இது கார்காலமா?

’நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை

துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின்,

அஞ்சுவரப் பனிக்கும் வெம் சுரம் இறந்தோர்

தாம் வரத் தெளித்த பருவம் காண்வர

இதுவோ?’ என்றிசின், மடந்தை! மதி இன்று,

மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மா மழை

பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்

கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல

பிடவமும் கொன்றையும் கோடலும்

மடவ ஆகலின், மலர்ந்தன பலவே

நூல்: நற்றிணை (#99)

பாடியவர்: இளந்திரையனார்

சூழல்: முல்லைத் திணை, காதலன் காதலியைப் பிரிந்து செல்லவேண்டிய சூழ்நிலை. அதனால் வருந்திய காதலிக்குக் ’கார்காலத்தில் திரும்பி வருவேன்’ என்று ஆறுதல் சொல்லிச் சென்றான். இப்போது, கார்காலம் தொடங்கிவிட்டது. ஆனால் அவன் இன்னும் வரவில்லை. கவலையில் மூழ்கிய காதலிக்கு அவளுடைய தோழி ஆறுதல் சொல்கிறாள்

தோழி,

தண்ணீர் கொஞ்சமும் இல்லாமல் வற்றிப்போன பாலை நிலம். அதில் முடிவில்லாத நீண்ட பாதை. அங்கே வெள்ளை ஆடையை விரித்து வைத்ததுபோலக் கொளுத்தும் வெய்யில், கடுமையான வெப்பம். பயத்தை ஏற்படுத்தி நடுங்கச் செய்கிற அந்தப் பாலை நிலத்தின் வழியே புறப்பட்ட உன் காதலன் ’கார் காலத்தில் திரும்பி வருவேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

அந்தக் கார்காலம், இப்போது வந்துவிட்டாற்போல் தெரிகிறது. அதைப் பார்த்து நீ வருந்துகிறாய்.

கவலைப்படாதே தோழி, இது கார்காலமே இல்லை!

அறிவில்லாத மேகங்கள் வழக்கத்தைவிட அதிகமாகக் கடல் நீரைக் குடித்துவிட்டன. அதனால் அவற்றின் வயிறு பெருத்துவிட்டது. ஆகவே அந்தத் தண்ணீரைக் கீழே கொட்டிவிட்டன.

இந்தக் காட்சியைப் பார்த்த பிடவமும் கொன்றையும் காந்தளும் அதைக் கார்காலத்து மழை என்று தவறாக நினைத்துவிட்டன. தங்களுடைய மலர்களைப் பூக்கச் செய்துவிட்டன.

முட்டாள் மேகங்கள், முட்டாள் தாவரங்கள், இவை சொல்வதையெல்லாம் நீ நம்பாதே. உண்மையான கார்காலம் இன்னும் வரவில்லை. அது வந்தவுடன் உன்னுடைய காதலனும் கண்டிப்பாகத் திரும்பி வந்துவிடுவான். நீ வருந்தவேண்டாம்!

துக்கடா

  • வானம் பொழிகிறது, பூமி நனைகிறது, மழைக்காலத் தாவரங்களான பிடவமும் கொன்றையும் காந்தளும் மலர்கின்றன, ஆனாலும் இது கார்காலம் இல்லை என்று அடித்துச் சொல்கிறாள் இவள், தன்னுடைய தோழியின் மனம் வாடக்கூடாது என்பதற்காக இயற்கையையே பொய் என்று சொல்லி மேகங்களுக்கும் தாவரங்களுக்கும் முட்டாள் பட்டம் கட்டிவிடுகிறாள். நல்ல சிநேகிதிதான்!

242/365

Advertisements
This entry was posted in அகம், இயற்கை, காதல், நற்றிணை, பிரிவு, முல்லை, வர்ணனை. Bookmark the permalink.

One Response to இது கார்காலமா?

  1. amas32 says:

    கார் காலத்தில் திரும்பி வருவேன் என்று சொல்லிச் சென்ற காதலன் இன்னும் திரும்பி வராததால் கவலைப்படும் காதலிக்குத் தோழி சொல்லும் சமாதானம் இதுவரை கேட்டிராத ஒன்றாக உள்ளது! இது கார் காலமே இல்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விடுகிறாள்.

    முட்டாள் மேகங்கள், முட்டாள் தாவரங்கள் என்று குழந்தைக்கு சொல்வதைப் போல சொல்கிறாள் தோழி. காதல் வயப்பட்ட தலைவி, பாவம் அவளும் தோழி சொல்வதை நம்பியும் விடுவாள்.

    வெள்ளை ஆடையை விரித்து வைத்தது போல என்று கொளுத்தும் வெய்யிலுக்கு ஒப்புமை அருமையாக உள்ளது.

    இப்பொழுதெல்லாம் உண்மையாகவே காலம் மாறி பெய்கிறது மழை. ஆனால் அதற்குக் காரணம் உலக வெப்பமயமாதல்.

    amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s