ஆறு முகங்கள்

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே,

….ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே,

கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே,

….குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே,

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே,

….வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே,

ஆறு முகம் ஆன பொருள் நீ, அருளல் வேண்டும்,

….ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

நூல்: திருப்புகழ்

பாடியவர்: அருணகிரிநாதர்

முருகா, ஆறு திருமுகங்களைக் கொண்டவனே,

 • ஆண் மயிலின்மீது ஏறி விளையாடுகின்ற முகம் ஒன்று,
 • ஞான விஷயங்களைத் தந்தையாகிய சிவபெருமானுடன் சரிசமமாக உரையாடுகின்ற முகம் ஒன்று,
 • என்னைபோன்ற அடியவர்களின் குறைகளைக் கேட்டுத் தீர்வு செய்யும் முகம் ஒன்று,
 • தாரகன் என்ற அரக்கனின் மலையை வீழ்த்திவிட்டு அங்கே வேல் பிடித்து நிற்கும் முகம் ஒன்று,
 • உன்னுடன் மோத வந்த சூரனையும் மற்ற அரக்கர்களையும் வீழ்த்திய முகம் ஒன்று,
 • வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று,

இப்படி ஆறுமுகனாக அருணாசலத்தில் குடிகொண்ட பெருமாளே, உன் அருளை வேண்டி நிற்கிறேன்!

துக்கடா

 • முருகனை எத்தனையோவிதமாகப் புகழலாம், அருணகிரிநாதர் இந்த ஆறு முகங்களைமட்டும் குறிப்பிட்டுப் பாராட்டுவது ஏன் என்று யோசித்தால், இவை ஒவ்வொன்றிலும் வெவ்வேறு சிறப்புகள் வெளிப்படுகின்றன, முருகன் என்கிற ஹீரோவின் Multifaceted personality தெளிவாக விளங்குகிறது:
 • மயில் ஏறி விளையாடும் முகம்: Relaxed attitude
 • ஞானமொழி பேசும் முகம்: Intelligence, Maturity
 • அடியார்கள் வினை தீர்க்கும் முகம்: Empathy, Power
 • வேல் வாங்கி / சூரரை வதைத்த முகம்: Success, Strong Resume :>
 • வள்ளியை மணந்த முகம்: Romantic 🙂
 • இந்தப் பாடல் ஒலிவடிவத்தில் நிறையக் கிடைக்கிறது. நம் @kryes தன்னுடைய பதிவு ஒன்றில் விரிவான விளக்கமும், நிறைய ஆடியோ பதிவுகளும் தந்துள்ளார் : http://muruganarul.blogspot.in/2011/07/blog-post.html

256/365

Advertisements
This entry was posted in அருணகிரிநாதர், திருப்புகழ், பக்தி, முருகன். Bookmark the permalink.

30 Responses to ஆறு முகங்கள்

 1. இந்த பாடல் படிக்க, பாட எவ்வளுவு இனிமையா இருக்கு. சொக்கருக்கு நன்றி.

  திருபுகழ் காட்டும் முருகனுக்கு ஆறுமுகங்கள். சங்க இலக்கியம் சுட்டும் சேயோனூக்கு எவ்வளவு என்று அறிய அவா (கேட்கவா வேண்டாமான்னு ரொம்ப யோசிச்சு, பிறகு கேட்டுரலாம் முடிவு பண்ணி கேட்டேன்). தெரிந்தவர்கள் சொல்லலாம்.

  • GiRa ஜிரா says:

   சங்க இலக்கியத்தில் முருகனுக்குச் சேயோன் என்று மட்டும் பெயரல்ல. முருகன், வேலன், செவ்வேள் என்றெல்லாம் பெயர்கள் சங்க இலக்கியங்களில் பரவலாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

   அக/புற இலக்கியங்களில் பாடுபொருள் வேறாக இருக்கும்.

   சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படையில் ஆறுமுகங்களின் இயல்பை முதன்முதலாக நக்கீரர் விளக்கக் காண்கிறோம். பரிபாடலில் புராணத்தனமான குறிப்புகளையும் நிறையவே காண்கின்றோம்.

  • anonymous says:

   //கேட்கவா வேண்டாமான்னு ரொம்ப யோசிச்சு, பிறகு கேட்டுரலாம் முடிவு பண்ணி கேட்டேன்//

   :)))
   ஏன்? தாராளமாகக் கேட்கலாமே!
   முருகனிடத்தில் ’பிழை’ என்பதே இல்லை! – ’அழை’ (எ) ’விழை’ மட்டுமே!
   அழையார்க்கும், விழையார்க்கும் கூட…..’தழை’ எனத் தரும் ’மழை’!
   ——-

   சங்க இலக்கியங்கள், முன்பு போல் ஒரு சிலரின் கட்டுக்குள் இல்லை! அனைவரும் அறியக் கிடைக்கின்றன!
   எனவே நீங்களே வாசித்தும் உறுதி செய்து கொள்ளலாம்! கீழ்க்கண்ட சுட்டிகள் உதவும்!

   தமிழ் இலக்கிய நூல்கள் – மூலமும், ஆழமான உரையும் = http://tamilvu.org/library/libcontnt.htm
   மூலநூல்கள், மேலோட்டமான உரையும் = http://www.tamilkalanjiyam.com/literatures/index.html

  • anonymous says:

   (முதற்) சங்கத் தமிழில் = முருகனுக்கு = ஆறு முகங்கள் என்பதெல்லாம் இல்லை!
   முருகன் = இயற்கையான வடிவினனே!

   இதற்கான விளக்கம், இறுதியில் தருகின்றேன்!

 2. அது ஏன் முருகனுக்கு எல்லோரும் வள்ளியை மிகவும் ஆதர்சமாகக் காட்ட முற்படுகிறார்கள்..அடியேனுக்கு இதில் மிகவும் மகிழ்ச்சியே என்றாலும், எதுவும் குறிப்பிட்ட காரணம் எதுவும் இருக்குமோ??

  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கூட அடிக்கடி,”வள்ளி மணவாளன் வகுத்ததென்னவோ, அதன்படியே நடக்கட்டும்” எனவும் “வள்ளியொடு வந்த வலிமைசேர் வேலனுக்கு வந்தனம்” எனவும் குறிப்பிடுவார்..

  இன்னும் நாட்டுப்புறங்களில் “வள்ளி திருமணம்” மிகவும் பேமஸ்… அந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் முருகன் போல் வேடமிடுவதைப் போல் வேறு யாரும் வேடமிட்டு நான் பார்த்ததில்லை.. அந்தக் குன்றில் குடி கொண்டிருப்பவனை வேலேந்தி வந்ததைப் போல் இருக்கும்..அந்தக் கலை மெல்ல,மெல்ல அழிந்து வருவதில் அடியேனுக்கு மிக வருத்தமே.. 😦

  இப்படி தெய்வயானையை விட, குறக்குடிமகளுக்கு கொஞ்சம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது எதனால்?? கண்ணனுக்கு ராதை போல், வெற்றிவேலவனுக்கு வள்ளிதான் மனதுக்கு நெருக்கமானவளோ??.. ஒரு வேளை, அது நிச்சயிக்கப்பட்ட திருமணம், வள்ளியைக் கரம்பிடிக்க வேலவனே வேடமிட்டு தானே தேடி வந்ததால் கூட இருக்குமோ?? என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது..

  குறக்குடிமகளும் வேலவனின் தோள் சாய்ந்ததால் கொற்றவைக்கு நிகரான புகழை அடைந்தாள்… ஆனால், வள்ளியை திட்டமிட்டு மறைக்கும் வேறு ஏதோ சதி நடக்கிறதோ என்ற எண்ணம் எழுகிறது…

  ஜிரா அவர்கள் விளக்கினால் நலம்.. உங்களின் ஒரு வாசகம் எனக்கு மிகவும் பிடிக்கும் “நாங்களெல்லாம் வேலைப் பிடித்தவனின் காலைத் தொழுபவர்கள்”

  It is awesome to say that sentence… WOW..

  • anonymous says:

   :))
   அதானே! ஏன் வள்ளி மட்டும் இத்தனை “நெருக்கம்”?

   பொதுவா, மேடைகளில் வள்ளித் திருமணம் பேசுவார்கள்!
   ஆனா, ஆலயங்களில், “ஆகம அமைப்பு”களினால், தெய்வயானைத் திருமணம் தான் பெரும்பாலும் நடத்தப்படும்! சஷ்டிக்கு அடுத்த நாளும் கூட!

   இவையெல்லாம் சில மனிதக் குழுக்கள்……அவரவர் மனோரதங்களில் உருவாக்கியது!
   ஆனால்…….சங்கத் தமிழ்க் காலம் தொட்டு…..நாட்டுப்புறக் கலைகள் வரை…வள்ளியின் “நெருக்கமே” காணலாம்!
   ———–

   ஏன்?
   = வள்ளியின் காத்திருப்பு அப்படி!
   = முருகன், தன்னை ஏற்றுக் கொள்வானா என்றும் அவளுக்குத் தெரியாது!
   = ஏது வரினும், அவனே!……என்ற இருத்தலும், இருத்தல் நிமித்தமும்!

   வள்ளி என்பவள் யார்? = http://iniyathu.blogspot.com/2009/12/blog-post.html
   ———-

   வள்ளி மலை (வேலூர் மாவட்டம் – ஆந்திர எல்லை)
   இங்கு ஒரு முறை சென்று வந்தால்….ஆலயம் அல்ல….அதைச் சுற்றியுள்ள காடும் சுனையும்….
   வள்ளி (எ) அந்தப் பெண்ணின் தாக்கத்தை….மனப்பூர்வமாக உணரலாம்!

  • anonymous says:

   ஏன் வள்ளி மட்டும் இத்தனை “நெருக்கம்”? என்ற உங்கள் கேள்வியும்…..
   சங்கத் தமிழில், முருகனுக்கு எத்தனை முகங்கள்? என்ற ஸ்ரீகுருபரனின் கேள்வியும்….
   ஒன்றோடொன்று மிக்க தொடர்புள்ளவை:)

 3. anonymous says:

  மிக்க எளிமையான திருப்புகழ்!

  பல வீடுகளில், சிறு பிள்ளைகளுக்கு அறிமுகமாகும் முதல் (அ) இரண்டாம் பாடல்!
  (பாலும் தெளிதேனும் (அ) ஏறுமயிலேறி – இவை இரண்டில் ஒன்று கட்டாயம் சொல்லிக் குடுக்கப்படுவது வாடிக்கை)
  —–

  ஓசை முனியான அருணகிரியின் சொற்கட்டு, தாளக்கட்டுகளை எல்லாம் கடந்து….இறுதியில் அவர் மனம் அமைதியில் நிற்கும் போது….தாள கதியே இல்லாமல் முகிழ்த்த பாடல்!

  இதுவே கடைசித் திருப்புகழ்! (எனக் கருதுப்படுவதுண்டு)

  • anonymous says:

   //ஆதி “அருணாச்சலம்” அமர்ந்த பெருமாளே!//

   பொதுவா செட்டிநாட்டு வீடுகளில், “அருணாச்சலம்” என்ற பேர் அதிகம் வைப்பார்கள்! (அருணாச்சலம் = திருவண்ணாமலை)

   செட்டியார் அம்மா, புருசன் பேரைச் சொல்ல மாட்டாங்க! அதனால்….
   ஆதி “அருணாச்சலம்” அமர்ந்த பெருமாளே – என்பதை
   ஆதி “அவுக பேரு” அமர்ந்த பெருமாளே

   -ன்னு கடைசி வரியை, பூசை அறையில் மாத்திச் சொல்லீருவாங்க-ன்னு ஒரு செட்டிநாட்டு நகைச்சுவை உண்டு!:))

 4. anonymous says:

  ***** //ஏன் வள்ளி மட்டும் இத்தனை “நெருக்கம்”?
  சங்கத் தமிழில், முருகனுக்கு எத்தனை முகங்கள்?// ******

  இதைப் பார்க்கும் முன்னர்…..சும்மா ஒன்னு சொல்லிக்கறேன்!
  முருகன் = ஆறு முகம் என்பது தொல்தமிழ் மரபு அல்ல!
  ——-

  ஆனால், இதைச் சொல்லும் நானே, திருச்செந்தூர் செல்லும் போது….உற்சவப் பெருமானான “ஆறுமுகர்” சன்னிதியில்….மிகவும் லயித்துக் கேவுவேன்!
  அவருக்கு சங்கு-சக்கரமும் இருக்கும்!
  பச்சை சார்த்தி இருக்கும் உன்னை, கடலில் வீசி எறிய, டச்சுக்காரர்களுக்கு எப்படி மனசு வந்துச்சோ?-ன்னு….அவனையே கேட்பேன்:)

  மரபுகள் – மாறிக் கொண்டே வருவன தான்!
  சங்கத் தமிழ் முருக மரபு = இப்போது அதிகம் இல்லை!
  இன்றைய தமிழகத்தில், முருக மரபு = கலந்த மரபு தான்!

  அதற்காக,
  இன்றைய முருகனை = ஒதுக்கி விடவும் முடியாது!
  அதே சமயம், சங்கத் தமிழ் மரபை = மாற்றி எழுதவும் கூடாது!

  தொன்மம் = தொன்மம் தான்!
  அதைத் தொன்மமாக இருக்க விடுவதே நல்லது!
  இன்றைக்கு நம் மன விருப்பங்களுக்காக, தொன்மத்தில் கை வைத்து விடக் கூடாது!
  ——–

  இந்தப் புரிதலோடு, உங்கள் கேள்விகளை அணுகலாமா?:)

 5. ஏங்க.. இப்படியொரு அருமையான விளக்கத்தைக் கொடுத்துட்டு, ஏன் anonymous-ங்கற முகமூடில மறைஞ்சுருக்கீங்க KRS.? ஆளைப் பார்த்தே ரொம்ப நாள் ஆயிருச்சு… சீக்கிரம் வாங்க… வெற்றிகரமா வேலவனைப் பத்தி ஒரு பதிவை உங்கள் வலைப்பூவில் எதிர்பார்க்கிறேன்.. 🙂 🙂

 6. Madhav says:

  புணர or புரிய ??

  • anonymous says:

   மணம் “புணர” என்பதே சரி!
   புணர்தல் = சேர்தல்!
   ஏற்கனவே உள்ளத்தால் சேர்ந்தவள் வள்ளி! அவளை மணத்தாலும், மற்ற எல்லாவற்றிலும், அகலகில்லேன்-ன்னு சேர்த்துக் கொள்கிறான் முருகன்!
   (திருத்தணிகையே = மணம் “புணர்ந்த” இடம்)

 7. pichaikaaran says:

  தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ள அருணகிரி நாதர் பாடல் – மறைபொருள் விளக்கம்
  http://www.pichaikaaran.com/2012/03/blog-post_19.html

  • anonymous says:

   நன்றி திரு.பிச்சைக்காரன்
   உங்கள் “ஒன்றே” என்பதற்கான விளக்கம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது!

   தேற்றேகாரம் – ஒன்”றே”
   = அந்த முகமும் ஒன்றே, இந்த முகமும் ஒன்றே!
   இப்படி வாசிக்கும் போது, என் முருக இனிமை பல மடங்கு கூடுகிறது!:)
   ——–

   ஆனால் ஆறு முகங்கள் என்பது “புராணம்”!
   நக்கீரர்/ அருணகிரி….பலரும் புராண அடிப்படையிலும் பாடல்கள் பாடியுள்ளார்கள் என்பதும் உண்மையே!:)

   • Madhav says:

    //http://www.pichaikaaran.com/2012/03/blog-post_19.html
    //ஆனால் எனக்கு ஆறு முகத்துடன் காட்சி தருகிறாய்.. ஆறு முகத்துடன் காட்சி தருவதன் தத்துவ விளக்கத்தை கூறுவாயாக..//

    தத்துவம் விளக்கப்பட்டதா ?

 8. anonymous says:

  சங்கத் தமிழில்…..அதுவும், தொல்காப்பிய காலம், எட்டுத் தொகையின் மூத்த காலங்களில்….
  முருகன் = இயற்கை வடிவினன்!
  “புராணக் கலப்புகள்” – பன்னிரண்டு கை, பதினெட்டு கண்….ஏதும் அற்றவன்!

  6 முகம் = கசடதபற
  12 கரம் = உயிர் எழுத்து
  18 கண் = மெய் எழுத்து
  இதெல்லாம் பின்னாளைய மக்களின், அவரவர் “அலங்கார” வர்ணனைகள்!
  ஒரு மொழி இப்படியெல்லாம் உருவாகாது என்பதே பகுத்தறிவு அல்லவா?
  —–

  சங்கத் தமிழில், தொல்காப்பிய காலங்களில்….
  மக்கள் வணங்கியது = இயற்கை/ நடுகல்!
  அந்தந்த நிலத்தின் பெருமகனைக் குறிக்க = இவையே மக்கள் வழிபாடு!

  முருகன் = மலையின் உச்சி = செம்மை
  திருமால் = காட்டின் அடர்த்தி = கருமை
  கருப்பொருள்கள், உரிப்பொருள்கள் இவற்றை ஒட்டியே – இயற்கையை ஒட்டியே!

  மாயோன் மேய காடுறை உலகு! = முன்னை மரபின் முதுமொழி முதல்வ
  சேயோன் மேய மைவரை உலகு! = அரும் பெயர் மரபின் பெரும் பெயர் முருக

  (வேந்தன் = அரசன்; மாறிக் கொண்டே இருப்பவன்! வருணன் = காற்றின் அடிப்படையில் வேந்தனைப் போலவே….
  இவர்கள் மாயோன்/சேயோன் போல் “நிலைத்த”வர்கள் இல்லை! வெறும் நில அடையாளங்களாக நின்று விட்டனர்!
  அதனால், இவர்கட்கு, தனித்த துறைகளோ, கோட்டங்களோ, கூத்துகளோ இல்லை! மக்கள் வாழ்வியலோடும் கலக்கவில்லை)
  ———

  கேள்வி, முருக முகம் என்பதால்……முருகனை மட்டும் இங்கே எடுத்துக் கொள்வோம்!

  *முருகன் = நடுகல்/கந்து, ஆவி, இயற்கையாகவே வழிபாடு
  (திருப்போரூர் ஆலயம் சென்றால், கந்து- என்பதைக் காணலாம்)

  நாளடைவில், கந்தினையே, தங்களை ஒத்த மனித உருவம் போல், சிறிது சிறிதாகத் தோற்றம்!

  * கடம்பு, காந்தள், வேங்கை
  * யானை, வரையாடு, மயில்
  * சூர் என்றால் துன்பம்; சூர் மடித்தான் = துன்பம் துடைப்பவன்!
  * கோட்டம் அமைத்து, கந்து/வேல் நிறுத்தி வழிபாடு! வேலன் (எ) கண்ணுக்குப் புலப்படாதவன் கந்திலே இறங்குதல்
  * வேலன் வெறியாட்டு என்கிற கூத்து/பூசை
  * கந்தினைச் சுற்றிய வள்ளிக் கொடி
  * நெல், தினை, தேன், கிடாக் குருதி, ஊன் படைப்பு
  ———

  இதுவே “தமிழ் முருகன்”!
  ஆறு முகம், பதினெட்டு கண் எல்லாம் பின்னாள் கலந்த “புராணக் கதைகள்”!

  தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து இன்னும் மூத்த எட்டுத் தொகை நூல்களுள்….மலைபடுகடாம் போன்ற பத்துப்பாட்டு நூல்களுள் இந்த முருகனையே காணலாம்!
  ———

  • anonymous says:

   பின்னாளில்….கலப்பு, கலப்புக்குப் பிந்தைய காலங்களில்,
   *சேயோன்/ முருகன் = வேத வடிவினன் ஆனான்!
   *மாயோன்/ திருமால் = வேத வடிவினர் ஆனார்!

   சங்க காலம் = முதற் சங்க/ இடைச் சங்க காலம் போய்…..
   கடைச் சங்க காலம், சிலப்பதிகார காலக் கட்டங்கள்….பல பண்பாடுகள் நன்கு கலக்கத் துவங்கி விட்டன!
   இயற்கையான வழிபாடுகள் போய், “கதைகள்” மலியத் துவங்கி விட்டன!

   பத்துப் பாட்டு தொகுத்த போது, முதலில் வைக்கப்பட்ட நூல் = நக்கீரரின் முருகாற்றுப்படை!
   ஆனால் அது காலத்தால் முதல் நூல் அல்ல! = தொகுப்பால் முதல் நூல்!

   நக்கீரர் = கடைச் சங்க காலம்! கலப்பு நடந்து கொண்டு இருக்கிறது (அ) நடந்து விட்டது! நக்கீரர் இரண்டையுமே காட்டுகிறார்!

   * பழமுதிர் சோலையில் = முன்பு சொன்ன “இயற்கையான” முருக வழிபாடு!
   * திருவேரகம் (எ) சுவாமிமலை = வேள்வி, அந்தணர் புகுத்திய “கதைகள் மிகுந்த” முருக வழிபாடு
   ———–

   ஆக, “ஆறுமுகம்” என்று சங்கத் தமிழில் முதலில் வருவது = நக்கீரர் எழுதிய கடைச்சங்க நூல் – திருமுருகாற்றுப்படையில் தான்!
   அதற்கு முன்பு வரை, சங்கத் தமிழிலே, மூத்த எட்டுத் தொகை நூல்களுள் = “இயற்கையான முருகனே”!

   பரிபாடலில், சில பாடல்கள் மூத்தவை, பல பாடல்கள் பிந்தியவை! (இசைப் பண்களே வைத்தே எவை எவை என்று சொல்லி விடலாம்)
   பிந்தைய பரிபாடல்களில் = நக்கீரர் ஆரம்பித்து வைத்த இந்தக் “கதைகள்”, இன்னும் பரவின!
   ——–

   அதே போல் தான் வள்ளி, தேவானையும்!

   தொல்காப்பிய காலம்/ மூத்த எட்டுத் தொகை நூல்களில் = தேவானை இல்லை!

   “கதைகளை” ஆரம்பித்து வைத்த நக்கீரரும் = “தேவானை” என்று நேரடியாகக் குறிப்பிடவில்லை;
   ஆனால் சமயம் சார்ந்த தமிழ் உரையாசிரியர்கள் (உவே சாமிநாத ஐயர் உட்பட)….மறுவில் கற்பின் என்று நக்கீரர் சொன்னது “தேவானை” என்றே எழுதிப் போந்தார்கள்!

   அதே சமயம், பிந்தைய பரிபாடல்களில், தேவானை பற்றிய நேரடியான குறிப்புகள் உண்டு!
   சிலர் இதை மறைத்து விட்டு, “தேவானை” சங்கத் தமிழில் இல்லவே இல்லை என்றும் சொல்லி விடுவார்கள்! அது தவறு!

   அவரவர் “மனப் பிடித்தங்கள்”
   ஒன்றை மட்டும் சொல்லி, இன்னொன்றை மறைத்தல் = நேர்மையான ஆராய்ச்சி ஆகாது!
   தமிழை அணுகும் போது, அவரவர் சமயம்- சுய விருப்பு/வெறுப்புகளை விடுத்து அணுகுதலே = என் காதல் முருகனுக்கும் உவப்பு, தமிழ் அன்னைக்கும் உவப்பு!
   ———

   இதுவே இயற்கையான ஒருமுக முருகன், அறுமுகனாய் பரிணமித்த ஆறு!
   எதுவாயினும்…..தொன்மம் தொன்மம் தான்! அதில் கை வைக்கல் ஆகாது!

   ஆனால் ஒருமுகனோ/அறுமுகனோ…..
   அந்த “முருகா” என்னும் “உணர்ச்சி”! = அது தமிழ் உணர்ச்சி!
   அந்தக் காதல்….என் நெஞ்சமெல்லாம் தேங்கும்……

   செந்தூர் முருகா சேர்த்துக்கொள்!

 9. anonymous says:

  தரவுகளுடனான மேல் வாசிப்புக்கு….
  murugan.org editor, mr. patrick harrigan has added this research paper
  = சங்கத் தமிழில் வேல் வழிபாடு
  http://murugan.org/tamil/kannabiran.vel.htm

  • உங்கள் விளக்கங்களுக்கு நன்றி! தரவுகளுக்கு நன்றி! இலக்கியத்தையும் இலக்கணத்தையும் கதை போல எளிமைப்படுத்திச் சொல்வதற்கு நன்றி 🙂

   இந்த மாதிரி ஒரு தமிழ் மேடையை அமைத்துக் கொடுத்த திரு. சொக்கனக்கு நன்றி நன்றி 🙂

   amas32

 10. Samudra says:

  ஒருவருக்கு எப்படி ஆறுமுகம் இருக்க முடியும்? ஆறு தலைகளுக்கு (மூளைகளுக்கு) எப்படி ஒரே இதயம் ரத்தம் பம்ப் செய்ய முடியும்? சும்மா ஜோக்குக்கு…:) ஆறு தலைகளை ஒரே கழுத்து எப்படி தாங்க முடியும்?
  மேலும் இரட்டைப்படையில் முகம் இருந்தால் பார்க்கவே
  நன்றாக இருக்காது. மூன்று, ஐந்து, ஏழு என்று ஒற்றைப்படையில்
  இருந்தால்தான் Balance ஆகி ஓரளவு நன்றாக இருக்கும். சிவனுக்கு
  மட்டுமே ஒற்றைப்படையில் தலை உள்ளது. பிரம்மன், முருகன், ராவணன் என்று எல்லாருக்குமே Even தான்.ஏனோ இப்படிப்பட்ட அதீத கற்பனைகள் எனக்குப் பிடிப்பதில்லை.

  • anonymous says:

   //பிரம்மன், முருகன், ராவணன் என்று எல்லாருக்குமே Even தான்//

   சமுத்ரா சார், odd no & even no விளையாட்டா?:))
   ஏனோ திருமால் எனப்பட்ட விஷ்ணுவுக்கு, பல முகம் வைக்காமப் போயிட்டாங்க:))

   //சிவனுக்கு மட்டுமே ஒற்றைப்படையில் தலை உள்ளது//

   Btw, சிவபெருமானுக்கும் = ஆறு முகம் தான்!
   1 சத்யோஜாதம்
   2 தத்புருஷம்
   3 வாமதேவம்
   4 ஈசானம்
   5 அகோரம் – என்ற ஐந்து வெளிப்படையான முகங்கள்
   6 அதோமுகம் என்ற ஆறாவது முகம் – இது உள் முகம்!

   இந்த ஷண்முகத்தில் இருந்து தோன்றியவனே ஷண்முகன்! 🙂
   ஷண்-முகன் = தமிழ் முகன் அல்லன்:))
   எனினும், சைவ சித்தாந்தப்படி, முருகனும்-சிவபெருமானும் வெவ்வேறு அல்லர்! இருவரும் ஒரே மூல சக்தியே! சத்தும் சித்துமான சிவசக்தியைக் கடந்து நிற்கும் சிவா-ஆனந்தன் = முருகன்!

 11. pichaikaaran says:

  1 “உன் அருளை வேண்டி நிற்கிறேன்!” பாடலில் இது இல்லவே இல்லை.. பலர் இந்த விளக்கத்தை தாமாகவே சொல்கின்றனர்..

  2 ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே, = ஆண் மயிலின்மீது ஏறி விளையாடுகின்ற முகம் ஒன்று,

  இந்த அர்த்தம் சரியா என பாருங்கள்… ஒன்”றே” என்ற ஏகாரம் ,பொருளுரையில் எங்கே ?

  மயிலின் மீது ஏறி விலையாடும் போது உனக்கு முகம் ஒன்றுதான்.. முகம் ஒன்றே.. ஒன்று மட்டுமே என்பதுதான் சரியாக இருக்கிறது…

  • என். சொக்கன் says:

   அன்புள்ள நண்பருக்கு,

   உங்கள் உரையும் சுவையாக உள்ளது. அதேசமயம் மற்ற உரைகள் அனைத்தும் தவறுதான் என்று ஒரேயடியாக மறுப்பதைத் தவிர்த்திருக்கலாம், இது வழக்காடுமன்றம் அல்லவே, ஒரு கட்சிமட்டும் ஜெயிக்க?

   ‘ஆறு முகம் ஆன பொருள் நீ, அருளல் வேண்டும்’ என்று நிறுத்தற்குறி இட்டால் இங்கே உள்ள விளக்கம் சரியானதுதான். நடுவில் வரும் அந்தக் கமாவைத் தூக்கிவிட்டால் நீங்கள் சொன்ன விளக்கம் சரியானது, இரண்டையும் ரசிக்கலாமே, என்ன தவறு?

   //1 “உன் அருளை வேண்டி நிற்கிறேன்!” பாடலில் இது இல்லவே இல்லை.. பலர் இந்த விளக்கத்தை தாமாகவே சொல்கின்றனர்..//

   இருக்கிறதே, ‘அருளல் வேண்டும்’ என்றால் ’வேண்டி நிற்கிறேன், அருள் செய்’ என்றுதானே அர்த்தம்? (மீண்டும் சொல்கிறேன், அந்தக் கமாவை நீக்கிவிட்டுப் பொருள் கொண்டால் இந்த ‘அருளல் வேண்டும்’க்கு வேறு அர்த்தம், அதைத்தான் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள், நான் இப்படிப் படிக்க விரும்புகிறேன், அவ்வளவே)

   என். சொக்கன்,
   பெங்களூரு.

  • anonymous says:

   திரு.பிச்சைக்காரன்
   முன்பே சொன்னது போல், தங்கள் விளக்கம் ரசனையானது!
   ஆனால் பாடலுக்கு, வியாக்யான மரபு (எ) நயம் பாராட்டல், எப்பவும் இருப்பது தான்! அது ஆங்காங்கே வேறுபடும்!
   அது “தவறு” அல்ல! 🙂 அது நயம் மட்டுமே! = மையப் பொருள் மாறாதவரை சரியே!

   வாரியார் விளக்கம் படித்துப் பாருங்கள்!
   http://www.kaumaram.com/thiru_uni/tpun9999.html – இங்கும் படித்துப் பாருங்கள்!
   ரெண்டும் சற்றே மாறி இருக்கும் = “தவறு” அல்ல!:)
   —–

   //ஒன்”றே” என்ற ஏகாரம் ,பொருளுரையில் எங்கே ?//

   :))))
   ஒன்’றே’ = உனக்கு ஒரே முகம் தான்; ஆறு முகம் இல்லை -ன்னு கொள்ளலாம்! தவறில்லை!
   ஆனா, இதே அருணகிரியார், “சண்முகா, ஆறுமுகம் உடையவனே”-ன்னும் பிற பாடல்களில் எழுதி இருக்கார் அல்லவா!

   எ.காட்டாக,
   உன் கண் காக்கும் = உன் கண்கள் என்னைக் காப்பாத்தும்
   உன் கண் ‘ஒன்றே’ காக்கும் = உன் கண்கள் மட்டு’மே’ என்னைக் காப்பாத்தும்
   – இது ஒரு நுணுக்கம்!
   – அதான் தேற்றேகாரம்! நம்மைத் தேற்றும்-ஏகாரம்!
   – கண் ‘ஒன்றே’ காக்கும் என்பதால் = அவனுக்கு ஒரே கண்ணு தான் இருக்கு-ன்னு எடுத்துப்போமா?:))

   அதே போலத் தான் = “முகம் ஒன்றே”!

   * இந்த முகம் மட்டுமே கூறும் அடியார்கள் வினை தீர்க்கும், இந்த முகம் மட்டுமே குன்றும் உருவும்!
   (அ)
   * அட, இந்த முக’மே’ தான் கூறும் அடியார் வினையும் தீர்த்தது; குன்றையும் உருவியது
   = இது ஒரு “முருக வியப்பு”; அவ்வளவு தான்!

   அதனால் சொக்கர் இட்ட பாட்டின் பொருளும் சரியே! “தவறல்ல!:))
   —–

  • anonymous says:

   //“உன் அருளை வேண்டி நிற்கிறேன்!” பாடலில் இது இல்லவே இல்லை//

   :)))
   ஆறுமுகம் ஆன பொருள் நீ
   அருளல் வேண்டும்!
   எதை? = அதுக்குப் பல விளக்கம் சொல்லலாம்!

   ஆனால்….எதுவானாலும்…
   ….அதை அவன் “அருள வேண்டும்” அல்லவா!
   So, “அருளல் வேண்டும்” என்று அருள் வேண்டி நிற்பது உண்மையே!
   பாடலில் அது கட்டாயம் இருக்கு!:)
   —–

   *முருகா, ஒவ்வொரு முகமா ஒவ்வொன்னு செஞ்சியே, இப்போ ஆறுமுகமும் சேர்ந்து ஒன்னாக் காட்டுறியே, அதன் பொருள்(meaning) என்ன? = அந்தப் பொருளை(meaning) அருள்வாயே

   * முருகா, உன் முகம் ஒன்றே (முகம் மட்டுமே) பலதும் செஞ்சுது!
   ஆறுமுகம் ஆன பொருள் நீயே தான்!
   = அந்தப் பொருளை (உன்னை) எனக்கு அருள வேணும்!

   இப்படி, எப்படிப் பொருள் சொன்னாலும்….கட்டாயம் அருள் வேண்டி நிற்பது, பாட்டில் இருக்கு!
   நாமும் அருள் வேண்டி நிற்போம்:)

  • ஆனந்தன் says:

   பிச்சைக்காரன் (வெளிப்படையான) விளக்கமும் பொருத்தமாகவே இருக்கிறது. நன்றி!

  • ஆனந்தன் says:

   பாடலின் சரியான பொருளை ஆராய்ந்து அறிதலில் தவறில்லை என்றாலும், நினைவில் வைத்திருக்க வேண்டிய ஒரு கருத்தை இந்தப் பாடலில் காணலாம்:

   “ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச்
   சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி
   மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
   சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே”

   பொருள்: “இறைவனை அன்பால் வழிபடும் ஞானிகளே ! அனுமானப் பிரமாணத்தாலும் உரையளவையாலும் இறைவனை மிகுதியாகச் சோதிக்க வேண்டா. அவன் ஊனக்கண் கொண்டு நோக்கப்புறத்தே சோதிவடிவமாகவும், அன்போடு கூடி அகத்தால் ஞானக்கண் கொண்டு நோக்க உள்ளொளியாகவும் விளங்குபவன். அவனை விரைவில் வந்து சார்ந்து, மனம் ஒன்றி வழிபட்டுப் பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். இறைவன் அளவைகளால் அறியப்படும் ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவன்”
   (சம்பந்தர் பாடல் 3.54.5)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s