ஓருடல்

பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழுமுகை

வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு

இருப்பின், இருமருங்கினமே, கிடப்பின்,

வில்லக விரலின் பொருந்தி, அவன்

நல் அகம் சேரின், ஒருமருங்கினமே

நூல்: குறுந்தொகை (#370)

பாடியவர்: வில்லக விரலினார்

சூழல்: மருதத் திணை. ஒரு கணவன், தன் மனைவியைப் பிரிந்து இன்னொருத்தி(பரத்தை)யுடன் வாழ்கிறான். இதனால், அவனுடைய மனைவி அந்தப் பரத்தையை இழிவுபடுத்திப் பேசுகிறாள், இதைக் கேட்டுக் கோபமுற்ற பரத்தை இப்படிச் சொல்கிறாள்

குளத்தில் ஆம்பல் அரும்பியுள்ளது. அழகான நிறத்தைக் கொண்ட அந்தக் கொழுத்த அரும்புகளை வண்டுகள் ஊதித் திறந்து மலரவைக்கின்றன. அப்படிப்பட்ட குளிர்ச்சியான நீர்த்துறைகளைக் கொண்டவன் என் காதலன்.

அவனோடு வாழும்போது, நாங்கள் ஈருடல், ஓருயிர் ஆனோம். அவனோடு இணையும்போது, வில்லை அழுத்திப் பிடிக்கும் விரல்களைப் போல் ஒருவரோடு ஒருவர் இறுகப் பொருந்தி, ஒரே உடலாகவும் மாறிவிடுகிறோம்.

துக்கடா

 • ’வில்லைப் பிடிக்கும் விரல்போலே’ என்பது ‘அந்த’ இறுக்கத்துக்கு அற்புதமான உவமை, அதனால்தான் இந்தப் பாடலை எழுதியவர் பெயர் தெரியாவிட்டாலும் ‘வில்லக விரலினார்’ என்றே அவருக்குப் பெயர் சூட்டிவிட்டார்கள்
 • இந்தப் பாடலுக்கு இன்னொரு வகை உரையும் சொல்கிறார்கள் ‘அவனோடு கூடும்போது நாங்கள் ஈருடல் ஓருயிர் ஆகிறோம், பின்னர் ஒன்றாகப் படுத்துத் தூங்கும்போது (கிடப்பின்) ஓருடலாகவும் ஆகிவிடுகிறோம்’ என்று. ‘உம்ம தேவை தீர்ந்ததும் போர்வை போர்த்தியே உறங்காதிக’ என்று ஒரு திரைப்பாடலில் வைரமுத்து எழுதியது இதைத்தானோ? 😉

267/365

This entry was posted in அகம், ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், உவமை நயம், காதல், குறுந்தொகை, கோபம், சினிமா, பரத்தை, பெண்மொழி. Bookmark the permalink.

21 Responses to ஓருடல்

 1. Karthik says:

  ஈருடல் ஓருயிர் என்ற சொல்லாடலை நாம் இன்று பயன்படுத்த தவறுவதில்லை..( நான் ஒரு நாலைஞ்சு பேர்ட்ட சொல்லிருக்கேன் 🙂 ).. அருமையான பாடல்.. என்னை என்னவோ செய்துவிட்டது.. ❤

 2. காதலனுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பரத்தை மனைவியிடம் show off பண்ணிக் கொள்கிறாள். அவரவர்க்கு தனித் தனி நியாயம்!

  //வில்லக விரலின் பொருந்தி// என நெருக்கத்தைச் சொல்லிய விதம் முகத்தில் அறைந்தார் போல தெளிவாக உள்ளது. இதைக் கேட்ட மனைவி பாவம் நொந்து போயிருப்பாள்.

  ஈருடல் ஓருயிர் என்பது நல்லக் காதலில் இருந்தால் நலம். கள்ளக் காதலில் இருந்தால்?

  amas32

  • anonymous says:

   இல்லைம்மா! showoff அல்ல!
   பாடலை, நுணுகிப் படிக்கும் போது தெரியும்! சொக்கரும் சரியாத் தான் போட்டிருக்காரு!

   சொக்கர் குடுத்திருக்கும் பாட்டின் சூழலைப் பாருங்க!
   //இதனால், அவனுடைய மனைவி அந்தப் பரத்தையை “இழிவு”படுத்திப் பேசுகிறாள்; இதைக் கேட்டுக் கோபமுற்ற பரத்தை இப்படிச் சொல்கிறாள்//

   அதாச்சும் இவ=’இல் பரத்தை’
   May be, மனைவிக்குக் கணவனாகும் முன்னரே, இவர்கள் காதல்/அன்பு இருந்திருக்கலாம்!
   ஆனா, மனைவியோ பலர் முன்னிலையில் ஏசுகிறாள் (மனைவியின் கஷ்டம் மனைவிக்கு) = “பரத்தை தலைவனைப் புறம்போகாவாறு பிணி போல் பிணித்துக் கொண்டாள்” ன்னு கடுமொழிகள் சொல்ல….

   அது பரத்தையின் காதுகளுக்கு வருகிறது! ஆனாலும் சக்களத்திச் சண்டை-ன்னு வம்புக்குப் போகாமல், நேரடியா மனைவியிடம் பேசி விடாமல், பொதுவானவர்களிடம் சொல்கிறாள்! என்னா-ன்னு?
   = “நல் அகம்”! (மனைவியின் வீடு நல்-அகம்)
   ————-

   நான் வெறும் வில் தான்!
   அதை இயக்குபவனோ அவன்!

   * அவன் இயக்கும் போது, அவனோடு ஒன்றே போல் பொருந்தி இருப்பேன்! (ஈருடல் ஓருடல்)
   *ஆனா, அவன், உன் “நல்-அகம்” சேர்ந்து விட்டால், நான் தனித்தே இருந்து கொள்கிறேன்! (வெறும் ஓர் உடல் தான்; இன்னொரு உடலை நாடேன்)

   பாட்டின் துறை இது தான் = //தலைவன் ஈண்டு இருப்பின் அவனோடு பொருந்தியும்….அவன் பிரியின் யாம் தனித்தும் இருப்பேம்……என்று கூறியது//

  • anonymous says:

   “பரத்தை” என்ற பேரைப் பார்த்தவுடன், நமக்கு இப்படிச் சொல்லி விடத் தோனுகிறது! தப்பில்லை, இயற்கை தான்! Society!
   ஆனால், இல்-பரத்தை வேறு! அவள் “கற்பை”, கடவுளே அறிவார்!

   வண்டாய், அரும்பைத் துளைத்துத் திறப்பதும் இவனே!
   வில்லை, இயக்குவதும் இவனே!
   அவன் இயக்கிய பின், மலரோ/வில்லோ….எங்கும் நாடாமல் “தனித்தே” தான் இருக்கிறது!

   தன்னை ஏசினாலும், “நல்-அகம்” என்று தான் அவன் வீட்டைச் சொல்லும்!
   “நல்-அக” விளக்கது நமசிவாயவே! முருகா….

  • anonymous says:

   //உம்ம தேவை தீர்ந்ததும் போர்வை போர்த்தியே உறங்காதிக’ என்று ஒரு திரைப்பாடலில் வைரமுத்து எழுதியது இதைத்தானோ?//

   சுத்திச் சுத்தி வந்தீக – பாட்டு தானே?:))

   படையப்பா என்பதால் சின்ன பசங்களும் இதைப் பாடும்! even my sister ponnu!:)
   ஏய், பாடாதடீ-ன்னா கேக்க மாட்டா;
   சரி…பெரியவளானதும், “அச்சோ, இதையா எல்லார் முன்னாடியும் பாடுனோம்”?-ன்னு நீயே தெரிஞ்சிக்கப் போற-ன்னு விட்டுருவேன்:))))
   Even my thozhan’s sisters have 3 kutty ponnus:)

 3. ஆனந்தன் says:

  ஆம்பல் மலரை வண்டு தேடிச் செல்வது பரத்தையைத் தேடிச் செல்லும் கணவனுக்கு உவமை போலாகிறது.
  மற்றும், அம்பு எய்யப்படும்போது மட்டும்தான் வில் அவ்வாறு இறுக்கிப் பிடிக்கப் படுகின்றது! அதனால், நீங்கள் உரையில் கூறிய விளக்கமே சரியாகப் படுகிறது! இன்னும் விளக்கினால் விரசமாகும்; அதனால் விலக்குகிறேன்!

 4. anonymous says:

  முருகா….
  என்னவொரு அடர்த்தி இந்தப் பாட்டில்!
  இது குறுந்தொகையா? நறுந்தொகையா? பெருந்தொகையா? இல்லை விருந்தொகையா?

  “வில்லக விரலின் பொருந்தி” – அடா அடா அடா….
  இதுக்காகவே, இப்பவே, வில்லு விட்டுப் பாக்கணும் போல இருக்குடா முருகா:))
  ————–

  பாட்டையே நேரடியா வாசிங்க! அதே காபி உறிஞ்சும் technique, 2-2 lines at a time
  அருஞ்சொற்பொருள் கீழே:

  பொய்கை=நீர்நிலை (இயற்கையானது)
  ஆம்பல்=அல்லிப் பூ
  முகை=அரும்பு
  மருங்கு=உடல், பக்கம்
  ————–

  பொய்கை வேற, குளம் வேற
  குளம்=மனிதர்கள் வெட்டிக் கட்டுவது! பொய்கை=இயற்கையில் தானாய் அமையும் நீர்நிலை
  சரவணப் “பொய்கை” ன்னு சொல்வதும் அதைத் தான்!

 5. anonymous says:

  சொக்கர் சொன்ன பொருளில் இருந்து சற்றே மாறுபடப் போகிறேன்!:)) ஏன்னா பாட்டின் கடைசியில்…ஒரு வரியை விட்டுட்டாரு = “அவன் நல் அகம் சேரின்”

  இது ’ஈருடல் – ஓர் உயிர்’ பாட்டே அல்ல!
  = இது ’ஈருடல் – ஓர் உடல்’ பாட்டு 🙂

  பாட்டை நீங்களே பாருங்க…
  ———–

  * இருப்பின், இருமருங்கினமே = அவனோடு இருக்கும் போது இரண்டு உடல்கள்
  * கிடப்பின், வில்லக விரலின் பொருந்தி = ….
  * அவன் நல் அகம் சேரின், ஒருமருங்கினமே = அவன், தன் வீட்டுக்குப் போய் விட்டாலோ, ஒரே உடல் தான்!

  = இருமருங்கினமே – ஒருமருங்கினமே
  = ஈர் உடல் – ஓர் உடல்
  உயிரைப் பற்றிய பேச்சே இல்லை! உடல் தான் பேச்சு; ஏன்னா…பரத்தை பாடுவது அல்லவா!:)))

 6. anonymous says:

  Coffee kudiching start…

  * பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழுமுகை = இயற்கையான நீர்நிலையில், ஆம்பல், அதன் முகை-அரும்பு
  * வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு = அதை வண்டு வாய் வைச்சி திறக்குது…(மலர் இயற்கையா விரியணும்; இங்கே வண்டு செயற்கையா விரிக்குது)
  ————

  எப்படி Opening Scene?
  பரத்தை, அவள் இல்லம் = அதை எப்படிக் காட்சிப் படுத்துவது? அதுவும் இரண்டே வரிகளில் (குறுந் தொகை அல்லவா)

  குளம் = செயற்கை; பொய்கை = இயற்கை
  பொய்கை = இயற்கையான நீர் நிலை; அதுல செயற்கையா விரிக்கும் கலை தெரிஞ்சவ:)
  ஆம்பல் = தாமரை-ன்னு பாடல; ஆம்பல் = அல்லி! இராத்திரி நேரப் பூ:)

  கொழு முகை = நல்ல செழிப்பான, ஈரம் கசியும் அரும்பு
  (அரும்பு-லயே மொத்தம் மூனு நிலை = நனை, முகை, மொக்குள்)
  ஒரு அரும்பு எப்படி விரியும்?

  பாத்திரத்தில் சுடுதண்ணி காய்ச்சும் போது, பாத்து இருக்கீங்க தானே? தட்டு போட்டு மூடுங்க! என்ன ஆகும்? = தட்டு திறக்கும்:)
  அரும்புக்கு, நீரும் இருக்கணும்(dew), மெல்லிய சூடும் இருக்கணும் (from sun/moon); அப்போ படக்-ன்னு விரியும்!

  இப்படி இயற்கையா விரிவதற்கு முன்பே, வண்டு வந்து சூடு ஏத்துதாம்:))
  வண்டுக்கு அதீத காமம் போல!
  இயற்கையா விரியப் போவதை, செயற்கையா முன்கூட்டியே விரிக்கப் பாக்குது!
  = வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரன்!
  அடா அடா அடா! இது தான்டா குறுந்தொகை!:) Opening Scene of a Brothel in just 2 lines!:)

  • anonymous says:

   பூ என்பது பொதுவான பெயர்! ஆனா அதுக்குப் பல நிலைகள்! அதைத் தமிழ் படம் பிடிச்சிக் காட்டும்!

   * அரும்பும் போது = அரும்பு
   -அது அரும்பி பனியில் நனையும் போது = நனை
   -அது நனைந்து முத்தாகும் போது = முகை!
   -அது வெடிக்கத் தயாரா இருக்கும் போது = மொக்குள்!

   * அரும்பி, விரிந்து கொண்டே இருக்கும் போது = போது
   * மணம் வீசத் தொடங்கும் போது = முகிழ்
   * மலர்ந்த பின் = மலர்
   * இன்னும் நல்லா மலர்ந்து, மகரந்தம் அலரும் (பரவும்) போது = அலர்

   * கூட்டமாய் மலர்ந்தால் = பொதும்பர்
   * வீழும் போது = வீ
   * உதிர்ந்து கிடக்கும் பூக்கள் = பொம்மல்
   * பழுப்பாய் வாடிய பின் = செம்மலர் (செம்மல்)

 7. anonymous says:

  இப்போ மேட்டருக்கு வருவோம்! அட….பாட்டின் முக்கியமான மேட்டருக்கு வருவோம்-ன்னு சொன்னேன்:))

  = வில்லக விரலின் பொருந்தி

  நாம எத்தினி பேரு வில்லு (அம்பு) விட்டுருக்கோம்?:)
  ஊர்த் திருவிழா-வுல, மரவில்லு – களிமண் உருண்டை அம்பு விப்பாய்ங்க! அதை விளையாடி இருந்தாலும் ஓரளவு புரிஞ்சீரும்!

  வில் = எப்பமே அதை நல்லா வளைக்கணும்! வளைச்சித் தான் நாண் ஏத்தணும்!
  சில சமயம், பெரிய வில்-ன்னு, கால் விரலில் ஊன்றிக் கொள்வதும் உண்டு!
  ——————

  * ஒரு கை, வில்லின் வளைவைப் பற்றி இறுக்கும் = அது போல அவளை வளைக்கிறானாம்
  * மற்றொரு கை நாணைச் சுண்டி இழுக்கும் = அது போல அவ உணர்ச்சி நரம்பை இழுக்கிறானாம்

  :)))
  ஒரே நேரத்தில், இரண்டையுமே செய்யணும் = வளைத்தல் + இழுத்தல்
  ஆனா அதே சமயம், இதைப் பாத்துக்கிட்டு, இலக்கைத் தவற விட்டுறக் கூடாது! இலக்கைத் தான் பார்க்கணும்;
  கண், கை, மனம்-ன்னு தனித்தனியா இயங்கினாலும், எல்லாமே ஒன்னா இயங்கும் வித்தை! = வில் வித்தை!

  ச்சீ…போடா முருகா! வெட்கம் வெட்கமா வருது! இதுக்கு மேல நான் பேசலை!:)))

  • anonymous says:

   என்னவொரு உவமை = வில்லக விரலின் பொருந்தி!!

   பொதுவா வீணை மீட்டல்-ன்னு தான் உவமை சொல்வாங்க; வீணை மென்மையானது!
   ஆனா வில்லக விரல் = நுட்பமான உவமை! ஆண்மை மிக்கது, முருகவனைப் போலவே!

   வில்லக விரலனாரே…நீர் சொல்லக விரலனாரும் கூட! – நீர் வாழ்க!

 8. anonymous says:

  continue the coffee kudiching….

  * தண் துறை ஊரனொடு, இருப்பின், இரு மருங்கினமே = அவனோடு இருக்கும் போது இரண்டு உடல்கள்

  * கிடப்பின், வில்லக விரலின் பொருந்தி = அவனோடு கிடக்கும் போது, இரண்டு உடல்கள், ஒன்றி ஒன்றாகி..”வில்லக விரலின்” போலே

  * அவன் நல் அகம் சேரின், ஒரு மருங்கினமே = அவன், தன் வீட்டுக்குப் போய் விட்டாலோ, ஒரே உடல் தான்! (ஏக்கம்)
  ————–

  பரத்தையே “நல் அகம்” ன்னு சொல்லுறா பாருங்க! அதாச்சும் அவன் “பெரிய” வீட்டுக்குப் போயிட்டா, இங்கு இருப்பது ஒரே உடல்-ன்னு ஏங்கித் தவிக்கிறா!

  ஏன் தவிக்கணும்? பரத்தை தானே! இன்னொருவனைப் பிடிச்சிக்க வேண்டியது தானே!
  இங்கே தான், சங்க கால வாழ்வியலை அணுகிப் பார்க்கணும்! = இந்தப் பாட்டில், இவள் இல்-பரத்தை! (நயப்புப் பரத்தை அல்ல)
  ————–

  • anonymous says:

   அதாச்சும் அவனையே சார்ந்து வாழும் = இல் பரத்தை!

   பரம்பரை பரம்பரையாகவோ, கலை-ஆன்மீகம் ன்னு வேடம் போட்டுக்கிட்டு தேவ-தாசி என்றோ…அமைப்பு ரீதியாக, சங்கத் தமிழில் கிடையாது!
   அவரவர் சூழ்நிலை ஒட்டி அமைந்த ஒன்றை, மதத்தின் பேரால் நிறுவனப்படுத்தல் கிடையாது! தாசி மகள் தாசி என்பதும் கிடையாது!
   ———-

   நயப்புப் பரத்தைகள் வேறு…அவர்களைச் சங்கக் கவிஞர் பெரும்பாலும் பாடார்!
   நயப்பு = விரும்பியே பரத்தையாக இருப்பது, பலருக்கும்! பொருளால் பற்று! காதலால் அல்ல!
   இன்னொருவரின் கணவன்/மனைவி என்று தெரிந்தே, பற்றி இழுப்பது/பற்று வைப்பது!
   ———-

   ஆனால் இற்பரத்தை அப்படி அல்ல!
   இந்தப் பாட்டிலும் பாருங்க! தலைவன் வீட்டை “நல்-அகம்” ன்னு தான் சொல்லுவா! ஏசல், பொறாமை, கீழ்க்குணம் இருக்காது!

   சில சமயம், இப்படிப் பாதை மாறி விடுவதுண்டு, “சிலர்” வாழ்க்கையில்! ஆனா சமூகத்தில் இது ஒரு = exception!
   முன்னாள் காதல், பின்னாள் இறுகிய நட்பு…இப்படி ஏதோ ஒன்னால், அவனே எல்லாம் ன்னு ஆயிட்டா! = இற்பரத்தை!
   சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனுக்கு வேறு இடத்தில் மணமாகி விட்டாலோ..இவள் இப்படி ஆகி விடுவதும் உண்டு!

   இது போன்ற இற்பரத்தைகள் வாழ்வை அணுகிப் படிக்கும் போது, மனசுக்கு ரொம்பக் கடினமா இருக்கும்!
   * அவனும், பிள்ளைச் சுமை, சுயநலம்-ன்னு வரும் போது விட்டு விடுவான்!
   * இவள் அவனே என்று இருந்ததால், வேறு யாருடனும் பழகாததால், தனவான்-ஊரின் ஆதரவும் இருக்காது

   தனிமையில் இறப்பாள்!
   அப்போதும் காதலைத் துறப்பாள்? = அவனே! முருகா…

 9. ஆனந்தன் says:

  நன்றி, இந்த விளக்கத்துக்கு! முதலில் பாட்டின் பொருளை வாசித்தவுடன் நல் அகம் எனறால் என்ன என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை அவனுடைய நல்ல இதயம்/மனம் ஆக இருக்கலாம் என்று முடிவெடுத்தேன். இப்போது புரிகிறது.
  இந்த பெணணைப் பரத்தை என்று கூறுவது எதற்காக? தன்னுடையதில்லாத, பர புருஷனை நாடி வாழ்வதால் தானே?
  //சங்கத் தமிழில்….தாசி மகள் தாசி என்பதும் கிடையாது//
  //நயப்புப் பரத்தைகள்….இன்னொருவரின் கணவன்/மனைவி என்று தெரிந்தே, பற்றி இழுப்பது/பற்று வைப்பது//
  மாதவி ஒர் இல் பரத்தையா? ஆனால் அவள் தாசி குலம்; இன்னொருவரின் கணவன் என்று தெரிந்தே கோவலனை விரும்பியவள் அல்லவா?

  • anonymous says:

   //மாதவி ஒர் இல் பரத்தையா?//
   🙂
   ஆமாம்!

   //ஆனால் அவள் தாசி குலம்//

   மாதவியின் தாய் = சித்திராபதி, ஒரு நயப்புப் பரத்தை! தன் மகள் மேலும் திணிக்கப் பார்க்கிறாள்!
   அது சங்க காலம் அல்ல! கலப்புகள் நிகழத் துவங்கி விட்ட…பிற்காலம்!
   ஆனால் மாதவியோ, மணிமேகலை மேல் எதையும் திணிக்காமல், அவள் போக்கில் விட்டுவிடுவாள்!
   ———–

   //இன்னொருவரின் கணவன் என்று தெரிந்தே கோவலனை விரும்பியவள் அல்லவா?//

   அல்ல!
   மாதவியின் பரிசுமாலையைக் கோவலனே காசு குடுத்து வாங்குவான்! 1008 கழஞ்சு! அப்படி நகர நம்பிகளின் வீதியில் விற்கச் சொல்பவள் = மாதவியின் தாய், சித்திராபதி!
   இவனும், கண்ணகி அங்கு காத்துக் கிடக்கிறாள் என்று தெரிஞ்சே தான் வாங்குறான்! ஆண்மகனின் ’கண்டவுடன் காதல்/காமம்’ அப்படி!:((

   கோவலன் தன் வீட்டுக்கு வரும் போது, மாதவிக்கு, அவன் யாரென்றே தெரியாது! மாலையை வாங்கியவன் அவ்வளவே!
   ஆனால், கோவலன் பாட்டிலும், அழகிலும் மனம் பறி குடுத்து விடுகிறாள்!
   பிறகே தெரிகிறது….
   ஆனால் மனம் பறிகுடுத்தது குடுத்தது தானே! இறுதி வரை கோவலனை எண்ணியே வாழ்ந்து மடிகிறாள்!
   ————-

   இல்-பரத்தைகளில் பல வகை உண்டு
   * முன்பே செய்த காதல் கை கூடவில்லை; அவன் மாறி மணம் புரிந்து கொள்கிறான்! ஆனாலும் தொடர்கிறான், சில நாள் கழித்து விடுகிறான்!
   * மணமானவன் என்று அறியாமல், புதிதாகக் காதல் கொள்ளும் இல்-பரத்தையர் (மாதவி போல)

   எப்படிப் பார்க்கினும், ஆணின் “ஆசையால்” அலைக் கழிந்த பெண்கள் இவர்கள்! ஆனாலும் “ஒரு நெறியில்” நிற்கிறார்கள்!

  • anonymous says:

   பரத்தை = பெண்கள் மட்டுமல்ல! ஆண்களும் உண்டு!
   தன்வயின் உரிமையும், அவன்வயிற் பரத்தையும்
   அன்னவும் உளவே ஓரிடத் தான – என்பது தொல்காப்பியம்!

   பரத்தல் = பரவுதல்
   ஒன்றில் மட்டும் நின்று விடாமல், பலவாறு பரவுதல்->பரத்தல்->பரத்தை!

   இல்-பரத்தை, ஒன்றில் நின்று விட்டாளே, அவளை ஏன் பரத்தை-ன்னு சொல்லணும்?-ன்னா…அதான் சமூகம்!
   அவள் ஒன்றில் நின்றாலும், இன்னொருவரின் ஒன்றில் பரவினாள் என்பதால்=பரத்தை என்றே பேரிட்டு அழைத்தது!:((

   சொல்லப் போனால், மனைவி தான் இன்னொருவரின் ஒன்றில் பரவினாள்; இதுவோ மணம் ஆவதற்கு முன்பே, மலர்ந்த காதல்
   ஆனால் சமூகம் நடத்தி வைத்த திருமணம் என்பதால், சமூகத்தின் மொழியே செல்லுபடி ஆகும்! அதனால் முன்னவள்=பரத்தை:((
   ————-

   என்ன, ’இல்-பரத்தை’ என்று, சற்று மரியாதையாக நடத்தியது! அவ்ளோ தான்! ஆனா மரியாதையா சோறு போடும்?
   இவன், பிள்ளை-குட்டி என்று வந்தவுடன், சுமையால் விட்டு விடுவான்; சமூகமோ பரத்தை என்று அழைத்து விட்டதால்=ஒதுக்கப்பட்டவள்!

   சரி, எப்படியும் பரத்தை-ங்கிற பேரு தான் வரப் போவுது; So, அந்தத் “தொழிலுக்கே” திரும்பி விடலாமா?
   ஊஉம்! மாட்டவே மாட்டாள்! = அவனே!
   பாணர், விறலியர்-க்கு இசை கோர்த்துக் குடுத்து, அதில் வரும் ஊதியத்தில் வாழ்ந்தவர்கள் உண்டு!

   இந்தச் சங்கப் பாடல்களில் மனசு வலிக்கும்!
   சுந்தராம்பாள் கிட்டப்பாவுக்கு எழுதிய கடிதங்களின் கெஞ்சல்….இன்னும் வலிக்கும்! muruga, you are a big rascal…

   வாழ்வில் எது வரினும் = அவனே!……..என்று தனிமையில் இருந்த/இறந்த இல்-பரத்தைகள்…

   • பரத்தையில் இரு வகை உண்டு என்பதை இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். ’இல்-பரத்தை’ வாழ்வு கடினமானதாக இருக்கும் போலிருக்கிறதே.
    amas32

 10. ஆனந்தன் says:

  தெளிவான பதில்களுக்கு நன்றி! அப்போ ஆண்களிலும் ‘இல் பரத்தைகள்’ இருக்கிறார்கள்! ஆனால் இந்தப் பெண்களை போலல்லாது, மனதால் மட்டுமே தன் காதலியை நினைத்து வாழ்பவர்கள். எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார், கனடாவில். எல்லோருக்கும் தெரிந்த பல கதாபாத்திரங்களும் உள்ளனர். நெஞ்சில் ஒர் ஆலயம் – கல்யாண்குமார்; சலங்கை ஒலி – கமல்ஹாசன்; எதோ படத்தில் தனுஷ் வசனம்:
  Ticket inspector: இவர் யாரு?
  Thanush: அவளோட ஹஸ்பன்ட்
  Ticket inspector: அவ யாரு?
  Thanush: என்னோட காதலி!

 11. anonymous says:

  @amas32 , ஆனந்தன்
  ஏதேனும், தவறாகச் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்!

  @amas32
  புரிந்து கொண்டமைக்கு நன்றி-ம்மா!
  “பரத்தை” குறித்து இங்கு பேச, சற்று நெருடலாய்த் தான் இருந்தது; இருப்பினும் புரிந்து கொள்வீர்கள் என்ற துணிவில் பேசி விட்டேன்…

  @ஆனந்தன்
  “சுந்தராம்பாள் கடிதங்கள்” ஒன்னே போதும் – இது போன்ற பெண்கள்/ஆண்கள் மனநிலையைப் புரிந்துகொள்ள….
  சுந்தராம்பாளின் அந்தக் கடிதக் கெஞ்சல்….என்னமோ செய்யுது

  கனடாவில் இருக்கும் ‘உங்களுக்குத் தெரிந்தவர்” க்கு என் கை கூப்பிய வணக்கங்கள்! முருகன் அவருக்கு நன்னிலை அருளட்டும்!

 12. duraionline says:

  Reblogged this on Durai’s Blog.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s