எல்லாம் நீயே

நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள

நின் தண்மையும் சாயலும் திங்கள் உள

நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள

நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள

நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள

நின் தோற்றமும் அகலமும் நீரின் உள

நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள

நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள

அதனால் இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்

ஏமம் ஆர்த்த நின் பிரிந்து

மேவல் சான்றன எல்லாம்

நூல்: பரிபாடல் (#4லிருந்து சில வரிகள்)

பாடியவர்: கடுவன் இள எயினனார்

திருமாலே,

உன்னுடைய வெம்மையும் ஒளியும் சூரியனிடத்தில் உள்ளது,

உன்னுடைய அருளும் மென்மையும் சந்திரனிடத்தில் உள்ளது,

உன்னுடைய கருணைப் பெருக்கும் கொடைத்தன்மையும் மழையிடத்தில் உள்ளது,

உன்னுடைய தாங்கும் தன்மையும் பொறுமையும் பூமியிடத்தில் உள்ளது,

உன்னுடைய நறுமணமும் ஒளியும் மலரிடத்தில் உள்ளது,

உன்னுடைய தோற்றமும் பெருமையும் கடலிடத்தில் உள்ளது,

உன்னுடைய உருவமும் மொழியும் வானிடத்தில் உள்ளது,

நீ வருவதும் செல்வதும் காற்றிடத்தில் உள்ளது (காற்றுபோல் நீ எப்போதும் எங்கும் இருக்கிறாய்),

ஆகவே, இதுவரை நான் சொன்ன இவையும் அவையும் உவையும் மற்ற பொருள்களும் எல்லாமுமே, இந்த உலகுக்குக் காவலாக நிற்கும் உன்னிடத்திலிருந்து பிரிந்துதான் உருவாகியிருக்கின்றன, அதன்பிறகும் உன்னைச் சேர்ந்தே இருக்கின்றன.

துக்கடா

 • ’இந்த உலகைச் செய்தது நீயே, அதுவும் உன்னுடைய குணங்களையே இங்குள்ள ஒவ்வொரு பொருளுக்கும் கொடுத்திருக்கிறாய்’ என்று பட்டியல் போட்டு விளக்கும் அழகான பாடல் இது
 • இவை தெரியும், அவை தெரியும், அதென்ன உவை?
 • இவன், அவன், எவன், இது, அது, எது போன்ற சொற்களை இன்னும் புழக்கத்தில் வைத்திருக்கும் நாம் உவன், உது போன்றவற்றைமட்டும் மறந்துவிட்டோம். இந்த வித்தியாசத்தைச் சொல்ல ஒரு சுருக்கமான உதாரணம்:
 • இவன் என் அருகில் இருக்கிறான்
 • அவன் நம் இருவருக்கும் அருகில் இல்லை, தொலைவில் இருக்கிறான்
 • உவன் உங்கள் அருகில் இருக்கிறான் (அல்லது, நம் இருவருக்கும் இடையில் இருக்கிறான்)

254/365

Advertisements
This entry was posted in திருமால், பக்தி, பரிபாடல், விஷ்ணு. Bookmark the permalink.

20 Responses to எல்லாம் நீயே

 1. anonymous says:

  அவன், இவன், உவன்
  சொக்கர் சொன்னதற்கு சற்றே மேலதிகமாக…

  ஆங்கிலத்தில் பார்த்தீங்க-ன்னா ஒருத்தன் தொலைவில் இருந்தாலும் He தான்! கிட்டக்க இருந்தாலும் He தான்! 🙂
  தமிழில் இடம் பொருள் ஏவல் உண்டு:)

  எடுத்துக்காட்டாச் சொல்லட்டுமா?
  நானும் சொக்கரும் பெங்களூருவில் நேரில் பேசிக் கொள்ளும் போது,

  * ராகவன் அதே டேபிளில் கிட்டக்கவே உணவு உண்டால்
  = “இவன்” புட்டு விரும்பிச் சாப்புடுவான்”
  * ராகவன் அப்போ சென்னையில் இருந்தா
  = “அவன்” புட்டு விரும்பிச் சாப்பிடுவான்!

  * ராகவன் கிட்டக்க தான் இருக்காக, ஆனா டேபிளில் இல்ல, எனக்கும் சொக்கருக்கும் chicken vindaloo வாங்கியாற counter-க்கு போயிருக்காங்க-ன்னா
  = “உவன்” புட்டு விரும்பிச் சாப்பிடுவான் 🙂
  = உவனே பில்லும் கட்டீருவான்:))
  —-

  ஈழத் தமிழில் இந்த “உவன், உவள்” புழக்கம் நிறைய உண்டு! நாம தான் உவனைத் தொலைச்சிட்டோம்:(

  ஈழத் தமிழ்: அட பெடியன்களா, “அந்த” வடிவான பெட்டைய, இந்த ஒளிஞ்சான் “உவனுக்கு”ப் பிடிச்சிருக்குதாம்:)
  சென்னைத் தமிழில்: டேய் மச்சி, அந்த பிகரை, இதோ ஒளிஞ்சிக்கிட்டு இருக்கானே, இவன் (உவன்) ரூட் வுடறான்:)
  —-

  • anonymous says:

   அதாச்சும்…
   1st Person = தன்மை
   2nd Person = முன்னிலை
   3rd Person = படர்க்கை
   உவன் = படர்க்கை போல் வரும் முன்னிலைச் சுட்டு!
   —-
   பொதுவா
   இ = முன்னிலை
   அ = படர்க்கை
   உ = நடுவில் வருவது!

   இவன், இவள், இது, இவை
   அவன், அவள், அது, அவை
   உவன், உவள், உது, உவை
   —-
   மலையாளத்திலும் உவன் உண்டு-ன்னு நினைக்கிறேன்; அறிந்தவர், அறியத் தாருங்கள்
   ஆயாளு அறியும், இவனும் உவனும் அறிகில்லா!

   அ=சேய்மை, இ=அண்மை
   இது ஆ, ஈ -ன்னு மலையாளத்தில் நீளும் = ஆயாளு, ஈயாளு
   தமிழில் கூட நீளும்
   அங்கு=ஆங்கு, இங்கு=ஈங்கு!

   ஒடனே கேப்பீங்களே, உங்கு=ஊங்கு இருக்கான்னு?:))

  • anonymous says:

   உங்கும் இருக்கு!
   ஊங்கும் இருக்கு:)

   அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
   மறத்தலின் “ஊங்கு இல்லை கேடு!
   —-

   அதே போலத் தான்
   அப்பக்கம், இப்பக்கம், உப்பக்கம்

   ஊழையும் “உப்பக்கம்” காண்பர் உலைவின்றித்
   தாழாது உஞற்று பவர்!
   —-

   இடக் குறியீடுகளுக்கு “அ”/ “இ” போடுவது போலவே, “உ”-வும் போடலாம்
   உங்ஙனம், உவ்விடம், உங்கு, உப்பக்கம்…

  • ஆனந்தன் says:

   //ஈழத் தமிழ்: அட பெடியன்களா, “அந்த” வடிவான பெட்டையை, இந்த ஒளிஞ்சான் “உவனுக்கு”ப் பிடிச்சிருக்குதாம்:)//
   உதெல்லாம் நல்லாத் தெரிஞ்சு வைச்சிருக்கிறீங்கள்!

 2. இது நாள் வரை பிரபந்தம் வழியே “கண்ணன்” பெருமை படித்ததற்கும், இன்று “பரிபாடல்” வழி திருமால் புகழ் படிப்பது கொஞ்சம் புதுமையா இருக்கு.

  • anonymous says:

   :))
   பரிபாடல் ஒரு துளி தான்! சங்கத் தமிழில் திருமால் பாடல்கள் எக்கச்சக்கமாக் கொட்டிக் கிடக்குது!
   எங்கெல்லாம் கொட்டிக் கிடக்குது? இங்கே போனாத் தெரியும்:) = http://goo.gl/WqRUY
   —-

  • anonymous says:

   சங்கத் தமிழில் அதிகம் பேசப்படும் இயற்கைத் தெய்வ வடிவங்கள் = முருகனும், திருமாலும்!

   ஆனால் அவை பக்தி இலக்கியம் அல்ல! சங்க கால மக்களின் வாழ்வில் இந்தத் தெய்வங்களின் தாக்கம் எப்படி இருந்தது?-ன்னு காட்டும் பாடல்கள் மட்டுமே!
   அதுனால ரொம்ப துதிப்பாடலா இருக்காது! மேலும் அவற்றைப் பாடியதும் ‘பக்தர்கள்’ அல்ல! பொதுவான கவிஞர்கள்!
   —-

   இப்படித் தனித்தனிப் பாடல்கள் அதிகம் திருமாலுக்கு இருந்தாலும், ஒரு தனி நூல்-ன்னு திருமாலுக்கு அமையவில்லை!
   ஆனால் முருகனுக்கு அமைந்தது! = திருமுருகாற்றுப்படை!

   (முருக பக்தரான நக்கீரர் இதைச் செய்தருளினார்)
   —-

   அதே போல் தான் சேரர்களும்;
   சோழன்-பாண்டியன் மேல் தனிப்பட்ட பாடல்கள் இருக்கும்! ஆனா ஒட்டுமொத்த பாண்டிய மரபுக்கும் தனி நூல் இல்ல!
   சேர மரபுக்கு மட்டுமே = பதிற்றுப்பத்து!
   —-

   சங்கத் தமிழில்…
   “தனி நூல்” கண்ட மரபுகள் இரண்டே இரண்டு தான்!
   * முருக மரபு = திருமுருகாற்றுப்படை
   * சேர மரபு = பதிற்றுப் பத்து!

   • GiRa ஜிரா says:

    சிறு கருத்துத் துளிகள்.

    முருகனும் திருமாலும் மட்டுமல்ல பிறவா யாக்கைப் பெரியோன் எனப்படும் நுதல்விழியானையும் சங்க இலக்கியங்களில் நிறையவே காணலாம்.

    நக்கீரரை முருகபக்தர் என்ற வட்டத்தில் குறுக்குவது முறையல்ல என்பது என் கருத்து. அப்படியானால் மாறன் சடகோபனையும் இராமானுசரையும் விஷ்ணுபக்தர் என்ற வட்டத்தில் குறுக்குவதும் பொருத்தமே.

    பரிபாடலில் முருகனுக்கு எத்தனை பாடல்கள் என்று நீங்களும் அறிவீர்கள்.

    அத்தோடு முருகு என்ற பெயர் தமிழில் மிகப் பழையது. மிகவும் கொண்டாடப்படுவது. அதனால்தான் அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக என்கிறார் நக்கீரர்.

    முருகபக்தர் நக்கீரர் மட்டுமல்ல பரிபாடலில் திருமால் மேல் பாடிய ஒரு திருமால் பக்தனும் சொல்வது “பெரும் பெயர் முருக”

    திருமாலைக் குறைத்துச் சொல்வதாகக் கருத வேண்டாம். அப்படித் தொனித்திருந்தால் மன்னிக்கவும்.

   • anonymous says:

    (வெட்டப்படும் “பொறையின்மை” என்னும் அக்கினிக் குழிக்குள், தெரிந்தே இறங்குகின்றேன்; முருகா! காக்க காக்க கனகவேல் காக்க!)

    பின்வரும் பத்திகளை, “சமயம்” என்ற கண் கொண்டு நோக்காது, “தமிழ்த் தொன்மம்” என்று மட்டும் நோக்குமாறு வேண்டுகிறேன்!

    அனைத்தும் நற்சமயங்களே!
    ஆனால் தொன்மம் (எ) வரலாற்றை மாற்றி எழுதி விட முடியாதல்லவா? தொன்மத்தைத் தொன்மமாக இருக்க விடுவோம்!
    ——

    1)
    பிறவா யாக்கைப் பெரியோன், இந்திரன் கோட்டம், வருணன், பாண்டவர்கள், இராசசூய யாகம் – என்ற குறிப்புகளும் ஆங்காங்கு உள!

    எனினும், இவர்களுக்கென = தனித்த கூத்து, தனித்த துறை, தனித்த திணை, மக்கள் வாழ்வியலில் இவர்கள் கலந்து இருந்தமை – இது பற்றிய குறிப்புகள் இல்லை!
    (குரவைக் கூத்து/ வேலன் வெறி, பூவைநிலை/ வெறியாட்டு, முல்லை/ குறிஞ்சி, மக்கள் முருகன்/திருமால் மேல் சூள்(சத்தியம்) செய்வது – இப்படியான வாழ்வியல் குறிப்புக்கள்)

    மேலும், இவர்களுக்கான கோட்டங்களின் பெயர்களும் இல்லை! ஏரகம், செங்கோடு, அரங்கம், வேங்கடம் முதலான பெயர்களும் இல்லை!

    தொல்காப்பிய காலத்துக்குப் பிந்தைய காலங்களில், பண்பாட்டுக் கலப்புகளால், சிறிது சிறிதாக மாற்றங்கள் வந்தனவே அன்றி, “முதல் மரபாக” அமையவில்லை! மக்கள் வாழ்வியலாகவும் அமையவில்லை!

    எட்டுத்தொகை நூல்களுக்குப் பின்னாளில் எழுதிச் சேர்த்த, பிற் சேர்க்கை = “கடவுள் வாழ்த்தை”க் களைந்து பார்த்தால்…
    பிறவா யாக்கைப் பெரியோன் குறிப்புகள்: புறம்=4 அகம்=3 கலி=3 பரிபாடல்=4 மட்டுமே; இவையும் பாடல்கள் அல்ல, குறிப்புகள் மட்டுமே!

    பாண்டவர்கள், இராசசூய யாகம் பற்றிய குறிப்புகள் கூட சங்கப் பாட்டில் ஓரிரு இடங்களில் வரும்! அதனால் பாண்டவர்கள் = தமிழ் முதல் மரபாகி விட முடியுமா?
    அத்துணை ஏன்? தனித்த திணையோ துறையோ கூத்தோ கூட வேண்டாம்! பரிபாடல் கூட அமையவில்லையே! மதுரை, வையை, செவ்வேள், திருமால் என அமைந்த பரிபாடல், இதரருக்கு அமையாதது ஏனோ?

    பாணினிக்கு சமஸ்கிருதம்-அகத்தியனுக்கு தமிழ்-ன்னு இலக்கணம் துண்டாக்கி குடுத்தது, சங்கத்தில் அமர்ந்தது, ருத்திர சன்மன் போன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத பின்னாள் “புராணக் கதைகளை” விடுத்து…..
    தொல்காப்பிய இயற்கை வழிபாடு/ முதல் மரபுகளை மட்டும் பார்த்தால், “தொன்மம்” என்ன-ன்னு விளங்கும்!

    அதே சமயம், பின்னாளில், சிலப்பதிகார கால கட்டத்தில் = பிறவா யாக்கைப் பெரியோன் – அவர் தம் வழிபாடு பரவலுற்றதையும் மறைக்காது சொல்லியே ஆக வேண்டும்!
    ———

    2)
    விஷ்ணு = வடமொழிச் சொல்! அது பண்பாட்டுக் கலப்புக்குப் பின்!
    அதே போல் தான், ஸ்கந்தன், சுப்ரமண்யன்!
    ஆனால், முருகன், திருமால் என்பதே தமிழ்ச் சொல்!

    *மூச்சுக்கு மூச்சு, “விஷ்ணு” என்று சொல்லி விடுவதால், திருமால் என்பதைத் தமிழ்த் தொன்மத்தில் இருந்து விரட்டி விடவும் முடியாது!
    *ஆலயம் தோறும் “சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில்” என்று எழுதி வைத்து விடுவதால், முருகனையும் தமிழ்த் தொன்மத்தில் இருந்து விரட்டி விடவும் முடியாது!
    ———

    3)
    மாறன் நம்மாழ்வார் = திருமால் அன்பரே! அது அவரைக் குறுக்குவது ஆகாது!
    நக்கீரர் = முருக பக்தரே! அதுவும் அவரைக் குறுக்குவது ஆகாது!

    மற்ற கவிஞர்கள் எல்லாம் பொதுவாகக் கவிதைகளைச் செய்த போது, முருகன் மேல் தனித்த கவிதையைச் செய்தவர் நக்கீரர்!
    தமிழில், முதன்முதலில் எழுந்த தனித்த “இறை நூல்” = திருமுருகாற்றுப்படை!
    ———

    4)
    அரும் பெயர் மரபின் பெரும் பெயர் முருக = இது 100% உண்மை!

    இவ்வாறு பாடுவது = நக்கீரர்
    அதே சமயம்….
    மாயோன் மேய மன்பெரும் சிறப்பின் = தொல்காப்பியர்

    தொல்காப்பியர் எந்த பக்தரும் அல்லர்! பொதுவானவர்!
    எந்தக் கடவுளின் மேலும் தனித்த நூல் எழுதினாரில்லை! தமிழுக்குப் பொதுவானவர்! ஆதித் தமிழ்த் தந்தை!
    அவரே சொல்கிறார் என்றால்? = “மாயோன் மேய மன்பெரும் சிறப்பின்”

    இன்றைய பாடலின் கவிஞரையே எடுத்துக் கொள்ளுங்கள்! = கடுவன் இள எயினனார்!
    இவர் முருகன் மேலும் பரிபாடல் பாடியுள்ளார்; திருமால் மேலும் பரிபாடல் பாடியுள்ளார்! பொதுவானவர்!
    திருமாலை என்ன சொல்கிறது? = “முன்னை மரபின் முதுமொழி முதல்வ”

    *முருகன் = அரும் பெயர் மரபின் பெரும் பெயர் முருக
    *திருமால் = முன்னை மரபின் முதுமொழி முதல்வ

    இப்படி, தமிழ் மரபோடு இணைந்து+இயைந்து இருப்பதை, பல சங்கப் பாடல்களில் காணலாம்!
    ——

    இவ்வாறு சொல்வதால், பிற தெய்வ வடிவங்களைக் குறைத்து மதிப்பிடுவது ஆகாது!
    தெய்வம் பலப்பலச் சொல்லி பகைத்தீயை வளர்ப்பவர் மூடர்! = “ஓர்” பொருளானது தெய்வம்!

    பண்பாடு என்பது மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருப்பதே!
    ஆனால் “தொன்மம்” என்ற ஒன்றும் உண்டு!

    எல்லாம் கடந்த இறைவனைக், மொழிக் குறுகலுக்குள் அடக்குவது நம் நோக்கம் இல்லை!
    நம் மொழியில், நம் இறை-இயல் வளர்ந்த பரிமாணத்தை அறிந்து கொள்வது மட்டுமே நோக்கம்!

   • anonymous says:

    மேற்கண்ட “கருத்துகளுக்கு”….
    மனமென்னும் மாய அரங்கில், வெறுப்பென்னும் சாட்டை சுழலப் போவதை அறிந்தும்…..”தமிழ்” என்பதால் மட்டும் எடுத்து வைத்தேன்!

    மனப் பிடித்தங்களுக்கு அப்பாற்பட்டு, தமிழைத் தமிழாக மட்டும் அணுகும் குணம்
    = இது எனக்குத் தந்த வாழ்க்கை/ உறவுப் பரிசுகள் நிறைய, இங்கு பேரில்லாமல் வாழ்வது உட்பட…

    முருகா, உள்ளம் அறிந்தவன் நீ!
    உனக்கே என் ஆவி!
    மேலே, நான் பிழைபடச் சொல்லி இருப்பின், என் பாதக மலத்தை நீக்கி, உன் பாதகமலத்தில் சேர்த்துக் கொள்!

    தொடர்ந்து என்னைத் துன்புறச் செய்யாமல்…..
    செந்தூர் முருகா சேர்த்துக்கொள்!

   • நன்றிகள் பல பெயரிலி, ராகவன். உங்களுக்கு எத்துனை நன்றிகள், எத்துனை முறை சொன்னாலும் தகும்.

 3. anonymous says:

  இந்தப் பரிபாடல்…முக்கியமான பாடல்!
  ஏன்-ன்னு கேக்குறீங்களா?

  பொதுவா, வடமொழி ஆதிக்கம் மிகுந்த சமய உலகில் என்ன சொல்லுவாங்க? இது வேதத்தில் இருக்கு! இது கீதையில் இருக்கு-ன்னு தானே அடிக்கடி மேற்கோள் காட்டுவாய்ங்க?
  ஆனா, ஒரு தமிழ்ப் பாட்டை, “இது பரிபாடலில் இருக்கு”-ன்னு, ஒரு வடமொழி நூலில் மேற்கோள் காட்டுவாங்களா?:))

  அப்படியான பாட்டு இந்தப் பாட்டு!
  அப்படி மேற்கோள் காட்டப்பட்ட வடமொழி நூல்=ஸ்ரீபாஷ்யம்!
  அப்படி மேற்கோள் எழுதியவர்=இராமானுசர்!

  இந்தப் பரிபாடலையும், நம்மாழ்வார் பாசுரத்தையும் ஒன்னா மேற்கோள் காட்டி, வேதக் கருத்து எவ்ளோ கஷ்டமா இருக்கு புரிஞ்சிக்க?
  ஆனா இது எளிமையா இருக்குப் பாருங்க-ன்னு வேதத்துக்கு நம்ம தமிழை வச்சி உரை எழுதுகிறார், இராமானுசர் :))
  ——–

  • ஆனந்தன் says:

   //இந்தப் பரிபாடலையும், நம்மாழ்வார் பாசுரத்தையும் ஒன்னா மேற்கோள் காட்டி, வேதக் கருத்து எவ்ளோ கஷ்டமா இருக்கு புரிஞ்சிக்க?
   ஆனா இது எளிமையா இருக்குப் பாருங்க-ன்னு வேதத்துக்கு நம்ம தமிழை வச்சி உரை எழுதுகிறார், இராமானுசர் // Interesting info – Thanks.

 4. anonymous says:

  அக்னி-ர் வா பாம ஆயதனம், ஆயதனவான் பவதி
  ஆபோ வா, அமுஸ்ய தப்த ஆயதனம், ஆயதனவான் பவதி!

  = நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள
  தமிழில் ஒரே வரியில் நிறைந்து விடும்:)

  முன்னது யஜூர் வேதம்
  பின்னது சொக்கர் அருளிய பரிபாடல்:))
  ——

  வாயு-ர் வா பாம ஆயதனம், ஆயதனவான் பவதி
  = நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள

  சந்திர-மா வா பாம ஆயதனம், ஆயதனவான் பவதி
  = நின் தண்மையும் சாயலும் திங்கள் உள

  இப்படின்னு…பலவாறு போகும்! நாம இந்தப் பரிபாடலின் அழகை மட்டும் பார்ப்போம்!

  • anonymous says:

   “முக்கோல் பகவர்கள்”-ன்னு சான்றோர்கள் சங்கத் தமிழில் உண்டு!

   கையில் மூனு கோலை ஒன்னாக் கட்டி ஏந்தியபடி செல்வார்கள்!
   இயற்கை வழிபாடா இருந்த முல்லை நில மாயோன் வழிபாட்டை இவர்கள் தான் தமிழில் “தத்துவமா” ஆக்கி வைத்தார்கள்!

   அத்வைதம், விசிஷ்டாத்வைதம் எல்லாம் அப்பறமா வந்தது தான்!
   ஆனா, வடமொழி வேதங்களுக்கு நிகரான “தத்துவங்கள்”, நம் தமிழிலேயே இருந்தன!
   —–

   *உலகம் மாயை அல்ல!
   உலகம் உண்மை!-ன்னே சங்கத் தமிழ் – பரிபாடல் பேசும்!

   இது தான் பின்னாடி விசிட்டாத்வைதம்-ன்னு ஆச்சி! பின்னாளில் மெய்கண்ட சிவத்தின் சைவ சித்தாந்தமும் ஆச்சி!
   சைவ சித்தாந்தம், விசிட்டாத்வைதம் = ரெண்டும் ஒன்னே போலத் தான் இருக்கும்! இறைவன் பேரை மட்டும் சிவன்/திருமால்-ன்னு மாத்திப் போட்டுக்க வேண்டியது தான்! மத்தபடி கருத்துகள் ஒன்னே போலவே இருக்கும்!

   அத்வைதம் தான் “எல்லாமே மாயை’ன்னு பேசும்:)

  • anonymous says:

   Matterக்கு வருவோம்…
   இந்தப் பரிபாடலை எதுக்கு இராமானுசர் மேற்கோள் காட்டினாரு?

   அத்வைதம் (அல்லிருமை) = பொதுவா இறைவனுக்கு “குணம்”-ன்னு ஒன்னுமே கிடையாது!
   இறைவனுக்கு கருணை (எ) குணம்-ன்னு நாமா நினைச்சிக்கறது; உலகில் எல்லாமே மாயை!
   இந்த மாயையை உணர்ந்துட்டா, மாயை விலகி, நாமே கடவுள் ஆயீருவோம்:)

   இதை இராமானுசர் மறுத்துப் பேசணும்!
   ஏன்னா அவரு கருத்து = விசிட்டாத்துவைதம் (விதப்பொருமை)
   உலகம் மாயை அல்ல! உண்மை-ன்னு சொல்லணும்!
   இறைவனுக்கு நம் பால் குணங்கள் உண்டு!-ன்னு சொல்லணும்!

   எப்படிச் சொல்லுறது?
   மேலே சொன்ன யஜூர் வேதத்தைத் தரவா எடுத்துக்கிட்டாரு! ஆனா அது ரொம்பக் கஷ்டமா இருக்கு! தரவு-ன்னா புரியணும்-ல்ல?
   அதான் பரிபாடல் & திருவாய்மொழியும் சேர்த்து மேற்கோள் காட்டுறாரு:))
   —-

   நிலம், தீ, சூரியன், சந்திரன், உலகம் = எல்லாம் மாயையா?
   இல்லை!
   ஏன்?
   இறைவனே, அவ்வாறு விரிந்து பரந்து இருக்கான்!
   எப்படி?

   *நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள = இறைவனின் ஒளிரும் குணம் கதிரவனா விரிஞ்சி நிக்குது!
   *நின் தண்மையும் சாயலும் திங்கள் உள = இறைவனின் குளிரும் குணம் சந்திரனா விரிஞ்சி நிக்குது!
   *நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள = இறைவனின் காக்கும்/உயிர்க்கும் குணம் உலகமா விரிஞ்சி நிக்குது!

   அதுக்காக உலகம் தான் கடவுளா? = இல்லை! அது கடவுளின் ஒரு அம்சம் (குணம்)
   எனவே உலகம் = மாயை-ன்னு யாரும் சொல்லீறாதீக!
   அப்படிச் சொன்னா, கடவுளையே மாயை-ன்னு சொல்லுறாப் போல:))) ன்னு கிண்டல் அடிச்சி, தன் கருத்தை நிலைநாட்டுவாரு!

   எதுவும் “மாயை” அல்ல!
   உலகம் உண்மை!
   வாழ்க்கை உண்மை!
   அந்தச் சிறுசிறு உண்மைகளை வைத்துக் கொண்டு, பெரிய உண்மையை, முழு உண்மையை (கடவுளை) உணர வேணும்!
   * உணர்வதற்கு வழி = இறைவனோடு “உறவு” பாராட்டுவது!
   —-

   இதை விளக்கத் தான், அவருக்கு இந்தப் பரிபாடல் உதவி இருக்கு!
   இப்போ புரியுதா, சொக்கர் குடுத்த இந்தப் பரிபாடலின் பின்னணி!:))

   முருகா….
   பிரசங்கம்/கிரசங்கம் பண்ணி இருந்தா என்னைய மன்னிச்சிருங்க:)
   நம்ம தமிழ்ப் பாட்டு, வேதத்துக்கே மேற்கோள் சொல்ல உதவிச்சி-ன்னு காட்ட….இதைச் சொல்ல வந்தேன்!

 5. anonymous says:

  நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள
  = நெருப்பு எரிஞ்சா, எப்படித் தெரிஞ்சிக்கலாம்?

  நாமெல்லாம் பாத்தாலே தெரிஞ்சிக்கிடலாம் பத்தி எரிவதை! ஆனா பார்வை இல்லாதவர்கள்?
  நெருங்கும் போதே அனல் அடிக்கும்! அதை வச்சி!

  கண்ணு இருந்தா, அதன் ஒளியை வச்சி
  கண்ணு இல்லீன்னா, அதன் சூட்டை வச்சி

  இப்படிக் “குணமாக” இறைவன் வெளிப்படுகிறான்!
  இருக்கப்பட்டவங்க, இல்லாதபட்டவங்க = இருவருமே அந்தக் குணத்தை உணரலாம்!
  இறைவன் = “குண சொரூபம்”
  அந்தக் குணத்தைக் கொண்டே, நாம் அவனோடு உறவு கொள்கிறோம்!
  —-

  நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள
  = ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்பது தேவாரம்!

  இப்படி ஒவ்வொரு குணத்துக்கும் பல பாடல்கள் ஆங்காங்கே இருந்தாலும்….
  மொத்த இறைத் தத்துவத்தையும்…
  ஒரே பாட்டில்…
  அழகாப் பொழிஞ்சிக் குடுக்குது சங்கத் தமிழ் = பரிபாடல்!

  என்னென்னமோ ஆன்மீகம் பேசுறாக! ஆனா இப்படி மொத்தச் சாரச் சுருக்கமா சங்கப் பாடல் சொல்லீரூச்சி பாருங்க!
  அதுக்குத் தான் சொன்னாரு சமஸ்கிருத மகா பண்டிதரான வேதாந்த தேசிகர்….
  “செய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி
  தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!”

 6. anonymous says:

  //அதனால் இவ்வும் உவ்வும் அவ்வும்//

  இப்போ புரியுதா அவன், இவன், உவன்?

  *இவ்வும் = எனக்கு அருகில் இருப்பதும்
  *அவ்வும் = எனக்குத் தொலைவா இருப்பதும்
  *உவ்வும் = எனக்குத் தொலைவாவும் இல்லாம, ஆனா அருகிலும் இல்லாம…இருக்கிறான் இறைவன்!
  = “இவ்வும் உவ்வும் அவ்வும்”
  ——

  ஏமம் ஆர்த்த = ஏம வைகலே-ன்னு முன்னாடி ஒரு முருகன் பாட்டைப் பாத்தோம்-ல்ல? அதை ஞாபகம் வச்சிக்கோங்க!
  ஏமம் = “நிலைச்ச இன்பம்”

  மத்ததும் இன்பம் தான்! ஆனா கொஞ்ச நேர இன்பம்!
  திருநெல்வேலி அல்வா = இன்பம் தான்!
  ஆனா நுனி நாக்கில் இருந்து, தொண்டைக் குழி = 6 cm இன்பம் தான்!:)
  அதுக்கப்புறம் உள்ளே இறங்கி வெளியே வரும் போது = அதே அல்வா இன்பம் அல்ல:))
  —-

  இப்படி நிலைச்ச இன்பம் = என் முருகன்!
  (சரி கோச்சிக்காதீங்க, இந்தப் பாடலில்=திருமால்:))

  *நிலைச்ச இன்பம்=இறைவன்
  *இவ்வும் உவ்வும் அவ்வுமா இருக்கான்

  * ஏமம் ஆர்த்த நின் பிரிந்து=அவனே பலப்பல குணங்களாப் பிரிந்து, சின்னச் சின்ன இன்பங்களாப் பிரிந்து
  * மேவல் சான்றன எல்லாம்=எல்லா இன்பங்களும் ஒன்னு கூடியும் இருக்கான், பேரின்பமாக!!

 7. anonymous says:

  okay, tata:)

  இப்போ, எல்லாத்தையும் ஒன்னு கூட்டிப் படிச்சிப் பாருங்க..
  —–

  நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள = heat/light = சூரியன்
  நின் தண்மையும் சாயலும் திங்கள் உள = cold/shadow = சந்திரன்
  (pair of opposites)

  நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள = pour/give = மழை
  நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள = life/gestation = பூமி
  (pair of lives)

  நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள = smell/sight = பூ
  நின் தோற்றமும் அகலமும் நீரின் உள = shape/dimension = நீர்
  (pair of properties)

  நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள = form/sound = ஆகாயம்
  நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள = movement/inertia = காற்று
  (pair of action)

  அதனால்…
  இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும் = this, this-that, that
  ஏமம் ஆர்த்த நின் பிரிந்து=fission
  மேவல் சான்றன எல்லாம்=fusion

  எம்பெருமான் திருவடிகளே சரணம்!
  —–

  உருவாய்-அருவாய், உளதாய்-இலதாய்
  மருவாய்-மலராய், மணியாய்-ஒளியாய்
  கருவாய்-உயிராய், கதியாய்-விதியாய்
  குருவாய் வருவாய் அருளவாய் குகனே!

 8. இறைவன் அனைத்திலும் உறைகிறான் என்பதைத் தானே இந்தப் பாடல் சொல்கிறது? அனைத்தும் அவனிடமே தொடங்கி அவனிடமே முடிகிறது!

  பஞ்ச பூதங்களிலும் அவனின் குணங்கள் மிளிர்கின்றன. அவன் படைப்புகளில் அவை இருப்பதில் வியப்பென்ன? பெற்றோரின் குணங்களை பிள்ளைகளிடம் தானே பார்க்கிறோம். ஆனால் அதை பட்டியலிட்டுச் சொல்லும்போது பெற்றவருக்கு அது பெருமையையும் ஆனந்தத்தையும் தருகிறது. அதே போல
  கடுவன் இள எயினனார் இறைவனின் அம்சங்களை எங்கும் கண்டு அவன் பெருமையைப் பாடி அவனை மகிழ்விக்கிறார்!

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s