலும்….
இந்தப் பாட்டு தான் “திவ்ய பிரபந்தம்” என்று சொல்லப்படும் ஆழ்வார் “அருளிச்செயலின்” முதல் பாட்டு!
பாடுனது = தோழி கோதையின் அப்பாவான பெரியாழ்வார்:)
————
ஆழ்வார்கள்-ன்னு பார்த்தா, முதலாழ்வார்கள் தான் முதலில் தோன்றியவர்கள்!
அதிலும் பொய்கையாழ்வார், திருக்கோயிலூர் இடைகழியில் பாடுன
= “வையம் தகளியாய்”
என்கிற பாடல் தான் முதன்முதல் ஆழ்வார் பாசுரம்! = “வையம்”-ன்னு உலகத்தை முன்னிறுத்தித் துவங்கும்!
ஆனா….எல்லா ஆழ்வார் பாசுரங்களையும் திவ்ய பிரபந்தம் ன்னு தொகுத்து வைக்கும் போது…Orderஐ மாத்திட்டாங்க!
முதலில் தோன்றிய பொய்கை ஆழ்வாரை முதலில் வைக்காமல்,
பெரியாழ்வாரின் இந்தப் பாடலையே முதலில் வைத்தார்கள்! = பல்லாண்டு பல்லாண்டு!
ஏன்-ன்னு தெரியுமா?:)
இன்னிக்கும் ஆலயங்களில் ஆழ்வார்கள் தமிழ் ஓதப்படும் போது,
* பல்லாண்டு பல்லாண்டு என்றே துவங்கி
* பல்லாண்டு பல்லாண்டு என்றே முடியும்!
வேதங்களுக்கு ஓம் என்னுமாப் போலே, அருளிச் செயல்களுக்குப் பல்லாண்டு!
மாயோனாகிய திருமால்! = சங்கத் தமிழ்க் கடவுள்!
அலங்காரம் எல்லாம் பண்ணி Readyஆ வச்சிருப்பாங்க! ஊர்வலம் துவங்கணும்! கருட வாகனம்-ன்னு வச்சிக்கோங்களேன்!
தேங்காய் ஒடைச்சி, கருப்பூரம் எல்லாம் காட்டி….போலாம்பா ரைட் ரைட் ன்னாலும் பெருமாள் கெளம்ப மாட்டாரு! = ஏன்? :)))
தமிழை ஓதினால் மட்டுமே இறைவன் கிளம்புவான்!
* ஒருத்தர்…பல்லாண்டு பல்லாண்டு என்று தொடங்க….
* மொத்த குழுவும் பல்லாயிரத்தாண்டு என முழங்க…
* பல கோடி நூறாயிரம் ன்னு ஓதும் ஒலி….கேட்ட பின்னரே இறைவன் அசைவான்!
——————
மேள தாளங்கள் முழங்கினாலும், அதை விடத் தூக்கலா, தமிழ்ப் பாசுரம் ஒலிக்கும்! பெருங் குழு!
தமிழைத் தாண்டி இறைவன் போகவே மாட்டான்! போகக் கூடாது ன்னு Rule :))
* தமிழ் ஓதுபவர்கள் முன்னே செல்லணும்
* இறைவனே ஆனாலும், தமிழைத் தான் பின் தொடரணும்
* இறைவனுக்கும் பின்னாடி, வால் பிடிச்சிக்கிட்டு, சொற்பமாச் சில பேரு வடமொழி வேதம் சொல்லிக்கிட்டு வரலாம்!
இதான் காட்சி!
இதைப் பாத்துட்டு…..நம்ம அருணகிரியே அசந்து போயி…
* “பச்சைத் தமிழின் பின் சென்ற பசுங் கொண்டலே” என்றும்
* “வண் தமிழ் பயில்வார்கள் பின்னே திரிகின்றவன்” ன்னும் திருமாலைப் பாடி அருளினார்!:))
தென்தமிழின் சுவை அறியா முருடருக்கு முதுகு காட்டி,
இன்தமிழின் பின்னால் இறைவன் செல்லக் கடவது
-ன்னு இப்படி வகுத்துக் குடுத்தவர் = இராமானுசர்!
அந்த விதியை (கோயில் ஒழுகு) இன்று வரை எவரும் மீறத் துணிவதில்லை!:))))
————–
வேடிக்கை என்னா-ன்னா…
திருமலை-திருப்பதி, அகோபிலம், கேரளத்து திருவண்பரிசாரம்…இப்படி அயல் மாநில ஆலயங்களில் கூட….
இந்த “விதியை” யாரும் மீறத் துணியவில்லை!:)
தெலுங்கு, மலையாளம் ன்னு இன்றைய காலகட்டத்தில் மாநில எல்லைகள் மாறிவிட்டாலும்…
இந்தத் தமிழ் “விதியை”, இது வரை யாரும் மீறத் துணியவில்லை!:)
திவ்யப்பிரபந்தம் = அருளிச்செயல்
இந்த ஓலைகளை அப்பவே ஒன்னாத் திரட்டி, வகுத்து வைச்சவர் = நாதமுனிகள்! அவர் எப்படி வகுத்தார்-ன்னா….
* முதலில் இசை
* அப்பறம் இயல்
இசைப் பாக்கள் எல்லாம் முதலில்! கடேசீல இயற் பாக்கள் (வெண்பா முதலியன)
ஏன் இப்படி? = ஏன்னா பா + சுரம்!
பாவும், சுரமும் சேர்ந்தே இருக்கணும்! = அதுவே பாசுரம்!
தமிழ்ப் பண்ணிசை, சுரம் பிரியக் கூடாது!
——————–
சைவத் திருமுறைகள்,
முதலாம் திருமுறை (சம்பந்தர்), நான்காம் திருமுறை (அப்பர்), ஏழாம் திருமுறை (சுந்தரர்)…….ன்னு ஒரு sequence இருக்குல்ல?
அதே போலத் தான், அருளிச்செயல்= இது இன்னொரு வகை sequence….
திவ்யப்பிரபந்தம் = அருளிச்செயல்
————————————————
1. முதலாயிரம்
1) பெரியாழ்வார் = திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி
2) ஆண்டாள் = திருப்பாவை, நாச்சியார் திருமொழி
3) குலசேகரன் = பெருமாள் திருமொழி
4) திருமழிசை = திருச்சந்த விருத்தம்
5) தொண்டரடிப்பொடி = திருப்பள்ளி எழுச்சி, திருமாலை
6) திருப்பாணாழ்வார் = அமலனாதிப் பிரான்
7) மதுரகவிகள் = கண்ணி நுண் சிறுத்தாம்பு
2. இரண்டாம் ஆயிரம்
* திருமங்கை = பெரிய திருமொழி, திருக் குறுந் தாண்டகம், திரு நெடுந் தாண்டகம்
3. மூன்றாம் ஆயிரம் = இயற்பா
1) பொய்கை ஆழ்வார் = முதல் திருவந்தாதி
2) பூதத்தாழ்வார் = 2ஆம் திருவந்தாதி
3) பேயாழ்வார் = 3ஆம் திருவந்தாதி
4) திருமழிசை = நான்முகன் திருவந்தாதி
5) நம்மாழ்வார் = திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி
6) திருமங்கை = திருவெழுக் கூற்றிருக்கை, பெரிய திரு மடல், சிறிய திரு மடல்
4. நான்காம் ஆயிரம் = தமிழ் வேதம் / திராவிட வேதம்
*** நம்மாழ்வார் = திருவாய்மொழி
திவ்யப்பிரபந்தம் = அருளிச்செயல்
————————————————–
1. முதலாயிரம்
1) பெரியாழ்வார் = திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி
2) ஆண்டாள் = திருப்பாவை, நாச்சியார் திருமொழி
3) குலசேகரன் = பெருமாள் திருமொழி
4) திருமழிசை = திருச்சந்த விருத்தம்
—-
5) தொண்டரடிப்பொடி = திருப்பள்ளி எழுச்சி, திருமாலை
6) திருப்பாணாழ்வார் = அமலனாதிப் பிரான்
7) மதுரகவிகள் = கண்ணி நுண் சிறுத்தாம்பு
2. இரண்டாம் ஆயிரம்
* திருமங்கை = பெரிய திருமொழி, திருக் குறுந் தாண்டகம், திரு நெடுந் தாண்டகம்
3. மூன்றாம் ஆயிரம் = இயற்பா
1) பொய்கை ஆழ்வார் = முதல் திருவந்தாதி
2) பூதத்தாழ்வார் = 2ஆம் திருவந்தாதி
3) பேயாழ்வார் = 3ஆம் திருவந்தாதி
4) திருமழிசை = நான்முகன் திருவந்தாதி
—-
5) நம்மாழ்வார் = திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி
6) திருமங்கை = திருவெழுக் கூற்றிருக்கை, பெரிய திரு மடல், சிறிய திரு மடல்
4. நான்காம் ஆயிரம் = தமிழ் வேதம் / திராவிட வேதம்
*** நம்மாழ்வார் = திருவாய்மொழி
இதே போல்,
சைவத் திருமுறைகள்:
———————————-
1, 2 , 3 = சம்பந்தர் = திருக்கடைக்காப்பு
4, 5, 6 =அப்பர் = தேவாரம்
7 = சுந்தரர் = திருப்பாட்டு
8 = மாணிக்கவாசகர் = திருவாசகம் / திருக்கோவையார்
9 = திருவிசைப்பா/ திருப்பல்லாண்டு (சேந்தனார், புருடோத்தம நம்பி, கண்டராதித்தர் etc etc)
10= திருமூலர் = திருமந்திரம்
11 = பிரபந்தம் (காரைக்கால் அம்மையார் (எ) புனிதா, நம்பியாண்டார் நம்பி etc etc)
12 = சேக்கிழார் = பெரிய புராணம்
இந்த அனானிக்கு வேற வேலையில்லை! முன்னுரை போதும்; பாட்டுக்கு வருவோம்:))))))
//இறைவனை நாம் வாழ்த்தலாமா? தப்பில்லையோ?//
அதானே!
இறைவன் மேல் செருப்புக் கால் வச்சி, தண்ணி துப்பி, மாமிசம் படைக்கலாமோ? தப்பில்லையோ? :)))
அதே! கண்ணப்பனின் உள்ளம் போலவே = பெரியாழ்வாருக்கும்!
பொய் கூடச் சொல்லுவாரு! இறைவனைக் காப்பாத்தவாம்!:) யாரு யாரைக் காப்பாற்றுவது? :))
பாசுரத்தில் கண்ணன் பிறந்த நாளை = ரோகிணி-ன்னும் திருவோணம்-ன்னும் மாத்திச் மாத்திச் சொல்லுவாரு!:) அப்ப தான் கம்சனின் ஆட்கள் குழம்பிப் போயி, கண்டு புடிக்க முடியாதாம்:)))
இப்படிப் “பொய்” சொன்னதால் தான்….
இவருக்கு (விட்டுசித்தன்) = “பெரிய” ஆழ்வார் என்ற பெயர்:)))
———————-
* முதன்முதலில் பாடிய ஆழ்வார் = முதலாழ்வார்கள் (பொய்கை ஆழ்வார்)
* நாலாம் வருணத்தில் பிறந்தாலும், அனைத்து ஆழ்வார்களுக்கும் தலைவர் = நம்மாழ்வார் = குல முதல்வர்!
* கடவுளுக்கே மாலையிட்டவள் = ஆண்டாள்
* கடவுளையே கொள்ளை அடித்து, அவரிடமே மந்திரம் பெற்றவர் = திருமங்கை …
இவங்க எவருக்கும் “பெரிய”-ன்னு அடைமொழி இல்லை! இவிங்க யாரும் “பெரிய ஆழ்வார்” இல்லை!
ஏன் விட்டுசித்தனுக்கும் மட்டும் இப்படியொரு பட்டம்? அப்படி என்னய்யா அவரு மட்டும் உசத்தி?:))
———————
* நம்மாழ்வார், மனசுக்குள்ள பெண்ணா மாறி….அவனையே சபிப்பார்:) சண்டை போடுவார்:))
* ஆண்டாள், சொல்லவே வேணாம்! = உன் மூஞ்சி போலவே மனசும் கருப்பா இருக்குடா ன்னே Publicஆ திட்டுவா:))
(நான் என் முருகனைப் பொற்க்கீ ன்னு திட்டுறா மாதிரி:))
* மற்ற ஆழ்வார்கள் எல்லாம் = பிறவி வேணாம்! மோட்சம் குடு ன்னு கேட்பாங்க!
ஆனா இவரு மட்டும் தான் = தனக்கு-ன்னு எதையுமே கேட்காதவரு!
——–
அவனைப் பார்த்த மாத்திரத்தில்….
ஐய்யோ…இவன் இம்புட்டு நல்லவனா இருக்கானே….இவனை உலகத்தில் ஏமாத்திருவாங்களே!
இவன் அழகுக்கு, இவனுக்கு யாரு கண்ணு எல்லாம் படப் போகுதோ….
பாவி கண்ணு, பாப்பா கண்ணு
மூளி கண்ணு, மூப்பி கண்ணு
உற்றார் கண்ணு, பெற்றார் கண்ணு
நாய்க் கண்ணு, நரிக் கண்ணு
எல்லார் கண்ணும் சுடு சுடு சுடு சுடு …….
ஒரு “அம்மா” மனசு…
வெளிநாட்டிலிருந்து புள்ள, தனக்கு என்ன வாங்கியாந்து இருக்கும்?-ன்னு கணக்கு போடாம, சுத்தி போடும் மனசு…..
அந்த “அம்மா” மனசு = அம் மா மனசு
அதுக்குத் தான் இவருக்கு மட்டும் = பெரீய்ய்ய்ய்ய்ய ஆழ்வார், “பெரியாழ்வார்” ன்னு பேரு!
“பெரிய” ஆழ்வார் = ஏதோ நானா அடிச்சி விடுறேன்-ன்னு நினைச்சிக்காதீங்க:))
என்னுயிர்த் தோழனே….
“உனக்கு முருகன் மேல் அவ்ளோ ஒன்னும் பாசம் கிடையாது;
வைணவப் பாசம் தான் ஒனக்கு ஜாஸ்தி” ன்னுல்லாம் என்னை ஓட்டுவான்:))
ஆனா….இந்தப் “பாவனை”
* இறைவனை = தத்துவமா உசர அடுக்காம…
* நம்ம உறவா நினைச்சிக்கற “பாவனை”
* நாயகி பாவம்…..
இது ரொம்ப பிடிக்கும்! அதான் இந்த லயிப்பு = என் முருகனை உறவாய்….
———-
“பெரிய” ஆழ்வார் = ஏதோ “வைணவப் பாசத்துல” நானா அடிச்சி விடுறேன்-ன்னு நினைச்சிக்காதீங்க:))
மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வ-அளவே தான்-நிற்க – “பொங்கும்
பரிவாலே” வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
“பெரியாழ்வான்” என்னும் பெயர்
இதான் அந்தக் காரணத்தைச் சொல்லும் வெண்பா!
அந்த “அம்மா” மனசுக்குத் தான் = “பெரிய” ஆழ்வார் என்னும் பெயர்!!!
அனானிமஸ் இந்தப் பாடலுக்குப் பிரமாதமா பின்னூட்டம் இடுவார் என்று தெரியும், நன்றி 🙂
இது மிகப் பெரிய (great) பாடல், பெரியாழ்வார் பாடியதால் மட்டுமல்ல இன்றும் வைணவக் கோவில்களிலும், வைணவ மரபுப் படி வழிபடும் வீடுகளிலும் இந்தப் பாடல் பாடாமல் எந்த பண்டிகையும் நிறைவுப் பெறாது. மிகவும் எளிய நடை. குழந்தைகளும் சட்டென்று கற்றுக் கொள்ள முடியும்.
பெருமாளையும், தாயாரையும் ஒருசேர போற்றிப் பாடப் படும் பாடல். ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து பெரியாழ்வார் பெருமாளுக்குக் கண் திருஷ்டிப் பட்டுவிடுமோ என்று அஞ்சிப் பாடிய பாடல். அவரின் அளவிட முடியாத அன்பும் கருணையும் இதில் தெரிகிறது.
There is nothing equal to a mother’s love. அந்த ஒரு தாயின் வாஞ்சையும், அன்பும் இந்தப் பாடலில் வெளிப்படுகிறது. ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனுக்கேத் தாயாக மாறி பல்லாண்டு பாடுகிறார். அந்தக் காட்சியை நினைக்கும் பொழுதே மனம் நெகிழ்ச்சி அடைகிறது. இந்தப் பாடலை 365பாவில் அரங்கேற்றியதற்கு நன்றி சொக்கரே. Very apt for your parents grand event 🙂
amas32
யாருப்பா இந்த அனானி?! 🙂