பூமி வில்

மாலை விலை பகர்வார் கிள்ளிக் களைந்த பூ

சால மிகுவதோர் தன்மைத்தாய்க் காலையே

வில் பயில் வானகம் போலுமே வேல்வளவன்

பொற்பு ஆர் உறந்தை அகம்

நூல்: முத்தொள்ளாயிரம் (#25)

பாடியவர்: தெரியவில்லை

வேல்வளவனாகிய சோழனின் நாடு, அழகு நிறைந்த உறந்தை நகரம்.

அங்கே பூக்கடைகள் ஏராளம். அந்தக் கடைகளில் உள்ள வியாபாரிகள் பலவிதமான மலர்களைத் தொடுத்து அழகிய மாலைகளைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதேசமயம், அவர்கள் வாடிக்கையாளர்களையும் புறக்கணிப்பதில்லை, ஒரு கை பூத் தொடுக்க, இன்னொரு கையால் தொடுத்துவைத்த மாலைகளை வந்தவர்களிடம் காண்பித்து விலை சொல்கிறார்கள், விற்பனை செய்கிறார்கள்.

இந்த வியாபாரிகள் தங்களுடைய மாலைகளில் மிகச் சிறந்த மலர்களைமட்டுமே பயன்படுத்துகிறார்கள். சில பூக்களில் சிறிய குறைபாடுகளோ, லேசான சிதைவுகளோ இருந்தால் அவற்றை வீசி எறிந்துவிடுகிறார்கள்.

இப்படி உறந்தை நகர வீதிகளில் வீசப்பட்ட மலர்கள் பல வண்ணங்களில் குவிந்து கிடக்கின்றன. அவற்றை மொத்தமாகப் பார்க்கும்போது, வானவில்தான் பூமிக்கு வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.

துக்கடா

 • இது வெறும் காட்சி வர்ணனை அல்ல. நாலு வரிப் பாட்டில் பூக்கடையின் Production, Sales, Marketing, Price Management, Quality Control எல்லாம் வந்துவிடுகிறது :> அதைவிட முக்கியமாக, இப்படி வீசி எறிந்த (Wastage) பூக்களே தெருமுழுவதும் நிறைந்து கிடக்கிறது என்றால், மாலைகளில் பயன்படுத்தப்பட்ட பூக்கள் எவ்வளவாக இருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள், இதிலிருந்து உறந்தை / சோழ நாட்டின் வளம் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • மாலை விலைபகர்வார் கிள்ளிக் களைந்தபூச்
 • சால மிகுவதோர் தன்மைத்தாய்க் காலையே
 • வில்பயில் வானகம் போலுமே வேல்வளவன்
 • பொற்பார் உறந்தை அகம்

255/365

This entry was posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், சோழன், முத்தொள்ளாயிரம், வர்ணனை, வெண்பா. Bookmark the permalink.

2 Responses to பூமி வில்

 1. GiRa ஜிரா says:

  சேரன் வில்லை வைத்துச் சோழன் தலையூரை அழகு எனக்காட்டுகிறார் பெயர் தெரியாத அந்தப் புலவர்.

  வில் பயிலும் வானகம் போல் ஆகுமே வேல்வளவன் பொற்பு ஆர் உறந்தை அகம்

  உறந்தை என்பது உறையூரின் இன்னொரு பெயர். பழைய பெயர்.

  வில் என்பது சேரனின் சின்னம்.

  உறையூரின் தெருக்களெங்கும் பூக்கள் கிடப்பதால் வானவில் போல இருக்கிறதாம்.

  இதில் ஆராய்ந்து சுவைக்கப்பட வேண்டிய சொற்றொடர் “கிள்ளிக் களைந்த பூ சால”!

  பூக்களை மாலையாகக் கட்டுகின்றவர்கள் பூக்களைக் களைந்து கழிப்பார்கள். மாலையாகக் கட்டப்படும் பூக்களை விட களையப்படும் பூக்கள் அளவில் குறைவாகவே இருக்கும்.

  அள்ளிக் கொடுப்பது என்றால் நிறைய கொடுப்பது. கிள்ளிக் கொடுப்பது என்றால் குறைவாகக் கொடுப்பது.

  கிள்ளிக் களைவது என்றால் குறைவாகக் களைவது.

  அப்படிக் களையப்பட்ட பூக்களே தெரு முழுக்கக் கிடந்தால் மாலையாகக் கட்டப்பட்ட பூக்களின் அளவை நினைத்துப் பாருங்கள்!

 2. உறந்தை நகரிலே விரிந்த இந்த காட்சி இன்றும் தமிழ்நாட்டுக் கோவில்கள் அருகில் உள்ள பூக்கடைகளில் காணலாம். பூக்கட்டும் தொழிலும் அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை ரொம்ப மாறவில்லை என்றே இதிலிருந்து தெரிகிறது!

  எந்தவொரு விஷயத்தையும் நேர்த்தியுடன், அழகு கொஞ்சும் தமிழ் வார்த்தைகளில் பாடிவைப்பது தான் நம் புலவர்களின் தனிச் சிறப்பு!

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s