பாவி மனம் தூங்கலையே!

கேளாய் எல்ல தோழி! அல்கல்

வேணவா நலிய வெய்ய உயிரா

ஏமான் பிணையின் வருந்தினேன் ஆகத்

துயர் மருங்கு அறிந்தனள்போல அன்னை

’துஞ்சாயோ என் குறுமகள்’ என்றலின்

சொல் வெளிப்படாமல் மெல்ல என் நெஞ்சில்

’படுமழை பொழிந்த பாறை மருங்கில்

சிரல்வாய் உற்ற தளவின் பரல் அவல்

கான்கெழு நாடன் பரந்தோர்க்குக்

கண்ணும் படுமோ’என்றிசின் யானே!

நூல்: நற்றிணை (#61)

பாடியவர்: சிறு மோலிகனார்

சூழல்: குறிஞ்சித் திணை, காதலி தன் தோழியிடம் பேசுகிறாள்

என் தோழி, உனக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லவேண்டும், கேள்,

நேற்று இரவு, வழக்கம்போல் என்னுடைய காதலனை ஆசையுடன் நினைத்தேன். உடனே என் உடம்பெல்லாம் கொதித்துவிட்டது. அம்பால் அடிபட்ட ஒரு மானுடைய துணை மானைப்போலப் பெருமூச்சுடன் படுக்கையில் புரண்டு தவித்தேன், துடித்தேன்.

இதை என்னுடைய தாய் கவனித்துவிட்டாள். ‘சின்னப் பொண்ணே, நீ இன்னும் தூங்கலியா?’ என்று விசாரித்தாள்.

நான் அவளுக்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. எனக்குள் ரகசியமாகப் பேசிக்கொண்டேன். இப்படி:

‘நிறைய மழை பெய்த காட்டு நிலம். அங்கே ஒரு கல் பாறை. அதன் அருகே சிச்சிலிப் பறவையின் வாயைப் போன்ற அரும்புகளைக் கொண்ட முல்லைப் பூக்கள் மலர்ந்திருக்கின்றன. பக்கத்தில் பரல் கற்கள் நிறைந்த பள்ளங்கள்.

இத்தகைய கானகத்தின் தலைவனாகிய என் காதலனை நினைத்தபிறகு, எனக்கு எப்படித் தூக்கம் வரும்?’

துக்கடா

  • இந்தப் பாடல் தோழி சொன்னதாகப் பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பாடலை வைத்துப் பார்க்கும்போது அது காதலி சொன்னதாகதான் இருக்கவேண்டும்
  • இன்றோடு ஏழு நாள் ‘அக’க் கொண்டாட்டம் நிறைவடைகிறது. இனிமேல் நாளைமுதல் பக்திக்கும் அறிவுரைக்கும் மற்ற பாடல்களுக்கும் இடம் உண்டு 😉

226/365

This entry was posted in அகம், காதல், தோழி, நற்றிணை, பெண்மொழி. Bookmark the permalink.

4 Responses to பாவி மனம் தூங்கலையே!

  1. Samudra says:

    //இன்றோடு ஏழு நாள் ‘அக’க் கொண்டாட்டம் நிறைவடைகிறது. இனிமேல் நாளைமுதல் பக்திக்கும் அறிவுரைக்கும் மற்ற பாடல்களுக்கும் இடம் உண்டு ;)//நன்றி…தொடருங்கள்

  2. GiRa ஜிரா says:

    காதல் திருவிழாவில் கடைசிப் பாட்டு இந்தப் பாட்டு 🙂

    நாகா, நீங்கள் பொருள் கொண்டது சரிதான். இது தலைவியின் கூற்றுதான். நானும் சரிபார்த்து விட்டேன். நச்சினார்க்கினியாரும் அதையேதான் கூறுகிறார்.

    எல்லாருக்கும் பொதுவா தோழியின் தோழியான தலைவி சொல்வதுன்னு வெச்சுக்குவோம். 🙂

    இந்தப் பாட்டோட மையக் கருத்தே தூக்கம் வராதது பத்தித்தான்.

    அவனையே நெனச்சுக்கிட்டிருந்தா எப்படித் தூக்கம் வரும்? நேத்து கூட தூங்காம இருக்கேன்னு அம்மா கவலைப்பட்டுக் கேட்டாங்க.

    இதத்தான் தலைவி தோழிக்குச் சொல்றா. ஆனா, அப்படிச் சொல்றப்போ என்னென்ன விவரங்கள் சொல்றாங்கறதுதான் பாடலுக்குக் கூடுதல் அழகு சேர்க்குது.

    ஏ மான் பிணையின் வருந்தினேன்

    இதுல ஒரு நுட்பம் இருக்கு. நல்லா படிக்கனும்.

    ஏ – எய் என்பதைக் குறிக்கும். எதை எய்த? அம்பு எய்த.
    யார் மேல அம்பு? மான் மேல. அதான் தெளிவா ஏ மான்னு சொல்லீருக்கே.
    சரி. அதென்ன பிணை?

    அம்பு எய்யப்பட்ட மானின் இணைதான் பிணை.

    அவளுடைய துன்பம் எப்படியிருந்தது? அம்பு பட்ட மானைப் போலவா துன்பப்பட்டாள்? இல்லை. அம்பு பட்ட மானின் காதல் துணை போல துன்பப்பட்டாள்.

    கோவலன் கொல்லப்பட்டான். அவனுக்கு அந்த நொடி துன்பம். ஆனா கண்ணகிக்கு?

    அந்த அளவுக்குக் கொடிய துன்பம் பருவப் பெண்களின் ஏக்கப் பெருமூச்சு.

    இதைத்தான் பாரதியும் பாலும் கசந்ததடி சகியே படுக்கை நொந்ததடின்னு பாடினார்.

    கவியரசரைச் சொல்லாமல் இருக்கவே முடியாது. கணவன் வருவானோ என்று காத்திருக்கும் பெண்ணின் உணர்ச்சிகளைக் கவிதையில் எப்படி வடித்திருக்கிறார் பாருங்கள். பச்சை விளக்கு என்ற படத்தில் இடம் பெற்ற பாடல் இது.
    குத்துவிளக்கெரிய
    கூடமெங்கும் பூமணக்க
    மெத்தை விரித்திருக்க
    மெல்லியலாள் காத்திருக்க (இதுவரைக்கும் தொகையறா)
    வாராதிருப்பானோ வண்ண மலர்க்கண்ணன் அவன்
    சேராதிருப்பானோ சித்திரப் பூம்பாவை தன்னை

    இப்படித்தான் காத்திருக்கிறாள் இந்தப் பாடலில் வரும் தலைவியும்.

    அவள் வீட்டில் இளையமகள். அந்த உறவைச் சொல்லித்தான் தாய் அழைக்கிறாள். ”துஞ்சாயோ என் குறுமகள்” என்றுதானே அன்னை கேட்கிறாள்.

    அப்படியானால் வீட்டில் மூத்தமகள் இருக்கனும். அவள் என்ன செய்து கொண்டிருப்பாள்? நிச்சயமாக நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்க மாட்டாள். இவளைப் போலத்தானே அவளும் காதல் வேதனையில் இருந்திருக்க வேண்டும்.

    ஆனால் அன்னை அவளைப் பற்றிச் சொல்லவில்லையே. அப்படியானால் அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவன் வீட்டில் இருக்க வேண்டும்.
    அதனால்தான் தனியாக இருக்கும் சின்னமகள் மாட்டிக் கொள்கிறாள்.

    இப்படியாகப் பாட்டின் பொருளைப் படித்து உணரும் பொழுது பாட்டில் வரும் தகவல் குறிப்புகளையும் கூர்ந்து அறிவது இனிமையிலும் இனிமை. 🙂

    • என். சொக்கன் says:

      மான் விஷயத்தில் நீங்கள் சொல்வது சரிதான் ராகவன். ’அம்பால் அடிபட்ட மானைப்போல் துடித்தாள்’ என்று நான் எழுதியது தவறு. என் கவனக்குறைவை மன்னிக்கவும், இப்போது சரி செய்துவிட்டேன்.

      :என். சொக்கன்,
      பெங்களூரு.

  3. amas32 says:

    தந்தைகளுக்குத் தான் மகள்கள் என்றும் சிறு பெண்களாகத் தெரிவார்கள். தாயார்கள் உஷார் பார்ட்டிகள்! மகளின் சிறு அசைவிலிருந்தே அவள் காதல் வயப்பட்டிருக்கிராளா என்று தெரிந்து கொண்டு விடுவாள் தாய் . இங்கே தாய் மகளை சின்னப் பெண்ணே என்று அழைக்கிறாள். நீ இன்னும் தூங்கலையா என்றும் கேட்கிறாள். அங்கேயே அவள் சந்தேகம் வெளிப்படுகிறது 🙂

    குறிஞ்சி நில வர்ணனை அருமை. “சிச்சிலிப் பறவையின் வாயைப் போன்ற அரும்புகளைக் கொண்ட முல்லைப் பூக்கள்” என்ன அழகான உவமை!

    காதலனைப் பிரிந்த காதலியின் தாபம் ஒரே மாதிரி தான். பாலிருக்கும், பழமிருக்கும் பசியிருக்காது, பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது. என்ன பண்ணுவது, இது பிரிந்து வாட்டும் காதலர்களுக்கு ஒரு பெரிய இம்சை தான்!

    amas32

Leave a reply to amas32 Cancel reply