கொள்ளப் பிறைக்கும் மழை

கடல் நீர் முகந்த கமம் சூல் எழிலி

குட மலை ஆகத்துக் கொள் அப்பு இறைக்கும்

இடம் என ஆங்கே குறி செய்தேம் பேதை

மடமொழி எவ்வம் கெட

நூல்: கார் நாற்பது (#33)

பாடியவர்: மதுரைக் கண்ணங்கூத்தனார்

சூழல்: வேலை காரணமாகக் காதலியைப் பிரிந்து செல்கிறான் காதலன், ‘மழைக்காலத்தில் திரும்பி வருவேன்’ என்று சொல்லிப் போகிறான், சென்ற வேலை முடிந்தது, கிளம்புகிறான், கூடவே மழைக்காலமும் தொடங்கிவிட்டது, தேரோட்டியிடம் இப்படிச் சொல்கிறான்

தேரோட்டியே,

மேகங்கள் கடல் நீரை முகந்துகொண்டு கர்ப்பம் தரிக்கின்றன. மேற்குப் பக்கமாக உள்ள மலையின்மீது சென்று அந்த நீரை மழையாகச் சொரிகின்றன.

பல நாள்களுக்குமுன்னால் நான் ஊரில் இருந்து கிளம்பிய நேரம், மடப்பத்தை உடைய வார்த்தைகளைப் பேசுகிற என் காதலி என்னைப் பிரிவதை எண்ணி மிகவும் வருந்தினாள். அவளுடைய வருத்தத்தைப் போக்குவதற்காக, ‘மேற்கு மலைமீது மழை பெய்யும்போது நான் திரும்பிவிடுவேன்’ என்று வாக்குறுதி சொல்லி வந்தேன்.

இப்போது, அந்த நேரம் வந்துவிட்டது. நாம் சீக்கிரமாக ஊர் திரும்பவேண்டும். தேரை வேகமாக ஓட்டு!

துக்கடா

 • அதென்ன ‘மடமொழி’? காதலியை ‘மடத்தனமாகப் பேசுகிறவள்’ என்கிறானா இந்தக் காதலன்?
 • பெண்களுக்கான குணங்கள் என்று அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த ‘மட’ம்தான் இங்கேயும் வருகிறது
 • ‘மடம்’ என்றால் பேதைமை, அழகு, மென்மை போன்ற பொருள்கள் உண்டு. அவற்றுள் இங்கே எந்தப் பொருள் பொருந்தும் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் :>
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • கடல்நீர் முகந்த கமஞ்சூ லெழிலி
 • குடமலை ஆகத்துக் கொள்ளப் பிறைக்கும்
 • இடமென ஆங்கே குறிசெய்தேம் பேதை
 • மடமொழி எவ்வம் கெட

271/365

Advertisements
This entry was posted in அகம், ஆண்மொழி, காதல், கார் நாற்பது, வர்ணனை, வெண்பா. Bookmark the permalink.

9 Responses to கொள்ளப் பிறைக்கும் மழை

 1. anonymous says:

  //மடம் = பேதைமை, அழகு, மென்மை போன்ற பொருள்கள் உண்டு. அவற்றுள் இங்கே எந்தப் பொருள் பொருந்தும் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் :>//

  எல்லாப் பொருளும் பொருந்துது!:)
  எல்லாப் பொருளும் இவள் பால் உள!
  இவள் பால் இலாத எப்பொருளும் இல்லை!:))

  • anonymous says:

   //பெண்களுக்கான குணங்கள் என்று அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு கேள்விப்பட்டிருப்பீர்கள்//

   ஆண்கள், “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு” ன்னு சொல்லிச் சொல்லியே, பெண்கள் மேல் ஒரு பாரத்தை ஏற்றி வச்சிட்டாங்க!

   ஆனா ஆண்களுக்கும் நாலு குணம் சொல்லப்பட்டிருக்கே! அதை ஏன் பெண்கள் சொல்லிக் காட்டுறதில்ல?

   பெண்கள் குணம் = அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
   ஆண்கள் குணம் = அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி

  • anonymous says:

   மேலும்…..
   அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு = காதலின் போது மட்டுமே! வாழ்க்கை முழுக்க இல்ல:)))

   தொல்காப்பியர், களவியலில் (திருமணத்துக்கு முன்னுள்ள காதல் கட்டத்தில்), சொல்வது என்ன-ன்னா…
   அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
   நிச்சமும் பெண்பாற் குரிய என்ப

   இது களவியலுக்குத் தான்! ஒரு காதல் சுவைக்கு!
   எப்பமே ஒரு பொண்ணு அச்சம்,மடத்தோட இருக்கணும்-ன்னா எப்படி? போங்கடா:))
   அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டுமாம்-ன்னு அதான் பாரதியார் சொன்னாரு!

   இந்த ஆம்பிளைங்க இருக்காங்களே, ஒன்னைத் திருப்பியும் திருப்பியும் சொல்லிச் சொல்லியே, ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிருவாங்க:)

   அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு -ன்னு எத்தனை பாட்டு! அத்தனையும் ஆண் கவிஞர்கள் எழுதி வச்சது!
   இவனுங்க தப்புத் தப்பா மேற்கோள் காட்டி, பாவம்…பழி தமிழின் மீதா? தமிழ் அப்படியெல்லாம் பெண்களைச் சொல்லவே இல்ல!
   ————–

   * அச்சமாவது = அன்பு காரணமாகத் தோன்றும் உட்கு
   * நாணமாவது = பெண்மைக்குப் பொலிவு தரும் உள்ளப் பாங்கு
   * மடம் ஆவது = செவிலி முதலானோர் உணர்த்துவனவற்றை ஆராயாது மேற் கொள்ளுதல்
   * பயிர்ப்பாவது = பயிலாதவற்றின் மேற்கொள்ளும் அருவருப்பு

   இதான் தொல்காப்பியம் சொல்வது! தமிழ் சொல்வது!

   • ஆனந்தன் says:

    //அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
    நிச்சமும் பெண்பாற் குரிய என்ப//
    இதில் நிச்சமும் என்றால் என்ன? (நித்தமும்?)

  • anonymous says:

   காதல் களவியலில்….
   * அச்சம் = அன்பு காரணமாகத் தோன்றும் பதைப்பு (ஐயோ, அவன் இன்னும் வரலியே)

   * நாணம் = உள்ளப் பாங்கு; அவன் சீண்டல்களால் வெட்கப் படுதல்
   (அவன்: ஏய், உன் வாசம் என்னமோ பண்ணுது; இன்னிக்கி இரவு உன்னை என்ன பண்றேன் பாரு; அவள்: ச்சீ…)

   * மடம் = செவிலி/தாய் முதலானோர் சொல்வதை ஆராயாது, தன் நினைப்பை மேற் கொள்ளுதல் (காதல் வேகத்தில், அம்மா உலக வாழ்வுக்குச் சொல்வதைக் கேட்காமல், காதல் என்றே இருத்தல்)

   * பயிர்ப்பு = தனக்குப் பழக்கமில்லாதவற்றின் மேல் கூச்சம் (ஏய், என் friends கூட Barக்கு வரீயா? ச்சே…நான் அங்கெல்லாம் வரமாட்டேன்)

   இதாங்க = அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு!:))
   எனக்கு எப்படி இந்த டயலாக் எல்லாம் தெரியும்-ன்னு கேக்காதீக:) இப்பல்லாம்….பெண்ணை விட, ஆணுக்குத் தான் இது அதிகம் வருது, காதலில்!:))

 2. anonymous says:

  ஆண்கள் குணம் = அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி

  * அறிவு = காதல் கலைகளில் அறிந்து இருத்தல்
  * நிறை = காதலில் உறுதி
  * ஓர்ப்பு = ஆய்வு (தன்னையே நம்பி இருப்பவள் என்பதால், எதையும் ஆய்ந்து முடிவெடுத்தல்)
  * கடைப்பிடி = சொன்னதைக் கடைப்பிடித்தல் (களவிலும் கற்பிலும் தவறாது ஒழுகுதல்)

  என்ன ஆண்களே, ஓக்கேவா?:)

 3. anonymous says:

  பாட்டுக்கு Directஆ வரவே முடியாம, இந்தச் சொக்கரு, துக்கடாவில் ஏதாச்சும் பொடி வைச்சிடறாரு முருகா!:)
  பாட்டுக்கு வருவோம்!

  அருஞ்சொற்பொருள்:
  கமம் = நிறைந்த
  சூல் = கரு, கர்ப்பம்
  எழிலி = மேகம்
  குடமலை = மேற்கு மலை (குடதிசை=மேற்கு, குணதிசை=கிழக்கு)
  அப்பு = நீர்
  எவ்வம்=துன்பம்

  குறி செய்தேம் = பகற்குறி/ இரவுக்குறி போல…இங்கே இப்போ சந்திப்போம் ன்னு சொல்லும் Promise/ உறுதிமொழி
  = குறி சொல்வது-ன்னு இன்னிக்கி சொல்றோம்-ல்ல?:) அப்பறமா நடக்கப் போவதை, முன்னமே சொல்வது (அ) பேசி வைத்துக் கொள்வது!

  மடமொழி = மடம் -ன்னா என்னான்னு பார்த்தோம்! தாயார் பேச்சு கேளாது காதலே-ன்னு இருப்பது! = மடம்!
  மடமொழி = அப்படியான பண்பு/பேச்சுள்ள பெண் (பண்புத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை)
  ————-

  இப்போ பாட்டை, நீங்களே நேரடியா வாசிச்சிக்கிடலாம்!
  Two Two Lines; Coffee Urinjum Technique!:)

 4. anonymous says:

  இந்த நூல் = கார் நாற்பது!
  இது சங்க நூல் அல்ல! சங்கம் மருவிய நூல்!
  அதாச்சும் பதினெண் கீழ்க் கணக்கு!
  எட்டுத் தொகை/ பத்துப்பாட்டு = பதினெண் மேல் கணக்கு!

  பொதுவா, கீழ்க் கணக்கில், நீதிநூல்களே அதிகம் (Moral Science)! = நாலடியார், திருக்குறள் போல! (சமணத் தமிழ்)
  ஆனா, அதையும் மீறி, சில அகத்திணை நூலும் உண்டு! அதுல ஒன்னு தான் = கார் நாற்பது!

  முல்லை நில ஒழுக்கத்தை மட்டுமே பாடிய நூல்!
  = அவள் அவனே எனக் காத்து இருப்பது!

  மழைக்காலத்துக்கு முன்னான ஒரு பெண்ணின் ஏக்கங்கள், மழைக் காட்சிகள் ன்னு நிறைய இயற்கை!
  கார்த்திகை விளக்கீடு (எ) கார்த்திகை தீபம் பற்றிக் கூட இந்நூல் பேசும்!
  ————–

  (பி.கு: திருக்குறள் அறநூல்-ன்னு சும்மாச் சொன்னேன்! ஆனா அப்படிச் சொல்லீற முடியாது!
  அது எல்லாமே பேசிய முதல் தமிழ் நூல்! ஒரே நூலில் அகம்-புறம்-ன்னு ரெண்டுமே இருக்கும்! நீதியும் இருக்கும்!
  ஐந்திணைகள், தமிழ்நிலம்-ன்னு எல்லாம் கடந்து, அப்பவே ஒரு உலகப் பொதுநூலாச் செஞ்சது புரட்சியிலும் புரட்சி)

 5. மழை காலம் வந்துவிட்டது என்று வெறுமே சொல்லாமல் கவிஞர் கலை நயத்துடன், கடல் நீரை மேகம் கர்ப்பம் தரித்து, மேற்குப் பக்க மலை மீது மழையாக பிரசவிக்கிறது என்று கூறுகிறார்.

  அத்தருணத்தில் தான் திரும்பி வந்து விடுவதாகக் காதலியிடம் வாக்குக் கொடுத்திருக்கிறான் காதலன். காதலியோ சொன்ன வார்த்தையை அப்படியே நம்பும் பேதைப் பெண்! சொன்னபடி வராவிட்டால் மிகுந்தத் துன்பத்துக்கு ஆளாவாள்.

  பெண்கள் மனம் என்றுமே மலர் போன்று மென்மையானது. காதலன் மேல் கொண்ட அளவில்லாக் காதலால் சொன்ன நேரத்தில் அவன் வராவிட்டால் வாடிவிடும் மனது. அதைப் புரிந்துக் கொண்ட காதலன் விரைந்து செல்லும்படி தேரோட்டியைடம் சொல்வது, இவன் ஒரு நல்லக் காதலன் என்று நமக்கு உணர்த்துகிறது.

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s