அரங்கம்

எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது

மண்ணகம் ஒரு வழி வகுத்தனர் கொண்டு

புண்ணிய நெடுவரைப் போகிய நெடும்கழை

கண் இடை ஒரு சாண் வளர்ந்தது கொண்டு

நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும்

கோல் அளவு இருபத்து நால் விரலாக

எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து

ஒரு கோல் உயரத்து உறுப்பினதாகி

உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை

வைத்த இடைநிலம் நாற்கோலாக

ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்

தோற்றிய அரங்கு…

நூல்: சிலப்பதிகாரம்

பாடியவர்: இளங்கோவடிகள்

சூழல்: மாதவி நடனமாடுவதற்கான அரங்கம் தயாராகிறது

முதலில், அரங்கம் அமைப்பதற்கான நல்ல இடம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நூல்களில் சொல்லப்பட்டுள்ள இலக்கணத்திலிருந்து கொஞ்சமும் பிசகாதபடி அந்த இடம் அமைந்திருந்தது.

அடுத்து, அவர்கள் பல புண்ணிய மலைகளுக்குச் சென்று அங்கே உயரமாக வளர்ந்துள்ள மூங்கில்களை ஆராய்ந்தார்கள். ஒரு கணுவுக்கும் இன்னொரு கணுவுக்கும் இடையே சரியாக ஒரு சாண் இடைவெளிமட்டும் இருக்கக்கூடிய மூங்கில்களை வெட்டிக் கொண்டுவந்தார்கள்.

பின்னர் அந்த மூங்கில்கள் துண்டுபோடப்பட்டன. அதற்காக ஓர் அளவுகோல் தயாரிக்கப்பட்டது. அந்தக் கோலின் நீளம், இலக்கண நூல்களில் சொல்லப்பட்டிருக்கும்படி 24 விரல் அளவாக இருந்தது.

இந்தக் கோலைப் பயன்படுத்தி, ஏழு கோல் அகலம், எட்டு கோல் நீளம், ஒரு கோல் உயரம் என மூங்கில்களைக் கொண்டு நடன அரங்கம் அமைக்கப்பட்டது. தூண்களின்மீது இட்ட பலகைக்கும், அரங்கப் பலகைக்கும் நடுவே நான்கு கோல் இடைவெளி இருந்தது.

இத்தகைய சிறந்த அரங்கினுள் மக்கள் நுழையவும் வெளியேறவும் இரண்டு வழிகள் அமைக்கப்பட்டன.

துக்கடா

 • இந்த வரிகளைப் படிக்கும்போது இளங்கோவடிகள் கவிஞரா சிவில் எஞ்சினியரா என்று சந்தேகம் வருகிறதல்லவா? 🙂
 • சிலப்பதிகாரம் வெறும் கதை நூல் அல்ல, நடனம், இசை, சிற்பம், கட்டடக்கலை, வியாபாரம் என்று பல துறைகளைப் பற்றிய மிக நுணுக்கமான தகவல்கள் அதில் உண்டு. அதில் ஒரு சின்ன சாம்பிள்மட்டும்தான் இன்றைய பா!

244/365

Advertisements
This entry was posted in இலக்கணம், இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், வர்ணனை. Bookmark the permalink.

4 Responses to அரங்கம்

 1. Samudra says:

  எனக்குப் புரியவில்லை. மூங்கில் எதற்கு ?அளவுகோல் செய்வதற்கா
  இல்லை அரங்கம் அமைப்பதற்கா?

  பழந்தமிழர்கள் நல்ல சிவில் இஞ்சினியர்கள் தான் என்பதில் சந்தேகமே இல்லை..

  • என். சொக்கன் says:

   //மூங்கில் எதற்கு ?அளவுகோல் செய்வதற்கா
   இல்லை அரங்கம் அமைப்பதற்கா?//

   Both

 2. amas32 says:

  ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம் என்று சொல்லுவார்கள். இங்கே அப்படி சொல்வதற்கே வாய்ப்பில்லை 🙂

  எவ்வளவு நுணுக்கமான விவரங்களை அடக்கியுள்ளது இந்தப் பாடல். புண்ணிய மலைகளுக்குச் சென்று மூங்கில்களை தேர்ந்தெடுக்கின்றனர். நடனக் கலை தெயவீகமாகக் கொண்டாடபட்டிருக்கிறது!

  முற்றிய மூங்கில்களை தேர்வு செய்து மேடை அமைக்கின்றனர். பாதகாப்பு அம்சங்களுக்கு உரிய முக்கியத்துவம் தந்து ஆடல் அரங்கம் எவ்வாறு உறுதியாக இருக்க வேண்டுமோ அவ்வாறு இருக்கும் அளவுக்கு அமைத்திருக்கின்றனர்.

  திரு சொக்கன் சுட்டிக் காட்டியபடி இளங்கோவடிகள் பல துறைகளிலும் வல்லுனராக இருந்திருக்கிறார். அரங்கம் அமைப்பதையே இவ்வளவு அழகாக விவரிப்பவர் அடுத்து மாதவி ஆடும் நடனத்தை விவரிப்பது நேரில் காணுவதற்கு ஒப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  amas32

 3. Pingback: தலம்தோறும் சிவன் | தினம் ஒரு ’பா’

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s