எங்கொள்வன்?

உள்ளன மற்று உள் ஆப் புறமே சில மாயம் சொல்லி

’வள்ளல் மணிவண்ணனே’ என்று என்றே உனையும் வஞ்சிக்கும்

கள்ள மனம் தவிர்ந்தே உனைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்,

வெள்ளத்து அணை கிடந்தாய், இனி உன்னை விட்டு எங்கொள்வனே?

நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார் அருளிச் செயல்

பாடியவர்: நம்மாழ்வார்

பாற்கடலில் பள்ளிகொள்ளும் பெருமாளே,

சிலர் தங்கள் மனத்துக்குள் இன்னொரு விஷயத்தை நினைத்துக்கொண்டு, வேறொன்றுக்காக ஆசைப்பட்டுக்கொண்டு, சும்மா வெளியேமட்டும் ‘வள்ளலே, மணிவண்ணனே’ என்று உன்னைப் புகழ்கிறார்கள். கடவுளையே ஏமாற்ற நினைக்கிறார்கள்.

ஆனால் நீயோ, அவர்களையும் தண்டிப்பது கிடையாது. அவர்களுடைய கள்ள மனத்தைக் கண்டுகொள்ளாமல் அருள் புரிகிறாய். இப்படிப்பட்ட நல்ல மனம் கொண்ட கடவுளாகிய உன்னைக் கண்டுகொண்டேன், உன்னிடம் சரணடைந்தேன். இனி உன்னை விட்டு நான் வேறெதைப் பற்றிக்கொள்ளமுடியும்?

துக்கடா

 • கோயிலுக்குள் சாமி கும்பிடும்போதுகூட, ‘வாசலில் விட்டுவந்த செருப்பு பத்திரமாக இருக்குமா?’ என்கிற யோசனையை மனம் முழுக்க நிரப்பிவைத்திருக்கிறவர்கள் நிறையப் பேர். அவர்களுடைய வாய் கடவுள் பெயரைச் சொன்னாலும், மனம் செருப்பில்தான் இருக்கும். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் ‘எனக்கு இதைக் கொடு, நான் உனக்கு இதைச் செய்கிறேன்’ என்று கடவுளிடம் பேரம் பேசுவார்கள், இதுபோன்ற கள்ள மனங்களுக்குக்கூடக் கடவுள் அருள் உண்டு என்கிறா நம்மாழ்வார். அந்த நல்ல மனத்தை நாம் misuse செய்யாமலிருந்தால் சரி 🙂

236/365

Advertisements
This entry was posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், திருமால், நம்மாழ்வார், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, விஷ்ணு. Bookmark the permalink.

9 Responses to எங்கொள்வன்?

 1. Samudra says:

  //ஆனால் நீயோ, அவர்களையும் தண்டிப்பது கிடையாது. அவர்களுடைய கள்ள மனத்தைக் கண்டுகொள்ளாமல் அருள் புரிகிறாய். //இப்படி அந்தப் பாடலில் வருகிறதா? தெரியவில்லை.Still, it’s true..

  ஆம்..கடவுள் ஒரு கற்பக மரம். நாம் எதைக் கேட்கிறோமோ
  அது கிடைக்கும். சிலர் மட்டுமே புத்திசாலித்தனமாக நீயே வேண்டும் என்று கேட்கிறார்கள். முக்தியைக் கேட்கிறார்கள்.

  ఎంత మాత్రమున ఎవ్వరు తలచిన, అంతమాత్రమే నీవు
  ‘எந்த மாத்ரமுன, எவ்வரு தலசின அந்தமாத்ரமே நீவு’ என்கிறார்
  அன்னமாச்சார்யா. ‘நீ எப்படியோ கடவுள் அப்படித்தான்; God is proportional to devotee;
  நீ கடவுளை ப்ரோக்கராகப் பார்த்தால் அவர் கல்யாண ப்ரோக்கர் தான். நீ
  கடவுளை முக்தி தாயகனாகப் பார்த்தால் அவர் முக்தி தாயகன் தான்.
  ‘கல் எனில் கல்,,கடவுள் எனில் கடவுள்..’

  ஒரு சாமியார் மரத்தடியில் உட்கார்ந்து தியானம் செய்து கொண்டிருந்தாராம். அதைப் பார்த்த ஒரு திருடன், ‘இவன் கண்டிப்பா திருடன் தான். ஊரை ஏமாத்த
  இதுமாதிரி வேஷம் போடறான்’ என்றானாம். அதே வழியில் வந்த இன்னொரு சாது, ‘இவர் பெரிய யோகி போலிருக்கிறது’ என்ன சாந்தம் முகத்தில் ‘என்றாராம். இது ராம கிருஷ்ணரின் கதை. அது போல நாம் எவ்வாறு உருவகிக்கிறோமோ அவ்வாறே கடவுளும்.

  கண்ணன் கடவுள் தான்.கோபிகைகள் அவனிடத்தில் காதலைக் கேட்டனர். சுதாமா அவனிடத்தில் செல்வத்தைக் கேட்டான். அர்ஜுனன் அவனது அறிவுரையை எதிர்பார்த்தான். அக்ரூரர் அவனிடத்தில் ஞானத்தை யாசித்தார்.திரௌபதி ‘கண்ணா நீயே வேண்டும்’ என்று கோரினாள்.

  கடவுள் என்ற கடலை பலபேர் காலை நனைக்க மட்டும் உபயோகிக்கிறார்கள்.
  வெகு சிலரே அதில் மூழ்கி பிரம்மானந்தம் என்ற முத்தை எடுக்கின்றனர்.

  “புளக சரீருலை ஆனந்த பயோதி நிமக்னுலை முதம்புனனு
  யசமு கலவார்”-எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமுலு

  • என். சொக்கன் says:

   //இப்படி அந்தப் பாடலில் வருகிறதா?//

   நேரடியாக வரவில்லை. ஆனால் உட்பொருளாக அது இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் சேர்த்தேன்.

  • ஆனந்தன் says:

   “கடவுள் என்ற கடலைப் பலபேர் காலை நனைக்க மட்டும் உபயோகிக்கிறார்கள்.
   வெகு சிலரே அதில் மூழ்கி, பிரம்மானந்தம் என்ற முத்தை எடுக்கின்றனர்.”
   இந்த வசனம் எனக்கு நன்றாகப் பிடித்தது. நன்றி!

 2. Samudra says:

  //வெள்ளத்து அணை கிடந்தாய், இனி உன்னை விட்டு எங்கொள்வனே?//
  -என்ன ஒரு வார்த்தைப் பிரயோகம்!..தமிழ் நாட்டில் பிறந்ததற்காக நான் பெருமைப்படும் ஒரே விஷயம் -“தமிழ்”

  • anonymous says:

   அழகான வரியைப் பிடித்துக் கொண்டீர்கள்!
   //வெள்ளத்து அணை கிடந்தாய், இனி
   உன்னை விட்டு எங்கொள்வனே//

   இதே போல் தொனியில் மாணிக்கவாசகரும் அழகாப் பாடுவாரு!
   //எங்கெழுந்து அருளுவது இனியே!// = எங் கொள்வனே

   ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
   எங்கெழுந்து அருளுவதினியே!

 3. anonymous says:

  நம்மாழ்வார்-ன்னு “ஆழ்வார்” விகுதியெல்லாம் அவரு காலத்தில் கிடையாது!
  சொல்லப்போனா, தான் ஒரு “ஆழ்வார்”-ன்னே அவருக்குத் தெரியாது!
  அவரு(அவன்) ஒரு சின்னப் பையன் = மாறன்!
  16 வயசுல பாட ஆரம்பிச்சி, 32 வயசுலேயே செத்துப் போயிட்டான்!

  ஆனா, அவர்(அவன்) பாட்டெல்லாம், அப்படியே வேதம் போல வந்து விழும்! அதே ஓசையில்! அதே கருத்தில்!
  என்ன, ரொம்ப ஞானமான விசயத்தைக் கூட, simpleஆ பாடீருவான்!

  தன்னை நாயகியாய்ப் பாவித்துத் தான், அதிகம் பாடுவார்(ன்)!:))
  – இது ஏன்-ன்னு தெரியுமா?:)
  —-

  அந்த வயசுக்கே உரிய குறும்பு, துள்ளல் ஓசை…பாட்டுல நல்லாவே தொனிக்கும்!
  இந்தப் பாட்டையே எடுத்துக்கோங்க!
  //’வள்ளல் மணிவண்ணனே’ என்று என்றே உனையும் வஞ்சிக்கும்//

  வெறும் மணிவண்ணனே-ன்னு பக்தர்கள் பாடலாமே? அது என்ன “வள்ளல்” மணிவண்ணன்?
  வள்ளல்-ன்னு முகத்துதி செய்தால், கேட்டது குடுப்பாங்க-ல்ல? அதான் கணக்குப் போட்டு கேக்குறாங்க இது போல “பக்தர்கள்”:))

  அப்போ கூட கண்ணனே, திருமாலே, மாயோனே-ன்னு பாடலை! “மணி”-வண்ணன்! நவ-மணிகள்! செல்வம்!!
  Money வண்ணன்?:) வள்ளல் Money வண்ணன்!
  —-

 4. anonymous says:

  ஆனா, அதுக்காக அவங்களை எள்ளி நகையாடி விட முடியாது!
  நம்மில் பலபேரும் இறைவனிடம் பேரமே பேசுவது இல்லையா என்ன? ஒவ்வொருத்தரும் அவங்கவங்க அளவில் பண்ணுறோம்; அவ்ளோ தான்!

  இறைவன் திடீர்-ன்னு முன்னாடி வந்து, “சூப்பர்! கீர்த்தனையெல்லாம் சொல்லுற, வா மோட்சம் போவலாம்”-ன்னு கூப்பிட்டாப் போயிருவோமா?:)
  “ஐயோ, பொண்ணுக்கு கல்யாணம் முடியட்டும், என் புக்கு நாளிக்கி ரிலீஸ்-சொல்ப வெயிட் மாடுறீ, கோச்சடையான் ரிலீஸ் பாத்துட்டு வரேனே, ஆபிசில் Promotion வாங்கிட்டு வரேனே, என்ன அவசரம்?” -ன்னு சொல்லுவோம்-ல்ல?:))

  ஏதோ பொருள் மேல் இருக்கும் பற்றில், கண்டதையும் செய்யாம, இதுக்காச்சும் இறைவனைத் தொட்டுக்கறானே! சந்தோசம்!:)
  —–

  குடும்பம் போலத் தான்!
  முதன்முதலில் குடும்பம் நடத்தத் துவங்கும் போது…வேற ஏதோ ஒன்னு மேலத் தான் பற்று ‘ஜாஸ்தியா’ இருக்கும்!:)
  ஆனா…நாளடைவில், அந்தப் பற்றைக் காட்டிலும், அன்பு முந்தி விடுகிறது இல்லையா?

  Sundayன்னா ரெண்டு-ன்னு ஆரம்பித்தவன்…ஏய் இன்னிக்கு Sundayயா? ச்சே நீ பாவம்..தினமும் தான் Oppice கிளம்பும் போதே கட்டிக் குடுக்கற; இன்னிக்கி சமைக்க வேணாம்! நம்ம எல்லாருக்கும் நான் வெளியில் வாங்கி வரேன்-ன்னு சொல்லுறான்-ல்ல?:)

  அப்படி…பரிமளிக்கனும்!
  முதலில் “பற்று” இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமா அந்தப் பற்றே “அன்பு”-ன்னு மாறீடணும்!
  அந்தப் “புரிதல்” வரணும்!

  புரிந்து கொண்டாலே, பாதி புரிந்தா (செய்தா) போலத் தான்!
  அதான் தமிழில் செயலுக்கும்=”புரி” ன்னு பேரு வச்சாங்க!
  உறவைப் “புரிதல்” போல ஒரு செல்வம் உலகத்தில் இல்லை!
  —-

  அதான், இந்த மாறன் பையனாகிய ஆழ்வாரும் பாடுறாரு!
  நானும் கள்ள மனம் தான்! ஆனா “கள்ள மனம் தவிர்ந்தே…உன்னைக் கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேன்!”
  உன்னைப் “புரிந்து” கொண்டு உய்ந்தொழிந்தேன்!

 5. amas32 says:

  ஆழ்வார்கள் பாடல்களை ஆழ்ந்து அனுபவிக்கணம்.

  நாலே வரிகளில் மனிதனின் குணத்தையும் இறைவனின் கருணையையும் சொல்லி, நாம் உய்யும் வழியையும் காட்டிவிடுகின்றார்.

  திருப்பதி உண்டியலின் ஒரு நாள் கலெக்ஷனை எண்ண இப்போ இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. எப்படி இவ்வளவு பணம்? அன்பினால் கொடுக்கப்பட்டது சொற்ப தொகையாகத்தான் இருக்கும். திருப்பதி பெருமாளையும் தங்கள் தொழிலில் பங்குதாரராக்கி அவர் பங்கை உண்டியலில் போடும் பலரை எனக்குத் தெரியும். அதில் எவ்வளவு நல்ல பணம், எவ்வளவு கள்ளப் பணம்?

  உடல் நிலை சரியில்லாதபோது நானே அப்படித்தான் வேண்டிக் கொள்கிறேன், பின் உண்டியலிலும் காணிக்கை செலுத்துகிறேன். நம் வாழ்வில் இன்னல்கள் வரும்போது இறைவனைத் தான் நாடுகிறோம். அது நம் இயல்பு. வேறு எங்கும் உதவி கிடைக்காத போது அவனைத் தானே கேட்க வேண்டும். பொறுப்புகள் உள்ளதே. என் மகளுக்குத் திருமணம் நடந்தவுடன் உனக்கு கல்யாண உத்சவம் நடத்துகிறேன் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன். இறைவனுக்கு அதனால் எண்ண கிடைக்கப் போகிறது? நம் மன திருப்திக்குச் செய்யும் செயல் இது. இதை ஒரு வகை பேரம் என்றும் என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. நம் நன்றியை, மகிழ்ச்சியை காட்டும் முறை என்று சொல்லலாம்.

  ஆனால் இதெல்லாம் கேட்டு சலித்து பின் கண்ணா நீயே வேண்டும் என்ற நிலை வரும். அல்லது லௌகீக பிரச்சனைகளுக்குத் தீர்வும் வேண்டும், நீயும் வேண்டும் என்ற இரட்டை நிலை மாறி நீ மட்டுமே வேண்டும் என்ற நிலை வரும். அதற்கு அந்த ஆழ்வார்களையும், அவர்கள் மூலம் தெரிந்து கொண்ட கண்ணனும் நமக்கு அருள் புரிய வேண்டுகிறேன்.

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s