விவசாயி!

மெய்ம்மையாம் உழவைச் செய்து

….விருப்பு எனும் வித்தை வித்திப்

பொய்மையாம் களையை வாங்கிப்

….பொறை எனும் நீரைப் பாய்ச்சித்

தம்மையும் நோக்கிக் கண்டு

….தகவு எனும் வேலி இட்டுச்

செம்மையுள் நிற்பர் ஆகில்

….சிவகதி விளையும் அன்றே!

நூல்: தேவாரம்

பாடியவர்: திருநாவுக்கரசர்

உண்மையான விவசாயம் என்பது எது தெரியுமா?

மனம் ஆகிய வயலில், நம்முடைய ஆசைகளை / விருப்பங்களை / பற்றுதல்களை விதையாக விதைக்கவேண்டும், பொய்யாகிய களைகளை நீக்கவேண்டும், பின்னர் அந்த வயலில் பொறுமையை நீராக ஊற்றிக் காத்திருக்கவேண்டும், அப்படிக் காத்திருக்கும் நேரத்தில் நம்மை நாமே கூர்ந்து கவனித்துப் புரிந்துகொள்ளவேண்டும், நம்மைச் சலனப்படுத்தக்கூடிய விஷயங்கள் அருகே வந்து நம் கவனத்தைக் குலைத்துவிடாதபடி அந்த மன வயலைச் சுற்றிலும் வேலி அமைத்துக் காப்பாற்றவேண்டும்.

இப்படிச் சிறப்பாக விவசாயம் செய்தால், அதன் பலனாக நம் மனத்தில் விளைந்து நிற்கப்போகும் பயிர், சிவபெருமானுடைய பாதங்களைச் சென்று அடைகிற வரம்!

துக்கடா

227/365
Advertisements
This entry was posted in சிவன், திருநாவுக்கரசர், தேவாரம், பாரதியார். Bookmark the permalink.

6 Responses to விவசாயி!

 1. சுப. இராமனாதன் says:

  உழவன் திரைப்படத்தில் உழவனின் அருமை, பெருமைகளை பானுப்பிரியா பிரபுவுக்கு மிக அருமையாகச் சொல்வது நினைவுக்கு வருகிறது. உழவனை விட இயற்கையை நேசிப்பவர்கள் யாருமே இல்லை. உழவன் பார்க்க நேர்ந்தால் அந்தக்காட்சியை அவசியம் கவனித்துப் பாருங்கள்.

 2. GiRa ஜிரா says:

  அறிவுரை சொல்றது லேசு. ஆனா அதப் புரியும் படிச் சொல்றது அவ்வளவு லேசு கெடையாது.

  அதுலயும் தத்துவத்தைச் சொல்லனும்னா இன்னும் எளிமையாச் சொல்லனும். அது ஒரு சிரமமான வேலைதான்.

  ஆனா அந்தச் சிரமமெல்லாம் நமக்குதான். பெரியவங்களுக்கு இல்லைன்னு திரும்பத் திரும்ப நிரூபிச்சிருக்காங்க.
  தீதும் நன்றும் பிறர் தர வாரா
  யாதும் ஊரே யாவும் கேளிர்
  சாதி இரண்டொழிய வேறில்லை
  அறம் செய விரும்பு
  அன்பெனப் பட்டதே இல்வாழ்க்கை

  இப்படிப் பல எடுத்துக்காட்டுகள். இன்னும் நிறைய சொல்லலாம். இதெல்லாம் வாழ்வியல் அறிவுரைகள்.

  ஆனா ஆன்மீகத்தில்?

  இறைவனை நம்பனுமா? வேண்டுமா? இந்தக் கேள்வி பல்லாண்டு பல்லாண்டா தொடர்ந்து வர்ர கேள்விதான்.

  இதுக்கான விடை இறைவனை நம்ப வேண்டியதில்லை என்பதுதான்? இது

  ஆன்மீகப் பெரியவர்களும் சொல்லியிருக்கும் விடை.

  எண்ணெய் வாங்காதேன்னு எண்ணெய்க்கடக்காரனே சொன்னா வணிகம் எப்படி நடக்கும்?

  இதுல ஏதோ மறைபொருள் இருக்குன்னு நெனைக்கிறீங்களா? உண்மைதான்.

  ஆண்டவனை நம்பிக் கொண்டு ஆயிரம் தவறு செய்வதில் பயன் ஒன்றுமில்லை. முருகா முருகா என்று சொல்லிக் கொண்டு ஊழல் செய்தால் ஆண்டவனை வணங்கி என்ன பயன்?

  ஆக, ஆண்டவனை நம்புவதை விடச் சிறந்த செயல்கள் உண்டு. அவைகளைச் செய்தாலே ஆண்டவள் அருள் கிட்டும். நன்மை நடக்கும் என்பது பெரியோர் வாக்கு.

  வள்ளுவப் பெருமான் சொல்வது என்ன?
  மழித்தலும் நீட்டலும் வேண்டாது உலகம்
  பழித்தது ஒழித்து விடும்

  வள்ளுவர் சொன்னதை நாம் ஒருமுறை சிந்தித்துப் பார்ப்போம்.
  புறத்தே தாடியை நீட்டிக் கொண்டு இருப்பதும் மொட்டையடித்துக் கொண்டு இருப்பதும் மட்டுமல்ல ஒரு தூயவனிடம் உலகம் வேண்டுவது. பிறகு என்ன செய்ய வேண்டும்? உலகம் தவறு என்று பழித்த செயல்களை எல்லாம் செய்யாமல் இருக்க வேண்டும்.

  சமணர் என்று கருதப்படுகின்ற வள்ளுவர் மழித்தலையும் போதாது என்று சொல்வதிலிருந்து அவருடைய கருத்து உறுதியை நாம் பாராட்டுகிறோம்.

  சரி. ஆண்டவனை வழிபடுவதை விட என்ன செய்ய வேண்டும்?

  இதையும் பிற்காலத்தில் வந்த அறிஞர் சொல்லியிருக்கிறார்.
  ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்
  உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
  என்று சொன்னவர்,
  பொய்மை பேசாதிருக்க வேண்டும்
  பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
  மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
  என்றும் கூறியிருக்கிறார்.

  இந்தக் கருத்தைதான் அப்பரடிகள் வேளாண்மைத் தொழிலை எடுத்துக்காட்டாக வைத்துக் கூறியிருக்கிறார்.

  நம்முடைய உள்ளம் வயல். இந்த வயலில் விளைய வேண்டிய பயிர் எது? மெய்.
  உண்மை எப்படி விளையும்? நாம் அதற்கு விரும்ப வேண்டும். அதைத்தான் விருப்பு எனும் வித்தை வித்தி என்று கூறுகிறார் அப்பர்.

  எதையும் விரும்பிச் செய்ய வேண்டும். கடமைக்குச் செய்தால் அது நல்ல பலனைத் தராது.

  அப்படி விரும்பிச் செய்தாலும் இடையூறு வரும். அந்த இடையூறையும் நாம்தான் விலக்க வேண்டும்.

  அப்படி பொய்யை விலக்கி மெய்யை விளைவிக்கும் போது உடனே பலன் கிடைக்காது. பொறுமை அவசியம். பொறுத்தார் பூமி ஆள்வார்.

  அப்படி பொறுமையாக வேலி போட்டு நம் உள்ளத்தைப் பொய்யா விளக்காக வைத்திருந்தால் சிவகதி கிட்டும்.

  சரி. இதை ஏன் அப்பர் சொல்லனும்? அதையும் அவரே சொல்கிறார்.

  மனமெனும் தோணிபற்றி மதியெனும் கோலையூண்றி
  சினமெனும் சரக்கையேற்றிச் செறிகடல் ஓடும் போது
  மதனெனும் பாறைதாக்கி மறையும்போதறிய வொண்ணா
  துனையுறு முணர்வை நல்கா வொற்றியூருடைய கோவே

  என்னதான் அறிவைத் துணைக் கொண்டு நாம் வாழ்க்கைப் படகில் பயணம் சென்றாலும் சினம் என்ற சரக்கு படகை நீரில் அழுத்தும். மதம் என்ற பாறை தாக்கினால் படகு உடைந்து மூழ்க வேண்டியதுதான்.

  ஆகையால்தான் உள்ளத்தால் பொய்யாதொழுக வழி சொல்கிறார் அப்பர். சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. அந்த விளக்கு நம் வாழ்விலும் ஒளியேற்றட்டும்.

  அன்புடன்,
  ஜிரா

 3. Sundar Vel says:

  முனைப்பாடியார் எழுதிய பாடல் ஒன்று உள்ளது. இன்சொல் விளநிலமா, ஈதலே வித்தாக
  வன்சொல் களைகட்டி வாய்மை எருவிட்டு
  அன்பு நீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
  பைங்கூழ் சிறு காலைச் செய்.
  — ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை அழகாக விளக்கி இருக்கிறார்.

 4. amas32 says:

  நீ உன்னை அறிந்து கொள்! இது தான் நம் முன்னோர்கள் நமக்கு நம் கலாச்சாரத்தில் சொல்லிக் கொடுத்த பாடம். நம் பார்வை எப்பொழுதும் வெளியில் பார்ப்பதிலேயே தான் பயன்படுத்தப் படுகிறது. உள்நோக்கி நம் பார்வையை திருப்பினால், சுய பரிசோதனை செய்து கொண்டால், பல உண்மைகள் தெரிய வரும். இதற்கு பொறுமை நிறைய தேவை. வெளி இடர்பாடுகளை, கவனச் சிதறல்களை எதிர்த்துப் போராடவும், கடக்கவும் கற்க வேண்டும்.

  இந்தக் கருத்தைத் தெரிவிக்க கடினமான உழவுத் தொழிலை விட சிறந்த உதாரணம் கிடையாது. விதை விதைத்து, நீர் ஊற்றி, களை எடுத்து, காலம் தவறி பெய்கிற பேய் மழையாலோ அல்லது காலத்தே பெய்யாத மழையினால் உண்டாகும் வறட்சியினாலோ ஏற்படும் இடர்பாடுகளைக் கடந்து, பயிரை வளர்த்துத் தானியங்களை அறுவடை செய்து மக்களுக்குத் தருகிறான் விவசாயி.

  இதே சிரமத்தை நாம் நம்மைப் பற்றி அறிதலிலும் செயல் படுத்தினால் நம்முள் இறைவன் உறைகிறான் என்ற உண்மையை நாம் அறிவோம். அதே இறைவன் தான் அனைவருள்ளும் இருக்கிறான் என்ற மற்றொரு பேருண்மையையும் தெரிந்து கொள்வோம்.

  நமச்சிவாய வாழ்க

  amas32

 5. Samudra says:

  நல்ல பாடல் .ஏகதேச உருவக அணி பாடலுக்கு
  அழகு சேர்க்கிறது.

 6. Samudra says:

  ஆசையை விடச் சொல்கிறார் புத்தர். இவரோ ஆசையை (விருப்பை) யே
  வித்தாக விதைக்கச் சொல்கிறாரா. சரி. முதலில் ஆசையாக இருப்பது
  பின்னர் தன்னை அழித்துக் கொண்டு முக்திப் பேறாக மடைமாற்றம் ஆகிறதா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s