சேலைகளைத் திருடியவன்

நீரிலே நின்று அயர்க்கின்றோம்,

….நீதி அல்லாதன செய்தாய்,

ஊர் அகம் சாலவும் சேய்த்துஆல்.

….ஊழி எல்லாம் உணர்வானே!

ஆர்வம் உனக்கே உடையோம்

….அம்மனைமார் காணில் ஒட்டார்

போரவிடாய் எங்கள் பட்டைப்

….பூங்குருத்து ஏறி இராதே

நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார்கள் அருளிச் செயல் (நாச்சியார் திருமொழி)

பாடியவர்: ஆண்டாள்

சூழல்: பெண்கள் சிலர் குளத்தில் குளிக்க வந்தார்கள், அவர்கள் அவிழ்த்து வைத்த ஆடைகளைக் கவர்ந்துகொண்டான் கண்ணன், பக்கத்தில் ஒரு குருந்த மரத்தின்மீது ஏறி நின்றான். குளித்துவிட்டு வந்த பெண்கள் ஆடைகளைக் காணாமல் அதிர்ந்தார்கள். இது கண்ணன் வேலையாகதான் இருக்கும் என்று எண்ணி அவனை நோக்கிப் பாடுகிறார்கள்

கண்ணா,

ஊழிக் காலத்தில் உலகத்தைக் காப்பாற்றியவனே, இப்போது தண்ணீரில் நின்று அவதிப்படுகிற எங்கள்மேல் இரக்கம் காட்டமாட்டாயா? ஏன் இந்தப் பொல்லாத்தனம் செய்கிறாய்?

ஆடை இல்லாமல் நாங்கள் எப்படித் தண்ணீரில் இருந்து வெளியே வருவோம்? ஊரும் வீடும் வெகுதொலைவில் இருக்கிறது, அவ்வளவு தூரம் எப்படிச் சென்று சேர்வோம்?

கண்ணா, நீ இப்படி எத்தனைதான் குறும்புகள் செய்தாலும், உன்மேல் எங்களுக்கு உள்ள ஆசைமட்டும் குறையாது.

ஆனால், நாங்கள் உன்னோடு பழகுவது எங்களுடைய தாய்மார்களுக்குத் தெரிந்துவிட்டால் அவ்வளவுதான். வீட்டுக்குள் சேர்க்காமல் வெளியிலேயே நிறுத்திவிடுவார்கள்.

ஆகவே, கண்ணா, எங்கள்மீது கருணை காட்டு, எங்களுடைய பட்டுச் சேலைகளைத் திருப்பிக் கொடுத்துவிடு, பூத்திருக்கும் குருந்த மரத்தின்மீது ஏறிக்கொண்டு விளையாட்டுக் காட்டாதே!

துக்கடா

 • நேற்று ‘ஹோலி’ப் பண்டிகைக்கு வந்திருக்கவேண்டிய பாட்டு, கொஞ்சம் தாமதமாக இன்றைக்கு :>
 • ஆண்டாளின் நாச்சியார் திருமொழி மூன்றாம் பகுதி முழுவதும் கண்ணனிடம் ஆடையைத் திரும்பக் கேட்கும் பெண்களுடைய கெஞ்சல்தான். அந்தப் பாடல்கள் அனைத்தையும் உரையுடன் ரசித்து ருசித்துப் படிக்க : http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=112

247/365

This entry was posted in அருளிச் செயல், ஆண்டாள், ஆழ்வார்கள், கண்ணன், காதல், குறும்பு, திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, பெண்மொழி, விஷ்ணு. Bookmark the permalink.

One Response to சேலைகளைத் திருடியவன்

 1. amas32 says:

  கண்ணபிரான் செய்யும் குறும்புகள் எல்லாம் நியாயத்துக்கு உட்பட்டதாகவே இருக்காது. ஆனாலும் அதனை நியாயப் படுத்துவதில் வல்லவன் அவன். அவர்களை அவர்கள் ஊருக்குச் சென்று நியாயம் கேட்கச் சொல்கிறான். இவன் ஆடையை பறித்து வைத்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் எப்படி போவார்கள்? போகாத ஊருக்கு வழி சொல்கிறான். இவன் கொடுக்கும் தொல்லைகளையும் பொறுத்துக்கொண்டு ,ஆயர் குலப் பெண்கள், எங்களுடைய துணிகளை எங்களிடம் திருப்பிக் கொடுத்துவிடு என்று கோபப்படாமல் இறைஞ்சி கேட்டுக் கொள்கிறார்கள்.

  கண்ணன் பூலோகத்தில் வந்து பிறக்கும் போது வைகுண்டத்தையே காலி பண்ணிக் கொண்டு வந்து விட்டார் என்று கூறுவார்கள். அங்கிருந்த நித்யசூரிகள் தான் ஆயர்பாடி பெண்களாக வந்திருந்தனர். அவர்கள் கண்ணனிடம் மாறாத அன்பு பூண்டிருப்பதில் ஆச்சர்யம் என்ன?

  நம்ம வீட்டுக் குழந்தை நம் சீப்பையோ கண்ணாடியையோ எடுத்து வைத்துக் கொண்டு தர மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும்போது நாம் அதை தாஜா செய்து தான் பொருளை பெற்றுக் கொள்வோம். அதையே தான் இங்கே ஆண்டாளும் செய்கிறாள்.

  கண்ணனோடு எந்த உறவாடலும் இன்பமே, ஆனந்தமே! 🙂

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s