அமுதம்!

அன்னவளை அல்லள் என, ஆம் என அயிர்ப்பான்,

கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல்வண்ணன்

உன் உயிர் நிலைப்பது ஒர் அருத்தியொடு உழைத்து ஆண்டு

இன் அமிர்து எழக் களிகொள் இந்திரனை ஒத்தான்

*

‘நறத்து உறை முதிர்ச்சி உறு நல் அமிழ்து பில்கு உற்று

அறத்தின் விளை ஒத்து முகடு உந்தி அருகு உய்க்கும்

நிறத்துவர் இதழ்க் குயில் நினைப்பிடை அல்லால்

புறத்தும் உளதோ?’ என மனத்தொடு புகன்றான்

நூல்: கம்ப ராமாயணம் (பாலகாண்டம், கோலம் காண் படலம்)

பாடியவர்: கம்பர்

சூழல்: ஜனகனின் சபையில் எல்லார் முன்பாகவும் தோன்றுகிறாள் சீதை. அப்போது ராமன் மனத்தில் ஏற்படும் எண்ணங்கள்

’இந்த ஜனகனின் மகள், முன்பு கன்னி மாடத்தில் நான் பார்த்த பெண்தானா?’ என்று ராமனுக்குச் சந்தேகம்.

’அவளாகதான் இருக்கும்’ என்று ஒரு மனம் சொல்கிறது, ‘ம்ஹூம், இருக்காது’ என்று இன்னொரு மனம் மறுக்கிறது. ஒரே குழப்பம்.

இப்போது, சீதை வருகிறாள். அவள் முகத்தைக் கண்டதும் ராமனுக்கு மகிழ்ச்சி. ‘அவளேதான் இவள்’ என்று உறுதிப்படுத்திக்கொண்டுவிட்டான். அந்த ஆனந்தத்தில் திளைத்தான்.

முன்பு ஒரு காலத்தில், தேவர்களும் அசுரர்களும் கஷ்டப்பட்டுப் பாற்கடலைக் கடைந்தார்கள். அந்த உழைப்பின் பலனாக, அவர்களுடைய உயிரை என்றும் உடலில் நிலைத்து நிற்கச் செய்யும் அமுதம் தோன்றியது. அதைக் கண்டு இந்திரனும் மற்றவர்களும் மகிழ்ந்தார்கள்.

இப்போது சீதை என்கிற கன்னி அமுதத்தைக் கண்டு ராமன் அடைந்த மகிழ்ச்சியும் அதேமாதிரியானதுதான்.

*

அப்போது, ராமன் தன் மனத்துக்குள் இப்படிச் சொல்லிக்கொண்டான்:

’சிவந்த இதழ்களைக் கொண்ட இந்தக் குயிலை அன்றைக்கு நான் கன்னிமாடத்தில் பார்த்தேன். தேனில் ஊறிய இனிப்புபோல், நல்ல அறச் செயல்களைச் செய்வதனால் கிடைக்கும் பலன்களைப்போல் இனிமையானவளாக இவள் எனக்குத் தோன்றினாள்.’

‘அந்தக் கணமே, அவள் என்னுடைய நெஞ்சுக்குள் புகுந்துவிட்டாள். இப்போதும் அங்கேதான் நிரந்தரமாகக் குடியிருக்கிறாள்.’

‘ஆச்சர்யமான விஷயம், என் மனத்துக்குள்மட்டும் வாழ்கிறாள் என்று நான் நினைத்துக்கொண்டிருந்த அந்தப் பெண், இங்கே வெளியே உயிரோடு வந்து நிற்கிறாளே. ஆச்சர்யம்தான்!’

230/365

Advertisements
This entry was posted in கதை கேளு கதை கேளு, கம்ப ராமாயணம், கம்பர், காதல், நாடகம், ராமன். Bookmark the permalink.

21 Responses to அமுதம்!

 1. அருமை. கம்பனை பற்றி இந்த வார்த்தை சொல்ல வேண்டுமா? 🙂

  ஒன்று இங்கு சொல்ல வேண்டும். முதலில் வரும் உவமைகள் எல்லாம் இப்பொழுது நமக்கு பழகிவிட்டன. “தேனில் ஊறிய இனிப்பு”, “பாற்கடலில் தோன்றிய முத்து” போன்றவை. அதனால் அவை என்னை அதிகம் பாதிக்கவில்லை. ஆனால் கடைசியில் வரும் அந்த கேள்வி தான் கம்பன் எவ்வளவு பெரிய கவிஞன் என்பதை நமக்கு காட்டுகிறது!! “நினைப்பிடை அல்லால் புறத்தும் உளதோ?” என்ன ஒரு கேள்வி? அவளை நான் அல்லவா படித்தேன். ஆனால் அவளோ பிரம்மன் படைத்த படைப்பு போல் வந்து நிற்கிறாளே?
  நமக்கு உகந்தவர்கள் எப்படி இருந்தாலும் நாம் அவர்களை மறு சிருஷ்டி செய்துகொள்கிறோம். நம் மனதுக்குள் அவர்களை வேறு ஒரு உருவத்தில் பார்க்கிறோம். சில தருணங்களில் நாம் படைத்த படைப்பிலிருந்து அவர்கள் விடுபட்டு பிராமணன் ஸ்ருஷ்டி போல் நடந்துக்கொள்வார்கள். அப்பொழுது நமக்கு குழப்பம் ஏற்படும். நாம் இளைஞராக இருக்கும்பொழுது இது வெகு சகஜமாக நடக்கிறது. வயதான பிறகும், பல அடிகள் வாங்கிய பிறகும், நாம் இவ்வாறு பிறரை நம் மனதுக்குள் ஸ்ரிஷ்டிப்பதை விடுவதே இல்லை. ஒரு பிரெஞ்சு (அல்லது ஜெர்மானிய ) கவிஞன் இவ்வாறு சொன்னான்: “Humanity moves on images, not on philosophy”. அது உண்மை என்றே படுகிறது.

 2. Aaah. Mistakes:
  பிராமணன்->பிரம்மன்
  படித்தேன் -> படைத்தேன்

 3. GiRa ஜிரா says:

  சிலப்பதிகாரத்தையோ கம்பராமாயணத்தையோ எடுத்தால் லேசில் விட முடியாது. கதைக்குள் கதை மாதிரி ஆழமாப் போய்க் கொண்டேயிருக்கும். நாமாகப் பார்த்து வெளியே வந்தால்தான் உண்டு.

  ஒரு அழகான எடுத்துக்காட்டு சொல்வார்கள். புத்த பெருமாள் தவத்தில் சிறந்தவர். உடம்படக்கி உணர்வடக்கி உயிரடக்கி புத்தர் பெருமாள் தவம் செய்யும் கோலம் மிகச் சிறப்பானது. தவம் செய்கின்றவர்களைச் சுற்றி ஒரு காந்தப் புலம் உண்டாகும். இதை ஆங்கிலத்தில் Aura என்கிறார்கள். தவத்தின் சிறப்பு கூடக்கூட அந்தக் காந்தப் புலத்தின் வலிமையும் பரப்பளவும் கூடும்.

  புத்த பெருமாளின் தவத்தின் காந்தப்புலத்தில் இருக்கும் அத்தனை உயிர்களும் அமைதியடைந்து நிம்மதியடைந்து இன்பப் பெருக்கில் இருக்கும். ஒரு புலி மானைத் துரத்தி வரும் வேளையில் அந்தக் காந்தப்புலத்துக்குள் நுழைந்து விட்டால் அதுவும் அமைதியாகி பேரின்பத்தில் மூழ்கிவிடும். தான் புலி என்பதையும் மறந்தது, தனக்குப் பசிப்பதால்தான் மானைத் துரத்தினோம் என்பதையும் மறந்து அமைதியடைந்திருக்கும் அந்தப் புலி.

  தானாகத் தவறிப் போய் அந்தக் காந்தப்புலனை விட்டு வெளியே சென்றால்தான் புலிக்குத் தான் புலி என்பதே நினைவுக்கு வரும். அதுவும் சற்று நேரம் கழித்துதான்.

  புத்த பெருமாளின் தவப்புலத்தைப் போல வலிமையான புலத்தைக் கொண்டவை சிலம்பும் கம்பராமாயணமும். படிப்பவர் தன்னை மறந்து ஆழ்ந்து போய் விடுவார்கள். கருத்தை எதிர்ப்பவர்கள் கூட கவிச்சுவையையும் புலமைச்சுவையையும் ரசித்து ரசித்துப் போதாமல் ஆழ்வார்கள்.

  தமிழில் வந்த காப்பியங்களில் ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரமும் பிற்காலக் காப்பியங்களில் கம்பராமாயணமும் மட்டுமே இந்தச் சிறப்பை பெற்றன.

 4. GiRa ஜிரா says:

  கம்பராமாயணப் பாடல்களைப் படிக்கிற போது வால்மீகி ஒப்பீடு தவிர்க்க முடியாது. இந்த ஒப்பீடும் தேவையானதுதான். அப்போது தான் கம்பன் என்ன செய்தான் என்று தெரியும்.

  இன்றைக்கு நாகா கொடுத்திருக்கும் பாடல் என்ன அழகான காட்சியமைப்பு. ஆனால் இப்படியொரு காட்சியே வால்மீகி ராமாயணத்தில் இல்லை.

  இராமனையும் இலக்குவனையும் மிதிலைக்கு விசுவாமித்திரர் அழைத்து வருகிறார். சனகனைச் சந்திக்கிறார்கள். போட்டி நடக்கிறது. இராமன் வில்லை ஒடிக்கிறான். இப்படித்தான் கதை போகிறது.

  கம்பன் ஏன் வால்மீகி இராமாயணத்தை அப்படியே தமிழ்ப்படுத்தவில்லையென்று நான் யோசித்துப் பார்ப்பதுண்டு. அதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

  வால்மீகி ராமாயணம் எழுதிப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் கம்பன் ராமகாதையை எழுதுகிறான்.

  தமிழில் இராமகாதையை எழுதும் போது அது தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற ஐயம் கம்பருக்கு இருந்திருக்க வேண்டும். வால்மீகி ராமாயணத்தை அப்படியே தமிழ்ப்படுத்தியிருந்தால் கம்பராமாயணம் தோல்வியடைந்திருக்க வாய்ப்புள்ளது.

  காரணம்? காப்பிய நாயகனின் பண்புகள். வால்மீகி காட்டும் இராமனுக்கும் கம்பன் காட்டும் இராமனுக்கும் நிறைய வேறுபாடுகள். வால்மீகியைப் பொருத்த வரை இராமன் மனிதன். ஒரு இளவரசன். அரச சுகங்களை அனுபவித்து இறைச்சி முதலான சுவையான உணவு வகைகளை உண்டு இன்பமாக இருக்கும் ஒரு பாத்திரம். அதனால் காட்டிற்குப் போகும் போது இதையெல்லாம் விட்டுப் போக வேண்டியிருக்கிறதே என்று புலம்புகிறான்.

  ஆனால் கம்பர் காட்டும் சக்கரவர்த்தித் திருமகன் அப்படிப்பட்டவன் அல்ல. காட்டிற்குப் போ என்றதும் இராமனும் கோசலையும் பேசும் வசனங்கள் மிகமிகப் பண்புடையவை.

  இராமன் மட்டுமல்ல எல்லாப் பாத்திரங்களுமே கம்பனால் மெருகேற்றப்பட்டன. பரதனை மூன்று/ஆயிரம்/எண்ணில்கோடி இராமர் என்று புகழ்வதெல்லாம் வால்மீகியிடம் கிடையாது. எல்லாம் கம்பன் காட்டிய வழி.

  • anonymous says:

   மிக்க நன்றி இந்த அழகான ஒப்புமைகளுக்கு!

   இப்படி மூல நூல்களை வைத்துப் படிக்கும் போது தான், எந்தப் பேதமும் இன்றிச் சுவையும் பொருளும் கைக்கூடுகிறது!
   இந்த வால்மீகி – கம்பன் ஒப்புநோக்கலை, தாங்கள் தொடர்ந்து அனைவரும் பயனுற அளிக்க வேணுமாய்க் கோருகிறேன்!

   “கவிதை” என்று வரும் போது, பாரதி, ஆனானப்பட்ட வள்ளுவரையும் சற்றே பின்னுக்குத் தள்ளி, கம்பனை முன்னே வைப்பதில் ஏதோவொரு அர்த்தம் இருக்கத் தான் செய்கிறது! இத்தனைக்கும் கம்பனின் ஊற்று = அவர்கள் தான்!

   யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
   வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
   பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
   உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை!

  • anonymous says:

   *வால்மீகி இராமாயணம் = இதிகாசம்
   *கம்பனின் இராமாயணம் = காப்பியம்
   ரெண்டுத்துக்கும் நுணுக்கமான வேறுபாடுகள் உண்டு!

   * இதிகாசம்=கதாபாத்திரங்கள் உயிரோடு இருக்கும் போதே எழுதி விடுவது! (இராமன், தன் மேல் எழுதப்பட்ட வால்மீகி ராமாயணத்தை, தானே கேட்டான்!)
   இதி – ஹாஸஹ->இதிஹாஸம்; “இப்படியான நிகழ்வுகள்” என்பதே இதுக்கு மொழியாக்கம்! பெரும்பாலும் ஒருவரின் வரலாற்றை (சற்றுப் புனைவுகளோடு) பதிந்து வைப்பதோடு போய்விடும்!

   * ஆனால் காப்பியம் = பின்னாளில் எழுதப்படுவது! ஒரு கதையின் மேல், ஒரு சமூகத்தின் செழுமையெல்லாம் திரட்டி இலக்கியமாய்ச் செய்வது!
   ——–

   வால்மீகி இராமாயணத்தைப் பார்த்தா = உரையாடல்களே அதிகம் இராது! பாத்திரங்கள் பேசிக் கொள்ளாமல், டைரக்டரே தோன்றிப் பேசினால் எப்படி இருக்கும்?:)

   கம்பன் = பாத்திரங்களைப் பேச விடுவான்! தான் பின்னணியில்/ வர்ணனையில் மட்டுமே பேசுவான்!
   அவனுக்கு வரலாற்றை விட, சமூகச் செழுமையான காப்பியமே நோக்கம்!

   இதான் வால்மீகிக்கும்-கம்பனுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்!

  • anonymous says:

   அதுக்காக, கம்பன் ஏதோ, மூல காவியத்தை மாற்றி விட்டான்! தமிழ்நாட்டில் இராமாயணத்தைப் பரப்ப, தமிழ்க் கூறுகளை அதிலே ஏத்தி வுட்டுட்டான்-ன்னு சில பகுத்தறிவு அன்பர்கள் சொல்வது வழக்கம்! ஆனால் அதுவல்ல!

   பல மக்களுக்கு, கம்பன் சொன்ன இராமாயணமே தெரியாது!
   அவர்கள் அறிந்தது தெருக்கூத்தும், இன்ன பிற கலைகளின் வழியாகத் தான்! இலக்கிய இராமாயணம் அல்ல:)
   —-

   அப்பறம் கம்பன் செஞ்சது என்ன?
   இதை நாம் பேசுறதைக் காட்டிலும், கம்பனே அவன் வாயால் சொல்லுறான் கேளுங்க!

   தேவபாடையின் இக் கதை செய்தவர்
   மூவர் ஆனவர் தம்முளும், முந்திய
   நாவினான் உரையின்படி, நான் தமிழ்ப்
   பாவினால் இது உணர்த்திய “பண்புஅரோ”

   வால்மீகி = ஆட்களைப் பேசினார்!
   கம்பன் = பண்பைப் பேசினான்!
   நான் தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ
   —-

   கம்பனுக்குத் தேவைப்பட்டது, ஒரளவு மக்கள் அறிந்த கதைக்களன்! ஏற்கனவே பரவி இருந்தது இராமாயணம்!
   அதில் சமூகச் செழுமைகளை நிறுத்தி, இலக்கியக் கூறுகளை நிறுத்தி, தமிழ்ப் பண்புகளை நிறுத்தி…
   எந்தப் பாத்திரத்துக்கும் முகத்துதி செய்யாமல், குணத்துதி செய்வதே கம்பன் வழக்கம் = பண்பு அரோ!

   அதான் வால்மீகியின் கதை மாந்தர்கள், முதன்முதலாக ஒருவருக்கொருவர் உணர்ச்சிகளைப் பரிமாறிக் கொண்டார்கள்…இயக்குநர் மூலமாக அல்லாது, தாங்களே…கம்பன் கட்டிய வீட்டில்!

 5. Samudra says:

  ராமனுக்கும் தன்னுடைய LIFE PARTNER எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு கற்பனை மனதில் இருந்திருக்கும் போல இருக்கிறது. பல சமயங்களில் நாம் மனதில் ஒருவரை எப்படியெல்லாம் கற்பனை செய்து வைத்திருக்கிறோமோ
  அவை எல்லாவற்றுக்கும் கச்சிதமாகப் பொருந்தும்படி காதலனோ காதலியோ கணவனோ மனைவியோ அமைவதில்லை.There will always be a difference between imagination and reality..ஆனால் ராமன் விஷயத்தில் எல்லாமே பொருந்துகிறது போல. எனவே தான் ,என் மனதில் இதுவரை கற்பனை செய்து வைத்திருந்த உருவம் இன்று உயிர் பெற்று வெளியே வந்துவிட்டதோ என்று வியக்கிறான்.

  கார் உலாவும் சீர் உலாவும் மிதிலையில்
  கன்னிமாடம் தன்னில் முன்னே நின்றவர் யாரோ இவர் யாரோ

  என்று சீதை பாடுவதாக பாடல் கேட்டிருக்கிறேன். இன்று ராமன் சீதையைப் பற்றி
  எவ்வாறு உணர்ந்தான் என்று அறிந்து கொண்டேன். நன்றி

 6. GiRa ஜிரா says:

  ஏன் இப்படி பாத்திரங்களை மெருகேற்றினான்? மற்ற மொழிக்காரர்கள் எல்லாம் பக்திச் சுவையைக் கூட்டி இராமாயணம் எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் கம்பன் மட்டும் ஏன் பாத்திர மெருகேற்றல் செய்தான்?

  காரணம் இருக்கிறது. கம்பன் தமிழ்க் காப்பியங்கள் ஐந்தும் கற்றவன். அதுவுமில்லாமல் தமிழர் மனநிலை அவனுக்குத் தெரிந்திருக்கிறது.

  ஐந்து பெருங்காப்பியங்களிலும் நின்றதும் நிலைத்ததும் சிலப்பதிகாரம் மட்டும்தான். இதுதான் உண்மை. ஏன் நின்றது? ஏன் நிலைத்தது?

  அதற்குக் காரணம் பாத்திரங்களின் தன்மை. சிலப்பதிகாரத்தில் ஒவ்வொரு பாத்திரமும் சிறப்பானவை. அடுத்தவள் கணவனைத் திருடியதற்காக மாதவி மேல் நமக்கெல்லாம் ஆத்திரம் வந்திருக்க வேண்டும். வருகிறதா? இல்லையே?

  பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனைக் கொன்றான். அவன் மேல் நமக்கு ஆத்திரம் இருக்கிறதா? இல்லை. அந்தோ பரிதாபம் என்கிறோம் அவனைப் பார்த்து.

  ஏனென்றால் அந்தப் பாத்திரங்களின் சிறப்பு அப்படிப்பட்டது.

  மாதவி பத்தினி இல்லை என்று யாரேனும் சொல்ல முடியுமா? பரத்தை பத்தினி ஆக கதை சிலப்பதிகாரம். பரத்தையே பத்தினியாக முடியும் என்றால் பத்தினி என்ன ஆவாள்? தெய்வம் ஆவாள். கண்ணகி தெய்வமானது நாம் அறிந்ததே.

  நெடுஞ்செழியன் கெட்டவன் இல்லை என்று சிலப்பதிகாரத்திலேயே கண்ணகி வாயால் இளங்கோ சொல்ல வைக்கிறார். தென்னவன் தீது இலன். தேவர்கோன் பெருவிருந்து ஆயினன். நானவன் தன் மகள்.

  இப்படியான சிறப்பான பாத்திரங்களைப் பார்த்த தமிழர்களிடம் காட்டிற்குப் போகச் சொன்னால் புலம்பும் பாத்திரமாக கதாநாயகனைக் காட்டினால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டார். அதனால்தான் மெருகேற்றல்.

  • ஆஹா அருமையான விளக்கம் சார்
   மெய்சிலிர்த்தேன். எத்தனை தீர்க்கமான வார்த்தைகள்

 7. GiRa ஜிரா says:

  வெறும் பாத்திர மெருகேற்றலோடு நிற்கவில்லை கம்பன். வால்மீகி போல் வெறும் நிகழ்ச்சிகளாக சொல்லிக் கொண்டு போகாமல் கவிநயத்தை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் புகுத்துகிறான். அதற்கு உதாரணம் மிதிலைப் படலக் காட்சிகள்.

  ஊர்காண் காதை என்று சிலப்பதிகாரத்திலும் வரும். மற்ற சங்க நூல்களிலும் உண்டு. மதுரைக் காஞ்சியில் கூட மதுரை நகரின் சிறப்புகளை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருப்பார்கள்.

  அந்த அழகான ஊர் காணும் காட்சியமைப்பை இரண்டு இடங்களில்தான் இராமாயணத்தில் சிறப்பாகச் செய்ய முடியும். ஒன்று மிதிலை. இன்னொன்று இலங்கை. அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் கம்பர்.

  மிதிலையின் காட்சிகள் இராம இலக்குவன கௌசிகர் வழியாக விரிந்தால், இலங்கையின் காட்சிகள் அனுமன் வழியாக விரிகின்றது.

  மிதிலைக்காட்சி முடிந்தது. கார்முகப் படலத்தில் இராமன் வில்லையும் உடைத்தாயிற்று. தசரதனுக்குத் திருமணச் செய்தி அனுப்பி எதிர்கொள் படலத்தில் தசரதனையும் மற்றவர்களையும் எதிர் கொண்டு அழைத்தும் ஆகி விட்டது.

  அதற்குப் பிறகு வருகிறது கோலங்காண் படலம். அழகுக்கு அழகு செய்து சீதையை அழைத்து வருகின்றார்கள். நிலவின் குளுமையும் பகலின் ஒளிமையும் ஒன்றாகக் கலந்தது போல வருகிறாள் வைதேகி.

  அப்போதுதான் இந்த flash back வருகிறது. அதாவது முன்னால் நடந்ததை நினைவுகூர்வது.

  அன்னவளை அல்லள் என ஆம் என அயிர்ப்பான்
  கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்

  இந்த வரிகளில் பெரும் பொருள் ஒளிந்திருக்கிறது. நாம் ஆழ்ந்து பார்க்க வேண்டும்.

  இந்த வரிகளைப் பார்ப்பதற்கு முன்னால் அடுத்த வரிகளைப் பார்ப்போம்.

  உன் உயிர் நிலைப்பது ஒர் அருத்தியொடு உழைத்து ஆண்டு
  இன் அமிழ்து எழ களி கொள் இந்திரனை ஒத்தான்

  இந்த வாழ்க்கையானது நிலைக்குமானால் அது இவளோடுதான் என்று புரிந்த இராமன் மகிழ்ந்தான். அவன் மகிழ்ச்சி எப்படி இருந்தது?

  பாற்கடலைக் கடைந்த பொழுது அமிழ்தம் தோன்றியது. அதைக் கண்டு இந்திரன் மகிழ்ந்தது போல மகிழ்ந்தான்.

  ஏன் இந்தக் காட்சியை இங்கு சொல்ல வேண்டும்?

  பாற்கடலைக் கடைந்த பொழுது அமிழ்தம் மட்டும் தோன்றவில்லை. இலக்குமியும் தோன்றினாள். அமிழ்தத்தைச் சிறந்ததாகக் கருதி மகிழ்ந்தான் இந்திரன். திருமகளே அமிழ்தம் என மகிழ்ந்தான் மாதவன்.

  ஒரு சண்டை. அதானால் பிரிவு. அப்படியான ஒரு பிரிவுக்குப் பின்னே பாற்கடலில் தோன்றிய திருமகளைக் கண்ட மகிழ்ச்சி விஷ்ணுவிற்கு உண்டானது போல இன்னொரு பிரிவுக்குப் பின்னே சீதையைக் கண்ட இராமனுக்கும் மகிழ்ச்சி.

  இந்த மகிழ்ச்சி வரும் முன்னால் இராமனுக்கு ஒரு குழப்பம். இவள் அவள்தானா? இல்லையே. ஏதோ வேறுபாடு தெரிகிறதே! இல்லை. இல்லை. அவள்தான் இவள். இந்தச் சந்தேகம் தான் “அன்னவளை அல்லள் என ஆம் என அயிர்ப்பான்.” பிறகு தெளிவு வருகிறது.

  உடனே, “கன்னி அமிழ்தினை எதிர்கண்ட கடல்வண்ணன்” பாடுகிறார்.

  அன்று வந்ததும் அதே நிலா

  இன்று வந்ததும் அதே நிலா

  முதலில் ஒரு ஐயம். அந்த ஐயம் தெளிந்த பின் கிடைப்பது அமிழ்து. கன்னி அமிழ்து. இவ்வாறாக முன்பு ஒரு பிரிவு நடந்ததையும், அதன் பின்னர் சேர்க்கை நடந்ததையும் நினைவுபடுத்தி அது போல இன்னொரு பிரிவு வந்ததையும், அந்தப் பிரிவும் நீங்க இந்தச் சேர்க்கை நடக்கிறது என்று கம்பர் விளக்குகிறார்.

  அதற்குதான் அமிழ்து, கடல், இந்திரன் ஆகிய சொற்களைப் போடுவது.

  கம்பர் காட்டும் பிரிவு இருந்தது உண்மை. பாற்கடலில் இருந்த மாதவனோ கோசலையின் வயிற்றுப் பிள்ளையானான். திருமகளோ நிலத்தில் மண்மகளாய்ப் பிறந்து சனகன் அரண்மனையில் மகளாய் வளர்ந்தாள்.

  இந்தப் பிரிவில் ஒருவரையொருவர் மனதால் நினையாமல் இருந்ததும் உண்மை. ஆனால் ஆழ்மனதில் எங்கோ ஓரிடத்தில் இன்னார்க்கு இன்னாரென்று தேவன் எழுதி வைத்தது பதிந்திருக்கிறது. அது கனவுகளிலும் சிற்சில நினைவுகளிலும் இராமனுக்கு வந்திருக்கிறது.

  அப்படி ஆழ்மனதில் இருந்த உருவம் இன்று தன் முன்னால் தனக்காக மாலையோடு வந்து நிற்பதைப் பார்த்து வியக்கிறான். அந்த வியப்பில் தனக்குள்ளேயே கேட்டுக் கொள்கிறான். “நினைப்பின் இடை அல்லால் புறத்தும் உளதோ” என மனதொடு புகன்றான்.

  “அட, இத்தன நாள் நான் இந்தப் பெண்ணைக் கற்பனை உருவம்னு நெனைச்சேனே. இன்னைக்குதான் உண்மையிலேயே இருக்கான்னு தெரியுது.”

  இதை ஊர் அறியவாச் சொல்ல முடியும். மனசுக்குள்ள நெனச்சிக்கிறான். அதான் “மனதொடு புகன்றான்.”

  பாருங்கள்… எவ்வளவு கவிச்சுவை. இந்தக் கோலங்காண் படலமே வால்மீகி சொல்லாதது. தசரதன் வந்ததும் பரதனுக்கும் சத்ருகனனுக்கும் திருமணம் பேசுகிறார்கள். பிறகு திருமணம் நடக்கிறது. அவ்வளவே.

  ஆனால் தமிழர்களுக்கு எது பிடிக்கும். எப்படிக் குடுத்தால் சுவைத்து ரசிப்பார்கள் என்று கம்பன் அறிந்து தெரிந்து புரிந்து கொடுத்திருக்கிறான். இதைக் கம்பனுக்குச் சொல்லிக் கொடுத்தது சங்கப்பாக்களும் இளங்கோவடிகளும் என்று கூறுவது மிகையாகாது.

  கிட்டத்தட்ட ஒரு பழைய திரைப்படத்தைத் திரும்பவும் எடுப்பது போலத்தான் இதுவும்.

  இன்னொரு செய்தி. பாலகாண்டத்தில் விசுவாமித்திரர் (இவரைப் பற்றிப் பேசினால் இன்னும் பத்து பதிவுகள் எழுத வேண்டும்.) சிவபுராணத்தையும் கந்தபுராணத்தையும் சுருக்கமாகச் சொல்கிறார் வால்மீகி. ஆனால் கம்பர் அதை அப்படியே தவிர்த்து விட்டு கங்கையின் கதையை மட்டும் எடுத்துச் சொல்கிறார்.

  வால்மீகியும் கம்பனும் ஒத்துப் போகும் இடம் ஒன்று உண்டு. அது யுத்தகாண்டத்தில் சீதை சிதைபுகுப் பகுதி.

 8. anonymous says:

  இதை யாரேனும் சொல்வார்களா சொல்வார்களா? என இரவு முழுதும் ஏங்கி இருந்தேன்! சொக்கர் உட்பட எவருமே சொல்லவில்லை!
  இப்போது தான் மூச்சே வந்தது! இதைச் சொன்ன ராகவனுக்கு என் பல்கால் நன்றி! பல்கால் நன்றி!
  —–

  //கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல்வண்ணன்//
  //உன் உயிர் நிலைப்பது ஒர் அருத்தியொடு//

  கம்பனின் சில பாடல்களை, அப்படியே மேலோட்டமாப் படிச்சிட்டு போக முடியாது! ஏன்னா அதுல “ஜென்ம வாசம்” (எ) பிறவி மணம் கமழும்!
  இந்தப் பாடல் அதில் ஒன்னு! = ‘கன்னி அமிழ்து’ என்பதே உயிர்ச் சொல்!

  பாட்டின் கடைசியில் இந்திரன்-ன்னு வருவதால், இந்திரனுக்கு அமிர்தம் கிடைச்சாப் போல, இராமனுக்குச் சீதை கிடைச்சா-ன்னு எல்லாருக்கும் பொதுவா எடுத்துக் கொள்ளத் தோனும்! ஆனா அதுவல்ல!

  எதுக்கு ‘கன்னி அமிழ்து’ -ன்னு கம்பன் குறிப்பிட்டுச் சொல்லணும்?
  “கன்னி அமிழ்து” = திருமகள்! அன்னை மகாலக்ஷ்மி!

  ஏன்-ன்னா இது “ஜென்மாந்திரத் தொடர்பு’ = ‘அவளுக்கு அவன்’ என்னும் ஜென்ம வாசம்…..
  எந்தப் பிறவி வாய்ச்சாலும், அவர்களுக்குள் அது உள்ளுக்குள்ளேயே வீசிக் கொண்டிருக்கும்! கனவுகளா வரும்!
  என்னமோ ஒரு நினைப்பா வந்து வந்து போகும்! திடீர்-ன்னு இப்படி மேன்மாடத்தில் மாலையோடு வந்து வெளிப்படும்!
  ——

  ‘கன்னி அமிழ்தத்தை’ எதிர் கண்ட கடல்வண்ணன்-ன்னு இந்தப் பாட்டில் சொல்லிய கம்பர்…
  அடுத்த பாட்டில், இந்த “ஜென்மாந்திர தொடர்பை” உறுதிப்படுத்துகிறார்!
  (இதுக்குத் தான் சில கம்பன் பாடல்களைச் சேர்த்துப் படிக்கணும்…continuity)

  எங்கள் செய் தவத்தினில், இராமன் என வந்தோன்.
  சங்கினொடு சக்கரம் உடைத் தனி முதற் பேர்
  ….அவ் அல்லி மலர் புல்லும் மங்கை இவள் ஆம்’ என
  வசிட்டன் மகிழ்வுற்றான்
  -ன்னு பாடி, இதை உறுதிப்படுத்தி விடுவார்!

  முக்காலம் உணர்ந்த ஞானி-ன்னு வசிட்டரை முன் வைத்து, இந்த ஜென்மாந்திரத் தொடர்பை உறுதியும் செய்கிறான் கம்பன்!
  அதுக்குத் தான் அந்தச் சொல் = ‘கன்னி அமிழ்து’

 9. anonymous says:

  அப்பறம் எதுக்கு ‘இந்திரன்’ பற்றிய உவமை?-ன்னு யோசிக்கத் தோனும்! இருக்கு! கம்பன் காட்சி அமைப்பு சும்மா இல்ல!

  எல்லாருக்கும் கதை தெரியும்-ன்னு நினைக்கிறேன் – பாற்கடல் கடைதல்!

  பாற்கடலைக் கடைஞ்ச போது முதலில் வந்தது என்ன? = விடம்!
  திருட்டுப் புத்தியுள்ள தேவர்கள்…..
  ‘ஆராயாமலேயே அருளும்’ கருணை வள்ளலான ஈசனிடம் சென்று சொல்வது என்ன? = “பாற்கடலில் முதலில் கிடைத்தது, உங்களுக்கே சமர்ப்பணம்”!

  எப்படி இருக்கு கதை? = மரியாதை குடுப்பது போல், விடத்தை அவருக்குத் தள்ளியாச்சி!:(
  இதான் சுயகாமத்தையே எண்ணும் தேவ புத்தி!
  என்ன, அசுரர்களிடம் இல்லாத பணிவு இவர்களிடம் இருந்ததால்…இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் சூழல் கதைகளில் நிறைய வரும்!
  —-

  ஏன் திருமாலிடம் செல்லவில்லை? அவரு தான் ஆமையா மலையைத் தாங்கிக்கிட்டு இருக்காரே? அவரு அசைஞ்சா, மொத்தமும் காலி! திரும்பி முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்!
  இப்படி முதலில் தோன்றிய விடத்தை, கருணை வள்ளலான ஈசன் உண்ட பின் பலதும் வருது! பங்கு போட்டுக்கறாங்க!

  *ஐராவதம் = தேவர்களுக்கு
  *உச்சைச்சிரவஸ் (குதிரை) = அசுரர்களுக்கு
  *பாரிஜாதம் = தேவர்களுக்கு
  *சமுத்திர வில் = அசுரர்களுக்கு
  *பாரிஜாதம் = தேவர்களுக்கு
  *மாயக் குடை = அசுரர்களுக்கு
  *காமதேனு = முனிவர்களுக்கு
  *சந்திரன் = ஈசனுக்கு
  —–

  கீழே ஆமையாய் உள்ள திருமால், எதுக்கோ ஒன்னுத்துக்கு வருமா வருமா-ன்னு காத்துக்கிட்டே இருக்காரு! அவரு பொருள் தான்! ஆனா வரவே இல்ல! வேற என்னமோ வருது = அழகான பொண்ணுங்க!

  *அப்சரஸ் = ரம்பை/மேனகை முதலானோர் = தேவர்களுக்கு
  *வருணி/சுரா = அசுரர்களுக்கு
  இப்படி…எல்லாப் பொண்ணுங்களும் வந்தாப் பிறகு, ஒருத்தி மட்டும் மீண்டும் வரா….
  ஏதோ…சாபத்தாலும் தாபத்தாலும்….அவனை விட்டுப் பிரிந்து இருந்த அவள்….

 10. anonymous says:

  வந்தவளைக் கண்டு, கண்டவனுக்கும் அவ மேல கண்ணு…..இத்தனை நேரம் வந்த பெண்களும் போகமும் போதவில்லையோ?
  ஆனாலும் அவள் கண்கள் ஒருவனை மட்டுமே தேடுகின்றன….எங்கே அவன்?

  இத்தனை பேர் போகத்துக்கும் ஒரே ஆளாய், அவன் முட்டுக் குடுத்து நிற்கிறான்! அத்தனை பாரத்தையும் தாங்கிக் கொண்டு நிற்கிறான்!
  ஐயோ, எம்பெருமானே, உன்னை மிதிச்சியா எங்களுக்கு அமிர்தம் வேணும்? வேணவே வேணாம்-ன்னு சொல்ல வாய் வருமா இந்திரனுக்கு?

  வெளியில் இவர்கள் கடைவது போல் தெரிந்தாலும்,
  உள்ளுக்குள் தாங்குவது என்னமோ தெய்வம் தான்…வெளியில் தெரிவதில்லை!
  —-

  அப்சரஸ், வருணி முதலான பல பெண்கள் வரும் போது, இவனுக்குக் குழப்பம்! அவளோ? சேச்சே! இருக்காது!
  ஏக்கம்! அவள் வருவாளா? அவள் வருவாளா?

  அவள் வந்தே விட்டாள்!
  ஆனா ஆமையா இருக்கானே! எப்படி மாலையிடுவாள் மணாளனுக்கு?
  நேரே சென்று அவன் மார்பில் அமர்ந்து விட்டாள்…..நீக்கமற!
  அகலகில்லேன்!
  —-

  கம்பனின் சித்திரம்:
  அன்னவளை அல்லள் என, ஆம் என அயிர்ப்பான்,
  கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல்வண்ணன்

  முன்பு….
  பாற்கடல் அமிழ்தம் கடைந்த போது, அவளோ, இவளோ என்று கலங்கி…ஏங்கிக் காத்து இருந்தானே….
  அயிர்ப்பான் = சோர்வு / குழப்பம் உறுவான்
  (அயிர்த்தல் = அயர்வு)
  அன்னவளை = அல்லள் என or ஆம் என…

  அதே போல்
  இப்போதும் சோர்வு / குழப்பம் உறுவான் இராகவன்!
  ஆனா…ஜென்மாந்திர தொடர்பு-ன்னு ஒன்னு இருக்கே! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்…..
  கன்னி அமிழ்தத்தை = அவனுக்கே ஆன அவளை = இப்போதும் எதிர் கண்ட கடல்வண்ணன்!!!

 11. anonymous says:

  //உன் உயிர் நிலைப்பது ஒர் அருத்தியொடு//
  *அருத்தன் = தலைவன்
  *அருத்தி = தலைவி
  எந்தப் பிறவியெடுத்தாலும்….அவனோட உயிர் ஒருத்தியோடு கட்டிப் போட்டிருக்கு!

  //உழைத்து ஆண்டு//
  இந்திரன் அமிர்தத்துக்கு உழைச்சான்-ன்னு பொருள் எடுத்துக்கக் கூடாது!
  *உழை=பக்கம்
  *ஆண்டு=Place (யாண்டு கொல்)

  இராகவன்….அந்தச் சபையில்….அந்தப் பக்கத்தில்….
  அவனுக்குள்ளேயே பேசிக்கறான் = உன் உயிர் நிலைப்பது ஒர் அருத்தியொடு!! உன் உயிர் நிலைப்பது ஒர் அருத்தியொடு!!

  —–

  சீதை = இராகவனுக்கும் வயதில் மூத்தவள்!
  அவதார காலத்தில் முன்பே பிறந்து விட்டாள்!
  இலங்கையில் பிறந்து, வீசி எறியப்பட்டு, சனகன் மகளாய், மண்மேட்டில் கிடைக்கிறாள்!

  பிரிந்த ஒரு ஜென்மாந்திர பந்தம் = அதை மீண்டும் பாக்கும் போது….மனசுக்குள்ள என்னமோ தோனும் = உன் உயிர் நிலைப்பது ஒர் அருத்தியொடு!
  அப்போ அவன் மனசுக்குள்ள எப்படி இருக்கும்?
  —-

 12. anonymous says:

  //இன் அமிர்து எழக் களிகொள் இந்திரனை ஒத்தான்//

  இப்போ தான் இந்திரன் வரான்!
  சில பேரு, ரொம்ப ஆசை வச்ச பொருள் கிடைச்சா…உடனே கற்பனையில் பறப்பாங்களே! Indra is the best example! Hez the ultimate seeker of pleasure at any cost!

  அமிர்தம் உண்டாச் சாகாம இருக்கலாம்! அவ்ளோ தான்! எப்பமே வெற்றியெல்லாம் அடைய முடியாது!
  ஆனா, அதுக்குக் கூட, மனசுக்குள்ளாற குதிக்கும் இந்திரன் = இன் அமிர்து எழக் களிகொள் இந்திரன்….

  அது போல, ஒரு அற்பனைப் போல, ஒரு இந்திரனைப் போல, ஒரு குழந்தையைப் போல….
  கிடைச்சிருச்சே, கிடைச்சிருச்சே-ன்னு…இராமனே, அந்த மனநிலைக்குப் போய் விட்டானாம்!:)
  அடுத்த பாட்டில், இந்தப் பந்தத்தை வசிட்டரும் மனத்தளவில் உறுதி செய்கிறார்!
  —-

  என்ன…
  இந்திரனின் அமிழ்தம் = வெறும் அமிர்தம்!
  இராகவனின் அமிர்தம் = கன்னி அமிழ்தம்!

  இந்திரனின் அமிழ்தம் = வெற்றி நீங்க வல்லது!
  இராகவனின் அமிர்தம் = என்றுமே நீங்காத…ஏழேழு சென்மமும் தொடர வல்லது!

  செம்மண்ணிலே தண்ணீரைப் போல், உண்டான சொந்தம் இது!
  மனமங்கலம், திருக்குங்குமம்
  ஏழேழு ஜன்மங்கள் ஆனானலும் மாறாதம்மா!!

  புறத்தும் உளதோ? என மனத்தொடு புகன்றா(றே)ன் – நன்றி!

  • amas32 says:

   நீங்கள் அஞ்ஞானத வாசத்தில் இருந்தாலும் எங்களுக்காக இங்கே வருவது நாங்கள் செய்த பாக்கியம். மிக்க நன்றி 🙂 நீங்கள் சொல்லித் தரவில்லை என்றால் என்னைப் போன்றோர் எப்படி கற்றுக்கொள்வது? வைதேகி ராமனின் ஆசி என்றும் உங்களுக்கு உரித்தாகுக!
   amas32

   • anonymous says:

    //வைதேகி ராமனின் ஆசி என்றும் உங்களுக்கு உரித்தாகுக!//
    🙂
    raaman paathuka pattaabishegam uLLam kavaravillai; athu avaL-ai valikka vaithu cheithu koNda pattabishegam
    murugan paathuka pattaabhishegam – kuRa magaL paatham varudiya maNavaaLa – thanakaaga kaalam ellam kaathu kidanthavaLukku cheitha pattaabhishegam

    //சொல்லித் தரவில்லை என்றால்..//
    ithu migavum periya vaarthai. cholli tharuvathu alla; veRumane pagirnthu koLvathu – both aRinthathum aRiyaathathum!

 13. amas32 says:

  “கிட்டத்தட்ட ஒரு பழைய திரைப்படத்தைத் திரும்பவும் எடுப்பது போலத்தான் இதுவும்.” சரியாச் சொன்னீங்க 🙂
  ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்கீங்க ஜிரா, உங்க கம்ப ராமாயணம் ஆச்சே!

  காதலிப்பவர்கள் காதலில் சொதப்பாமல் வெற்றி பெற கம்ப ராமாயணத்தின் இந்த பகுதியை நிச்சயம் படிக்க வேண்டும். ராமனின் காதலை, அவன் மனதில் இருக்கும் சீதையின் பிம்பத்தை எவ்வளவு அருமையாகச் சொல்கிறார் கம்பர்.

  உயிரை என்றும் உடலில் நிலைத்து நிற்கச் செய்யும் அமுதம் போல சீதையும் ராமனின் உயிரானாள்!

  The divine couple, just made for each other!

  நீங்க இந்தப் பாடலை காதல் வாரத்தில் போட்டிருக்கணம் திரு.சொக்கரே 🙂

  amas32

  • GiRa ஜிரா says:

   // சரியாச் சொன்னீங்க
   ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்கீங்க ஜிரா, உங்க கம்ப ராமாயணம் ஆச்சே! //

   அம்மா கம்பனில் கருத்துச்சுவையை விரும்பாதவர்கள் கூட கவிதைச் சுவையை விரும்பாமல் இருக்க முடியாது. அதுதான் கம்பனின் சிறப்பு.

   பிடிக்கவே பிடிக்காத நடிகர் நடித்த படம் நன்றாக இருக்கிறது என்று ரசிகன் சொல்ல வேண்டுமென்றால் இயக்குனரின் உழைப்பு பேருழைப்பாக இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை கம்பனின் உழைப்பும் அப்படிப் பட்டதே.

   நான் எப்பொழுதும் படித்துப் படித்து வியக்கும் புலவர்கள்
   இளங்கோவடிகள்
   வள்ளுவர்
   கம்பர்
   திரிகூடராசப்பக் கவிராயர்
   காளமேகம்
   பல சங்கப்புலவர்கள்
   பாரதிதாசன்
   பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
   கண்ணதாசன்
   புலமைப்பித்தன்

   • amas32 says:

    ஜிரா வாழ்க நீவீர்! வளர்க உங்கள் அறிவுப் பசி! நாங்களும் அதனால் பயனடைவோம் 🙂
    amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s