நிலவு விரிந்தது

பெய்யாது வைகிய கோதை போல

மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப,

உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்

வாரார் என்னும் புலவி உட்கொளல்

ஒழிகமாள, நின் நெஞ்சத்தானே,

புணரி பொருத பூ மணல் அடைகரை,

ஆழி மருங்கின் அலவன் ஓம்பி,

வலவன் வள்பு ஆய்ந்து ஊர,

நிலவு விரிந்தன்றால், கானலானே.

நூல்: நற்றிணை (#11)

பாடியவர்: உலோச்சனார்

சூழல்: நெய்தல் திணை : வருவதாகச் சொன்ன காதலன் வரவில்லை. காதலி வருந்தினாள். அவளுக்கு ஆறுதல் சொல்கிறாள் தோழி

தோழி,

அவன் வருவதாகச் சொன்ன நேரத்தில் வரவில்லை. அதனால் நீ வருந்துகிறாய். யாரும் அணியாமல் வெறுமனே விட்டுவைத்திருந்த பூமாலையைப்போல் வாடுகிறாய்.

போதாக்குறைக்கு, இந்த ஊரும் உன்னைக் கண்டபடி பேசுகிறது. ‘அவன் இனிமேல் வரமாட்டான்’ என்று சொல்கிறது. அதைக் கேட்டு நீ உன் காதலன்மேல் வெறுப்புக் கொள்கிறாய்.

இதை முதலில் நிறுத்து, அவன் நிச்சயமாக வருவான், வந்துகொண்டிருக்கிறான்.

உன் காதலன் வரும் பாதையில் ஒரு கடற்கரை. அங்கே அலைகள் மோதுகின்றன. இளமணல் எங்கும் பரந்து விரிந்துள்ளது. அதில் நண்டுகள் ஓடித் திரிகின்றன.

உன்னைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் அவன் தேரை வேகமாக ஓட்டினால், அந்த நண்டுகள் அதன் சக்கரத்தில் சிக்கி நசுங்கிவிடும். ஆகவே, ‘கொஞ்சம் மெதுவாகப் பார்த்து ஓட்டு’ என்று தேர்ப்பாகனிடம் சொல்கிறான் அவன். அதனால்தான், அவனுடைய தேர் இன்னும் இங்கே வந்துசேரவில்லை.

இதோ, நிலவு விரிந்துவிட்டது, சீக்கிரத்தில் உன் காதலனும் வந்துவிடுவான். கவலையை விடு.

துக்கடா

 • ’யாரும் சூடாமல் வைத்திருந்த மாலை’ என்பது அட்டகாசமான உவமை. ’அ(வளை)தைச் சூடுவதற்குச் சீக்கிரம் அவன் வருவான்’ என்கிறாள் தோழி
 • அற்ப நண்டுகள்மீதுகூட இரக்கம் காட்டுபவன், இவளைக் கைவிட்டுவிடுவானா? நிச்சயம் வருவான் என்பது அடுத்த செய்தி
 • கிட்டத்தட்ட இதேமாதிரியான ஒரு பாடலை #365paa வரிசையில் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம் : https://365paa.wordpress.com/2012/01/19/197/

262/365

This entry was posted in அகம், உவமை நயம், கடற்கரை, காதல், தோழி, நற்றிணை, நெய்தல், பெண்மொழி. Bookmark the permalink.

27 Responses to நிலவு விரிந்தது

 1. anonymous says:

  Why is sangam poetry always like this?
  One girl – one thozhi; useless talks abt thalaivan!:)
  She waiting, he not coming; she keeps on waiting…Nandu, Vandu, Flowers
  = is that all the poetry of sanga tamizh?:))

  • anonymous says:

   சங்கப் பாடல்கள் பலவும், “stereotype”, “lack of variety”-ன்னு சில பிரபல எழுத்தாளர்கள் கேலி செய்வதுண்டு!
   ஆனால், மேலோட்டமாத் துழாவுறவங்களுக்குத் தான் அப்படித் தோனும்!

   வானம் எப்பமே நீலம் தான்; பூமி எப்பமே பச்சை தான்; தினமும் தான் சோறு சாப்புடறோம், தினமும் தான் காதலன்/காதலி முத்தம் குடுத்துக்கறாங்க – இதெல்லாம் stereotypeஆ?:)

   சங்கப் பாடல்கள் = வாழ்க்கையின் அகச் சிதறல்கள்!
   வாழ்க்கை-ன்னா என்ன?
   = உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதே!
   = உணர்வதும், உணர்விப்பதுமே வாழ்க்கை!
   ———

   எல்லாரும், எல்லாரோடும், எப்பவும் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறோம்!

   *சாப்பிடும் போது = உணர்ச்சி,
   *பேசும் போது, பழகும் போது = உணர்ச்சி
   *அலுவலகத்தில் = உணர்ச்சி
   *வீட்டில் = உணர்ச்சி
   *ட்விட்டரில் = உணர்ச்சி, 365paa வில் = உணர்ச்சி

   *கலவியில் = உணர்ச்சி
   *கடவுளும் = உணர்ச்சி
   வாழ்வதே = உணர்ச்சி தான்!

   இந்த “உணர்ச்சி”யை…
   எப்படி ’அழகா” வெளிக்காட்ட முடியும் (அ) எப்படி “அழகா” உள்வாங்க முடியும்?
   = சங்கக் கவிதைகள் போல் கம்பன் கவிதை கூட….இதைச் செஞ்சதில்லை!
   i mean, பாசாங்கு இல்லாத இயற்கையான உணர்ச்சியின் வீச்சு!
   ———

   ஆயிரம் பேர் இருக்கும் கூட்டத்திலும், அந்த ஒருவன்=முருகவன் மட்டும் எனக்குத் தனியாத் தெரிவது போல்…
   * ஒரே ஒரு பார்வை…அதுவே மொத்த உணர்ச்சியும் சொல்லிவிடும்
   * அதே போல், சங்கத் தமிழின் ஒரே ஒரு வரி…அதுவே மொத்த உணர்ச்சியும் சொல்லிவிடும்!

   இந்தப் பாடலே அப்பிடித் தான் துவங்குது = “பெய்யாது வைகிய கோதை போல” = சூடாமல் திகழ்ந்த மாலை போல……

   • anonymous says:

    பெய்யாது “வைகிய” கோதை போல

    சூடாது ’கிடந்த’ மாலை போல, சூடாது ’இருந்த’ மாலை போல-ன்னு கூடச் சொல்லி இருக்கலாம்!
    ஆனாச் சூடாது “வைகிய” மாலை???

    வைகுதல்
    = சொக்கர் வீட்டில் வைகினார்-ன்னு யாரும் சொல்றதில்ல!
    = ஆனா முருகன் மயில் மேல் வைகினான்-ன்னு சொல்லுவாங்க!
    வைகுதல் = தங்குதல்! ஆனா “திகழ்ந்து தங்குதல்”!

    ஒரு செவ்விய மாலை!
    அது “திகழுது” = வைகுது = எங்கே? = ஒரு மேடையின் மீது
    அப்படியொரு அழகான தொடுப்பு; பலர் கண்ணுக்கும் விருந்தாய், பலர் போற்ற “வைகுது”!

    ஆனா, இப்படி “வைகவா” அந்த மாலை தொடுக்கப்பட்டது?
    அவன் கழுத்தில் ஏறிக் கொஞ்சாமல்….
    அவன் மேனி ஏறிக் கசங்காமல்…..
    மேடையில் உயர்வா “வைகி”……
    = இப்படி “வைகினா” அந்த மாலைக்கு எப்படி இருக்கும்???? அப்படி இருக்காம் அவளுக்கு! 😦

    பலரும் என் தமிழைப் போற்றுகிறார்கள், ஆனால் அந்த இன்பத் தமிழை, முருகை……உன் காதோரமாக் கொஞ்சிக் கிசுகிசுக்காமல், வெறும் மேடையில் வைகி என்ன பயன்? = இப்படிச் சொல்லுதாம் அந்தப் பூமாலை!:((

   • anonymous says:

    கோதை (எ) செவ்விய பூமாலை

    = ஒவ்வொரு பூவாத் தேடிச் சேகரிக்கணும்
    = சீக்கிரம் எழுந்து, அரும்பும் போதே சேகரிக்கணும்; அப்போ தான், கட்டி முடிக்கும் போது மலர்ந்து இருக்கும்…இல்லீன்னா லேசா வாடீரும்
    = பொறுமையா உட்கார்ந்து ரெண்டு ரெண்டாத் தொடுக்கணும்
    = தொடுக்கும் போது, கலை நயத்தோடு, அடர்த்தியாத் தொடுக்கணும்!

    இவ்ளோ கடினப்பட்டு செஞ்ச மாலை….அதன் கதி?
    இப்ப, அப்படியே இதை உணர்ச்சிக்கு ஒப்பிட்டுப் பாருங்க!

    = ஒவ்வொரு உணர்ச்சியாத் தேடிச் சேகரிச்சேன்
    = ஆசை அரும்பும் போதே உனக்காகவே சேகரிச்சி வைச்சேன்
    = பொறுமையா உணர்ச்சிகளைத் தொடுத்தேன்
    = அடர்த்தியா, அழகான தமிழில் தொடுத்து வச்சேன்

    மேடையில் வைத்துப் பலரும் பாராட்டவா?
    இல்லடா….
    உன் மேனியில் கசங்க….உன் மேனியில் கசங்க!

 2. anonymous says:

  Will give difficult word meanings; do the same coffee urinjum technique, we last saw:))

  அருஞ்சொற்பொருள்:
  கோதை=மாலை
  நொதுமலர்=அயலார்
  அலவன்=நண்டு (அலவுதல் = சுழன்று சுழன்று அசைதல்)
  புலவி=கோபம்
  புணரி=அலை
  வலவன்=driver
  கானல்=மணல்

  • ஆனந்தன் says:

   //அலவுதல் = சுழன்று சுழன்று அசைதல்//
   //கானல்=மண்; கானல் நீர்//
   இதுபோல் சொற்களின் தோற்றுவாயையும் (Etymology), சந்தர்ப்பங்களையும் முடிந்த அளவு தந்தால் புரிந்து கொள்ளவும், நினைவில் நிறுத்தவும் உதவியாக இருக்கும். (ரொம்பக் கேட்கிறேனோ..?”

   • anonymous says:

    //ரொம்பக் கேட்கிறேனோ..?”//
    yes :))))
    he he! but sure, will try
    chokkar may also chg his mind & start giving arunchorporul aft sometime:)

 3. anonymous says:

  சொக்கர், ஆரம்ப உவமையில் மட்டும் மதி மயங்கி, முடிவு உவமையைச் சொல்லாமலேயே விட்டுட்டாரு!:((
  அது என்ன?-ன்னு சொக்கரோ, இல்லை யாராச்சும் சொல்லுங்க பார்ப்போம்!

  • anonymous says:

   also, chokkare, one more doubt
   அவர் செய் குறி பிழ்ழைப்ப = அது என்ன “பிழ்ழைப்ப”?
   எழுத்துப் பிழை (அ) பாட்டே அப்படித் தானா?

   • என். சொக்கன் says:

    மன்னிக்க, அது தட்டச்சுப் பிழை, திருத்திவிட்டேன், சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

   • Which book would help me find all this? Help please 🙂
    amas32

   • anonymous says:

    நன்றி! பிழ்ழைப்ப – ஒற்றளபெடையோ-ன்னு நினைச்சேன்:) ஆனா உயிர்மெய்யில் ஏறி வராது, அதான் கேட்டேன்:)

  • anonymous says:

   சொக்கர் கவனம் செலுத்திய ஆரம்ப உவமை = பெய்யாது “வைகிய” கோதை போல = சூடாமல் “வைகிய” மாலை போல
   ஆனால் கடைசியிலும் இப்படியே முடிக்கிறார் = நிலவு விரிந்தன்றால், கானலானே = கானலில் நிலவு விடிந்தது…

   கானல்=மண்; கானல் நீர் (mirage) எல்லாருக்கும் தெரியும்
   அந்தப் பொட்டல் காட்டில், மணல் திட்டில், முழு நிலவு விரிஞ்சி, யாருக்கு என்ன பயன்?

 4. நிலவொளி வெள்ளை மணல் போல விரிகின்றது என்று கூருகிறாளா தோழி?

  காதலியும் தோழியும் சேர்ந்த பின் அங்கே துயருக்கு இடமில்லை! தோழி நல் வார்த்தைகள் சொல்லியோ பொய் வார்த்தைகள் சொல்லியோ காதலிக்கு தைரியம் கொடுத்து விடுவாள். பின்பு அந்த காதல் கை கூடுவதும் கூடாததும் இறைவன் செயல்.

  அருஞ்சொற்பொருள் தெரிந்து கொண்டு பாடலை படிப்பது எளிதாக உள்ளது, பாட்டின் அழகையும் நன்கு உணர முடிகிறது 🙂 நன்றி அனானிமஸ்!

  amas32

  • anonymous says:

   //அருஞ்சொற்பொருள் தெரிந்து கொண்டு பாடலை படிப்பது எளிதாக உள்ளது, நன்றி அனானிமஸ்!//

   chellaathu chellaathu:)
   after arunchorporul , u have to directly write abt four four lines in your comment; appo thaan chellum:))

  • ஆனந்தன் says:

   பாட்டின் பொருளை நாங்கள்ளாம் சொல்லப் புறப்பட்டால், ‘அரவிந்த ரசமொடு’ என்ற பாடலுக்கு ‘அரைவெந்தயத்த்தில ரசம் வைச்சு..’ என்று தங்கவேலு உரை சொன்னதுபோல் முடிந்து விடும்! (படம்: அம்பிகாபதி என்று நினைக்கிறேன்)
   இந்தப் பாடலில் வேறு உள்ளி, வெங்காயம் என்றெல்லாம் வருகிறது!! இந்தச் சோதனை பலருக்கு வேதனையாகிவிடும்! அதனால், காபியை நான் வீட்டிலேயே உறிஞ்சி ரசிப்பதாக இருக்கிறேன்!

   • anonymous says:

    :)))
    I remember that TMS song from ambikapathi & thangavelu comedy:)
    ———
    But, slowly participate in giving 4 line explanation; Even if itz wrong 1st time, no issues! Here, no one will make fun or stop discussions!
    365paa is always an encouraging place…& chokkan is a good mentor!

    365paa is not just an old poem bureau;
    itz more than that (i think); It encourages – tamizh reading & poetry appreciating habits! So “participate”:)

 5. anonymous says:

  பாட்டின் வரி வரிப் பொருளை, ’காபி உறிஞ்சும் டெக்னிக்’ படி, நீங்க சொல்லுங்க!நான் இலக்கியம் பற்றிச் சொல்கிறேன்!
  ———

  நற்றிணை = நல் + திணை
  திணை=ஒழுக்கம்; நற்றிணை=நல்லொழுக்கம்!

  நல்லொழுக்கம்-ன்னா வாத்தியாருக்கு குட் மார்னிங் சொல்வது அல்ல!:)
  அதாச்சும் காதலில் (அகப்பொருளில்) ரசனை மிக்க/ நல்ல ஒழுகல் (happenings)களை இது பேசும்.
  காபி நல்லா இருக்கு-ன்னா, அந்த நல்லா=சுவையான ன்னு பொருள்! அது போலத் தான் நல்+திணை

  நற்றிணை=எட்டுத் தொகை நூல்களுள் முதலில் தொகுக்கப்பட்டது! இத் தொகுப்புக்கு ஏற்பாடு செஞ்சவன் பாண்டியன் (பேரு மறந்து போச்சு)

  எழுதினவருக்கு, தன் பாட்டு, குறுந்தொகையில் இருக்கு-ன்னுல்லாம் தெரியாது;
  பாடியது ஒரு கட்டம், தொகுத்தது இன்னொரு கட்டம்
  ———-

  சரி, எப்படித் தொகுத்தாங்க? on what basis?

  நல்ல ரசனை மிக்க கவிதைகளை, 1.அளவு, 2.பொருள்(அகம்/புறம்), 3.இசை கொண்டு தொகுத்தாங்க!

  Non Music:
  * குறுந்தொகை = 4-8 lines, love life
  * நற்றிணை = 9-12 lines, love life
  * நெடுந்தொகை (அ) அகநானூறு = 13-30+ lines, love life

  * புறநானூறு = many lines, social life
  * ஐங்குறுநூறு = more organized 5 thiNai*100 songs, love life

  Music:
  * கலித்தொகை=Rock Music (கலி=ஒலி), Only love
  * பரிபாடல்=Melody (பரி=பரிந்து வருவது), Love + social life
  * பதிற்றுப்பத்து=All music, More organize 10 chera kings*10 songs, Social
  ————

  ஒரு நூலுக்குள்ளேயே இன்னும் கூட, நுணுக்கமான தொகுப்பு உண்டு; odd & even number songs, songs ending in 2=kurinji, 4=mullai etc etc
  தொகுத்தவர் = must have been a great manager, at the same time artistic:))

  • anonymous says:

   சொக்கர் குடுத்த இந்த நற்றிணைப் பாட்டு = நடுவால வருவது!

   *குறுந்தொகை 4-8 lines = உணர்ச்சி in condensed form, வர்ணனை மிகவும் கம்மி
   *நெடுந்தொகை 13-30 lines = உணர்ச்சி in expanded form, நல்ல வர்ணனை

   *நற்றிணை 9-12 lines = Balance between உணர்ச்சி & வர்ணனை; அதான் நல்+திணை
   ———

   இந்த நூலுக்கு, பின்னாடி யாரோ கடவுள் வாழ்த்து-ன்னு எழுதிச் சேர்த்துட்டாங்க! அதெல்லாம் கணக்குல எடுத்துக்காதீங்க! Not original…

   நற்றிணைக்கு = திருமால் துதி! குறுந்தொகைக்கு = முருகன் துதி!
   – தேவையா?:) காதல் புக்-குக்கு எதுக்குய்யா கடவுள் துதி?:)
   அதுவும் வேற காலகட்டம், இன்னொருத்தர் பாட்டோட, “நைசா” தன் சமயப் பாட்டையும் ஒட்ட வைக்கறது:((

   அது என் முருகனே ஆனாலும்….நியாயம்ன்னா நியாயம் தான்!
   சமயம் கடந்து, தமிழை, தமிழாத் தான் அணுகனும்;
   துதிப் பாட்டெல்லாம், வேணும்ன்னா தனியா எழுதிக்க வேண்டியது தானே? no otta vaching:))

 6. anonymous says:

  இன்னோன்னு முக்கியமாச் சொல்ல நினைச்சேன், மறந்துட்டேன்…
  அலவன் = நண்டு-ன்னு சொன்னேன்-ல்ல? அது தப்பு! sorry for wrong info:) அலவன் = ஆண் நண்டு! okay?:)

  அலவன் = ஆண் நண்டு ; நள்ளி = பெண் நண்டு
  தமிழ் இலக்கியம், அஃறிணையைக் கூடத் தனிமையில் வைக்காமல், காதலோடு தான் வச்சிருக்கு! முருகா….

  இதே போல, ஆண்-பெண் அஃறிணைகள், உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லுங்க, பார்ப்போம்! lemme start this game:)
  கடுவன் = ஆண் குரங்கு ; மந்தி = பெண் குரங்கு

  • என்னுடைய வேண்டுகோள் இந்த இடத்தில் பதிவாகியிருக்கணம். தவறி திரு. சொக்கன் பதிலுக்குப் பின் பதிவாகி உள்ளது. மன்னிக்க.
   amas32

   • anonymous says:

    book? for அலவன்-நள்ளி?
    a simple tamil-tamil dictionary shd be fine;
    therez one online too! = http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/index.html

    இதே போல் மற்ற விலங்குப் பேர்கள், is just from reading or memory…
    but encyclopedias can help; தமிழ்க் கலைக் களஞ்சியம் – பெ.தூரன்

   • anonymous says:

    இதுக்கெல்லாம் புத்தகம் எதுக்கு?:))
    காளை – பசு
    சேவல் – கோழி
    களிறு – பிடி
    கடுவன் – மந்தி etc etc

   • anonymous says:

    சேவல் = ஆண் கோழி-ன்னு இன்னிக்கி ஆகிப் போச்சு!
    ஆனா கருடச் சேவல், அன்னச் சேவல் ன்னு கூடப் பாடல்கள் உண்டு! சேவல் = பறவை;
    கானம் கோழிக் கவர்குரல் சேவல்-ன்னு முன்பு பாத்தோம்-ல்ல? காட்டுக் கோழி=கவர்த்த குரலை உடைய பறவை!

    அதே போல்
    நண்டு = அலவன் – நள்ளி
    மான் = இரலை – பிணை
    எருமை = கண்டி – நாகு

    ஆன் எருமை = கண்டி
    பெண் எருமை = நாகு

   • ஆனந்தன் says:

    ஆண் யானையைக் ‘கரி’ என்றும் கூறுவதுண்டல்லவா?
    (பிடி – அதன் உரு உமை கொள்ள
    மிகு கரி – அது வடி கொடு…கணபதி)
    மற்றும்,
    ஆடு – கடா/மறி
    மான் – கலை/பிணை

   • anonymous says:

    sorry ஆனந்தன், just saw this…

    ஆமாம், சம்பந்தரின் அந்தப் பாடலில் கரி=ஆண் யானை தான்! ஏன்னா, பிடி என்று முன்பே சொல்லி விட்டதால்…
    ஆனா கரி=பொதுச் சொல்! ஆண்-பெண் இரண்டு யானையுமே குறிக்கும்!

    (கரத்தை உடையது கரி; விலங்குகளில் கால் அல்லாது, கரமும் உடையது=கரி
    கரிய நிறம் என்பதாலும் கரி எனக் கொள்ளலாம்)

 7. pichaikaaran says:

  உண்மையான காதல் அனைத்தையும் நேசிக்கும் என்ற நுட்பமான செய்தி அன்றே பதிவு செய்யப்பட்டு இருப்பது வியப்பாக இருக்கிறது. .. என்னதான் படித்தாலும் , படித்து முடிக்க முடிக்க முடியாது என்பதை , இது போன்ற கேள்விப்பட்டிராத இனிமையான பாட்ல்களை படிக்கையில் உணர முடிகிறது.. இதை வழ்ங்குபவருக்கும் நன்றி.. பின்னூட்ட விவாதங்களில் அருமையான நுட்பமான தகவல்களை எடுத்து வைப்பவர்களுக்கும் நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s