க(வி)சடதபற

துடித்துத் தடித்துத் துடுப்பு எடுத்த கோடல்

தொடுத்த தொடை கடுக்கை பொன்போல் பொடித்துத்

தொடை படைத்த தோள் துடித்த தோகை கூத்தாடக்

கடி படைத்துக் காட்டித்துக் காடு

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: காளமேகம்

காந்தள் மலர்கள் ஒளி பொருந்திய அரும்புகளை முளைக்கவிட்டன.

கொன்றை மலர்கள் பொன் போல் ஒளிர்கின்ற மாலைகளைத் தொங்கவிட்டன.

தோகை மயில்கள் கூத்தாடத் தொடங்கின.

வளையல் அணிந்த பெண்களின் தோள்கள் சிலிர்த்துத் துடித்தன.

இப்படியாக, தனக்கென்று ஒரு தனி மணத்துடன் புதுக் காட்சி ஒன்றைக் காண்பிக்கத் தொடங்கியது காடு.

துக்கடா

 • காளமேகத்தின் மற்ற பாடல்களோடு ஒப்பிடும்போது இந்தப் பாட்டும் கருத்தும் கொஞ்சம் சாதாரணமாகத் தோன்றுகிறது அல்லவா? அதற்குக் காரணம் உண்டு, இது கருத்துக்காக எழுதிய பாட்டு அல்ல, சவாலுக்காக எழுதியது!
 • இந்தப் பாடல் முழுமையும் வல்லின எழுத்துகளைமட்டுமே கொண்டு (கசடதபற + அவற்றின்ன் குடும்பம்) எழுதப்பட்டது. இப்படி:
 • துடித்துத் தடித்துத் துடுப்பெடுத்த கோடற்
 • றொடுத்த தொடைகடுக்கை பொற்போற் பொடித்துத்
 • தொடைபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக்
 • கடிபடைத்துக் காட்டித்துக் காடு

232/365

Advertisements
This entry was posted in காளமேகம், தனிப்பாடல், வர்ணனை, வார்த்தை விளையாட்டு, வெண்பா. Bookmark the permalink.

12 Responses to க(வி)சடதபற

 1. amas32 says:

  அப்பா, இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா? ல், ள், வருகிறதே அதுவும் வல்லினத்தில் சேர்த்தியா? (உண்மையாகவே தெரியாமல் கேட்கிறேன்)
  கொன்றை மலர்கள் மஞ்சள் நிறத்தில் அழகாகத் தொங்குவதை மாலைகள் போல என்று கவி காளமேகம் சொல்வது, காட்சியை கண் முன் விரிக்கிறது.
  பெண்களின் தோள்கள் மகிழ்ச்சியால் சிலிர்த்து துடித்தனவா?
  இந்தக் கவிதை சொல்வதை நினைவில் நிறுத்திப் பார்த்தால் ஒரு வண்ண ஓவியம் போல தெரிகிறது!
  amas32

  • anonymous says:

   //ல், ள், வருகிறதே அதுவும் வல்லினத்தில் சேர்த்தியா?//

   சொக்கர், கீழே குடுத்துள்ள வெண்பா வடிவத்தையும் காணவும்! அதில் ல,ள வராது!
   சில ஒற்றெழுத்துக்கள், மற்ற சொற்களோடு புணரும் போது வல்லினம் ஆகி விடும்! மேலே இருக்கும் பாட்டில் பாத்தீங்க-ன்னா…

   *கோடல் தொடுத்த = கோடற் தொடுத்த
   *பொன் போல் பொடித்து = பொற்போற் பொடித்து

   (லள வேற்றுமையில் றட-வும்
   ணன வேற்றுமையில் டற-வும்…போன்ற தொல்காப்பிய விதிகளின் படி)
   பொன் + குடம் = பொற்குடம்; மண் + குடம் = மட்குடம்

   நாம எளிதா வாசிக்கணுமே-ன்னு கோடற்றொடுத்த-ன்னு எழுதாமல், பிரித்து எழுதுகிறார் சொக்கர்!
   —-

   அதே சமயம் இப்படிப் பிரிப்பதை, சில இலக்கண அன்பர்கள் ஏற்கத் தயங்குவர்! ஏன்-ன்னா வெண்பா வடிவம் சிதைவுறலாம்! இலவசக் கொத்தனார் முன்பு இதைச் சொல்லி உள்ளார்!
   குறிப்பா, இந்தப் பாட்டு=Special Song! இதைப் பிரிச்சி எழுதினா, வல்லினப் பாட்டு என்கிற அந்த specialty போய் விடும்! So the purists also have a point!
   —-

   So Chokkar is balancing between the puristic & laymen views!
   365paa அன்பர்கள், இதைப் பயன்படுத்திக் கொண்டு, வெறுமனே விளக்கத்தை மட்டுமே வாசிக்காமல்…
   பதம் பிரிச்ச மூலத் தமிழ்ப் பாடலையும் தவறாது வாசித்துப் பழகவும்!
   This will really help readers, to navigate the தமிழ் இலக்கியக் கடல் adventure on their own!

   • amas32 says:

    Thank you for making me notice such an important point. படிப்பதற்கு எளிதாக இருப்பதாலும் புரிந்து கொள்ள இலகுவாக இருப்பதாலும் நான் எப்பொழுதும் சொக்கர் பிரித்து எழுதும் பாடலை மட்டுமே படிப்பேன். நீங்கள் இன்று சுட்டி காட்டிய பின் தான் புரிந்து கொண்டேன். மூலத் தமிழ் பாடலையும் படிக்கப் பழகிக் கொள்கிறேன், நன்றி 🙂
    amas32

 2. anonymous says:

  காளமேகம் = 15ஆம் நூற்றாண்டு சாரு நிவேதிதா போல:)
  (யாரும் இந்தக் கூற்றுக்கு கோபித்துக் கொள்ள வேண்டாம்)

  காளமேகத்தைச் சுற்றிப் பல கதைகள் பின்னப்பட்டு விட்டன! அதில் ஒரு சில மட்டுமே நிகழ்வுகள்! மற்ற பலவும் பின்னாள் புலவர்களின் புனைவு இன்பம்! அந்த அளவுக்கு, காளமேகம்-ன்னா ஒரு தனிப்பட்ட ’கிக்’ இலக்கிய உலகிலே!
  ——

  என்னது, இலக்கிய உலகமா? காளமேகம் எழுதுனது இலக்கியமா?-ன்னு கேட்டுறாதீக…
  சிலப்பதிகாரம் இலக்கியம்! வள்ளுவம் இலக்கியம்…
  காளமேகம் என்னய்யா இலக்கியம்? வெறும் வார்த்தை விளையாட்டு, சொற்குவியல்-ன்னு சிலர் பேசலாம்!

  ஆனா ஒன்னு ஞாபகம் வச்சிக்கணும்…
  இங்கே கல்கி, புதுமைப்பித்தன், லா.ச.ரா, தி ஜானகிராமன் ன்னு எப்படிச் சிலரின் அறிவுப் பசிக்குத் தேவைப்படுதோ….
  ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் – இவங்களும் சிலரின் வேற பசிக்குத் தேவைப்படுது!:)
  எல்லாருக்கும் ஒரே மாதிரியே பசிக்கணும்-ன்னா எப்படி?:)
  ——

  ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதமான வாசிப்பு அனுபவம்!
  எல்லாருமே இளங்கோ போல காவியம் எழுத ஆரம்பிச்சுட்டா, ஒலகம் என்னத்துக்கு ஆவுறது?
  காளமேகம் போலவும் சில எழுத்துக்கள் தேவைப்படுது!
  அது தனித்த “இலக்கிய” அந்தஸ்து பெறாமல் போகலாம்! ஆனா தமிழ் இலக்கிய வரலாற்றில் காளமேகம் என்னும் பெயரை நீக்கவே முடியாது!

  தமிழ் இலக்கியம் ஒரு குளம் அல்ல! அது அடித்துச் செல்லும் ஆறு!
  அதில் இலையும் அடித்துச் செல்லும், கட்டையும் அடித்துச் செல்லும்!

  என்ன, இலை வேகமாப் போயீரும், கட்டை நின்னு போகும்; அவ்வளவே!
  கட்டை மட்டுமே “இலக்கியம்”, அதை மட்டுமே அடித்துச் செல்வேன் என்று தமிழ் ஆறு சொல்வதேயில்லை!
  அதனால் தான்….
  ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா உன்
  சீர் இளமைத் திறம் வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே!!

 3. anonymous says:

  காளமேகம் = 15ஆம் நூற்றாண்டு சாரு நிவேதிதா
  -ன்னு சும்மாச் சொல்லலை! பல விடயங்களில் ஒத்துப் போகும்!:)

  விளையாட்டான Approach, கிளுகிளு Approach, சண்டை போடும் Approach-ன்னு காளமேகம் வழியே தனி வழி! அதுக்கு-ன்னு தனித்த ரசிகர்கள்:)
  காளமேகம் பத்திய நிகழ்வுகள், பாதி புனைவு தான்!
  அவர் வரலாற்றையே சொந்தக் கற்பனை கூட்டிக் கூட்டிப் புனைவு ஆக்கீட்டாங்க பின்னாளைய தனிப்பாடல் புலவர்கள்! அந்த அளவுக்கு ஆளு ’கிக்’ ஆனவரு:)

  காளமேகம், கம்பரையே பப்ளிக்காத் திட்டிப் பாட்டு எழுதுவாரு! சலசலப்பு கிளப்பியே பிரபலமும் ஆவாரு!

  நாரா யணனை நராயணன்என் றேகம்பன்
  ஓராமல் சொன்ன உறுதியால் – நேர்ஆக
  வார்என்றால் வர்என்பேன்; வாள்என்றால் வள்என்பேன்
  நார்என்றால் நர்என்பேன் நான்
  —–

  இது மட்டுமா? சொக்கனையும் திட்டுவாரு!:)

  சொக்கன் மதுரையினில் தொண்டர்க்கு என்றே அவிழ்ந்த
  பொய்க்குதிரை சந்தைக்குப் போகுமதோ? – மிக்க
  கரசரணா! அந்தக் கரும்புறத்தார்க்கு எல்லாம்
  அரசுஅரணா? மாவலியா ணா!!

  இப்படிக் “கலாய்த்தல் திணை”யில் புகுந்து விளையாடியவர் காளமேகப் புலவர்!
  இதெல்லாம் இலக்கியமா?-ன்னு கேக்கக் கூடாது! அனுபவிக்கணும்! ஆராயக் கூடாது:)
  —–

  காளமேகத்தின் சொந்த ஊர் திருவரங்கம்; கோயில் மடப்பள்ளியில் வேலை பாத்தவரு; நெய்யும் பலகாரமா முங்கிமுங்கி அறிவே இல்லீன்னாலும் காதல் வயப்பட்டவரு;
  அவளோ திருவானைக்கா சைவ தேவதாசி; அவளுக்காக மதம் மாறீட்டாரு! அம்பாள் “உச்சிஷ்டமான” (எச்சில்) தாம்பூலத்தை, அவர் வாயில் அன்னை அகிலாண்டேஸ்வரியே துப்ப, கவிபாடும் ஆற்றல் வாய்ச்சுது!
  தன்னை மதிக்காத சில இடங்களில் கவி பாடியே ஊரை எரிச்சாரு; மண்ணு மூடிக்கிச்சி, கோவக் காரரு-ன்னு இவரைச் சுற்றிச் பலப்பல “கதைகள்”!

  ஆனால் அண்மையில், தொல்பொருள் அறிஞர் டாக்டர் நாகசாமி, காஞ்சிபுரம் கோயில் கல்வெட்டுகளில், காளமேகம் பத்திய குறிப்புகள் பலதை எடுத்து இருக்காரு!
  அதில் அவர் சொந்த ஊர் தொண்டை நாடு, எண்ணாயிரம் போன்ற அரிய தகவல்கள் கிடைத்துள்ளன!

  காளமேகம் பற்றிய ஒரு எளிய-முழுமையான நூல் எழுதினா, பிச்சிக்கிட்டுப் போகும்:)

  • anonymous says:

   காளமேக நிவேதிதா:)

   பொதுவாக் காளமேகத்தின், சொல்விளையாட்டு/வஞ்சப் புகழ்ச்சி பாடல்களை மட்டுமே படிச்சிருப்போம்!
   ஆனா, “அண்ணல்” வழியிலே, மற்ற பெரும் புலவர்களை publicஆ திட்டும் பாடல்கள், கிளுகிளு பாடல்கள் எழுதுவதிலும் வல்லவரு காளமேகம்!

   திம்மி என்ற ஒரு தெலுங்கு தாசியிடம் தான் பட்ட பாட்டை “விளக்கும்” காளமேகக் “கவிதை::)

   ஏமிரா-ஓரி என்பாள் எந்துண்டி வஸ்தி என்பாள்
   தாம்-இராச் சொன்ன எல்லாம் தலைக்கடை தெரிந்தும் இல்லை
   போம்-இராச் சூழும் சோலை பொருகொண்டைத் திம்மி கையில்
   நாம்-இராப் பட்ட பாடு, நமன் கையில் பாடு தானே!!

 4. anonymous says:

  தமிழ் இலக்கிய வளர்ச்சி பத்தி எதையோ சொல்ல வந்தேன்; “சாரு”-ன்னாலே திசை மாறி விடும் போல! மன்னிக்கவும்:)

  இங்கே மேலே சொக்கர் குடுத்த பாட்டில், பூராவும் வல்லினம்! இது போட்டிக்கு எழுதுனாரா, அது என்னாக் கதை-ன்னு தெரியாது! ஆனா, இதே போல்
  * மெல்லினம் மட்டுமே வச்சி
  * குறில் மட்டுமே வச்சி
  * நெடில் மட்டுமே வச்சி
  -ன்னு விதம் விதமா பாட்டு எழுதி இருக்காரு நம்ம காளமேகம்!

  இதுக்கு இவருக்கு Inspiration = கம்பன் & விதர்ப்ப தேசம்!
  கம்பன் இது போல சொற்ப பாடல்கள் செய்துள்ளான்! (பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர், உருப்பசி உடைவாள் போன்ற பாடல்கள்)
  This type of music or nattuvaangam was also observed from dance artistes of Vidharba! எனவே இதுக்கு “வைதருப்பம்” என்ற பேரும், தமிழில் வழங்கலாயிற்று!
  —–

  தமிழில் “அணி இலக்கணம்” என்பது பின்னாளில் மாறியது!

  தொல்காப்பியர், நன்னூலில் சொன்ன உவம-உருவகம் முதலான 9 அணிகள் மட்டுமல்லாது….வேற சில புது “ஓசை” அணிகளும் பின்னாளில் எழுந்தன!

  அதில் ஒன்னு தான், மேலே கண்ட வல்லினப் பா, மெல்லினப் பா, குறில் பா, நெடில் பா போன்ற செய்யுள்!

  இதுக்குப் பேரு = செறிவிசை (அ) செறிவு
  * வல்லெழுத்து மட்டுமே வந்தா = செறிவிசை
  * வல்லெழுத்தே வராம வந்தா = நெகிழிசை

  தண்டியலங்காரம், இது போன்ற புதுப்புது “அணி இலக்கணம்” பற்றிப் பேசும்!
  இப்படி…அணி இலக்கணம் நாட்பட நாட்பட வளர்ந்தது!
  அருணகிரி காலத்தில், “சந்தம் வைச்ச அணி” ஒரு உச்சிக்கே சென்றது! “அணி”-ன்னாலே அலங்காரம் தானே!

 5. anonymous says:

  இப்படித் தமிழ் “இலக்கியத்துக்கு” புதுப்புது அணிகள்!

  அருணகிரிப் பாட்டெல்லாம் தமிழ் இலக்கியம் ஆகா-ன்னு அப்பவே சிலரு பேசினாங்க! அதே போலத் தான் இப்பவும்!
  அது இலக்கியம் அல்ல, இதுவே இலக்கியம்-ன்னு சில ’இலக்கியப் பீடாதிபதிகள்’ பேசுறாக!:)

  ஆனானப்பட்ட தூய தமிழ் அறிஞரான தேவநேயப் பாவாணரே, அருணகிரியைத் தமிழ் இலக்கிய வானில் வைக்கத் தவறவில்லை!
  ஆனால், இன்றைய “இலக்கியவாதிகள்”, இந்த “அணி இலக்கிய” நுட்பத்தைத் தவறவிட்டு விடுகின்றனர்!

  இது குறித்த சர்ச்சைகள் எழுப்பி எழுப்பியே,
  வாசகர்களின் இலக்கிய நுகர்ச்சிகளை மழுங்கடித்து,
  தத்தம் வணிகப் பெருவெள்ளத்தில்,
  இலக்கியப் பெருவெள்ளத்தைத் தொலைத்து விடும் social media adventures!:(

  இளங்கோ மட்டுமே ’இலக்கியம்’; கம்பன் வெறும்”கலக்கியம்’ என்று இளங்கோவே சொல்ல மாட்டாரு:)
  தமிழ் இலக்கிய வரலாற்றில்….
  * சங்கத் தமிழுக்கும் இடம் உண்டு,
  * ’சொற்குவை’ காளமேகத்துக்கும் இடம் உண்டு!

  எழுதிச் செல்லும் தமிழின் கை,
  எழுதி எழுதி மேற்செல்லும்!!

 6. Samudra says:

  Thanks..

  விநாயகர் சதுர்த்தி முடிந்து வீதியில் வகை வகையாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் வரும் போது நாம் என்ன செய்வோம்? வெளியில் நின்று வேடிக்கை பார்ப்போம்.பக்கத்தில் வந்ததும் போய் காணிக்கை போட்டு விபூசி பூசிக் கொள்வோம்…ஆனால் காளமேகப் புலவர் விநாயகர் வீதியில் ஊர்வலம் வருவதைப் பார்த்து விட்டு எப்படி ஜோக் அடிக்கிறார் பாருங்கள்..

  மூப்பான் மழுவும் முராரிதிருச் சக்கரமும்
  பார்ப்பான் கதையும் பறிபோச்சோ- மாப்பார்
  வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை ஐயோ
  எலி இழுத்துப் போகின்றது ,ஏன்?

  “பரமசிவன் கையில் ஏந்தும் மழுவும், திருமால் கையில் இருக்கும் சுதர்சனமும், யமன் கையில் ஏந்தும் கதையும் எங்காவது காணாமல் போய் விட்டதா என்ன? இவ்வளவு பேர் இருந்தும் மிகுந்த வலிமை கொண்ட இந்த மதயானையை ஒரு பெருச்சாளி இழுத்துக்கொண்டு போகிறது பாருங்கள்…”-

 7. அபராஜிதன் says:

  நான் காளமேகத்தின் வசைப்பாடல்களுக்கும் சிலேடைகளுக்கும் எழுத்து ஜாலங்களுக்கும் ரசிகன். இனி பாடல்களைத் தெரிவு செய்யும்போது, காளமேகத்தின் பாடல்களையும் கொஞ்சம் அதிகமாகத் தெரிவு செய்து போடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s