உயிர் தர வா

ஒண்சுடர் கல் சேர உலகு ஊரும் தகையது

தெண்கடல் அழுவத்துத் திரைநீக்கா எழுதரூஉம்

தண்கதிர் மதியத்து அணிநிலா நிறைத் தரப்

புள் இனம் இரை மாந்திப் புகல் சேர, ஒலியான்று

வள் இதழ் கூம்பிய மணிமருள் இரும் கழி

பள்ளி புக்கதுபோலும் பரப்பு நீர்த் தண் சேர்ப்ப!

தாங்க அரும் காமத்தைத் தணந்து நீ புறமாறத்

தூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்குமே,

உறையொடு வைகியபோதுபோல் ஒய் என

நிறை ஆனாது இழிதரூஉம் நீர்நீந்து கண்ணா(ள்)ட்கு

வாராய் நீ புறமாற, வருந்திய மேனியா(ள்)ட்கு

ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே,

கமழ் தண் தாது உதிர்ந்து உக ஊழுற்ற கோடல்வீ

இதழ்சோரும் குலைபோல இறைநீவு விளையா(ள்)ட்கு

இன் துணை நீ நீப்ப இரவினுள் துணை ஆகித்

தன் துணைப் பிரிந்த யாஅம் தனிக் குருகு உசவுமே,

ஒண்சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும்

நண்பகல் மதியம்போல் நலம் சாய்ந்த அணியா(ள்)ட்கு

என்வாங்கு,

எறிதிரை தந்திட இழிந்த மீன் இன் துறை

மறிதிரை வருந்தாமல் கொண்டு ஆங்கு, நெறி தாழ்ந்து

சாயினள் வருந்தியாள் இடும்பை

பாய் பரிக் கடும் திண் தேர் களையினோ இடனே.

நூல்: கலித்தொகை

பாடியவர்: நல்லந்துவனார்

சூழல்: நெய்தல் திணை : காதலியை விட்டு வெளியூர் சென்றான் காதலன். அவனைப் பிரிந்து இவள் படும் அவஸ்தையைப் பார்க்கமுடியாத தோழி அந்த ஊருக்குச் சென்று காதலனைச் சந்திக்கிறாள், நிலைமையை எடுத்துச் சொல்கிறாள்

சூரியன் மலையைச் சென்று சேர்ந்துவிட்டது. ஆனாலும் உலகம் இருண்டுவிடவில்லை. கடலின் அலைகளைக் கிழித்துக்கொண்டு எழுந்து வருகிறது நிலா. அதன் ஒளி எங்கும் பரவுகிறது.

பறவைக் கூட்டங்களெல்லாம் சாப்பிட்டு முடித்துத் தங்களுடைய கூடுகளுக்குச் சென்றுவிட்டன. அதனால் கடற்கரையில் சத்தம் அடங்கிவிட்டது, மலர்கள் நிறைந்த, நீலமணியின் நிறம் கொண்ட இந்த  உப்பங்கழி தூங்குவதுபோல் தோன்றுகிறது.

இப்படிப்பட்ட கடற்கரை நிலத்துக்குச் சொந்தக்காரனாகிய தலைவனே,

நீ உன்னுடைய காதலியைப் பிரிந்து வந்துவிட்டாய். அதனால், நீல மலரில் நீர்த்துளி நிற்பதுபோல் அவளுடைய கண்கள் கண்ணீரில் மிதக்கின்றன. தனிமையில் வாடுகின்ற அவளுக்குத் துணையாக இருப்பவை, கடலில் ஆரவாரம் செய்யும் அலைகள்தான்!

மணம் உள்ள காந்தள் மலரின் மகரந்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதறுகின்றன, அதன் இதழ்களும் ஒவ்வொன்றாக உதிர்ந்து கீழே விழுகின்றன, அதுபோல, நீ திரும்பி வரவில்லையே என்று வருந்தும் உன் காதலியின் கைகளில் உள்ள வளையல்கள் கழன்று கீழே விழுந்தபடியிருக்கின்றன.

இருள் நிறைந்த இரவு நேரத்தில், அவளுக்குத் துணை வேறு யார்? அசையும் காற்றுமட்டும்தான்!

நண்பகல் நேரம். வானத்தில் சூரியன் பிரகாசமாகத் தோன்றுகிறது. அந்த வெளிச்சத்தில் அங்கே இருக்கும் நிலா வெளியே தெரியாமல் மங்கிவிடுகிறது. அதுபோல, உயிர்த் துணைவனாகிய நீ அவளைக் கைவிட்டுவிட்டாய், ஆகவே, அவள் வேறு வழியில்லாமல் இணையைப் பிரிந்து வருந்துகின்ற ஒரு குருகுப் பறவையைத் தன் சிநேகிதியாக்கிக்கொண்டிருக்கிறாள்.

ஒரு மீன் கடலில் நிம்மதியாக வாழ்கிறது. திடீரென்று ஒருநாள் அந்தக் கடலில் தோன்றுகிற ஓர் அலை அந்த மீனைக் கரையில் தூக்கிப் போடுகிறது. மூச்சுவிடமுடியாமல் திணறுகிறது அந்த மீன்.

அப்போது, அதே அலை மீண்டும் திரும்பி வருகிறது, மீனைக் கடலுக்குள் கொண்டுசென்று காப்பாற்றிவிடுகிறது.

அதுபோல, பாய்ந்து ஓடும் குதிரைகளைக் கொண்ட  உன்னுடைய பெரிய தேரில் ஏறி அவளைப் பிரிந்து வந்துவிட்டவனே, அதே தேரில் மீண்டும் ஏறித் திரும்பி வா, அவளைப் பெண் கேட்டுத் திருமணம் செய்துகொள், அவள் உயிரைக் காப்பாற்று, அதற்கு ஏற்ற நேரம் இதுதான்!

துக்கடா

 • சங்கப் பாடல்களின் அடர்த்திக்கு இந்தப் பாடல் இன்னுமோர் உதாரணம். தோழி சொல்லும் அனைத்து உதாரணங்களும் கடல் மற்றும் கடல் சார்ந்தவை, காட்சியை அப்படியே நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறவை!
 • ’நண்பகல் மதியம்போல்’ என்பது அற்புதமான உவமை. பகல் நேரத்திலும் வானத்தில் நிலா இருக்கிறது, ஆனால் வெளியே தெரிவதில்லை என்கிற செய்தியை மிக அழகாகக் காதல் பாட்டினுள் நுழைத்திருக்கிறார் கவிஞர்
 • குறிப்பாக, அந்தக் கடைசி நான்கு வரிகளில் உள்ள மீன் : அலை : உயிர், காதலி : காதலனுடைய தேர் : உயிர் ஒப்பீடு அற்புதமானது, வியக்கவைக்கும் உவமை!

225/365

Advertisements
This entry was posted in அகம், உவமை நயம், கடற்கரை, கலித்தொகை, காதல், தூது, தோழி, நெய்தல், பிரிவு, பெண்மொழி, வர்ணனை. Bookmark the permalink.

6 Responses to உயிர் தர வா

 1. amas32 says:

  திரு சொக்கரே, இந்தப் பாடலுக்கு உங்கள் விளக்கமும் துக்கடாவில் நீங்கள் கூறியிருக்கும் செய்திகளும் அருமை. நன்றி 🙂

  “நண்பகல் மதியம்போல்” உண்மையாகவே அற்புதமான உவமை!

  இங்கே காதலியின் தோழி காதலன் சென்றிருக்கும் ஊருக்கேச் சென்று அவனைத் திரும்பி வரும்படி வேண்டுகிறாள். இது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. காதலியின் தோழி எடுக்கும் முயற்சி பாராட்டிக்குரியது. அதுவும் எப்படிப் பட்ட உவமைகளைச் சொல்லித் தோழியின் பிரிவால் படும் வேதனையை எடுத்துரைக்கிறாள்!

  அலையால் கரையில் தூக்கி எறியப்பட்ட மீன் துள்ளித் துடிக்கிறது. பின் கருணையுள்ள ஓர் அலை அதை மீண்டும் கடலில் சேர்த்து வாழ்வளிக்கிறது. காதலியின் பிரிவாற்றாமைத் துயரத்தை இதை விட அழகாகச் சொல்ல முடியாது. அதே போல காதலனைத் திரும்ப வந்து அவளை மனம் முடிக்க அழைக்க அவள் கையாண்ட சொல் நயமும் (தேரில் ஏறிச் சென்று பிரிந்து விட்டாய், திரும்ப அதேத் தேரில் வந்து அவளை சேர்) வெகு நேர்த்தி!

  amas32

 2. GiRa ஜிரா says:

  சங்க இலக்கியங்களில் குறுந்தொகையெல்லாம் படிச்சுட்டு கலித்தொகை பரிபாடல் எல்லாம் படிச்சா பெரிய பெரிய பாட்டுகள் பயமுறுத்தும். 🙂

  ஆனா எடுத்துப் படிச்சா பாட்டுக்குள்ள ஆயிரமாயிரம் தகவல்கள். வியப்பூட்டும் செய்திகள்.

  கலித்தொகை ஒரு அகநூல் தான். ஆனாலும் ஒரு சின்ன வேறுபாடு உண்டு. குறுந்தொகை, அகநாநூறு எல்லாம் பாத்தா ஏற்புடைய காதலை மட்டுமே பாடும். மடலேறுவதைக் கூட பாடாது.

  ஆனால் கலித்தொகை அப்படியல்ல. மடலேறுவது மட்டுமல்ல பொருந்தாக் காமத்தையும் தொட்டுச் செல்லும் இலக்கியமாம். நானும் கலித்தொகையை படித்துப் பார்க்கவில்லை.

  ஆனாலும் இந்த மாதிரி 365பாவில் அறிமுகம் வரும் போது படிக்காமல் இருக்க முடியுமா? 🙂

  இந்தப் பாட்டுக்கான அருமையான விளக்கங்களை நாகா சொல்லீட்டாரு. ஆகையால ஒரு சில சிந்தனைத் துளிகள்.

  இந்தப் பாடலில் தோழி தூது போகிறாள். தலைவியை விட்டுப் பிரிந்த தலைவனிடத்தில். இதுக்கு முன்னாடி தலைவனும் தலைவியும் கருத்தொருமித்த காதலர்களாத்தான் இருந்திருக்காங்க. ஏதோ சண்டை. ஏதோ பிரிவு. என்ன செய்றது? தோழிதான் தூது போறா.

  போய் பலப்பல செய்திகளைச் சொல்றா. ஆனா எல்லாமே ஒரே செய்திதான். புரியலையா?

  சரி. ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன். நீங்களே மறுபடியும் பாட்டையும் நாகாவின் விளக்கத்தையும் முழுசாப் படிங்க. புரிஞ்சிரும்.

  எடுத்ததும் தோழி என்ன சொல்றா? தலைவனின் நாட்டு வளத்தைப் பாராட்டி வாழ்த்துறா.

  ஒண்சுடர் கல் சேர உலகு ஊரும் தகையது

  தெண்கடல் அழுவத்துத் திரைநீக்கா எழுதரூஉம்

  தண்கதிர் மதியத்து அணிநிலா நிறைத் தரப்

  இந்த வரிகளுக்கு உள்ள நேரடியான பொருள் என்ன?

  சுடர் விடும் கதிரவன் இருக்கின்றானே, அவன் மலைப்பக்கமா சென்று மறைந்து விட்டது. ஆனாலும் உலகத்தில் இன்னும் வெளிச்சம் இருக்கிறது. எப்படி?

  கடலைக் கிழித்துக் கொண்டு நிலவு வெளிவந்து குளிர் ஒளியைப் பரப்பிக்கொண்டுள்ளது.

  சரி. இதோட மறைபொருள் என்ன?

  தலைவனே. சுடர் விடும் பகலவனைப் போல அவள் வாழ்க்கையில் நீ ஒளி வீசினாய். இப்போது நீ ஏதோ ஒன்றின் பொருட்டு அவளை நீங்கி இந்தப் பக்கமாக வந்து விட்டாய். ஆனால் அவள் உன்னை மறந்து விடவில்லை. ஏன் தெரியுமா? கடல் போன்ற அவளது பரந்த உள்ளத்தைக் கிழித்துக் கொண்டு உனது நினைவுகள் அவளை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன.

  இப்படி ஒவ்வொரு வரியிலும் ஏதோ ஒன்றைச் சொன்னாலும் தலைவியின் நிலையை எடுத்துச் சொல்வதாகவே உள்ளது. நல்ல அறிவுள்ள தோழி. தோழி சொல்லும் ஒவ்வொரு செய்திக்கும் நேர் பொருளும் மறைபொருளும் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கே புரிந்து விடும்.

  இதையெல்லாம் வைத்துத்தானோ என்னவோ கவியரசர் கண்ணதாசன் திரைப்படத்திலும் இலக்கியம் படைத்தார்.

  தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாளோ தலைவி
  துள்ளும் காற்று வந்து மெல்லச் சேலை தொட சுகம் கண்டாளோ தலைவி
  அன்று சென்றவனை இன்னும் காணவில்லை என்ன செய்வதடி தோழி

  இவ்வளவு எளிமையாக இலக்கியம் படைப்பதில் கவியரசருக்கு நிகர் அவரேதான். இன்னொருவர் இருந்தார். பாட்டுக்கோட்டையாம் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம். இன்னும் இளம் வயதிலேயே நம்மையெல்லாம் விட்டு மறைந்தார். இவர்கள் இல்லாத இடத்தை வெறும் வார்த்தை ஜாலங்கள்தான் நிரப்பிக்கொண்டிருக்கின்றன.

  அன்புடன்,
  ஜிரா

 3. Samudra says:

  //அதே தேரில் மீண்டும் ஏறித் திரும்பி வா, அவளைப் பெண் கேட்டுத் திருமணம் செய்துகொள், அவள் உயிரைக் காப்பாற்று, அதற்கு ஏற்ற நேரம் இதுதான்!//ஹி ஹி நான் கூட ரெண்டு பெரும் கணவன்-மனைவின்னு நினைச்சேன்.

 4. Samudra says:

  //பொருந்தாக் காமத்தையும் தொட்டுச் செல்லும் இலக்கியமாம்//
  அப்படியா? சரி… வயதான பெண்ணை ஆண் காதலிப்பது,
  ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் காதலிப்பது,
  பொருந்தாத உறவில் காதலிப்பது, அடுத்தவர் மனைவியை
  கணவனை காதலிப்பது இது எல்லாம் இருக்கிறதா? சும்மா
  தகவலுக்காக கேட்கிறேன். கொச்சைப்படுத்தும் நோக்கம் அல்ல.
  மேலும் காதல் யாரிடம் வேண்டுமானாலும் வரலாம் அல்லவா?

  • GiRa ஜிரா says:

   கைக்கிளையும் பெருந்திணையும் கலித்தொகையில் உண்டு என்று அறிகிறேன்.

   ஆனால் ஆணும் ஆணும் – பெண்ணும் பெண்ணும் என்பதற்குத் தொல்காப்பியர் எந்தத் திணையும் வைக்கவில்லையே. அந்த அளவிற்கு அந்தக் காலத்தில் விவரம் போதவில்லை என்று நினைக்கிறேன்.

   அடுத்தவன் மனைவியை எண்ணத்தாலும் தீண்டுவது இலக்கிய இலக்கணங்களால் ஒதுக்கப்பட்ட செயல். ஒருவர் இன்னொருவரின் காதல்துணையை நினைப்பதை இலக்கணத்தில் கொண்டு வரவும் இல்லை. அது ஏற்கப்படாததாகவே இருந்திருக்கிறது.

   இராவணனுக்கு சீதை மேல் இருந்ததும் காதல் கலந்த காமம்தானே. அதற்காகத்தான் கடைசி வரை போராடினான். ஒவ்வொரு முறையும் சீதையிடம் போய்ப் புரிந்து கொள் என்று அரற்றினான். ஆனால் அதைச் சரியென்று இராமாயணத்தையும் ஏற்போரும் மறுப்போரும் கூட ஏற்றுக்கொள்ளவில்லையே.

   இராவணனுடைய நிலையை ஏன் புரிந்து கொள்ளவில்லை என்று சீதையைக் கேட்பது தகுமோ! ஆயிரம் சிறப்புகள் இருந்தாலும் மாற்றான் மனைவியைத் தீண்டியதற்காக கெட்ட பெயர் கொண்டவர்கள் இருவர். ஒருவர் இராவணன். மற்றொருவர் வாலி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s