கற்பு எனும் தாழ்ப்பாள்

நீண்ட கமலத்தை நீலக் கடை சென்று

தீண்டும் அளவில் திறந்ததே, பூண்டது ஓர்

அன்பின் தாழ்கூந்தலாள் வேட்கை அகத்து அடக்கிக்

கற்பின் தாழ் வீழ்த்த கதவு.

*

உய்ஞ்சு கரை ஏற ஒட்டுங்கொல் ஒண் தொடியாள்

நெஞ்சு தடவு நெடும் கண்கள், விஞ்சவே

நீண்டதோ அங்ஙனே இங்ஙனே நீண்மலராள்

ஆண்ட தோள் மன்னன் அழகு.

நூல்: நளவெண்பா

பாடியவர்: புகழேந்தி

சூழல்: நளனை முதன்முறையாகப் பார்க்கிறாள் தமயந்தி. அப்போது அவளுடைய நிலைமையைச் சொல்லும் பாடல்கள் இவை

நளனின் கண்கள் தாமரை போன்றவை. நீண்ட கூந்தலைக் கொண்ட தமயந்தியின் கண்கள் நெய்தல் மலர் போன்றவை.

அன்னம் நளனைப் பற்றிச் சொன்னதுமுதல், அவன்மீது தமயந்திக்கு அளவில்லாத ஆசை பொங்கியது. ஆனால் அதையெல்லாம் மனத்துக்குள் அடக்கிவைத்திருந்தாள். கற்பு என்கிற தாழ்ப்பாளைப் போட்டுப் பூட்டிவைத்திருந்தாள்.

ஆனால் இப்போது, நளனுடைய தாமரைக் கண்களை இவளுடைய நெய்தல் கண்கள் பார்த்த அந்த விநாடியில், அன்பின் வேகத்தில் அந்தத் தாழ்ப்பாள் திறந்துகொண்டது.

*

உயர்வான மலரில் அமர்ந்த திருமாலின் அருளைப் பெற்றவன் நளன். ஒளிர்கின்ற வளையல்களை அணிந்த தமயந்தியின் நீண்ட கண்கள் நளனுடைய தோள் அழகையும், மார்பழகையும் ஆவலுடன் தடவிப் பார்த்தன. ஆனால் அப்போதும் அவளுக்குத் திருப்தியில்லை, அங்கும் இங்கும் கண்களை ஓடவிட்டாள், வைத்த கண்ணை எடுக்கமுடியாமல் திணறினாள். இந்த அழகுக் கடலில் சிக்கிய அவளுடைய மனம் எப்படிக் கரை ஏறும்?

துக்கடா

 • முதல் வெண்பாவில் ‘தாழ்’ என்ற வார்த்தை இரண்டு பொருள்களில் வந்துள்ளது. முதலில் தாழ்கூந்தல், அதாவது தாழ்ந்து தொங்கும் நீளமான கூந்தல், அடுத்து, கற்பின் தாழ், அதாவது கற்பு என்கிற தாழ்ப்பாள்
 • அன்பு மிகும்போது, கட்டுப்பாடுகள் உடைந்துவிடும் என்பார்கள், இங்கே ‘கற்பு’ என்ற சொல் அந்தப் பொருளில்தான் வந்துள்ளது. வெட்கம் என்றுகூடப் பொருள் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்
 • இந்த இரு பாடல்களின் வெண்பா வடிவம்:
 • நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று
 • தீண்டும் அளவில் திறந்ததே, பூண்டதோர்
 • அன்பின்தாழ் கூந்தலாள் வேட்கை அகத்தடக்கிக்
 • கற்பின்தாழ் வீழ்த்த கதவு
 • *
 • உய்ஞ்சு கரையேற வொட்டுங்கொல் ஒண்தொடியாள்
 • நெஞ்சு தடவு நெடுங்கண்கள், விஞ்சவே
 • நீண்டதோ அங்ஙனே இங்ஙனே நீள்மலராள்
 • ஆண்டதோள் மன்னன் அழகு

239/365

Advertisements
This entry was posted in காதல், நளவெண்பா, வர்ணனை, வெண்பா. Bookmark the permalink.

42 Responses to கற்பு எனும் தாழ்ப்பாள்

 1. சுப. இராமனாதன் says:

  இந்த வா….ரம்

  உடல் அங்கங்கள் வா…ரம்.

  🙂

 2. சுப. இராமனாதன் says:

  தாழ் என்ற வார்த்தையைப்பற்றி யோசிக்கும்போது தோன்றியது:

  1. மற்ற எழுத்துக்களைக் காட்டிலும் ‘ழ்’ என்ற எழுத்தின் பயன்பாடு தமிழில் மிகக்குறைவு என்று நினைக்கிறேன். சரியா?

  வாழ், வாழ்க்கை….
  தாழ்
  கூழ்
  தமிழ்
  அமிழ்து
  மீழ் (= மீட்டு, மீண்டு வா)
  கீழ்
  வீழ், வீழ்ந்து,…
  காழ்ப்பு (= காழ்ப்புணர்ச்சி)
  … ???

  2. தமிழ், மலையாளம் தவிர வேறேதேனும் மொழிகளில் ‘ழ’ பயன்பாடு உள்ளதா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

  • சுப. இராமனாதன் says:

   மேலும் சில:
   சீழ்
   பாழ் (= வீண்)
   ஊழ் (ஊழ்வினை, ஊழல்)
   யாழ், யாழ்ப்பாணம்

  • anonymous says:

   அசத்தலான கேள்வி:)
   தமிழுக்கே உரிய எழுத்து = ழ ன்னு அடிக்கடி சொல்லிக்குவோம்-ல்ல?

   “ழ” உள்ள மொத்த தமிழ்ச் சொற்கள் சுமாரா எவ்ளோ இருக்கும்?

   இந்தக் கடினமான கேள்வியை, கவிஞர் மதன் கார்க்கி கிட்ட முன்பு கேட்டிருந்தேன்! ஐயோ, என்னைக் கேட்டா எப்பிடி?-ன்னாரு!
   Boss, can u do a simple sql query on your agaraadhi.com site & get me a count of ழ?ன்னு கேட்டேன்!
   Wow, using technology that is easyன்னு, உடனே கண்டுபுடிச்சியும் சொன்னாரு!
   Here = http://www.agaraadhi.com/dict/images/Character_Distribution_Stats.jpg

   This is only an approximation!
   Of the 600,000 words he has in his collection, almost 12,000 words have ழ!
   = 2%
   —-

   ஸ்டீல், ஈயம், பித்தளை நிறைய கிடைக்கும்! ஆனா, தங்கம், வைரம்?
   % கம்மி தான்! அதான் அதுக்கு மதிப்பு!
   அதே போலத் தான் தமிழில் “ழ”!!

   தொல்காப்பியரும் இதையே சொல்கிறார்!
   எப்பமே மொழி முதலில் வரக்கூடிய சொல்லுக்கு % அதிகம்!
   ழ-கரம் மொழி முதல் வாரா! அதான்!

   • சுப. இராமனாதன் says:

    அருமையான பதில் அனானிமஸ். அந்தப் பயன்பாடு புள்ளியியல் விவரம் கிடைத்தமை இனிமையான ஆச்சரியம். ஆயினும் ‘ழ்’ என்ற எழுத்து (கவனிக்கவும்: ‘ழ’ அல்ல, ‘ழ்’) 0.12% பெற்று, வே, ஏ, மூ, நா, தை, வெ, ஊ, வ் போன்ற எழுக்களைக்காட்டிலும் முன் நிற்பது, மதன் கார்க்கியின் அகராதி முழுமை அடையவில்லையோ என்ற ஐயம் எழுப்புகிறது.

    மேலும் சில:
    குமிழ்
    சிமிழ்

   • anonymous says:

    மதன் கார்க்கி, ஏதோ இந்த அளவுக்காவது செய்தாரே! அதுக்கு என் தனிப்பட்ட வாழ்த்து!
    இன்னும் பல சொற்களை pulveli.com இல் இருந்து கேட்டிருக்காரு! கொடுக்கணும்!
    —-

    //கவனிக்கவும்: ‘ழ’ அல்ல, ‘ழ்’ – 0.12% பெற்று, வே, ஏ, மூ, நா, தை, வெ, ஊ, வ் போன்ற எழுக்களைக்காட்டிலும் முன் நிற்பது, மதன் கார்க்கியின் அகராதி முழுமை அடையவில்லையோ//

    He has 6 lakh words so far! May be, not fully complete, but an exhaustive one!
    ழ்-பயன்பாடு தமிழில் அதிகம்!
    வே-வை விட முந்தி இருப்பதால் ஐயுறத் தேவையில்லை!
    for example, “வே-ங்கை” is not repeatable! But ஊ’ழ்’ is! ஊழ், ஆகூழ், போகூழ், பாகூழ், தீயூழ், நல்லூழ் etc etc! May be thatz why that 0.12% (coz they are taken as different words)

  • anonymous says:

   There are very few songs in tamizh which has “ழ” throughout
   ஆழிமழைக் கண்ணா-ன்னு கோதையின் தமிழ் மாலை; அதுல “ழ” 11 முறை வரும்!
   Count & see! http://iniyathu.blogspot.com/2005/12/blog-post_18.html

   அவ அப்பா குழல் முழைஞ்சு குமிழ்த்து-ன்னு பாடின பாட்டில் 10 முறை வரும்! இவ, அப்பனை மிஞ்சிட்டா:)

   • anonymous says:

    மாணிக்கவாசகப் பெருமான், 8 முறை “ழ” பயன்படுத்துவாரு! – கோழி சிலம்ப என்கிற பதிகத்தில்!

    ஆண்டாள்-ன்னு சொன்னா, கூடவே இதையும் சேர்த்துச் சொல்லியே ஆகணும் என்பது, என் மீது ஏற்றப்பட்டுவிட்ட ’உள்ளுக்குள் உள்ளார்ந்த’ எதிர்பார்ப்பு:)
    இருந்தா, நானே கட்டாயம் சொல்வேன்! ஆனா வலிந்து சொல்வது என்பது…..
    ஏனோ, சமய எதிர்பார்ப்புகள் கடந்து, தமிழைத் தமிழாக நான் இன்புறும் நாள் எந்நாளோ? முருகா!
    —–

    முக்கியமான ஒன்னை மறந்துடப் போறேன்! = ழகரம்!
    திருக்குறளில் எல்லா அதிகாரத்திலும் ஒரு ழ-கரமாச்சும் இருக்கும்!

    ழ-கரம் இல்லாத அதிகாரமே குறளில் இல்லை-ன்னு நினைக்கிறேன்! This is my observation; But have to validate it! Can u guyz also check? Thanks:)

  • ஆனந்தன் says:

   ‘மீண்டு’ என்ற கருத்துடைய சொல் ‘மீள்’ என்பதாகும். ‘மீழ்’ அல்ல.
   உ+ம்: “மீளா அடிமை உமக்கே ஆளாய்”.
   இன்னும் பல உதாரணங்களைத் தேவார, திருவாசகங்களிற் காணலாம்.

   • சுப. இராமனாதன் says:

    ஆமாம்-ல? நன்றி ஆனந்தன். தவறிலிருந்து ‘மீண்டு’ விட்டேன். 🙂

 3. anonymous says:

  //தமிழ், மலையாளம் தவிர வேறேதேனும் மொழிகளில் ‘ழ’ பயன்பாடு உள்ளதா?//

  கன்னடத்தில் ற & ழ, முன்பு இருந்துச்சி! ஆனா இப்போ ழ->ள ஆயிருச்சி!

  பழைய கன்னட எழுத்து முறைக்கு ஹலே கன்னடம்-ன்னு பேரு!
  இப்போ இருக்கும் கன்னட முறை = ஹொச கன்னடம்! அதில் “ழ” வழக்கொழிந்து போயிருச்சி!
  —-

  தெலுங்கில் ற உண்டு! ஆனா ழ இல்லை, ழ->ட ஆயிருச்சி!

  ற-வை doubleR pronunciationஇல் ஒலிப்பாங்க! தமிழில் TRa ன்னு ஒலிக்கிறோம்!
  GuRRam=குதிரை
  அவங்க குர்ர்ரம்-ன்னு ஒலிப்பாங்க! ஆனா நாம, அதே ற ஒலியைப் பயன்படுத்தினா குற்றம்-ன்னு ஆயீரும்:)
  யானைக்கு எர்ரம்-ன்னா குதிரைக்கு குர்ர்ரமா?-ன்னு பழமொழியும் இதுல இருந்து தான் வந்துச்சி!:)

  மலையாளத்தில் ற,ழ ரெண்டுமே உண்டு!=ஆலப்பு’ழா’, அம்புலப்ப”ழா’

  விளிக்கு, பறையும்-ன்னு தூய தமிழ்ச் சொற்கள், தமிழில் விட மலையாளத்தில் இன்னிக்கும் காணலாம்:))
  தமிழிலிருந்து மிகவும் பிற்பட்டுக் கிளைத்த மொழி ஆதலால், பலவும் தக்க வச்சிக்கிட்டு இருக்கு!

  ஆனா, அவிங்க கிட்டச் சொன்னா ஒத்துக்க மாட்டாங்க!:)
  நீங்க, அவங்க இலக்கியத்தில் இருந்தே, வள்ளத்தோள் கிட்ட இருந்தே தரவு குடுத்தாலும் சரி….தரவாவாது, நறவாவது….ஒத்துக்கிட மாட்டாங்க!
  பரவாயில்லை! அதீத பாசம், அதனால் அப்படி! மனசுக்குப் பிடிச்சதே உண்மை:)

  சிங்களத்தில் ற,ழ இருக்கா-ன்னு தெரியல! (மலையாளத் தொடர்பினால் இருக்குமோ?)

  • GiRa ஜிரா says:

   நல்ல செய்திகள். நன்றி.

   ஒரு சிறு திருத்தம். குதிரைக்கு குர்ரம்னா யானைக்கு அர்ரமா என்பதுதான் பழமொழி.

   தெலுங்கில் குதிரை = குர்ரம். அடுத்து யானைக்கு அர்ரமா இருக்குமோன்னு யோசிப்பதைக் கிண்டலடிப்பது போன்ற பழமொழி.

   ஒன்றுக்கு ஒத்தது. இன்னொன்றுக்கு ஒவ்வாமல் போகலாம் என்பது உட்பொருள்.

   சுட்டிக் காட்டியதில் பிழையிருந்தால் மன்னிக்கவும்.

   • anonymous says:

    தகவல் பிழைகளை யாரும் சுட்டிக்காட்டலாமே, ராகவா!
    ஒரு புத்தகத்தில் தான் காட்ட முடியாது! அதுக்குத் தானே இது போன்ற நற்றமிழ்த் தளங்கள்! மிக்க நன்றி!

    தெலுங்கில், குதிரை=குர்ரம் என்றே சொல்லி இருந்தேன்!
    ஆனா பல இடங்களில் ஏனோ யானையை முதலில் வைத்துப் பழமொழியை (தவறாக) புழங்குகிறார்கள்!

    ‘தெலுங்கில், குதிரைக்கு=குர்ரம் ன்னா, யானைக்கு=எர்ரம் ன்னு இல்லாத சொல்லைச் சொல்லுவாங்களோ?’ என்பதே இதன் கருத்து அல்லவா? நீங்க சொல்வது மிகவும் சரி ராகவா! நன்றி!

 4. anonymous says:

  இன்னொன்னும் சொல்லணும்!
  வடமொழி/ அதன் குடும்ப மொழிகளில் “ழ” இல்லை!

  ஆனா ஒரு வேதனை என்ன-ன்னா, தென்மொழிகளோடு இணையும் போது, வடமொழி, “ழ”வை, ள/ட ன்னு மாத்தீரும்!:(
  *தமிழம் = திரமிடம் (திராவிடம்)
  *திகழ் தசக் கரம் = திகட சக்கரம்

  எப்படி நாம, நம்ம கிட்ட ஜ இல்லீன்னாலும், கிரந்த எழுத்தாய் ஜ-வை வைத்துக் கொள்கிறோமோ…
  அது போல ழ-வையோ, ற-வையோ வடமொழியில் வைத்துக் கொள்ளவில்லை!
  Always, the adjusting people have to adjust:)) muruga!!!

 5. GiRa ஜிரா says:

  ஆயிரங்கோடி முறை சொன்னாலும் வெண்பாவுக்கு ஒரு புகழேந்தி. அவன் புகழ் ஏந்திச் சொல்வதில் எனக்கும் பெருமகிழ்ச்சி.
  யார் இந்த நளன்?

  நளவெண்பா என்று தமிழில் ஒரு நூல் வரும் அளவுக்குப் பிரபலமானவனா?
  ஊரும் உலகமும் தெய்வம் என்று நம்பித் தொழும் ஆண்டவனின் அவதாரமா?
  நளனைப் பற்றி வடமொழியில் ஏதேனும் நூல் இருந்திருந்து அதைத் தமிழ்ப் படுத்தினாரா புகழேந்தி?

  மூன்று கேள்விகளுக்கும் ஒரே விடை “இல்லை” என்பதே.

  சரி. அப்படியானால் நளனைப் பற்றி முந்தைய குறிப்புகள் எங்கு இருக்கின்றன?

  வேதவியாசர் எழுதிய மகாபாரதத்தில் வனபர்வத்தில் இருக்கின்றன.

  வீடு போனது. நாடு போனது. மானம் போனது. தருமன் என்கின்ற பேர் போனது. உறவு போனது. இப்படி எல்லாம் போனது என்று ஆனது தருமனுக்கு. அதற்குப் பிறகு அவன் தம்பியரோடும் மனைவியோடும் போனது கானகத்திற்கு.

  சூது என்பது வெறும் விளையாட்டு அல்ல. அந்த விளையாட்டிற்குள் ஒளிந்திருக்கும் சூழ்ச்சிக்கும் சூது என்றுதான் பெயர்.

  அப்படிச் சூதடியதன் பலன்? பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம். ஓராண்டு மறைவாசம்.

  இந்த முடிவை தருமன் ஏற்றுக் கொண்டாலும் அவனுக்கு நிம்மதியில்லை. “போனதே போனதே” என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

  ஒருத்தனுக்கு கஷ்டம் வந்தது. அவன் கிட்ட போய் என்ன சொன்னாலும் சமாதானம் ஆக மாட்டான். ஆனா அவன் கிட்ட போய், “இங்க பாருப்பா. ஒனக்கோ இத்தோட போச்சு. அவனுக்கு என்னாச்சு தெரியுமா? மொத்தமா கொத்தோட போச்சு. இதுவும் நல்லதுக்குன்னு நெனச்சுக்கோன்னு”னு சொன்னா ஒரு ஆறுதலா இருக்கும்.

  அதைத்தான் தருமனிடம் பிருகத்வாசவர் சொல்கிறார். இதுதான் நளன் கதை எழுத்த்தில் சொல்லப் பட்டதாகத் தற்போது கருதப்படும் காட்சியமைப்பு.
  தமிழில் ஒரு காப்பியம் எழுத வேண்டும் என்று புகழேந்தி நினைத்ததில் வியப்பில்லை. புகழேந்தியைப் போன்ற புலவன் நினைக்காமல் இருந்திருந்தால்தான் வியப்பு. ஆனால் முழுக்க முழுக்க வெண்பாக்களைக் கொண்டு எழுதுவது என்றால்? அதையும் முடித்துக் காட்டினார் புகழேந்தி. ஆகையால்தான் அந்த “வெண்பா” என்ற சொல் நூலின் பெயரோடு சேர்ந்து “நளவெண்பா” என்று ஆனது.

 6. ஆனந்தன் says:

  எந்தச் சந்தர்ப்பங்களில் ‘ழ’ வரவேண்டும், எந்தச் சந்தர்ப்பங்களில் ‘ள அல்லது ல’ வரவேண்டும் என்று தொல்காப்பியத்திலோ அல்லது நன்னூலிலோ விதிகள் கூறப்பட்டுள்ளதா? யாராவது கற்றவர்கள் எடுத்துரைக்கும்படி வேண்டுகிறேன்.

  • anonymous says:

   என்ன ஒரே கேள்வி மயமா இருக்கு?:))

   தொல்காப்பியர், சொல்லதிகாரம்-பெயரியலை ஆரம்பிப்பதே இப்படித் தான்=”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே”

   நீங்க “டொண்டொட்ய்ன்”, “டொழ்டொழ்”-ன்னு என்ன வேணும்ன்னாலும் சொல்லிக்கலாம்; அதுக்கும் பொருள் இருக்கு! – ஆனா உங்க அளவில் மட்டுமே!:)
   நீங்க, உங்க மனசுக்கு, ஏதோ ஒரு பொருளைக் குறிக்கத் தான் அதைச் சொல்லி இருக்கீக! அதனால்…”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே”-உங்க அளவில்:)

   ஆனா, அது உலக வழக்குக்கு வரணும்-ன்னா? = It has to fit into a standardized framework, so that it will be std for everybody!

   * That std framework for tamizh = tholkaapiyam!
   எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே-ன்னு ஒரு Visionary போலத் துவங்கும் தொல்காப்பியர், படிப்படியா….standards வகுக்கின்றார்!
   —-

   //எந்தச் சந்தர்ப்பங்களில் ‘ழ’ வரவேண்டும், எந்தச் சந்தர்ப்பங்களில் ‘ள அல்லது ல’ வரவேண்டும்//

   இதுக்கு எந்த விதியும் கிடையாது!
   இது அந்தந்தச் சொல்லின் தோற்றம்-புழக்கம் பொருத்தது!

   தமிழில் 10லட்சம் சொல் இருக்கு-ன்னு பேச்சுக்கு வச்சிப்போம்! ஒவ்வொரு சொல்லுக்கும் விதி எழுத முடியுமா?
   இயலாத காரியம் மட்டுமல்ல! புதுச் சொற்கள் உருவாவதை அது தடை செய்து விடும் கூட! Tholkaapiyam is very democratic!

   *ஒரு சொல், இன்னொரு சொல்லோடு எப்படிச் சேரும்? (புணர்ச்சி)
   *அ-ஃ, க-ன = எழுத்தை எப்படி ஒலிக்கணும்? (pronunciation)
   *உயர் திணை/அஃறிணையா? எழுவாய்/பயனிலையா? உருபா?

   *என்ன வேற்றுமை? (2ஆம்வேற்றுமை to 7ஆம் வேற்றுமை)
   *பெயர், வினை, இடை, உரி
   *ஒருமை, பன்மை எப்படி?
   – இதெல்லாம் தான் தொல்காப்பியம் பேசும்! How the letters & words collectively form and interact with each other!
   If a new word is formed/evolved, that also, has to follow these standards.

   அலுவலகத்தில் யாரும் புதுசாச் சேரலாம்! ஆனா சேர்ந்தா, இதான் vision, mission, code of conduct ன்னு இருக்கு-ல்ல?
   யார் யாரு பணியாளர்-ன்னு அத்தனை பேரையும் code of conduct-இல் எழுதி வைக்க முடியாது-ல்ல? அதே போலத் தான்:)

  • anonymous says:

   ஆனா சில சிறப்புச் சொற்களை, எடுத்துக்காட்டா, தொல்சு பேசுவாரு!
   உ.ம் = கருப்பு-கறுப்பு
   கறுத்தல் என்ற வினையின் அடிப்படையில் எழும் பெயர்களைக் காட்ட இப்படி ஒரு உத்தி!

   அதே போல், சில “ழ”கரச் சொற்களையும் பேசுவாரு!
   மதில்-மதிள் ன்னு சொல்லலாம்! ஆனா மதிழ்-ன்னு சொல்லலாமா-ன்னு எல்லாம் பேச மாட்டார்!:)
   அது வழி வழி வந்த பயன்பாடு/ மரபு பொருத்தது! ‘என்மனார் புலவர், என்மனார் புலவர்’-ன்னு அடிக்கடிச் சொல்லுவாரு!
   —-

   உதாரணத்துக்கு எடுத்துக்குங்க….
   * நீங்க சொன்ன மீள்! அதை மீழ்-ன்னு சொல்லும் வழக்கம் இல்லவே இல்ல! இலக்கியத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது!
   * ஆனா தாழ்-தாள்! ரெண்டுமே பயன்பாடு! இலக்கியங்களில் பல இடங்களில் கிடைக்கும்!

   ஓலையைப் படியெடுக்கும் போது தப்பா எடுத்துட்டாங்க-ன்னு சொல்லும் வழக்கம் இப்போ மிகுந்துருச்சி:)) ஆனா
   * தம்மதி தான் திறப்பர் தாள் = புறப்பொருள் வெண்பா மாலை
   * இன்பம் திறக்கும் தாள் = சீவக சிந்தாமணி
   * மணிக்கதவம் தாள் திறவாய் = ஆண்டாள்
   -ன்னு நிறைய…..இவை அத்தனையும் ஒருத்தரேவா படி எடுத்துருப்பாங்க, எழுத்துப் பிழை செய்ய?:)

   இன்னும் பல சுவடிகளிலும், தாள்-ன்னே புழங்கி வரும்!
   மேலும் நிகண்டுகள், தாள்=மூட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும்-ன்னு சொல்லும்! (Pin that holds a tenon in a mortise)

   So, இவையெல்லாம் தமிழில் இரட்டைப் பயன்பாடுகள்!
   ‘தாழ்’-ன்னும் சொக்கர் குடுத்த நள வெண்பா சொல்லுது பாருங்க! வேறு இலக்கியம்/நிகண்டுகள் ‘தாள்’-ன்னு சொல்வதையும் பாருங்க!
   So, வைரமுத்து எழுதின பூங்கதவே தாள் திறவாய் – சரியான பயன்பாடே:))

   கொஞ்சம் பொறுமையோடு அணுகினாத் தான் பிடிபடும்!
   வீட்டுக்கு ஒட்டடை அடிக்கிறேன்-ன்னு, ஒட்டடையோடு சேர்த்து, நல்ல பொருளையெல்லாம் அடிச்சீறக் கூடாது!:)

   இலக்கணம்-இலக்கியம் ரெண்டும் இணைந்து செல்பவை!
   *இலக்கணம் = Code of Conduct
   *இலக்கியம் = Actual Employee
   🙂

   • ஆனந்தன் says:

    உங்கள் தெளிவான பதிலுக்கு நன்றி! எனக்குத்தான் குழப்பம் அதிகரித்திருகிறது!

    தாள்-தாழ் இரண்டுமே சரியென்றால், அவரவர் தாங்கள் விரும்பியபடி எழுதிவிடலாமே? ல, ள, ழ மற்றும் ர, ற, ன,ண,ந வேறுபாடுகள் தமிழில் இருப்பதில் அர்த்தமில்லாமற் போய்விடுமே? (இதுபோலவே, கருப்பு-கறுப்பு, உழுந்து-உளுந்து, பவழம்-பவளம் எனபவையும்) எப்படியும் எழுதலாம் என்றால், இலக்கணம் எதற்கு? இணையத்தில் எழுத்துப் பிழையாக எழுதுபவர்கள்கூட எல்லாம் “அதுவும் சரி, இதுவும் சரி” என்றல்லவா கூறத் தொடங்கிவிடுவார்கள்?

    இரண்டு சொற்களும் சொற்ப அள்விலாவது வேறுபட்ட காரணங்களினால் உருவானதென்றால் அது பொருத்தமானது. அதைவிடுத்து, தாள்-தாழ் இரண்டுமே சரியென்றால் அதை ஒரு விதிவிலக்காக அல்லது ஒரு anomaly ஆக எடுத்துக்கொள்ளலாமா?

   • anonymous says:

    //ல, ள, ழ மற்றும் ர, ற, ன,ண,ந வேறுபாடுகள் தமிழில் இருப்பதில் அர்த்தமில்லாமற் போய்விடுமே?//

    🙂
    Yes, Thatz the risk involved!

    //இணையத்தில் எழுத்துப் பிழையாக எழுதுபவர்கள் கூட எல்லாம் “அதுவும் சரி, இதுவும் சரி” என்றல்லவா கூறத் தொடங்கி விடுவார்கள்?//

    🙂
    உண்மை! அதுவும் நடக்கிறது!

    ஆனால் ‘அதுவும் சரி-இதுவும் சரி; இதுவே சரி-அது சரியல்ல’ என்று கூறுபவர்கள்…..வெறுமனே சொல்லி விட்டுப் போய்விட முடியாது!
    தங்கள் கூற்றுக்கு, தக்க ஆதாரம் (அ) தரவு குடுத்தே அப்படிச் சொல்ல முடியும்! சொல்ல வேண்டும்!
    தரவு குடுத்துச் சொன்னால் தான் ஏற்றுக் கொள்வோம் என்று நுகர்வோரும் விழிப்பா இருக்கணும்:)

    கவலைப்படாதீர்கள்! உங்கள் ஆதங்கம் புரிகிறது! அதனால் தான் தமிழ் ஆர்வலர்கள், எதிர்க் கருத்தை முன் வைக்கிறார்கள்!
    Atleast ppl will know, that there is a dispute and some usage is not correct!
    —-

    //இதுபோலவே, கருப்பு-கறுப்பு, உழுந்து-உளுந்து, பவழம்-பவளம் எனபவையும்) எப்படியும் எழுதலாம் என்றால், இலக்கணம் எதற்கு? //

    Good Question!
    Take the case of English! Color-Colour; Ton-Tonne, Disc-Disk, Yogurt-Yoghurt
    http://en.wiktionary.org/wiki/yoghurt
    இப்படி அவரவர் எழுதினா, இலக்கணம் எதுக்கு-ன்னு கேட்க முடியுமா?:)

    இவையெல்லாம் இரட்டைப் பயன்பாடுகள்! இரண்டும் சரியே!
    ஒரு இலக்கண நூல், பத்து கோடிச் சொல்லையும், ஒவ்வொரு சொல்லாச் சொல்லித் தர முடியாது!
    அது பொதுவான விதிமுறைகளை மட்டுமே பேசும்!

    அதுக்குத் தான் இலக்கியம்/அகராதி இருக்கு! இலக்கியத்தில் இப்படி இரட்டைப் பயன்பாட்டுச் சொற்களைப் பார்க்கலாம்!
    To summarize…
    * வாழைப் பழம் = வாளப் பளம்-ன்னு எழுதினாச் சரியா?
    * தவறு!
    * எப்படித் தவறு-ன்னு சொல்றீங்க? தொல்காப்பியத்தில் இருக்கா? = தொல்காப்பியம் இதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காது!
    * ஆனா எந்தவொரு இலக்கியத்திலோ, அகராதியிலோ, “வாளப்பளம்” இருக்காது!
    * ஆனா இலக்கியத்தில்/அகராதியில், “தாள்-தாழ்” இருக்கும்!

    இப்போ புரிகிறது அல்லவா?
    *Grammar states only Framework
    *If a specific word is in doubt, chk literature and/or dictionary
    *DONT jump to conclusions, even if the biggest man on the internet says! Ask for proof/தரவு!:)

   • ஆனந்தன் says:

    உங்கள் அன்பான பதிலுக்கு நன்றி. ல, ள, ழ முதலிய வேறுபாடுகள் எங்கே வரவேண்டும் என்பதற்கு இலக்கணம் இல்லை; சந்தேகம் வரும்போது இலக்கியத்திலிருந்து சான்றுகளை ஆதாரமாக எடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்பது உங்கள் பதில். நன்றி.

    எதிர்காலத்தில், இணைய இலக்கியங்களையோ, சரியாகப் பதிப்பிக்கப்படாத தற்கால இலக்கியங்களையோ எவரும் ஆதாரமாக எடுக்காவிட்டால் சரி!
    (அப்படியே எனது மற்றச் சந்தேகங்களுக்கும் முருகன் விடை தருவார் என்று நம்புகிறேன்!)

 7. GiRa ஜிரா says:

  நளனைப் பற்றிப் பேசினால் நிறைய பேசலாம். தொடர் கட்டுரையே எழுதலாம். ஆகையால் நளனைக் கொஞ்சம் அமைதியாக இருக்க விட்டுவிட்டு பாடலுக்குள் போவோம்.

  இரண்டு கேள்விகளுக்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படியான விடை இன்றும் இல்லை. அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் விடையில் பிழையில்லை. ஏலா மனதில்தான் பிழையுண்டு.

  சரி. அந்த இரண்டு கேள்விகள் என்னென்ன?
  1. காதல் எங்கே தொடங்குகிறது?
  2. கற்பு என்றால் என்ன?

  முதற் கேள்வியில் உண்மையான என்ற சொல்லையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். 🙂

  உண்மையான காதல் எங்கே தொடங்குகிறது?

  எங்கே நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம்?

  கண் (பார்ப்பது), காது (கேட்பது), மூக்கு (நுகர்வது), மெய்(தீண்டல்), வாய்(பேசுவது)

  இந்த ஐந்துமே ஏற்புடைய விடைகளாக இருந்தாலும் ஏற்க முடியாத விடைகளும் ஆகும்.

  கம்ப்யூட்டரில் மௌஸ், மானிட்டர், கீபோர்ட் என்று பல இருந்தாலும் சிபியூ எனப்படுவதுதான் எல்லாவற்றையும் ஆட்டி வைப்பது.

  அது போலக் காதல் உண்டாவது உள்ளத்தில். அப்படி உண்டாவதற்குக் கண்ணும் காதும் மூக்கும், மெய்யும் மற்றும் வாயும் உதவுகின்றன.

  புரியலையா?

  ஒருத்தரப் பத்தி மொதமொதலாக் கேக்குறோம். அது நல்லவிதமா இருந்தா அதையே அப்படியே எடுத்துக்குறோம். பின்னால வேற மாதிரி ஆகும் போது, நல்லவன்னு நெனச்சேனேன்னு சொல்வோம். இத விடக் கொடுமை ஒருத்தரப் பத்தி மொதமொதலாக் கேக்குறப்பவே கெட்டவர்னு கேள்விப்படுறது. முன்னதைக் கூட மாற்றுவது எளிது. பின்னது ரொம்பச் சிரமம்.

  நாம் எத்தனையே பேரைப் பார்க்கிறோம். அவர்களைப் பற்றிக் கேள்விப் படுகிறோம். அவர்களைப் பற்றிப் பேசுகிறோம். அவர்கள் மேல் காதல் வந்து விடுகிறதா? இல்லையே.

  ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். சிறுவயதிலேயே புத்தகப்புழு நான். எதையாவது எடுத்துப் படித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

  அது இளையராஜா இசைக்கோலோச்சிய காலகட்டம். அந்த அளவு விவரம் கூட எனக்குத் தெரியாது. அப்பொழுது ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். கல்கி என நினைவு. அதில் ஒரு திரைப்பட விமர்சனம். என்ன படமென்று நினைவில்லை. அதில் “பாடல்கள் காதில் தெளிவாகக் கேட்பது போல இனிமையாக இருக்கிறதே! ஓ! மெல்லிசை மன்னர் இசையா!”

  இவ்வளவுதான் அதில் எழுதியிருந்தது. ஆனால் மெல்லிசை மன்னர் இசையென்றால் இனிமையாக இருக்கும் என்ற எண்ணம் உள்ளத்தில் வேரூன்றி விட்டது. யார் என்று தெரியாமலே அவரை அரியாசனத்தில் ஏற்றி விட்டேன். விவரம் புரிந்த வயதில் அவர் முப்பதாண்டுகள் தமிழ்ப்பாடல்களை ஆண்டவர் என்று அறிந்து மகிழ்ந்தேன்.

  அதற்காக மற்ற இசையமைப்பாளர்கள் குறைவல்ல. இசை கால மாற்றத்திற்கு ஏற்றவாறு தன்னைக் குறிப்பிட்ட நபர் வழியாக உருவாக்கிக் கொள்ளும் என்பது என் நம்பிக்கை. அதனால்தானோ என்னவோ ஏ.ஆர்.ரகுமான் வந்ததும் உடனடி ரகுமான் விசிறியானேன். கூடப்படித்த நண்பர்களோடு ரகுமான் – ராஜா சண்டையும் போட்டிருக்கிறேன். அது ஒரு காலம். 🙂 இளையராஜாவும் ஒரு இசை மேதை. மறுக்க முடியாத கூற்று.

  ஆக எங்கோ படித்த ஒரு சொல் ஒரு இசையமைப்பாளர் மீது பற்றை உண்டாக்க முடியுமானால், பருவ வயதில் ஒருவனைப் பற்றி நல்லபடியாக ஒரு பெண் கேள்விப் பட்டால்? ஒரு நல்ல எண்ணம் அவனைப் பற்றி உண்டாகும் அல்லவா!

  அதுதான் நடந்தது தமயந்திக்கு. முதலில் இருந்தது என்னவோ நல்ல எண்ணம்தான். கோவலனைத் திருமண ஊர்வலத்தில் பார்த்த பெண்களுக்கு எல்லாம் உண்டானது இப்படியான எண்ணம்தான். “அடடா! பாத்தா முருகன் மாதிரி இருக்கான். மாப்ளன்னா இப்பிடியிருக்கனும்”. இந்த எண்ணம் காதல் அல்ல. இது விருப்பம்.

  அது போல இருந்த ஒரு விருப்பம் காதலாக மாறியது நாகா எடுத்துக் காட்டியிருக்கும் இந்தப் பாடலில்தான்.

  சரி. இரண்டாவது கேள்விக்கு வருவோம். கற்பு என்றால் என்ன?

  இந்தக் கேள்விக்கு வெளிப்படையாக விடை சொன்ன முதல் புலவர் இளங்கோவடிகள். அந்த விடையையும் ஒரு பெண்ணின் வாயில் இருந்து வரவழைக்கிறார்.

  கற்பு என்பது ஒரு பொருள் குறிக்கும் சொல் அல்ல. அது பல்பொருட் சொல்.

  ”கற்பு என்பது அறத்தின் சீற்றம்” என்கிறார் இளங்கோவடிகள்.

  புகழேந்தியும் கிட்டத்தட்ட அதையே தான் சொல்கிறார்.

  என்னடா பொருந்தாமல் இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? விளக்குகிறேன். கேளுங்கள்.

  அறம் என்பது என்ன? அறம் என்பது நன்மை. பெருமை. அருமை. இப்படிச் சிறப்பானவை அனைத்துமே அறத்தில் அடங்கும்.

  கண்ணகி அறத்தோடு நீதி கேட்டாள். அது கற்பாயிற்று.
  தமயந்தி அறத்தோடு காதல் கேட்டாள். அது கற்பாயிற்று.
  இதில் இரண்டு பேருமே கற்பு உடம்பில் உள்ளது என்று சொல்லவில்லை. ஆனால் இன்றைய நிலை என்ன? நம் பண்பாடு ஒன்று சொல்லிக் கொடுத்திருக்க, ஏன் இப்படி மாறிப் போனோம்? நிறைய சிந்திக்க வேண்டிய கேள்விகள். ஆகையால் விட்டுவிடுவோம்.

  இப்படி இரண்டு கேள்விகளுக்கு மிக எளிமையாக விடை சொல்லியிருக்கிறார் புகழேந்தி.

 8. GiRa ஜிரா says:

  ரெண்டு கல்லு ஒன்னோட ஒன்னு மோதுனா என்னாகும்? கீறல் விழும்.

  ரெண்டு மரக்கட்டை ஒன்னோட ஒன்னு மோதுனா என்னாகும்? உடையும்.

  ரெண்டு இரும்புக் கம்பிகள் ஒன்னோட ஒன்னு மோதுனா என்னாகும்? நெளியும்.

  ரெண்டு பூக்கள் ஒன்னோட ஒன்னு மோதுனா? ஒன்னும் ஆகாது. ரெண்டு பூவும் அப்படியே இருக்கும்.

  அதுதான் தாமரைக் கண்ணனும் நெய்தல் மலர்க்கண்ணியும் பார்க்கும் காட்சி. இரண்டும் குளிர் மலர்கள். நீருக்குள் இருப்பவை. அதுபோல இருவரின் உள்ளமும் காதலில் ஊறி ஊறிக் குளிர்ந்தவை. அந்தக் குளிர்ச்சி பார்வை வழியாகப் பரிமாறி அன்பு முற்றி இதயக் கதவு திறந்தது.

  இந்த அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கிளாள் காட்சியை விரும்பாத கவிஞனே இல்லை போலிருக்கிறது. புகழேந்தி மட்டும் என்ன குறைவா! அவன் வகையில் எடுத்துச் சொல்லி அழகுபடுத்தி விட்டான்.

  இன்னொன்று நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தாழ்-தாழ் ஒப்பீடு.

  ஏன் தாழ் கூந்தல் என்று புகழேந்தி சொன்னார் என்று யாராவது சொல்வார்கள் என்று ஏதிர்பார்த்தேன். யாரும் சொல்லாததால் நானே முந்திரிக்கொட்டை போல சொல்லிவிடுகிறேன்.

  இந்தக் காட்சியே மேல்மாடக் காட்சி. தமயந்தி மேலே இருக்கிறாள். கீழே தேரில் நளன்.

  அப்போது அவள் பார்வை எந்தத் திசையை நோக்கி இருக்கும்? கீழ்நோக்கிதானே!

  மலைநீர் கீழ் வீழ்ந்து அருவியாவது போல தமயந்தியின் பார்வை கீழ் நோக்கக் காதல் மலர்ந்தது.

  அற்பின்கமழ் கூந்தலாள் என்றாலும் இலக்கணம் பொருந்துமல்லவா? கூந்தல் கீழ் நோக்கி வளர்வது இயல்பானது. அது போல கண்ணொடு கண் நோக்கி வரும் காதலும் இயல்பானது.

  கூந்தல் மட்டுமல்ல, பார்வையும் காதலும் கற்பும் மேல்மாடத்திலிருந்து இறங்கி வருகின்றது என்பதற்குத்தான் தாழ்கூந்தலாள் வேட்கை-கற்பின் தாழ் வீழ்ந்த கதவு.

  ரொம்ப எழுதுறேனோ! ரொம்பவே ஆழமா உழுகுற மாதிரி இருக்கு! 🙂

  • anonymous says:

   //ரொம்ப எழுதுறேனோ! ரொம்பவே ஆழமா உழுகுற மாதிரி இருக்கு!//

   இல்லை!
   ஆழ உழுதால் தான் முத்துக்கள் கிடைக்கும்! மேலாக்க, சிப்பி/கிளிஞ்சல்களே கிடைக்கும்!
   ரெண்டுமே வேணும்! எனவே ஆழ’வும்’ உழுங்கள்!

   நீங்கள் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்! நாங்கள் தொழுதுண்டு பின் செல்பவர்!

   • GiRa ஜிரா says:

    மிக்க நன்றி.

    யானைக்குத் தெலுங்கில் யேனிகா.

    யானையை முன்னால் வைத்துச் சொல்வது தவறு.

    “குதிரைக்கு குர்ரம்னா யானைக்கு யர்ரமா” என்று சொல்வதே சரியான பழமொழி.

 9. amas32 says:

  கண்ணும் கண்ணும் நோக்கியே கற்பு பரிபோயவிடுகிறது தமயந்திக்கு. அப்போ அந்த பார்வையின் வீர்யம் எவ்வளவு காதலுடன் இருந்திருக்க வேண்டும்!
  மேலும் அவள் அவன் அழகில் மூழ்கி திளைக்கிறாள். அதனால் காதலில் இருந்து அவளால் விடுபட முடியவில்லை.

  கற்பு என்பது உள்ளத்தில், எண்ணத்தில் தான் உள்ளது. வெறி நாய் போல ஓர் ஆண் பெண்ணின் மறுப்பை மீறி அவளை தன் காமப் பசிக்கு இரை ஆக்கினால் அந்தப் பெண்ணின் கற்பு பறிபோனதாக எப்படி கொள்ள முடியும்? அது ஒரு விபத்து. அதுவே ஒரு ஆணோ பெண்ணோ பிறன்மனை நோக்கினால் நோக்குபவரின் கற்பு நிச்சயமாக பறிபோகிறது.

  amas32

  • anonymous says:

   //கற்பு என்பது உள்ளத்தில், எண்ணத்தில் தான் உள்ளது//

   ரொம்பச் சரியாச் சொன்னீங்கம்மா!
   *கண்டவுடன் காதல்! புற-அழகால்/காமத்தால் வந்த காதல் அல்ல!
   *அக-அழகால், உள்ளத்தில் தேக்கிக் கொண்ட காதல்!

   கற்பு
   =’கண்டு, கேட்டு’ பறிகொடுத்து விட்டாள்!
   =ஆனா இன்னமும் ‘உண்டு’ பறிகுடுக்க வில்லை!

   ஒரு வேளை, சுயம்வரத்துக்கு வந்த இந்திரன்/அக்னி போன்ற தேவதைகள் சபிச்சி இருந்தா?
   சாபத்துக்குப் பயந்து, அவ மாறீடுவாளோ?

   வெறும் உள்ளத்துக் கற்பு தானே! உடம்புக் கற்பா போச்சி?
   – இப்படி அவ நினைக்கல!
   – உள்ளத்துக் கற்பு போயிருச்சி! இனியெல்லாம் அவனே!
   —-

   ஒருவேளை, நளனே சாபத்துக்குப் பயந்து ஒதுங்கி இருந்தா? வேறொரு அரசியைத் தேடியிருந்தா?
   – அப்பவும்……அவ உள்ளத்துக் கற்பு போயிருச்சி!
   – வேறொரு அரசி வருவதற்கும் முன்பே அவ உள்ளத்துக் கற்பு போயிருச்சி!
   – இனியெல்லாம் அவனே! ஒதுங்கி…இருத்தலும், இருத்தல் நிமித்தமும்!

   உடலால் கற்பு போனாலும் பரவாயில்லை!
   ஒருவன் தொட்டுவிட்டான் என்பதாலேயே, second hand என்பதெல்லாம் so cheap!
   *உடல் கற்பு என்ற ஒன்றே இல்லை!
   *கற்பு = உள்ளத்துக் கற்பு மட்டுமே!

   எனக்கு இராமனை விட நளனையே ரொம்பப் பிடிக்கும்!

  • anonymous says:

   இராமன், ஊர் மெச்சுவதற்காக, அவளைத் தனிமைக் காட்டில் விட்டுட்டான்!
   அயோத்தி அரசன், குடிகளை மதிக்கணும்-ன்னா….. குடிகள் பேச்சுக்கு மதிப்பு குடுத்து, அவனும் அவளோடவே போய் இருக்கலாமே?

   அப்படிப் போய் இருந்தா, இராமனைக் கொண்டாடி இருப்பேன்!
   —–

   நளன் = நல்ல காதலன் + நல்ல அரசன்
   அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

   தூய அன்புக்கு, தனியே தவிக்க விட்டு, தாழ் போடத் தெரியாது! தனக்கும் சேர்த்தே போட்டுக்கும்!
   * இராமன் = அவளை மட்டுமே காட்டுக்கு அனுப்பி, தாழ் போட்டான்
   * இராவணன் = அவளை மட்டுமே அடைச்சி வச்சி, தாழ் போட்டான்
   Nobody had love for her!
   One man had duty, other man just lust!!

   பாவம்…..சீதையின் விதி அது!
   தமயந்தியின் நல் வினை= அவளுக்கு இராமன் வாய்க்காமல், நளன் வாய்ச்சது!
   There was a couple like this, in Greek Mythology too! I already put it here = https://365paa.wordpress.com/2011/09/08/065/#comment-314
   —-

   இன்னிக்கி ரொம்ப நேரம் பேசிட்டேனோ?:)
   Didnt go anywhere in camp! Indoors!
   Pl pardon the blabber that came out of flu

   • amas32 says:

    Waiting for your contributions everyday like a little girl for the ice cream truck 🙂 I hope you are taking medicines for the flu. Get well soon!
    amas32

   • amas32 says:

    //தமயந்தியின் நல் வினை= அவளுக்கு இராமன் வாய்க்காமல், நளன் வாய்ச்சது! // So beautifully put!
    amas32

   • ஆனந்தன் says:

    இராமன் சீதையைக் காட்டுக்கு மீண்டும் அனுப்பியதாக இராமருடன் வால்மீகியும் எழுதவில்லை; கம்பரும் கூறவில்லை. மற்றவர் கதைகளைக் கேட்டு இராமன் மேற் கோபம் கொண்டால், அது ஊரவர் பேச்சைக் கேட்டு சீதையை இராமன் காட்டுக்கு அனுப்பியது போல் ஆகிவிடும்!

 10. anonymous says:

  அன்புள்ள ஆனந்தன்,
  தவறாகச் சொல்லியிருப்பின் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்!

  தங்கள் இராம பக்தி/ ஆன்மீகப் பற்றுதலும் சிறந்ததே!
  இன்றைய குடும்ப அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இராமன் எவ்வளவோ மேல் தான்!
  இராமனை நான் குறையாகச் சொல்லவில்லை! இராகவன் பால் என் தனிப்பட்ட வருத்தமே அது!

  வால்மீகி சொல்லாத ஒன்றை வைத்து, இராமன் மேல் கோபம் கொள்ளலாமா? என்ற தங்கள் கேள்வி நியாயமானதே!

  உத்தர காண்டம் = பின்னால் எழுதிச் சேர்த்தது!
  அது வால்மீகியே எழுதிச் சேர்த்தார் என்றும் சொல்லுவார்கள்; இல்லை பிறிதொரு சேர்க்கை என்றும் சொல்லுவார்கள்!

  ஆனால், சீதையை மீண்டும் காட்டுக்கு அனுப்பி விடும் எண்ணம் இராமனுக்கு இருந்ததாக…..
  உத்தர காண்டம் மட்டும் சொல்லவில்லை! வால்மீகியும் சொல்கிறார்! வியப்பாக இருக்கா?:)

  (யுத்த காண்டம் – சர்க்கம்)
  நாஸ்த மே த்வய அபீஷ் வனாங்கோ,
  யதேஷ்டம் கம்ய தாமிதா
  = இனி, உன்னோடு வாழ விருப்பமில்லை! நீ இங்கிருந்து வனத்துக்கோ, உனக்குப் பிடித்தமான இடத்துக்கோ சென்று விடு!

  இத்தோட சொல்லி நிறுத்தி இருந்தாக் கூடப் பரவாயில்லை! ஆனா,

  *சத்ருக்னே வாத சுக்ரீவே
  ராட்சஸவா விபீஷணே = சத்ருக்னன் (அ) சுக்ரீவன் (அ) ராட்சஸ ராஜன் வீடணன்
  *நிவேஷயா மனம் சீதே,
  யதா வா சுகம் ஆத்மனா = இவர்களையும் நீ நாடிக் கொள்ளலாம்! உனக்கு நாதி எங்கு இருக்கோ, அங்கு சென்றுவிடு:((((
  —-

  யதேஷ்டம், யதா, தசா-திசோ பத்ரே! = பெண்ணே, பத்து திசை இருக்கு! எங்காவது போய் விடு!

  இராமன், அப்பவே காடு/வேறிடம் தான் நாடிக் கொள்ளச் சொல்லுறான்!
  ஆனா இவ தான்….அத்தனை பேரு முன்னாடி பேசுன பேச்சால், கூனிக் குறுகி…
  காட்டு வாழ்க்கை/ வேறு இட வாழ்க்கை வேணாம்! தீ மூட்டுக-ன்னு சொல்லுறா!

  இது தான் மூலநூல்; வால்மீகி வாசிப்பு! (பக்தர்களுக்குச் சற்றுக் கடினமாத் தான் இருக்கும்)
  இராகவன் செய்கை இதுவே! அதுவும், பல பேர் முன்னால் அடிக்கும் அடி, பயங்கரமாக வலிக்கும்! தனிமையில் அழுகை மிகுத்து வரும்! African Flu-விலும் சிறுகச் சிறுகச் எழுத வைக்கும்!

  • anonymous says:

   இராமன் நல்லவன் தான்! ஊருக்கே நல்லவன்! ஆனால் அவளை மட்டும் ஏனோ அதிகம் வாட வைத்து விட்டான்! அதான் சற்று வருத்தம்!
   இராஜாராமன்=ஆம்! சீதாராமன்=?

   தவறு இவ பேரில் தான்!
   ஒருத்தருக்கு திடீர்-ன்னு பிடிக்கலீன்னா, ஒதுங்கிடறது தான் நல்லது!
   ஆனா பாவம், இவளால அது முடியல!
   ஏன்னா, தன் மொத்தமும்=அவனே ன்னு வச்சிட்டா!

   உயிர் வாழு, ஆனா மூச்சு விடாம வாழு-ன்னு சொல்லுறா மாதிரித் தான்!:(

   இப்படியெல்லாம் இருந்தா, “கற்புக்கரசி”-ன்னு புகழ் கிடைக்கும்-ன்னா இவ பண்ணா?
   இவ, பேசாம, அப்பா ஜனகன் வீட்டுக்குப் போயி, நாட்டை ஆண்டு இருக்கலாம்!
   இவளே அறிவில்/ வில் வித்தை/ தேர் ஓட்டத்தில் சிறந்தவள்! முதல் பெண்ணரசி-ன்னு பேரும் புகழும் கிடைச்சிருக்காதா?

   ஆனா, இவளுக்கு வேண்டியது புகழல்ல! புரிதல்! அவன் “புரிதல்” தான்!

   இவளா விரும்பி ஏத்துக்கிட்ட ஒன்னுக்கு, யாரும் எதுவும் பண்ண முடியாது!
   ஏன்-ன்னா, பிறவி பிறவி தொறும்…திருமகள்-திருமகன்! = திவ்ய தம்பதி!
   ஏனோ, இந்தப் பிறவியில் மட்டும், இப்படி ஆயிருச்சி…

   *நளனுக்கு அவ அன்பு முக்கியமான ஒன்னா இருந்துச்சி = தமயந்தி, துன்பத்திலும் இன்ப வாழ்வு!
   *இராகவனுக்கு அவ அன்பு முக்கியமான ஒன்னா இல்ல = சீதை, துன்பத்திலும் துன்ப வாழ்வு!
   She chose it, No blame, She will live for it, for him! muruganaruL..

  • anonymous says:

   சில படங்களில், பரபரப்புக்காக, சீதை இராவணன் பால் மாறி விட்டதாகவும் காட்டுவார்கள்:)
   இராவணன் பிறன் மனை விரும்பினான்-ன்னு சொல்லுவாங்க! ஆனா அவன் பிறன் மனை விரும்பக் கூட இல்ல!

   அவ துன்பத்தில் துடிக்கும் போதும், அவன் சுக போகமாத் தான் இருந்தான்!:) வருந்தி வாடி விடவில்லை!
   எனவே, இது பிறன் மனை “விருப்பமோ”, பிறன் மனை “அன்போ” கிடையாது! Just lust!

   வேறு எவரும் வாழ்வில் வரும் முன்னரே, சீதை இராகவனை மனத்தால் வரித்து விட்டாள்!
   —-
   தமயந்தி, இரண்டாம் சுயம்வரத்தையே நடத்துவாள் (நளனைக் கண்டுபிடிக்கத் தான்)
   ஆனா நளன், இதைக் குத்திக் காட்டி, “கற்பை”ப் பற்றி ஒரு வார்த்தை கேட்க மாட்டான்! ஏன்-ன்னா…

   *நளனுக்கு அவ அன்பு அதி முக்கியமான ஒன்னா இருந்துச்சி! = தமயந்தி, துன்பத்திலும் இன்ப வாழ்வு!
   *இராகவனுக்கு அவ அன்பு அதி முக்கியமான ஒன்னா இல்ல = சீதை, துன்பத்திலும் துன்ப வாழ்வு!
   anbiRkku adaikkum thaazh kaNdu pudichaa seethai-kku nallaa irukkum! but..?
   She chose it, No blame, She will live for it, for him! muruganaruL..

   • ஆனந்தன் says:

    நளனுடைய நிலையும், இராமருடைய நிலையும் வேறு வேறானவை.
    நளனும் தமயந்தியும் காதலர்கள். இராமனு சீதையும் கணவன், மனைவியர்.

    காதலன் எங்காவது காதலியைத் திட்டுவது உண்டா? (தனுஷ் நடித்த படமென்றால் ஒழிய!) ஒரு மனைவி, எத்தனை சொல்லியும் கேளாமல், ஒரு மான் வேண்டுமென்று அடம்பிடிக்கப் போய் (அப்போது அவள் சொன்ன வார்த்தைகள்தான் இலேசானவைகளா?), இந்தக் கணவன் பட்ட பாடுகள் தான் எத்தனை?

    காடு மேடெல்லாம் அலைந்து, ஒரு குரங்கிடம் உதவிகேட்டு,,வாலியைக் கொன்று பழி கேட்டு, கடல் கடந்துபோய் ஓராயிரம் அரக்கரைக் கொன்று குவித்து…- இதெல்லாம், முன்பே அவன் சொன்ன பேச்சைக் கேட்டிருந்தால் ந்டந்திருக்குமா? அதனால், எல்லாம் முடிந்த பிறகு, சீதையை இரண்டு கேள்வி கேட்டுக் கொஞ்சம் துன்புறுத்துவதும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது! ஆனால், அவள் திடீரென்று, “நெருப்பை மூட்டு, குதிக்கிறேன்” என்று நிற்பாள் என்று அவனுக்கென்ன தெரியும்? அப்போதும் அதே பிடிவாதம்! இராமரும் fed up ஆகப் போயிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!.

    ஆனாலும் இரண்டாம் தடவை காட்டுக்கு அனுப்பியிருந்தால் அதை என்னால் ஏற்கமுடியாது.. ஒரு குற்றத்துக்கு இரு முறை தண்டனை கொடுப்பதைப் போன்றது அது.

  • ஆனந்தன் says:

   அட, இப்படியெல்லாமா சொன்னார் இராமர்?

   வால்மீகி ராமாயணத்தில் இராமர் இதுவும் சொல்வார், இதுக்கு மேலேயும் சொல்வார். ஏனெனில் அங்கே அவர் இறுதியில் தான் இறைவனாகக் காட்டப் படுகிறார்.

   ஆனால், இப்படிச் சொன்னதையும், தீக்குளிக்க விட்டதையும் “ஊர், உலகத்துக்காக” என்று சொல்வதை ஒரு வாதத்துக்காக எற்றுக்கொண்டாலும், இரண்டாவது தடவை சீதையைக் காட்டுக்கு அனுப்பியிருந்தால் அதை எக்காரண்ம் கொண்டும் என்னால் எற்க முடியாது. அந்த விதத்தில் நானும் உங்கள் கட்சிதான். (இது போலவே எனக்கு உ.வே.சாமிநாதய்யரிடமும் ஒரு கோபம் உண்டு. ஆனால், அதற்க்கும் நளனுக்கும் வெகுதூரம் என்பதால், அதை இன்னொரு நாள் பார்ப்போம்!)

   ஆனால், வால்மீகத்தில் அந்தக் காட்சி இல்லை என்று அறிந்தவுடன் அந்தக் கதையை ஒரு பொருந்தாத, ஊரவரின் பிற்சேர்க்கை என்றுதான் எடுக்கத் தோன்றுகிறது.

   திருமாலின் அவதாரம், திருமகளைத் தள்ளி வைத்தார் எனபதும் தத்துவத்திற்குப் பொருந்தவில்லை.

 11. anonymous says:

  நன்றி ஆனந்தன், கோபித்துக் கொள்ளாமல் உரையாடுவதற்கு!:) சில தீவிர பக்தர்கள் கோவித்துக் கொள்வதுண்டு!
  பாவம், தனுஷ் நல்ல பையனாச்சே! அவரு மேல ஒங்களுக்கு கொலவெறியா?:)

  சுருக்கமா முடித்துக் கொள்கிறேன்…காய்ச்சல் ரொம்ப அதிகமாயிருச்சி! African Forest Fluவோ-ன்னு சந்தேகப் படுறாங்க!

  * நளன்-தமயந்தி வெறுமனே காதலர்கள் அல்ல! கணவன்-மனைவியர்

  * மனைவி இரண்டாம் சுயம்வரம் நடத்துகிறாள் (அது கணவனைக் கண்டுபிடிக்கத் தான் என்றாலும்…அவ நோக்கம் நளனுக்குத் தெரியாது…இருந்தாலும் அவ “கற்பு” குறித்து நளன் “ஐயம்” பேசவே மாட்டான்)

  * மனைவி, மான் கேட்பது சாதாரணமான ஒன்னு தானே! சீதை என்ன முற்றும் துறந்தவளா?
  “பொம்பளைக்குத் தங்கத்தில் அப்படி என்ன ஆசையோ-தங்க மான்? புருசனை நச்சரிச்சிப் பேசினா” – இதெல்லாம் பட்டிமன்றச் சொற்பொழிவாளர்கள், அவங்க மனைவிகளைக் கேட்க பயந்துக்கிட்டு, சீதை மேல் ஏற்றி விட்டது:)

  வால்மீகி சொல்வது: சீதையின் சாதாரண ஆசை மட்டுமே! நச்சரிப்பு இல்லை!
  “சுசி ஸ்மிதா” – இது கூட முடியாதா? ன்னு ஒரு வெள்ளைச் சிரிப்பு சிரித்தாள் – இது மட்டுமே வால்மீகி சொல்வது!
  ஸ்மிதா = சிரிப்பவள் = “சில்க் ஸ்மிதா” – பொருள் புரிகிறது அல்லவா?:)
  —–

 12. anonymous says:

  தமயந்தி கூட, இதே போல ஒரு பொன் பறவையைக் கேட்பா! அதனால் நளனின் ஒரே துணியும் பாழாகி குளிரில் நடுங்குவான்!
  ஆனா அப்போ கூட, “எல்லாம் உன்னால தான், நீ தானே தங்கப் பறவை கேட்ட?’-ன்னு எல்லாம் பேசவே மாட்டான்!
  எளிய ஆசைகள் யாவர்க்கும் வருவது இயல்பே! அதன் பின்னாடி விதி ஒளிஞ்சிருக்கு-ன்னு யாருக்குத் தெரியும்?
  —-

  இதையெல்லாம் “குற்றம்” ஆக்கி, “தண்டனை” குடுப்பது….அதுவும் அத்தனை பேர் முன்னாடி என்பது…
  No reason for rama to be “fed up”! “பிடிவாதம்” நம்மில் யாருக்குத் தான் இல்லை? ஒரு முறை கணவன் பிடிவாதம் பிடிச்சா, அடுத்த முறை மனைவி பிடிச்சிக்கட்டு, அதுக்கு இது சரியாப் போச்சு-ன்னு, அவன் தலையைக் கோதி சிரிச்சா, matter over:)

  ஆனா தன் ஒழுக்கத்தையே பொதுவில் நிறுத்தினால்?
  அப்போ, ஒரு பெண் பிடிவாதம் பிடிக்காமல், என்ன செய்வாள்? அதான் இலக்குவனிடம், தம்பி தீ மூட்டு என்கிறாள்!
  —-

  சீதை செய்த ஒரே “குற்றம்” = தனிமையில், இலக்குவன் மேல் தீச்சொல் வீசியது!
  இராமன் அலறல் கேட்டும் போகாத தம்பி-யிடம், கணவனின் உயிர்ப் பதற்றத்தில், சற்று எல்லை தாண்டிப் பேசியது…
  அதுக்கு அவனிடம் மன்னிப்பும் கேட்டு விட்டாள்! அவனும் அவளைப் புரிந்து கொண்டான்….
  ஆனா, புரிந்து கொள்ள வேண்டியவன் தான்…பாவம்…புரிந்து கொள்ளாமல், “இதய வறுவல்” செய்து விட்டான்! என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ!

 13. anonymous says:

  //திருமாலின் அவதாரம், திருமகளைத் தள்ளி வைத்தார் என்பதும் தத்துவத்திற்குப் பொருந்தவில்லை//

  இந்த “தத்துவம்” குறித்தும் படிச்சிருக்கேன்! வைணவப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கேன்! = அகலகில்லேன் இறையும் என அலர்மேல் மங்கை உறை மார்பா! திரு-மால்! எப்பவும் அவளே முதல்!
  ஆனா இராமவதாரத்தில் மட்டுமே பிரிவு! அது ஏன்-ன்னும் சொல்லி இருக்காக!

  ஆனா அதெல்லாம் நான் ஒப்புக் கொள்ளவில்லை! ஜீயர்களான அவரிடமே எதிர்வாதம் தான்:)
  இப்படி, ஒரு அணி சார்ந்து நிற்காததால், ரெண்டு பக்கமும் என் கிட்ட கோச்சிப்பாங்க:)
  —-

  //அந்த விதத்தில் நானும் உங்கள் கட்சி தான்//

  :))
  கட்சி எல்லாம் ஒன்னும் இல்லீங்க ஆனந்தன்!
  பொதுவா, நான் இன்னார் கட்சி-ன்னு நிற்பதே இல்லை! ஆட்களை வைத்தோ, சைவம்/வைணவம்-ன்னோ, ஒரு இயக்கம்-ன்னோ நிக்கவே மாட்டேன்!
  “குணம்”, அது “நடைமுறையில் எப்படி”-ன்னு மட்டுமே நிற்பது வழக்கம்!

  சொக்கர் என் மிக நல்ல நண்பர்! ஆனா ’தமிழ் இலக்கணப்படி, கறுப்பு, தாள், வாழ்த்துக்கள் தவறு’-ன்னு சொன்னா, அவரிடமே தரவு கேப்பேன்:)
  அதனால் இவன் வம்பே வேணாம்-ன்னு, அவரு ”என் நம்பிக்கை’-ன்னு சொல்லி எஸ் ஆயிடுவாரு:))
  ஆனா, அவரு தரவு குடுத்தா, அப்போ வெட்கம்-ன்னுல்லாம் பார்க்காம, பொதுவிலேயே ஏத்துக்கிடுவேன்!
  —-

  சீதை கட்சி, இராமன் கட்சி, இராவணன் கட்சி-ன்னு பேசினா, time pass பட்டிமண்டபம் தான்! அதனால் நமக்கு என்ன வரப் போகுது?

  காவியத்தில் உலாவும் பல பாத்திரங்கள், நம்முள்ளேயும் ஒன்னாச் சேர்ந்து உலாவுகின்றன!
  நமக்குள்ளேயே ஆயிரம் இராமன்-இராவணன்கள் இருக்காக, சமயத்துக்கு ஏத்தாப் போல!
  அதனால் இந்தப் பாத்திரங்களைச் சற்று நுணுகிப் பார்க்கும் போது, நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள முடியும்!

  அதான், அப்பப்போ இப்படி உரையாடிப் பார்ப்பது வழக்கம்!
  ஆனா இன்னிக்கி நிஜமாவே முடியல! Feeling very sick and no doctor in this country, just heath aid workers!
  See u later, Thanks for the discussion..

  • amas32 says:

   Let us know if you are better now. Its like you are working for Mossad or CIA and the only way to send or receive messages is through #365paa!
   amas32

 14. anonymous says:

  Before I go, since u told Kamban…..
  here = கம்பன் கள்: காமம் இராமனுக்கா? இராவணனுக்கா?
  http://madhavipanthal.blogspot.com/2011/04/ramaravana.html

  கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் – கரந்த காதல்
  உள்ளிருக்கும் எனக்கருதி, உடல் புகுந்து தடவியதோ – ஒருவன் வாளி?

  • ஆனந்தன் says:

   அறியாமை மிகுந்த எனது கேள்விகளுக்குப் பொறுமையுடன் ப்திலளித்தமைக்கு அன்பான நன்றிகள். உங்கள் உடல் விரைவில் நலம் பெறப் பிரார்த்திக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s