தெள்ளேணம் கொட்டுவோம்

உருகிப் பெருகி உளம் குளிர முகந்துகொண்டு

பருகற்கு இனிய பரம் கருணைத் தடம் கடலை

மருவித் திகழ் தென்னன் வார்கழலே நினைத்து அடியோம்

திருவைப் பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ!

நூல்: திருவாசகம் (திருத்தெள்ளேணம் #15)

பாடியவர்: மாணிக்க வாசகர்

நாம் அள்ளி அள்ளிக் குடிக்கும் அளவுக்கு இனிமையான, உயர்வான கருணைக் கடல் போன்றவன் இறைவன். அவனை நினைத்தால் நம் மனம் உருகும், உடல் பூரிக்கும், உள்ளம் குளிரும்!

ஆகவே, பக்தர்களாகிய நமக்குச் செல்வாமாக விளங்கும் அந்தத் தென்னவனின் சிறந்த பாதங்களை எண்ணிப் புகழ்ந்து நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

துக்கடா

 • ’தெள்ளேணம்’ என்பது அந்தக்காலத் தமிழ்ப் பெண்களின் விளையாட்டு. கைகளால் த(கொ)ட்டிப் பாடுவது, கும்மிப் பாட்டு என்று சொல்கிறோமே, அந்த வகையைச் சேர்ந்தது
 • இந்தத் தெள்ளேணத்தை வைத்து மாணிக்கவாசகர் இருபது பாடல்கள் தந்துள்ளார். அவை அனைத்தையும் உரையுடன் இங்கே படிக்கலாம் (கொஞ்சம் Ctrl + F செய்து தேடவேண்டியிருக்கும்) : http://aanmigam-deiveegam.blogspot.in/2011/11/09-11-2011-12-12-6-part-ii-httptemple.html

243/365

Advertisements
This entry was posted in சிவன், திருவாசகம், பக்தி, பெண்மொழி, மாணிக்கவாசகர். Bookmark the permalink.

14 Responses to தெள்ளேணம் கொட்டுவோம்

 1. Samudra says:

  பொதுவாக பிறவியை கடலுடன் ஒப்பிடுவார்கள். பவ சாகரம் பவாப்தி , பிறவிப் பெருங்கடல் என்றெல்லாம். கடவுளையும் கடலுடன் ஒப்பிடுவார்கள். ‘கருணா ஜலதே தாசரதே’என்கிறார் தியாகராஜ ஸ்வாமிகள்.’கருனாப்தி நீனவுதோ உலிசி கொள்ளய்யா ஹெசர (நீ கருணைக்கடல் அன்றோ, அந்தப் பெயரைக் காப்பாற்றிக் கொள்)என்கிறார் புரந்தர தாசர்.

  இப்போது ஓஷோவின் ஒரு கேள்வி:

  கடவுள் மிகவும் கருணை உள்ளவர் மற்றும் நீதி தவறாதவர் என்கிறீர்கள்..அவர் கருணை உள்ளவராக இருந்தால் நீதி நியாயம் இவற்றில் compromise செய்து கொண்டு போகட்டும் போ என்று மன்னித்து விடுவார் ..நீதிமானாக இருந்தால் கருணையை எல்லாம் அப்பால் வைத்து விட்டு நடுநிலையில் நின்று தீர்ப்பு வழங்க வேண்டும்.ஆகவே கடவுள் ஒன்று கருணைக்கடலாக இருக்க வேண்டும் இல்லை நீதிமானாக இருக்க வேண்டும்..but God seems to possess qualities which are mutually contradictory.

  • GiRa ஜிரா says:

   சமுத்திரா, அழகான கருத்தைச் சொல்லியிருக்கின்றீர்கள். 🙂 இதற்கும் சேர்த்து ஒரு விரிவான பின்னூட்டமே எழுத வேண்டும். 🙂

  • GiRa ஜிரா says:

   சமுத்திரா சார், உங்களோடும் ஓஷோவோடும் நான் சிறிது மாறுபடுகிறேன் 🙂

   சண்டையைத் தொடங்கலாமா? 🙂

   கருணை வேறு நீதி வேறு என்று நினைப்பதே தவறானது என்பது என் கருத்து.

   கண்ணுக்கு கண். பல்லுக்குப் பல் என்றெல்லாம் வழங்குவது நீதியென்றால் அங்குதான் நீதி வேறாகவும் கருணை வேறாகவும் இருக்கும்.

   கருணையற்ற நீதி அநீதியாகும்.

   அதே போல நீதியற்ற கருணை சுரணையற்றதாகும்.

   இரண்டும் ஒன்றோடொன்று கலந்தவை.

   எப்படி என்று கேட்கின்றீர்களா?

   பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்குமெனின். இதுதான் தமிழ் சொல்வது. இந்தச் சூழ்நிலையில் பொய் சொல்வது பாவக் கணக்கில் சேராது. அப்படிச் சொல்லப் பட்ட பொய்யே உண்மைக்குச் சமமாகி விடுகிறது.

   ஒன்பதாம் வகுப்புச் சிறுவன் ஆசிரியையைக் கொலை செய்து விட்டான். கொடிய செயல்தான். மறுக்கவே முடியாது. திட்டம் தீட்டிச் செய்திருக்கலாம். உணர்ச்சி வசப்பட்டும் செய்திருக்கலாம். ஆனால் அது ஒரு கொலை.

   கொலைக்கு நீதி சொல்லும் தீர்ப்பு தூக்குத்தண்டனை.

   அதுவா அந்தச் சிறுவனுக்கு வழங்கப்பட்டது?

   இல்லையே! ஏன்? அங்குதான் நீதி கருணையின் பால் நின்று பேசுகிறது. கொலைக்குத் தண்டனை கொலை என்று சொல்லும் நீதியே அதை மறுத்திருக்கிறது. ஏன்? சூழ்நிலைகள் மாறுபடுகின்றன.

   இந்த இடத்தில் நீதி கருணையோடு பார்ப்பதையும் நாம் காண்கிறோம்.

   ஆகையால் கருணையும் நீதியும் வெவ்வேறானவை என்று கருதுவது என்னைப் பொருத்த வரையில் தவறாகும். 🙂

   இன்னொரு தகவல். புரந்தரதாசருக்கு முன்னமே இதே கருத்தை நக்கீரரும் பாடி விட்டார்.
   காக்காக் கடவிய நீ காவாதிருந்தக்கால் ஆர்க்குப் பரமாம் ஆறுமுகா
   பூக்கும் கடம்பா கதிர்வேலா நல்ல இடங்காண் இரங்காய் இனி

 2. amas32 says:

  இறைவன் நீதிமானாகவே உள்ளார். நம் இறைஞ்சுதலால் அவர் கருணைக் கடலாக மாறி விடுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா? 🙂

  எப்பொழுதுமே நாம் ஒரு இக்கட்டில் இருக்கும்போது தான் இறைவனின் கருணை தேவைப்படுகிறது. எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருக்கும்போது நாம் இறைவனை லேசாக நினைத்துக் கொண்டாலே பெரிய விஷயம்! ஆனால் துன்பம் நேரும்போது அவனை நெக்குருக வேண்டுகிறோம். துன்பம் விலகினால் அவன் கருணா சாகரன். விலகாவிட்டாலும் அவன் அதுவே. எப்படி? இதைவிட பெரிய துன்பம் வரவேண்டி இருந்து அவன் கருணையால் அது இந்த மட்டுக்குக் குறைந்து நம்மை சங்கடபடுத்துவதும் அவன் கருணையினால் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

  ரொம்ப difficult and tricky subject matter இது. நாம் வினைப்பயன் படி தான் நம் வாழ்க்கை அமைகிறது என்று நம்பினால் இறைவனின் கருணையையும் நம்ப வேண்டும். கஷ்டத்தின் வீர்யத்தை அவன் கருணை குறைக்கிறது என்று கொள்ளலாம். நம் முன்னோர்கள் ஆகிய தியாகராஜ சுவாமிகள், புரந்தரதாசர், ஆழ்வார்கள், நாயன்மார்கள், நமக்கு விட்டுச் சென்ற legacy, இறைவன் உள்ளான், அவன் மாபெரும் கருனைக் கடல் என்பதே. How to refute that? நம் சிற்றறிவுக்கு எட்டவில்லை என்பதால் அது இல்லை என்றாகாது.

  amas32

 3. GiRa ஜிரா says:

  ஒரு பாடல். அது என்ன வகைப் பாடலாக இருந்தாலும் அதில் “இரண்டு அழகுகள்” இருக்கும். அந்த “இரண்டு அழகுகளைப்” பொருத்தே எந்தப் பாடலும் விரும்பப்படும். நிலைபெறும். அந்த அழகுகள் எவை?
  1. சொல்லழகு
  2. பொருளழகு

  ஆகையால் ஒவ்வொரு பாடலை நாம் படிக்கும் போதும் இந்த இரண்டு அழகுகளையும் நாம் பகுத்து ஆராய்ந்து ரசித்திடல் வேண்டும்.

  இன்னும் நிறைய அழகுகள் சொல்வார்கள். எடுத்துக்காட்டாக உவமையழகு. ஆனால் இப்படிச் சொல்லப்படும் அத்தனை அழகுகளும் மேற்கூறப்பட்ட இரண்டு அழகுகளுக்குள் அடங்கிவிடும்.

  இன்று நாகா கொடுத்திருக்கும் பாடல் திருவாசகப் பாடல். “திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற வழக்கு நின்று நிலைபெற்ற வழக்குதான். ஆனால் திருவாசகம் முழுக்க நாம் ருசித்திருக்கிறோமா என்றால் இல்லை. ருசித்தவரும் ரசித்தவரும் சிலரே.

  ஆகையால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாம் இந்தப் பாடலைப் பகுத்துச் சொல்லழகையும் பொருளழகையும் ருசிப்போம்.

 4. GiRa ஜிரா says:

  இந்தப் பாடல் திருத்தெள்ளேணம் என்னும் பாகத்தில் உள்ளதாக அறிகிறோம். சரி. தெள்ளேணம் என்றால் என்ன?

  அது படகம் என்ற இசைக்கருவியைத் தட்டிக் கொண்டு பெண்கள் ஆடும் ஆட்டமாம்.

  சரி. படகம் என்றால் என்ன?

  இந்தக் கேள்வி வந்ததும் விவரங்களைத் தேடிப் பார்த்தேன். குறிப்புகள் கிடைத்தன. இரண்டு நூல்களில் இருந்து எடுத்துக்காட்டுகளும் தருகிறேன்.

  படகம் என்பது தோல் கருவி. கொட்டு போன்றது. அதெப்படி தோல் கருவி என்று சொல்கின்றேன்?

  ”அறைந்தன படகம்” என்று கந்தபுராணம் சொல்கிறது. போர்க்களத்தில் படகங்கள் அறையப்பட்டனவாம்.

  ”போர்த்த சங்கப் படகம் புடைத்திட” என்கிறது கம்பராமாயணம். அதென்ன “போர்த்த”?

  தோலினால் போர்த்தப்பட்ட கருவி என்று தெரிகிறது. இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளுமே போர்க்களக்காட்சிகள்.

  படகம் தொடர்பாக மேலதிகத் தகவல்கள் இருக்குமானால் மற்றவர்களும் பகிரவும்.

  சரி. தெள்ளேணம் விளக்கம் ஆனது. அடுத்தது என்ன? மாணிக்கவாசகர்தான்.

  பொதுவாக தமிழ்ச் சைவத்தில் நாயகி-நாயகன் பாவனை இல்லை. ஆண்டவனை எப்படியும் பார்க்கலாம் என்பதே கருத்து. மாணிக்கவாசகர் ஆசிரியராகப் பார்த்தார். அப்பர் ஐயா என்றார். சம்பந்தர் அப்பா என்றார். சுந்தரர் இன்னும் வன்மையாய் பித்தா தோழா என்றார். காரைக்கால் அம்மையாருக்கோ ஆண்டவனே மகன் ஆனார்.

  ஆகையால் நாயகி-நாயக பாவனை பொதுவாகக் காணாதது. முருகனடியவர்களும் முருகனை அந்த பாவத்தில் காணவில்லை. ஆனால் இலக்கியங்களில் பெண்கள் முருகனை நாயகனாகப் பார்ப்பது போல வரும். ஆனால் அதுவும் நாயகி-நாயக பாவனைக்குள் வராது.

  ஆனாலும் ஒரு விதிவிலக்கு உண்டு. அவர்தான் மாணிக்கவாசகர். அவர்தான் இறைவனை ஆசிரியராகப் பார்த்தவராயிற்றே! அவர் எப்படி?

  தொடக்கத்தில் திருவாசகத்தில் அப்படியெல்லாம் இல்லை. ஆனால் பின்னாளில் திருவண்ணாமை, தில்லையம்பலம் என்று சுற்றத் தொடங்கிய பிறகு, தொண்டை நாடு செய்த மாயமாய்த் தொண்டை திறந்து அம்மானை, தெள்ளேணம், கோத்தும்பி, சுண்ணம் இடித்தல் என்று பாடத் தொடங்கி விட்டார். திருவெம்பாவையும் அப்படித்தானே. அவர் பாடியதுதானே. “என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க”. மறக்க முடிகின்ற வரியா அது?!

  அந்த வகையில் திருத்தெள்ளேணம் தில்லையம்பலத்தில் இருந்த போது மாணிக்கவாசகர் பாடியது.

  இந்தத் தகவல்களை எல்லாம் ஏன் சொல்கின்றேன் என்று பார்க்கின்றீர்களா?

  பொதுவாகப் பாடலை மட்டும் ரசிக்காமல், அது தொடர்பான மற்ற தகவல்களையும் தெரிந்து ரசிக்கும் போது அதன் சுவை இன்னும் கூடும். பல அரிய தகவல்களும் தெரியவரும். அதற்காகத்தான் சொல்வது.

 5. GiRa ஜிரா says:

  இந்தப் பாடலின் விளக்கம் எளிமையானதுதான். நாம் நாகா சொன்ன விளக்கத்தையே எடுத்துக் கொள்வோம். அதில் இரண்டு கருத்துகளை மட்டும் நான் சற்று விரித்துப் பார்க்க விரும்புகிறேன்.

  சரி. நாகா சொன்ன விளக்கம் என்ன?

  “நாம் அள்ளி அள்ளிக் குடிக்கும் அளவுக்கு இனிமையான, உயர்வான கருணைக் கடல் போன்றவன் இறைவன். அவனை நினைத்தால் நம் மனம் உருகும், உடல் பூரிக்கும், உள்ளம் குளிரும்!
  ஆகவே, பக்தர்களாகிய நமக்குச் செல்வாமாக விளங்கும் அந்தத் தென்னவனின் சிறந்த பாதங்களை எண்ணிப் புகழ்ந்து நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.”

  நல்ல அழகான விளக்கம்.

  சரி. நான் எடுத்துச் சொல்ல வந்த இரண்டு கருத்துகள் என்னென்ன?

  முதல்கருத்து

  யாரெல்லாம் கடலைப் பார்த்திருக்கின்றீர்கள்? பார்த்தவர்களில் எத்தனை பேர் கடல்நீரின் சுவையை உணர்ந்திருக்கின்றீர்கள்?

  அது இனிக்குமா? சுவைக்குமா?
  மீண்டும் மீண்டும் பருகத் தூண்டுமா?
  குடித்தால் உள்ளம் குளிருமா?
  உடல் பூரிக்குமா? மனம் உருகுமா?
  இவற்றில் எதுவுமே இல்லை. கடல்நீர் உப்புக் கரிக்கும். சற்று வாயில் பட்டாலே உமட்டும்.

  பிறகு ஏன் அந்தக் கடலோடு ஈசனை ஒப்பிடுகிறார் மாணிக்கவாசகர்?

  நல்ல கேள்வி.

  கடலில் என்னென்ன இருக்கின்றன?

  மீன் இருக்கிறது. நண்டு இருக்கின்றது. ஆமை இருக்கிறது. சங்குப்பூச்சிகள் இருக்கின்றன. சிப்பிகள் இருக்கின்றன. இன்னும் பலப்பலத் தாவரங்கள் இருக்கின்றன.

  நாம் ஒன்றை மட்டும் விளக்கத்திற்காக எடுத்துக் கொள்வோம். மீன் எளிய எடுத்துக்காட்டு.

  மீன் எப்போதும் செய்யும் செயல் என்ன? வாய் வழியே நீரை உள்ளே உறிஞ்சிச் செவுள் வழியே வெளியே விடுவது. அதனுடைய வாயைத் திறந்து கொண்டேதானே இருக்கிறது.

  நாம் உப்புக்கரிக்கிறது என்று சொல்லும் கடல்நீரை அந்த மீன் வாழ்நாள் முழுதும் வாயினால் குடித்துக் கொண்டேயிருக்கிறது! அந்தக் கடல் அந்த மீனுக்கு உயிரைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

  கடலுக்கு வெளியே இருக்கும் நமக்கு உப்பாகத் தோன்றும் நீர், அந்தக் கடலுக்குள்ளே இருக்கும் மீனுக்கு உவப்பாகத் தோன்றுகிறது. உயிரையும் கொடுக்கிறது.

  அது போல, ஆண்டவனின் கருணைக்குள் நாம் இருக்கிறோம் என்று புரியும் பொழுது அது இனிக்கும். அள்ளிப் பருக உளம் குளிரும். உடல் பூரிக்கும். மீண்டும் மீண்டும் பருகத் தோன்றும்.

  அந்தக் கருணையின் பெருமையைச் சரியாக நாம் புரிந்து கொள்ளாத போதுதான் ஆண்டவனை நாம் திட்டுவதும் மறுப்பதும் இழிப்பதும் நடக்கின்றது.

  அந்தக் கருணைக்குள் நாம் மூழ்கி விட்டாலோ அது பேரின்பக் கடல். அந்த அளவிற்கு ஆண்டவனின் அன்போடு ஒன்றுவது அடியார்க்கும் நல்லவர்க்களுக்கும் ஆகும் செயல் என்று மாணிக்கவாசகர் நமக்கு உணர்த்துகிறார்.

 6. GiRa ஜிரா says:

  இரண்டாவது கருத்து

  உலகெலாம் உணர்ந்து ஓதும் ஈசனை என்ன பெயர் சொல்லி இந்தப் பாட்டில் மாணிக்கவாசகர் பாடுகிறார்?

  ”திகழ் தென்னன்”

  திகழ் என்றால் திகழ்வது. தென்னன் என்றால் தென்னவன். தெற்கில் திகழும் இறைவன் என்று புகழ்கிறார் மாணிக்கவாசகர். தென்னாடுடைய சிவனே போற்றி என்று நாம் சொல்வதும் வழக்கமல்லவா.

  இந்தத் தென்னன்/தென்னவன் என்ற பெயர் பாண்டியனுக்கும் ஈசனுக்கும் தான் வழங்கப்படுகிறது.

  உடனே சிலர், அப்படியானால் மற்ற தெய்வங்கள்/மன்னர்கள் தென்னவர்கள் இல்லையா என்று விளக்க வருவார்கள். சேரனாடும் சோழநாடும் கூடத் தெற்கில்தான் இருக்கின்றன என்று சொல்வார்கள். சொல்லட்டும்.

  ஆனால் இலக்கியங்களில் இப்படிக் குறிப்பிடப்படுகின்றவர்கள் இவர்கள்தான் என்பது கருத்து. அவ்வளவுதான். ”தென்னவன் தீதிலன்” என்று சேரநாட்டு இளங்கோவே பாண்டியனைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.

  தெற்கு எமன் இருக்கும் திக்கு என்று மற்றவர் சொல்லி அச்சமூட்டும் வேளையில் தென்னாடுடையான் ஈசன் என்று சொல்வது உவப்பானதுதானே!

 7. Samudra says:

  கருணை, நீதி இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவையா?
  நமக்கு முரண். இறைவனுக்கு இல்லை என்று தோன்றுகிறது.கருணை
  என்றால் பாவங்களை மன்னித்து விடுவது. அம்மா கருனையானவள் தான்.
  அதற்காக நாம் எல்லா விதமான கெட்ட விஷயங்களையும் செய்து விட்டு
  அம்மா சாரி என்று சொல்லி விடலாமா?இல்லை. அம்மாவின் கருணையே
  நம்மை பாவம் செய்யாமல் தடுத்து விடும்.பெற்றோர் மிகவும் கண்டிப்பாக
  இருந்தால் தான் பிள்ளைகள் தவறு செய்யும் வாய்ப்புகள் அதிகம்.அது போல
  உண்மையான பக்தர்கள் கடவுளின் கருணையை MISUSE செய்ய மாட்டார்கள்.

  என் முந்தைய கர்மங்கள் என்னை இப்படி வாட்டுகின்றன. அவற்றை இல்லாமல்
  செய்து என்னை சந்தோஷமாக வாழ்வை என்று உண்மையான அடியவர்கள் சொல்ல மாட்டார்கள்.என் கர்மங்கள் என்னை மேலும் பந்தப்படுத்தாமல் இருக்க செய்;துன்பங்களிலும் உன்னை மறவாமல் இருக்கச் செய், மேலும் அதே தவறுகளை திரும்பச் செய்யாமல் என்னைக்கா என்று தான் சொல்வார்கள்.

  உடல் ரீதியான துன்பங்களை விட மனரீதியான துன்பங்கள் தான் மனிதனை
  மிகவும் படுத்துகின்றன. 90 % problems are mental என்கிறார் ஓஷோ.நம் கவலைகளை நாமே சிருஷ்டி செய்து கொண்டு ஐயோ அப்பா என்றால் கடவுள் என்ன செய்வார்?

  புரந்தரதாசர் சொல்கிறார்:

  நா மாடித கர்ம பலவந்தவாதரே
  நீ மாடுவதேனோ ரங்கா

  -என் கர்மங்கள் என்னை வாட்டுகின்றன.
  இதில் நீ என்ன செய்வாய்?

  மேலும் மனிதன் கர்மங்களின் போது கடவுளை நினைப்பதில்லை.கர்மபலனின்
  போது தான் நினைக்கிறான். நன்றாக மூச்சுமுட்ட சாப்பிடும் போது ‘இறைவா
  நான் இவற்றை சாப்பிடலாமா?’ என்று எவனும் கேட்பதில்லை. வயிற்று வழியால் அவதிப்படும் போது தான் கிருஷ்ணா ராமா நீ எல்லாம் கடவுளா கருணை இல்லையா என்று திட்டுகிறான். கடவுள் என்ன செய்வார் ?

  பட்டினத்தார் பாடல் ஒன்று:

  என்செய லாவதியாதொன்று மில்லை இனித்தெய்வமே
  உன்செய லெயென்றுணர்ப் பெற்றேன் இந்தஊனெடுத்த
  பின்செய்த தீவினையாதொன்று மில்லை பிறப்பதற்கு
  முன்செய்த தீவினையோலிங் ஙனேவந்து மூண்டதுவே

  -கர்மத்தால் பிறப்பு நிகழ்கிறது என்றால் முதன்முதலில் எப்படி ஆத்மாவுக்குப்பிறப்பு நிகழ்ந்தது? கடவுளின் லீலையா? கடவுளுக்கே வெளிச்சம்.

  • amas32 says:

   //-கர்மத்தால் பிறப்பு நிகழ்கிறது என்றால் முதன்முதலில் எப்படி ஆத்மாவுக்குப்பிறப்பு நிகழ்ந்தது? கடவுளின் லீலையா? கடவுளுக்கே வெளிச்சம்.// Samudra, exactly my doubt too!
   amas32

 8. ஆனந்தன் says:

  சமுத்ரா :
  //கடவுள் ஒன்று கருணைக்கடலாக இருக்க வேண்டும் இல்லை நீதிமானாக இருக்க வேண்டும்..// ஆழமான கேள்வியை ரொம்ப சுலபமாகக் கேட்டு விட்டீர்கள்! பதிலும் நன்றாகவே இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, கடவுள் ஒரு நீதிமான்; அப்படி இருப்பதுதான் அவன் கருணை. அதனாற்றான் எமது வினைக்கேற்ற பயன் எமக்குக் கிடைக்கிறது.

  துன்பம் வரும்போது “இறைவா, நீ கருணயுள்ளவன். ஆகவே, நீதி வழுவ மாட்டாய். அதனால், நான் முன்னர் செய்த வினைப் பயனையே இப்போது அனுபவிக்கிறேன். இனிமேல், என் வினைகள் எல்லாம் உனக்கே சமர்ப்பணம்” என்று நினைத்து விட்டால் துன்பம் மனதளவில் குறையும்.

 9. ஆனந்தன் says:

  //கர்மத்தால் பிறப்பு நிகழ்கிறது என்றால் முதன்முதலில் எப்படி ஆத்மாவுக்குப்பிறப்பு நிகழ்ந்தது?//
  ஆன்மாவுக்குப் பிறப்பிறப்பில்லை – பிறப்புமில்லை, இறப்புமில்லை – என்பதே எமது சமயக் கருத்து. மனம்தான் நான் பிறந்திருப்பதாக நினைத்துக் கொள்கிறது. உடலை எடுப்பதும், வினைகளால் பீடிக்கப்பட்டு, இன்பதுன்பங்களுக்கு ஆளாவதும் மனமே. தக்க சாதனைகளால் மனம் இல்லாமற் போகும்போது ஆன்மா மட்டுமே எஞ்சி நிற்கும். அப்போதுதான், நான் (ஆகிய ஆன்மா) உண்மையில் பிறக்கவேயில்லை என்பது வெளிச்சமாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s