பவனி

இடியின் முழக்கொடு படரும் முகிலென

….யானைமேல் கனபேரி முழக்கமும்

துடியின் முழக்கமும் பரந்து திசைக் கரி

….துதிக்கையால் செவி புதைக்கவே,

அடியர் முழக்கிய திருப்பல்லாண்டு இசை

….அடைத்த செவிகளும் திறக்க, மூவர்கள்

வடிசெய் தமிழ்த் திருமுறைகள் ஒருபுறம்,

….மறைகள் ஒருபுறம் வழங்கவே,

பவனிவந்தனரே,

மழவிடைப் பவனி வந்தனரே!

நூல்: திருக் குற்றாலக் குறவஞ்சி

பாடியவர்: திரிகூடராசப்பக் கவிராயர்

சூழல்: திரிகூடநாதர் (சிவபெருமான்) வீதியில் பவனி வருகிறார்

முதலில், யானைகள் நடந்துவருகின்றன. அவற்றின்மேல் பெரிய முரசுகளை வைத்து அடிக்கிறார்கள். பலத்த சத்தம் எழுகிறது. அதைப் பார்க்கும்போது, மேகங்களுக்கு நடுவே ஒலிக்கும் இடி ஓசையைப்போல் இருக்கிறது.

முரசு ஒலியும், கூடவே உடுக்கையின் ஒலியும் சேர்ந்து பலமாக ஒலிப்பதால் எங்கும் சத்தம் அதிர்கிறது. எட்டுத் திசைகளையும் காவல் காக்கும் யானைகள் இந்த ஓசையைக் கேட்டுப் பயந்துபோகின்றன. தும்பிக்கையால் தங்களுடைய காதைப் பொத்திக்கொள்கின்றன.

அதன்பிறகு, பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் சிவபெருமானைப் போற்றிப் பாடும் ‘திருப்பல்லாண்டு’ இசை இனிமையாக ஒலிக்கிறது. மூடிய காதுகள் திறக்கின்றன.

அடுத்து, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூன்று நாயன்மார்களும் பாடிய தமிழ்மறையாகிய தேவாரப் பாடல்கள் பாடப்படுகின்றன, வேதங்களும் பாடப்படுகின்றன, இத்தனையையும் கேட்டுக்கொண்டு காளையின்மீது பவனி வருகிறார் திரிகூடநாதர்.

துக்கடா

 • இன்றைய ‘சிவராத்திரி’ சிறப்புப் பாடல் இது!
 • திருக்குற்றாலக் குறவஞ்சியில் வருகிற அருமையான பத்து பவனிப் பாடல்களில் ஒன்றைமட்டும்தான் இங்கே தந்திருக்கிறேன். மிச்சத்தைத் தேடிப் படியுங்கள், நேராக ஒரு கோயில் ஊர்வலத்தில் நின்றதுபோல் பிரமை ஏற்படுவது நிச்சயம்!
 • ‘அஷ்டதிக்கஜங்கள்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அஷ்டம் (எட்டு) + திக்கு (திசை) + கஜங்கள் (யானைகள்) = எட்டு திசைகளையும் காவல் காக்கும் அந்த யானைகள்தான் இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை ராவணன் என்ன செய்தான் தெரியுமோ? தேடுங்கள் 😉
 • யானைகளுக்கு மேகங்கள் உவமை, அந்த யானைகளுக்குமேலே ஒலிக்கும் முரசுச் சத்தத்துக்கு அந்த மேகங்களுக்கு இடையே ஒலிக்கும் இடிச் சத்தம் உவமை. மிகப் பொருத்தமானது!

229/365

This entry was posted in சிவன், திருக்குற்றாலக் குறவஞ்சி, பக்தி, பண்டிகை. Bookmark the permalink.

3 Responses to பவனி

 1. GiRa ஜிரா says:

  சிவராத்திரியன்று அழகான பாடல். அழகான விளக்கம்.

  நாகா, எங்களுக்கெல்லாம் இனிமேல் “நல்ல விளக்கம்” என்று சொல்வதே வேலையாக இருக்கும் போல. 🙂 ரசித்து எழுதியிருக்கின்றீர்கள். நானும் ரசித்தேன்.
  திருவிழா என்பது பலப்பல நிகழ்ச்சிகள் நடக்கும் இடம். அதை வார்த்தைக்குள் கொண்டு வருவது ஒரு சாகசம்.

  திரிகூட ராசப்பக் கவிராயருக்கு இந்தச் சாகசங்கள் எல்லாம் குழந்தை விளையாட்டு.

  கவிராயர் சொல்வதிலிருந்து ஈசனாருக்கும் திருப்பல்லாண்டு பாடுவது வழக்கமாக இருந்திருக்கிறது என்று தெரிகிறது. இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை. இருந்தால் அந்தத் திருப்பல்லாண்டு படிக்க ஆவல்.

  இந்தச் சிவராத்திரி நன்னாளில் சிவனார் அருளை அனைவரும் பெற்றுய்ய வணங்குகிறேன்.

  பொன்னார் மேனியனே
  புலித்தோலை அரைக்கிசைத்து
  மின்னார் செஞ்சடைமேல்
  மிளிர் கொன்றை அணிந்தவனே
  மன்னே மாமணியே
  மழபாடியுள் மாணிக்கமே
  அன்னே நின்னையல்லால்
  வேறு யாரை நினைக்கேனே

  தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

 2. amas32 says:

  சிவன் வீதி உலா வருவதை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் திரிகூடராசப்பக் கவிராயர். இறைவனைப் போற்றிப் பாடுவதே நம்மால் செய்ய முடியும் ஒன்று. அதுவும் முரசு, உடுக்கை இசையோடு பல்லாண்டு பாடும்போது இறைவன் பேரின்பம் அடைகிறான் என்பது நமது நம்பிக்கை! பிறவா யாக்கைப் பெரியோன் அவன்.

  சிவ ராத்திரியான இன்று அவனை போற்றுவோம்!

  உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்;
  நிலவு உலாவிய நீர்மலி வேணியன்;
  அலகு இல் சோதியன்; அம்பலத்து ஆடுவான்
  மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.

  திருச்சிற்றம்பலம்!

  amas32

 3. Akila K says:

  யானை எப்படி ஒரு தும்பிக்கையால் இரு காதுகளையும் மூடிக்கொள்ளமுடியும் 🙂

  மூடுகின்ற மாதிரி மூடி, கொஞ்சம் திறந்து வைத்துக்கொண்டு நாம் கேட்டு மகிழ்வோமே, அதுமாதிரி முழக்கங்ககளை கேட்டு யானைகள் காதுகளை மூடிக்கொண்டாலும் அதுகளுக்கும் அந்த முழக்கங்கள் பிடித்தமையாக இருந்ததுவோ என்னமோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s