சில சொட்டு(க்)கள்

கண் களவு கொள்ளும் சிறுநோக்கம், காமத்தில்

செம்பாகம் அன்று, பெரிது!

*

நெஞ்சத்தார் காதலவர் ஆக வெய்து உண்டல்

அஞ்சுதும் வேபாக்கு அறிந்து!

*

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

யாது செய்வேன்கொல் விருந்து?

நூல்: திருக்குறள் (#1092, #1128, #1211)

பாடியவர்: திருவள்ளுவர்

கள்ளத்தனமாக அவனை அடிக்கடி பார்க்கிறேன். இந்தக் காதல் தரும் இன்பத்தில் பாதிக்குமேல், அந்தத் திருட்டுப் பார்வை தருகிற சுகம்தான்!

*

அவன் என்னுடைய நெஞ்சுக்குள் இருக்கிறான். அதனால் நான் சூடான பொருள்களைச் சாப்பிட அஞ்சுகிறேன், அவனைச் சுட்டுவிடுமே!

*

எங்கேயோ இருக்கும் என் காதலனை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டது இந்தக் கனவு. எங்கள் காதலுக்குத் தூதாக வந்திருக்கும் இந்தக் கனவுக்கு என்ன பரிசு தருவது?

துக்கடா

 • இந்த மூன்று குறள்களைத் தேர்வு செய்வதற்காக, இன்பத்துப் பால் மொத்தமும் இன்னொருமுறை படித்தேன், #365paa தரும் இன்பங்களில் இதுவும் ஒன்று 🙂
 • முதல் குறள் ‘பார்வை ஒன்றே போதுமே’ எனப் பாட்டு வடிவம் பெற்றது தெரியும், அந்த இரண்டாவது குறளை கவிஞர் வாலி தமிங்கிலீஷில் மொழிபெயர்த்து ஒரு சினிமாப் பாட்டுக்குள் பயன்படுத்தியிருக்கிறார், தெரியுமோ? :>
 • இந்தக் குறள்களின் வெண்பா வடிவம்:
 • கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
 • செம்பாகம் அன்று, பெரிது!
 • *
 • நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
 • அஞ்சுதும் வேபாக் கறிந்து
 • *
 • காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
 • யாதுசெய் வேன்கொல் விருந்து?

224/365

Advertisements
This entry was posted in அகம், காதல், சினிமா, திருக்குறள், வெண்பா. Bookmark the permalink.

18 Responses to சில சொட்டு(க்)கள்

 1. somanath says:

  இரண்டாவது குறள் அஜித்-லைலா நடித்த”தீனா” படப்பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 2. சுப. இராமனாதன் says:

  “Hot box-ல் வைத்த food உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும்.
  என் உள்ளமெங்கும் நீ நின்றிருக்க உன்னை உஷ்ணம் தாக்கக்கூடும்.”

  தீனா (2001)
  ‘தல’, லைலா
  சங்கர் மகாதேவன், ஹரிணி, டிம்மி, யுவன்
  இசை: யுவன் சங்கர் ராஜா

 3. Samudra says:

  சாப்பாடு சாப்பிட்டதும் நெஞ்சத்துக்கா போகிறது?
  இது கொஞ்சம் இடிக்கிறது. மற்ற இரண்டும் அருமை.

  இறைவனை வேண்டும் போதும் கூட கடைக்கண் பார்வை பார்
  என்று தான் வேண்டுவர். கடைக்கண் பார்வைக்கு அத்தனை மகிமை:)
  முழுவதும் பார்த்தால் நம்மால் தாங்க முடியாதோ என்னவோ?
  கள்ளப் பார்வை பார்ப்பதில் பெண்கள் கை(கண்) தேர்ந்தவர்கள்.
  தலைமுடியை சரிசெய்யும் சாக்கில் சீதை ராமனை நோட்டம் விட்டாள்
  என்கிறார் தியாகராஜர். (கன கன ருசிரா)’அவன் என்னை முறைச்சு
  முறைச்சு பாக்கறான்டி’ என்பார்கள் ..அவன் முறைச்சுப் பார்ப்பது
  இவளுக்கு எப்படி தெரிந்தது???;)

  கனவுக்கும் நன்றி சொல்கிறாரா வள்ளுவர்? GOOD 🙂
  அடச்சே வெறும் கனவா என்று அலுத்துக் கொள்ளாமல்
  அதற்கும் நன்றி சொல்வது பெருந்தன்மை..

 4. anonymous says:

  //சாப்பாடு சாப்பிட்டதும் நெஞ்சத்துக்கா போகிறது? இது கொஞ்சம் இடிக்கிறது. மற்ற இரண்டும் அருமை//

  காதலன் நெஞ்சத்தில் தான் இருக்கிறான்! ஆனால் அவன் கைகள்?
  சிறைக்குள் ஒருவன் பாதுக்காப்பாக இருப்பினும், அவன் கைகள் கம்பிக்கும் வெளியே நீள்வதில்லையா?
  அதுபோல் நெஞ்சச் சிறையில் அவன் பாதுகாப்பாக இருந்தாலும், அவன் கைகள் வெளியே நீளும்! அப்போ என்னை அணைத்த கைகளில் சூடு பட்டு விடக் கூடாது!:)

  நாக்கு, கழுத்து, தொண்டை, மார்பு-ன்னும் சூடு இறங்குதே! அங்கே அவன் கை வச்சிட்டா?
  ச்ச்சீ பாவம்…துடிச்சிப் போயிருவான்! வேணாம்! நான் ஆறியே சாப்பிட்டுக்கறேன்!
  —–

 5. GiRa ஜிரா says:

  அற நூல்களில் காமத்தைப் பற்றிப் பேசலாமா என்பது இன்னும் இருக்கும் சர்ச்சை.
  காமம்/காதல் என்பது இன்றுதான் பேசுவதற்குக் கடினமானதாக இருக்கிறது. ஆனால் பண்டைத் தமிழ்ப்பண்பாடு காதலையும் காமத்தையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு அதற்குத் தக்கவாறு பண்பாட்டையும் இலக்கியத்தையும் சரியாகப் படைத்திருக்கிறது.

  காதலர் நாளன்று காதலர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் கூட்டத்தார் முதலில் தமிழ்ப் பண்பாட்டின் சாட்சியங்களாக நிற்கும் தமிழிலக்கியங்களைப் படிக்க வேண்டும்.

  தான் கொண்ட உணர்ச்சியை சரியாக வெளிப்படுத்துவது எவ்வளவு தேவையானது என்பதைத் தமிழிலக்கியங்கள் கற்றுக் கொடுக்கும்.

  இன்றைய நிலை? காதலைப் பற்றி வெளிப்படையாக பேச முடியாத நிலை.
  அதன் விளைவு? பிஞ்சு நெஞ்சிலேயே தப்பும் தவறுமாக எண்ணங்கள் பதிந்து போதல். இதைச் சரி செய்யவில்லையென்றால் பின்னாளில் அது குழப்பங்களை உண்டாக்கி விடலாம்.

  அந்த வகையில் காதலையும் காமத்தையும் பேசுவதையே தவறாக உலகம் முழுதும் எழுந்த அறநூல்கள் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க, பேசாப் பொருளைப் பேசத் துணிந்த திருக்குறள் மிகச் சிறந்த நூல் என்பதில் ஐயமில்லை.
  இந்த மூன்று குறள்களுமே மெல்லிய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகின்றவை.

  அவற்றை அழகாகப் பொறுக்கியெடுத்த நாகாவிற்கு நன்றி.

 6. GiRa ஜிரா says:

  காதல் வயப்பட்டவர்களிடம் நாம் காணும் மூன்று அழகான செயல்கள் இவை.
  # கள்ளப்பார்வை
  # மடத்தனம்
  # கனவு

  கள்ளப்பார்வைன்னா சாதாரணமா? இல்லவே இல்லை. ஆனாப்பட்ட முருகனும் வள்ளியும் கூட கள்ளப்பார்வை பார்த்திருக்காங்க. இராமகாதையிலோ கம்பர் அதையே அழகான காட்சியாக்கி அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்னு கவிதையாக்கி விட்டார்.

  தில்லானா மோகனாம்பாள் படத்தில் இந்தக் கள்ளப்பார்வை ஒரு அழகான காதல் பாடலாக வந்திருக்கிறதே!

  மறைந்திருந்து பார்க்கும் மருமமென்ன
  அழகர் மலையழகா? இந்தச் சிலையழகா?
  அதிலும் சண்முகா என்று இசையரசி பி.சுசீலாவின் குரல் குழையுமிடம் காலத்திற்கும் வேறுபாடலில் கேட்கக் கிடைக்காதது.

 7. GiRa ஜிரா says:

  அடுத்தது மடத்தனம்.

  காதலில்தான் நூறுநூறு மடத்தன எண்ணங்கள் தோன்றும். செயலிலும் நடக்கும். இந்தக் குறளிலும் அப்படித்தான்.

  சூடாக எதையும் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருப்பனுக்குச் சுடுமோ என்று பயம்.
  இந்தக் காட்சியை மணந்தால் மகாதேவன் என்ற நகைச்சுவைப் படத்தில் இராம நாராயணன் காட்டிப்படுத்தியிருக்கிறார்.

  பல்லவியின் நெஞ்சுக்குள் எஸ்.வி.சேகர் இருப்பதால் குளுகுளுவென்று குளிர்பானத்தைக் குடிப்பார். திரைப்பட இலக்கணப்படி அப்படியே காட்சி மாறி பாடல் வந்துவிடும்.

  இன்னும் நிறைய மடத்தனங்கள் உண்டு. என் நண்பன் ஒருவன் செய்த மடத்தனத்தைச் சொல்கிறேன்.

  அவனுக்கு அலுவலகத்தில் உடன் பணிபுரிந்த பெண் மேல் ஈடுபாடு. வேலைப்படி இருவரும் பேசிக்கொள்ள அவ்வளவாக வாய்ப்பும் இல்லை.

  ஒருநாள் அலுவலகம் வருகையில் பைக்கை ஒரு குழிக்குள் விட்டு விட்டான். அன்றைக்கு என்று பார்த்து அலுவலக லிஃப்ட்டில் அந்தப் பெண்ணோடு நெருக்கமாக நின்று லேசாக உரசிக் கொள்ளும் வாய்ப்பு உண்டானது.

  அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அதே குழிக்குள் வண்டியை இறக்கினான். அவன் நேரத்திற்கு ஏற்றார் போல ஒவ்வொரு நாளும் ஏதேனும் வாய்ப்பு வந்தது.

  ஒருநாள் அந்தக் குழியில் இரவோடு இரவாக கல்லையும் தாரையும் போட்டு மூடிச் சாலையைச் சமன்படுத்தி விட்டார்கள். அன்றைக்கு என்ன நடந்தது தெரியுமா? அந்தப் பெண் தன்னுடைய திருமணச் செய்தியை எல்லாருக்கும் அறிவித்தாள். அந்த நண்பன் அன்று பெங்களூர் மகாநகர பாலிகேயை திட்டிய திட்டுகளை ஒரு புத்தகமாகவே போடலாம்.

 8. GiRa ஜிரா says:

  மூன்றாவது கனவு.

  கனவுகள் படுத்தும் பாட்டைச் சொல்லி மாளாது. கண்ணைத் திறந்து கொண்டே கனவு காண்பதில் தொடங்கி கனவிலேயே குடும்பம் நடத்தும் வரை போவதும் உண்டு.

  திரைப்படங்களிலும் எத்தனையெத்தனை பாடல்கள்.
  ஊமைப் பெண்ணொரு கனவு கண்டாள்
  கனவே கலையாதே
  மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

  இன்னும் எத்தனையெத்தனையோ பாடல்கள். பட்டியலிட்டால் பக்கம் பத்தாது.
  நேரில் அடிக்கடி சந்திக்க முடியாத காதலனைக் கனவு அழைத்து வந்து விடுகிறதே! அந்தக் கனவுக்குதான் எவ்வளவு நல்ல எண்ணம். நல்ல எண்ணத்தைப் பாராட்டினால் மட்டும் போதாது. பரிசும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் காதலியைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

 9. anonymous says:

  நல்ல உணவின் ருசி….குறுகிய கால இன்பம் தான்! From tip of the tongue to end of the tongue! Hardly 10 cm pleasure!
  இருப்பினும், காலங் காலமாக அந்தச் “சிற்றின்பம்”, பேரின்பம் குடுக்கும் ஒன்று!

  நல்ல உணவு-க்கு ஐம்புலனும் ஒருசேர உண்டு!
  * உணவின் மணம் = மூக்கு
  * உணவின் சுவை = நாக்கு
  * உணவின் வண்ணம் = கண்
  * உணவைப் பற்றிய பேச்சு = காது
  * நல்ல உணவு…5cm நாக்கையும் தாண்டி…, உடலுக்குள் இறங்கும் சூடு/சுகம் = மெய்

  இப்படி…கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலனும்…
  காதலுக்கும் உண்டு, உணவுக்கும் உண்டு!
  * காதல் அறுபத்துநாலு சுவை! உணவு அறுசுவை!
  * காதலுக்கும் பசி! உணவுக்கும் பசி!:)
  அந்தப் பசியில்…உணவிட்டவளே(னே) உணவும் ஆகிறாள்(ன்)

  எனவே, உணவு = நாக்குக்கு மட்டும் அல்ல! நெஞ்சத்துக்கும் தான்!
  அதனால் சூடான உணவு, நெஞ்சுக்குள்ளும் சூடு இறங்கும்:)
  ——–

  அவனும் அவளும் இன்புற்று இருக்கும் போதும், “ஏய்ய்ய் என்ன வலிக்குதா?-ன்னு கண்ணைப் பார்த்துக் கனிவாக் கேட்பான்-ல்ல?
  இன்பத்திலும், அவளுக்கு வலிக்கக் கூடாது-ன்னு அவன் நினைப்பது போல்
  உண்பதிலும், அவனுக்கு வலிக்கக் கூடாது-ன்னு இவள் நினைக்கிறாள்!

  இது போன்ற “பித்தான” நினைப்புகள் காதல் ஆழம்! ஆழ்ந்தால் தான் தெரியும்:)

 10. anonymous says:

  //கண் களவு கொள்ளும் சிறுநோக்கம், காமத்தில்
  செம்பாகம் அன்று, பெரிது!//

  கள்ளப் பார்வை “செம்பாகத்தை” விடப் பெரிது!

  அது என்ன “செம்பாகம்”?
  செங்கொடி, செங்கோட்டை தெரியும்? What is செம்பாகம்?
  எதுக்கு வள்ளுவர் “செம்பாகம்”-ன்னு சொல்லணும்?

 11. anonymous says:

  மேலோட்டமாப் பார்த்தா, செம்பாகம்=”சரிபாதி”!
  கள்ளப்பார்வையே காமத்தில் சரிபாதிக்கும் மேல்?

  காமத்தை அளவிடவே முடியாது! அப்பறம் எப்படி அதில் சரிபாதி?
  “அறிதோறும் அறியாமை கண்டற்றால்”-ன்னு இதே வள்ளுவர் தான் சொல்லுறாரு!
  அறியவே முடியாத ஒன்னு-ன்னு சொல்லிட்டு அதே வள்ளுவர், அதில் சரி பாதி-ன்னு சொல்லுவாரா?
  அப்போ இந்தச் “செம்பாகம்” – என்ன பொருள்?
  ——-

  முருகனுக்குச் சேயோன்-ன்னு ஒரு பேரு! அதான் ஆதித் தமிழ்ப் பேரு!
  சேயோன்=சிவப்பானவன்-ன்னா பொருள்?
  தமிழர்கள் சிவப்பு-கருப்பு-ன்னு நிறத்தில் மயங்கிட்டார்களா?

  செம்=செம்மை(சிறப்பு)
  படம் ‘செம்மையா’ இருக்குடா-ன்னு சொல்லுறோம்-ல்ல?
  படம் முழுக்க செவப்பா இருக்கு, சிவப்பதிகாரம்-ன்னா அர்த்தம்?:) படம் சிறப்பா இருக்கு-ன்னு பொருள் வருதில்லையா?

  அது போல சேயோன்=சிறப்பானவன்!
  தானும் சிறந்து, நமக்கும் சிறப்பு குடுப்பவன்!
  அதே போலத் தான் “செம்பாகம்”
  ——

  காமத்தில் “செம்பாகம்” அன்று!
  கள்ளப் பார்வை = Is this the Best Chapter (செம் பாகம்) in the Love Book?

  இதான் காமத்தில் சிறப்பான பாகம் (செம்பாகம்)-ன்னு நினைக்கறீங்களா?
  இல்லை!
  Love Book-இல், சிறப்பான பாகம்-ன்னு ஒன்னு இருந்தா, அதை விடப் பெரிது, இந்தக் கள்ளப் பார்வை!

  அறிதோறும் அறியாமை கண்டற்றால் = இவளைப் படிக்கும் போதெல்லாம், இன்னும் ஏதோ ஒன்னு படிக்கலையே-ங்கிற அறியாமையே மிஞ்சுகிறது!
  ஒவ்வொரு முறை படிக்கும் போதும், இதுவரை படிக்காத “புதிய பாகம்” தென்படுது:)

  முழுக்கப் படிக்காமலேயே, எதை, சிறப்பான பாகம் (செம்பாகம்)-ன்னு நான் சொல்லுவேன்?
  இவளைப் படிக்கத் தூண்டுச்சே, அந்தக் கள்ளப் பார்வை! = சிறு முன்னுரை!
  அதான் எல்லாப் பாகத்தையும் விடப் பெரிது! செம் பாகத்தை (சிறப்பான பாகத்தை) விடப் பெரிது!

  * கண் களவு கொள்ளும் “சிறுநோக்கம்” (சிறு முன்னுரை)
  * காமத்தில், செம்பாகம் அன்று, பெரிது! = காமப் புத்தகத்தில், (இன்னும் நான் படிக்காத) சிறப்பான பாகங்களைக் காட்டிலும் பெரிது

 12. anonymous says:

  இன்றும், பள்ளிச் சிறார்கள், (நான் படிக்கும் போதும்)
  Rough Draft = வரைவுப் படி
  Fair Draft = செவ்வைப் படி
  -ன்னு எழுதுவார்கள்! செவ்வைப் படி = செம்பாகம்!

  “நூலின் செம்பாகம்”, “புறநானூறு உரை செம்பாகம்” ன்னு தேடினால், செம்பாகம் பற்றி இன்னும் அறியலாம்!

  பரிமேலழகர், மணக்குடவர் உரைகளில், “செம்பாகம்” என்ன சொல்லி இருக்காக-ன்னு தெரியல! இது ஏதோ, குறளில் ஆழும் போது, தானாத் தோனிச்சி! சொல்லிட்டேன்:) பிழை இருப்பின் மன்னிக்கவும்!

 13. கடைக்கண் பார்வைதனை …. பெண் கடைக்கண்ணால் பார்ப்பதை பார்த்துவிடும் ஆண்மகனின் உள்ளம் படும் பாடு இருக்கிறதே !! அடடடா……… அதை விவரிக்கும் பாடல் ஏதேனும் உண்டா ? தெரிந்தவர் சொல்லுங்களேன்……

  • Samudra says:

   ரகு, பாடலில் என்ன இருக்கிறது? நீங்களே அனுபவித்துப் பாருங்கள்…

 14. amas32 says:

  இந்த தளத்தில் வரும் நீங்கள் எல்லோரும் ராஜா ரசிகர்கள் என்று தெரியும். ஆனாலும் ரஹ்மான் தனது இரண்டாவது ஆஸ்கரை வாங்கிய பொழுது சொன்னதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன். தன வாழ்வில் ஒரு சமயத்தில் வெறுப்புக்கும் அன்புக்கும் இடையே எதை தேர்வு செய்வது என்ற நிலையில் இருந்த பொழுது, தான் அன்பையே தேர்ந்தெடுத்ததாகவும் அதனால் தான் அவர் இந்த நிலையில் தற்போது இருப்பதாகவும் பொருள் பட பேசினார். தமிழில் பண்டிதர்களாகிய நீங்களும் அன்பையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். இறைஞ்சுகிறேன்.

  முதல் குறளின் பொருளை பேரூந்து நிறுத்தங்களில், காலை பள்ளி/கல்லூரி/வேலைக்குச் செல்லும் நேரத்தில் நேரில் காணலாம் 🙂

  காதலில் விழுபவர்கள் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல! They sometimes become an emotinal wreck!அதனால் அவர்கள் இரண்டாவது குறள் படி நடப்பது வினோதமல்ல. அது காதலின் ஒரு வித அழகு என்றும் கூட சொல்லலாம்.

  கனவுகள் தான் காதலை தூக்கி நிறுத்துகிறது. ஆண்டாள் வாரணம் ஆயிரம் சூழ என்று நாரணனை கைத்தலம் பற்ற கனாக் கண்டாள். அதுவே நிஜமும் ஆகியது. ஆகவே கனவுகளுக்கு நன்றிகளும் பரிசுகளும் பல்லாயிரம் உரித்தாகுக 🙂

  amas32

 15. Samudra says:

  ஹலோ, காதலர் தினம் ஓவர்…
  அகம் போதும் :):)

 16. psankar says:

  இதைப் படிக்கும் போது “கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்” என்ற குரல் நினைவுக்கு வருகிறது. இதையும் நம் வாலிபக் கவிஞர் வாலி அவர்கள் “நேருக்கு நேர்” படத்தில் பயன்படுத்தி இருப்பார்.

  திரை இசைப் பாடல்களில் திருக்குறள் பற்றி ஒரு பதிவு போடுங்களேன் 😉

  இங்கு அனானிமசாக கமெண்ட் எழுதி இருப்பவர் நம் முருகனடியார் தானே !? 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s