பண்புள்ள அவை

நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து

வல்லார் ஆயினும், புறம் மறைத்து, சென்றோரைச்

சொல்லிக் காட்டிச் சோர்வு இன்றி விளக்கி

நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும்…

நூல்: மலைபடுகடாம் / கூத்தர் ஆற்றுப்படை (வரிகள் 77 முதல் 80வரை)

பாடியவர்: இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

சூழல்: பாடாண் திணை, ஆற்றுப்படைத் துறை, நன்னன் வேண்மானைச் சந்தித்துப் பரிசு பெற்று வருகிறார் ஒரு கூத்தர். வழியில் இன்னொரு கூத்தர் எதிர்ப்படுகிறார். அவரிடம் இவர் அந்த மன்னனின் பெருமைகளைச் சொல்கிறார்

அந்த அரசனின் அவையில் நன்கு படித்தவர்கள் நிறையக் கூடியிருக்கிறார்கள். அவர்கள் பலவிதமான விஷயங்களைச் சுவையாகப் பேசுகிறார்கள், காரசாரமாக விவாதிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட அந்த அவைக்கு ஒருவர் புதிதாகச் சென்றால், கொஞ்சம் சிரமம்தான். ‘இந்தப் புத்திசாலிகளுக்கு மத்தியில் நாம் என்ன பெரிதாகப் பேசிவிடமுடியும்?’ என்று அந்தப் புதியவர் தயங்குவார், அவருடைய பேச்சு தடுமாறும்.

அதுமாதிரி நேரங்களில், அந்த அவையினர் கர்வம் கொள்வதில்லை. புதியவரைக் கேலி செய்து சிரிப்பதில்லை, அவமானப்படுத்துவதில்லை. அவருடைய நிலைமையைப் புரிந்துகொள்கிறார்கள். உதவ முன்வருகிறார்கள். அவர் சொன்னதைத் தெளிவாகத் தாங்களே மீண்டும் எடுத்துச் சொல்லி எல்லாருக்கும் புரியவைக்கிறார்கள். அந்தப் புதியவருக்குப் பெருமை தேடித் தருகிறார்கள், கௌரவிக்கிறார்கள்.

துக்கடா

 • இந்தப் பாடலின் பெருமை உங்களுக்குப் புரியவேண்டுமென்றால், நீங்கள் ஒரு புதிய இடத்துக்குச் சென்று பேச முயன்றிருக்கவேண்டும், அங்கே உள்ள எல்லாரும் அதிபுத்திசாலிகளாகக் கனமான விஷயங்களை விவாதிப்பது கண்டு திகைத்து நின்றிருக்கவேண்டும், ’இங்கே நாம் என்ன பேசுவது?’ என்று தடுமாறியிருக்கவேண்டும். அல்லது, விஷயம் புரியாமல் எதையாவது உளறிக்கொட்டி மாட்டிக்கொண்டிருக்கவேண்டும்
 • உதாரணமாக ஓர் அலுவலகக் கூட்டம், புதிதாக வந்த ஒருவர் ஏதோ ஒரு விஷயத்தை / யோசனையை முன்வைக்கிறார். அவருக்கு அது புதுமையான சமாசாரம், ஆனால் மற்றவர்களுக்கு அப்படியில்லை, எல்லாருக்கும் தெரிந்த Obvious விஷயம்.
 • ஆகவே, ‘என்னய்யா இந்தாள் இப்படி Sillyயாப் பேசறான்?’ என்று எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள், அவரைப் பரிதாபமாகப் பார்த்தபடி ‘தம்பி, நீ இந்த ஏரியாவுக்குப் புதுசு, அதான் இப்படி!’ என்கிற தொனியில் பதில் சொல்கிறார்கள்.
 • யோசித்துப்பாருங்கள், அந்த மனிதர் அதன்பிறகு எதற்காவது வாய் திறப்பாரா? ‘இந்தக் கம்பெனியே வேண்டாம்’ என்று அவர் ஓடிப் போனால்கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை, அது அந்த நிறுவனத்துக்கு நல்லதா?
 • ஆக, நாம் என்னதான் புத்திசாலிகளாக இருந்தாலும் சரி, அடுத்தவர்கள் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது அது எத்தனை சாதாரணமாக இருந்தாலும் அதற்காக அவர்களை இழிவுபடுத்தாமல் இருப்பது ஒரு நல்ல பண்பு
 • இதைவிடவும் சிறந்த பண்பு ஒன்று உண்டு, இன்றைய பாடல் சுட்டிக்காட்டுவது அதைதான்: ஒருவர் அவைக் கூச்சத்தினாலோ அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ ஒரு விஷயத்தைச் சரியாகச் சொல்லவராமல் தடுமாறினால், இந்தப் ‘புத்திசாலி’கள் கொஞ்சம் இறங்கிச் சென்று அவருக்குக் கை கொடுக்கவேண்டும், ‘நீங்கள் சொல்ல விரும்பியது இதைத்தானே?’ என்று அவர்களது கருத்தை விரிவுபடுத்திச் சொல்லி மற்றவர்களுக்குப் புரியவைக்கவேண்டும் (ஏனெனில் இந்த அவையில் இவர் Senior, எப்படிச் சொன்னால் பிறருக்கு விளங்கும் என்பது இவருக்குதானே தெரியும்?)
 • முக்கியமான விஷயம், இப்படி விளக்கிச் சொல்வதன்மூலம் அந்த யோசனைக்குக் கிடைக்கும் கைதட்டல்கள், அந்தப் புதியவருக்குதான் உரியவை என்பதை அவர் தெளிவுபடுத்தவேண்டும், இல்லாவிட்டால் உதவி செய்யும் மனப்பான்மையைவிட ‘நீ சொன்ன அல்ப மேட்டரை நான் எப்படி அழகுபடுத்திச் சொன்னேன் பார்த்தியா?’ என்கிற கர்வம்தான் முன்னால் நிற்கும்
 • இதில் இன்னொரு நன்மை, இப்படி அனுபவமுள்ள ஒருவர் தங்களுடைய பேச்சை மெருகேற்றிச் சொல்லும்போது, அந்தப் புதியவர் அவமானமாக உணரமாட்டார், கற்றுக்கொள்ள நினைப்பார், அடுத்தமுறை கூடுதல் தன்னம்பிக்கையுடன் பிழைகளைத் திருத்திக்கொண்டு இன்னும் சிறப்பாகப் பேசுவார்
 • தகவல் தொடர்பு(Communication / Presentation)த் திறன், Empathy, கர்வமின்மை, அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை, Mentoring என்று சகலத்தையும் நாலே வரிகளில் கொண்டுவந்துவிட்ட சங்கப் பாடலுக்கு நன்றி :>
 • ’மலை படுகடாம்’ என்ற பெயருக்கு இருவிதமான விளக்கங்கள் சொல்லப்படுகிறது:
 • 1. ‘கடாம்’ என்றால், அருவி விழும் ஓசை, ‘மலை படுகடாம்’ என்பது, மலை அருவியிலிருந்து தண்ணீர் கொட்டும் ஒலியைக் குறிக்கிறது
 • 2. ‘கடாம்’ என்றால் யானையின் மத நீர், அந்த மலையில் ஏகப்பட்ட யானைகள் வாழ்கின்றன, அவை அனைத்தும் சிந்துகின்ற மத நீர் ஒரு நதியைப்போல் ஓடி அருவியைப்போல் விழுகிறது என்கிற பொருளிலும் இந்தப் பெயர் வந்திருக்கலாம்
 • கூத்தர் ஒருவர் தனக்கு உதவிய வள்ளலை இன்னொருவருக்கு அறிமுகப்படுத்தும் நூல் என்பதால் இதற்குக் ‘கூத்தர் ஆற்றுப்படை’ என்றும் இன்னொரு பெயர் உண்டு (ஆற்றுப்படை = Introduction / Recommendation / சிபாரிசு, இன்ஃபோசிஸில் வேலை செய்யும் ஒருவர் அதன் சிறப்புகளைத் தன் நண்பருக்குச் சொல்லி அங்கே Interview attend செய்யத் தூண்டினால், அது இன்ஃபோசிஸாற்றுப்படை :>)

264/365

Advertisements
This entry was posted in ஆற்றுப்படை, பண்பு. Bookmark the permalink.

21 Responses to பண்புள்ள அவை

 1. சூப்பர் விளக்கம் திரு. சொக்கரே! நீங்கள் ஒரு தலை சிறந்த மேலாளராக இருக்கிறீர்கள் என்று இந்த விளக்கத்தில் இருந்து நான் தெரிந்து கொள்கிறேன். Not every one has the skills to be a mentor.

  ஒரு புதிய அவையில் சான்றோர்கள் முன் பேச முயற்சிக்கும்போது மட்டுமல்ல எழுத முயற்சிக்கும்போதும் இந்த ஏளனம் நிகழலாம். அதற்கு நான் சிறந்த உதாரணம். அவை: 365பா. இங்கு பாடலைப் பதிவேற்றி விளக்கம் அளிப்பவரும், வந்து படிப்பவர்களும், பின்னூட்டம் இடுபவர்களும் ஆகச் சிறந்த தமிழ் அறிஞர்களாக இருப்பினும் நான் எழுதுவதை ஒருவரும் ஏளனம் செய்யாமல் வரவேற்பதால் தான் நானும் தைரியமாக எழுதப் பழகுகிறேன். அதற்கு அனைவருக்கும் நன்றி 🙂

  நாம் சொல்ல நினைப்பதை சொல்லத் தெரியாமல் விழிக்கும் போது, நமக்கு உதவ வரும் சான்றோர்கள் அதை சிறப்பாக அவையில் எடுத்துரைக்கும் போது நமக்கு தன்னம்பிக்கை வளர்கிறது. ஒரு ஏளனச் சொல் போதும் ஒருவரின் மனதை புண்படுத்தி அவ்விடத்திற்கு மறுமுறை வராமல் பண்ணுவதற்கு. நமக்கு ஒருவர் உதவி செய்து நம் திறனை வெளிக் கொண்டு வருவதை நாம் வாழ்வில் அனுபவித்திருந்தோம் என்றால் நாமும் அதே சூழ் நிலையில் உள்ள பிறருக்கும் பின்னாளில் உதவி செய்வோம்.

  பெரிய நடிகர்கள், இசையமைப்பாளர்கள் போன்றோர்கள் கூட நல்ல எண்ணத்துடன் புதியவர்களை கைத் தூக்கிவிடுவதால் தான் அந்தந்தத் துறையில் சிறந்த புதிய தலைமுறை உருவாகிறது!

 2. anonymous says:

  பெரிய பாட்டுக்குச் சிறிய துக்கடா
  சிறிய பாட்டுக்குப் பெரிய துக்கடா

  இது ஒன்னே போதும்….நீங்கள் என் போன்ற சிறியவர்களை அவையில் கைதூக்கி விடும் குணத்தைச் சொல்வதற்கு…

  பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
  சுருக்கத்து வேண்டும் உயர்வு
  -அ.அ.க.சந்திரன் (அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியெபெருமாள் சந்திரன்) :))

  • anonymous says:

   #365paa is the best example for such a situation

   இங்கே ஒன்றை எழுதும் போது, எனக்குச் சற்றே பயமாய் இருக்கும்! ஏன்-ன்னா இது தமிழ் அவை!
   அதுவும் கொலவெறிடீ தமிழ் அல்ல!:) அத்தனையும் சங்கத் தமிழ், மரபுத் தமிழ், High Quality தமிழ்!

   நானோ, லோக்கலா எழுதுவேன், ஆங்கிலம் இடையிடையே ஊடாடும், போதாக் குறைக்கு சிரிப்பான்கள் போட்டு…
   அதுவும் இப்போது இணையம் அதிகம் இல்லாமையால், நினைவில் இருந்து மட்டும் சொல்லுறது வழக்கமாயிருச்சி…unable to cross check before writing…

   எனினும்,
   நான் சொல்லுறேன் என்பது நோக்கம் அல்ல!
   நல்லது பகிர்கிறோம் என்பதே நோக்கம்!

   அதனால், அப்படீயே பயப்படாமச் சொல்லீடறது!
   இப்பல்லாம் எனக்குப் பேரு வேற இல்ல பாருங்க! அதுனால யாரும் பேர் சொல்லித் திட்டீற முடியாது:)))

  • anonymous says:

   knowing is one thing!
   sharing is another thing!
   when common ppl “share”, they need “mentoring”! only then there will be growth!

   and when u mentor…
   you actually dont mentor others
   you mentor your own thought process!
   ————

   mentoring = நல்ல தமிழ்ச் சொல் = குரவு
   mentor = குரவர்
   (இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே)

  • anonymous says:

   இந்தச் சமயத்தில், 365paa என்னும் “சொக்கராற்றுப்படை” – அதுக்கு என் தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

 3. anonymous says:

  பாட்டுக்கு வருவோம்!
  அவை அஞ்சாமை is always a big matter!

  பகையகத்துச் சாவார் எளியர்; அரியர்
  அவையகத்து அஞ்சா தவர்
  -ன்னு திருக்குறள் கூடப் பயமுறுத்தும்:))
  போரில் கூடச் சண்டை போட்டுறலாம்! ஆனா ஒரு அவையில் பேசுவது என்பது….

  இப்படியெல்லாம் திருக்குறளே பயமுறுத்தினா, ஒருத்தன் எப்படி முன்னேறுவது? அவையில் பேசுவது?
  ———

  நல்லாப் பாருங்க! அவையில் பேசக் கூடாது-ன்னு சொல்லல! அவை அஞ்”சாமை” dont fear ன்னு தான் சொல்லுது!
  அதாச்சும், அச்சத்தோடு கூடிய அஞ்சாமை!:)

  அவையின் ஒட்டுமொத்த திறமைக்கு முன் தனிப்பட்ட திறமை என்பதை உணர்ந்து பேசணும்!
  *அவை அறிந்து பேசுவதில் = அச்சம்
  *அறிந்த பின், அஞ்சாமல் பேசுவது = அவை அஞ்சாமை

  • anonymous says:

   இப்படியெல்லாம் சொன்னாலும், புதியவர்கள் அஞ்சுவார்களே! அதுக்கு என்ன பண்ண முடியும்?
   அதையும் திருக்குறளே சொல்லுது!

   புதியவர்கள் அஞ்சுவார்கள்! ஆனா, அவர்களைப் பழையவர்கள் கைதூக்கி விடணும்! அப்போ தான் அவங்க சான்றோர்!
   கைதூக்கி விடாட்டாலும் பரவாயில்லை! ஆனா, பொதுவில் “இகழாது” இருக்கணும்!

   கொல்லா நலத்தது நோன்மை; பிறர்தீமை
   சொல்லா நலத்தது சால்பு
   – இப்படிப் பிறர் தீமை சொல்லாதவர்களே = “சான்றோர்” (சால்பு)
   ——–

   //அது எத்தனை சாதாரணமாக இருந்தாலும் அதற்காக அவர்களை இழிவுபடுத்தாமல் இருப்பது ஒரு நல்ல பண்பு//

   எதிர்க் கருத்தோ, எளிமையான கருத்தோ…..
   கருத்தைக் கருத்தாகத் தான் அணுகனும்!
   கருத்து வேற, மனிதம் வேற!
   பொதுவில் இழிவுபடுத்தாமல் இருப்பது = “பண்பு”

 4. anonymous says:

  //கடாம்’ என்றால், அருவி விழும் ஓசை, ‘மலை படுகடாம்’ என்பது, மலை அருவியிலிருந்து தண்ணீர் கொட்டும் ஒலியைக் குறிக்கிறது//

  அல்ல!-ன்னு நினைக்கிறேன்; எதற்கும் சரி பார்த்து விடுங்கள் சொக்கரே!

  கடாம் = யானையின் மத நீர்
  (இரண்டு கன்னம், குறி வழியாக ஒழுகும் நீர்)

  அது மலையில் பட்டு, ஓசையோடு, திரண்டு விழுகிறதாம்…மதநீரே அருவி போல் கொட்டுது-ன்னா….எவ்ளோ யானைகள் அந்த மலையில் இருக்கணும்-ன்னு பாத்துக்கோங்க!
  The Name of this book itself is a Magnum Opus! = மலை – படு – கடாம் (மலைப்படு-ன்னு ப் வராது)

  அருவி விழும் ஓசை அல்ல! யானைகளின் “அது”, அருவி போல் விழும் ஓசை:)))

  • என். சொக்கன் says:

   கூகுள் செய்து பார்த்துவிட்டேன், இந்த இரு விளக்கங்களுமே சரியாக இருக்கலாம் என்றே சொல்கிறார்கள் 🙂

  • ஆனந்தன் says:

   //அருவி விழும் ஓசை அல்ல! யானைகளின் “அது”, அருவி போல் விழும் ஓசை//
   ‘கடாம்’ என்ற சொல்லுக்கு ‘மதநீர்’ என்ற பொருள் இருந்தாலும் ஒரு பழந்தமிழ் நூலின் தலைப்பாக அது வரும்போது அந்த நேரடிப் பொருளில் எடுக்கமுடியாது என்று தோன்றுகிறது. அதுவும், ஒரு நற்பண்புள்ள மன்னரை/வள்ளலைப் பற்றிய நூலுக்கு?

   அதனால், இங்கு மலையையும் அதில் விழும் அருவியையும் ஒரு யானையாகவும் அதன் மதநீராகவும் உருவகிக்கப்பட்டுள்ளதே தவிர பல மத யானைகள் மலையில் நிற்பதாக வர்ணிக்கப் படவில்லை என்று படுகிறது.

   • anonymous says:

    //அதுவும், ஒரு நற்பண்புள்ள மன்னரை/வள்ளலைப் பற்றிய நூலுக்கு?//

    :))
    நன்றி ஆனந்தன்!
    நீங்க சொன்னதால், என்ன தான் இருக்கு-ன்னு பாட்டையே சும்மா நேரடியாப் படிச்சிப் பார்த்தேன்….நீங்கள் சொல்வது ஓரளவு சரியே!
    ——–

    மலைபடுகடாம் என்ற பெயர், அந்த நூலுக்கு எப்படி வந்துச்சுன்னா…
    பாட்டின் வரியே, நூலுக்கும் வைத்துள்ளார்! = “மலைபடு கடாஅ மாதிரத்து இயம்ப” (ஆத்தி சூடி போல)

    அதாச்சும் மலையில் எழும் பல ஓசைகளைப் பட்டியல் போடுறாரு கவிஞர்…அருவி ஓசை மட்டுமல்ல…இன்ன பலவும்

    *வேடுவர்கள் பாட்டொலி
    *குறத்தியர் ஆலோலம்
    *ஆட்டுக் கடா மோதும் ஒலி
    *குட்டி, தாய்க் குரங்கு பிடியை விட்டதால், தாவும் போது விழுந்து விட, அம்மாக் குரங்கு அதட்டும் ஒலி

    *தேன் திருடும் கொள்ளையர் ஒலி
    *பன்றிகளை ஓட்டும் பறை ஒலி
    *பலாப்பழ மணம் கமழும் அருவித் தண்ணியின் ஒலி
    *ஒரு யானைக் கன்றைப் புலி பிடித்துவிட்டதால், அம்மா யானைக்கு மதம் பிடிக்க, மொத்த யானைக் கூட்டமே ஒன்று சேர்ந்து முழங்கும் ஒலி….
    ——-

    இப்படி எல்லாம் சேர்ந்து “மலை-படு-கடாம்” = மலையில் படும் ஓசைகள்!

    அதுக்கு எதுக்கு “கடாம்” ன்னு மதநீரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லணும்?-ன்னா
    அத்தனை ஒலிகளிலும், மிகத் தீவிரமான ஒலி = மத யானை ஒலி! அதனால் அதையே பாட்டுக்கும் வச்சிடறாரு!

    So “மலை-படு-கடாம்” -ன்னா = மலையில் எழுகின்ற மதயானை முதலான பல ஓசைகள்!
    Thanks so much for this rejoinder…It helped to directly goto the source & read!

 5. muthu says:

  ‘கடாம்’ என்றால், அருவி விழும் ஓசை, ‘மலை படுகடாம்’ என்பது, மலை அருவியிலிருந்து தண்ணீர் கொட்டும் ஒலியைக் குறிக்கிறது. கூத்தர் ஒருவர் தனக்கு உதவிய வள்ளலை இன்னொருவருக்கு அறிமுகப்படுத்தும் நூல் என்பதால் இதற்குக் ‘கூத்தர் ஆற்றுப்படை’ என்றும் இன்னொரு பெயர் உண்டு (ஆற்றுப்படை = Introduction / Recommendation / சிபாரிசு, இன்ஃபோசிஸில் வேலை செய்யும் ஒருவர் அதன் சிறப்புகளைத் தன் நண்பருக்குச் சொல்லி அங்கே Interview attend செய்யத் தூண்டினால், அது இன்ஃபோசிஸாற்றுப்படை :>)

  Thanks for this.

  Even if you feel it is very basic, if possible explain the fundamental purpose of each song like this..

  Thank you again for this and keep up the good work.

 6. anonymous says:

  //(Communication / Presentation)த் திறன், Empathy, கர்வமின்மை, அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை, Mentoring என்று சகலத்தையும் நாலே வரிகளில்//

  Lemme tell my college story! Nobody shd make fun of me, okay?:)
  கல்லூரியில் புதுசாச் சேர்ந்த நேரம்! என் Roll No-க்கு வாய்த்தது, அதே Roll No உள்ள ஒரு final year பெண் சீனியர்:)
  நான் வகுப்பில் ரொம்ப கேள்வி கேக்குற பையன்; அதுனால சேர்ந்த ஒரு மாசத்துலேயே, பேராசிரியர் உட்பட, பலருக்கு நான் ஒரு பிரபல எதிரி:)

  ஏதோ ஒரு Inter College Paper Presentation! அப்ப-ன்னு பார்த்து என் சீனியருக்கு டைபாய்டுக் காய்ச்சலோ என்னவோ…
  அவ(ங்க) லேடீஸ் ஹாஸ்டல் வாசலில் என்னைச் சந்தித்து, தனக்குப் பதிலா, நான் போய் Presentation பண்ணிட்டு வரணும்-ன்னு சொன்னாங்க!

  எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சி! 1st presentation in my life!
  ஒன்னுமே தயார் பண்ணல, படிக்கல! திடீர்-ன்னு slide மட்டும் குடுத்து, பேசிட்டு வா-ன்னா, என்ன-ன்னு பேசுறது? அதுவும் அது சீனியர் மாணவர்களின் விழா!…

  • anonymous says:

   ஆளை விடு-ங்க, எனக்கு ஒன்னும் தெரியாது-ன்னாலும் அவ கேட்கலை! நீ வகுப்பில் கேக்குற கேள்வியெல்லாம் காலேஜ் ஃபேமஸ்-ன்னு சொல்லி ஓட்டுறா;
   அவளுக்கு அவ வகுப்பு பசங்க கூட லடாய்-ன்னு உள் வெவகாரம் எதுவும் தெரியாம ஒத்துக்கிட்டேன்; ஏன்னா அவங்க பார்க்க கொஞ்சம் Freshஆ நல்லா இருப்பாங்க:))

   Presentation Hallக்குள்ள போனா, அத்தனை சீனியர் பசங்களும் என்னை நெற்றிக் கண்ணால் எரிக்கிறா மாதிரிப் பாக்குறானுங்க!
   On behalf of her-ன்னு பேரு குடுத்துட்டுக் காத்து இருக்கேன்! கடேசி ஆளு நானு!

   பேச ஆரம்பிக்கும் போதே, என் soft voice இன்னும் கம்ம….பசங்க எல்லாம் ஒரே சிரிப்பு; கையெல்லாம் உதறல் எடுக்குது
   முதல் ஸ்லைடு போடும் போதே, மத்த ஸ்லைடு எல்லாம் காற்றில் பறக்க..தரையில் விழுந்து…..ஒரே சிரிப்பு

   வந்தான்(ர்) அந்த சீனியர் பையன்!
   என் கிட்டக்க வந்து, தட்டிக் குடுத்து, இவர் முதலாண்டு மாணவர், வகுப்பில் பிரபலம்-ன்னு நாலு அறிமுக வார்த்தை சொல்லி,
   பக்கத்தில் நின்னபடியே ஸ்லைடு எடுத்து ஒவ்வொன்னாக் குடுக்க….நான் ஆரம்பிச்சேன் பேச்சை….வாழைப்பந்தல் பச்சையம்மா தாயே, மானத்தைக் காப்பாத்து….

  • anonymous says:

   அடுத்த பத்து நிமிசம் எப்படிப் போச்சுன்னே தெரியல…

   Infinite Number, lim x->0, infinity minus infinity வேதத்திலேயே இருக்கு, பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய…ன்னு ஸ்லைடில் இல்லாததை எல்லாம் என்னென்னமோ சொல்ல…
   பயங்கர claps:)) எனக்கோ மூச்சு வாங்குது…முதல் பரிசு-ன்னு ஆசிரியர் குழு அறிவிச்ச போது, மயக்கமே வராத குறை…அந்த சீனியர் மாணவன் கை குலுக்கி, வாழ்த்துக்கள்-ன்னு இறுக்க அணைச்சிக்கிட்டான்!

   வெளிய வந்தா, சக மாணவர்கள் வாழ்த்து ஒரு புறம், பொண்ணுக்கு proxy குடுத்தான்டா ஓட்டல் ஒரு புறம்…
   ஆனா, அதான் வாழ்வில் 1st Presentation! Proxy Presentation:)

   நான் பயத்தால் தடுமாறிய போது, அவன் குடுத்த அந்த முன்னுரை, கூடவே ஸ்லைடு எடுத்துக் குடுக்க நின்றது…That was Mentoring!
   ஆனா, அப்பறம் தான் தெரிஞ்சிச்சி…அவனுக்கும் அவளுக்கும் சம்திங் சம்திங்….அதான் பசங்க எதிர்ப்பையும் மீறி வந்து உதவி செஞ்சான்-ன்னு:)))

   அவ கிட்ட கொஞ்ச நேரம் வழிஞ்சி நான் ஒத்துக்கிட்டது, அப்ப தெரியவே தெரியாது – எனக்கு இவங்க ரெண்டு பேரும் “Mentor”ஆ வருவாங்க-ன்னு:)))
   Anyways, now they are happily married with lil kid Sindhuja!:)

 7. balaraman says:

  மிகவும் அருமையான பாடல்.

  //இந்தப் பாடலின் பெருமை உங்களுக்குப் புரியவேண்டுமென்றால், நீங்கள் ஒரு புதிய இடத்துக்குச் சென்று பேச முயன்றிருக்கவேண்டும், அங்கே உள்ள எல்லாரும் அதிபுத்திசாலிகளாகக் கனமான விஷயங்களை விவாதிப்பது கண்டு திகைத்து நின்றிருக்கவேண்டும், ’இங்கே நாம் என்ன பேசுவது?’ என்று தடுமாறியிருக்கவேண்டும். அல்லது, விஷயம் புரியாமல் எதையாவது உளறிக்கொட்டி மாட்டிக்கொண்டிருக்கவேண்டும்//

  இது எனக்கு பல முறை நடந்திருக்கிறது! குறிப்பாக பெங்களூரில் டுவிட்டர்கள் சந்திப்பு நடக்கும் போது பயந்திருக்கிறேன். ஆனால், என்னை ஒரு சிறுவனைப் போல் நடத்தாமல் அவையில் சம மதிப்பு கொடுத்தது எனக்கு தெம்பாய் இருந்தது.

  என்னைத் தூக்கி விட்ட பலரில் நீங்களும் ஒருவர். நன்றி. 🙂

 8. anonymous says:

  //இன்ஃபோசிஸாற்றுப்படை :>//

  பத்துப் பாட்டு நூல்களில் = மலை படு கடாம், கடைசி நூல்!
  கூத்தர் ஆற்றுப் படை-ன்னு இன்னொரு பேரு இருக்குறதா சொக்கர் சொன்னாரு-ல்ல? யார் இந்தக் கூத்தர்கள்?

  கூத்தர்கள் = sanga tamizh male dancers

  சங்க காலத்தில்
  * பாட்டு எழுதுகிறவர் = புலவர்/ கவிஞர்
  * பாட்டுக்குப் பண் அமைப்பவர்/ பாடுபவர் = பாணர்
  கண்ணதாசன்-எம்.எஸ்.வி மாதிரி-ன்னு வச்சிக்கோங்களேன்!

  இந்தப் பாடல்களை ஆடுவதில்/அபிநயம் (மெய்ப்பாடு) காட்டுவதில்
  * விறலி = female dancer
  * கூத்தன் = male dancer

  புலவர்-பாணர்-விறலி-கூத்தர் ன்னு ஒரு செட்டாத் தான் திரிவது வழக்கம்! இவர்கள் கலையைப் புரக்கும் மன்னவர்கள் = புரவலர்கள்!
  அந்தக் காலத்தில் twitter, facebook முதலான social media இல்லாததால், புரவலர்களின் @ handle ஐச் சொல்லி உதவுவது = ஆற்றுப்படை!:)

  • anonymous says:

   பத்துப் பாட்டு நூல்கள் = பத்து;
   அதில் சரி பாதி ஆற்றுப்படை நூல்களே!
   This shows the importance of “mentoring” in tamil culture!

   1. திருமுருகு-ஆற்றுப்படை
   2. பெரும்பாண்-ஆற்றுப்படை
   3. சிறுபாண்-ஆற்றுப்படை
   4. பொருநர்-ஆற்றுப்படை
   5. கூத்தர்-ஆற்றுப்படை (மலைபடுகடாம்)
   ———

   என்ன தான் மன்னர்களை நாடி, தாங்களும் வாழ்ந்து, கலையும் வளர்த்தாலும்…மன்னனை ஓவராப் புகழ்தல், துதிபாடல் எல்லாம் கிடையாது!
   கலையை ஒட்டியே, அந்த மன்னனைப் பேசுவது வழக்கம்! அதான் இத்தனை சமுதாயச் செய்திகள், ஆற்றுப்படைக்குள் இருக்கும்!

   அதே சமயம், எல்லாக் கவிஞர்களும் மன்னரை அண்டுவதில்லை!
   தனியே வாழ்ந்து, சமூகத்தைப் படம் பிடிக்கும் கவிஞரும் உண்டு!
   பண்-கூத்தோடு ஒட்டிய கவிஞர்களே, பெரும் கலை என்பதால், மன்னவன் உதவி நாடுவது வழக்கம்!

   மன்னன் பொருளை நாடும் நூல்கள் = மற்ற ஆற்றுப்படைகள்!
   முருகன் அருளை நாடும் நூல் = திருமுருகு ஆற்றுப்படை! – A trend setter & trend changer in those days!

 9. சென்னைப் பேரகரமுதலியில் கடாம் என்பதற்கான பொருள்;

  http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.2:1:1801.tamillex

  , n. < kaṭa. 1. Orifice in an elephant's temple from which must flows; யானையின் மதம்படு துளை. (கலித். 66, 3, உரை.) 2. Secretion of a must elephant; யானை மதநீர். கமழ்கடா அத்து . . . யானை (புறநா. 3, 8). 3. The name of the last poem of the pattu-p-pāṭṭu. See மலைபடுகடாம். முருகு . . . கடாத்தொடும் பத்து (பத்துப்பாட்டு, முகவுரை, பக். 5).

  நான் தமிழ் விக்சனரி பங்களிப்பாளன் என்ற முறையில் அங்கும் சொற்களுக்குப் பொருள் சேர்த்துவருகிறேன்.

  http://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

 10. என். சொக்கன் says:

  ’கடாம்’க்கு இன்னொரு விளக்கம் தந்த நண்பர்களுக்கு நன்றி. அதையும் ‘துக்கடா’வில் சேர்த்துவிட்டேன்

 11. ஆனந்தன் says:

  இந்தப் பாடல் இந்த அவைக்கு மிகவும் பொருத்தமானது! எனக்கும் பாட்டெழுதத் தெரிந்தால் ‘365பா’ தளத்தைப் பற்றி இப்படி ஒரு பாடல் எழுதியிருப்பேன்! இப் பாடலில் கூறப்பட்டுள்ள பண்புகள் நிறைந்த பலருள்ள அவை இது. அதனாற்றான் amas32 கூறியதுபோல் எனக்கும் சில வார்த்தைகள் எழுத முடிகிறது1 நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s