தேரில் வந்த இரவலர்கள்

ஆன்றோள் கணவ, சான்றோர் புரவல,

நின் நயந்து வந்தனன் அடுபோர்க் கொற்றவ,

இன் இசைப் புணரி இரங்கும் பௌவத்து

நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர்

கமழும் தாழைக் கானலம் பெருந்துறை

தண்கடல் படப்பை நல் நாட்டுப் பொருந,

வாரார் ஆயினும் இரவலர் வேண்டித்

தேரில் தந்து அவர்க்கு ஆர்பதம் நல்கும்

நகைசால்வாய் மொழி இசைசால் தோன்றல்

நூல்: பதிற்றுப் பத்து (#55ன் ஒரு பகுதி)

பாடியவர்: காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்

பாடப்பட்ட அரசன்: ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

சிறந்த பெண்ணின் கணவனே, சான்றோர்களுக்கு வாரி வழங்கும் புரவலனே, கொல்லும் போரைச் செய்கின்ற மன்னனே, உன்னைத் தேடி நான் வந்தேன்.

அலைகள் ஒலிக்கும் கடல், இனிமையான ஓசையைக் கொண்டது. அதன் வழியே நீ திரட்டிய செல்வம் மொத்தமும் கடற்கரை ஓரமாக உள்ள உன்னுடைய பண்டகசாலைகளில் குவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய உன்னுடைய கடற்கரையில் தாழையின் மணம் கமழ்கிறது, கானற்சோலை விளங்கி நிற்கிறது, அப்படிப்பட்ட நல்ல நாட்டின் தலைவனே,

உன்னுடைய ஆட்சியில் ஏழைகளே இல்லை. யாரும் யாரிடமும் கையேந்துவது இல்லை.

அதற்காக? நீ உன்னுடைய ஈகைக் குணத்தை மறந்துவிடமுடியுமா? பக்கத்து நாட்டில் உள்ள ஏழைகளையெல்லாம் தேரில் அழைத்துவருகிறாய், அவர்களுக்கு உணவை அள்ளித் தருகிறாய்.

இப்படி எல்லாருக்கும் வேண்டியதைத் தரும் உன்னுடைய புகழ் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.

துக்கடா

 • இந்தக் காலத்தில் அரசியல் கூட்டங்களுக்குப் பக்கத்து ஊர்களில் இருந்து ‘லாரியில் ஆள்களை ஏற்றிக் கொண்டுவருகிற’ பழக்கம் உள்ளது. ஆதிகாலத்தில் அதைத் தொடங்கிவைத்தவர் இந்த அரசர்தான் போலிருக்கிறது 😉
 • ’எல்லாருக்கும் வாரி வழங்கும் அரசன்’ என்று நேரடியாகச் சொல்வதற்குப் பதிலாக, ‘ஏழைகள் இல்லாவிட்டால் பக்கத்து ஊரிலிருந்து வரவழைத்துக் கொடுப்பான்’ என்று மிகைப்படுத்திப் புகழ்வதால் இந்தப் பாட்டு உயர்வு நவிற்சி அணி வகையைச் சேர்கிறது

245/365

Advertisements
This entry was posted in உயர்வு நவிற்சி அணி, கொடை, பதிற்றுப்பத்து, புகழ்ச்சி, புறம், வள்ளல். Bookmark the permalink.

2 Responses to தேரில் வந்த இரவலர்கள்

 1. amas32 says:

  எடுத்ததுமே சிறந்த பெண்ணின் கணவனே என்று ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை போற்றுகிறார் புலவர் காக்கைப் பாடினியார் நச்செள்ளையார். நல்ல மனைவி அமைந்தால் எல்லா வளங்களும் தானே அமையும் என்று சொல்லாமல் சொல்கிறாரோ!

  இந்தப் புலவரும் அரசனைப் போற்றிப் பாடி பரிசுகளை பெற்றுப் போகவே வந்திருக்கிறார். அதனாலோ என்னவோ மன்னனை நன்றாகப் புகழ்ந்து பாடுகிறார். வளமான நாடாக இருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியை தந்தாலும் அரசனின் ஈகை குணமே பெருமகிழ்ச்சியைத் தருகிறது. கலைஞர்களும் புலவர்களும் நிறைவோடு இருப்பார்கள் என்று ஐயமில்லாமல் சொல்லலாம். அண்டை நாட்டவர்க்கே தானம் செய்யும் வல்லமை உள்ள அரசன் தன் நாட்டினரை நன்றாகக் கவனித்துக் கொள்வதில் வியப்பில்லை.

  amas32

 2. Samudra says:

  வாரி வாரி தானம் செய்வது பொருளாதார ரீதியாகத் தவறு.
  மக்கள் சோம்பேறி ஆகி விடுவர். ஒருவனுக்கு மீனை
  தானமாக வழங்குவதை விட அவனுக்கு மீன் பிடிக்கும்
  வித்தையை கற்றுக்கொடுங்கள் என்று சொல்வார்கள்.
  கஷ்டம் வந்தால் மன்னன் இருக்கிறான்; நாம் உழைக்க வேண்டாம் என்ற
  மனநிலை வந்து விடும்.எனவே இப்படி தமிழ் மன்னர்களை கொஞ்சம்
  ஓவராக ஈகையில் சிறந்தவன் வாரி வழங்கும் வள்ளல் என்றெல்லாம்
  மிகையாகக் கற்பனை செய்வது கூடாது என்று தோன்றுகிறது.
  புலமைக்குப் பரிசாக காசு கொடுக்கலாம். ஆனால் சமுதாயத்துக்கு
  ஒன்றுமே செய்யாதவனை தேரில் கூட்டி வந்து எந்த மன்னனும்
  வாரிக் கொடுத்திருக்க மாட்டான் என்று தோன்றுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s