அருகன் போற்றி

ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞானத்

திருமொழிக்கு அல்லது என் செவி அகம் திறவா!

காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு

நாமம் அல்லது நவிலாது என் நா!

ஐவரை வென்றோன் அடி இணை அல்லது

கைவரைக் காணினும் காணா என் கண்!

அருகர், அறவன், அறிவோற்கு அல்லது என்

இரு கையும் கூடி ஒரு வழிக் குவியா!

நூல்: சிலப்பதிகாரம் (நாடுகாண் காதை)

பாடியவர்: இளங்கோவடிகள்

சூழல்: கோவலனும் கண்ணகியும் மதுரைக்குப் புறப்படுகிறார்கள், அவர்களுடன் கவுந்தி அடிகளும் சேர்ந்துகொள்கிறார், செல்லும் வழியில் அவர்கள் சில சாரணர்களைச் சந்திக்கிறார்கள், அவர்களிடம் மகாவீரரின் புகழைப் போற்றிப் பாடுகிறார் கவுந்தி அடிகள்

என்னுடைய காதுகள், காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்றையும் அடக்கிய அருக தேவன் அருளிய ஞானத் திருமொழிக்குமட்டுமே திறக்கும், வேறெதையும் கேட்காது!

*

என்னுடைய நாக்கு, காமனை வென்ற அந்த அருகனுடைய ஆயிரத்தெட்டு நாமங்களைமட்டும்தான் பேசும், வேறெதையும் பேசாது!

*

என்னுடைய கண்கள், ஐந்து புலன்களையும் அடக்கி ஆண்ட அந்தப் பெருமானுடைய திருவடிகளைமட்டுமே பார்க்கும், வேறெதையும் பார்க்காது!

*

என்னுடைய கைகள், அருகர்களுக்கு அறம் சொல்லும் அந்த அறிவனுக்காகமட்டுமே குவியும், வேறெதையும் வணங்காது!

துக்கடா

 • இன்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு இந்தப் பாடல். இதனைத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் நமது #365paa பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து / பின்னூட்டங்கள் எழுதி வரும் ஓர் அன்பர், அவர் தன்னுடைய பெயர் வெளியிடப்படுவதை விரும்பவில்லை, அவருக்கு நம் நன்றிகள்

274/365

Advertisements
This entry was posted in இளங்கோவடிகள், சமணம், சிலப்பதிகாரம், நாடகம், பக்தி, பெண்மொழி. Bookmark the permalink.

16 Responses to அருகன் போற்றி

 1. anonymous says:

  மிக்க நன்றி, இட்டமைக்கு!

  அருகன் போற்றி
  = முருகன் போற்றி ன்னே என் கண்ணுல படுது:)
  இன்னிக்கி பங்குனி உத்திரம்! = அவன்-அவள் திருமணம்!

  முருகனோடு தான் தினமுமே குடித்தனம் நடத்துறேனே!:)
  அதனால் இன்று மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு, முருகனை விட, அருகன் வருவதே சிறப்பு!:)

  #365paa வில் அருகப் பெருமான் துதி வருவது, இதுவே முதல் முறை-ன்னு நினைக்கிறேன்!
  அருகப் பெருமான் வாழ்க!
  மேன்மை கொள் சமண நீதி ஓங்குக உலகமெல்லாம்!

  • ஆனந்தன் says:

   //மேன்மை கொள் சமண நீதி ஓங்குக உலகமெல்லாம்!//
   தேவையா இது?!!

   • anonymous says:

    :))))))

    தேவை தான்! – “நீதி” – எதுவாயினும் ஓங்குக!
    (மேன்மை கொள் சைவ நீதி ஓங்குக உலகமெல்லாம்-ன்னு சொல்வது கந்த புராணம்:)

 2. anonymous says:

  அருகர் = மகாவீரரை மட்டும் குறிப்பதன்று!
  அனைத்து (24) தீர்த்தங்கரர்களையும் குறிக்கும்!

  அரிஹந்த் -> அர்ஹந்த் -> அர்கர் -> அருகர் என்று தமிழில் ஆனது!
  அருகர் = நோன்பு உடையவர்கள் என்று பொருள்!

  தீர்த்தங்கரர் = தீர்த்தம் + கரை
  = பிறவிக் கடலில் இருந்து கரை ஏறியவர்கள் என்று பொருள்!
  ————–

  *முதல் அருகர் (அ) தீர்த்தங்கரர் = ரிஷப தேவர்
  *2ஆம் அருகர் = அஜிதர்
  ….

  *24ஆம் அருகர் = மகா வீரர்

  ஏன் மகாவீரருக்கு மட்டும் அத்தனை சிறப்பு என்றால்….முன்னவர்கள் எல்லாம் நோன்பில் மட்டும் திளைக்க….
  மகாவீரர் மட்டுமே, நூல்கள் பல செய்து, பிறவிக்கடல் கடக்கும் தத்துவங்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்த்தவர்!

  அதான் அருகதேவர் = மகாவீரரைச் சிறப்பாக குறிக்கிறது!

 3. anonymous says:

  சமணம் = சம நிலையில் இருப்பது
  இன்பம்/துன்பம், நட்பு/பகை etc etc…எல்லாவற்றிலும் சமத்தில் இருப்பது=சமணம்!

  சிரமணம் என்ற வடசொல்லே = தமிழில் சமணம்!
  பொதுவா, இந்து மதம், கிறிஸ்துவம், இஸ்லாம் அறிந்த அளவுக்கு, சமணம்/ பெளத்தம் நாம் அறிவதில்லை! (அ) அறிய ஆர்வம் காட்டுவதில்லை!:(
  ஆனா, சமணம் தமிழுக்கு செஞ்ச நன்மைகள் எக்கச்சக்கம்!
  ————

  இலக்கியம், மருத்துவம், அரசுநெறிகள்,
  வழிபாட்டில் பண்பட்ட வழிபாடு, கொல்லாமை
  தேவரடியார்-பெண்பித்து நீக்கம்,
  நிகண்டு/அகராதி…ன்னு
  தமிழுக்குப் பெரும் தொண்டு செய்துள்ளது = சமணம்!

  ஆனா, நாம் தான் தமிழ்ச் சமணத்தை, தமிழகத்தில் இல்லாமப் பண்ணிட்டோம்:(
  சமயப் போட்டிகளில், மிகவும் அடாவடி அடித்து, அதை விரட்டிய கொடுமை….முருகா:(((
  மிகக் குறைவான பேர்களே/ பழக்க வழக்கமே, இன்று தமிழ்ச் சமணத்தில் இருக்கு!
  ————

  • anonymous says:

   சமணம் = தமிழகத்தின் தொல் நெறி அன்று!

   * சங்க காலம்/ தொல்காப்பிய காலங்களில் = சமணம் கிடையாது! எட்டுத் தொகையில் சமணத்தைக் காண்பது மிகவும் அபூர்வம்!
   * தமிழின் மூத்த குடிகள் வழிபாடு = முருகனும் (சேயோன்), திருமாலும் (மாயோன்) தான்!!! = தமிழ்க் கடவுள்கள்!

   அதுவும் இந்த முருகன்/ திருமால் = இந்து மதம் அல்ல! இயற்கை வழிபாட்டை ஒத்து இருந்த தமிழ்க் கடவுள்கள் மட்டுமே!

   தமிழில், அமைப்பு ரீதியான மதம்-ன்னே அன்று இல்லை! இனக்குழு/ பூர்வ குடிகளின் தெய்வம்! அவ்ளோ தான்!
   பின்னாளில் பண்பாட்டுக் கலப்புக்குப் பின்னர் தான், அவர்கள் வேதக் கடவுள் ஆனார்கள்!
   ———

   எப்படி வேத நெறி வடக்கில் இருந்து வந்ததோ, அதே போல் தான் சமணமும்!
   ஆனா சாதி/ சடங்கு எல்லாம் இல்லாத நல்ல நெறி!

   சந்திரகுப்த மெளரியனின் குருவான பத்திரபாகு/ விசாக முனிவர், தென்னகம் வந்த போது காலூன்றிய நெறி!
   இங்கே வந்த பின், தமிழ்ப் பண்பாட்டோடு இயைந்து, அதனை மேலும் பல துறைகளில் வளப்படுத்தியது = சமணம்!

   சங்க காலத்தில் இல்லாத சமணம்…..
   சங்கம் மருவிய காலம், களப்பிரர் காலம், சிலப்பதிகார காலங்களில், நன்கு தமிழகத்தில் பரவி விட்டது!
   அதுவும் சாதி மறுப்பு, கருணை, கொல்லாமை போன்ற நெறிகளை முன்னிறுத்தியதால்….நல்ல வளர்ச்சி!

   ஒரே ஒரு குறை!
   = அது “துறவை” ரொம்ப முன் நிறுத்தியது தான்!
   நம்ம மக்கள் அம்புட்டு சீக்கிரம் ஆசைய விட்டுருவாங்களா?:))

   இந்த ஒன்னை வைத்தே, வேத நெறி ஆட்கள், சமணத்தைத் தமிழகத்தில் துடைத்து எடுத்து விட்டார்கள்!:(
   குறிப்பாக, பக்தி இலக்கியக் காலத்தில், சில பல குரவர்கள்!

 4. anonymous says:

  முன்னுரை போதும், பாட்டுக்கு வருவோம்:))
  இளங்கோ அடிகளின் = நெஞ்சை அள்ளும் சிலம்பு!

  உடம்பில் இருக்கும் உறுப்புகள், நம் சுக போகத்துக்கு மட்டுமல்லாது, இறைவனை/ சான்றோரைத் துதிக்கவும் பயன்படுத்தணும்!
  அதை எவ்ளோ அழகா, கவுந்தி அடிகள் மூலம் சொல்றாரு பாருங்க!

  ‘வாழ்க்கை என்னும் ஓடம்’ பாட்டு பாடிக்கிட்டே, கோவலன்-கண்ணகியைக் கூட்டிக்கிட்டு வருவாங்களே கேபி சுந்தராம்பாள் = அவங்க தான் கவுந்தி அடிகள்:)) (பூம்புகார் படத்தில்)
  ———–

  * செவி அகம் திறவா! = செவி, அவன் புகழே கேட்கும்
  * நவிலாது என் நா! = வாய், அவன் புகழே பாடும்
  * காணா என் கண்! = கண், அவனையே காணும்!

  காந்தியடிகளின் மூனு குரங்கு….ஞாபகம் வருதா? :))
  கண் – காது – வாய்!

 5. anonymous says:

  இளங்கோவடிகள் போல ஒரு நல்ல மனசைப் பாக்க முடியாது!

  * திருமால், முருகன்,
  * கொற்றவை, சிவன்
  * சமணம், புத்தம்
  -ன்னு பல நெறிகளையும், ரொம்ப அழகாப் பாடுவாரு!
  மனசுல வஞ்சம் வச்சிக்கிட்டு, மேலாக்க அரியும் சிவனும் ஒன்னு-ன்னு சொல்றவரு இல்ல!

  உண்மையாலுமே, “மனக் காழ்ப்பு” இன்றி, தன் சுய விருப்பு வெறுப்புகளைப் பாட்டில் ஏற்றாது…
  மனசுக்கு உண்மையான வரிகள் = இளங்கோ வரிகள்!
  ———–

  இளங்கோ, சமண சமயத்துக்கு மாறிய துறவி-ன்னு அறிஞர்கள் மத்தியில் பரவலான கருத்து!
  ஆனா….அவரு முருகனைப் பாடுறாப் போல, அருணகிரி கூடப் பாடியது இல்ல!
  அப்பவே வேல் விருத்தம் பாடுறாரு இளங்கோ….
  அப்பவே வள்ளித் துதி செய்பவரும் இளங்கோ தான்!

  திருமாலைக் குரவைக் கூத்து நடத்தி, ரொம்ப விலாவரியாப் பாடுவாரு!
  * கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே?
  * கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே?
  * நாராயணா என்னாத நான் என்ன நாவே?
  ஒரு சமணத் துறவியா இப்படிப் பாடுவது? யாருக்குய்யா வரும் இந்தப் பெரிய மனசு?
  ————

  • anonymous says:

   இன்னிக்கும், திருமலை-திருப்பதியில், அந்தச் சாமியா, இந்தச் சாமியா? -ன்னு குட்டைய குழப்புற சமயக் கிறுக்கர்கள் மத்தியில்….

   இளங்கோ அப்பவே, (3rd Century AD)….
   திருவேங்கடத்தில் சங்கு சக்கரத்தோடு நிக்கும் திருமால்-ன்னு கல்வெட்டுச் சாசனம் போல பொறிச்சிட்டுப் போவாரு!

   வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
   ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
   ….
   பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கும்
   தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி
   செங்கண் மால் நெடியோன் நின்ற வண்ணமும்!
   ——

   இப்பிடி, நிறைய தமிழக வரலாற்றை, அப்பவே Photo புடிச்சி வைப்பது இளங்கோவின் வழக்கம்!
   அது தான், இன்னி்க்கும், உண்மை அறிய விரும்புவோர்க்கு, மிகவும் பயன்படுது!

   • ஆனந்தன் says:

    சமண சமயத்தையும் இளங்கோவடிகளையும் பற்றிய பல நல்ல தகவல்களுக்கு நன்றி.

 6. Karthik says:

  அருமையான பாடல்!! அனானி அருகர் என்ற சொல்லுக்கு அருமையான விளக்கம்!!

 7. anonymous says:

  இங்கு வாசிப்போர் மத்தியில்….எவரேனும் சமணர்கள் இருந்தால்…
  அவர்களிடம் என் மன்னிப்பை இவ்வமயம் கோருகிறேன்!

  நான் பிறப்பால் = சைவன்!
  மனத்தால் = முருகன்!
  எனக்குக் கொஞ்சூண்டு சமண நண்பர்கள் உண்டு! ஆனா பலரும் என்னிடம் இலக்கியம் பேசும் போதெல்லாம், சைவ இலக்கியம், சமணத்துக்குச் செய்தவற்றைச் சொல்லி வருத்தப்படுவார்கள்!

  அதுக்குத் தான், சைவன் என்ற முறையில், மன்னிப்பு கோரினேன்!
  —————-

  பொதுவா, இது ஒரு பெரும்பான்மைப் புத்தி!
  மரபுச் சிறப்பில் தங்களைச் சிறுபான்மையினர் முந்திடவே கூடாது; அதனால் தட்டித் தட்டி உட்கார வைக்கும் ஒரு குணம்:(
  அதுவும் சமணத்தை ரொம்பவே தட்டியது தான் வேதனை!:((

  இது சில மனிதர்களின் ஆட்டம் தான்! இதுக்கும் சிவபெருமானுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!
  ஈசனை விட சமயமே முக்கியம்-ன்னு நிறுவனப்படுத்தலால் வந்த விளைவுகள் தான் இவை!
  —————-

  *வாதில் கழுவேற்றல்
  *நூல்களைத் தீயிலும்/ நீரிலும் போட்டு அழித்தல்
  *களப்பிரர்/சமண வரலாற்றை, “இருண்ட காலம்” ன்னே எழுதி எழுதிப் பரப்பல் (சை.சி.நூற்பதிப்புக் கழகம் மூலமாக)

  *கருத்துக்கு எதிர்க் கருத்து சொல்லலாம்! தப்பில்லை! ஆனா Personalஆக, சமணர்களைச் சாடல் என்பது நிச்சயம் தவறு தான்!
  சமணரை = அமணர் என்றே பதிகம் முழுக்கக் கூறுதல் (அம்மணம், துணி இல்லாமையால்)
  சமணரின் தலை முடி மழிப்பதை, மயிர் பறிக்கும் கோப்** எனக் கேலி பேசல்
  இன்னும் நிறைய……

  ஆனா அதை இன்றும் செய்து கொண்டிருக்கக் கூடாது! ஆனால் பல ஓதுவார்களும், திருமடத் தளங்களும் இன்றும் அப்படியே உரை எழுதுவது/ தேவார ஆடியோ-வில் முன்னுரை குடுப்பதைப் பார்க்கின்றேன்!:(

  நான் மிகவும் மதிக்கும் வாரியார் சுவாமிகள் கூட, சில பிரசங்களில், சமண மந்திரம் = அஸ்தி-நாஸ்தி = உண்டு-இல்லை …இதெல்லாம் ஒரு மந்திரமா? இதனால் பாண்டியன் நோய் குறையாமல் கூடியதில் வியப்பே இல்லை-ன்னு இடிப்பார்! எனக்கு அந்த நேரத்துக்கு வருத்தமாத் தான் இருக்கும்!:((

  அது ஏனோ…அப்படி ஒரு “தீவிரம்”, சமணத்தின் மீது காட்டி விட்டார்கள்! மிகவும் தவறு!
  இனி வரும் தலைமுறையாவது, இதைத் திருத்திக் கொண்டு, சிவபெருமான் மனதைக் குளிரச் செய்யணும்!
  —————-

  நெறி வேறு! வெறி வேறு!
  வாழ்க சமணத் தமிழ்!

  சமராபுரி வாழ் சண்முகத் தரசே
  சமணத் தமிழுக்கு அருள்வாய் அருள்வாய்!

  • anonymous says:

   மேற்கண்ட பின்னூட்டம், மனசாட்சி சொன்னதால் உன்மையுடன் இட்டது;
   எவரேனும் வருந்தினால் மன்னிக்க!
   அதே சமயம், நம் வருத்தம் போலவே, நம்மால் பிறர் வருத்தமும் சிந்தையிற் கொள்க!

   முருகா!

  • anonymous says:

   மேலும் அவை…தரவோடு கூடிய என் கருத்துக்கள் தானே அன்றி, 365paa வுக்கும் அவற்றுக்கும் தொடர்பில்லை என்று கூறவும் கடமைப்பட்டுள்ளேன்!
   இந்த இனிய அருகப் பெருமான் நாளிலே, சொக்கருக்கும் என் நன்றி!
   ———–

   அருகப் பெருமான் – முருகப் பெருமான்!
   அ, மு தான் வித்தியாசம் போல:)))))

  • iniyan says:

   நீங்கள்தான் உண்மை சிவனடியார். சிவம் என்பது அன்பு. அன்பால் உயர்ந்த பெரியோர் தாங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s