பசலைபற்றிச் சில வரிகள்

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன், பயந்த என்

பண்பியார்க்கு உரைக்கோ பிற

*

உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என்

மேனி பசப்பு ஊர்வது

*

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு

நூல்: திருக்குறள் (பசப்புறு பருவரல் அதிகாரம், பாடல்கள் #1181, #1185 & #1186)

பாடியவர்: திருவள்ளுவர்

என் மனத்துக்குப் பிடித்த காதலன், பணி நிமித்தம் என்னை விட்டு வெளியூர் செல்லவேண்டிய சூழ்நிலை. வேறு வழியில்லாமல் அவனைப் பிரிவதற்கு ஒப்புக்கொண்டுவிட்டேன்.

ஆனால் இப்போது, பிரிவுத் துயரத்தால் என் உடல்முழுவதும் பசலை படர்ந்துவிட்டதே, இதை யாரிடம் சொல்வேன்?

*

என்னைப் பிரிந்த காதலன் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை, அதற்குள் என் மேனியெங்கும் பசலை நிறம்!

*

விளக்கில் வெளிச்சம் குறையும்போது இருள் சூழ்வதுபோல, என்னைத் தழுவிய காதலனின் கை லேசாக விலகினால் போதும், என் மேனியைப் பசலை சூழ்ந்துவிடுகிறது.

துக்கடா

 • ’பசலை’பற்றி ஆங்காங்கே பல சங்கப் பாடல்களில் படித்திருக்கிறோம். காதல் பிரிவின் அடையாளமாகக் கருதப்படும் பசலை பற்றித் திருவள்ளுவர் ஒரு தனி அதிகாரமே எழுதியிருக்கிறார். அதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளக்கூடிய சுவாரஸ்யமான தகவல்கள் (கற்பனைகள்?) பல:
 • 1. காதலனைப் பிரிகிற துன்பத்தால் பெண்கள் மேனியில் பசலை நிறம் படரும் (அப்போ ஆண்களுக்கு? ‘தங்கமணி ஊருக்குப் போய்ட்டா’தானா? :>)
 • 2. பல மாதங்கள், வாரங்கள், நாள்கள் பிரிந்தால்தான் பசலை வரும் என்று இல்லை, அரை விநாடிப் பிரிவினால்கூடப் பசலை வரக்கூடும் (குறள் #1187 இதைப் படிக்கும்போது குறுந்தொகைப் பாடல் ஒன்று உங்கள் ஞாபகத்துக்கு வந்தால், நீங்கள் ரசிகேண்டா 😉
 • 3. பசலை நிறம் படர்ந்த பெண்களை ஊரார் பழித்துப் பேசியிருக்கிறார்கள் (’பசந்தாள் இவள்’), ஆனால் அதற்குக் காரணமான (பிரிந்து சென்ற) ஆண்களை யாரும் பழிப்பது கிடையாது (குறள் #1190)
 • 4. ’என் உடலில் பசலை உள்ளவரை, என்னைப் பிரிந்து சென்ற அவர் நலமாக இருக்கிறார் என்று அர்த்தம், ஆகவே இந்தப் பசலையை நான் தாங்கிக்கொள்கிறேன்’ என்கிறாள் ஒருத்தி (குறள் #1189)
 • இந்த அதிகாரத்தின் பத்துப் பாடல்களையும் ஐந்து உரைகளுடன் வாசிக்க :  : http://www.thirukkural.com/2009/04/blog-post_4402.html

253/365

Advertisements
This entry was posted in அகம், திருக்குறள், பிரிவு, வெண்பா. Bookmark the permalink.

13 Responses to பசலைபற்றிச் சில வரிகள்

 1. anonymous says:

  //அரை விநாடிப் பிரிவினால்கூடப் பசலை வரக்கூடும் (குறள் #1187 இதைப் படிக்கும்போது குறுந்தொகைப் பாடல் ஒன்று உங்கள் ஞாபகத்துக்கு வந்தால், நீங்கள் ரசிகேண்டா//

  🙂
  பாசி அற்றே பசலைக் காதலர்
  தொடுவுழித் தொடுவுழி நீங்கி
  விடுவுழி விடுவுழிப் பரத்த லானே
  —-
  கன்றும் உணாது கலத்தினும் படாது
  பசலை உணீஇயர் வேண்டும்
  திதலை அல்குல் என் மாமைக் கவினே

 2. anonymous says:

  //அப்போ ஆண்களுக்கு? ‘தங்கமணி ஊருக்குப் போய்ட்டா’தானா? :>)//

  இது அநியாயம்!
  யார் சொன்னா ஆண்களுக்குப் பசலை வராது-ன்னு?

  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்துச்சே!
  அதுக்கான ஆதாரம் கூட இருக்கு
  இப்போதைக்கு இவ்ளோ தான் சொல்ல முடியும்:))
  —-

  ஆண்களோ/பெண்களோ…..ஒருவர் ஏக்கத்திலேயே தவிச்சா?:(
  இப்படிப் பட்டவர்களுக்குப் பசலை வந்ததாக…இலக்கிய அகச் சான்றுகள் உள்ளன!

  • anonymous says:

   பொதுவா, ஆண்கள்=கம்பீரம், அழக் கூடாது, ஏங்கித் தவிக்கக் கூடாது என்று சமுதாய எண்ணம் இருப்பதால்….
   பசலை=பெண்களுக்குரிய ஒன்னு போல் பரவலாகத் தெரிகிறது….

   ஆனா, தமக்குப் ‘பசலை/திதலை’ வந்ததாக, மாறன் என்னும் முப்பது வயசுப் பையன் பாடுறான்
   (32 வயசில் போய்ச் சேர்ந்துட்டான்; இப்போ அவனை ஊரு அழைக்கும் பேரு=நம்மாழ்வார்)

   ஏதோ ‘நாயகி பாவத்தில்’ பாடிவிட்டான்-ன்னு நினைச்சிக்காதீங்க…

   பசலையை அங்கம் அங்கமாக வர்ணிப்பது…இங்கே அவையடக்கம் கருதிச் சொல்லவில்லை:)
   ஆனா திராவிட வேதம் என்னும் திருவாய்மொழியில் இருக்கு! திருவாய்மொழிக்கு உருகாதார் ஒருவாய்மொழிக்கும் உருகார்:)

   ஒரு கட்டத்தில், அவன் பட்ட பசலைத் துன்பம் கண்டு, அவன் பிரிவாற்றாமையால் எம்பெருமானுக்கே பசலை வந்து விட்டதாம்!

   ஆனா, உலகத்தின் முன் தன் அந்தரங்கத்தை மறைக்க எண்ணி….
   தன் மேனிப் பசலையை, துழாய்ப் பசலையால் (துளசிப் பச்சை) மறைத்துக் கொண்டான்!-ன்னு பாசுரம்:)

   முருகா – ஒனக்கு ஏதாச்சும் புரியுதாடா?:)))

 3. anonymous says:

  //’என் உடலில் பசலை உள்ளவரை, என்னைப் பிரிந்து சென்ற அவர் நலமாக இருக்கிறார் என்று அர்த்தம், ஆகவே இந்தப் பசலையை நான் தாங்கிக்கொள்கிறேன்’ என்கிறாள் ஒருத்தி//

  ச்சே….என்னவொரு மனப்-பான்மை!
  முருகா, இந்தப் பொண்ணு நல்லா இருக்கணும்!

 4. anonymous says:

  //பசலை படர்ந்த பெண்களை ஊரார் பழித்துப் பேசியிருக்கிறார்கள் (’பசந்தாள் இவள்’),
  ஆனால் அதற்குக் காரணமான (பிரிந்து சென்ற) ஆண்களை யாரும் பழிப்பது கிடையாது//

  இது என்னமோ சரி தான்!
  யாருக்கு ஏக்கமோ, யாருக்குப் படருதோ, அவங்க தானே ஏச்சும் பேச்சும் வாங்கணும்?

  *பசலை
  *அதன் விதம் விதமான நிறங்கள்
  *அவை உடலில் எங்கெல்லாம் தோன்றுகின்றன?
  *அதை மஞ்சள் பூசி மறைச்சா என்னாகும்?
  *வேற எதைப் பூசி மறைக்கலாம்?
  *அம்மா கண்ணில் பட்டா வம்பா? ஊரார் கண்ணில் பட்டா வம்பா?
  *ஆரம்பத்தில் அழகான தேமல் போலத் துவங்கினாலும், நாளடைவில் அதனால் வலி உண்டாகுமா?
  *அது எப்படிப் பரவுகிறது?
  *அந்தரங்க உறுப்புகளுக்கும் அது பரவுமா?

  – இவையெல்லாம் அந்தரங்கத் தோழி கிட்ட மட்டுமே பேசும் காதல் மகளிரின் இலக்கியக் கூற்று!
  இதை வச்சி, பசலையில் டாக்டர் பட்டமே வாங்கலாம்!:)

 5. anonymous says:

  //அதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளக்கூடிய சுவாரஸ்யமான தகவல்கள் (கற்பனைகள்?) பல://

  பசலை = கற்பனை-ன்னு இன்று சிலர் நினைக்கிறார்கள்!
  ஆனா, சங்கக் கவிஞர்கள் அத்தனை சீக்கிரம் ‘பொய்’ சொல்ல மாட்டார்கள்!

  தற்குறிப்பேற்றம், இல்பொருள் உவமை, அதீத உயர்வு நவிற்சி – இவை எல்லாம் சங்க காலத்துக்குப் பின்னர் தான் அதிகம் பரவின!
  சங்க கால இலக்கியப் படிமங்கள் = இயற்கையை ஒத்தே இருந்தன!
  —–

  365paa வில், சில நாட்களுக்கு முன்…..
  வேறொரு ஊரில் இருந்து ஆளைத் தேரில் கூட்டியாந்து பரிசில் குடுத்தது “உயர்வு நவிற்சி”-ன்னு எழுதப்பட்டிருந்ததைப் பார்த்துத் துணுக்குற்றேன்!:(

  சேர மன்னன் அவ்வாறு செய்ததைக் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன;
  இந்தக் காலத்திலும், வேற ஊரில் உள்ள அகதிகளை வான்வழியாக ஏற்றி வருவதில்லையா என்ன?

  • anonymous says:

   அவன் = ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்!
   பாடியது = காக்கைப் பாடினியார்!
   தன்மானம் மிக்க பெண் கவிஞர்! அத்துணை எளிதில் ‘பொய்’ சொல்லார்! ‘உயர்வு நவிற்சி’ செய்யார்!

   தொல்காப்பியருக்குப் பின், ‘காக்கைப்பாடினியம்’ என்ற தனி இலக்கண நூலே (யாப்புக்கு மட்டும்) செய்த பெண்;
   இவளுக்கு அப்பவே ஒரு லட்சம் காணம் (பொன்) பரிசு தந்து மகிழ்ந்தான்!

   இவளைப் போல், வறுமையில் வாடிய பல அறிஞர்கள், திறமைகள் வீண் போவதைக் கண்ட சேரன்…..
   தானே அவர்களைத் திரட்டி வரச் செய்தான்! தேர் அனுப்பி மரியாதையுடன் திரட்டி வரச் செய்தான்!
   —-

   அதனால் தான், தென்னவன் பாண்டியனுக்கும் இல்லாத ஒரு பெருமை சேரனுக்குத் தமிழ் இலக்கியத்தில் உண்டு! = பதிற்றுப் பத்து!

   சோழருக்கோ, பாண்டியருக்கோ ஒரு தனி நூல்-ன்னு தமிழில் கிடையாது!
   சேர மரபுக்கு மட்டுமே அது வாய்த்தது!
   பல கவிஞர்கள் ஒன்று கூடிச் செய்தது = எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப் பத்து!

   தனிப்பட்ட ஒரு பாண்டியனை/வேளிரைப் பாடிய ஆற்றுப்படை நூல்கள் உண்டு! ஆனால் ஒட்டுமொத்த மரபுக்குன்னே பாடிய நூல் = சேரர்களுக்கே வாய்த்தது!

   சங்கத் தமிழில்…
   “தனி நூல்” கண்ட மரபுகள் இரண்டே இரண்டு தான்!
   * முருக மரபு = திருமுருகாற்றுப்படை
   * சேர மரபு = பதிற்றுப் பத்து!

  • anonymous says:

   சொக்கரே,
   தவறாகச் சொல்லி இருப்பின் என்னை மன்னியுங்கள்;
   ஆனா காக்கைப்பாடினியார் அவனைப் பாடியது ‘உயர்வு நவிற்சி’-ன்னு கண்டு துணுக்குற்றது என்னவோ உண்மை தான்!

   அப்போ எனக்கு இணையம் கிடைக்கல! அதுனால அங்கிட்டுச் சொல்ல முடியல!
   காலையில் படிச்சி, பின்னூட்டம் offlineஇல் எழுதி வச்சிக்கிட்டு, இரவு இணையம் கிடைக்கும் போது தான் இடவே முடிகிறது! அதான்!
   Hope you dont mind this “ethir karuthu”/ “alternate karuthu” 🙂

 6. anonymous says:

  //அதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளக்கூடிய சுவாரஸ்யமான தகவல்கள் (கற்பனைகள்?) பல://

  பசலை ‘கற்பனை’ அல்ல-ன்னு சொல்ல வந்தேன்! வேற எங்கயோ இழுத்துக்கிட்டு போயிருச்சு:)
  —-

  * பசலை = உடம்பில் ‘நிறம்’ மாறுதல் மட்டுமே அல்ல!
  அது ஒரு ஏக்கம்/காதல் நோய்!

  உடல் மெலிதல், கண் அயர்வு, கை நடுக்கம்-ன்னு இதுக்குப் பல அறிகுறிகள் இலக்கியத்தில் உண்டு!
  அதோடு கூட உடம்பில் = நிறம் மாற்றம்! அது தேமல் போல ஆரம்பிச்சி, உடல் முழுக்கவும் பரவலாம்!

  எப்படிய்யா மனித உடம்புல பச்சை வண்ணம் வரும்-ன்னு நாம் நினைப்பதால் கற்பனை போலத் தோனும்!
  ஆனா பசலை = மாந்தளிர் நிறம்! (மாமை-ன்னே பேரு)

  மாந்தளிர் கருஞ்சிவப்பா ஒரு கொழுந்து போல இருக்கும் பாத்து இருக்கீங்களா?
  அப்படியான ஒரு dark hue – skin discolaration தான் பசலை!
  அது, கருங்கொழுந்து வண்ணத்தில் தொடங்கி, லேசான மஞ்சள், வெள்ளை-ன்னு பல நிறங்களில் பரவுமாம்!

  அல்குலில் வெள்ளைப் படுதலும் உண்டு! = திதலை அல்குல் என் மாமைக் கவினே
  பசலை, மாமை, திதலை -ன்னு…அந்தந்த நிலைக்கு ஏற்ப பல பெயர்கள்!
  —-

  During pregnancy, color change can be observed in women
  Pregnancy Glow ன்னு என் தங்கச்சி கூடச் சொல்லி இருக்கா!
  அவ பிரசவ காலத்தில், ‘என்னைச் சுத்தி ஒளி வட்டம் தெரியுது-ல்ல?’-ன்னு அவ கேட்க, ஒரு வட்டமும் தெரியல, நீ தான் குண்டா-வட்டமாத் தெரியுற-ன்னு ஓட்டி இருக்கேன்:))

  But blood red skin I have seen on her; pregnancy glow; skin color change
  She herself is a doctor, But may be some good doctors can confirm!:)

  உடம்பு Anaemic ஆனாலும், தோலில் மாற்றம் தெரியும்! அது போலத் தான் பசலையும்!
  ஆண்களுக்கும் வந்திருக்கு! That much I am sure:)

 7. anonymous says:

  //விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
  முயக்கற்றம் பார்க்கும் பசப்பு//

  குத்து விளக்கெரிய, கோட்டுக் கால் கட்டில் மேல்….
  அவன், அவளை இன்னும் இறுக்கத் தழுவிக்கலாமே-ன்னு நினைக்கிறான்!

  அப்படியே இறுக்க முடியாதல்லவா?
  கொஞ்சம் தளர்த்தினாத் தானே, இன்னும் இறுக்க முடியும்?
  அந்தக் ‘கொஞ்சம் தளர்த்திய’ அரை விநாடியில், ஐயோ, அவன் அணைப்பு போயிருச்சே-ன்னு அவளுக்குப் பசலை படர்ந்ததாம்:))

  டேய், என்ன-ன்னு நினைப்பேன்? சொல்லிட்டுச் செய்ய வேண்டியது தானே? கூடலின் போது பேசவே கூடாது-ன்னு ஆண்கள் எண்ணமா?:))

  தொடுவுழித் தொடுவுழி நீங்கி
  விடுவுழி விடுவுழிப் பரத்த லானே
  – இப்படிக் குறுந்தொகையில் நிறைய காட்சிகள், அப்பப்போ சில வரிகள் என் மனசுல ஓடும்:))
  —-

  • anonymous says:

   * Alarm Clock டொக்டொக்-ன்னு பக்கத்தில் சத்தம் கேட்கும்; ஒருக்களித்துப் படுக்கும் எனக்குத் தூக்கமே வராது
   = கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே

   *சில சமயம், latop wallpaper புகைப்படம்; bubbles screensaver ஆல் லேசா மறைக்கும்
   = பூவிடைப் படினும் ஆண்டு கழிந்தன்ன..
   —-

   *யாராச்சும் அப்போ அலுவலகத்தில், இன்னிக்கி அழகாச் சிரிக்கிறீங்க, So softன்னுல்லாம் சொன்னா
   = கன்றும் உணாது கலத்தினும் புகாது, எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது….

   *சில சமயம், சில நண்பர்கள் கோள் சொல்லுவார்கள்; ‘நீ நினைக்கற அளவுக்கு அவங்க அவ்ளோ ஒன்னும் நல்லவங்க இல்ல’….
   = கானம் கார் எனக் கூறினும்,
   யானோ தேரேன், அவர் பொய் வழங்கலரே
   —-

   *சில மின்னஞ்சல்களைப் படிக்கும் போது…அச்சோ புரிஞ்சிக்கவே மாட்டீயா?
   = தானது பொய்ப்பின் யான் எவன் செய்கோ?
   = கையில் ஊமன் கண்ணின் காக்கும், வெண்ணெய் உணங்கல் போல..

   *அடுத்து, எப்ப பார்ப்போமோ? எப்ப இந்தியா வருவோமோ-ன்னு இருக்கும்!
   = வைகல் வைகல் வைகவும் வாரார்! நோம் என் நெஞ்சே; நோம் என் நெஞ்சே!
   —-

   *சில சமயம், குறிப்பிட்ட உணவை விலக்குவேன்
   = பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே

   ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
   அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்?
   கொண்ட கணவன் குடி வறன் உற்றென
   கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்!

   இப்படி…சங்கக் கவிதைகள் ரொம்பவே மனசுக்குள்ள நடை போடும்! முருகா!

   *பிறிதும் ஆகுப காமம் காழ்க்கொளினே.

 8. அனுபவித்ததை அனுபவித்து எழுதும் போது அந்த எழுத்தின் தாக்கம் அதிகமே! அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே 🙂 எண்ணிய எண்ணங்கள் ஈடேற வாழ்த்துகள்!
  amas32

 9. ஆனந்தன் says:

  மீண்டும் இலக்கியத்தால் குளிப்பாட்டியதற்கு நன்றி!
  நானும் எனக்கு முழுமையாகத் தெரிநத ஒரேயொரு குறுந்தொகைப் பாடலைச் சிலசமயம் ‘பம்மாத்தாகப்’ பயன்படுத்துவதுண்டு – In order to say “Please give me an unbiased opinion” – காமம் செப்பாது கண்டது மொழிமோ!
  (with thanks to AP Nagarajan!)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s