தலம்தோறும் சிவன்

ஆரூர் தில்லை அம்பலம் வல்லம் நல்லம்

….வடகச்சியும் அச்சிறுபாக்க நல்ல

கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி

….கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடு ஆர்

நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும்

….குருகாவையூர் நாரையூர் நீடுகானப்

பேரூர் நன்னீள் வயல் நெய்த் தானமும்

….பிதற்றாய் பிறைசூடி தன் பேரிடமே!

நூல்: தேவாரம்

பாடியவர்: திருஞானசம்பந்தர்

 • திருவாரூர்
 • தில்லை அம்பலம்
 • வல்லம்
 • நல்லம்
 • திருக்கச்சி
 • அச்சிறுபாக்கம்
 • நன்மை நிறைந்த குடவாயில்
 • குடந்தை (கும்பகோணம்)
 • வெண்ணியூர்
 • திருக்கழிப்பாலை
 • தென்கோடிக்கரை
 • பெருமையும் நீர் வளமும் வயல் வளமும் நிறைந்த நின்றியூர்
 • குன்றியூர்
 • குருகாவூர்
 • நாரையூர்
 • கானப் பேரூர்
 • வயல்கள் சிறந்து விளங்கும் திருநெய்த்தானம்

இப்படிப் பல தலங்களில் எழுந்தருளியிருக்கும் பிறை சூடிய சிவபெருமானை எண்ணிப் பாடுவோம்!

துக்கடா

 • ரெண்டு நாள் முன்பாக இளங்கோவடிகள் சிவில் எஞ்சினியர் அவதாரம் எடுத்தார், இன்றைக்குத் திருஞானசம்பந்தர் டூரிஸ்ட் கைட் ஆகிறார், தென்னாடுடைய சிவனின் திருத்தலங்களில் சிலவற்றைப் பட்டியல் போடுகிறார், எட்டு வரியில் பதினேழு கோயில்கள் :>
 • இதேபோல் இன்னும் பல ’கோயில் பட்டியல்’ பாடல்கள் இருக்கின்றன, ’திருக்ஷேத்திரக் கோவை’ என்று தேடினால் கிடைக்கும்!

246/365

Advertisements
This entry was posted in சிவன், திருஞானசம்பந்தர், தேவாரம், பக்தி, பட்டியல். Bookmark the permalink.

7 Responses to தலம்தோறும் சிவன்

 1. amas32 says:

  கோவிலில்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு. இந்த ஊர்களின் பெயர் பட்டியலைப் பார்க்கும் போது தென்னாட்டில் கோவிலில்லா ஊரே கிடையாது என்று தெரிகிறது 🙂

  குடந்தை அருகே உள்ள குடவாயில் என் சொந்த ஊர். அந்த ஊர் பெயரை அச்சில் பார்க்கும் போதே மனதில் மகிழ்ச்சிப் பெருகுகிறது 🙂 அதுவும் //நன்மை நிறைந்த குடவாயில்// என்று நினைக்கும் போது மேலும் மகிழ்ச்சி 🙂

  தென்னாடுடைய சிவனே போற்றி!
  என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

  amas32

 2. GiRa ஜிரா says:

  திருநாவுக்கரசர் அருளிய இந்தப் பாடலும் ஒரு ஆற்றுப்படைப் பாடல் என்று சொல்லலாம். ”நான் இந்தக் கோயில்களுக்கெல்லாம் போனேன். ஆண்டவனை வழிபட்டேன். பெருமகிழ்வெய்தேன்”னு சொல்லும் போதே மற்றவர்களுக்கும் அங்கு சென்றால் பேரின்பம் கிடைக்கும் என்று வழி காட்டுகிறார்.

  ஆற்றுப்படை என்று தனியாக நூல் எழுதாவிட்டாலும் தேவாரப் பாடல்களில் சில பாடல்கள் ஆற்றுப்படுத்தும் வகையில் உள்ளன.

  இந்தப் பாடலுக்குப் பொருள் கூறுவது எளிது. நாகாவும் ஒவ்வொரு கோயிலையும் பட்டியலிட்டுக் காட்டி விட்டார். ஆகையால் நான் சிறுசிறு தகவல்களைக் கொடுக்கிறேன்.

  பதினேழு திருக்கோயில்கள் இருக்கும் ஊர்களைப் பட்டியல் இட்டு விட்டு அப்பரடிகள் சொல்வதென்ன? பிதற்றாய் பிறைசூடி தன் பேரிடமே!

  பிதற்ற வேண்டுமாம். பிதற்றும் போது மனமானது பிதற்றப்படும் பொருளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும். அதனால்தான் ஆண்டவன் பெயரைச் சொல்ல வேண்டும் என்று சொல்லாமல் உள்ளமும் உதடும் சேர்ந்து பிதற்ற வேண்டும் என்கிறார்.

  உடல்நலம் குறைவான பொழுது பொதுவாகவே ஆண்டவன் பெயரைச் சொல்லி மக்கள் புலம்புவதுண்டு. அப்படித் துன்பம் வருகையில் மட்டுமல்லாது எப்போதும் ஆண்டவன் பெயரைச் சொல்லிப் பிதற்ற வேண்டும் என்கிறார்.

  சரி. எந்தப் பெயரைச் சொல்லிப் பிதற்ற வேண்டுமாம்?

  பிறைசூடி என்ற பெயரைச் சொல்லிப் பிதற்ற வேண்டுமாம்.

  ஆண்டவன் பிறையை மட்டுமா சடையில் சூடியிருக்கிறான்? ஆற்றைப் பணியை இதழியை தும்பையை அம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் என்கிறார் அருணகிரி.
  ஆற்றை – கங்கையாற்றை
  பணியை – அரவத்தினை (பாம்பை)
  இதழியை – செந்நிறக் கொன்றையை
  தும்பையை – வெண்ணிறத் தும்பையை
  அம்புலியின் கீற்றை – பிறைநிலவினை

  இத்தனை பொருட்களைச் சூடியிருக்கும் பொழுது, ஏன் பிறைசூடியை என்று அப்பரடிகள் குறிப்பிடுகிறார்?

  இதில் பெரிய பொருள் அடங்கியுள்ளது.

  திருஞானசம்பந்தர் ஈசனைப் பாடிய முதல் பாடல் என்ன?
  தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதிசூடி என்று தொடங்கும் பதிகம். இதில் மதிசூடி என்று வருகின்றது.

  சுந்தரர் ஆலவாயண்ணலைப் பாடிய முதல் பாடல் என்ன?
  பித்தா பிறைசூடி பெருமானே என்று தொடங்கும் பதிகம். இதில் பிறைசூடி என்று வருகிறது.

  அப்பரடிகள் அம்மையப்பனைப் பாடிய முதல் பாடல் என்ன?
  கூற்றாயினவாறு விலக்கிலீர் என்று தொடங்கும் தேவாரப் பதிகம். இந்தப் பதிகத்தில் பிறைசூடி என்ற சொல் நேரடியாகவோ மறைமுகமாகவோ இல்லை.

  மற்ற இருவரும் பிறை/மதி சூடி என்று முதல் பாடலில் பாடியிருக்கையில், அப்படிப் பாடாத அப்பர் ஏன் பிறைசூடி என்று பிதற்ற வேண்டும் என்கிறார்?

  ஆண்டவனுடைய முடியில் பிறை எப்படி ஏறியது என்று சிந்தித்தால் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்.

  நிலாவாகப்பட்டவன் ரோகிணியைத் தவிர தன்னுடைய மற்ற மனைவியர் அனைவரிடமும் அன்பு வைக்காததால் மாமனாராகிய தட்சனின் சாபத்திற்கு ஆளானான். நாளொரு கலையாய்த் தேய்ந்து அழியக் கடவது என்று சாபம். கொடுத்த சாபம் தன்னுடைய மகள்களைப் பாதிக்கும் என்று கூட அறியாத சாபம். அந்தச் சாபம் நீங்க இறைவன் பிறையைச் சூடிக் கொண்டார்.

  இந்த உலகத்தில் பிறந்த நாம் செய்யும் தவறுகள் எத்தனையெத்தனையோ! எண்ணிப் பார்த்தால் கணக்கில் அடங்காது. அப்படியிருந்தாலும் ஆண்டவனை அழுது தொழுது மனத்தில் இறைவன் மீதான அன்பை உழுது நின்றால் இறையருளால் நாம் தூயவர் ஆவோம். அதைக் குறிப்பிடத்தான் பிறைசூடி என்ற பெயரைச் சொல்லிப் பிதற்ற வேண்டும் என்கின்றார்.

 3. GiRa ஜிரா says:

  இந்தப் பாடல்களில் வரும் கோயில்களில் சில கோயில்கள் நாம் நன்கு அறிந்த கோயில்கள். அவ்வளவாக அறியாத கோயில்களைப் பார்ப்போம்.

  வல்லம் – இது திருவல்லம் என்ற பழைய பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த ஊரை அருணகிரி திருவலம் என்று பாடுகிறார். காட்பாடிக்கு அருகில் உள்ள ஊர்.

  நல்லம் – இந்த ஊர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளதாம். கோனேரிராஜபுரத்திற்கு மிக அருகில். இந்தத் திருக்கோயிலில் இறைவிக்குப் பெயர் அங்கவளநாயகி. அது பின்னாளில் தேகசௌந்தரி என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.

  அச்சிறுப்பாக்கம் – இன்றைக்கு அச்சிரப்பாக்கம் என்று வழங்கப்படுகிறது. மதுராந்தகத்திற்கு அருகில் உள்ளது. இங்கு இறைவனின் பெயர் ஆட்சிகொண்ட நாதர். இந்தப் பெயர் ஆட்சீஸ்வரர் என்றும் ஸ்திரவாசபுரீஸ்வரர் என்றும் மாற்றப்பட்டு வழங்கப்படுகிறது. இளங்கிளியம்மை என்ற அழகான பெயர் பாலசுகாம்பிகை என்று இன்று வழங்கப்படுகிறது.

  திருவெண்ணியூர் – இங்கு இறைவனின் திருவுருவம் கரும்புக்கட்டுகளை ஒன்றாகச் சேர்த்தது போல உள்ளது. வெண்ணிக்கரும்பர் என்றே இறைவனுக்குப் பெயர். அம்பிகையின் பெயர் அழகியநாயகி. தஞ்சையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ளது.

 4. GiRa ஜிரா says:

  திருக்கழிப்பாலை – இந்தக் கோயில் சிதம்பரத்திற்குத் தெற்கே கொள்ளிடக்கரையில் இருந்திருக்கிறது. வெள்ளத்தினால் முற்றும் அழிந்து போனது. திரு.பழநியப்ப முதலியார் அவர்களின் முயற்சியால் புதிய கோயில் ஒன்று எழுப்பப்பட்டுள்ளதாம்.

  கோடிக்கரை – பொன்னியின் செல்வன் புதினத்தைப் படித்தவர்களுக்கு இந்தப் பெயர் மிகவும் பழக்கமான பெயர். கோடியக்கரை என்று வழங்கப்படுகிறது. இறைவனுடைய பெயர் குழகர். திருமறைக்காட்டிற்கு அருகில் உள்ளது. இங்குதான் வந்தியத்தேவன் என்ற பாத்திரம் பூங்குழலி என்ற பாத்திரத்தைச் சந்திக்கிறது. கடலோரத்தில் இருப்பதாலோ என்னவோ, சுந்தரர் ”கடிதாய்க் கடற்காற்று” என்று தொடங்கும் பதிகத்தை இந்தத் தலத்திற்காகப் பாடியிருக்கிறார்.

  நாரையூர் – திருநாரையூர் என்று வழங்கப்படுகிறது. திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி பிறந்த ஊர். இந்த ஊரில் பொள்ளாப் பிள்ளையார் கோயிலும் உள்ளது. பொள்ளாத என்றால் உளி வைத்துச் செதுக்காத என்று பொருள். அப்படிப் பொள்ளாமல் தானே உண்டான பிள்ளையார் என்பதால் பொள்ளாப் பிள்ளையார் என்று பெயர். இன்றைக்கு இது மருவி பொல்லாப் பிள்ளையார் என்று கொச்சையாக வழங்கப்படுகிறது.

 5. GiRa ஜிரா says:

  கானப்பேரூர் – இந்தப் பெயரைச் சொன்னால் பலருக்குத் தெரியாது. ஆனால் காளையார் கோயில் என்று சொன்னால் தெரிந்துவிடும். சிவகெங்கை மாவட்டத்தில் மருதுபாண்டியர் எழுப்பிய கோபுரத்தோடு சிறந்து விளங்கும் திருக்கோயில். சில வரலாற்றுச் செய்திகளையும் சொல்ல வேண்டும்.

  பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயர் வரைபடத்திலேயே இருக்கக் கூடாது என்று வெள்ளையன் நினைத்தான். காரணம்? தொடர் தோல்வி. அவமானம். உள்துரோகிகளின் உதவியோடு கட்டபொம்மனைப் பிடித்துத் தூக்கிலும் போட்டாயிற்று. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தரை மட்டமாக அழித்தும் ஆகி விட்டது. காதும் கேளாத வாயும் பேசாத ஊமைத்துரையைச் சிறையில் அடைத்தாகி விட்டது. ஆனால் ஊமைத்துரை சிறையிலிருந்து தப்பி மிக விரைவில் பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு மண்கோட்டையை எழுப்பிவிட்டார். அந்தச் சமயத்தில் மருதுபாண்டியர்களும் ஊமைத்துரைக்கு உதவியிருக்கிறார்கள்.

  மீண்டும் போர். ஆனாலும் வெள்ளையனுக்கு வெற்றி வசமாகவில்லை. மண்கோட்டைதானே என்று அலட்சியமாக இருந்தவர்களுக்கு பீரங்கிக் குண்டுகள் கோட்டைச் சுவரை உடைக்காமல் செருகிக் கொள்வது வியப்பாக இருந்தது. அதற்குக் காரணம் நம் நாட்டுக் கட்டடக்கலை. மண்சுவர் வைத்து எழுப்பும் பொழுது இடையில் பருத்திமாரை வைத்து எழுப்புவார்கள். அந்தப் பருத்திமாரில்தான் குண்டுகள் சிக்கிக் கொண்டன.

  மிகமிகக் கடினமாகப் போரிட்ட பின்னரே அந்த மண்கோட்டையில் ஓட்டை போட முடிந்தது. பிறகு ஊமைத்துரையையும் குடும்பப் பெண்களையும் குழந்தைகளையும் அந்த இடத்திலேயே கொன்றனர்.

  மீண்டும் வேறு யாராவது பாஞ்சாலங்குறிச்சியை உயிர்ப்பிக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு ஆங்கிலேயர் வகுத்த திட்டம்தான் ஆமணக்குக் காடு.

  பாஞ்சாலங்குறிச்சி ஊர் இருந்த இடம் முழுதும் உழுது ஆமணக்கு விதைப்பது. ஒவ்வொரு ஆண்டும் ஆமணக்கு விளைச்சலுக்குக் கணக்குக் காட்டுவது. இதைச்
  செய்தது யார் தெரியுமா? பக்கத்துப் பாளையமான எட்டையபுரம். ம்ம்ம்… என்ன செய்வது! உட்பகைவர்களால் வீழ்ந்தோம்.

  ஊமைத்துரை வீழ்ந்ததும் வெள்ளையரின் பார்வை திரும்பியது

  மருதுபாண்டியரின் மீது. ஏற்கனவே அவர்கள் ஊமைத்துரைக்கு உதவினார்கள் என்ற கடுப்பு வேறு.

  மீண்டுமொரு போர். இதுவும் வெள்ளையனுக்கு எளிய போராக இருக்கவில்லை. மருது சகோதரர்களையும் பிடிக்க முடியவில்லை.

  அப்போது ஒரு தந்திரம் செய்தான் வெள்ளையன். மருதுபாண்டியர் சரணடையாவிட்டால் காளையார்கோயில் கோபுரத்தைக் குண்டுவீசித் தகர்ப்போம் என்ற அச்சுறுத்தல் அது.

  அந்தத் தந்திரம் நன்றாகவே வேலை செய்தது. கோயிலைக் காக்க மருது சகோதரர்கள் சரணடைந்தனர். பூலித்தேவன், கட்டபொம்மன், ஊமைச்துரை(குமாரசாமி) ஆகியோர் சென்ற தமிழ்க்குடி வீரவழியில் பீடுடன் சென்றனர். இன்றைக்குப் புதுக்கோட்டை மற்றும் எட்டையபுரம் பாளையங்களின் மன்னர்களை நாம் அறியோம். ஆனால் நெற்கட்டும்செவல் பூலித்தேவனும் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனும் ஊமைத்துரையும் சிவகெங்கை மருது சகோதரர்களும் என்றென்றும் நம் மதிப்பில் உயர்ந்து நிற்பார்கள்.

  • amas32 says:

   எவ்வளவு விவரங்கள் தந்துள்ளீர்கள் நன்றி 🙂 Are you a historian too?
   amas32

   • GiRa ஜிரா says:

    இல்லையம்மா. நான் மேய்ப்பன் தோட்டத்திலே புல் மேயும் ஆடு 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s