இணையடி நிழலே

மாசு இல் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும்

மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணை அடி நீழலே!

நூல்: தேவாரம்

பாடியவர்: திருநாவுக்கரசர்

குற்றம் இல்லாத வீணையில் எழும் இசை, மாலை நேரத்தில் தோன்றும் சந்திரனின் குளிர்ச்சி, வீசுகின்ற தென்றல், நல்ல செறிவான இளவேனில் காலத்தின் அழகு, வண்டுகள் சத்தமிட்டபடி மொய்க்கின்ற பொய்கை… இவற்றையெல்லாம்போல் இன்பம் தருவது ஈசன், நம் தந்தை சிவ பெருமானின் இணை அடிகளின் நிழல்!

துக்கடா

 • திருநாவுக்கரசர் சுண்ணாம்புக் காளவாயில் தள்ளப்பட்டதாகவும், அப்போது அவர் இந்தப் பாடலைப் பாடியதாகவும் சொல்வார்கள். ’வெப்பமும் புகையும் இருட்டும் நிறைந்த அந்தச் சுண்ணாம்புக் காளவாய்க்குள்கூட, இறைவனின் திருவடிகளை நினைத்தால், வீணை ஒலி, நிலாவின் குளிர்ச்சி, தென்றலின் இதம் போன்றவற்றால் கிடைக்கும் சந்தோஷத்தைப்போலப் பலமடங்கு இன்பத்தை அனுபவிக்கலாம்’ என்று அவர் பாடியதாகக் கற்பனை செய்துகொள்ளலாம்
 • மிகப் பிரபலமான இந்தத் தேவாரப் பாடலின் ஒலி வடிவங்கள் சில:
 • 1. பழமையான ஓதுவார்கள் குரலில் : http://www.shaivam.org/gallery/audio/tirumurai/5_macilvinaiyum.mp3
 • 2. குழந்தைகள் பஜன் :http://www.raaga.com/play/?id=319863
 • 3. திரைப் பாடகர் டி. எம். சௌந்தர்ராஜன் பாடியது : http://ishare.rediff.com/music/tamil-devotional/maasil-veenaiyum/10013757
 • 4. திரைப் பாடகி எஸ். ஜானகி பாடியது :http://www.youtube.com/watch?v=XFUgMTIddt4

273/365

Advertisements
This entry was posted in கதை கேளு கதை கேளு, சினிமா, சிவன், திருநாவுக்கரசர், தேவாரம், பக்தி. Bookmark the permalink.

20 Responses to இணையடி நிழலே

 1. ராஜாஜி, குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா என்றப் பாடலை எழுதியபோது அவர் மனைவி இறந்து விட்டார், மூத்த மகள் வயதுக்கு வருவதற்குள் விதவை ஆகிவிட்டாள், வீட்டில் வேறு யாருக்கோ காச நோய் வந்திருந்தது என்று கேள்விப்பட்டிருக்கேன். இந்த மாதிரி சூழ்நிலையில் அவர் தனக்குக் குறையே இல்லை என்று அந்த அருமையான பாடலை எழுதியுள்ளார்!

  திருநாவுக்கரசரோ சுண்ணாம்புக் காளவாயில் தள்ளப்பட்ட பின் ஏதோ காத்து வாங்க கடற்கரை சென்றவரைப் போல பாடல் எழுதியுள்ளார்.

  சுருதி பேதமில்லாமல் ஒரு இசைக்கருவியில் இருந்து எழும் நாதம் மிகவும் இனிமையானது, அதுவும் குற்றமில்லாத வீணையில் இருந்து எழும் ஓசை தேவ கானமாகத் தான் இருக்கும்.

  மாலை நேரத்தில் தோன்றுகின்ற நிலவு மனதில் ஒரு நிம்மதியைத் தரும். அந்த குளிர்ந்த நிலவும், வீசுகின்ற தென்றலும் இணைந்து ஒரு ரம்மியமான சூழலை ஏற்படுத்துகிறது.

  Spring is in the air என்பது போல இளவேனிற் காலத்தே மனம் வீசும் மலர்கள் மலர்ந்து, வண்டுகளை வசீகரிக்கும், அதுவும் குளிர்ந்த பொய்கையில். வண்டுகள் ரீங்காரமிட்டு தேனை உண்டு மகிழும்.

  நாம் அனுபவிக்காத ஒன்றை நம்மால் உணர முடியாது. ஒரு சிலருக்கே அனுபவிக்காமலும் அந்த உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். எளியவரும் இறைவனின் அருகாமையால் விளையும் ஆனந்தத்தை அறிந்துகொள்ள திருநாவுக்கரசர் இந்த அற்புதப் பாடலை இயற்றியுள்ளார். இறைவனின் பாத கமலங்களை பற்றினால் என்ன ஒரு அமைதியையும் ஆனந்தத்தையும் நாம் அனுபவிக்கலாம்!

  amas32

 2. anonymous says:

  எங்கள் அப்பர் பெருமான் திருவடிகளே சரணம்!

  TMS கலக்குறாரு!
  ஜானகி – இது ஆரம்ப கால ஜானகி/ ரொம்ப பழைய பாட்டோ? பொதுவா, சிங்கார வேலனே தேவா-லயே கீச்சுக் குரல் இருக்கும்! ஆனா இதுல, வித்தியாசமான ஜானகி! So sweet, pleasant surprise, thank u chokkare:)

  இனி தேவாரம்/ அருளிச்செயல் பதிவிடும் போதெல்லாம், இயன்ற வரை அதன் ஒலிச்சுட்டியும் சேர்த்தே கொடுக்குமாறு வேண்டுகோள் வைக்கிறேன்!
  பா+சுரம் = இரண்டுமே இருப்பது அல்லவோ பாசுரம்!!

  • ஆனந்தன் says:

   திருஞானசம்பந்தர் ‘காதலாகி’யும், திருநாவுக்கரசர் ‘மாசில் வீணை’யும் படிக்கும் வீடியோ படக் காட்சியை இங்கே கண்டு களிக்கலாம்! (நன்றி: AP நாகராஜன்)

   • anonymous says:

    wow! dank u so much
    it took 10 mins for me to load this small video
    sivaji is really great! chummaa pichi vaanguraaru – tms at his best! siva siva!

 3. anonymous says:

  அப்பர் பெருமான் பத்தி நான் என்ன சொல்ல?
  சமயக் குரவர் நால்வருள் என்னை மிகவும் கவர்ந்த ஒருவர்-ன்னா அப்பர் தான்!
  ஆனா, நால்வருள், துன்பம்-ன்னா……இவரு தான் ரொம்ப பட்டவரு!

  மற்றவர்களுக்கெல்லாம்…..ஈசன் தரும் பல்லக்கு-குடை, தேவரடியார் பெண்டிரிடம் தூது போதல்-ன்னு இருக்க….
  அப்பருக்கு மட்டும் தான், வழிநடைத் துன்பங்கள் பலப்பல!

  பிற சமயங்களை/ சமயத்தவரை தாழ்வாகப் பேசல் இருக்கவே இருக்காது அப்பர் பெருமான் பதிகத்தில்!
  சமணத்தில் இருந்து வந்ததால் என்னவோ, ஜீவகாருண்யம் ரொம்ப இருக்கும் அப்பர் பாட்டில்!

  இயற்கை காட்சிகள், உவமை அழகு-ன்னு அப்பரை அடிச்சிக்கவே முடியாது!
  * மாசில் வீணையும்
  * காதல் மடப் பிடியோடு களிறு வருவன கண்டேன்
  * மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி
  * உலையை ஏற்றித் தழல் எரி மடுத்த நீரில், திளைத்து நின்றாடுகின்ற ஆமை போல் தெளிவிலாதேன்!

  வெறும் பாட்டா மட்டும் பாட, உடம்பாலும் உழவாரப் பணி செய்து உழைச்சவரு அப்பர்!
  ————

  1. இயற்பெயர் = மருள்நீக்கியார்
  2. சமணப் பெயர் = தருமசேனர்
  3. இன்னொரு பட்டப் பெயர் = வாகீசர்
  4. சம்பந்தர் அழைத்தது = அப்பர்

  5. தாண்டகம் என்னும் புதுக் கவிதை செய்தமையால் = தாண்டக வேந்தர்
  6. ஆழ்வார் உகந்து அழைத்தது = அஞ்சொல் தமிழாளி(யர்)
  7. சிவபெருமானே உகந்து அழைத்தது = நாவுக்கு அரசர் = திருநாவுக்கரசர்

  திருமணமே செய்து கொள்ளாததால், இறுதிக் காலத்தில் துணையின்றி வாழ்ந்தவரும் = அப்பரே!

 4. anonymous says:

  பொதுவா, நாயன்மார் கவிதைகளில், “நாயகி பாவம்” இருக்காது! ஆழ்வார்கள் கிட்ட நிறைய இருக்கும்!:)
  ஆனா, one exception = திருநாவுக்கரசர்!

  அப்பர் பெருமானின் நாயகி பாவப் பாடல்கள், கொஞ்சூண்டு தான்! அதுவும் அவர் சிறிய வயதில்!
  அதில் தான், என்ன சொல்லாட்சி, என்ன பொருளாட்சி, எல்லாத்தை விட என்ன ஒரு உருக்கம்!

  அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தேன்
  அகன்றேன் அகலிடத்தார் ஆசாரத்தை
  தன்னை மறந்தேன் தன் நாமம் கெட்டேன்
  தலைப்பட்டேன் நங்கை தலைவன் தாளே!!

  ஆசாரத்தை விட்டாளாம்!
  அம்மா-அப்பாவையும் விட்டாளாம்!
  தன்னை மறந்தேன் தன் நாமம் கெட்டேன்
  = என் பேரே எனக்கு மறந்து போனது ன்னு எம்.எஸ்.வி – வைரமுத்து பாட்டு, ராகவனுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு!

  முன்னம் அவனுடைய நாமம் கேட்டேன்
  மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டேன்
  பின்னம் அவனுடைய ஆரூர் கேட்டேன்
  பேர்த்தும் அவனுக்கே “பிச்சி” ஆனேன்!
  – பிச்சி என்ற அப்பர் பெருமான் சொல்லாட்சி…..என்னை என்னமோ பண்ணும்!

 5. anonymous says:

  //சுண்ணாம்புக் காளவாய்க்குள்//

  சொக்கரே
  காளவாய், கால்வாய் – ரெண்டும் வெவ்வேறா?:)

 6. anonymous says:

  பாட்டுக்கு வருவோம்!

  மாசு இல் வீணையும் = அதென்ன மாசில் வீணை? அப்போ, மாசுடைய வீணை-ன்னு ஒன்னு இருக்கா என்ன?:)

  மாலை மதியமும் = அதென்ன மாலை மதியம்? இரவு நிலவு தானே நல்ல குளிர்ச்சி? எதுக்கு மாலை நிலவு-ங்கிறாரு?:)

  சொல்லுங்க பார்ப்போம்!:)

 7. anonymous says:

  இது ஒரு வினைத் தொகைப் பாட்டு! நம் வினையெல்லாம் தொகையும்(மறையும்) பாட்டு! எப்படி?

  வீசு தென்றல் = வீசிய, வீசுகின்ற, வீசும் தென்றல் = வினைத் தொகை
  வீங்கு வேனில் =
  மூசு வண்டு =
  அறை பொய்கை =
  ———-

  வினைகள் எப்படித் தொகையும்?
  = ஈசன் எந்தை இணை அடி நீழலே

  திருவடிகளால் தான் வினை தொகையும்!
  பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
  பற்றுக பற்று விடற்கு!
  அதான், “ஈசன் எந்தை இணை அடி நீழலே” -ன்னு முடிக்கிறாரு!

  சரி, எதுக்கு எப்பமே திருவடிகளை நிழல், நிழல் (நீழல்) -ன்னே சொல்றாங்க?

  • anonymous says:

   வெளிச்சம் X இருள்
   = ஒன்னோடு ஒன்னு சேராது! எதிரிகள்!
   வெளிச்சம் இல்லாமையே = இருள்-ன்னும் சொல்லலாம்!
   இருள் இல்லாமையே = வெளிச்சம்-ன்னும் சொல்லலாம்!

   ஆனா, நிழல் = Shade! = ரெண்டுமே இருக்கும்!
   வெளிச்சமும் இருக்கும், ஆனா தகிக்காது!
   இருளும் இருக்கும், ஆனா இருண்டு விடாது!

   வளர்ச்சிக்கு = வெளிச்சம் வேண்டும்!
   ஓய்வுக்கு = இருள் வேண்டும்!

   * உயிர்களின் ஓயாத வினைகளுக்கு = ஓய்வான இருள் வேண்டும்!
   * உயிர்களின் ஞானத்துக்கு = வெளிச்சமும் வேண்டும்!
   * இரண்டுமே ஒரு சேரத் தருபவை = இளைப்பாறுதல் தருபவை = இறைவன் திருவடிகள்!
   அதான் திருவடிகள் = நிழல்!
   ———–

   ஆழ்வார் பாசுரம் = நிழல்தரு இருளுறு சுடரடி தொழவே!
   நிழல்-இருள்-சுடர் ன்னு மூனுமே ஒருசேரக் காட்டுவாரு!
   அப்பர் பெருமான் = ஈசன் எந்தை இணையடி நீழலே!

  • anonymous says:

   நிழல் இன்று உலக இயக்கமே இல்லை!
   மொத்த அண்ட வெளியும், நிழலில் தான் இயங்குது!
   சூரியன் வெளிச்சம் ஒரு பக்கம், அது பட்டு நிழல் விழுவது இன்னொரு பக்கம்!
   நிலவின் ஒளி = நிழல்! கிரகங்களின் ஒளி = நிழல்!
   காலங்கள் = நிழல்! கிரகணங்கள் = நிழல்!
   ——-

   பெத்த அம்மா, அப்பா,
   உயிருக்குள் கலந்து விட்ட காதலன்
   இவங்க கிட்ட இருந்து கூடச் சில நேரம் பிரிய வேண்டி இருக்கும்!
   ஆனா, உங்க நிழல் கிட்ட இருந்து நீங்க பிரியவே முடியாது!
   நிழல் உங்களுக்குள்ளேயே அடங்குமே தவிர, பிரியாது!

   வெளிச்சம் உள்ளவரை = நிழலும் இருக்கும்!
   இறைவன் உள்ளவரை = திருவடி நீழலும் இருக்கும்!

   விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்
   = பின் தொடரும் நிழல்!
   = பின் தொடரும் திருவடி!
   = திருவடி நீழலே!

   • ஆனந்தன் says:

    //மாசு இல் வீணையும் = அதென்ன மாசில் வீணை? அப்போ, மாசுடைய வீணை-ன்னு ஒன்னு இருக்கா என்ன?:)
    மாலை மதியமும் = அதென்ன மாலை மதியம்? இரவு நிலவு தானே நல்ல குளிர்ச்சி? எதுக்கு மாலை நிலவு-ங்கிறாரு?//
    பதிலையும் சொல்லிடுங்கோ!

 8. anonymous says:

  முக்கியமா ஒன்னு சொல்ல மறந்துடப் போறேன்!

  *** அப்பர் பெருமான் பாடியது மட்டுமே = தேவாரம்!

  ஆனா, அதன் இனிமையால்….
  முதல் மூவர் பாட்டுகளும் தேவாரம்-ன்னு ஆகி,
  இன்னிக்கி மொத்த திருமுறையுமே “தேவாரம்”-ன்னு ஆகிப் போச்சு, பொதுமக்கள் வழக்கில்!
  (இதை, நம்ம லலிதாராம் ஒத்துக்க மாட்டாரு:)))

  ஆழ்வார்கள் -ன்னா திவ்யப் பிரபந்தம், நாயன்மார்கள் -ன்னா என்ன?ன்னு சாதாரண மக்கள் கிட்ட கேட்டுப் பாருங்க!
  = தேவாரம்-ன்னு தான் சொல்லுவங்க!:)
  நியாயமா ஆழ்வார்கள் = அருளிச் செயல், நாயன்மார்கள் = திருமுறைகள்-ன்னு சொல்லணும்! ஆனா யாரும் அப்படிச் சொல்லுறதில்ல!:))

  தேவாரப் பயிற்சிப் பள்ளி, தேவாரம் ஓதுவார், தேவார இசை – இப்படித் தான் வீச்சு!
  தேவாரப் பயிற்சிப் பள்ளியில், 12 திருமுறையும் சொல்லிக் குடுப்பாங்க! ஆனா பேரு என்னமோ = தேவாரப் பயிற்சிப் பள்ளி:))
  ——–

  அப்பர் பெருமான் பாடியது மட்டுமே = தேவாரம்!

  திருமுறைகள்:
  1, 2 , 3 = சம்பந்தர் = திருக்கடைக்காப்பு
  4, 5, 6 =அப்பர் = தேவாரம்
  7 = சுந்தரர் = திருப்பாட்டு
  8 = மாணிக்கவாசகர் = திருவாசகம் / திருக்கோவையார்

  9 = திருவிசைப்பா/ திருப்பல்லாண்டு
  10= திருமூலர் = திருமந்திரம்
  11 = பிரபந்தம் (காரைக்கால் அம்மையார் (எ) புனிதா, நம்பியாண்டார் நம்பி முதலானோர்)
  12 = சேக்கிழார் = பெரிய புராணம்

 9. anonymous says:

  இந்தப் பாடல் = இனிமையான அருட்பாடல்! ஆனா வரலாற்றில் கொஞ்சம் வெவகாரமான பாடல்!:))
  சொக்கர் கிட்ட எனக்குப் பிடிச்ச குணம், ஒரு நல்ல குணம் = அதைத் தொடாமல், லேசாக மட்டும் சொல்லிச் சென்று விட்டார்!

  சமணர்கள், அரசன் மூலமாக ரொம்ப துன்புறுத்தியதாகவும், கடலில் போட்டதாகவும் சொல்லப்படுவதுண்டு!
  அப்பர், அப்போது வரிசையாகப் பாடினார் என்றும் சொல்வார்கள்!

  ஆனால் சில வரலாற்று அறிஞர்கள், அந்த வரிசை திருமுறைகளிலேயே ஒத்து வரவில்லை, ஒன்னு 4ஆம் திருமுறையில் இருக்கு, இன்னோன்னு 5ஆம் திருமுறையில் இருக்கு, மேலும் அந்தக் காலப் பல்லவ அரசனை முன்னிறுத்தி, அவன் அவ்வாறு செய்யவில்லை என்றும் சில ஆதாரங்கள் தருவார்கள்!
  ————

  இது குறித்து, இன்றைய குன்றக்குடி அடிகளாரிடம் (குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்) உரையாடி இருக்கேன்!
  சமயம்-ன்னு நில்லாது நல்ல நண்பர் போல் என் கிட்ட உரையாடுவார்! கல்லூரிப் பழக்கம்!

  அந்த உரிமையில் நான் சில கேள்விகள் கேட்க…..
  “டேய், சைவ மடாதிபதி, என் கிட்டக்கவே இவ்ளோ துணிச்சலாக் கேக்குறியே?”-ன்னு சிரிப்பார்:))

  “இல்ல சாமீ, எனக்கு சைவம், வைணவம், சமணம் ன்னு எந்தத் தளத்திலேயும் நிக்கும் பழக்கம் இல்ல!
  என்ன தான் நாங்க பிறவிச் சைவர்கள் ஆனாலும்……என் முருகன், என் ஆருயிர்க் காதல் ஆனாலும்….
  வைணவத்தில் இராமானுசர் காலத்திலேயே சாதி மறுப்பு, தமிழ் நுழைவு-ன்னு எடுத்துச் சொல்லுவேன்;

  எனக்குத் தளம்-ன்னா = மனிதம் & தமிழ்!
  ரெண்டு தான்! வேறெந்த தளத்துலயும் நிக்குறது கிடையாது சாமீ” ன்னு சொல்லுவேன்!
  அடிகளார், “பாத்துப்பா, சில தீவிர சைவர்கள் கிட்ட சாக்கிரதையா இருந்துக்கோ”-ன்னு சிரிப்பாரு!:))
  —————

  குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் என்னிடம் சொன்ன, ஒரு பாடல் அழகை, உங்க கிட்ட பகிர்ந்துக்கறேன்!
  அதாச்சும் இந்தப் பாட்டு = ஐம்புலன் பாட்டாம்!

  * மாசில் வீணை = காது
  * மாலை மதியம் = கண்
  * வீசு தென்றல் = மெய் (உடம்பு)
  * வீங்கு இளவேனில் = மூக்கு (இளவேனில் மலர்கள்)
  * மூசு வண்டறை பொய்கை = வாய் (பொய்கை நீர், மற்றும் வண்டின் தேன்)

  இப்படி ஐம்புலனுக்கும் இன்பம் குடுக்கும் திருவடிகள், ன்னு அப்பர் பாடியதாக அடிகளார் சொன்னாரு!
  ரொம்ப பிடிச்சிப் போச்சு!:)
  ஐம்புலன் அடக்கணும் ன்னு சமயப் பூர்வமாச் சொல்லாது, ஐம்புலன் இன்பமும் இறைவனே எடுத்துக் குடுக்குறான்-ன்னு அவரு சொன்னது ரொம்ப பிடிச்சி இருந்துது!
  What Muruga? I like your aim-pulan inbam da:)))

  • சூப்பர் விளக்கம், ரொம்பப் பிடிச்சுது. நன்றி 🙂
   amas32

   • anonymous says:

    குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நல்ல இலக்கியவாதி (முந்தைய அடிகளார் போலவே)…
    எங்க கல்லூரி விழாவுக்கு நடுவரா வந்தவரு, என் பட்டி மண்டபப் பேச்சில், கதி கலங்கிப் போயி…அப்பறம் ரொம்ப ஃபிரெண்டா ஆயிட்டாரு:)))

    ஒரு நண்பர் போல அவர் கிட்ட விவாதிக்கலாம்! கருத்துக்கு எல்லாம் கோச்சிக்கவே மாட்டாரு! சிறந்த சிவனடியார்!

  • அனானிமஸ்,

   அப்பரின் பாடலுக்கு என்ன அருமையான விளக்கம், அப்பப்பா….
   நன்றி.

 10. உங்களுடைய பதிவுகளுக்கு காத்திருந்து படிக்க ஆரம்பித்துவிட்டேன். நன்றி

 11. Simulation says:

  ‘மாசில் வீணையும்” நானும் விருத்தமாகப் பாட முயர்சி செய்துள்ளேன். எப்படி இய்ருக்கின்றது என்று சொல்லுங்கள்.

  – சிமுலேஷன்

  http://simulationpadaippugal.blogspot.in/2012/04/blog-post_07.html

 12. pichaikaaran says:

  ” மாசுடைய வீணை-ன்னு ஒன்னு இருக்கா என்ன” இருக்கிறது என்பதே இந்திய தத்துவம்..

  மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
  நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
  நரர்களுக்குஞ் சுரர்களுக்கும் நலம்கொடுக்கும் நலமே
  எல்லார்க்கும் பொதுவில் நட மிடுகின்ற சிவமே

  இறை சக்தி பொதுவானது.. நல்லதையும் அதுதான் படைக்கிறது . கெட்டதையும் அதுதான் படைத்து வைத்து இருக்கிறது.. இரண்டுக்குமே அது இடம் அளிக்கிறது. எனவேதான் உலகில் இரண்டுமே கலந்து இருக்கின்றன.. இவற்றில் நல்லதை தேர்ந்தெடுப்பது நம் பொறுப்பு.. எனவே தான் , மாசற்ற வீணை என பாடுகிறார்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s