தங்காத தேர்

கானங்கோழிக் கவர் குரல் சேவல்

ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப்

புதல் நீர் வாரும் பூநாறு புறவில்

சீறூரோளே மடந்தை; வேறு ஊர்

வேந்து விடு தொழிலொடு செலினும்

சேந்துவரல் அறியாது செம்மல் தேரே!

நூல்: குறுந்தொகை (#242)

பாடியவர்: குழற்றத்தன்

சூழல்: முல்லைத் திணை : காதலனுக்கும் காதலிக்கும் திருமணம் முடிந்தது. அவர்கள் இன்னோர் ஊருக்குச் சென்று இல்லறம் நடத்துகிறார்கள். அப்போது அந்தப் பெண்ணின் செவிலித் தாய் அவர்களைப் பார்க்கச் செல்கிறார். அங்கிருந்து திரும்பி வந்தவர் அந்தப் பெண்ணின் தாயைச் சந்திக்கிறார், அவர்களுடைய மகள் குடும்பம் நடத்தும் அழகைச் சொல்லி நெகிழ்கிறார்

நம் மகள் வாழ்வது முல்லை நிலத்தில் உள்ள ஒரு சிறிய ஊர். அங்கே குளிர் அதிகம். அதனால், கவர்த்த குரலைக் கொண்ட கானங்கோழிச் சேவலின் ஒளிர்கின்ற கழுத்தில்கூட நீர்த் துளிகள் தென்படுகின்றன, புதர்களில் தண்ணீர் ஒழுகுகிறது, எங்கு பார்த்தாலும் பூ வாசம்.

அவளுடைய கணவன், நம் மருமகன் அரசனிடம் பணிபுரிகிறான். ஆகவே, வேலை நிமித்தம் அடிக்கடி பயணம் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் அவனுடைய தேருக்கு வெளியூரில் தங்குவதற்குமட்டும் தெரியாது, அவன் தன் மனைவியைப் பார்க்கவேண்டுமே என்கிற ஆசையில் உடனே திரும்பி வந்துவிடும்.

துக்கடா

 • ’கவர்த்த குரலைக் கொண்ட கோழி’ என்று எழுதிவிட்டேனேதவிர, அதற்குச் சரியான அர்த்தம் தெரியவில்லை. பல உரை நூல்களில் தேடினேன், கிடைக்கவில்லை, உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்
 • காதலன் (கணவன்) தேர் வெளியூர் போகுமாம், ஆனால் அங்கே தங்காதாம், உடனே திரும்பிவிடுமாம், ’ஒரு நாள்கூட மனைவியைப் பிரியாமல் அன்பு காட்டுகிறவன் அவன்’ என்பதை இப்படிச் சொல்கிறார் செவிலித் தாய்!
 • இந்தக் காலத்தில் இதுபோல் தங்காத ’கார்’கள், ‘பைக்’குகள் உண்டா? :>
 • UPDATE: ’கவர் குரல்’ பற்றி
 • இதற்கு இருவகை விளக்கங்கள் வந்துள்ளன 1. கோழியைக் கவர்கின்ற சேவலின் குரல் 2. கவர்த்த குரல் கொண்ட சேவல் (விளக்கம் கீழே)
 • கவர் குரல் சேவல் = இரண்டாய் ஒலி எழுப்பும் சேவல்
 • கவர்த்தல் = கவடுபடல், bifurcate; here
 • கொக்கரக்-கோ = கொக்கர-ன்னு முதலில் கனைத்து, அப்பறம் கோ-ன்னு இழுத்துக் கூவும்!
 • இப்படி இரண்டாய் bifurcate ஆவதால் = கவர்(த்த)-குரல்
 • மற்ற விலங்கு/பறவையெல்லாம்….மாஆஆ, மேஏஏ, காகாகா-ன்னு ஒற்றையாய்த் தான் ஒலிக்குமே அன்றி, கவடு படாது…
 • சேவல் மட்டும் தான் ரெண்டாய்க் கவடுபடும்
 • திருமுருகனின் சேவல் கொடியும், ரெண்டாத் தான் இருக்கும், உத்துப் பாத்தீங்கன்னா…double cut flag
 • கவர்-கவர்த்தல்=கவடுபடல்
 • கவரிமா = ரெண்டாய்க் கிளையும் கொம்புள்ள மா!

248/365

This entry was posted in அகம், காதல், குறுந்தொகை, பெண்மொழி, முல்லை. Bookmark the permalink.

6 Responses to தங்காத தேர்

 1. “கானங்கோழிக் கவர் குரல் சேவல்” என்பதை கோழியின் எண்ணத்தைக் கவரும் குரல்கொண்ட சேவல் என்று புரிந்து கொண்டேன் முதல்வாசிப்பில். அப்படி இல்லையா?

 2. GiRa ஜிரா says:

  வாரியார் சுவாமிகள் ஒரு கதை சொல்வார்கள். ஒரு கிழவி. அவளுக்கு ஒரு மகனும் மகளும். மகளையும் திருமணம் செய்து கொடுத்து வைத்தாள். மகனுக்கும் ஒரு பெண்ணைப் பார்த்து மணம் முடித்தாள்.

  அந்தக் கிழவிக்குத் தோழி இன்னொரு கிழவி. தன் மகள் வாழும் வாழ்க்கையைப் பெருமையாக தோழிக்கிழவியிடம் சொல்கிறாள். “மாப்ள ரொம்ப நல்லவரு. எம்மக பேச்சைத் தட்டவே மாட்டாரு. ரொம்ப இதமா பதமா வெச்சுத் தாங்குறாரு.”

  அடுத்த பேச்சு மருமகளைப் பற்றி வருகிறது. “வந்தவ மருந்த எதுல வெச்சாளோ! அவ பின்னாடியே சுத்துறான். அவ பேச்சையே கேக்குறான். அப்படியே மாயைல முழுகுறான்.”

  மகனும் மருமகனும் செய்வது ஒன்றைத்தான். ஆனால் மருமகன் செய்வது இனிக்கிறது. மகன் செய்வது கசக்கிறது.

  பொதுவாகவே பெண்களுக்கு மகள் வாழ்வது குறித்துப் பெருமிதமாகப் பேசுவது பிடித்தமானது.

  அப்படித்தான் இந்தப் பாடலில் செவிலித்தாய் தன்னுடைய மகள் வாழும் வாழ்க்கையைப் பெருமையாகச் சொல்லி மகிழ்கிறாள்.

  ”மாப்பிள்ள அரசர் கிட்ட வேல பாக்குறாரு. வேலைன்னா தெனமும் அங்கிட்டும் இங்கிட்டும் போக வர வேண்டியிருக்கு. ஆனா ஒன்னு. எங்க போனாலும் ராத்தங்க மாட்டாரு மாப்பிள்ள. தேர ஓட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்துருவாரு. அவ்வளவு நல்லா முடிஞ்சு வெச்சிருக்கா மக.”

  இதைக் கேட்டால் எந்தத் தாய்க்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.

  கானக்கோழி கவர் குரல் சேவல் – இதற்கு நாகா சரியான விளக்கம் பிடிபடவில்லை என்று எழுதியிருக்கிறார். கானம் என்றால் காடு. காட்டுக் கோழியைக் கவரும் குரலை உடைய சேவல் என்பது இதன் பொருள். முல்லைத்திணை அல்லவா. ஆகையால்தான் காடு, கானக்கோழி மற்றும் சேவல் ஆகியன வருகின்றன.

 3. amas32 says:

  ஜிரா, நீங்க சொல்லியிருக்கிற வாரியார் கதை தான் இன்றும் எல்லார் இல்லங்களிலும் நடக்கும் கதை 🙂

  மகள் வாழச் சென்றிருக்கும் ஊரைப் பற்றியும் தாய் பெருமையாகப் பேசுவாள். அதையே தான் இந்த செவிலித் தாயும் செய்கிறாள். அது தண்ணியில்லாக் காடாயினும் அங்கு உள்ள ஏதோவொரு நல்லதை குறிப்பிட்டுப் பெருமை கொள்வாள். இங்கே மகள் வாழும் ஊர் குளிர்ந்த ஊர், எங்கு பார்த்தாலும் பூ வாசம் வேறு வீசுகிறது! பெருமைப் பட்டு மகிழலாம் 🙂

  amas32

 4. psankar says:

  kozhiyaik kavarum seval enru varumo ?

 5. anonymous says:

  இன்று, வாகீச கலாந்திதி, “கிவாஜ” அவர்களால், இந்தப் பதிவைத் தேடி மீண்டும் வந்தேன்!
  “தாமரைப் பொய்கை – சங்க நூற் காட்சிகள்” என்ற ஒலிப்பேழையில், என்ன லயிச்சிப் போயிச் சொல்லுறாரு கிவாஜ!

  கானங் கோழிக் கவர்குரல் சேவல்!

  கானங் கோழி (யைக்) கவர் குரல் -ன்னு எடுத்துக் கொள்வதும் ரசனை தான்!
  ஆனா இரண்டாம் வேற்றுமைத் தொகையில் க் மிகாது; இங்கு மிகுது!

  கோழியைக் கவர் என்றால் இரண்டாம் வேற்றுமை விரி; மிகும்
  கோழிகவர் என்றால் இரண்டாம் வேற்றுமைத் தொகை; மிகாது;
  ஆனாலும் கவிஞர் “க்” போடுறாரு! – கோழிக் கவர்

  அதனால், இது இரு பெயரொட்டுப் பண்புத் தொகையா எடுத்துப் படிக்கணும்; கானங்கோழிக் + கவர்குரல் சேவல்;
  காட்டுப் பறவையும், கவர்த்த குரலை உடையதுமான சேவல்!

  “இலக்கிய இலக்கணம்” -ன்னு கிவாஜ பேசப் பேச… பல எடுத்துக்காட்டுகள் பொழியறாரு; அதில் இது ஒன்னு;

  சங்க இலக்கியத்தில், இலக்கணமும் ஒருங்கிணைஞ்சு வாசிக்கும் போது, நமக்கே பல புதிய திறப்புகள் கிடைக்கும் -ன்னு,
  இத்தனை நுணுக்கமா, பொழிஞ்சிப் பொழிஞ்சி அவரு பேசுறதைக் கேட்கும் போது… கண்ணுல தண்ணியே வந்துருச்சி!

  ஒரு “க்” கூடவா விடாம வாசிச்சி இருப்பாக?
  “வாகீச” கலாநிதி… வெறும் பட்டமல்ல -ன்னு புரிஞ்சிக்கிட்டேன்;
  முருகா… தமிழுக்கு வாய்த்த பல அப்பழுக்கில்லாப் பெருந்தகைகள் இன்று எங்கே?

 6. anonymous says:

  கிவாஜ, சிலேடையில் கெட்டிக்காரர் என்பது எல்லாரும் அறிந்தது தான்!
  நீர் சென்னையில் எங்கே? என்ற அவரின் கேள்விக்கு,
  அண்ணா நகர் என்று அன்பர் பதில் சொல்ல, உடனே மேடையில் நாற்காலியில் நகர்ந்து உட்கார்ந்தாராம் கிவாஜ!
  “அண்ணா…நகர்” -ன்னு நீர் தானே-ய்யா நகரச் சொன்னீர்?:)

  சங்கப் பாடல்களில் சிலேடை என்பது குறித்தும் பேசுறாரு!
  பொதுவா, சங்கத் தமிழில், கருத்துக்கே முதலிடம்; “வார்த்தை விளையாட்டு” gimmicks ரொம்ப இருக்காது!
  ஆனா, அதிலும் தேடிப் பொழியுறாரு கிவாஜ! இன்றே கேட்டேன்!

  அப்படிப்பட்ட கிவாஜ-வே, இன்னொருவர் சிலேடையில் மயங்கினார்-ன்னா?
  ——-

  மாயவன் கண்ணன் மணிவண்ணன் கேசவன் மண்ணும் விண்ணும்
  தாயவன் கண்ணன் கமல மொப்பான் சரத்தால் இலங்கைத்
  தீயவன் கண்ணன் சிர மறுத்தான் திரு வேங்கடத்துத்
  தூயவன் கண்ணன் புடையார்க்கு வைகுந்தம் தூர மன்றே

  என்னாது, தீயவன் கண்ணனா? அவன் சிரம் அறுத்தானா திரு வேங்கடவன்?
  சிலேடையில், சும்மா பிச்சி உதறுகிறார் கிவாஜ!

  மாயவன் கண்ணன் மணிவண்ணன் கேசவன் மண்ணும் விண்ணும்
  தாயவன் கண்-நன் கமலம் ஒப்பான் சரத்தால் இலங்கைத்
  தீய வன்கண்ணன் சிரம் அறுத்தான்; திரு வேங்கடத்துத்
  தூயவன் கண்-அன்பு உடையார்க்கு வைகுந்தம் தூரம் அன்றே!!

  யப்பா… வாகீச கலாநிதி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s