யாருக்குப் பைத்தியம்?

பொய்கைப் பூப் புதிது உண்ட வரிவண்டு கழிப் பூத்த

நெய்தல் தாது அமர்ந்து ஆடிப் பாசடை சேப்பின் உள்

செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை

மைதபு கிளர் கொட்டை மாண்பதிப் படர்தரூஉம்

கொய்குழை அகைகாஞ்சித் துறை அணி நல் ஊர!

அன்பிலன், அறனிலன் எனப்படான் என ஏத்தி

நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்.

நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு அளி இன்மை

கண்டும் நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்.

முன்பகல் தலைக் கூடி, நண்பகல் அவள் நீத்துப்

பின்பகல் பிறர்த் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்.

எனவாங்கு,

கிண்கிணி மணித்தாரோடு ஒலித்து ஆர்ப்ப, ஒண் தொடிப்

பேர் அமர் கண்ணார்க்கும் படு வலை இது என

ஊரவர் உடன் நகத் திரிதரும்

தேர் ஏமுற்றன்று, நின்னினும் பெரிதே.

நூல்: கலித்தொகை

பாடியவர்: மருதன் இளநாகனார்

சூழல்: மருதத் திணை. மற்ற விவரங்களை ‘முன்கதை’யில் காண்க

முன்கதை

தன் கணவனுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு உள்ளதாகச் சந்தேகப்படுகிறாள் ஒரு மனைவி. அதை அவனிடமே நேரடியாகக் கேட்கிறாள்.

கணவனுக்குக் கோபம். ‘ஏன் இப்படியெல்லாம் பேசறே? உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?’ என்று கத்தினான்.

‘யாருக்கு? எனக்கா பைத்தியம்?’ என்று பதிலுக்குச் சீறினாள் அவள். இந்தப் பாடலைப் பாடினாள்.

உரை

உன்னுடைய ஊரில் உள்ள வயல்களில் சேப்பங்கிழங்கால் செய்து வைத்ததுபோல் தாமரை மலர்கள் பூத்திருக்கின்றன. அவற்றின் கருத்த இதழ்களுக்குள்ளே இருக்கும் விதைப் பகுதியில் வண்டுகள் வாழ்கின்றன.

பொய்கைப் பூவில் புதிய தேனைக் குடித்த அந்த வண்டுகள், அங்கே பூத்திருக்கும் நெய்தல் மலரின் மகரந்தத்தைச் சாப்பிடுகின்றன, பின்னர் அங்கேயே விருப்பம்போல் சுற்றித் திரிகின்றன. கடைசியாக வீடு வந்து சேர்கின்றன.

உன் ஊரில் காஞ்சி மரங்கள் அதிகம். அவற்றில் உள்ள தழைகளையெல்லாம் பெண்கள் பறித்துக்கொள்கிறார்கள். தங்களுக்கு அழகான தழை ஆடைகளைத் தைத்துக்கொள்கிறார்கள்.

ஆனாலும் அந்தக் காஞ்சி மரங்கள் சளைப்பதில்லை, பெண்கள் பறிக்கப் பறிக்கத் தொடர்ந்து புதுப்புதுத் தழைகளை விளையச் செய்துகொண்டேதான் இருக்கின்றன.

இப்படிப்பட்ட சிறந்த இயற்கை வளத்தைக் கொண்ட நல்ல ஊரின் தலைவனே,

எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று நீ குற்றம் சாட்டுகிறாய். உண்மையில் பைத்தியம் பிடித்தது எனக்கு அல்ல.

நீ ’நல்லவன்’ என்று புகழ்ந்து பாடுகிறான் ஒரு பாணன். நீ என்மேல் வைத்திருக்கும் அன்பு கொஞ்சம்கூடக் குறையவில்லை என்று பொய் சொல்கிறான். இவனுக்குதான் பைத்தியம் பிடித்திருக்கிறது.

அவன் சொல்லும் பொய்யாவது பரவாயில்லை, நீ சொல்லும் பொய் இருக்கிறதே, விஷத்துக்குச் சமம். அதைச் சாப்பிட்டால் உடனே உயிர் போய்விடும் என்று தெரிந்திருந்தும் உன்னுடைய போலி வார்த்தைகளை நம்பி ஏமாறுகிற பரத்தைப் பெண்கள் இருக்கிறார்களே, அவர்களுக்குதான் பைத்தியம் பிடித்திருக்கிறது.

நீ அதிகாலையில் ஒரு பெண்ணுடன் சுற்றி அலைகிறாய், மதியத்தில் அவளைக் கைவிட்டு இன்னொருத்தியின்பின் ஓடுகிறாய், மாலை ஆனதும் இவளையும் மறந்து வேறொருத்தியைத் தேடுகிறாய். உனக்குதான் பைத்தியம் பிடித்திருக்கிறது.

மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட உன்னுடைய தேரில் கிண்கிணி மணி ஒலி கேட்கிறது, அது பெரிதாகச் சத்தம் எழுப்பியபடி ஊரைச் சுற்றி வருகிறது. அந்தத் தேரை ஊர் மக்கள் எப்படி அழைக்கிறார்கள் தெரியுமா? ‘சுழல்கின்ற பெரிய கண்களைக் கொண்ட, தொடி அணிந்த பரத்தைப் பெண்களை வளைத்துப் பிடிக்கும் வலை’ என்றுதான்.

உன்னுடைய ஒழுக்கமற்ற செயலுக்குத் துணையாக இருக்கும் அந்தத் தேருக்கு, உன்னைவிட அதிகமாகப் பைத்தியம் பிடித்திருக்கிறது.

துக்கடா

 • ’பகலெல்லாம் பல பூக்களைச் சுற்றும் வண்டு மாலையில் வீடு திரும்புவதுபோல், நீயும் ஊர் மேய்ந்துவிட்டு என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்’ என்று முதல் வரியிலேயே ஒரு கொட்டு வைக்கிறாள் மனைவி. அதற்கப்புறம் அடிக்கு அடி ‘அடி’தான் :>
 • சினிமாவில் வரும் ஹீரோக்கள் பெண்களை ஈர்ப்பதற்காக விதவிதமாக பைக் ஓட்டிக் காட்டுவார்கள், அந்தக் காலத்தில் பைக்குக்குப் பதில் தேர், அந்தத் தேரைப் ‘பெண்களைக் கவர்வதற்காகப் போடும் வலை’ என்கிறார் புலவர். அட்டகாஷ்!

237/365

Advertisements
This entry was posted in அகம், ஊடல், கலித்தொகை, கோபம், சினிமா. Bookmark the permalink.

12 Responses to யாருக்குப் பைத்தியம்?

 1. amas32 says:

  சினிமாவில் அல்ல, நிஜ வாழ்விலேயே இப்பொழுதெல்லாம் ஆடி காரும் ஹம்மரும் தான் பெண்களை மயக்க அரசியல்வாதிகளின் பிள்ளைகளும் தொழிலதிபர்களின் பிள்ளைகளும் தேருக்கு பதிலாகப் பயன்படுத்துகிறார்கள் 🙂

  மனைவி நன்றாகப் பொரிந்து தள்ளிவிடுகிறாள். கணவன் பெண் லோலனாக இருந்து கொண்டு மனைவியை பைத்தியம் என்று சொன்னால் அவளுக்கு கோபம் வராமல் என்ன செய்யும்.
  அவள் அவனின் இயற்கை வளங்கள் நிறைந்த நிலத்தின் தலைவன் என்று வர்ணிப்பதில் இருந்தே அவன் செல்வந்தன் என்று தெரிகிறது. அவள் அந்த இயற்கை எழிலை வர்ணிக்கும் வார்த்தைகளில் கூட கோபம் தெறிக்கிறது.

  அவனைப் புகழ்ந்து பாடும் பாணனையும் வைகிறாள். அவனையும் பைத்தியம் என்று கூறுகிறாள். பின் அவனை பரத்தையர் இல்லங்களுக்கு அழைத்துச் செல்லும் தேரையும் வெறுக்கிறாள்.
  நமக்குக் கோபம் வரும்போது, நீ பைத்தியம், உங்கம்மா பைத்தியம், உங்க குடும்பமே பைத்தியம் என்று தான் கோபித்துக் கொள்வோம். அதையே தான் இந்த பெண்ணும் சொல்கிறாள் பாவம்.

  Looks like he makes his conquests and goes scot free as well!

  amas32

 2. anonymous says:

  பரத்தை! பரத்தை!
  //முன்பகல் தலைக் கூடி, நண்பகல் அவள் நீத்துப், பின்பகல் பிறர்த் தேரும்//

  இவ்ளோ பேசுறாளே தலைவி! அவன் தான் அப்படீன்னா, இவளும் அப்படிப் போக வேண்டியது தானே?
  எதுக்கு அவனையே கட்டிக்கிட்டு அழணும்?
  எதுக்கு அவனை இப்படியெல்லாம் பாட்டுப் பாடிச் “சாடணும்”?:)
  —-

  முதல்ல இதமா இருந்தான், இப்போ அப்படி இப்படி இருக்கான்…
  அவன் மனசுக்குப் பிடிச்சா மாதிரி அவன் இருக்கான்…
  இவ மனசுக்குப் பிடிச்சா மாதிரி இவளும் இருந்துக்க வேண்டியது தானே?
  அதை விட்டுட்டு, எதுக்கு இப்படிப் பாட்டுப் பாடிச் “சீன்” போடணும்?:)

  அவன் ஒரு பரத்தையிடம் சென்றால், இவள் ஒரு பரத்தையிடம் செல்ல வேண்டியது தானே?
  ஆண் பரத்தைகள் சங்க காலத்தில் இல்லையா?

  ஆண்கள் அப்படி-இப்படித் தான் இருப்பாங்க! பெண்கள் தான் புலம்பிக்கிட்டோ/ adjust பண்ணிக்கிட்டோ போகணும்-ன்னா சொல்லுது சங்கத்தமிழ்???
  —-

  * மருதத் திணை = பரத்தை பற்றிய பெரும் சுரங்கம்
  * மருதன் இளநாகனார், ஓரம் போகியார் = இவங்க ரெண்டு பேரும், சங்கத் தமிழ் வாழ்க்கையில், பலதும் பதிஞ்சி வச்சிருக்காங்க!
  – “ஓரம் போதல்”-ன்னே அதுக்குப் பேரு!

  அவன் ஒரு பரத்தையிடம் சென்றால், இவள் ஒரு பரத்தையிடம் செல்ல வேண்டியது தானே?

  * சென்று இருக்கிறார்கள்
  * ஆண் பரத்தை உண்டு!
  * பெண், மனம் வெறுத்துப் போய், பரத்தையாய்ப் போன கதைகள் உண்டு!
  * பரத்தை, அதீத காதலால், குலப்பெண்ணாய் மாறின கதை உண்டு!

  சங்கத் தமிழ், “ஒழுக்கம்” என்பதை ஒரு தலையின் மேல் மட்டும் ஏற்றி வைக்கலை!
  கடவுளின் பேரால், பரம்பரை பரம்பரையாய் “தேவதாசி” ஆக்கி, எதையும் Institutionalize செய்யவில்லை!

  சங்கத் தமிழ், இந்த “மனப் போக்கை”, மனப் போக்காய் மட்டுமே பார்த்தது!
  எந்தத் தீர்வையும் திணிக்காமல், அவரவர் தீர்வுக்கு உதவி செய்தது!

  ……இந்த நூலைச் சீக்கிரம் எழுதி முடிச்சிட்டா, ஒரு கடமை முடிஞ்சீரும்! கேட்டுக்கிட்டே இருக்காங்க!
  எழுதி, இராம.கி ஐயாவிடம் குடுத்துட்டு, கடமை முடிஞ்சுது-ன்னு ஒதுங்கீறலாம்! முருகா! பரத்தையின் கற்பு!!

 3. anonymous says:

  கண்ணகி-கோவலன் கதை எல்லாருக்கும் தெரியும்…..மேலோட்டமாய்த் தெரியும்!
  இந்தப் பாட்டில், தலைவி புலம்புறா-ல்ல? அது போல கண்ணகி புலம்பிப் பாத்து இருக்கீங்களா?
  சும்மா எடுத்துப் படிச்சிப் பாருங்க! Will be very interesting! You can “know her heart”!
  —-

  நான் முதன் முதலில் ஒருவரிடம் Publicஆ வாதிட்டது….என் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் திரு. ஸ்ரீநிவாஸன் அவர்களிடம்:)

  திரும்பி வந்த கோவலனுக்கு கண்ணகி சாப்பாடு போடும் சீன்!
  “அமுதம் உண்க அடிகள் ஈங்கென”-ன்னு வரும்!

  புருசன் கிட்ட, அடிகளே-ன்னு பேசுறாப் பாருங்க! இப்படி இருந்தா அவன் ஏன் பரத்தையைத் தேடிப் போகமாட்டான்?
  இவ அவனை ஒழுங்கா சந்தோசமா வச்சிருந்தா, அவன் ஏன் பரத்தையைத் தேடிப் போறான்?-ன்னு வகுப்புல கேட்டுட்டாரு!

  அம்புட்டு தான்!…
  Soft Soft-ன்னு பசங்க ஓட்டும் ஒரு பையன்….ஸ்ரீமான் ஸ்ரீநிவாசரே-ன்னு எழுந்து பேச ஆரம்பிச்சான் பாருங்க….
  ஒரு மயிலு, புலி ஆன கதை போல ஆயிருச்சி!
  —–

  டேய், உனக்கு ஏன் இம்புட்டு கோவம் வருது, கண்ணகியைச் சொன்னா? மொதல்ல உனக்கு சிலப்பதிகாரம் முழுக்கத் தெரியுமா-ன்னு அவரு கேக்க….

  தேரா மன்னா…செப்புவது உடையேன்-ல்ல…ஆரம்பிச்சி
  ….
  இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி-ன்னு…முடிக்க

  அவரு பேஸ்தடிச்சாப் போல ஆயிட்டாரு! வகுப்பில் ஒரே நிசப்தம்!

  கண்ணகியைப் பற்றி ஒரு பாத்திரமா நீங்க தாராளமா அலசுங்க!
  ஆனா ஒங்க மனசுக்குப் ஒன்னு புடிச்சிருக்கு/புடிக்கலை என்பதற்காக, இவ அவனைச் சந்தோசமா வச்சிருந்தாள்-ன்னா, அவன் ஏன் பரத்தையைத் தேடிப் போறான்?-ன்னு எல்லாம் தூவாதீர்கள்-ன்னு இந்தப் பையன், வகுப்பிலே ஓ-ன்னு அழ….

  இப்ப நினைச்சாலும் சிரிப்பா வருது!:)

 4. anonymous says:

  எதுக்குச் சொல்ல வந்தேன்-ன்னா, பரத்தை + புலம்பல்!
  இந்தப் பாட்டில், தலைவி புலம்புறாப் போல ஏன் கண்ணகி புலம்பவில்லை?

  கண்ணகி தனியா இருந்த காலங்களில்….அவ கிட்ட யார் யாரோ என்னமோவெல்லாம் வந்து சொல்லுவாய்ங்க!
  அந்தக் காலம், வட-தமிழ்ப் பண்பாடுகள் கலக்கத் துவங்கிய அரசியல் காலகட்டம்!

  கண்ணகி வீட்டுக்கு அருகில் வாழ்ந்த அந்தணப் பெண், கண்ணகி கிட்ட வந்து, “சோம குண்டம், சூர்ய குண்டத்தில் பரிகாரம் பண்ணு! திரும்பி வருவான்”-ன்னு சொல்லுவா!
  ஆனா கண்ணகி பண்ணவே மாட்டா! ஏன்? அவன் வேணாமா?

  பரிகாரமும் பண்ணாம, புலம்பவும் புலம்பாம….எப்படி அவளால அந்த நிலைமையில் தனீனீயா….இருக்க முடிஞ்சுது?
  அவனே!……….ன்னு இருக்கணுமா என்ன? இது பிற்போக்குத்தனம்/ பெண்ணடிமைத்தனம் அல்லவா?

  அவனே!…ன்னு இருந்தாத் தான் “கற்பு”-ன்னு சங்கத் தமிழ் திணிச்சா, அப்போ அது அடிமைத்தனம்!
  அவனே!…ன்னு அவளே விரும்பி இருந்தா?

  சங்கத் தமிழில் பரத்தையர் நிலையும் இது தான்!
  * இற்பரத்தை = அவனுக்கே!…-ன்னு வாழ்ந்த கற்புள்ள இற்-பரத்தைகளும் உண்டு!
  * நயப்புப் பரத்தை = அவனைப் போலவே சுதந்திரமாய்த் துணிந்து விட்ட நயப்புப்-பரத்தைகளும் உண்டு!

  ஆனா, No Institutionalization!
  பரத்தை பொண்ணு பரத்தை-ன்னு இல்லாம, அவரவர் மனப்போக்கு அளவில் மட்டுமே!
  நயப்புப் பரத்தைகளைக் கவிஞர் பாடார்! ஆனால் ஏசவும் ஏசார்!

  பரத்தையிலும், அவனே!…ன்னு இருந்த இற்பரத்தை = பரத்தையின் “கற்பு”!
  இது கவிஞர்களைத் திகைக்க வைத்துள்ளது!

 5. anonymous says:

  சரி, நாம பாட்டுக்கு வருவோம்!
  எதுக்கு இதெல்லாம் சொன்னேன்-ன்னா….இந்தப் பாட்டு, ஒரு இல்-பரத்தை பாடுவது! “கற்புள்ள பரத்தையின் புலம்பல்” – அதை ஞாபகம் வச்சிக்கோங்க:)

  //சேப்பங்கிழங்கால் செய்து வைத்ததுபோல்
  தாமரை மலர்கள் பூத்திருக்கின்றன//

  அடக்கடவுளே….
  சொக்கரே, உங்களுக்குச் சேப்பங்கெழங்கு ரொம்பப் பிடிக்குமா?:)
  இதுக்கு வெளக்கம் ப்ளீஸ்!:))
  சேப்பங் கிழங்குக்கும் தாமரைப் பூக்கும் என்னங்காணும் சம்பந்தம்?:)

 6. anonymous says:

  முன்பே சொன்னது தான்…
  எடுத்தவுடனேயே சங்கத் தமிழைப் படிச்சாக் கடாமுடா-ன்னு தோனும்! அதுவும் சென்னைத் தமிழர்களுக்கு:) சொக்கரின் துக்கடாவைப் படிச்சி முடிச்சிட்டு, பாட்டை ரெண்டு ரெண்டு வரியா அசை போட்டுப் பாருங்க!

  1st 2 lines, then 2 lines, then all these 4 lines together…
  take 30 second rest
  again, next 2 lines, then 2 lines…4 lines together
  காபி உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கிறாப் போல – இப்படி வாசித்தால், யாரும் சங்கத் தமிழை இன்புறலாம்!

  ஏன் மூலப்பாட்டை வாசிக்கணும்? = Bcoz it has the “life” in it ! = உயிர்ப்பு!
  பட்டவனே சொல்வது போல், எந்த உரையாசிரியனும் “உணர்ச்சி”யைச் சொல்ல முடியாது! Poetic Density!
  That too, Kalithogai is a musical poem!
  கலி=அதிர்வு ஒலி! (Rock Music); பரிபாடல்=பரிந்து வருவது (Melody)
  —-

  பொய்கைப் பூப் புதிது உண்ட வரிவண்டு கழிப் பூத்த
  நெய்தல் தாது அமர்ந்து ஆடிப் பாசடை சேப்பின் உள்

  பொய்கை=குளம்
  அதில் பூப் புதிது = புது பூ பூத்திருக்கு! = தாமரை
  உண்ட வரிவண்டு = வண்டு, தூங்கி எழுந்து….புதுசாப் பூத்த தாமரையில் வாய் வைக்குது!
  கழிப் பூத்த நெய்தல் தாது அமர்ந்து ஆடி = முன்பே பூத்த, நெய்தல் பூவிலும் பறந்து வாய் வைக்குது! ஆடுது!

  * தாமரை (Lotus) சூரியன் மலரும் போது மலரும்!
  * நெய்தல் (Lily) வைகறையிலேயே பூத்து விடும்!
  புது ஐட்டம்-னாலே தனிச் சுகம் தானே:)

  புதுசாப் பூத்த தாமரையில் வண்டு மூழ்குது! ‘ஜாலி’ தான்! ஆனா அதுல இன்னும் தாது நல்லா விரியல!
  அதுனால, முன்பே பூத்த நெய்தலுக்கு மீண்டும் வருது! தாது அமர்ந்து ஆடுது!:)

  எப்படி ஆரம்பமே கிக்-ஆ இல்ல?:)))

 7. anonymous says:

  பாசடை சேப்பின் உள்
  செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை
  மைதபு கிளர் கொட்டை மாண்பதிப் படர்தரூஉம்

  பாசடை சேப்பின் உள் செய்து இயற்றியது போல = பச்சைக்குள்ள சிவப்பை வச்சித் தைச்சா எப்படி இருக்கும்? (Green Saree & Pink Interlay)…அது போல
  வயல் பூத்த தாமரை = பச்சை வயலில் பூத்த தாமரை!!

  எப்படி இருக்கு உவமை? குளத்தில் மட்டுமல்லாது, தண்ணி பாய்ச்சிய வயலிலும் தாமரை பூக்கும்! சேற்றுத் தாமரை!
  * முதலில் புதுசாப் பூத்த தாமரை = கிக், ஆனா தாது இன்னும் விரியல
  * அடுத்து முன்பே, நன்கு(கழி) பூத்த நெய்தல் = விரிந்த தாது, நல்ல ஆட்டம்
  * அடுத்து சேற்றுத் தாமரை = சேறு-ன்னும் பார்க்காம, அந்தத் தாமரையும்…

  சூப்பர் வண்டா இருக்கும் போல:)
  —–

  இது பூவை மட்டும் தான் பாக்குதா?
  பூத்த பின் காயாகி, கொட்டையோடும், கிழங்கோடும் இருக்குறது கூட விட்டு வைக்க மாட்டேங்குதாம்! அங்கும் வண்டு பறக்குதாம்:)
  தாமரைக் காய், தாமரைக் கிழங்கு பாத்து இருக்கீங்களா? பார்த்தாத் தான் தெரியும் இந்தக் காட்சி!


  http://en.wikipedia.org/wiki/Nelumbo_nucifera

  மை தபு = பச்சை பரவிய
  கிளர் கொட்டை = கொட்டைகள் கிளர்ந்து எழும் (படத்திலும் காணவும்)
  மாண் பதிப் = முற்றிய இடமான (காயும், அதன் கீழ்க் கிழங்கும்)
  படர் தரூஉம் = அங்கும் படர்கின்ற
  —-

  இப்போ எல்லாம் ஒன்னாக் கூட்டிப் படிங்க!
  *விரியாத இளந் தாமரை
  *விரிஞ்ச நெய்தல்
  *சேற்றில் உள்ள தாமரை
  *முற்றிய தாமரை (காய்-கிழங்கு)

  இப்படி ஒன்னு விடாம, பலவும் சுத்தும் வண்டு!
  அந்த வண்டின் நாடனே = அணி நல் ஊர; என் தலைவா:)
  Hi Darling, Enough???:))

 8. anonymous says:

  இது தான் அந்தக் “கிழங்கின்” ரகசியம்:)
  சேப்பங் கிழங்கால் செய்து வைத்தது போல் தாமரை அல்ல!
  ஏ வண்டே, இளமையான பூ போதாது-ன்னு, உனக்கு முற்றிய தாமரைக் கிழங்கு-மா கேட்குது? என்பதே அது!

  btw, i am curious how chEppan kizhangu came into picture?:)
  which urai nool is this?

  அவன் அவளை விட்டுருவான்! ‘எங்க காதலுக்கு அந்தக் குருகே சாட்சி’-ன்னு அந்தக் காதலி சொல்லுவா!
  Many urai nool, even the renowned சுஜாதா & உவேசா, say this as: எங்க ரெண்டு பேர் கலவியை அந்தக் கொக்கு தான் பார்த்தது; அதுவே சாட்சி!

  Actually குருகு is not கொக்கு! It is a rare & much smaller bird, which hides in shrubs and catches fish! (நம்-ஆழ்வார்=திருக்-குருகூர்)
  அந்தக் குருகு மறைவான பறவை, அத்தனை சுலபத்தில் பார்வைக்குப் படாது!

  அந்தப் புதர்ப் பறவை தான் எங்க கலவிக்கும் அன்புக்கும் சாட்சி-ன்னா….இவ எந்த அளவுக்கு மனசு ஒடைஞ்சு போயிருப்பா?
  They had gone to even inaccesible places in love
  Now, their love itself is inaccesible! No witness!
  = அவ்வளவு நுணுக்கமானது சங்கத் தமிழ்! Not all urai nools do justice to it! (But 365paa can; ‘coz 365paa allows discussion)

  • என். சொக்கன் says:

   நண்பரே,

   நான் வாசித்த உரை நூல்கள் இவை:

   1. வள்ளுவர் பண்ணை வெளியீடு, பதிப்பாசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கனார்

   2. வர்த்தமானன் பதிப்பகம் வெளியீடு, உரை ஆசிரியர் புலவர் அ. மாணிக்கனார்

   இந்த இரு நூல்களிலும் சேப்பங்கிழங்கு வருகிறது 🙂

 9. anonymous says:

  மீதிப் பாட்டுக்கு, நீங்களே மனசுக்குள்ளார விரித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்! சொக்கரின் உரை அதுக்கு உதவும்!
  This guy is going to turn his cell phone off, so my internet tethering wireless will go away:(
  —-

  Some other best lines are:
  அன்பிலன், அறனிலன் எனப்படான் என ஏத்தி
  = அன்பு உள்ளவன், அறம் உள்ளவன்-ன்னு அவனைப் பாடவில்லை!
  அன்பிலான், அறமிலான்-ன்னு யாரும் அவனைச் சொல்லலையாம்!
  What a subtle difference!
  he he! எம்புட்டு வருத்தம் அவளுக்கு அவன் மேல! = அன்பிலன் அறனிலன் எனப்படான்!:)

  நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு
  அளி இன்மை கண்டும், நின் மொழி தேறுகிறேனே!

  முன்பகல் தலைக் கூடி, நண்பகல் அவள் நீத்து,
  பின்பகல் பிறர் தேரும் நெஞ்சம்
  – இதுக்கு வெளக்கமே வேணாம்! சும்மா திருக்குறள் கணக்கா வார்த்தை வந்து விழுது:)

  கிண்கிணி மணித் தாரோடு ஒலித்து,
  ஒண் தொடிப் பேர் அமர் கண்ணார்க்கும்
  படு வலை இது என
  திரிதரும் தேர் ஏமுற்று அன்று…

  மீன்கொடித் தேரில் மன்மத ராசன் ஊர்வலம் போகின்றான்- பாட்டு போலவே இருக்கு-ல்ல?:)
  Bye
  Good nite!

  • அந்த நூலை கொஞ்சம் வெரசா எழுதி முடிங்க. படிக்க ஆர்வமா இருக்கு. ஆய்வு நூலா எழுதினீங்கன்னா, என்னை போன்ற அறிவிலிகளுக்காக விளக்கவுரை கூட. அதுக்கு வாழ்த்துகள், வேண்டுதல்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s