வண்ணமயம்!

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி, பொலிந்து இலங்கும்

மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை, வெள்ளிக் குன்றம்

தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை, தன்னைக் கண்ட

என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே!

நூல்: பொன்வண்ணத்து அந்தாதி (#1) பாடியவர்: சேரமான் பெருமான் நாயனார் சூழல்: ஒரு பெண், சிவனைப் பார்க்கிறாள், அவர்மீது நேசம் கொள்கிறாள், அப்போது அவள் பாடும் பாடல் இது

தங்கத்தின் வண்ணம் எதுவோ, அதுதான் சிவனின் மேனி வண்ணம்.

சிறந்து விளங்குகின்ற மின்னலின் வண்ணம் எதுவோ, அதுதான் சிவனுடைய அவிழ்த்துவிடப்பட்ட சடையின் வண்ணம்.

வெள்ளி மலையின் வண்ணம் எதுவோ, அதுதான் சிவனின் வாகனமாகிய காளையின் வண்ணம்.

இப்படிப்பட்ட சிவனை நான் பார்த்தபோது என்னுடைய உடல் என்ன நிறத்தை அடைந்ததோ, அதுதான் சிவனின் இயற்கையான நிறம்.

துக்கடா

  • நாலு வரியில் 12 ‘வண்ண’ங்கள், கலர்ஃபுல் பாடல்தான்!
  • காதல் கொண்ட பெண்களின் உடலில் பசலை படரும் என்று சொல்வார்கள். இந்தப் பாடலின் நான்காவது வரி அதைதான் குறிப்பிடுகிறது
  • இந்தப் பாடலின் இன்னொரு விசேஷம், இது ’கட்டளைக் கலித்துறை’ என்ற வகையைச் சேர்ந்தது. மிகச் சவாலான விதிமுறைகளைக் கொண்ட பா வகை இது, ஒவ்வொரு வரியிலும் ஐந்து அடிகள்இருக்கும், இவை தம்மிடையே ‘செப்பலோசை’ எனப்படும் பிணைப்புகளைக் கொண்டிருக்கும்,  மெய்யெழுத்துகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் வரிக்கு வரி மிகச் சரியாகப் பதினாறு (அல்லது பதினேழு) எழுத்துகள்மட்டுமே இருக்கும். சந்தேகமிருந்தால் அசை பிரிக்காத இந்தப் பாடலை எண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள்:
  • பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
  • மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
  • தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
  • என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே!

241/365

Advertisements
This entry was posted in இலக்கணம், காதல், சிவன், பக்தி, வர்ணனை. Bookmark the permalink.

One Response to வண்ணமயம்!

  1. amas32 says:

    பால் வண்ணம் பருவம் கண்டு
    வேல் வண்ணம் விழிகள் கண்டு
    மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
    என்ற கண்ணதாசனின் பாடல் என் நினைவுக்கு வருகிறது.
    இந்த பாடலிலும் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன் என்று வரும்.

    சிவனின் மேல் காதல் கொண்ட பெண் பொன்னார் மேனியனே என்று உருகுவதில் வியப்பில்லை. மின்னார் செஞ்சடை என்றும் சுந்தரர் சொல்வது போல இந்த பெண்ணும் //மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை// என்கிறாள். காளையின் நிறமும் வெள்ளி மலையின் வண்ணம். காதலில் வாடிய அவள் பசலை நோய் கண்டு அவ்வண்ணமே தான் இறைவனின் உண்மை நிறம் என்கிறாள்!

    சேரமான் பெருமான் நாயனார் மிகவும் அழகான பாடலை நமக்கு அளித்துள்ளார்.

    நன்றி சொக்கரே!

    amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s